திருச்சி புலவர் இராமமூர்த்தி

வரலாறு

மழநாட்டில் தோன்றிய ஆனாய நாயனார் ஆயர் குலத்தைச்  சார்ந்தவர். தூய திருநீறணிந்து வாயால் சிவநாமம் செப்பி,  பேயோடு ஆடும் பிரான் அடியையே போற்றுவார். ஆநிரைகளை, அகன்ற வெளியில் மேய்த்தார். கொடியவிலங்குகளாலும், நோய்களாலும்   அவை துன்புறாமல் காத்தார் . தன மாட்டுக் கொட்டில் வளரும் படிக்காப்பாற்றினார். அங்கே ஆநிரைகள் பெருகின. தம்மிடம் ஆயர்கள் பணி புரிய , அவர் புல்லாங்குழல் ஊதும் பயிற்சியில் சிறந்தார்.

வேதமுறை கற்று, மூங்கிலில் சரியான அளவை வெட்டி, காற்று புகும் துளை , மற்றும் சுரத்தானங்கள் கொண்ட துளைகளை அமைத்துக் குழலிசைப் புலமை பெற்றார். அக்குழலில் சிவபிரானின் அஞ்செழுத்துடன், ஏழிசைச் சுருதி முறையில்  வாசித்தது அசைகின்ற ஆசையாய் பொருள்களைக் கவர்ந்து வாசித்தார். புல்லாங்குழலுக்குப் பூசை செய்து, தாமும் வெண்ணீறணிந்து அனைவரையும் கவர்ந்த அணிகலன்களுடன், நீறணிந்த மார்பில் வண்டு மொய்க்கும் முல்லை மாலை அணிந்தார்.

தம் பாதத்தில் செருப்பணிந்து கையில் குழல் எந்தகி ஆயர் குழுவுடன் ஆநிரை மேய்க்கச்  சென்றார்.அப்போது, நீலநிறம் பொருந்திய பெரிய மயில்கள் அகவவும், வரிசையாகிய கொடிகளில் உள்ள வண்டுகள் முல்லைப் பண்ணைப் பாடவும், இந்திர கோபமாகிய வாயினில் வண்ணமுடைய வெள்ளிய  அழகிய முல்லையரும்புகள் புன்முறுவல் காட்டவும், அசைகின்ற மின்னலாகிய இடையும் சூழும் மாலைப்பொழுதாகிய முலை அசையவும் ஞாலமாகிய பெரிய அரங்கத்திலே

ஆடுவதற்குக் காலம் என்கின்ற பருவத்தையுடைய பெண் வந்தனள்.

ஆனாயர் தம் அடியார்களுடன் கொன்றி மரத்தைச்  சார்ந்தார். அக்கோன்டரை மரம் சிவபிரான் போலத்  தோன்றியது. அதன் நேரே நின்று  உள்ளம் உருக, சிவபத்தித் திறம் தோன்றக் குழல்  இசைத்தார்.  பக்தி பொங்கும் இசையில் ஐந்தெழுத்தை வாசித்து,ஏழு துளைகளில் விரல் தடவி,   எல்லாவுயிர்களின்  எலும்பும்   கரைந்து உருகும் வண்ணம், மூங்கில் குழற் கருவியில்  வாய் வைத்து ஊதினார். அது வண்டு  மலரை மொய்ப்பது போல் இருந்தது!

குழலின் துளைகளில்  ஊதிய படியே ஓசையின் ஏற்ற இறக்கங்களைச்  சோதித்துப்  பண்ணிசை பெருக, இசையின் வகைகள் அனைத்தும் சேர முல்லைப்பண்ணில் சடைமுடியார் சிரமசைக்கத் தானம் முதலான ஓசைவகைகள் ததும்ப ஐந்தெழுத்தை இசைத்தார். வலிவு, மெலிவு, மத்திமம் என்ற வகைகளில் குழல் துளைகளில் விரலிட்டு அழுத்தி, இசையை எங்கும் பரப்பினார்.

அவர் இசைத்த ஓசை நிலமெங்கும் பரவி வானகத்தேவர்களைக் கவர்ந்தது. அவர்முன் எல்லாவுயிர்களும்  தம்மை மறந்து நெருங்கின. பசுக்களும், மான்களும் பாலூட்டும் கன்றுகளும் பெரிய கொம்புடைய காளைகளும் மெய்  சிலிர்த்து வந்தன. மயில்களும் பறவைகளும் நெருங்க, மாடு மேய்ப்பவர்களும் தொழிலை மறந்து கூடினர். உலகெங்கும் உள்ளோர், குழலிசைக்கு மயங்கினர். வானத்து தேவ மகளிர், வித்யாதரர்கள், சாரணர்கள், கின்னரர்கள், தேவர்கள், வான் வழியே வந்திறங்கினர். தேவமகளிர்கள் கற்பகப் பூஞ்சோலைகளின் பக்கத்திலிருந்து மலர்போன்ற தமது கைகளால் அமுதூட்டும் கனி பொருந்திய வாயினையுடைய மெல்லிய கிளிகளுடனே தமது கூந்தல் அலையும்படி தத்தம் விமானங்களில் விரைவாக ஏறிவந்து பரவிய ஏழிசை யமுதத்தினைப் பருகினார்கள்.

வலியோரும் மெலியோரும்  உணர்வு ஒன்றிக் கேட்டலால் , பாம்புகளும் மயில்களுடன் சேர்ந்து வரும்; சிங்கமும் பெரிய யானையும் சேர்ந்து நிற்கும்; புலியின் வாயருகே மான்கள் சேர்ந்து நிற்கும்;  அவை காலை எடுத்து வைக்கவில்லை; மரங்கள் மலர்களை அரும்ப வில்லை; அருவிகளும் காட்டாறுகளும் ஒலிஎழுப்பி ஓடவில்லை; மேகங்கள் மழை பொழிய மறந்தன;

இடிகள் முழங்க வில்லை; கடலையையும் ஓய்ந்தன;

இவ்வாறு அசையும்,  அசையாப்  பொருள்கள்  இசைவயப்பட்டன; அவற்றின் புலன்களும் அந்தக்கரணங்களும் அடியாரின் குழலிசையால் உருகின! உண்மையான அடியாரின் குழலிசை வையமும் வானமும் நிறைந்தது! அடுத்துச் சேக்கிழார் பாடுகிறார்..

பாடல்

மெய் அன்பர் மனத்து அன்பின் விளைந்த இசைக் குழல் ஓசை
வையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயம் ஆக்கிப்
பொய் அன்புக்கு எட்டாத, பொன் பொதுவில் நடம் புரியும்
ஐயன் தன் திருச் செவியின் அருகு அணையப் பெருகியது ஆல்.

பொருள்

மெய்யன்பரது அன்பினால் விளைந்த குழலினது இசையோசையானது இந்த உலகத்தையும் நிறைவித்து வானுலகத்தினையும் தன் வசமேயாகச் செய்து, பொய்யன்பினுக்கு எட்டாதவரும், பொன்னம்பலத்தினில் திருக்கூத்து இயற்றுகின்றவரும் ஆகிய ஐயரது திருச்செவியின் பக்கத்தில் அணையும்படி பெருகிற்று.

விளக்கம்

மெய்யன்ப ராதலின் அவரது மனத்து அன்பின்விளைந்த குழலோசை ஆண்டவர் திருசசெவியின் அருகு அணையப் பெருகியது என்பது குறிப்பு. இதனையே வலியுறுத்துவார் பொய்யன்புக் கெட்டாத என்று எதிர்மறை முகத்தானுங்கூறினார்.

குழல் இசை  பேரோசையாகப்  பெருகிய.ஓசை . அவ்வோசை வையத்தையும்  வானத்தையும்  நிறைத்து, இறைவன் திருச்செவியையும் நெருங்கியது!

நிறைத்து – வயமாக்கி – பெருகுதல் – என்ற தொழிற்பாடுகளின் உள்ளுறை குறிக்கத்தக்கது. தூல சூக்கும காரணநிலைகளுக்கேற்றவாறு கூறியது கண்டு கொள்க. புடைபெயர்ந்து ஒன்றை யொன்று பரம்பரையிற் றொடர்ந்து சென்று மறைவது ஒலியலைகளின் இயல்பு. நீரினுட் போகட்டதொரு கல்லினால் முதலில் அதனைச்சுற்றி மூண்ட அலைகள் உளவாம். பின் அவற்றைத் தொடர்ந்து தளர்ந்த அலைகள் உளவாம். பின்னர் அவ்வாறு மெலிந்து கொண்டே சென்று இறுதியில் ஒன்றும் அசையாமைபோல அவை மிக மெலிந்து காணப்படும். அது போலவே ஒலியலைகளும் உண்டாகும் இடத்தினின்றும் மேன்மேற் கிளம்பிச் சென்று சென்று இறுதியில் அதி சூக்குமமாகிய காரணத்தில் ஒடுங்கும். இங்கு ஆனாயர் குழலிசை ஓசை முதலில்  தூலமாகிய ஒலியலைகளாக எம்மருங்கும் பரவி வையத்தை நிறைத்து, அதன்பின் சூக்கும ஒலியலைகளாகமேற்பரவி வானத்தைத் தன் வயமாக்கி, அதன்மேல் அதிசூக்குமமாகிய காரண ஒலியுருவில் ஐயர் திருச்செவியின் அருகு அணையும்படி பெருகியது. அலைகள் முதலில் நாற்புறமும் சுருங்கக் கிளம்பிப் பின்னர் மேன் மேல் விரிவாகப் பெருகுமியல்பு பற்றிப் பெருகியதால் என்ற குறிப்பும் காண்க.

இஃது எல்லாக் குழலோசைகட்கும் எல்லா ஓசை ஒலிகட்கும் இயல்பாமே? எனின், அற்றன்று; பூதசம்பந்தமாய் வையந்தன்னை நிறைத்த மட்டில் நின்று ஒழியும் ஏனைத் தொனியான்மக ஓசைகள் போலல்லாமல் இஃது அஞ்செழுத்தை உள்ளுறையாகக் கொண்டொழுகிய வர்ணான்மக ஓசையானதால் ஐயன் றிருச் செவியின் அருகணையப் பெருகியதென்க.

ஆனாயரது குழலிசை இம்மை, மறுமை, வீடு என்னு மூன்றினையும் தரவல்லதாயிறறென்பதாம். வைய நிறைத்ததனால் இம்மையும், வானம் தன்வயமாக்கியமையால் மறுமையும், ஐயன்றிருச் செவியினருகணைதலால் வீடும் அளிக்கவல்லதாயினமை கூறப்பட்டது. இறைவனைப் பாடுதல் இம்மூன்று பயன்களையும் அளிக்கவல்லதென்பது

“எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்,
இம்மையேதருஞ் சோறுங் கூறையும்; ஏத்த லாமிடர் கெடலுமாம்,
அம்மை யேசிவ லோக மாள்வதற் கியாதுமையுற வில்லையே”

என்ற ஆளுடைய நம்பிகள் திருவாக்கா னறிக. பொய்யன்புக் கெட்டாத – ஐயன் – எனக் கூட்டுக.

“பொக்க மிக்கவர் பூவு நீருங் கண்டு,
நக்கு நிற்ப னவர்தமை நாணியே”

என்பது தமிழ்மறை. ஐயனது பொற்பொது என்றது மெய்ஞ்ஞானமேயான அம்பலத்தை. எட்டாத பொற்பொது என்று கூட்டி உரைத்தலுமாம். பொற்பொது – பொன்னம்பலம்.

மெய் அன்பு – மன மொழி மெய்என்ற மூன்றானும் சிவபெருமானையல்லாது வெறொன்றினையும் பற்றாத அன்பு. அங்ஙன மல்லாது தம்மையும் உலகையுமே பற்றுக்கோடாகக் கொண்டு செலுத்தும் அன்பு பொய்யன்பாம்.

ஐயன்  திருச் செவியின் அருகணையப் பெருகுதலாவது கீழுள்ள தத்துவங்களை யெல்லாம் கடந்து சுத்த தத்துவத்தில் விளங்கும் இறைவனிடமும் செல்லும்படி வியாபித்தல்.ஆயின்,

“சகஸ்ர சீரிஷாத் புருஷ சகஸ்ராட்ச சகஸ்ரபாத்” எனவும்,

ஆயிர ஞாயிறு போலு மாயிர நீண்முடி யானும்”   எனவும்,

ஆயிரங் கமல ஞாயி றாயிரமுக் கண்முக கரசர ணத்தோன்”எனவும்,

“எங்கும் திருமேனி” (திருமூலர்) எனவும், “எங்கணும் பணிவதனங்கள்”  எனவும், “எங்குஞ் செவியுடையாய்”  எனவும்

வரும்திருவாக்குக்களா லறியப் படுகின்றபடி எங்கும் நிறைந்து எல்லாம்கேட்பது இறைவனது தன்மையாதலின், இங்கு “ஐயன் றிருச்செவியி னருகணையப் பெருகியது” என்றது  என்னையோ? எனின், “அவன் மற்றிவ்விடங்களிற் பிரகாசமாய் நின்றே அல்லாதவிடத்து அப்பிரகாசமாய் நிற்றலான்”  என்ற  சிவஞானபோத  ஏதுவை விளக்குவாராகி, “அம்முதல்வன் யாங்கணும் வியாபகமாய் நிற்பினும் இவ்விரண்டிடத்து (பத்தரது வேடமும் சிவாலயமும்) மாத்திரையே தயிரின்நெய் போல விளங்கி நிலைபெற்று, அல்லுழியெல்லாம் பாலினெய்போல வெளிப்படாது நிற்றலான்” என்று எமது மாதவச் சிவஞான சுவாமிகள் சிற்றுரையினுள் உரைத்தது கொண்டு இதனை  அமைவுபடுத்திக் கொள்ளத்தக்கது.

அன்பின் விளைந்த இசையாதல் பற்றியே, இறைவரும், இது கேட்டவுடன் வெளிப்பட்டுவந்தனர் என மேல்வரும் பாட்டிற் கூறுதலும் கருதுக.

திருச்செவி – என்பது அரன்றன் கரசரணாதி சாங்கமெல்லாம் அருளே என்ப; ஆதலின் ‘சிவனடிசென்னி வைப்பாம்’ என்பது போல உபசாரம். இறைவனுக்கு அருளே திருமேனியாம். அத்திருமேனியில் கண் செவி முதலாகிய அவயவப் பகுப்பெல்லாம் அருளே. இக்கருத்துப்பற்றியே

“இத்தன்மை நிகழுநாளிவர் திருத்தொண் டிருங்கையிலை,
யத்தர்திரு வடியிணைக்கீழ்ச் சென்றணைய வவருடைய,
மெய்த்தன்மை யன்புநுகர்ந் தருளுதற்கு விடையவர்தாஞ்,
சித்தநிகழ் வயிரவராய்த் திருமலைநின் றணைகின்றார்”

என்று சிறுத்தொண்டநாயனார் புராணத்துட்கூறுதலுங் காண்க.

இப்பாடலில் ஓசையின் செயல்களும், அளவைகளான்  அறியப்படும் அறிவியல் கருத்தும் இணைந்து,  அறிவியலையும் ஆன்மிகத்தையும் துல்லியமாக  இணைத்து விளக்கும்  நுட்பத்தைக்  காட்டுகிறது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.