“நம் நாட்டைக் காப்போம்”

–விசாலம்

பதினாறாம் நூற்றாண்டு……..

பாரத தேசம் முழுவதிலும் முஸ்லிம்களும், பட்டானியர்களும் பல இடங்களை ஆக்கிரமித்த காலம் அது. அந்நேரம் ராஜஸ்தானில் பல மன்னர்கள் மிகவும் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களிடம் தேச பக்தி மிகுந்து காணப்பட்டது. தில்லியில் ஆள வந்த பல முஸ்லிம் மன்னர்களுக்கு ராஜஸ்தான் மேல் கண் இருந்தது. தவிர ராஜ்புத் பெண்கள் மிகவும் அழகாக இருந்தமையால் அவர்களைத் தங்கள் அடிமைகளாக்கிக்கொள்ள பல மன்னர்கள் துடித்தனர். அடிக்கடி அந்த ராஜ்ஜியத்தின் மேல் மோத இதனால் போர் அடிக்கடி ஏற்பட்டது. அப்போது ஆண்ட பாபரின் மகன் ஹுமாயூன் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சேர்ஷா என்பவன் தான் பாதுஷாவாக ஆவதற்குப் பாடுபட்டுகொண்டிருந்தான்.

அந்த சமயத்தில் ராஜஸ்தானில் சித்தௌட் என்ற இடத்தை ஆண்ட அரசன் விக்ரமன் துரதர்ஷடவசமாக பல கெட்ட பழக்கங்களுடன் ஸ்திரீலோலனாக இருந்ததால் தன் ராஜ்யத்தைப் பொறுப்பாக ஆளவில்லை. மிகுந்த பலஹீனமாக இருந்ததால் இந்தச்சூழ்நிலையை சாதகமாக்கிக்கொண்டு பலர் அதை முற்றுகையிட முயற்சித்தனர். வழக்கம் போல் ராஜா விக்ரமன் தனது அரியணையில் அமர்ந்தபடி நடனத்தை ரசித்துக்கொண்டிருந்தான். அழகான இரண்டு பெண்கள் தங்கள் தலையில் பல பானைகளைச் சுமந்து நடனமாடியபடி தங்கள் கால்களைக்கொண்டு வர்ணக்கோலங்களும் போட்டுக்கொண்டிருந்தனர். அரசன் கையில் உயர்ந்த ரகு மது இருக்க தன்னை மறந்து அமர்ந்திருந்தான். திடீரென்று வந்தது போர் முழக்கம். தூரத்திலிருந்த இந்தப்படைகளை தனது மாளிகையிலிருந்த அரசி ஜவஹர்பாயி கவனித்தாள். கூடவே ராணி கர்னாவதியும் அதிரிடும் சத்தம் கேட்டு வெளி வந்தாள். அவளுக்குத் தன் மகன் விக்ரமஜித் மிகவும் பொருத்தமில்லாத அரசன் என்றும் அரியணையில் அமர லாயக்கில்லை என்றும் தெரியும். உடனே போருக்கு புறப்பட அரசனுக்கு செய்தி அனுப்பினள். தன்னையே மறந்த நிலையில் இருந்த அரசன் எப்படி கிளம்பமுடியும்? இருப்பினும் அவர்களது குல வழக்கபடி வெற்றித்திலகம் இட்டு அவனை அனுப்பி வைத்தாள்.

ஒரு முஸ்லிம் படை அங்கு முற்றுகையிட அரசன் விக்ரமன் கோழையாக ஓடி வந்துவிட்டான். ராஜஸ்தான் பெண்மணிகள் தன் நாட்டை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருந்தனர். விக்ரமனின் மனைவி ஜவஹர்பாயி ஒரு வீரப்பெண்மணி. தன் நாட்டிற்காக எதையும் செய்வாள். போர் நடக்கும் போதே முஸ்லிம் படையினர் பல ராஜபுத்ர பெண்மணிகளை இழுத்துப்போக முயல்வார்கள். கற்பழிக்கும் எண்ணம் அவர்களுக்கு இருந்ததால் அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற கொள்கையுடன் பல ஸ்திரீகள் நெருப்பை மூட்டி அதில் குதித்து தங்களை மாய்த்துக்கொள்வார்கள். இந்த அக்னிப்பிரவேசத்திற்கு “ஜௌஹர்” எனப்பெயர்.

இந்த ஜௌஹரை முதலில் ஆரம்பித்து வைத்தது ராணி பத்மினி தான். பின்னால் வந்த ஸ்ரீ ராஜாராம் மோஹன்ரரய் இது போன்ற ஜௌஹர் , சதி என்ற வழக்கங்களை மிகவும் புரட்சிகரமாக முறியடித்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஜவஹர்பாயி தன் கணவன் ஒரு நல்ல மன்னனாக இருப்பதற்கு பதிலாக இப்படி கேளிக்கையில் ஈடுப்பட்டு நாட்டைக் குட்டிச்சுவராக ஆக்குகிறானே என்று மிகவும் வருத்தம் கொண்டு மாளிகையில் இங்கும் அங்கும் அலைந்தபடி இருந்தாள். பின்னர் எப்படியும் மேவாரைக் காக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். என் கணவர் செய்ய வேண்டியதை நான் செய்ய வேண்டும், மேவாரைக்காக்க வேண்டும். என் உடலை நெருப்பில் இட்டு உயிரை விடுவதில் என்ன லாபம்? நாட்டை அல்லவா காக்க வேண்டும்! ஆகையினால் ஜௌவார் என்ற தீக்குளிப்பு செயலில் இறங்காமல் எல்லோரையும் போருக்குத்தயார் செய்ய வேண்டும். வீர மரணம் வந்தாலும் அது நாட்டுக்குப்பெருமை தான் என்று யோசனை செய்தபடி தனது யோசனையை அங்கிருக்கும் பல ராஜபுத்திர பெண்மணிகளுக்குச் சொல்ல எல்லோரையும் அழைத்தாள். அந்த நேரத்தில் முஸ்லிம் படைகள் சமீபத்தில் வரத்தொடங்கியது.

The_Rajput_ceremony_of_Jauhar_(holocaust),_1567முஸ்லிம் படைகள் சமீபத்தில் வர வர பல ராஜபுத்ர பெண்மணிகள் நெருப்பை மூட்டி அதில் விழத் தயாரானார்கள். அப்போது வீரம் பொங்க, கண்களில் கனல் பறக்க வந்தாள் விக்ரமனின் மனைவி ஜவஹர் பாய். அக்னி கபகப என்று எரிந்தபடி இருந்தது. அவள் கண்களிலும் அக்னி போல் பொரி பறந்தது.

“நில்லுங்கள், சற்றுப் பொறுங்கள்”

இந்தக்குரல் கேட்டவுடன் பல பெண்மணிகள் அக்னியில் குதிக்காமல் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று ஆவலுடன் பார்த்தனர். “சகோதரிகளே, நாம் இப்போது ஜௌஹர் செய்துக்கொண்டால் நம் கற்பு காக்கப்படும், ஆனால் இப்போது நாம் நம் மேவாரையல்லவா காப்பாற்ற வேண்டும், அது மிக முக்கியமாயிற்றே. கிளம்புங்கள் நம் உயிரைக் கொடுத்தாவது தாய்நாட்டைக் காக்க வேண்டும். ஜெய் மாதா! துர்கே! நாம் வீரத்துடன் அந்த மிலேச்சர்களைத் துரத்தியடிப்போம் நம்
மாத்ருபூமியைக் காப்பாற்றுவோம். வாளை கையில் எடுங்கள், கோஷமிடுங்கள், ஜய் துர்கே மா”.

ஒரு நிமிடம் எல்லா ராஜ்புத் பெண்களும் நெருப்பின் கனலைப்பார்த்தார்கள். நாட்டைக்காப்பாற்றுவது தான் முக்கியம் என்று உணர்ந்து வீரத்துடன் அவரவர்கள் பெரிய வாளைக் கையில் எடுத்தார்கள். எங்கும் ஜயதுர்கே என்ற கோஷம் முழங்க பெண்கள் படை கிளம்பியது. கையில் வாளுடன் வீரயுத்தம் நடந்தது. இதை எதிரிகள் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவேயில்லை.

எதிர்ப்பாராத இந்தத்திருப்பத்தினால் எதிரிகள் ஓட்டம் பிடித்தனர், இத்தனை வீரமாக தன் நாட்டையும் கற்பையும் காப்பாற்றிய ஜவஹர் பாய் சரித்திரத்தில் அழியா இடம் பெறுகிறாள்.

படம்: http://commons.wikimedia.org/wiki/File:The_Rajput_ceremony_of_Jauhar_(holocaust),_1567.jpg

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க