மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்
பவள சங்கரி
அன்பினிய நண்பர்களுக்கு,
வணக்கம். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். தமிழர் திருநாளாம் இத்தைத்திங்கள் நன்னாளில், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், ஏழைப்பங்காளன் என்று பல்வேறு அடைமொழிகளுடன் அன்புடன் அனைத்து மக்களாலும் இன்றும் போற்றப்படுபவர், திரையுலகம், அரசியல், சமூக நலன் என அனைத்துத் தளங்களிலும் ஓய்வில்லாமல் உழைத்த உத்தமர், தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் நல்வாழ்வு என தம் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்தவர், இன்று பிறந்த நாள் கண்ட, எம்.ஜி.ஆர். என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெற்ற தமிழக முன்னாள் முதல் அமைச்சர், மறைந்த திரு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் பன்முகத் திறமைகளை பாரில் அனைவரும் அறிவர். இத்தகைய மாமனிதரை தங்கள் பார்வையில் அறிந்ததையும், உணர்ந்ததையும், ‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ என்ற தலைப்பில் பகிர்ந்து, பரிசுகளை வெல்லுமாறு மனமுவந்து அழைக்கிறோம்.
திரு எம்.ஜி.ஆர். அவர்களின் மீது ஆழ்ந்த பற்றும் அன்பும் கொண்ட கவிஞர் காவிரி மைந்தன் மற்றும் சசிகுமார் இருவரும் இப்போட்டியை வல்லமையுடன் இணைந்து நடத்துகிறார்கள் என்று மகிழ்வுடன் தெரிவிக்கிறோம். வழமை போல இந்தப் போட்டியிலும் நம் வாசகர்கள் திரளாகக் கலந்துகொண்டு வெற்றியடையச் செய்வீர்கள் என்று நம்புகிறோம். போட்டி குறித்த விவரங்கள் இதோ:
‘தனது உயிரிலே கலந்திருப்பது தலைவன் என்கிற உணர்வு.. அவன் காட்டிய வழிகள்! நெறிகள்! பாடல்கள் மூலம் தமிழகத்தை நல்லபாதையில் இட்டுச்சென்றவன் இவன் ஒருவன் தவிர வேறு எவனும் இல்லை! கொள்கைப் பாடல்கள் என்று அவை இன்றும் உலக அளவில் பரவியிருக்கின்றன. அரசியல் அமைப்புகளுக்குக்கூட அந்தப் பாடல்கள் தான் இன்றும் ஜீவன் தருகின்றன!’- கவிஞர் காவிரி மைந்தன்.
வல்லமை மின்னிதழ் வாயிலாக திரு. எம்.ஜி.ஆர் அவர்களின் இரண்டு ரசிகர்கள் – திரு.காவிரிமைந்தன் மற்றும் திரு. சசிகுமார் ஆகிய இருவரும் இணைந்து வழங்கிடும் ‘மனத்தில் நிறைந்த மக்கள் திலகம்’ – கட்டுரைப் போட்டி!!
கட்டுரையின் அளவு குறைந்தபட்சம் 1000 வார்த்தைகளும் அதிகபட்சம் 1500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்!
கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.03.2015 என அறிவித்திருந்தோம். வாசகர்களுக்குக் கூடுதல் அவகாசம் தரும் பொருட்டு, இதனை மார்ச்சு 31 வரை நீட்டிக்கிறோம்.
பரிசுத் தொகை – முதல் பரிசுகள் மூன்று …. ரூ.1000 வீதமும்
இரண்டாம் பரிசுகள் இரண்டு ரூ.750 வீதமும் மற்றும் மூன்றாம் பரிசுகளாய் மூன்று ரூ.500 வீதமும் வழங்கப்படும்!
முன்னாள் மதுரை கல்லூரி தமிழ்ப் பேராசிரியை முனைவர் கமலம் சங்கர் அவர்கள் நடுவராக இருந்து கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து உரிய கருத்துரைகள் தந்து ஊக்கம் தர இசைவு தந்துள்ளார்கள்.
மேற்கண்ட பரிசுகள் தவிர, பங்கேற்கும் அனைத்துக் கட்டுரைகளும் பரிசீலிக்கப்பட்டு உருவாகவிருக்கும் மனதில் நிறைந்த மக்கள் திலகம் நூலில் இடம்பெறும் என்கிற மகிழ்ச்சியான தகவலையும் முன்பதிவு செய்ய விரும்புகிறோம்!
ஒருவரே ஒரு கட்டுரைக்கு மேல் அனுப்பலாம் எந்தத் தடையும் இல்லை..
கட்டுரைப் போட்டி முடிவுகள் பொறுத்தவரை நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : vallamaieditor@gmail.com
போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற வாழ்த்துகள் நண்பர்களே!
நன்றி
அன்புடன்
பவள சங்கரி