Blog

  • மக்கள் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்!

    மக்கள் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஈழத்தில் பிறந்தார். இன்னல் பல கண்டார். எதற்குமே இளைக்காமல் ஏற்றம் பல பெற்றார். இரக்கமே அவருள் எங்கும் வியாபித்து நின்றதால் என்றுமே மக்கள் மனத்தில் நீங்கா இடம்கொண்டார். இதயக் கனியானார்.

    வாழவைத்த தெய்வமானார். கலங்கரை விளக்கமானார்.எங்க வீட்டுப்  பிள்ளை ஆகி என்றுமே மக்கள் திலகமாக எம் ஜி ஆர் விளங்குகிறார்.

    அவர்கடந்து வந்த பாதை கல்லும், முள்ளும், காட்டாறுகளும் நிரம்பியதாகும். அவர் தென்றலைத் தீண்டியதி ல்லை. தேன் தொட்டு நின்றதும் இல்லை.பஞ்சணையில் படுத்ததும் இல்லை. பசியாற உண்டதும் இல்லை.

    அரைவயிறு, கால் வயிறுதான், அவருக்கும் அவரது குடும்பத்துக்குமே கிடைத்தது.

    நல்ல நிலையில் வாழ்ந்த குடும்பம் நலிவடைந்து போனதால் நாட்டை விட்டு நாடுவரும் நிலையங்கு தோன்றியது. தந்தையை இளம் வயதில் பறி கொடுத்துவிட்டு தாயுடனும் சகோதரருடனும் ஈழத்தைவிட்டு இந்தியா வந்தனர் எம் ஜி ஆர் குடும்பத்தார்.

    பசியைப் போக்குவதே பெரும்பாடாக இருந்தமையால் படிப்பு என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகி இருந்தது. பாலகனான எம் ஜி ஆர் மூன்றாம் வகுப்புடன் பள்ளியை விட்டு நாடகத் துறைக்குள் புகுந்துவிடும் நிலை உருவானது. வருமானத்துக்கு நடிப்பே வழிகாட்டியது.

    எழுத்தாளர் அனுராத ரமணனின் தாத்தா குடிலன் ஆர். பாலசுப்பிரமணியன் எம் ஜி ஆரின் ஆசிரியராக இருந்தார். இவர் பிற்காலத்தில் குணசித்திர நடிகரானார்.

    நாடகத்தில் இருந்து படிப்படியாக திரைத்துறைக்குள் எம் ஜி ஆர் வந்து சேர்ந்தார். 1945 ல் ஜுபிடர் நிறுவனத்தார் எம்ஜிஆரை தமது படங்களான ராஜகுமாரி, அபிமன்யு, படங்கள் வாயிலாக கதாநாயகன் ஆக்கினார்கள்.

    1947 – 1948 காலப் பகுதியில் எம்ஜிஆருக்குக் கிடைத்த மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா ரூ350 ஆகும்.

    இக்காலகட்டமானது எம்ஜிஆரின் முதல்காலகட்டம் எனக் கொள்ளலாம். சாதாரண எம்ஜிஆராக அவர் இருந்தாலும் அவருக்குள்ளே–தான் முனேற வேண்டும் என்னும் என்னும் வேகமே காணப்பட்டது எனலாம். அவர் யாரையும் நோகடிக்கமாட்டார். முரண்டு பிடிக்கமாட்டார். மரியாதை கொடுப்பார். சற்றுக் கூச்சச் சுபாபம் உள்ளவராகவும் காணப்பட்டார். காந்தியச் சிந்தனை அவர்மனத்தில் அக்காலத்தில் பதிந்துகாணப்பட்டது. அவரிடம் கடவுள் நம்பிக்கையிருந்தது. உருத்திராட்சம் அணிந்திருந்தார். அவர் பிற்காலத்தில் திமுகவில் இணைந்திருந்தாலும் சில கொள்கைகளில் விடாப் பிடியாக இருந்தாலும்… கடவுள் நம்பிக்கையை பழித்ததோ, குறைகூறியதோ இல்லை என்றே சொல்லலாம்.

    “பக்தியுள்ளவர்கள் சாமி கும்பிட வேண்டும்.சாமி கும்பிட வேண்டாம் என்று நான் சொல்லத் தயாரில்லை. ஆனால் கடவுளின் பெயரால் ஏமாற்ற நினைக்காதீர்கள். மோசடிகள் செய்ய முயலாதீர்கள்.என்பதே என் வேண்டு கோள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் இதுதான் என் கொள்கை” என்று 15/ 12/ 1962 ல் மருதமலை முருகன் கோவிலில் எம்ஜிஆர் அவர்கள் பேசி இருக்கிறார்கள்.

    எம்ஜிஆர் அவர்களின் ஸ்டூடியோவில் 14 வருடங்கள் பணிபுரிந்தவர் திருமதி ஜோதி பிரபா. எம்ஜிஆரின் கடவுள் நினைப்புப் பற்றி அவரே சொல்லி இருக்கிறார். எம்ஜிஆர் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது கேக்கின் மேல் வைக்கப்பட்ட மெழுகு திரியை அணைத்த பொழுது எம்ஜிஆர் அவர்கள்…… ” ஏற்றிய ஒளியைப் பிறந்த நாளன்று அணைப்பது தவறு…. கேக் வெட்டுவது எல்லாம் மேலை நாட்டினர் பழக்கம்… நமக்குத் தேவை யில்லை. நமது பண்பாடு கோவிலுக்குச் சென்று இறைவனை வேண்டுவோம். இயலாதவர்களுக்கு ஏதாவது கொடுத்து அவர்கள் வாழ்த்தையும், பெரியவர்கள் வாழ்த்தையும் பெறவேண்டும்.. என்று கண்டித்தாக குறிப்பிடுகிறார்.

    எம்ஜிஆர் அவர்கள் தமது அம்மாவின் நினைவு நாளில் மெளன விரதம் இருப்பாராம். அவருடை செயினில் இருக்கும் அம்மாவின் படம் பதித்த டாலருக்கு தினமும் சந்தனம் வைத்து அதனை தனது பனியனுள் வைத்துக் கொள்ளுவாராம். கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை இருந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ள மாட்டாராம் என்று அவரிடம் பணிபுரிந்த ஜோதி பிரபா சுட்டிக்காட்டுகிறார்.

    எம்ஜிஆர் அவர்களின் மனதில் ஆத்மீகச் சிந்தனை இருந்து கொண்டே வந்திருக் கிறது. ஆனால் வெளியே அதனை விளம்பரப்படுத்திட அவர் விரும்பவில்லை என்றே எண்ணமுடிகிறது. இந்த ஆத்மீக பலமே அவரைப் பல இன்னல்களிலும் இருந்து காப்பாற்றியது என்பதையும் மறுப்பதற்கில்லை எனலாம்.

    நடிகமணி டி.வி. நாராயணசாமி என்பரே எம்ஜிஆர் அவர்கள் திமுக சார்பானவராக மாறக்காரணம் என்று சொல்லப்படுவதும் உண்டு. அண்ணா அவர்களோடு நெருங்கவும் திமுக காரனாக மாறவும் ஆன ஒரு சூழ்நிலைக்கு எம்ஜிஆர் அவர்களுக்கு ஏற்பட்டது.இதனால் அரசியலிலும், சினிவாவிலும் செல்வாக்கு மிக்கவராக உருவாகத் தொடங்கினார்.

    எம்ஜிஆர் அவர்களுக்கு அண்ணா அவர்களிடம் மிகுந்த விருப்பும், மரியாதையும் இருந்தது. திமுகாவில் அவர் இணைந்தாலும் திமுகவின் கொள்கைகளில் பூரண ஐக்கியம் இருந்திருக்கிறதா என்பது சந்தேகமே! அவர் மனம் ஆஸ்த்திகத்தையே நாடி நின்றது எனலாம்.

    மதுரையில் எம்ஜிஆர் அவர்களுக்கு வளங்கப்பட்ட வெள்ளி வாளை மூகாம்பிகை அம்மனுக்கே வளங்கினார். காஞ்சிப் பெரியவரே எம் ஜிஆரை “இவர் நல்லமனுஷன்” என்று சொல்லியிருக்கிறார் என்றால் ஆஸ்த்திகத்தின் செல்வாக்கு எம்ஜிஆர் அவர்களிடம் நிறைந்தே இருந்திருக்கத்தானே வேண்டும்.

    முருகபக்தரான திருமுருக வாரியார் சுவாமிகளுக்கு திமுக தொண்டர்களால் தேவையற்ற தொல்லைகள் ஏற்பட்ட வேளை அவரையும் சமாதானம் செய்து…. அண்ணாவையும் சமாதானம் ஆக்கி.. வாரியார் சுவாமிகளைக் கொண்டே “பொன்மனச் செம்மல்” என்னும் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர் என்றால் …. அங்கும் அடியாக இருந்தது ஆஸ்திக வேரே எனலாம்.அவரின் அந்த ஆஸ்த்திக நம்பிக்கைதான் அவரை அதியுயர் நிலைக் குக் கொண்டுசென்றிருக்கலாம் என்பது எனது எண்ணக்கிடக்கையாகும்.

    தேவருக்கும் எம்ஜிஆர் அவர்களுக்கும் மிகவும் நெருக்கம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகும்.தான் அரசியலில் பிரவேசித்துக் கட்சி தொடங்குவது, தேர்தலில் நிற்பது பற்றியெல்லாம் எம்ஜிஆர் சொன்ன போது…. எம்ஜிஆர் நல்லபடி வெற்றி பெறவேண்டு மென்று தேவர் மருதமலை முருகனுக்குக் காணிக்கையும் செலுத்தி அரிச்சனையும் செய்து , விபூதிப்பிரசாதத்துடன் எம் ஜி ஆரிடம் வந்து கொடுக்கிறார். எம் ஜி ஆரும் தேவர் கொடு த்த பிரசாதத்தை வேண்டாம் என்று சொல்லாமல்… அதனை வாங்கிக்கொள்கின்றார்.இவையெல்லாம் மக்கள் திலகத்தின் ஆஸ்த்திகத்துக்கு நல்ல எடுத்துக்காட்டுகள் அல்லவா?

    பிராமணரை எதிர்ப்பது என்பது திராவிடக் கட்சிகளின் மிகப்பெரிய பிரசாரமாகும். ஆனால் எம்ஜிஆர் கருத்து சற்று வித்தியாசமானதாகவே காணப்பட்டது. “முன்னேறிய ஜாதிகளிலும் ஏழைகள் இருக்கிறார்கள். அவர்களுடைய கஷ்டங்களும் தீரவேண்டும்” என்று எம்ஜிஆர் கூறினார். ஆனால் அவரின் கட்சிக்கு இது ஒத்துவராத கொள்கை தான். கடும் எதிர்ப்பு வந்ததும் அதைப்பற்றிப் பேசாமலேயே இருந்துவிட்டார்.

    எம்ஜிஆர் ரசிகமன்றத்தையே முதன் முதலாக தோற்றுவிக்கக் காரணமாயிருந்ததே யார் என நினைக்கிறீர்கள்? கல்யாணம் என்னும் ஏழைப் பிராமண இளைஞனே !

    எம்ஜிஆர் மனத்தில் இவையெல்லாம் பிற்காலத்தில் பலமாற்றங்களுக்கும் சிந்தனைக்கும் வித்திட்டிருக்கலாம் அல்லவா?

    ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் எம்ஜிஆர் அவர்கள் படப் பிடிப்போடு நின்று அதில் தீவிரம் காட்டத் தொடங்கினார். திராவிட நாடு பிரிவினையை அண்ணா அவர்கள் கைவிட்ட போது எம்ஜிஆர் அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவேயில்லை. ஹிந்தி எதிர்ப்புக் காலத்தும் அவரின் ஈடுபாடு அவ்வளவு இருந்ததாகவும் தெரியவில்லை.

    திமுக கொள்கைகளைவிட …. அவர்களது பேச்சாற்றல், நல்ல தமிழ் எழுத்து, அதுமட்டுமல்லாமல் அந்தக்கட்சியில் தனக்குக் கிடைத்த வரவேற்பு, செல்வாக்கு, இவைதான் எம்ஜிஆர் அவர்களைக் கவர்ந்திருந்தது என்பதே உண்மையாகும்.

    ஆனால் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் தனது செயல்களில் உற்சாகமாக உழைப்பதை மட்டும் விட்டுவிடாமலும் இருந்தார். அவரிடம் சில கொள்கைகள் இருந்தன. அவற்றை அவர் விட்டுக்கொடுக்கவே மாட்டார். அதே வேளை தனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக வற்புறுத்தவும் மாட்டார்.முன் கோபம் உள்ளவர். ஆனால் பின்னர் சரியான காரணத்தை எடுத்துக் கூறினால் சமாதானம் ஆகியும்விடுவார்.சந்தேகமும் அவரிடம் காணப்பட்டதாகப் பலகுறிப்புகள் வாயிலாக அறியமுடிகிறது. பலம்களும் பல்வீனங்களும்தான் மனித வாழ்க்கை. அதில் இருந்து யருமே விட்டுவிலகவே முடியாதல்லவா ?

    எம்ஜிஆர் படங்களுக்குப் பல வெற்றிப்பாடல்களைக் கொடுத்து எம்ஜிஆர் அவர்களின் அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமாய் இருந்தவர் கவிஞ்ஞர் வாலி அவர்கள். அவர் ஸ்ரீரங்கத்துப் பிராமணர். நெற்றியில் விபூதி இல்லாமல் அவர்வருவதே இல்லை. ஒரு படப்பிடிப்பின் போது .. எம்ஜிஆர் அவர்கள் .. வாலியிடம் .. தான் சார்ந்தகட்சியினர் விபூதியணியும் வாலியை எப்படிப் பாட்டெழுத சமமதித்தாய்? எங்கள் கட்சியில் வேறு ஆட்களா இல்லை என்று கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள். ஆகையால் இனி வரும்போது விபூதியை இட்டுக்கொள்ளாமல் வந்தால் நல்லது என்று எம்ஜிஆர் வாலியிடம் சொல்ல நேர்ந்தது.

    அதற்கு வாலி சொன்னார்-அப்படியா அண்ணா! நல்லது நீங்கள் வேறு பொருத்தமானவரை பார்த்து எழுதச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட ஆயத்தமானார். ஆனால் பொன்மனச் செம்மல் அவரைச் சமாதானப் படுத்தி உங்கள் விருப்பப்படியே விபூதியுடனே எழுதுங்கள் என்று சொன்னதாக.. வாலிஅவர்களே கூறியிருக்கிறா ர்கள்.

    தனது கருத்தைச் சொன்னார். ஆனால் மற்றவர் வருந்த மக்கள் திலகம் முயலவில்லை.இதனால் வாலியும் அவரும் நீண்டகாலம் கலையுலக் நண்பர்களாகவே இருந்ததை யாவரும் அறிவர். எம்ஜிஆர் இயல்பாகவே எந்தக் கெட்டபழக்கமும் இல்லாதவர். ஒழுக்கமாக வாழ்ந்தவர். ஏழ்மையை நன்கு அனுபவித்தவர். வீடு இல்லாமல், படிக்க முடியாமல், பணம் இல்லாமல், ஆதரவு இல்லாமல், வாழ்ந்து வந்தவர். இல்லாமை இல்லாமல் போக வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும். குடிசைகள் குடியிருக்கும் நல்லமனை ஆகவேண்டும். ஏழை என்று சொல்லும் நிலை இருக்கவே கூடாது. கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும், உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும், மடமை ஒழிந்து மக்கள் விழிப்புப் பெறவேண்டும். என்றெல்லாம் எம்ஜிஆர் மனத்தில் பெரிய கனவு இருந்தது.

    அந்தக் கனவுகளை கண்முன்னே கொண்டுவந்து மக்களுக்கு வெளிச்சமாகக் காட்டி அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டவேண்டும் என்றுவிரும்பினார்.அதற்கு அவர் கையில் எடுத்த உத்திதான் தமிழ்ச் சினிமா.

    எப்படி எப்படி எல்லாம் கனவுகண்டாரோ அப்படியே அதே பாத்திரமாகவே சினிமாவில் எம்ஜிஆர் அவர்கள் தோன்றினார். வெற்றியும் கண்டார். அந்த வெற்றிதான் அவரைத் தமிழ் நாட்டின் முதன்மந்திரி பதவியைத் தேடிக் கொடுத்தது. உயர், மத்தியதர, மக்களை இலக்காகக் கொள்ளாமல்… தொழிலாளர்கள், விவசாயமக்கள், கீழ், மத்திய தரத்தினரை தனது இலக்காகாக் கொண்டு… ஏழைபங்காளனாக, வீரனாக, நீதியை நிலை நாட்டுபவ னாக சமதர்மவாதியாக, என்று .. நல்ல குணமுடைய, யாவரும் விரும்பும் பாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து… அதற்கு ஏற்ப கதை , வசனம் ,பாடல்கள், காட்சிகள் அமைத்து எம்ஜிஆர் மக்கள் மனத்தில் குடியேறி நின்றார்.

    எம்ஜிஆர் அவர்களின் படங்களில் சமூகத்தளைகளை மீறி தனிமனித மேல் நிலைப் பாட்டை எய்தமுடியும் என்ற கருத்து மிகச் செப்பமாகப் பதியவைக்கப் பெற்றது.அவர் சித்தரித்த பாத்திரங்களின் குணாம்சங்களைக் கொண்ட ஒருவரகவே அவர் போற்றப்பட்டார்.

    இதனால் தமிழ்நாட்டின் நடுமட்டத்திற்குக் கீழ்வந்த சமூகப்படி நிலையினர் இடையே அவர் ஒரு புருஷராகவே போற்றப்பட்டார்.தம் நிலையிலுள்ள ஒருவர் மேல் நிலை அடைந்ததாகவே அவர் உயர்ச்சியையும் புகழையும் .. அச் சமூக மட்டங்களைச் சேர்ந்தோர் நம்பினார்கள்.

    இதனால் தன்னம்பிக்கையும், சுயவளர்ச்சி பற்றிய பிரக்ஞையும் உள்ள ஓர் இளைஞ்ஞர் குழாம் தமிழ்நாட்டில் வளரத்தொடங்கியது எனலாம். எம்ஜிஆர் தனது கவர்ச்சியின் தளமாக … தமிழ் பற்றிய நிலைப்பாட்டினைக் கொள் ளவில்லை. இன்றும்கூட கலைஞ்ஞர் கருணாநிதியோடு தொடர்புறுத்தப்படும் தமிழ்த்தன்மை எம்ஜிஆர் அவர்க ளொடு பொருத்திப் பார்க்கப்படுவதில்லை. எம்ஜிஆர் அவர்களுடைய அறைகூவல் நல்ல நேர்மையான மனிதனாக வரவேண்டும் என்பது பற்றியதாகாவே காணப்பட்டது.

    இன்று எம்ஜிஆர் அவர்கள் இல்லாத நிலையிற்கூட.. நினைத்துப் பார்க்கும்பொழுது… அவரின் தொடர்பாற்றல் திறனால் அவர் தன்னைப் பற்றிய மதிப்பீட்டினை உயர்த்துவதற்கு ஏற்றவகையில் நடந்துகொண்ட ஒருவர் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது எனலாம்.

    எம்ஜிஆர் அவர்களை உண்மையில் திராவிட இயக்கச் சினிமாத்துறைச் செயற்பாட்டுச் சாதனைகளிலிருந்து நோக்காது… அதனைத் தளமாகாக் கொண்டு வளர்ந்து.. தனக்கென ஓரிடத்தினை வகுத்துக் கொண்டார் என்றே கூறல் வேண்டும். மேலும் அண்ணா, கலைஞ்ஞர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வேறுபட்ட ஒரு சமூகத்தாக்கத்தையே இவர் ஏற்படுத்தினார் என்றே கொள்ளல் வேண்டும்.

    அண்ணாவின் பாசறையில் வளர்ந்தாலும் எம்ஜிஆர் அவர்கள் அண்ணாவிடம் இருந்த நல்லகுணங்களையே எடுத்துக்கொண்டார். தனக்கென உள்ளவற்றைப் பறிகொடுக்கவிரும்பவில்லை. சரியெனப் பட்டதை சமயத்தில் வெளிப்படுத்தித் தன்னுடைய தனியியல்பையும் அவர் வெளிப்படுத்தத் தவறியதும் இல்லை. எம்ஜிஆர் அவர்கள் எம்ஜிஆர் ஆகவே இருக்க விரும்புகிறார் என்பதை பேரறிஞர் அண்ணாவும் அறிந்து வைந்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    நீதியை, நியாயத்தை, விட்டுவிட எம்ஜிஆர் விரும்பவில்லை. நீதியும் நியாயமும் எடுபடா நிலையில்த்தான் அவருக்கும் ஏனையோருக்கும் கருத்து மோதல் வந்து பிரியும் நிலை ஏற்பட்டது. அந்த நேர்மைதான் அவரை மக்கள் மனத்தில் என்றும் மக்கள் திலகம் ஆக்கியது.

    தமிழ்ச் சினிமாவில், அரசியலில், தனிப்பட்ட நடைமுறையில் எல்லாம் எம்ஜிஆர் அவர்களை ஒரு காலபுஷன் என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல நண்பனாக இருந்துள்ளார் நல்ல நடிகனாக இருந்துள்ளார். சிறந்த கொடைவள்ளலாக விளங்கியுள்ளார். கடின உழைப்பாளியாகவும் இருந்துள்ளார். சிறந்த தொண்டனாகவும் இருந்துள்ளார். அதேவேளை நல்ல அரசியல் ஆட்சியாளனாகவும் விளங்கியுள்ளார்.

    எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்றவேளையில் பல அருமையான பணிகளை எல்லாம் ஆற்றியிருக்கி ன்றார். இலவசங்கள் பலவற்றை ஈந்து எல்லோர் மனங்களிலும் மன்னாதி மன்னனானார்.

    மதுவிலக்கை 1984ல் அமுலுக்குக் கொண்டுவந்தார். தமிழர் அல்லாதவர் எம்ஜிஆர் என்றும் … அவர் ஒரு மலையாளி என்றும் பிரசாரம் செய்யப்பட்டாலும் அது உண்மையல்ல என்பது பின் கண்டறியப்பட்டது. எம்ஜிஆர் அவர்களது காலத்திலேதான் தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக்கம் நிகழ்ந்தது. எம்ஜிஆர் அவர்கள் தனது சினிமாவில் எதையெல்லாம் காணவிளைந்தாரே அவற்றை நிறைவேற்றவே எண்ணம் கொண்டு உழைத்தார்.

    அவர் பட்டப்படிப்புப் படித்தவர் அல்ல. ஆனால் எல்லோரும் படிக்க வேண்டும் என்று கனவும் கண்டார். அதற்கான வழிவகைகளை தன் ஆட்சியிலும் ஏற்படுதிக்கொடுத்தார். அவரின் உதவியினால் படித்து முன்னேறி யவர்கள் பலபேர். அவர்கள் எல்லாம் அவரை இன்றும் தெய்வமாகவே போற்றுகின்றனர்.

    அவரின் உயர்வுக்கும் பெருமைக்கும் காரணம் அவரது வள்ளல் தன்மை என்பதை எவருமே ஏற்றுக்கொள் ளுவார்கள். கலைஞர் அவர்கள் தனது குடுப்பத்தைப் பார்ப்பார். எம்ஜிஆர் அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுப் பதையே நினைப்பார். தனக்கென எதையுமே சேர்த்துவைக்கும் நிலை எம்ஜிஆர் அவர்களிடம் இருக்கவில்லை. அவரது கைகள் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கைகள். கலியுகக் கர்ணன் என்றால் அது எம்ஜிஆர் அவர்களுக்கு மிகப்பொருந்தும் எனலாம்.

    படமுதலாளிகள், பட இயக்குனர்கள், சகநடிகர்கள், படத்தொழிலாளர்கள், உதவியென நாடிவருபவர்கள் யாவ ருக்கும் வளங்கிய வள்ளலாக எம்ஜிஆர் அவர்கள்விளங்கினார். அப்படி ஒருவரை இன்று காண்பது அரிது என்பதை அனைவருமே ஏற்றுக் கொள்வர்கள்.

    ஈழத்தமிழரைக் காப்பாற்ற தன்னால் இயன்றரை அதாவது உயிரிருக்கும்வரை எண்ணியவர் எம்ஜிஆர் அவர்கள். பிரபாகரனை தனது மகனாக எண்ணி கோடி கோடியாக தனது சொந்தப் பணத்தைக் கொடுத்த கொடை வள்ளல் எம்ஜிஆர் அவர்கள். தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழ மனத்தாலே ஆசைப்பட்டவர் மகோன்னத மாம னிதர் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்கள். அவரின் பிரிவால் தமிழ்நாட்டு மக்கள் தத்தளித்தை விடப் பலமடங்கு புலம்பிப் புரண்டவர்கள் ஈழத்துத் தமிழர்கள் ஆவர்.அந்த அளவுக்கு மக்கள் திலகம் ஈழத்துத் தமிழர்களின் இதயதெய்வமாக விளங்கினார்.

    “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” இது எம்ஜிஆர் அவர்களைத்தவிர வேறு எவருக்குமே பொருத்தமாக இருக்காது என்று கருதுகின்றேன்.

    நான் ஆணையுட்டால் அது நடந்துவிட்டால் – இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் —- என்று படத்தில் பாடி நடித்தோடு நில்லாமல் அதனை நிதர்சனமாக நடத்திக் காட்டியவர்தான் எம்ஜிஆர் என்னும் இமயம். அதுமட்டு மல்ல.. நினைத்தை நடத்தியே முடிப்பவன் நான்! நான் ! நான் ! …. என்று துணிவுடன் மூன்று முறை .. நான் என்பதை உச்சரிக்கும் துணிவு எம்ஜிஆர் அவர்களைவிட யாரருக்கு வரமுடியும்?

    குண்டடிபட்டாலும், கால்முறிவு ஏற்பட்டாலும்.. கடசிவரை நடிப்பையும் விடவில்லை. நல்லகுணத்தையும் விடவில்லை. நாட்டையும் மறக்கவில்லை. “நான் செத்துப் பிழைச்சவன்டா” என்று பட்ட துன்பங்களையெல்லாம் ஒரு பக்கமாக வைத்துவிட்டு ‘உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே” என்று எம்மை யெல்லாம் உற்சாகப் படுத்தி “நாளை நமதே இந்த நாளும் நமதே” என்று ஆறுதல் கூறிவிட்டு எல்லோர் மனங்களில் அமர்ந்திருக்கிறார் மக்கள் திலகம் எம்ஜிஆர்.அவரை நாம் ‘நாடோடி மன்னனாகவும் கண்டோம்‘ சக்கரவர்த்தித் திருமகனாகவும் பார்த்தோம்” “ஆயிரத்தில் ஒருவனாகவும்” அவரே தான் இருக்கிறார்‘ அந்த “இதயக் கனியை” மறக்கத்தான் முடியுமா? அவர்தான் ‘மன்னாதி மன்னன் ” ஆகி மக்கள் மனதை இன்றும் ஆண்டு கொண்டு இருக்கிறார்!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 97

    பழகத் தெரிய வேணும் – 97

    நிர்மலா ராகவன்

    குருட்டுத்தனம் வேண்டாமே!

    கோலாலம்பூரில் உள்ள பத்து மலையில் (BATU CAVES) தைப்பூசத் திருவிழா.

    “எங்கேடா போறோம்?”

    “யாருக்குத் தெரியும்?”

    லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களும், வேடிக்கை பார்க்க வந்தவர்களுமாக கும்பல் திரண்டிருந்தது. பலவிதமான ஒலிகளுக்குமேல் அங்கு கேட்ட ஓர் உரையாடல் அது.

    தவிர்க்க முடியாத கும்பலில் சரி. ஆனால், எப்போதும் பிறரைப் பின்தொடர்ந்தால் என்ன ஆகும்?

    `தடம் பதித்தவர்கள்’ என்று சிலரைக் குறிப்பிடுகிறோம்.

    நாமும் அவர்களைப் பின்தொடர்ந்து, அதே தடத்தில் நடந்தால், நமக்கும் மதிப்பும் மரியாதையும் கிடைக்குமே என்ற நப்பாசை பலருக்கு. ஆனால், அவர்கள் காலடி எப்படிப் பிறர் கண்களில் படும்? திருப்திதான் கிட்டுமா?

    அரசாங்க ரீதியில் இப்படிச் செய்யும்போது, ஒரு நாட்டு மக்கள் ஆட்டுமந்தைகளாக அதிகார வர்க்கத்தினரைப் பின்தொடர்கிறார்கள்.

    வாலறுந்த நரி ஒன்று பிற நரிகளைக் கேலி செய்து, அவையும் தம் வாலை வெட்டிக்கொள்ளச் செய்ததாம். தன்னை வித்தியாசமாகக் கருதிவிடப்போகிறார்களே என்ற பயம் அதற்கு.

    சமீபத்தில் மலேசியாவில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான சமாசாரம் இது.

    மாஜி பிரதமர் ஒருவர், “சீனர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள். இன்னமும் தங்கள் வழக்கப்படி, உணவு உட்கொள்ள CHOP STICKS (குச்சிகள்) பயன்படுத்துகிறார்கள்! நம்மைப்போல் கையைப் பயன்படுத்துவதில்லை,” என்று பேசியிருந்தார்.

    எல்லா இனத்தவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    `சீனர்கள் தம் உணவை மிகுந்த சூடாக உட்கொள்வார்கள். (குளிர்நாட்டுப் பழக்கம் அது). அத்தனை சூட்டில் கை வைக்கமுடியாது,’ என்று ஒருவர் விளக்க, நாட்டு ஒற்றுமையைக் குலைக்கப்பார்க்கிறார் என்ற பழி கிட்டியது.

    தமக்குச் சரியென்று படுவது எல்லாருக்கும் ஏற்புடையதாக இருக்குமா என்று பலரும் யோசிக்கத் தவறிவிடுகிறார்கள்.

    நம்மில் ஒவ்வொருவருக்கும் மூளை என்ற ஒன்று ஏன் தனித்தனியாக அமைந்திருக்கிறது?

    அதிகாரத்தை விரும்பும் சில அற்பர்கள் பயமுறுத்தியும், கேலி பேசியும் பிறரைப் பணியவைக்க முயல்வார்கள். அவர்கள் தைரியசாலிகளாக இருக்கமாட்டார்கள். அதை மறைக்கத்தான் முரட்டுத்தனம்.

    எல்லாரும் தம்மைப்போலவே நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் எதிர்த்திசையில் நடப்பவனுக்கு `கர்வி,’ `ஒற்றுமையாக இருக்காதவன்’ என்று பெயர் சூட்டிவிடுவார்கள்.

    “நீ ஓயாமல் தமிழ் புத்தகங்களைப் படிக்கிறாயே! நன்றாகவா இருக்கும்?” ஒரு மலாய் ஆசிரியை என்னைக் கேட்டாள், முகத்தைக் கோணியபடி.

    அவளுக்குப் புரியாத மொழியில் நான் படித்ததால் அவளுக்கு அச்சமோ?

    “எனக்குப் பிடிக்கும்!” என்றேன் அவள் முகத்தில் அடித்தாற்போல்.

    பழக்கவழக்கங்கள் புரியாது..

    பிற மனிதர்களை மட்டுமின்றி, பண்டைக்கால பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதும் ஒரு விதத்தில், அறியாமைதான்.

    தீபாவளியன்று எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்த ஒரு சீனர், “எதற்காக முன்வாசலில் தோரணம் கட்டுகிறீர்கள் என்று நான் பலரைக் கேட்டபோது, எல்லாரும், TRADITION (பாரம்பரிய வழக்கம்) என்றார்கள்,” என்றார், சற்று ஏமாற்றத்துடன். அறிவுப்பசி அவருக்கு.

    நல்லவேளை, நான் அதைப்பற்றிப் படித்திருந்தேன். “பலரும் நம் வீட்டுக்கு வரும்போது, அவர்கள் மூச்சுக்காற்றிலிருந்து வெளியாகும் கரியமல வாயுவை பச்சை மாவிலைகள் உள்வாங்கிக்கொள்கின்றன. இது சுகாதார அடிப்படையில் உண்டான பழக்கம்,” என்று என் `அறிவாற்றலை’ வெளிப்படுத்திக்கொண்டேன்.

    இன்று பலரும் கட்டுவது பச்சை இலைகளால் அல்ல. பிளாஸ்டிக்காலான `மாவிலைத்’ தோரணம்!

    அரிசி மாவானான கோலத்தைப் போடுவது எறும்புபோன்ற சின்னஞ்சிறு பூச்சிகளுக்கு ஆகாரமாக. அழகுக்காக அல்ல.

    இதைப் பலரும் மறந்துவிட்டதால், பிளாஸ்டிக்கின்மேல் போடப்பட்ட வண்ணக்கோலம் அமோகமாக விற்பனையாகிறது.

    பெண்களைக் கிண்டல் செய்வது நகைச்சுவையா?

    பட்டிமன்றங்களில் பெண்களைப்பற்றித் தாறுமாறாகப் பேசுகிறார் ஆண் ஒருவர். `நகைச்சுவை’ என்று ஆண்கள் சிரிக்க, `நாமும் ஒத்துப்போய்விடலாமே!’ என்று பெண்களும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.

    அவர் சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று எவரும் யோசிப்பதில்லை.

    கதை

    என் கல்லூரி நாட்களில், பிரபலமான ஒருவர் கோயிலில் கதாகாலட்சேபம் செய்ய வருவார். அவருடைய புகழும் வருமானமும் அதிகரிக்க, தான் எது பேசினாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற தைரியம் பிறந்தது அவருக்கு.

    இந்துப் புராணக்கதைகளின் நடுவே, தற்காலப் பெண்களைப்பற்றி இழிவாகப் பேச ஆரம்பித்தார். `சுவாரசியமாக இருக்கட்டுமே!’ என்று நினைத்திருப்பார். எல்லாரையும் சிரிக்கவைக்கலாம் என்ற அவர் நம்பிக்கை வீண்போகவில்லை.

    அதன்பின், நான் அவருடைய நிகழ்ச்சிக்குப் போக மறுத்துவிட்டேன்.

    “நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை!” என்று என்மேல் தாயாருக்குக் கோபம்.

    நான் மசியவில்லை.

    சில ஆண்டுகளுக்குப்பின், அம்மாவும் போவதை நிறுத்திவிட்டார், “பொண்களைக் கேவலமா பேசறார்!” என்று முகத்தைச் சுளித்தபடி.

    கூட்டத்தில் ஒருவர் சிரித்தால், சற்றும் யோசியாது, எல்லாரும் அவரைப் பின்பற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும்வரை பெண்களை இழிவுபடுத்தும் பேச்சாளர்களுக்குக் கொண்டாட்டம்தான். `கும்பலோடு கோவிந்தா!’ என்பது இப்படிப்பட்ட நடத்தைக்குத்தானா!

    பெண்கள் ஆண்களிடம் தாம் காணும் குறைகளைப்பற்றிப் பேசினாலோ, எழுதினாலோ, ஆண்கள் கொதித்தெழுவார்கள்.

    எந்த உண்மையையும் நேருக்கு நேர் சந்திக்க தைரியம் வேண்டும். ஆனால், அதைவிடப் பிறரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது எளிதாயிற்றே!

    திரைப்படங்களைக் காப்பியடிப்பது

    திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், ஆண் எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் அறையலாம், மனம்போனபடி கேலி செய்யலாம் என்று காட்டுகிறார்கள்.

    முட்டாள்களைப் பின்பற்றி நடப்பவனும் முட்டாளாகிறானே! அதையெல்லாம் பார்த்துவிட்டு, அதேபோல் நடக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

    இயக்குனர் ஒருவர், சிறிதும் மாற்றமின்றி, தான் சொல்லிக்கொடுப்பதுபோலவேதான் நடிகர்களும் பேசி, நடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாராம். அப்படிச் செய்யாவிட்டால் தண்டனை என்று அவர்கீழ் வேலை பார்த்தவர்கள் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

    நடிக்க வந்தவர்களின் மனோதர்மத்துக்கு இடங்கொடுக்காவிட்டால், எல்லாரும் ஒரேமாதிரிதான் நடிப்பார்கள். அதில் இயக்குனரின் கைவரிசை தெரியும். புதுமையோ, சுவாரசியமோ இருக்குமா?

    மதத்தின் பெயரால்

    “மத குரு” என்று தம்மைத் தாமே அறிவித்துக்கொண்டு, பெயரும் புகழுமாக இருக்கிறார்களே சிலர், எப்படி?

    கலை, தர்மம் இரண்டிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள்போல் எதையாவது ஆரம்பித்தால், நல்லவர்கள் பலர் அவருக்கு உதவியாக நடக்க முன்வருவார்கள். இது உலக நியதி.

    பல காலம் கழிந்தபின்னர்தான் அவர் செய்துவந்தது சமூக சேவை இல்லை, சுயநலம் என்பது வெளியாகும்.

    நான் அப்படி ஒருவரைச் சந்தித்திருக்கிறேன் – கலை நிகழ்ச்சிகளில்.

    அவர் நடக்கும்போதே சில பக்தைகள் அவர் காலில் விழுந்து வணங்குவார்கள். மரியாதை என்பது ஒருபுறமிருக்க, ஒருவர் அப்படிக் கும்பிட்டால், அவர் செய்த பாபம் வணங்கப்பட்டவருக்குப் போய்விடுமாம்.

    சில ஆண்டுகளிலேயே, நடக்கக்கூட முடியாது அவர் தள்ளாடியதைக் கண்டு, “அவருக்கு என்ன, கான்சரா?” என்று அவருடைய மருத்துவரைக் கேட்டேன்.

    “அது மட்டும்தான் இல்லை. மற்ற எல்லா வியாதிகளும் இருக்கின்றன,” என்ற பதில் கிடைத்தது.

    பிறர் தன்னைப் பின்பற்றுகிறார்களே என்ற பெருமிதம் அப்போதாவது மறைந்திருக்குமா?

    ஏனென்று கேள்!

    குழந்தைகள் இயற்கையாகவே எதையும் அறியும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அவர்களது அறிவுப்பசிக்குத் தீனி போடாது, `சும்மா தொணதொணக்காதே!’ என்று விரட்டிவிட்டால், அடங்கிவிடுவார்கள்.

    பதின்ம வயதில், `இப்படி நட!’ என்று அதிகாரம் செய்தால் கேட்பார்களா?

    `ஏன்? ஏன்?’ என்று கேட்கும் பழக்கம் உள்ளவர்கள் பிறர் கூறுவதையோ, செய்வதையோ பின்பற்றமாட்டார்கள். சுயமாகச் சிந்தித்துச் செயல்படுவார்கள். அவர்களைப் பார்த்துப் பிறர் அச்சமடையும் அபாயம் உண்டு!

    ஒரு மருத்துவர் கூறினார்: “தொண்டையில் வலி இருந்தால், கடையில் வாங்கும் மருந்துகளைவிட உப்பு கரைத்த வெந்நீரால் கொப்புளிப்பது சிறந்தது”.

    நான் அதை அப்படியே ஏற்கவில்லை. “ஏன், டாக்டர்?” என்று அவரை மடக்கினேன்.

    என் கேள்வியை எதிர்பாராத அவர் சற்று அயர்ந்துவிட்டார். அவரிடம் வேறு யாரும் அப்படி `எதிர்த்து’ப் பேசியதில்லை போலிருக்கிறது!

    “கூடுதலாக இன்னும் சில மணி நேரம் உப்பின் குணமாக்கும் தன்மை நீடித்திருக்கும்,” என்றார், ஒருவழியாகச் சமாளித்துக்கொண்டு.

    `டாக்டர் சொன்னால், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். அவருக்குத் தெரியாததா!’ என்பவர்களுக்கு: `அவருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், எனக்குத் தெரியாதே!’

    Share
  • தம்பட்டை அவரை அறுவடை

    தம்பட்டை அவரை அறுவடை

    தேசிய விவசாயிகள் தினமாகிய இன்று, நம் மாடித் தோட்டத்து அறுவடையைப் பாருங்கள். தம்பட்டை அவரை, மூக்குத்தி அவரை, நட்சத்திர வெண்டை உள்ளிட்டவற்றைப் பறிக்கும் காட்சிகள், இதோ உங்களுக்காக.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எருமையின் மீது ஆனைச்சாத்தன்

    எருமையின் மீது ஆனைச்சாத்தன்

    நிறைய இரட்டைவால் குருவிகளைப் பார்த்திருக்கிறேன். கால்நடைகள் மீது அமர்ந்து வந்ததைப் பார்த்த நினைவு இல்லை என நண்பர் ஐயப்பன் கிருஷ்ணன், நோக்கர் (Facebook) உரையாடல் ஒன்றில் கூறியிருந்தார். இதோ, எருமையின் மீது இரட்டைவால் குருவி அமர்ந்து வருவதைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அரவிந்த மலர்ப்பாதம் | கிருஷ்ணகுமார்

    அரவிந்த மலர்ப்பாதம் | கிருஷ்ணகுமார்

    ஞானானந்த மண்டலியில் அனுதினமும் பாடப்படும் ‘அரவிந்த மலர்ப்பாதம்’ என்ற பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் பாடுகிறார். கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நித்திலாவின் படகு சவாரி

    நித்திலாவின் படகு சவாரி

    ஆழியாறு அணைப் பூங்காவில் சிறுவர்கள் தாங்களாகவே படகு ஓட்டும் வகையில் ஒரு வாய்ப்பினை வழங்குகிறார்கள். ஒருவருக்கு ரூ.40 மட்டுமே கட்டணம். நித்திலாவின் உற்சாகமான படகு சவாரி இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கோவை – பொள்ளாச்சி சாலை

    கோவை – பொள்ளாச்சி சாலை

    கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலை எப்படி இருக்கிறது? தார்ச் சாலை – சிமெண்டுச் சாலை ஆகிய இரண்டில் எது சிறந்தது? இதோ ஒரு சோதனை ஓட்டம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கணித மேதை ராமானுஜன் – 134ஆவது பிறந்த நாள்

    கணித மேதை ராமானுஜன் – 134ஆவது பிறந்த நாள்

    இன்று கணித மேதை ராமானுஜனின் 134ஆவது பிறந்த நாள். 32 ஆண்டுகளே வாழ்ந்த ராமானுஜன், மறைந்து 100 ஆண்டுகள் கடந்த பிறகும், கணித உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருக்கிறார். இவரது பிறந்த நாளை இந்தியாவின் கணித நாளாகக் கொண்டாடுகிறோம். கும்பகோணத்தில் உள்ள, இராமானுஜனின் நினைவு இல்லத்தைக் கடந்த ஆண்டு ஆவணப்படுத்தினேன். அவரது அறையும் பயன்படுத்திய கட்டிலும் பார்த்துக்கொண்டிருந்த ஜன்னலும் அப்படியே உள்ளன. ராமானுஜன் நடமாடிய இடத்தை நீங்களும் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மயிலொன்று கண்டேன்

    மயிலொன்று கண்டேன்

    குரங்குகளைக் காண்பதற்கு முன்னதாக முதலில் கண்டது இந்த மயிலைத்தான். கோவை மாவட்டம், கவியருவியின் சாலையோரத்தில் அச்சமின்றி இரைதேடிக்கொண்டு இருந்தது. வாகனங்களின் இரைச்சலை இது கண்டுகொள்ளவே இல்லை. இது என் இடம் என்ற சுதந்திரத்துடன் சுற்றி வந்தது. இந்தச் சுதந்திரம், இதன் அழகை இன்னும் கொஞ்சம் அதிகரித்துவிட்டது. இந்தக் கான மயிலைக் கண்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 153 (மெய்  அன்பர்)

    சேக்கிழார் பாடல் நயம் – 153 (மெய் அன்பர்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    மழநாட்டில் தோன்றிய ஆனாய நாயனார் ஆயர் குலத்தைச்  சார்ந்தவர். தூய திருநீறணிந்து வாயால் சிவநாமம் செப்பி,  பேயோடு ஆடும் பிரான் அடியையே போற்றுவார். ஆநிரைகளை, அகன்ற வெளியில் மேய்த்தார். கொடியவிலங்குகளாலும், நோய்களாலும்   அவை துன்புறாமல் காத்தார் . தன மாட்டுக் கொட்டில் வளரும் படிக்காப்பாற்றினார். அங்கே ஆநிரைகள் பெருகின. தம்மிடம் ஆயர்கள் பணி புரிய , அவர் புல்லாங்குழல் ஊதும் பயிற்சியில் சிறந்தார்.

    வேதமுறை கற்று, மூங்கிலில் சரியான அளவை வெட்டி, காற்று புகும் துளை , மற்றும் சுரத்தானங்கள் கொண்ட துளைகளை அமைத்துக் குழலிசைப் புலமை பெற்றார். அக்குழலில் சிவபிரானின் அஞ்செழுத்துடன், ஏழிசைச் சுருதி முறையில்  வாசித்தது அசைகின்ற ஆசையாய் பொருள்களைக் கவர்ந்து வாசித்தார். புல்லாங்குழலுக்குப் பூசை செய்து, தாமும் வெண்ணீறணிந்து அனைவரையும் கவர்ந்த அணிகலன்களுடன், நீறணிந்த மார்பில் வண்டு மொய்க்கும் முல்லை மாலை அணிந்தார்.

    தம் பாதத்தில் செருப்பணிந்து கையில் குழல் எந்தகி ஆயர் குழுவுடன் ஆநிரை மேய்க்கச்  சென்றார்.அப்போது, நீலநிறம் பொருந்திய பெரிய மயில்கள் அகவவும், வரிசையாகிய கொடிகளில் உள்ள வண்டுகள் முல்லைப் பண்ணைப் பாடவும், இந்திர கோபமாகிய வாயினில் வண்ணமுடைய வெள்ளிய  அழகிய முல்லையரும்புகள் புன்முறுவல் காட்டவும், அசைகின்ற மின்னலாகிய இடையும் சூழும் மாலைப்பொழுதாகிய முலை அசையவும் ஞாலமாகிய பெரிய அரங்கத்திலே

    ஆடுவதற்குக் காலம் என்கின்ற பருவத்தையுடைய பெண் வந்தனள்.

    ஆனாயர் தம் அடியார்களுடன் கொன்றி மரத்தைச்  சார்ந்தார். அக்கோன்டரை மரம் சிவபிரான் போலத்  தோன்றியது. அதன் நேரே நின்று  உள்ளம் உருக, சிவபத்தித் திறம் தோன்றக் குழல்  இசைத்தார்.  பக்தி பொங்கும் இசையில் ஐந்தெழுத்தை வாசித்து,ஏழு துளைகளில் விரல் தடவி,   எல்லாவுயிர்களின்  எலும்பும்   கரைந்து உருகும் வண்ணம், மூங்கில் குழற் கருவியில்  வாய் வைத்து ஊதினார். அது வண்டு  மலரை மொய்ப்பது போல் இருந்தது!

    குழலின் துளைகளில்  ஊதிய படியே ஓசையின் ஏற்ற இறக்கங்களைச்  சோதித்துப்  பண்ணிசை பெருக, இசையின் வகைகள் அனைத்தும் சேர முல்லைப்பண்ணில் சடைமுடியார் சிரமசைக்கத் தானம் முதலான ஓசைவகைகள் ததும்ப ஐந்தெழுத்தை இசைத்தார். வலிவு, மெலிவு, மத்திமம் என்ற வகைகளில் குழல் துளைகளில் விரலிட்டு அழுத்தி, இசையை எங்கும் பரப்பினார்.

    அவர் இசைத்த ஓசை நிலமெங்கும் பரவி வானகத்தேவர்களைக் கவர்ந்தது. அவர்முன் எல்லாவுயிர்களும்  தம்மை மறந்து நெருங்கின. பசுக்களும், மான்களும் பாலூட்டும் கன்றுகளும் பெரிய கொம்புடைய காளைகளும் மெய்  சிலிர்த்து வந்தன. மயில்களும் பறவைகளும் நெருங்க, மாடு மேய்ப்பவர்களும் தொழிலை மறந்து கூடினர். உலகெங்கும் உள்ளோர், குழலிசைக்கு மயங்கினர். வானத்து தேவ மகளிர், வித்யாதரர்கள், சாரணர்கள், கின்னரர்கள், தேவர்கள், வான் வழியே வந்திறங்கினர். தேவமகளிர்கள் கற்பகப் பூஞ்சோலைகளின் பக்கத்திலிருந்து மலர்போன்ற தமது கைகளால் அமுதூட்டும் கனி பொருந்திய வாயினையுடைய மெல்லிய கிளிகளுடனே தமது கூந்தல் அலையும்படி தத்தம் விமானங்களில் விரைவாக ஏறிவந்து பரவிய ஏழிசை யமுதத்தினைப் பருகினார்கள்.

    வலியோரும் மெலியோரும்  உணர்வு ஒன்றிக் கேட்டலால் , பாம்புகளும் மயில்களுடன் சேர்ந்து வரும்; சிங்கமும் பெரிய யானையும் சேர்ந்து நிற்கும்; புலியின் வாயருகே மான்கள் சேர்ந்து நிற்கும்;  அவை காலை எடுத்து வைக்கவில்லை; மரங்கள் மலர்களை அரும்ப வில்லை; அருவிகளும் காட்டாறுகளும் ஒலிஎழுப்பி ஓடவில்லை; மேகங்கள் மழை பொழிய மறந்தன;

    இடிகள் முழங்க வில்லை; கடலையையும் ஓய்ந்தன;

    இவ்வாறு அசையும்,  அசையாப்  பொருள்கள்  இசைவயப்பட்டன; அவற்றின் புலன்களும் அந்தக்கரணங்களும் அடியாரின் குழலிசையால் உருகின! உண்மையான அடியாரின் குழலிசை வையமும் வானமும் நிறைந்தது! அடுத்துச் சேக்கிழார் பாடுகிறார்..

    பாடல்

    மெய் அன்பர் மனத்து அன்பின் விளைந்த இசைக் குழல் ஓசை
    வையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயம் ஆக்கிப்
    பொய் அன்புக்கு எட்டாத, பொன் பொதுவில் நடம் புரியும்
    ஐயன் தன் திருச் செவியின் அருகு அணையப் பெருகியது ஆல்.

    பொருள்

    மெய்யன்பரது அன்பினால் விளைந்த குழலினது இசையோசையானது இந்த உலகத்தையும் நிறைவித்து வானுலகத்தினையும் தன் வசமேயாகச் செய்து, பொய்யன்பினுக்கு எட்டாதவரும், பொன்னம்பலத்தினில் திருக்கூத்து இயற்றுகின்றவரும் ஆகிய ஐயரது திருச்செவியின் பக்கத்தில் அணையும்படி பெருகிற்று.

    விளக்கம்

    மெய்யன்ப ராதலின் அவரது மனத்து அன்பின்விளைந்த குழலோசை ஆண்டவர் திருசசெவியின் அருகு அணையப் பெருகியது என்பது குறிப்பு. இதனையே வலியுறுத்துவார் பொய்யன்புக் கெட்டாத என்று எதிர்மறை முகத்தானுங்கூறினார்.

    குழல் இசை  பேரோசையாகப்  பெருகிய.ஓசை . அவ்வோசை வையத்தையும்  வானத்தையும்  நிறைத்து, இறைவன் திருச்செவியையும் நெருங்கியது!

    நிறைத்து – வயமாக்கி – பெருகுதல் – என்ற தொழிற்பாடுகளின் உள்ளுறை குறிக்கத்தக்கது. தூல சூக்கும காரணநிலைகளுக்கேற்றவாறு கூறியது கண்டு கொள்க. புடைபெயர்ந்து ஒன்றை யொன்று பரம்பரையிற் றொடர்ந்து சென்று மறைவது ஒலியலைகளின் இயல்பு. நீரினுட் போகட்டதொரு கல்லினால் முதலில் அதனைச்சுற்றி மூண்ட அலைகள் உளவாம். பின் அவற்றைத் தொடர்ந்து தளர்ந்த அலைகள் உளவாம். பின்னர் அவ்வாறு மெலிந்து கொண்டே சென்று இறுதியில் ஒன்றும் அசையாமைபோல அவை மிக மெலிந்து காணப்படும். அது போலவே ஒலியலைகளும் உண்டாகும் இடத்தினின்றும் மேன்மேற் கிளம்பிச் சென்று சென்று இறுதியில் அதி சூக்குமமாகிய காரணத்தில் ஒடுங்கும். இங்கு ஆனாயர் குழலிசை ஓசை முதலில்  தூலமாகிய ஒலியலைகளாக எம்மருங்கும் பரவி வையத்தை நிறைத்து, அதன்பின் சூக்கும ஒலியலைகளாகமேற்பரவி வானத்தைத் தன் வயமாக்கி, அதன்மேல் அதிசூக்குமமாகிய காரண ஒலியுருவில் ஐயர் திருச்செவியின் அருகு அணையும்படி பெருகியது. அலைகள் முதலில் நாற்புறமும் சுருங்கக் கிளம்பிப் பின்னர் மேன் மேல் விரிவாகப் பெருகுமியல்பு பற்றிப் பெருகியதால் என்ற குறிப்பும் காண்க.

    இஃது எல்லாக் குழலோசைகட்கும் எல்லா ஓசை ஒலிகட்கும் இயல்பாமே? எனின், அற்றன்று; பூதசம்பந்தமாய் வையந்தன்னை நிறைத்த மட்டில் நின்று ஒழியும் ஏனைத் தொனியான்மக ஓசைகள் போலல்லாமல் இஃது அஞ்செழுத்தை உள்ளுறையாகக் கொண்டொழுகிய வர்ணான்மக ஓசையானதால் ஐயன் றிருச் செவியின் அருகணையப் பெருகியதென்க.

    ஆனாயரது குழலிசை இம்மை, மறுமை, வீடு என்னு மூன்றினையும் தரவல்லதாயிறறென்பதாம். வைய நிறைத்ததனால் இம்மையும், வானம் தன்வயமாக்கியமையால் மறுமையும், ஐயன்றிருச் செவியினருகணைதலால் வீடும் அளிக்கவல்லதாயினமை கூறப்பட்டது. இறைவனைப் பாடுதல் இம்மூன்று பயன்களையும் அளிக்கவல்லதென்பது

    “எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்,
    இம்மையேதருஞ் சோறுங் கூறையும்; ஏத்த லாமிடர் கெடலுமாம்,
    அம்மை யேசிவ லோக மாள்வதற் கியாதுமையுற வில்லையே”

    என்ற ஆளுடைய நம்பிகள் திருவாக்கா னறிக. பொய்யன்புக் கெட்டாத – ஐயன் – எனக் கூட்டுக.

    “பொக்க மிக்கவர் பூவு நீருங் கண்டு,
    நக்கு நிற்ப னவர்தமை நாணியே”

    என்பது தமிழ்மறை. ஐயனது பொற்பொது என்றது மெய்ஞ்ஞானமேயான அம்பலத்தை. எட்டாத பொற்பொது என்று கூட்டி உரைத்தலுமாம். பொற்பொது – பொன்னம்பலம்.

    மெய் அன்பு – மன மொழி மெய்என்ற மூன்றானும் சிவபெருமானையல்லாது வெறொன்றினையும் பற்றாத அன்பு. அங்ஙன மல்லாது தம்மையும் உலகையுமே பற்றுக்கோடாகக் கொண்டு செலுத்தும் அன்பு பொய்யன்பாம்.

    ஐயன்  திருச் செவியின் அருகணையப் பெருகுதலாவது கீழுள்ள தத்துவங்களை யெல்லாம் கடந்து சுத்த தத்துவத்தில் விளங்கும் இறைவனிடமும் செல்லும்படி வியாபித்தல்.ஆயின்,

    “சகஸ்ர சீரிஷாத் புருஷ சகஸ்ராட்ச சகஸ்ரபாத்” எனவும்,

    ஆயிர ஞாயிறு போலு மாயிர நீண்முடி யானும்”   எனவும்,

    ஆயிரங் கமல ஞாயி றாயிரமுக் கண்முக கரசர ணத்தோன்”எனவும்,

    “எங்கும் திருமேனி” (திருமூலர்) எனவும், “எங்கணும் பணிவதனங்கள்”  எனவும், “எங்குஞ் செவியுடையாய்”  எனவும்

    வரும்திருவாக்குக்களா லறியப் படுகின்றபடி எங்கும் நிறைந்து எல்லாம்கேட்பது இறைவனது தன்மையாதலின், இங்கு “ஐயன் றிருச்செவியி னருகணையப் பெருகியது” என்றது  என்னையோ? எனின், “அவன் மற்றிவ்விடங்களிற் பிரகாசமாய் நின்றே அல்லாதவிடத்து அப்பிரகாசமாய் நிற்றலான்”  என்ற  சிவஞானபோத  ஏதுவை விளக்குவாராகி, “அம்முதல்வன் யாங்கணும் வியாபகமாய் நிற்பினும் இவ்விரண்டிடத்து (பத்தரது வேடமும் சிவாலயமும்) மாத்திரையே தயிரின்நெய் போல விளங்கி நிலைபெற்று, அல்லுழியெல்லாம் பாலினெய்போல வெளிப்படாது நிற்றலான்” என்று எமது மாதவச் சிவஞான சுவாமிகள் சிற்றுரையினுள் உரைத்தது கொண்டு இதனை  அமைவுபடுத்திக் கொள்ளத்தக்கது.

    அன்பின் விளைந்த இசையாதல் பற்றியே, இறைவரும், இது கேட்டவுடன் வெளிப்பட்டுவந்தனர் என மேல்வரும் பாட்டிற் கூறுதலும் கருதுக.

    திருச்செவி – என்பது அரன்றன் கரசரணாதி சாங்கமெல்லாம் அருளே என்ப; ஆதலின் ‘சிவனடிசென்னி வைப்பாம்’ என்பது போல உபசாரம். இறைவனுக்கு அருளே திருமேனியாம். அத்திருமேனியில் கண் செவி முதலாகிய அவயவப் பகுப்பெல்லாம் அருளே. இக்கருத்துப்பற்றியே

    “இத்தன்மை நிகழுநாளிவர் திருத்தொண் டிருங்கையிலை,
    யத்தர்திரு வடியிணைக்கீழ்ச் சென்றணைய வவருடைய,
    மெய்த்தன்மை யன்புநுகர்ந் தருளுதற்கு விடையவர்தாஞ்,
    சித்தநிகழ் வயிரவராய்த் திருமலைநின் றணைகின்றார்”

    என்று சிறுத்தொண்டநாயனார் புராணத்துட்கூறுதலுங் காண்க.

    இப்பாடலில் ஓசையின் செயல்களும், அளவைகளான்  அறியப்படும் அறிவியல் கருத்தும் இணைந்து,  அறிவியலையும் ஆன்மிகத்தையும் துல்லியமாக  இணைத்து விளக்கும்  நுட்பத்தைக்  காட்டுகிறது!

    Share
  • குரங்கு அருவி | கவியருவி

    குரங்கு அருவி | கவியருவி

    கோவை மாவட்டத்தின் வால்பாறை நகராட்சியில், ஆழியாறு பகுதியை அடுத்துள்ள கவியருவி என்ற குரங்கு அருவிக்குச் சென்று வந்தோம். எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உடுமலைப்பேட்டையின் காற்றாலைகள்

    உடுமலைப்பேட்டையின் காற்றாலைகள்

    வெறுங்கையால் முழம் போடலாம். காற்றிலும் காவியம் தீட்டலாம். வெட்டவெளி, பொட்டல் காடு என்று வர்ணித்த இடங்கள், இன்று கோடிகளைக் குவித்து வருகின்றன. தமிழகத்தின் முக்கியமான காற்றாலை மையங்களுள் ஒன்றாக, உடுமலைப்பேட்டை திகழ்கிறது. ஆண்டு முழுவதும் காற்று வீசும் இடங்களையே இதற்குத் தேர்வு செய்கிறார்கள். ஒவ்வொரு காற்றாலையும் பல கோடிகள் செலவில் அமைக்கப்படுகின்றன. அதே போல, இவற்றிலிருந்து பல ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியான மின்சாரம் உற்பத்தி செய்து, லாபம் ஈட்டுகிறார்கள். பரபரப்பான சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் காற்றாலைகளைக் கண்டு களியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வானத்தில் எத்தனை வண்ணங்கள்

    வானத்தில் எத்தனை வண்ணங்கள்

    நண்பர்களே!

    வணக்கம்.

    21.12.2021 அன்று காலை 11 மணிக்கு, இந்தத் தொடர் நிகழ்ச்சியில் என் குருநாதரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரைப் பற்றிப் பேசவுள்ளேன்.

    வாய்ப்புடையோர் வருக! அல்லாதார் நேரலையில் காண்க!

    https://youtu.be/5L9eJCAAZYw

    அன்புடன்,

    ரமணன்

    Share
  • கோவை விமான நிலைய உள்ளழகு

    கோவை விமான நிலைய உள்ளழகு

    கோவை விமான நிலையத்தின் உள்ளழகு எப்படி இருக்கு? இதோ ஒரு சிறு உலா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share