Category: மக்கள் திலகம்

  • மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்

    சரஸ்வதி ராசேந்திரன்   

    ஒரு மனிதன் பிறந்தான், வாழ்ந்தான், இருந்தான், செத்தான் என்பதுதான் பெரும்பாலோரின் கதை. ஆனால் எம்.ஜி.ஆர்  அப்படியல்ல. இளமையில் வறுமையில் வாடினாலும் கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தவர்,  ஒருவன் தான் எடுத்த முயற்சியில் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. ஆனால்  எம்.ஜி.ஆர் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிபெற்றார். ஒரு தாயின் வளர்ப்பு அவரை மேன்மை அடையச்செய்தது.

    MGR

    தாயிடம் எல்லையற்ற பாசம் உள்ளவர், தாயின் கட்டளைப்படி நாடக கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். பின் மெல்ல சினிமாவில் சான்ஸ் வர ஆரம்பித்தது. அந்த முதல் படம்தான் சதிலீலாவதி. சினிமாவில்  நடிக்க வந்தாலும், அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி குடி, சிகெரெட் இல்லாமல் இருந்தாரோ, அது போன்று  படத்திலும் குடி சிகெரெட்  அவர் தொடுவதில்லை. அவரது ரசிகர்கள் தன் படத்தைப் பார்த்து  கெட்டுப் போகக்கூடாது   என்ற உயரிய நோக்கிலும் மிக ஜாக்கிரதையுடனும் சினிமாவில் நல்ல விஷயங்களை,  நல்ல கருத்துக்களை எடுத்து சொன்னதால் மக்களுக்கு அவர் நல்ல குணங்கள்  பிடித்துப்போனது. மக்கள் மனதில் அவர்  நிறைந்தார்.  தன் படங்களில் கூட நல்லக் கருத்துக்களையே பதிவு பண்ணச் சொல்லி பாடகர்களை வேண்டுவதும் உண்டு.

    பசி என்று வந்தவருக்கு இல்லை என்று சொன்னதில்லை. உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்தார். அடிப்படையிலேயே நல்ல குணங்களையுடையவர். ஆதலால்   அவரை மக்களுக்குப் பிடித்துப் போனது. அவர் நடித்த சினிமா நூறு நாட்கள் ஒட்டி மக்களின் அமோக வரவேற்பு பெற்றதால் அறிஞர் அண்ணா அவர்கள்  எம்.ஜி.ஆரிடம் நட்பு கொண்டார், அண்ணாவின் கொள்கைகள் எம். ஜி.ஆருக்கும் பிடித்துப்போனது. அதனால் மெல்ல அரசியலுக்கு வந்தார். அரசியல் வாழ்க்கையிலும் அவர் மக்கள் ஆதரவோடு  முதலமைச்சர் ஆனார். முதலமைச்சராக வந்தாலும்  அடக்கத்துடன் மக்கள் மத்தியில்  நல்ல பெயர் எடுத்தார். பகைவனுக்குக்கூட அவர் கருணை காட்டியவர். எம். ஆர். ராதா  சுட்டபோதுகூட அவரை மன்னித்த மாமனிதர்.

    60 லிருந்து 70 வரை தமிழக மக்கள் இதயத்தில் அகில உலக தமிழ் மக்கள் இதயத்தில் கொடி கட்டி பறந்தவர் மக்கள்திலகம். தமிழ் நாட்டில் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதினை பெற்ற முதல் நடிகர் அவர். ஆனால் நாடகத்தை பின்புலமாக கொண்டவர் என்றாலும் கூட அவரது படங்களில் அவரிடம் அழுத்தமான முகபாவனைகளும் உடல் மொழிகளும் குறைவாகவே இருந்தன எம்பதனை யாரும் மறுக்க முடியாது.  உணர்ச்சிகரமான நடிப்பையும் அவரிடம் எதிர்ப்பார்க்க முடியாது. ஆனாலும் கூட அவர் நல்ல விஷயங்களை பாடல் மூலமாகவும் வசனம் மூலமாகவும்  வெளிப்படுத்தியதால் அவர் மக்கள் மனத்தில் நிலைத்து நின்றுவிட்டார்.  எம். ஜி. ஆர் ஒரு நல்ல மனிதர். நல்ல பண்பாளர். ஏழைகள்பால் இரக்கம் கொண்டவர். அவர் படங்களில் சின்ன குழந்தைகளுக்குகூட அறிவுரைகள் கூறியவர்.

    ‘நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’  என்றும் ‘சின்ன பயலே சின்னபயலே சேதி கேளுடா’ என்றும் கூப்பிட்டு பயம் கொள்ளக்கூடாது, என்றும் வீணர்களின் பேச்சுக்கு இடம் தரலாகாது என்றும் கூறச்செய்தார். அவர் பாடல்களிலும் நல்ல கருத்துக்களை சொல்லும்படி கவிஞர்களை வற்புறுத்தினார்.

    அவர் போடும் கத்தி சண்டைகள், சிலம்பாட்டம் எல்லாம் கூட குழந்தைகள் முதல் பெரியவர் வரை அவர்பால் ஈடுபாடு கொள்ளசெய்தது. தாயின் மேல் பாசம் கொண்டதால்  பாசம் படம். அடுத்து பாசத்தைவிட நீதிதான் பெரிது என்று சொல்ல நீதிக்குப்பின் பாசம்  படம் வந்தது. நல்லவன் வாழ்வான்   என்று சொன்னதோடு வாழ்ந்தும் காட்டினார். தாய்க்குப்பின் தாரம் என்று படம்  தாயை காத்த தனயன்  படம் எல்லாமே தாயை வணக்கத்திற்குரிய இடத்தில் வைத்தவை  பணத்தை விட பாசம் முக்கியம் பணமா   பாசமா, பணத்தோட்டம், பணம் படைத்தவன் படங்கள் முலம் பாசத்தை உயர்வில் வைத்தார். ரகசிய போலீசாக வந்து  எதிர் கட்சியின் அக்கிரமங்களை   அம்பலப்படுத்தினார்.

    மீனவ நண்பன், ரிக்‌ஷாகாரன், வேட்டைக்காரன் என வந்து அசத்தியவர்.  இதுகூட கடவுள் இட்ட அரச காட்டளை போலும். அவர் உடல் நிலை கலைக்கிடமாக இருந்தபோது கோடான கோடி மக்கள் அவருக்காக வேண்டி தவம் இருந்த ஒரு உதாரணம் போதும் அவர் மக்கள் மனத்தில்  என்றுமே மன்னனாக  காஞ்சித் தலைவனாக குடிகொண்டிருந்தார் என்பதற்கு சாட்சி. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடியாக இருந்தாலும் மக்கள் மனத்தில் முழுமையாக நிலைத்து நின்றவர்  எம்ஜி.ஆர் ஒருவரே என்றால் அது மிகையல்ல. அந்த மூன்றெழுத்து  முடிந்தபோதிலும் பேச்சிருக்கிறதே அதுதான் அவர்தம் வெற்றி!

    Share
  • மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்

    பவள சங்கரி

    அன்பினிய நண்பர்களுக்கு,

    வணக்கம். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். தமிழர் திருநாளாம் இத்தைத்திங்கள் நன்னாளில், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், ஏழைப்பங்காளன் என்று பல்வேறு அடைமொழிகளுடன் அன்புடன் அனைத்து மக்களாலும் இன்றும் போற்றப்படுபவர், திரையுலகம், அரசியல், சமூக நலன் என அனைத்துத் தளங்களிலும் ஓய்வில்லாமல் உழைத்த உத்தமர், தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் நல்வாழ்வு என தம் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்தவர், இன்று பிறந்த நாள் கண்ட, எம்.ஜி.ஆர். என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெற்ற தமிழக முன்னாள் முதல் அமைச்சர், மறைந்த திரு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் பன்முகத் திறமைகளை பாரில் அனைவரும் அறிவர். இத்தகைய மாமனிதரை தங்கள் பார்வையில் அறிந்ததையும், உணர்ந்ததையும், ‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ என்ற தலைப்பில் பகிர்ந்து, பரிசுகளை வெல்லுமாறு மனமுவந்து அழைக்கிறோம்.

    mgr

    திரு எம்.ஜி.ஆர். அவர்களின் மீது ஆழ்ந்த பற்றும் அன்பும் கொண்ட கவிஞர் காவிரி மைந்தன் மற்றும் சசிகுமார் இருவரும் இப்போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்துகிறார்கள் என்று மகிழ்வுடன் தெரிவிக்கிறோம். வழமை போல இந்தப் போட்டியிலும் நம் வாசகர்கள் திரளாகக் கலந்துகொண்டு வெற்றியடையச் செய்வீர்கள் என்று நம்புகிறோம். போட்டி குறித்த விவரங்கள் இதோ:

    mgr comp

    ‘தனது உயிரிலே கலந்திருப்பது தலைவன் என்கிற உணர்வு.. அவன் காட்டிய வழிகள்! நெறிகள்! பாடல்கள் மூலம் தமிழகத்தை நல்லபாதையில் இட்டுச்சென்றவன் இவன் ஒருவன் தவிர வேறு எவனும் இல்லை! கொள்கைப் பாடல்கள் என்று அவை இன்றும் உலக அளவில் பரவியிருக்கின்றன. அரசியல் அமைப்புகளுக்குக்கூட அந்தப் பாடல்கள் தான் இன்றும் ஜீவன் தருகின்றன!’- கவிஞர் காவிரி மைந்தன்.

    வல்லமை மின்னிதழ் வாயிலாக திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் இரண்டு ரசிகர்கள் – திரு.காவிரிமைந்தன் மற்றும் திரு. சசிகுமார்  ஆகிய இருவரும் இணைந்து வழங்கிடும்  ‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ – கட்டுரைப் போட்டி!!

    கட்டுரையின் அளவு குறைந்தபட்சம் 1000 வார்த்தைகளும் அதிகபட்சம் 1500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்!

    கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.03.2015 என அறிவித்திருந்தோம். வாசகர்களுக்குக் கூடுதல் அவகாசம் தரும் பொருட்டு, இதனை மார்ச்சு 31 வரை நீட்டிக்கிறோம். 

    பரிசுத் தொகை – முதல் பரிசுகள் மூன்று …. ரூ.1000 வீதமும்

    இரண்டாம் பரிசுகள் இரண்டு ரூ.750 வீதமும் மற்றும் மூன்றாம் பரிசுகளாய் மூன்று ரூ.500 வீதமும் வழங்கப்படும்!

    முன்னாள் மதுரை கல்லூரி தமிழ்ப் பேராசிரியை முனைவர் கமலம் சங்கர் அவர்கள் நடுவராக இருந்து கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து உரிய கருத்துரைகள் தந்து ஊக்கம் தர இசைவு தந்துள்ளார்கள்.

    மேற்கண்ட பரிசுகள் தவிர, பங்கேற்கும் அனைத்துக் கட்டுரைகளும் பரிசீலிக்கப்பட்டு உருவாகவிருக்கும் மனதில் நிறைந்த மக்கள் திலகம் நூலில் இடம்பெறும் என்கிற மகிழ்ச்சியான தகவலையும் முன்பதிவு செய்ய விரும்புகிறோம்!

    ஒருவரே ஒரு கட்டுரைக்கு மேல் அனுப்பலாம் எந்தத் தடையும் இல்லை..

    கட்டுரைப் போட்டி முடிவுகள் பொறுத்தவரை நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

    அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : vallamaieditor@gmail.com

    போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற வாழ்த்துகள் நண்பர்களே!

    நன்றி
    அன்புடன்
    பவள சங்கரி

    Share