செ. இரா.செல்வக்குமார்
இந்த வார வல்லமையாளர் 2 வயதுக் குழந்தைப் பருவத்திலேயே இசையுலகில் அரிய புகழீட்டியவர்.
இந்தவார வல்லமையாளர் சித்திரவீணை ந. இரவிக்கிரண் (இரவிகிரண்) அவர்கள் தன் 2-ஆவது அகவையிலேயே [1] இசைத்தேர்ச்சியை இசையறிஞர்கள் முன்னே வியப்பூட்டும் விதமாக வழங்கி, அரிய புகழீட்டியவர். இப்பொழுது தனது 49 ஆம் அகவையில் திருக்குறளின் 1330 குறட்பாக்களுக்கும் இசைவாணர்கள் தேனிசை எனப்போற்றும்படியாக கருநாடக இராகங்களில் இசையமைத்துள்ளார். மொத்தம் 169 இராகங்களில் அரிய தாள அமைப்புகளுடன் அமைத்து அரிய செயல் ஆற்றியிருக்கின்றார். நம்புதற்கு அரியதாய் வெறும் 16 மணிநேரத்திலேயே இதனை அமைத்தார் [2][3]
சித்திரவீணை இரவிக்கிரண் அவர்கள் பிப்பிரவரி 12, 1967 இல் மைசூரில் பிறந்தார். இவர் 1969 இலேயே இசைமேடையில் தன் இசைப்புலமையை வெளிப்படுத்தியவர். தன்னுடைய முதல் இசைக் கச்சேரியை தன் 5-ஆவது வயதில் நடத்தினார். குழந்தைமேதை எனப்புகழப்பட்டவர். இவருடைய குருவும் தந்தையும் சித்திரவீணைக்கைலைஞர் நரசிம்மன் அவர்கள். இரவிக்கிரணின் பாட்டனார் புகழ்பெற்ற கோட்டுவாத்தியக் கலைஞர் நாராயணர் அவர்கள். திரு. இரவிக்கிரணன் அவர்களை”இந்திய இசையின் மோட்ஃசார்ட்டு” என அமெரிக்காவின் விசுக்காசின் செர்னல் அறிவித்தது (“the Mozart of Indian Music” by the Wisconsin State Journal, USA) [4]
1969 இல் இரண்டு அகவையில் இசைமேடையில் குழந்தைமேதை இரவிக்கிரண் [5]
மிக இளமையான பருவத்திலேயே இந்தியக்குடியரசுத்தலைவரிடம் இருந்து சங்கீத நாடக அக்காதெமிப் பரிசைப் பெற்றார் [6]

குடியரசுத்தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களிடம் இருந்து சங்கீத நாடக அக்காதெமி பரிசைக் கலைஞர் இரவிக்கிரண் அவர்கள் பெறுதல் [5].
கலைஞர் இரவிக்கிரண் மிகப்பல விருதுகளையும் பெருமைகளையும் பெற்றவர். அரிய கோட்டுவாத்தியத்தை வாசித்து தன் பாட்டனார் வழியில் மீண்டும் இவ்விசைக் கருவியை வழக்கில் நிறுவியவராயினும், தானும் புதிய இசைக்கருவிகளையும் இசைவகைகளையும் தோற்றுவித்தவர்.
கோட்டுவாத்தியம் என்பது வீணைபோலவே தோற்றமளித்தாலும் விரற்கட்டை அல்லது ”மெட்டுகள்” எனப்படும் தடுப்புகள் இல்லா ஓர் இசைக்கருவி. இசை கமகங்களையும் அலைவுகளையும் ஒரு கட்டைபோன்ற உறுப்பால் நரம்புகள்மீது அல்லது கம்பிகளின் மீது அழுத்தித் தேய்த்து, இழைத்து இசையுருவாக்கப்படும். சித்திரவீணை என்னும் அரிய இசைக்கருவி 21 நரம்புகள் கொணடது. தனது 10 ஆவது வயதிலேயே இந்தச் சித்திரவீணையை வாசிக்கும் கலைஞராக மாறினார். 20 நரம்புகள் அல்லது இழைகள் கொண்ட நவச்சித்திரவீணை என்னும் புதிய கருவியையும் கண்டுபிடித்தார். மெல்ஃகார்மனி (“melharmony”) என்னும் புதிய இசைவடிவத்தை உருவாக்கினார். மேற்கத்திய ஒத்திசையெனப்படும் ”harmony” என்னும் வகையோடு சுரங்களால் ஆன இராகம் போன்ற ”மெலடி” என்பதையும் பிணைத்து மெல்ஃகார்மனி என்னும் இசைவடிவத்தை உருவாக்கினார்.
இவருக்குத் தமிழ்நாட்டின் கலைமாமணி விருதும், மத்தியப்பிரதேசத்தின் குமார் காந்தர்வ சம்மான் விருதும், இந்தியாவின் உயர்விருதாகிய சங்கீத நாடக அக்காதெமி விருதும் வழங்கப்பட்டன. பிறவிருதுகளின் பட்டியலை விக்கிப்பீடியாவில் காணலாம் [1]. சித்தார் கலைஞர் பண்டிதர் இரவிசங்கர் இவரைப் புகழ்ந்து கூறியபொழுது, ”கடவுளை நம்பாவிட்டால் இரவிக்கிரணைப் பாருங்கள்” (“If you don’t believe in God, look at Ravikiran.”) என்றார் [6].

சித்தார் கலைஞர் பண்டிதர் இரவிசங்கர் அவர்களுடன் சித்திரவீணைக் கலைஞர் இரவிக்கிரண் [7]
சித்திரவீணை அல்லது கோட்டுவாத்தியத்தின் படங்களை அடிக்குறிப்பு [8] இல் காட்டப்பட்டுள்ள தொடுப்பில் காணலாம். கீழே உள்ள படம் கோட்டுவாத்தியம் போன்ற விசித்திர வீணை என்னும் கருவியாகும்.
கோட்டுவாத்தியம் போன்ற விசித்திரவீணை எனப்படும் கருவி [9]
16 மணிநேரத்தில் 1330 திருக்குறளுக்கும் 169 இராகங்களில் அரிய தாளத்துடன் இசையமைத்துப் பேரினிய செயலாற்றிய கலைஞர் சித்திரவீணை இரவிக்கிரண் அவர்களை இந்தவார வல்லமையாளராகப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.
அடிக்குறிப்புகள்:
[1] https://en.wikipedia.org/wiki/N._Ravikiran ; தமிழ் விக்கிப்பீடியா ( https://ta.wikipedia.org/s/49q3 )
[2] https://www.youtube.com/watch?v=FS7T3E6Zzt8
[3] https://www.youtube.com/channel/UCKXaa7bnupptNV6ZBjlicMw
[4] http://host.madison.com/news/local/education/local_schools/school-spotlight-mozart-of-indian-music-visits-middleton-cross-plains/article_ccf9e83c-a080-11e2-bb5a-0019bb2963f4.html
[5] இரவிக்கிரண் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.
[6] Page 253 of “Another Garland, Biographies of Carnatic Composers and Musicians” – N Rajagopalan 1992
[7] Lata Ganapathy’s Facebook wall (விக்கிப்பீடியாவழியாக [1]), ஏப்பிரல் 2011.
[8] http://instrumundo.blogspot.ca/2012/12/gotuvadyam-chitravina-chitra-veena.html?_sm_au_=iVVkHt1v418sNSsR
[9] https://en.wikipedia.org/wiki/Gottuvadhyam#/media/File:Ch2.JPG



Leave a Reply