Category: பழகத் தெரிய வேணும்

  • பழகத் தெரிய வேணும் – 85

    பழகத் தெரிய வேணும் – 85

    நிர்மலா ராகவன்

    எவரும் தாழ்ந்தவரில்லை

    தன்னைவிட ஒரு படி மேலாக இருக்கும் பிறரைக் கண்டால், சிறுமை உணர்ச்சிக்கு ஆளாகாதவர்கள் வெகு சிலரே. அதைத் தணித்துக்கொள்ள, தன்னைவிடச் சிறந்த ஒருவருடன் எப்படியோ இணைந்தால், `நம் மதிப்பும் கூடாதா!’ என்று அவர்கள் எண்ணம் போகும்.

    கதை

    கல்வி, பொருளாதாரம், அழகு ஆகிய எல்லாவிதங்களிலும் தன்னைவிட உயர்ந்த ஒருத்தியைத் தேடி மணந்தான் சம்பத் — பிறர் பொறாமை அடையவேண்டும் என்ற நப்பாசையுடன்.

    அவன் விரும்பியதுபோலவே, அவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. ஆனால், அதை மறைக்க, `ஏமாற்றிக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டான்!’ என்று அவனைக் கேலி செய்வார்கள் என்பதைத்தான் சம்பத் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

    அந்த ஏமாற்றம் மனைவிமேல் கோபமாக மாறியது. அவளையும், அவள் குடும்பத்தினரையும் மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தான்.

    தம்பதியர் இருவருக்குமே நிம்மதி பறிபோயிற்று.

    குடும்பத்தில் உயர்வு தாழ்வு

    ஒரு குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளும் ஒரே தன்மை உடையவர்களாக இருப்பார்களா?

    இது புரியாது, பல பெற்றோர் பழிப்பார்கள்: `உன் தங்கையை, தம்பியைப் பார்! எவ்வளவு சுறுசுறுப்பாக, எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்! நீயும் இருக்கிறாயே!’

    மூத்த குழந்தையின் பொறுமையை `அசமஞ்சம்!’ என்று, எடுத்துக்கொள்வார்கள். எதையும் பிழையின்றி பொறுப்பாகச் செய்யும் குணம், `இவன் எல்லாவற்றிலும் அதிநிதானம்!’ என்ற கேலிக்குரியதாக ஆகிவிடுகிறது.

    சிறு வயதில், பெற்றோரும் பிறரும் தன்னைப்பற்றி என்ன அபிப்ராயம் கொண்டு நடத்துகிறார்களோ, அதை அப்படியே குழந்தைகள் நம்பிவிடுவார்களே!

    அதனால், `நான் என் பிறரைப்போல் புத்திசாலி இல்லை!’ என்று சிந்தனைபோக, தாழ்மை உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது.

    உடல் ரீதியாகவோ, அறிவாலோ, தம்மைத் தாழ்ந்தவர்களாக உணர்கிறவர்கள் பிறருடன் பழகத் தயங்கி, ஒதுங்குவதும் உண்டு.

    கதை

    என் மாணவன் ஒருவன் வெள்ளைக்காரச் சாயலாக இருப்பான். அவனோ மலாய் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

    ஆங்கிலேயர்களின் வசம் அன்றைய மலாய் நாடு இருந்தபோது, அவன் வம்சத்தில் யாரோ ஒரு பெண் வெள்ளைக்காரருடன் தகாத உறவு பூண்டிருக்கவேண்டும். (அவர்கள் உள்நாட்டவர்களை மணந்ததில்லை).

    பல தலைமுறைகளுக்குப்பின், இவனிடம் அந்த ஜீன்ஸ் தன் வேலையைக் காட்டிவிட்டதுதான் பரிதாபம். அவன் வயதொத்த மாணவர்கள் அவனை ஏற்கவில்லை. ஏதோ கேலிப்பொருளைப்போல் அவனை நடத்தினார்கள். அவர்களை எதிர்க்கும் தைரியமின்றி, பிறரிடமிருந்து ஒதுங்கியே இருந்தான். மூளையும் மந்தமாகிவிட்டதுபோல் இருந்தது.

    என் வயதொத்த சுபீராவின் கதையும் கிட்டத்தட்ட அவனுடையதுபோல்தான்.

    ஒரு வித்தியாசம்: அவளுடைய தந்தை ஜப்பான்காரர். (ஆங்கிலேயர்களுக்குப்பின், ஜப்பானியர் சில காலம் மலாயாவை ஆண்டார்கள்).

    சுபீராவின் தந்தை பெயர் Putih (மலாயில், வெள்ளை) என்று அடையாளக்கார்டில் குறிப்பிட்டிருந்ததால், யாரும் எதையும் சந்தேகிக்கவில்லை. அவளே சொல்லித்தான் எனக்கு மட்டும் தெரியும்.

    நான் சற்று வியப்புடன், ஒரு சரித்திர ஆசிரியையைக் கேட்டேன்: “ஜப்பானியர் மலாய்ப்பெண்களை மணந்தார்களா?”

    “இல்லை. அப்பெண்களை வைத்திருந்தார்கள்!”

    எனக்கு ஏதோ புரிந்ததுபோலிருந்தது.

    எங்கள் பள்ளிக்கு வந்த புதிதில், அவள் எல்லாருக்கும் ஏதாவது தின்பண்டங்கள் வாங்கி வருவாள்.

    (ஏதோ உள்ளர்த்தத்துடன்தான் இதைச் செய்கிறாள் என்று எனக்குத் தோன்ற, நான் வாங்க மறுத்துவிடுவேன்).

    விரைவிலேயே, எல்லாரும் அவளை ஒரேயடியாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். அவளுடைய அதிகாரம் வலுத்தது. அவள் சொல்வதை யாரேனும் ஏற்காவிட்டால், சண்டை பிடித்து, அவர்களிடம் பேசவேமாட்டாள்.

    வட்டார ரீதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு நாங்கள் இருவரும் எங்கள் பள்ளியின் சார்பில் அனுப்பப்பட்டிருந்தோம். அங்கு அவள் ஒரு வார்த்தைகூடப் பேசாது இருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

    தான் ஏதாவது சொல்லப்போய், பிறர் மாற்றுக்கருத்து கூறினால், சண்டை போடத் தோன்றுமே என்று தன்னையே அடக்கிக்கொண்டிருப்பாள். ஒரு வேளை, தாழ்மை உணர்ச்சியாலோ, என்னவோ!

    சமூகத்தால் அவர்களை ஏற்க முடிகிறதோ, இல்லையோ, முறையாகப் பிறக்காத குழந்தைகளால் தங்களைத் தாமே  ஏற்க முடிவதில்லை.

    கதை

    `பல குழந்தைகளைப் பெற்ற ஒருவரின் ஆசைநாயகியாகச் சில காலம் இருந்தவள் பெற்ற பிள்ளை நான்!’ என்ற உணர்வு கிட்டுவைத் தகித்தது.

    அவன் பிறக்குமுன்பே தந்தை இறந்துவிட்டபின், அவருடைய மனைவி அன்புடன் அவனையும் அவன் தாயையும் ஏற்றாள். ஆனால், `இவர்தான் என் தந்தை!’ என்று அவன் பெருமையுடன் எங்கும் சொல்லிக்கொள்ள முடியவில்லை.

    தன்னையும் அவர்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக ஏற்றவர்களைப் பழிக்கு ஆளாகச் செய்யவேண்டும் என்ற வன்மமாக மாறியது கிட்டுவின் ஆத்திரம்.

    இவனைத் `தம்பி’ என்று அருமையாக ஏற்றவனுடைய மனைவியை மயக்கி, தன்னுடன் இணைந்து வாழும்படி செய்தான். அப்படியும், அவனைப் பெருந்தன்மையுடன் நடத்தினார்கள். ஆனால், சமூகத்தில் அவனுடைய மதிப்பு அறவே போயிற்று.

    உயர்வும் தாழ்வும்

    நாம் எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் பிறரைவிடச் சற்றுத் தாழ்ந்த நிலையில்தான் இருப்போம்.

    தன் அறிவுகூர்மையை எண்ணிப் பெருமைப்படுகிறவன்  ஒரு சிறு பிழை புரிந்துவிட்டாலும், ஏதோ செய்யக்கூடாததைச் செய்துவிட்டாற்போல் குறுகிவிடுவான்.

    ஒரு போட்டியில் வெற்றி பெற்றவர்கள், `நான் எல்லாரையும்விட மேலானவன், திறமைசாலி!’ என்ற மிதப்புடன், தலையை நிமிர்த்தி நடப்பதைக் கண்டிருப்பீர்கள்.

    `இப்படிப்பட்டவர்களுக்குத் தோல்வி என்பதே கிடையாதா!’ என்று பிறர் அதிசயிக்க வேண்டுமாம்!

    ஒரு சிறு தோல்வி வந்தாலும், இவர்கள் துடித்துப்போய்விடுவார்கள். வெற்றி, தோல்வி நிரந்தரமல்ல என்பதை உணராதவர்கள் இவர்கள்.

    பிறருடன் எப்போதும் ஒப்பிட்டுக்கொள்ளும் குணம் நிலைத்துவிடுவதால், தன்னைவிட அழகானவர், திறமையானவர், பணக்காரர் என்று தோன்றினால், அவர்களைக் கண்டு வயிற்றெரிச்சல் எழுகிறது பெரும்பாலோருக்கு.

    தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவரைப் பார்த்தோ, கருணை எழுவதில்லை. அவர்களைக் கேலி செய்யத் தோன்றுகிறது. அப்போதுதானே, தான் மேலானவன் என்று காட்டிக்கொள்ளலாம்! அவர்களிடம் தன் திறமைகளை, தான் சாதித்ததைப் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள்.

    கதை

    பள்ளி இறுதிப் பரீட்சையில் தான் தமிழ்ப்பாடத்தில் எவ்வளவு சிறப்பான தேர்ச்சி பெற்றோம் என்று, ஆங்கிலத்தில், நீண்ட உரை நடத்தினாள் ஒரு மாது – அவளைப் பார்த்து நானும் பிரமிக்க வேண்டும் என்று எண்ணியவள்போல்.

    ஒருவழியாக ஓய்ந்ததும், “உங்களுக்குத் தமிழில் எழுதத் தெரியுமா?” என்று சவால் விடுவதுபோல் என்னிடம் கேட்டாள்.

    வலுவில் வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன், “நான் ஒரு தமிழ் எழுத்தாளர்,” என்று பதிலளித்தேன். அவள் அடைந்த அதிர்ச்சியைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

    தாம் பின்பற்றும் மதம்தான் உயர்வானது என்று பலர் கருதி, அதைப் பற்றியே பேசி, மறைமுகமாகப் பிறரை மட்டம் தட்டுவார்கள். தம்மைப் பற்றிய சந்தேகம் அவர்களுக்கே எழுந்ததாலோ?

    பணவசதி குறைந்தவர்கள் பணக்காரர்களைப் பார்த்துப் பொருமுவார்கள் என்றால், பணக்காரர்களாக இருப்பவர்கள் குடும்ப வாழ்விலோ, ஆரோக்கியத்திலோ நிறைவு இன்றி, தம்மைப்போல் இல்லாத பிறரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள்.

    முன்காலத்தில், சில அரசர்கள் தங்கத்தால் ஆன சிம்மாசனம் செய்துகொண்டார்கள். (மைசூரில் இன்றும் காணலாம்).

    கழிப்பறையில் உபயோகப்படுத்தும் சாதனத்தைத் தங்கத்தால் செய்துகொண்டார்கள் வேறு சிலர். அதில் ரத்தினக்கற்கள் பதித்துக்கொண்டவர்களும் உண்டு!

    வருவாயை எப்படிப் பிறருக்கு உபயோகமான வகைகளில் செலவிடலாம் என்ற அக்கறை இல்லாததாலா?

    இல்லை, தம் குடிமக்களைவிடத் தாம் உயர்வானவர்கள் என்று காட்டிக்கொள்ளவோ?

    சில வம்சங்களின் அழிவுக்கு இத்தகையவர்கள்தாம் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

    `நான் மேலானவன் (அல்லது தாழ்ந்தவன்)’ என்ற எண்ணப்போக்கு இல்லாது, இருக்கிறபடியே தம்மை ஏற்பவர்களிடம்தான் நிம்மதி நிலைத்திருக்கும்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 84

    பழகத் தெரிய வேணும் – 84

    நிர்மலா ராகவன்

    கற்பனையால் நனவாக்கலாம்

    உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் ஒரு பயிற்சியைத் தொடங்குமுன், அதை எவ்வளவு சிறப்பாகச் செய்யப்போகிறோம் என்று மனக்கண்ணால் பார்க்கிறார்கள்.

    குறிப்பிட்ட சூழ்நிலையில், எந்தத் தருணத்தில் எப்படி விளையாடலாம் என்று மெதுவாக – அது அப்போதே நடப்பதுபோல் — மனக்கண்ணால் பார்க்கிறார்கள்.

    ஆனால், வெறும் கனவுடன் நிற்காமல், அதைச் செயலில் காட்டுகிறார்கள். செயல் முக்கியம்.

    அதன்பின் சிறுகச் சிறுக தம் எதிர்பார்ப்பை உயர்த்திக்கொண்டே போய்த்தான் வெற்றி அடைகிறார்கள்.

    “விளையாட்டு என்பது 10% உடலுழைப்பு, மீதி 90% மனத்தளவில்”.

    அவர்களுக்கு நாம் சளைத்தவர்களா! எதை அடைய ஆசைப்படுகிறோம் என்பதை மனக்கண்ணால் பார்த்தால், அப்படியே நடக்கும்.

    சாதாரணமான கல்லெனப் பிறர் காண்பதில், சிற்பிகள் உருவம் அமைக்கிறார்களே, எப்படி?

    ஒன்றைக் கற்பனை செய்து பார்க்கையில், அது எதிரில் இருப்பதுபோன்றே வண்ணம், உரு எல்லாம் அவர்களுக்குக் காணப்படுகிறது.

    சில பொருட்களோ, மனிதர்களோ நம் எதிரே இல்லாது, அவற்றை நாம் உணரமுடியாதபோதும், அவை இருப்பதாகக் கற்பனை செய்வது முதல் படி.

    அதன்பின்னர், நமக்கு உகந்தவாறு, நன்மை பயக்குமாறு ஆழ்ந்த கற்பனையில் ஈடுபட்டு, மனக்கண்ணால் இப்போது நடப்பதைப்போல் பார்ப்பது அப்படியே பலிக்கும்.

    கதை

    என் மகன் சிறு குழந்தையாக இருந்தபோது, நான் அரங்கில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

    அப்போது, தன்னிச்சையாக இரு கை முழங்கைகளும் ஒன்றை ஒன்று பிடித்து லேசாக ஆட்ட, முதலில் ஆச்சரியம். பிறகு புரிந்தது: `குழந்தை அழுகிறது!’

    இடது கரத்தை லேசாகத் தடவிவிட்டுத் தட்டிக்கொண்டேன். `தூங்கு. தூங்கு!’

    அதன்பின், என் மனம் சமாதானம் அடைய, அழுகை நின்றுவிட்டது என்று தோன்றிப்போயிற்று.

    வீட்டுக்குள் நுழைந்தபோதே, “அம்மா! குழந்தை ஓயாம அழுதது. என்ன பண்ணினாலும், அழுகை நிக்கவே இல்லே. திடீருன்னு, மேஜிக் போட்டமாதிரி, தூங்கிப்போயிடுத்து!” என்று, மாறி, மாறி விவரித்தார்கள் என் பெண்கள்.

    நோய்வாய்ப்படும்போது

    நோயைப் பற்றிச் சிந்திக்காது, பிடித்த விஷயங்கள் நடப்பதுபோல் மனக்கண்ணால் பார்த்தால், நோயின் கடுமை நம்மை பாதிக்கவிடாது, நல்ல உணர்வுகளை எழுப்பலாம்.

    ஒரு முறை, நான் மருத்துவ மனையில் நான்கு தினங்களைக் கழிக்க வேண்டியிருந்தபோது, என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை ஆர்வத்துடன் கவனித்தேன். நல்ல கதைக்கான கரு ஒன்று கிடைத்தது.

    பூனைகளுக்குத் தகவல்

    அப்போது, `தினமும் காலையில், நாம் வளர்க்கும் பூனைகளுக்கு ஆகாரம் போடுவோமே!’ என்ற எண்ணம் எழ, அவை இப்போது எப்படி இருக்கின்றனவோ என்ற உணர்வு எழுந்தது.

    வேறு யாராவது ஆகாரம் போட்டிருப்பார்கள். ஆனால், அவை விசுவாசம் நிறைந்தவை என்பதால் கவலை.

    நான் நினைத்தபடியே ஆயிற்று.

    ஒரு பூனை நான் எப்போதும் உட்கார்ந்து புத்தகம் படிக்கும் நாற்காலியைவிட்டு எழுந்திருக்கவே இல்லை; ஊர் சுற்றிவிட்டு, சாப்பிடும் நேரத்துக்கு மட்டும் திரும்பும் இன்னொன்றோ, வீட்டைவிட்டு நகரவே இல்லை என்று பிறர் சொல்லக் கேட்டேன்.

    பிராணிகளுக்குக் கடிதமா போடமுடியும்!

    “நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுவேன். எப்போதும்போல் இருங்கள்!” என்று அவற்றிற்குத் தகவல் அனுப்பினேன் – மானசீகமாக.

    அவர்களுக்கு அது கேட்டிருக்கவேண்டும். பழையபடி நடந்துகொண்டதாம்.

    வெளியூர்களுக்குப் போக வழியின்றி, உற்றவர்களையும் பார்க்கமுடியாது பலரும் தவிக்கும் இக்காலத்தில் மன இறுக்கத்தால் தவிக்காது இருக்க ஒரு நல்ல வழி: ஒரு தோட்டத்தில் இருக்கிறோம். மலர்களின் மணம், வண்ணம், வண்டுகளின் ரீங்காரம் போன்றவற்றை கற்பனையில் அனுபவித்தால், வாழ்க்கை இனிமையாகவே இருக்கும்.

    ருசி

    ஒரு கதைமாந்தர் உண்ணும்போது ஏற்படும் ருசியை ஆசிரியர் வர்ணித்திருந்தால், ஆழ்ந்து படிப்பவர்களுக்கும் தாமே ருசிப்பதுபோல் இருக்கும். நாவில் நீர் சுரக்கும்.

    சமையல் குறிப்புகளைப் படிக்கும்போதோ, கணினித் திரையில் பார்க்கும்போதோ ஆர்வம் எழுந்து, நாமும் அந்தப் பலகாரத்தை செய்ய ஊக்கம் எழுவது இதனால்தான்.

    துணுக்கு

    ஒட்டகம் வேப்பிலையைத் துண்ணுமாம்.

    ஐயோ! கஸ்க்குமே!

    அதுக்கு நீ ஏன் மூஞ்சியை அப்படி வெச்சுக்கறே? நீயா துண்ணப்போறே?

    கதைக் கரு

    சில வரிகளே கொண்ட செய்தியைப் படிக்கும்போது, அது தம் எதிரில் அப்போதுதான் நடப்பதுபோன்ற உணர்வு எழும். அதைக் கதையாக விரிவாக்குகிறார்கள் எழுத்தாளர்கள்.

    இம்மாதிரியான கற்பனைகளால் நினைவாற்றல் அதிகரிப்பதும், நிம்மதி கிடைப்பதும் உபரிப் பயன்.

    ஒரு விலாசத்தையோ, தொலைபேசி எண்ணையோ நினைவில் பதித்துக்கொள்ள திரும்பத் திரும்பச் சொல்லிப்பார்த்துக்கொள்ள வேண்டியதில்லை. அவற்றை ஒரு கரும்பலகையில் எழுதியிருப்பதுபோல் கற்பனை செய்தால், அது மனதில் பதிந்துவிடும்.

    நான் கல்பனாஸ்வரம் போட ஆரம்பித்த கதை

    எனது இசை ஆசிரியர் முதன் முறையாக, ஒரு பாட்டிற்கு ஸ்வரம் அமைக்க ஊக்குவித்தார். நான் எவ்வளவோ முயன்றும், முடியவில்லை.

    அவர் கோபிக்கவோ, கேலி செய்யவோ இல்லையாயினும், எனக்கு ஏமாற்றமாகிவிட்டது.

    இரவு தூங்குமுன், நம்மைக் குழப்பும் ஏதாவதொரு கேள்வியை மனதில் எழுப்பினால், காலையில் பதில் தெரிந்துவிடும்.

    அன்றிரவு, நான் கேட்ட ஒரு சில பிரபல பாடகர்கள் எப்படிப் பாடினார்கள் என்று நினைவில் கொண்டுவந்து, அதேபோல் நானும் பாடுவதாகக் கற்பனை செய்தேன்.

    மறுநாள் வகுப்பில் ஸ்வரங்கள் பொழிய, “ராத்திரி பூராவும் இதையே நினைச்சுண்டு இருந்தியாம்மா?” என்று அதிசயப்பட்டுக்கேட்டார் ஆசிரியர்.

    பெருமையுடன் தலையாட்டினேன்.

    நம் எண்ணங்களும், வார்த்தைகளும் பலித்துவிடும். ஆதலால், நல்லதையே நினைக்கவேண்டுவது அவசியம்.

    ஒரு காரியத்தை ஆரம்பித்துவிட்டு, அதை எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறும்போது, நல்லதொரு முடிவைக் கற்பனையால் கண்டால், அது நனவாகும்.

    கதை

    சுமார் நாற்பது ஆண்டுகளுக்குமுன், நாடு தழுவிய ஆங்கிலச் சிறுகதைப்போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதற்கு முந்தைய வருடம், “அடுத்த வருடம் எனக்கு ஒரு பெரிய பரிசு கிடைக்கப்போகிறது!” என்று என் கணவரிடம் சொன்னேன்.

    அப்போது ஆங்கிலத்தில் பெரிதாக எதுவும் எழுதும் துணிச்சலும் இருக்கவில்லை.

    எப்படிப்பட்ட கதைகள் எழுதுவது என்ற கேள்விகள் எழ, ஒரு வருடம் முழுவதும், வாரத்தில் மூன்று நாட்கள் கோலாலம்பூரில் இருந்த அமெரிக்க வாசகசாலைக்குப் போய் ஆராய்ச்சி செய்தேன்.

    அடுத்த வருடம், போட்டி அறிவிக்கப்பட்டதும், பரிசுப்பொருளான கடிகாரம் என் கவனத்தை ஈர்க்க, அப்படத்தைத் தொட்டேன். எனக்குள் உறுதி: `நான் இதை வாங்குவேன்!’

    அதன்பின், அரைமணியில் ஒரு கதை எழுதினேன். கரு பரவாயில்லை. நடை சுமார்தான் என்று தோன்ற, ஒரு வாரம் கழித்து, யாருடைய கதையையோ படிப்பதுபோல், திருத்த ஆரம்பித்தேன். பல முறை திருத்தினேன்.

    நான் விரும்பிய அதே பரிசு என் கைக்கு வந்தது.

    அந்தக் கடிகாரம் இரண்டாவது பரிசுக்கு, முற்றிலும் தங்கத்தால் ஆனது என்பதையெல்லாம் நான் கவனிக்கவில்லை. அணிவதில் ஆர்வமும் இருக்கவில்லை.

    `என்னால் ஆங்கிலத்திலும் எழுத முடியும்!’ என்ற நம்பிக்கைதான் மகிழ்ச்சி அளித்தது.

    மனம் செய்யும் மாயம்

    அண்மையில், தொற்றுநோய்க்காக இரண்டாவது முறைக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டாள் என் பேத்தி. இரண்டு நாட்களுக்குப்பின், கல்லூரியில் ஒரு முழுப்பரீட்சை.

    முதன்முறை, ஏதேதோ பக்கவிளைவுகள்.

    ஒரு மாதத்திற்குமுன்னரே நான் கூறினேன், “தினமும் தூங்கப்போறதுக்குமுன்னாடி, `எனக்கு இந்தத் தடவை ஒரு பக்கவிளைவும் இருக்காது. சுலபமாக, நன்றாகப் பரீட்சை எழுதுவேன்!’னு மனசுக்குள்ளே நினைச்சுக்கோ,” என்றேன்.

    அவள் எண்ணியபடியே நடந்தது அவளுக்குப் பெரும் மகிழ்ச்சி.

    `நமக்கு நல்லது நடக்கும்!’ என்ற நம்பிக்கையுடன் கற்பனை செய்தால், கண்டிப்பாக நாம் விரும்பியது நடக்கும்.

    Share
  • பழகத்தெரிய வேணும் – 83

    பழகத்தெரிய வேணும் – 83

    நிர்மலா ராகவன்

    சுதந்திரம் என்பது

    ஒரு குழந்தை, புதிய விளையாட்டில் ஈடுபடும்போது, “எனக்கு முடியும்!” என்று, தன் உதவிக்கு வரும் தாயை விலக்கிவிடும், இரண்டு வயதிலேயே.

    சுயமாக ஒரு காரியத்தைச் செய்து, அதில் வெற்றிபெற்றுவிட்டோம் என்று மனமகிழ்ந்து சிரிக்கும் குழந்தைக்குப் பிறரது பாராட்டோ, பரிசுப்பொருட்களோ தேவையில்லை. தன் திறமையால் கிடைக்கும் திருப்திதான் பெரிதாகப்படும்.

    சுதந்திரத்தை நாடும் மனிதனின் அடிப்படை குணம் இது.

    அதே குழந்தை நாய் துரத்தும்போதோ, இன்னொரு குழந்தை மிரட்டும்போதோ, ஓடிவந்து தாயைக் கட்டிக்கொள்ளும். சுதந்திரத்திற்கு எதிர்மாறான பாதுகாப்பை நாடும் இத்தன்மையும் இயற்கைதான்.

    வயது ஏற, ஏற, சுதந்திரத்தைச் சிறிது சிறிதாக இழக்க நேரிடுகிறது. அது இயற்கைக்கு விரோதமானதாக இருப்பதால், மகிழ்ச்சியும் குறைந்துகொண்டே வரும்.

    பாலர் பள்ளியிலோ, அதன்பின்னரோ, முதன்முறையாக கல்வி கற்கப்போகும் குழந்தைகள் எவராவது சிரித்த முகத்துடன் போவதைப் பார்த்திருக்கிறீர்களா?

    சில குழந்தைகள் தமக்கே தெரிந்த விதத்தில் எதிர்ப்பார்கள்.

    அன்றைய மதராஸில், என்னை முதல் வகுப்பில் சேர்த்ததும், என் ஓயாத, உரத்த அழுகையைக் கண்டு பயந்த பள்ளி நிர்வாகம், “இனி உங்கள் பெண்ணைப் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்! இவளைப் பார்த்து, மற்ற குழந்தைகளும் அழுகிறார்கள்!” என்றுவிட்டதால் நான் பிழைத்தேன். வீட்டில் சுதந்திரமாக, சுவற்றுடன் பேசிக்கொண்டிருக்க முடிந்தது.

    ஆரம்பப்பள்ளியில், ஆசிரியைகள் பெற்றோரின் புரிந்துணர்வுடன் நடத்தமாட்டார்கள். `கட்டொழுங்கு’ என்ற பெயரில் அநாவசியமாக மிரட்டுவார்கள், தண்டிப்பார்கள்.

    அவர்களுக்குப் பயந்து, `ஆசிரியை என்ன சொல்வார்கள்?’ என்று யோசித்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்ய முயலும்போது, சுயமாகச் சிந்திப்பது குறைந்துவிடுகிறது. பெரியவர்களானபோதும் இதே பழக்கம் தொடர்கிறது.

    உன்னையே அறிந்துகொள்!

    நமக்குப் பிடித்தது-பிடிக்காதது, பலம்-பலவீனம், கனவுகள் போன்றவைகளைப் புரிந்து நடந்தால் எப்போதும் எதையோ இழந்ததுபோன்ற உணர்வு எழுவதைத் தடுக்கலாம்.

    சுதந்திரமாகச் சிந்திப்பதற்குத் துணிச்சல் வேண்டும். சொந்த நாட்டில் `பொறுக்கமுடியாதவை’ என்று இருப்பவைகளைப் பகிரங்கமாகச் சொன்னாலோ, எழுதினாலோ தண்டிக்கப்பட்டவர் எத்தனை பேர்! நெல்சன் மண்டேலா ஒரு தகுந்த உதாரணம்.

    தம் துறையில் சாதித்தவர்கள், சாதிப்பவர்கள், எவரை எடுத்துக்கொண்டாலும், பிறரது பழிச்சொற்களை ஏற்காது, தம் சுதந்திரமான எண்ணங்களையும், போக்கையும் விட்டுக்கொடுக்காது இருந்ததைக் காணலாம்.

    `இந்தக் காரியத்தை எப்படித்தான் செய்து முடிக்கப்போகிறோமோ!’ என்ற சலிப்பு அவர்களுக்குக் கிடையாது. ஒரு காரியத்தை ஆரம்பித்துவிட்டு, அதை முடிக்கும் தைரியமின்றி, பாதியில் பிறர் விட்டுப்போனவற்றை எடுத்துச் செய்வார்கள். அதனால் வரக்கூடிய பாதிப்புகளைப் பொருட்படுத்தாது, இறுதிவரை போராடுவார்கள்.

    தவறு செய்ய சுதந்திரம்

    புதிதாக எதையாவது செய்ய முயலும்போது பிழைகளைத் தவிர்க்கமுடியாது. கண்டனத்திற்கும் கேலிக்கும் அஞ்சினால், புதிய முயற்சிகளில் இறங்குவது ஏது!

    பிறர் நம்மைக் கட்டுப்படுத்த விடாது நடப்பதுதான் சுதந்திரம். பிறருக்காகப் பயந்தோ, அல்லது கடமை உணர்ச்சியாலோ தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்கிறவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் பறிபோய்விடுகிறது. அதன் விளைவாக, கற்பனைத்திறன் காணாமல் போய்விடும்.

    கதை

    மலேசிய ஈப்போ மாநிலத்தில், தவசகாயம் (64 வயது) ஒரு காண்டோமினியத்தின் காவலராகப் பணிபுரிந்துவந்தார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தொற்றுநோய் பரவாதிருக்க நாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    அங்கு வந்திருந்த விருந்தினர் ஒருவரது மகன் அதை மீறி, அந்த வளாகத்திலிருந்து நீச்சல் குளத்தில் இறங்கப்போனபோது, தவசகாயம் தடுத்தார்.

    ஆத்திரமடைந்த தந்தை ஒரு மேசையால் அவர் தலையில் கடுமையாகப் பலமுறை தாக்க, கிட்டத்தட்ட கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தவசகாயம். விருந்தினருக்கு `வேண்டுமென்றே கடுமையாகத் தாக்கிய’ குற்றத்திற்காகத் தண்டனை வழங்கப்பட்டது.

    எட்டு மாதங்கள் நிலைமை மாறாது இருந்த காவலர் அண்மையில் மரணமடைந்தார்.

    மலேசிய மக்கள் கொதித்தெழுந்தனர். அநியாயமாக ஓர் உயிரைப் போக்கியவர் செய்தது கொலைக்குற்றம் என்று கையெழுத்து மனு ஒன்று பரவியது. சட்டம் அதை ஏற்றால், மரண தண்டனை.

    `எங்கள் சுதந்திரத்தை ஒருவன் பறிப்பதா!’ என்று எண்ணியதுபோல் நடந்தவர் மற்றவரது சுதந்திரம், கடமை இவற்றையெல்லாம் மதிக்காதது ஏன்?

    `என்னை ஏழைத் தொழிலாளி ஒருவன் தடுப்பதா!’ என்று, தன்னை மிக உயர்வாக மதித்ததாலோ?

    குழந்தைகளுக்குச் சுதந்திரம்

    தம் குழந்தைகளிடம் அன்பு செலுத்தும் முறை அவர்கள் எந்தத் தவறும் செய்யாமல் பாதுகாப்பது என்றுதான் பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அந்த நோக்கத்துடன், அவர்களுடைய ஒவ்வொரு செயலையும் கண்காணிக்கிறார்கள்.

    குழந்தைகள் எத்தகைய நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்று தெரிந்திருக்கவேண்டியது அவசியம்தான். ஆனால், `நம் அதிகாரம் பறிபோய்விடுமே!’ என்ற கவலையுடன், எத்தனை வயதானாலும், தம் சொற்படியே அவர்கள் எப்போதும் நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அக்குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்காதா?

    தமக்கு மகிழ்ச்சி அளிப்பது எது என்றே சிலருக்குப் புரியாது போய்விடுவது இத்தகைய பெற்றோரால்தான்.

    அண்மையில் சீனாவில் நடந்த கதை

    ஏழிலிருந்து பதினோரு வயதான ஏழு சிறுவர்கள் இசை நிகழ்ச்சி ஒன்றில் பெரும் வெற்றி பெற்றனர். இசை மட்டுமின்றி, பல்வித வாத்தியங்கள் வாசிப்பதிலும், வண்ணம் பூசுவதிலும் தங்கள் திறமையைக் காட்ட, Panda Boys புகழேணியின் உச்சாணிக்கொம்பிற்கே போய்விட்டனர்.

    அவர்களுடைய புகழ் நான்கு நாட்களே நிலைத்தது.

    “இந்த வயதில் குழந்தைகள் தம் வயதினருடன் கலந்து பழக வேண்டும், விளையாடவேண்டும், கல்வி பயிலவேண்டும். இதைவிட்டு, முகவரும் (agent), பெற்றோரும் பணம் சம்பாதிக்கும் கருவிகளாக அவர்களை ஆட்டிப்படைக்கலாமா? அவர்கள் செய்வது சிறார்வதை!” என்று, சமூக வலைத்தளத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

    இவர்களுக்குமுன் பல சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருப்பதையும் எடுத்துக்காட்ட, அவர்களைப்பற்றிய எல்லா விவரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.

    நிறைவேறாமல்போன தமது கனவுகளைப் பிள்ளைகள்மூலம் சாதிக்க எண்ணியவர்களுக்குத் தகுந்த பாடம் இது.

    எது சுதந்திரம்?

    `என் பெற்றோர் சுதந்திரம் என்பது என்னவென்றே அறியாது வாழ்ந்துவிட்டார்கள். நான் அப்படி இருக்கப்போவதில்லை!’ என்று, இளம்வயதினர் பலர் மனம்போனபடி நடப்பார்கள். தம்மைப்போல் இல்லாதவர்களைக் கேலி செய்து, அவர்களையும் மாற்ற முயல்வார்கள்.

    தீய பழக்கங்களில் ஈடுபடுவதும், சட்டத்தில் பிடிபடுவதும் சுதந்திரமில்லை.

    தனக்கோ, பிறருக்கோ எந்தவிதத் தீங்கும் இழைக்காது, தன் திறமைகளை மேலும் வெளிக்கொணர நடப்பதுதான் ஒருவர் தனக்குத் தானே செய்துகொள்ளும் உதவி.

    வெளிநாட்டில்

    சூழ்நிலைக்கு ஏற்றவாறு தமக்குப் பிடித்ததைச் செய்யும் சுதந்திரமோ, அதற்கான துணிச்சலோ, எத்தனைபேருக்கு இருக்கிறது?

    வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்குப் போகிறவர்கள் பலர், தம்மைச் சிறுமையாக உணர்வார்கள். நிறையப் பணம் சம்பாதித்தாலும், ஏதோ வெறுமை இருக்கும். பொறாமை, வலுச்சண்டை — இதெல்லாம் வலுத்துவிடுகிறது.

    தம் சுதந்திரத்தைப் பிறருக்காக விட்டுக்கொடுத்துவிடுகிறோம் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

    அந்நிய நாடு பொருளாதாரத்தில் உயர்ந்ததாக இருக்கலாம். கலாசாரத்தால் வேறுபடலாம். அதனால் அந்நாட்டவர்கள் உயர்ந்தவர்களாகிவிட மாட்டார்கள்.

    அவர்கள் நம்மை மட்டம்தட்டிப் பேசினால், அவர்களது கருத்தை ஒத்துக்கொள்வதைப்போல் அசட்டுச்சிரிப்புச் சிரிக்காது, எதிர்க்கவேண்டும்.

    அதாவது, `என்னைப் பொறுத்தவரை, நானும், என்னைச் சேர்ந்தவர்களும் உயர்ந்தவர்கள்தாம்!’ என்கின்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், சிறுமை உணர்ச்சியும், மன இறுக்கமும் தாக்காது நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும். ஒரேயடியாக மாற வேண்டிய அவசியமுமில்லை.

    அத்தகைய மனஉறுதியைச் சிலர் மறுக்கிறார்களா?

    அவர்கள் நண்பர்களே அல்ல.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 82

    பழகத் தெரிய வேணும் – 82

    நிர்மலா ராகவன்

    கவலையை விட்டுத்தள்ளுங்கள்!

    “நீங்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிறீர்களே! வாழ்க்கை உங்களை நல்லவிதமாக நடத்தியிருக்கவேண்டும்!” என்று அனுமானித்தாள் என்னுடன் அதிகம் பழகியிருக்காத ஒருத்தி.

    அதற்கும் மெல்லச் சிரித்தேன். துன்பமோ, துயரமோ அறவே இல்லாத வாழ்க்கை எங்கானும் உண்டா?

    சிறு வயதில் ஏற்பட்ட பாதிப்புகளை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தால், நிம்மதி ஏது!

    சில இல்லங்களில், மூத்த மகள் தந்தைக்கு அருமையாக இருப்பாள். இரண்டாவது பெண் அம்மாவின் செல்லமாக இருந்தாலும், தந்தை தன்னிடமும் அன்பைப் பொழியவில்லேயே என்ற குறை ஏற்படக்கூடும்.

    தந்தை மறைந்தபின்னும், “அப்பா உன்னைத் தலையிலே வைத்துக்கொண்டு ஆடுவார்!” என்று சகோதரியிடம் வன்மம் பாராட்டுகிறவள் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறோம் என்பதை உணர்வதில்லை.

    கடந்தகாலக் கசப்பான நிகழ்வுகளை எப்படிச் சமாளிப்பது என்று புரிந்துவிட்டால், வாழ்க்கை எளிதானதுதான் என்று புரிந்துபோகும்.

    நம்மால் பொறுக்கமுடியாத ஒரு நினைவிலிருந்து விடுபட வேண்டுமானால், அதைப் பற்றி ஆழமாக யோசித்துத்தான் ஆகவேண்டும் – அப்படிச் செய்வது எவ்வளவு வருத்தமாக இருந்தாலும். வேறு வழி கிடையாது. இல்லையேல், அதேபோன்ற அனுபவங்கள் தொடரும்.

    கதை

    ஒரு பெரிய குடும்பத்தில் வேண்டாத பிள்ளையாகப் பிறந்தவன் செல்வம். மூத்த அண்ணனுக்கோ, அவன் கேளாமலேயே அவனுக்குப் பல சலுகைகள் கிடைத்தன. அவன் தீய பழக்கங்களில் ஈடுபட்டு, வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டவுடன், செல்வம் உறுதிபூண்டான்: `நான் முன்னுக்கு வந்து, என்னை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுப்பேன்’.

    ஆனால், தன் வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக்கொண்டபோதும், அவன் எதிர்பார்த்த மகிழ்ச்சியோ, நிம்மதியோ கிடைக்கவில்லை.

    தன்னையுமறியாது, தந்தையைப்போலவே தன்னைத் துச்சமாக நடத்தும் ஒருவனைச் சிறந்த நண்பன் என்று நம்பினான் செல்வம்.

    அதன்பின், `யாரையும் நம்ப முடியவில்லை. எல்லாரும் என்னைக் காயப்படுத்துகிறார்கள்!’ என்று புலம்ப ஆரம்பித்தான்.

    இவனிடம் பலரும் தம் குறைகளைப் பகிர்ந்துகொள்ள, அவர்களுக்கு ஆறுதலாகப் பேசுவான். அதே அன்பைத் தன்னிடமும் செலுத்த அவனுக்குத் தெரியாமல் போயிற்று.

    கடந்தகாலத்தை நினைவுகூர்ந்தாலே வருத்தம் மிக, தன்னிரக்கம் பெருகியது. அதை நினைத்தும் பார்க்க விரும்பவில்லை.

    அறியாவயதில் ஏதேதோ நடந்திருக்கலாம். கடந்த காலத்திலேயே நிலைத்து, நிகழ்காலத்தை மகிழ்ச்சியின்றிக் கடப்பானேன்!

    நல்ல நண்பர்களைப்போல் புகழ்ச்சி, பரிசுப்பொருட்களுடன் கவர்ந்து, அதன்பின் உணர்வுபூர்வமாக வதைப்பவர்கள் தொடர்பு எதற்கு?

    அப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகுவதுதான் நமக்கு நாமே செய்துகொள்ளும் உதவி.

    மன்னிப்பு

    பிறரால் வதைக்கப்பட்டவர்களால் வெகு காலமானாலும் அவர்களை மன்னிக்கமுடியாது.

    தாம் ஏன் வதையை அனுமதித்தோம் என்று, தம்மீது கொண்ட ஆத்திரமும் குற்ற உணர்வும்கூடத் தணியாது.

    வதைக்கு ஆளாகிய குழந்தைகளுக்கு எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்று கூறத் தெரியாது. அவர்களை ஏதாவது வரையச்சொன்னால், மனத்திலிருப்பது சித்திரம்வழி வெளிப்படும். (உளவியல் நிபுணர்கள் இவ்வழியைத்தான் கடைப்பிடிக்கிறார்கள்).

    செடிகளிடம் ஒரு பாடம்

    எங்கள் வீட்டில் ஒரு மல்லிகைச் செடி புதராக வளர்ந்திருந்தது. இந்தச் செடி பூத்ததே கிடையாது. ஏனெனில் ஒரு மரத்தின் நிழல் அதன்மேல் படர்ந்திருந்தது.

    அபூர்வமாக, ஒரே ஒரு கிளை மட்டும் மிக நீண்டிருக்க, அதில் மொட்டுகள்!

    சூரிய வெளிச்சம் இல்லாததால் பூக்க முடியவில்லை என்று புரிந்து, அது வெளிச்சத்தை நோக்கி வளர்ந்துவிட்டது!

    சூழ்நிலை சரியாக இல்லை என்றால், அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது அதற்குத் தெரிந்திருக்கிறது!

    இயற்கையால் துன்பம்

    துன்பமோ, துயரமோ பிறர் கொடுப்பது மட்டுமில்லை. இயற்கையும் அதைச் செய்யும்.

    கதை

    என் மகளுடைய பள்ளிக்கூட ஆசிரியை கனகா என்னைச் சந்திக்க விரும்புவதாக அழைத்தாள். (`கண்டிப்பாக உன்னைப்பற்றிக் குறை கூறமாட்டேன்!’ என்று என் மகளிடம் வாக்குறுதி கொடுத்தபின்தான் அவளால் என்னுடன் தொடர்புகொள்ள முடிந்ததாம்!).

    திருமணம் செய்துகொடுத்தபின்னும், தன் மகளுடன் தங்கிவிட்ட அவளுடைய தாய் இறந்து போயிருக்கிறாள். ஆனால் கனகாவால் அத்துயரத்தை ஏற்க முடியவில்லை.

    ஒரே மகனைப் பறிகொடுத்த துக்கத்தை நான் எப்படி எதிர்கொண்டேன் என்று அறிய விரும்பினாள் அவள்.

    பொதுவாக, எந்தத் துக்கமும் ஒன்றரை வருடத்துக்குமேல் நீடிக்காது என்று கூறுவார்கள். அது சரியல்ல.

    துயரை மாற்ற நாம் எதையாவது முனைந்து செய்தால்தான் அது காலம் முழுவதும் நம்மை ஆட்டுவித்து, நடைப்பிணமாக ஆக்கிவிடாது காத்துக்கொள்ள முடியும்.

    “என் அம்மாவுக்கு பாயசம் என்றால் ரொம்பப் பிடிக்கும். இப்போது பண்டிகைக்குக்கூட பாயசம் பண்ண மனம் வரவில்லை,” என்றாள் கனகா. “இரண்டு பேரும் மாலை வேளையில், ஒன்றாக டீ குடிப்போம். இப்போது அழுகை அழுகையாக வருகிறது”.

    “எப்பவும்போல, இரண்டு கப் டீ போட்டு எதிரெதிரே வைத்துவிட்டு, `அம்மா! டீ!’ என்று உரக்கக் கூப்பிடுங்கள். சில தினங்களுக்குப் பின் மனம் அடங்கிவிடும்,” என்றேன். “அம்மாவின் ஃபோட்டோவில் வாய்க்கருகே ஒரு சொட்டு பாயசத்தை வைத்தால், முதலில் அழுகை வரும். ஆனால், நாளடைவில், நிம்மதி கிடைக்கும்,” என்று என் சொந்த அனுபவத்தை விளக்கினேன்.

    உற்றவர் மறைந்தபின் துயருறும் சிலர் என்னிடம் இவ்வாறு ஆலோசனை கேட்டிருக்கிறார்கள்.

    விபத்தில் மகனைப் பறிகொடுத்த ஒரு முதியவர், `உங்களிடம் பேசியதும், நிம்மதியாக இருந்தது,’ என்று, வெகு தூரத்திலிருந்து என்னைச் சந்திக்க வந்தார், மறுமுறை.

    சில வருடங்களுக்குப்பின், அவர் குடும்பத்தில் இன்னொரு துக்கம் நிகழ, அயல்நாட்டிலிருந்த என்னைத் தொடர்புகொண்டார்.

    `நான் மாறிவிட்டேன். நீங்களும் மாறலாம். ஓயாமல் அழுதுகொண்டிருக்க வேண்டியதில்லை,’ என்று நான் சொல்லாமல் சொன்னது அவ்விருவருக்கும் நம்பிக்கை அளித்துவிட்டது.

    போதைப் பழக்கத்தில் ஈடுபட்டு, பின்பு அதிலிருந்து விடுபட்டவர்களையும், சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவிட்டுத் திரும்பித் திருந்தி வாழ்பவர்களையும் கல்விக்கூடங்களில் உரையாற்ற அழைக்கிறார்களே, ஏன்?

    `நீங்களும் மாறலாம்’ என்ற நம்பிக்கையைப் பிறருக்கு ஊட்டுவதற்காகத்தான்.

    `அப்போது எனக்குத்தான் தெரியவில்லை. பிறரும் என்னைக் காப்பாற்றத் தவறிவிட்டார்கள். ஆனால், நான் அப்படி இருக்கமாட்டேன். அவதிப்படும் பிறருக்கு ஆதரவாக இருப்பேன்!’ என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டவர்கள் இவர்கள்.

    அப்போக்கால், பிறரது கவலையைப் போக்குவதுடன் தம் மனதையும் ஆற்றிக்கொள்கிறார்கள்.

    பெருந்துயரோ, தீய பழக்கங்களோ மட்டும் மாற்றப்பட வேண்டியதில்லை.

    மகிழ்ச்சி எங்கே?

    `நமக்கு ஏன் மகிழ்ச்சியே கிடைப்பதில்லை?’ பலருக்கும் மன உளைச்சலை உண்டாக்கும் கேள்வி.

    தமக்கு என்ன வேண்டும் என்று புரியாததால் வரும் விளைவு இது.

    நமக்கு உகந்ததாக இல்லாவிட்டாலும், பிறரது எதிர்பார்ப்புகளை ஏற்றுச் செய்யும்போது சலிப்பாகவோ, எரிச்சலாகவோ இருக்கும். எல்லோரிடமும் நற்பெயர் வாங்கவேண்டும், பிறர் மனதை நோகடிக்கக்கூடாது என்ற எண்ணத்துடன், அக்காரியங்களைச் செய்வானேன்! எதற்காக நம்மையே கஷ்டப்படுத்திக்கொள்வது?

    நம் நலனையும் கவனித்துக்கொள்ள வேண்டாமா?

    எதிலும் சுயநலம்

    “எவருமே சிறிதும் சுயநலமின்றி, பிறருக்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வதில்லை” — இவ்வாறு கூறினார் ஆப்ரஹாம் லிங்கனின் நண்பர் ஒருவர்.

    மாஜி அமெரிக்க ஜனாதிபதியோ அக்கூற்றை ஏற்க மறுத்தார். “நான் பிறருக்கு நன்மை செய்வதில் என்ன சுயநலம் இருக்க முடியும்?” என்று விவாதித்தார்.

    “அப்படிச் செய்வதால் உனக்கு என்ன கிடைக்கிறது?”

    “மகிழ்ச்சிதான்!”

    “அதுவும் சுயநலம்தானே! உனக்காகத்தானே செய்கிறாய்!” என்று அவரை மடக்கினார் நண்பர்.

    கலைஞர்களும் மனக்கவலையும்

    பண்பட்ட நடிகர்களும், எழுத்தாளர்களும் தம் அனுபவங்களை செயல்மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.

    ஒருவரை ஆட்டிப்படைக்கும் எண்ணங்களை, அவற்றால் எழும் பாதிப்பை, வெகுவாகக் குறைக்கும் வலிமை எழுத்துக்கு உண்டு.

    நிம்மதி பெறுவதற்கு, எழுத்தாளராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. நம்மை அலைக்கழைக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி யோசித்து, அன்றாடம் எழுதிவந்தாலே நம் மனம் புரிந்துபோகும்.

    அநாவசியமான கவலைகளை மனதில் சுமந்து அவதிப்படுவானேன்!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 81

    பழகத் தெரிய வேணும் – 81

    நிர்மலா ராகவன்

    உன்னையே மாற்றிக்கொள்!

    `என்னதான் கிரைண்டர் வந்தாலும், அம்மியிலே அரைச்சாதான் ருசி!’

    இப்படிக் கூறிய பெண்மணிக்கு நாற்பத்தைந்து வயதுகூட ஆகியிருக்கவில்லை. ஆனால், எல்லாவித புதிய முயற்சிகளும் நல்லதல்ல, அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது அவளுடைய ஆணித்தரமான நம்பிக்கை.

    இலக்கு: அரைப்பது.

    அம்மியில் அரைத்தால், அதிக நேரம் செலவாகும். மின்சார இயந்திரத்தால் அரைப்பதற்குச் சில வினாடிகள் போதும். வேலைப்பளுவும் வெகுவாகக் குறையும்.

    இலக்கு மாறுபடாது இருந்தால், புதிய, எளிதான முறையைப் பின்பற்ற என்ன தடை?

    `அதுதான் மெழுகுவர்த்தி இருக்கிறதே, மின்சார விளக்கு எதற்கு?’ என்று தாமஸ் ஆல்வா எடிசன் நினைத்திருந்தால், இன்றும் அரைகுறை வெளிச்சத்தில்தான் முட்டி மோதிக்கொண்டு இருந்திருப்போம்.

    விமானங்களில் பறக்க முடியாது என்ற நிலை இருந்தால், `அயல்நாடுகள்’ என்பனவற்றைப் புத்தகங்களில்தான் படித்தாக வேண்டும். முழுமையாகப் புரிந்தும் இருக்காது.

    காலத்திற்கு ஏற்றவாறு மாறாததால், பல மிருகங்கள் காணாமல் போய்விட்டன.

    நிலைமை என்று மாறும்?

    தற்காலத்தில், தொற்றுநோய் வெகுவாகப் பரவிவிட்டதால், வெளியில் அதிகம் அலைய முடியாத நிலை.

    பொறுத்துப்போவது கடினம்தான். ஆனால், வேறு வழியில்லை. இந்நிலை விரைவிலேயே மாறிவிடும் என்று நம்பிக் காத்திருக்க முடியாது. எத்தனை மாதங்கள், ஆண்டுகள் பிடிக்குமோ! `நாம் எதற்கு மாறுவது? உலகம்தான் மாறவேண்டும்!’ என்ற வறட்டுப் பிடிவாதம் நடைமுறைக்கு உதவாது. யாருக்காகவும் உலகம் மாறப்போவதில்லை.

    ஆண்டுகள் பிடிக்குமோ!

    எதிர்பாராத இந்த மாற்றங்களை ஏற்க முடியாது போக, பலரும் ஆத்திரத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால், வன்முறை அதிகரித்துவிட்டது.

    முதியவர்களுக்குத் தம் வயதொத்தவர்களுடன் பேசிப் பழக இயலவில்லையே என்ற மன இறுக்கம்.

    இளையவர்களோ வீட்டிலேயே அடைந்து கிடக்கவேண்டும்.  அங்கேயே அலுவலக வேலை, பள்ளிப் படிப்பு.

    பெற்றோர் நாள் முழுவதும் குழந்தைகளுடன் வீட்டிலேயே கழிக்க நேர்கிறது. பணத் தட்டுப்பாடு வேறு.

    சிறு குழந்தைகளுக்கு இதெல்லாம் புரியாது. அவர்களுடைய பிடிவாதம் அதிகரிக்கும்.

    இச்சமயத்தில் குழந்தைகளை அவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தலாம். முடிந்தால், சிறுவர்களுடன் நாமும் விளையாடலாம். சிரிப்பும் களிப்புமாக இருக்கும்.

    ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் புத்தங்களைப் படித்துக் காட்டலாம். உணவு உட்கொள்ளும்போது, கதைகள் சொன்னால் அறிவும் மொழி வளமும் பெருகுவதுடன், கதை கேட்கும் சுவாரசியத்தில், என்ன சாப்பிடுகிறோம் என்றே புரியாது சாப்பிட்டுவிடுவார்கள்.

    இன்றும், என் மகள், “அம்மா! நான் சாப்பிடறபோது நீ கதை சொல்ல மாட்டேங்கறே! அசடாப் போயிடுவேன்!” என்று விளையாட்டாக மிரட்டுவாள்!

    மாறமாட்டோம்!

    “தண்ணீர், பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்கிறது. அதுபோல், அறிவாளிகளும் சூழ்நிலைக்குத் தக்கவாறு தம்மை மாற்றிக்கொள்கிறார்கள்” (சீனப் பழமொழி).

    `மாற மாட்டோம்!’ என்ற கொள்கை உடையவர்களின் வாழ்க்கை எளிதாக இராது.

    `வேளை சரியாக இல்லை, கலி முத்திவிட்டது,’ என்று, தாம் கஷ்டப்படுவதற்குப் பல காரணங்கள் கற்பிப்பார்களே தவிர, தாம் எப்படி தம் வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள முடியும் என்ற யோசனை அவர்களுக்கு எழுவதில்லை.

    வாழ்க்கை ஒரே மாதிரி இருக்காது. `நான் செய்வதுதான் சரி!’ என்ற பிடிவாதம் இல்லாது, சற்றே பணிவுடன் நடந்தால்தான் குழப்பங்கள் அதிகரிக்காது. நிம்மதிக்காக மாறித்தான் ஆகவேண்டும்.

    புதிய நிலையை ஏற்பது

    `மாற்றம்’ என்றால், வெளிநாடுகளுக்குப் போய் திரும்பியதும், குட்டையான ஆடைகளும், ஆங்கில உச்சரிப்புடன் கூடிய நுனி நாக்குத் தமிழும், அடிக்கடி தோள்களைக் குலுக்கிக்கொள்வதும் இல்லை.

    மேற்கல்விக்காகவோ, அல்லது உத்தியோக நிமித்தமோ, வேற்றூருக்குச் சென்று, பெற்றோரின் கண்காணிப்பு இல்லாததால் சுதந்திரமாக உணர்ந்து, தம் வயதொத்தவர்களுடன் தீய பழக்கங்களில் ஈடுபடுவதும் வெற்றியளிக்கும் மாற்றமில்லை.

    கதை

    திருமணமானபின், இந்தியாவிலிருந்து நான் மலேசியா வந்தபோது, எல்லாமே வித்தியாசமாக இருந்ததுபோல் உணர்ந்தேன்.

    உத்தியோகத்திற்குப் போக ஆரம்பித்ததும், என் சக, சீன ஆசிரியைகள், மாணவிகள் ஆகியோரிலிருந்து தனித்துத் தெரிந்தேன். நான் இருந்தபடியே என்னை ஏற்க முடியவில்லை அவர்களால்.

    “When you are in Rome, do as the Romans do!” என்றார்கள் சிலர், கேலியாக.

    அதைத்தான், “ஊருடன் ஒத்து வாழ்!” என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    “தலைக்கு எண்ணெய் வைத்துக்கொள்ளாதே!” என்று முகத்தைச் சுளித்தாள், ஒருத்தி.

    “உன் நிறத்துக்கு வெள்ளை நிற முகப் பவுடர் கூடாது. பழுப்பு நிறமாகப் பார்த்து வாங்கு!” என்று நட்புடன் அறிவுரை கூறினாள் இன்னொருத்தி.

    புதிய சூழ்நிலையில் அதிக மன இறுக்கமோ, குழப்பமோ இல்லாதிருக்க ஒரு வழிதான் இருந்தது.

    தாய்மொழி, உணவுப் பழக்கவழக்கங்கள், ஆடையணி இவற்றை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை.

    அதற்கும் கேலி: “எப்போதும் புடவையே உடுத்துக்கொள்கிறீர்களே! உங்கள் கணவர் புகார் செய்வதில்லையா?”

    எனக்கு வந்ததே கோபம்!

    “இதில் complain பண்ண என்ன இருக்கிறது? அவருடைய அம்மா புடவை கட்டியதைப் பார்த்து வளர்ந்தவர்தானே!”

    நான் எதற்கு ஆத்திரப்பட்டேன் என்று கேட்டவளுடைய புத்திக்கு எட்டவில்லை. பயந்துவிட்டாள்.

    பேச ஆரம்பித்தபோதே, அம்மா சொல்லிக் கொடுத்தது நான் பேசும் தமிழ். அதை எதற்காக மாற்றவேண்டும்?

    `புரியவில்லை,’ என்று தமிழர்கள் பலர் குறை கூறினார்கள்.

    “நீங்கள் ஏன் எங்களைப்போல் பேசக்கூடாது? எல்லாரையும் உங்களைப்போல் மாற்ற வேண்டும் என்று பார்க்கிறீர்களோ?” என்று வேறொருத்தி சண்டை பிடித்தாள்.

    “நீங்கள்தான் அப்படிச் சொல்கிறீர்கள்!” என்று பதிலடி கொடுத்தேன்.

    என் உச்சரிப்பைக் கேட்டு யாரும் தங்களுடையதை அவ்வளவு எளிதாக மாற்றிக்கொள்ளப் போவதில்லை. முடியவும் முடியாது. (பத்து வயதுக்குள் ஒரு மொழியைக் கற்றால்தான் சரியான உச்சரிப்பு வரும். இந்த விதிக்கு முன்னணி நடிகர்கள் விலக்கு).

    உச்சரிப்பில் என்ன, உயர்த்தி, மட்டம்? திரைப்படங்களில் பலவித தமிழ் உச்சரிப்புகளைக் கேட்டு, நாம் புரிந்துகொள்ளவில்லையா?

    மொழியும், அதன் உச்சரிப்பும் இரு தரப்பினருக்குள் தொடர்பை ஏற்படுத்துவதற்குத்தான். பிரிக்க இல்லை. ஏனோ, பலருக்கும் இது புரிவதில்லை. எல்லாரும், எல்லா விதத்திலும், தம்மைப் போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    மாறுவதால் வெற்றி

    ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படங்களைப் பார்த்தாலோ, அல்லது அப்போது எழுதப்பட்ட கதைகளைப் படித்தாலோ, இன்று பலருக்கும் ரசிக்காது. அவற்றில் இருக்கும் கருத்துகள் இக்காலத்திற்கு ஒவ்வாதிருப்பதுதான் காரணம்.

    கதை

    கற்பனைத் திறனுக்கு மாற்றம் அவசியம்.

    இது புரிந்து, பெரும் வெற்றி கண்டவர் சிட்னி ஷெல்டன் (SYDNEY SHELDON) என்ற அமெரிக்க எழுத்தாளர்.

    1948-இலேயே, திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர்.

    அவரது முதல் புதினத்தில் நல்ல கரு இருந்தது. ஆனாலும், விற்பனை ஆகவில்லை. அதை மூன்றே பேர்தான் வாங்கினர் என்று சொல்லிச் சிரித்ததைக் கண்டிருக்கிறேன். அவரே ஒன்று வாங்க, அவருடைய தாய் இன்னொன்றை வாங்கினாராம்.

    வாசகர்கள் மனத்தை எப்படிக் கவருவது என்று யோசித்து, தன் எழுத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தார்.

    எப்படி?

    சிறப்பான கருவைக் கொண்ட கதைகளுக்குள், படுக்கையறைக் காட்சிகளை நிறைய — தொடர்ச்சியாகப் பல பக்கங்களில் — புகுத்தினார். நடையும் விறுவிறுவென்று இருந்ததா? அமோகமான விற்பனை.

    `முன்பு அப்படித்தான் எழுதினேன். இன்றும் அப்படித்தான் எழுதுவேன்!’ என்று பிடிவாதமாக மாற மறுத்திருந்தால், அவருடைய எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக ஆகியிருக்குமா?

    மாறுங்கள், ஆனால் நல்லவிதமாக.

    வெற்றி காண.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 80

    பழகத் தெரிய வேணும் – 80

    நிர்மலா ராகவன்

    மகிழ்ச்சியுடன் வளரவிடுங்கள்!

    அநேகமாக எல்லாருமே ஏதாவதொரு சமயம் குழந்தைகளை வளர்க்கிறோம். பெற்றோராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அவர்களுடைய சகோதர சகோதரிகளுக்கோ, மூத்த குழந்தைகளுக்கோகூட இப்பொறுப்பு ஏற்படக்கூடும்.

    `இப்படித்தான் இருக்கவேண்டும்!’ என்ற பொதுவான நியதியோ, பாடமோ இதற்குக் கிடையாது. ஏனெனில், குழந்தைக்குக் குழந்தை வளர்ப்புமுறை மாறுபடும்.

    கதை

    ஒரே வயது நிரம்பிய என் முதல் குழந்தையை பணிப்பெண்ணிடம் விட்டுவிட்டு வேலைக்குப் போவது என் வழக்கம்.

    ஒரு நாள், பக்கத்து வீட்டிலிருந்த இளம்பெண், “உங்களிடம் ஒன்று சொல்லவேண்டுமே!” என்ற பீடிகையுடன், “நீங்கள் இல்லாதபோது, குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது,” என்று தெரிவித்தாள்.

    `இன்னொருவர் குடும்ப நிர்வாகத்தில் தலையிடலாமா?’ என்று தயங்கியிருப்பாள்.

    நான் அவளுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

    எனக்கு ஒரே அதிர்ச்சி. எனக்குக் குழந்தைகளை வளர்த்த பழக்கம் கிடையாது. ஆனால், ஒரு குழந்தை சிரித்தபடி, மகிழ்ச்சியுடன் இருந்தால், வளர்ப்புமுறை சரியெனக் கொள்ளலாம் என்றவரை தெரியும்.

    “வீட்டு வேலை முன்னேபின்னே இருக்கலாம். ஆனால், குழந்தைகளை நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தியவுடன், என் எதிர்பார்ப்பைக் கூறுவேன்.

    யாருக்குமே அது புரிந்ததாகத் தெரியவில்லை.

    “நீங்க புத்தகத்திலே போட்டிருக்கிறமாதிரி வளர்க்கணும்னு சொல்றீங்க. அது எப்படி முடியும்? நல்லா அடிச்சு வளர்க்கணும்,” என்று என்னிடம் தப்பு கண்டுபிடித்தாள் ஒருத்தி!

    அவள் வளர்ந்த சூழ்நிலையில், விவரம் தெரியாத பெற்றோர் அப்படிச் செய்ததை, `நாங்க எல்லாம் வளர்ந்து ஆளாகலியா?’ என்று நியாயப்படுத்தலாம். ஆனால், என்னால் அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    “நாங்க அடிக்கறதில்லே. நீயும் சும்மாச் சும்மா திட்டக்கூடாது,” என்றேன்.

    என்னுடைய இந்த கண்டிப்பால், பணிப்பெண்களை அடிக்கடி மாற்றும்படி நேர்ந்தது. அதனால் எனக்கும் கெட்ட பெயர்!

    பெண்களின் பொறுப்பா?

    பொதுவாக, ஆண்களைவிடப் பெண்களுக்குப் பொறுமை சற்று அதிகம். அதனால், குழந்தை வளர்ப்பு அவர்களுடைய வேலை என்றாகிவிட்டது.

    வெளிவேலைக்குப் போகாத நாட்களில், அவர்கள்தாம் அதிக நேரத்தைக் குழந்தைகளுடன் செலவிட வேண்டியிருந்தது மற்றொரு காரணம்.

    பொறுப்பிலிருந்து தப்பிக்கவோ, மனைவிக்கு மரியாதை கொடுப்பதாக நினைத்துக்கொண்டோ, இன்றும் பல ஆண்கள் இந்தக் கடமையை அவளிடம் விட்டுவிடுகிறார்கள்.

    தந்தை அதிகம் படித்தவராகவும், தாய் படிக்காதவளாக, காலத்துடன் ஒன்றிப்போகத் தெரியாதவளாகவும் இருந்தால்?

    கதை

    அரசாங்கத்தில் உயர்தர உத்தியோகத்திலிருந்தார் ரம்லான்.

    அவர் மணக்கச் சரியானவள் என்று அவருடைய தாய் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்திருந்தாள்.

    அவருக்கென்று எந்த விருப்பு வெறுப்பும் இருக்கவில்லை.

    நான்கு குழந்தைகளுக்குப் பின்னர், “என் குழந்தைகள் ரொம்ப வீக்!” என்று அங்கலாய்ப்பார், என்னிடம்.

    ரம்லான் செய்த தவறு, குழந்தைகளை வளர்ப்பதை முழுமையாக மனைவி அயினியிடம் ஒப்படைத்ததுதான்.

    குழந்தைகள் விஷயத்தில் அவள் என்ன செய்தாலும், அதில் தான் தலையிட்டால், அவளை அவமரியாதையாக நடத்துவதுபோல் ஆகிவிடும் என்றெண்ணி நடந்திருக்கிறார்.

    அவளோ, அதிகம் படிக்காத பட்டிக்காட்டுப் பெண். அன்புக்குப் பதில் அதிகாரம் செலுத்துவாள்.

    “பண்டிகைக்கு என் மகளுக்கு பத்து உடைகள் தைத்தேன்!” என்று அயினி அலுத்துக்கொண்டபோது பிரமித்தேன்.

    ஒன்றோ, இரண்டோதான் வாங்குவார்கள். எதற்காக அத்தனை?

    “என் மகள், `ஒனக்கு நான் ஒரே பொண்ணுதானேம்மா? இவ்வளவு கருமியா இருக்கியே!’ என்று சொல்லிச் சொல்லி வாங்கவைத்தாள்!”

    பதினைந்து வயது மகள் தாயை மரியாதை இல்லாது பேசியபோது அவளைக் கண்டிக்கத் தெரியவில்லை தாய்க்கு.

    ஒரு முறை, அயினி சில நாட்கள் வெளியூருக்குச் செல்ல நேரிட்டது.

    மூத்த மகனிடம், “தங்கை, தம்பிகள் வீட்டுப்பாடம் ஒழுங்காகச் செய்கிறார்களா என்று பார்த்துக்கொள். தெரியாவிட்டால், சொல்லிக்கொடு,” என்று சொல்லிவிட்டுப் போனாளாம்.

    திரும்பி வந்தபோது, அவள் கூறியது எதையுமே செய்திருக்கவில்லை அவன்.

    “எல்லாரும் கூட்டு சேர்ந்துகொண்டு, எனக்கு எதிராக வேலை செய்கிறார்கள்!” என்று என்னிடம் பிரலாபித்துவிட்டு, அழ ஆரம்பித்தாள் அயினி.

    சிறிது காலமாவது, அம்மாவின் கண்டிப்பும் அதிகாரமும் இல்லாமல் இருக்கலாமே என்று குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டிருக்கிறான் அண்ணன்.

    நான் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “விடு! எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான்!” என்று சொல்லிவைத்தேன்.

    ஒத்த மனம்

    தாய், தந்தை இருவரும் வளர்ப்புமுறை இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதில் ஒரே கருத்து கொண்டவர்களாக இருக்கவேண்டும்.

    மகிழ்ச்சியான குடும்பத்திலிருந்து வந்தவரின் வழிகாட்டலைப் பின்பற்றுவது புத்திசாலித்தனம்.

    எந்தக் குழந்தை புத்திசாலி?

    இப்போதெல்லாம், சினிமாத்தனமாக, வயதுக்குமீறி பேசும் குழந்தைகளை `smart” என்று கொண்டாடுகிறார்கள்.

    அவர்கள் வளர்ந்தபின், `மரியாதை இல்லாமல் நடக்கிறாள்!’ என்று பிறர் பழிக்கும்போது, வருந்துவது என்னவோ பெற்றோர்தாம்.

    ஏன் மரியாதை இல்லை?

    கதை

    சாதாரணமாக, நல்ல குடும்பத்திலிருந்து வந்த மலாய் மாணவிகள் மிகவும் பணிவாக இருப்பார்கள். ஆசிரியை திட்டினால், அழுகை வரும் — அவ்வளவு மென்மையானவர்கள்.

    ஆனால், கமாரியா எப்போதுமே என்னிடம் மரியாதையின்றி பேசுவாள்.

    எங்கள் பள்ளியிலேயே ஆசிரியையாகப் பணிபுரிபவள்தான் அவளுடைய தாய் என்று அறிந்தபோது, ஆச்சரியமாக இருந்தது.

    “உன் மகள் ஏன் இப்படி இருக்கிறாள்?” என்று எங்களில் பலரும் அவளைச் சாட, “என் காலத்தில் மிக அடக்கி வளர்க்கப்பட்டோம். மூத்தவர்களுடன் பேசவே பயமாக இருக்கும். மகளும் அப்படி பயந்து வளரக்கூடாது என்று அவள் போக்கில் விட்டேன்,” என்றாள், வருத்தத்துடன்.

    பதினைந்து வயதில் எந்தப் பெண்ணும் சற்றுத் திமிறுவாள். இப்படிப்பட்ட மகளை இனி எப்படி அடக்குவது!

    ஓயாது சண்டைபோடும் பெற்றோர்

    கதை

    தாய் தந்தையருக்குள் எப்போதுமே வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், மெல்வின் தனித்து உணர்ந்தான். புத்தகங்களில் ஆழ்ந்து, நிகழ்காலத்தை மறக்க எண்ணினான். ஆனாலும், அவனுடைய உடல்நிலை கெட்டது. படிப்பிலும் சோடை.

    “உங்களால்தான் அவனைத் திருத்தமுடியும்!” என்று, என்னிடம் படிக்க அனுப்பினார்கள்.

    நான் எவ்வளவோ முனைந்தும், மெல்வின் படிப்பில் முன்னேறவில்லை. அவன் வந்துவிட்டுப் போகும்போதெல்லாம் வருத்தத்தில் ஆழ்ந்திருப்பேன்.

    “குழந்தைக்கு உங்களிடம் வருவதற்கு மிக்க மகிழ்ச்சி. துள்ளிக்கொண்டு வருகிறான்!” என்று தந்தை தெரிவித்தபோது, வியப்பாகத்தான் இருந்தது.

    அவன் நல்லபடியாகத் தேறியது எனக்கே ஆச்சரியம் அளித்தது.

    அவனுடைய தங்கையோ, மரியாதையில்லாமல், ஆசிரியைகளையும் எதிர்த்துப் பேசுவாள்.

    இன்னொருவருடன் ஒத்து வாழமுடியாது, திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து வாங்கினர்.

    பெற்றோருக்குக் காலம் கடந்தபின்தான் புரிந்தது தாங்கள் எங்கு தவறிழைத்தோம் என்று. (நான் குழந்தை வளர்ப்பைப்பற்றித் தொடராக எழுதியதைப் படித்துவிட்டு, அவர்கள் கூறியது).

    கொடுமை செய்யும் பெற்றோரை உடைய குடும்பங்களிலோ, மகள் தந்தையைப் போன்றவனைக் கணவனாகத் தேர்ந்தெடுப்பாள்

    மகன் தந்தையை முன்னுதாரணமாக நினைத்து நடப்பான்.

    பணிப்பெண்களால் வளர்க்கப்படும் குழந்தைகள்

    கதை

    சாயங்கால வேளைகளில், பெற்றோர், பாட்டிகள் சகிதம் குழந்தைகள் எங்கள் வீட்டருகே இருந்த மைதானத்தில் விளையாட வருவார்கள். ஆனால், நோர்மாவின் பெற்றோரை நாங்கள் யாரும் பார்த்ததில்லை.

    அவளை எந்நேரமும் பார்த்துக்கொண்ட பணிப்பெண் மஸ்னாவிடம் (MAZNAH) அடியும், திட்டும் வாங்கினாள் நோர்மா. `அடி’ என்றால், பெயருக்கு முதுகில் ஒரு தட்டு இல்லை.

    “ஒருவயதுக் குழந்தையை எதற்கு இப்படி அடிக்கிறாய்?” என்று, நானே மஸ்னாவைக் கண்டித்திருக்கிறேன்.

    “உங்களுக்குத் தெரியாது, ஆன்ட்டி. இவள் ரொம்ப நாட்டி!” என்பாள்.

    நோர்மாவுக்குப் பத்து வயதானபோது, எல்லாக் குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருக்க, “வீட்டுக்குப் போகலாம்,” என்று உத்தரவு பிறப்பித்துவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து இழுத்தாள் பணிப்பெண் மஸ்னா.

    அவள் மறுக்க, தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்தாள். சிறுமி கதற, அதைப் பார்த்த ஒரு சிறுவன் பெரிதாக அழ ஆரம்பித்தான்.

    தூரத்தில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்த என்னால் பொறுக்க முடியவில்லை. அங்கு விரைந்து, “விடு அவளை!” என்று இரைந்தேன்.

    அவளுடைய வீட்டிற்குச் சென்று, நோர்மாவின் தாயிடம் வருடக்கணக்கான வதையை விரிவாகக் கூற, அவள் அதிர்ந்தாள்.

    சற்று வளர்ந்தபின்னரும், நோர்மா பலியாடுபோல் இன்னொரு பணிப்பெண்ணைத் தொடர்வதைப் பார்த்தேன்.

    `இவளுக்குக் குழந்தைகள் பிறந்தால், அவர்களிடம் இவளால் அன்பு செலுத்த முடியுமா?’ என்று என் யோசனை போயிற்று.

    என்னதான் தத்து எடுத்த பெண்ணானாலும், நிலைமை அவ்வளவு மோசமாகும்வரை வளர்ப்புப்பெற்றோர் விட்டிருக்கலாமா?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 79

    பழகத் தெரிய வேணும் – 79

    நிர்மலா ராகவன்

    யார் விவேகி?

    “எனக்கு நிறைய நண்பர்கள்!” என்று சிலர் மகிழ்ச்சியும் பெருமையும் பொங்கக் கூறுவார்கள்.

    `நண்பர்கள்’ என்று நாம் நினைப்பவர்களில் எத்தனைபேருக்கு நம்மை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது?

    ஒன்றாக வாழும் தம்பதியருக்கே அத்தகைய புரிந்துணர்வு பெற இருபது ஆண்டுகள்கூடப் பிடிக்கலாம். ஏனெனில், தான் நினைப்பதுபோல் மற்றொருவரும் நினைக்கவேண்டும், தனக்குப் பிடித்ததைச் செய்யவேண்டும் என்று இருவரும் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

    `நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்’ என்பது கைகூடாத ஆசையாக முடிந்துவிடும். பாட்டில் கேட்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?

    ஒரே குடும்பத்தினர் ஆனாலும், சகோதர சகோதரியர்கூட குணத்தால், அனுபவத்தால் ஒன்றுபட்டிருப்பார்களா?

    கதை

    மூத்த மகளை அவளுடைய தாய் ஓயாமல் திட்டுவாள். தந்தை அவளிடம் பாசமாக இருந்தது அவள் பொறாமையைத் தூண்டிவிட்டதோ, இல்லை, எல்லாவற்றிற்கும் மகள் தன்னை நாடவில்லையே என்ற ஆற்றாமையோ!

    தாயின் வசவுக்குப் பயந்த இளையவள் சாரதாவோ, அம்மாவின் நிழலாக நடந்தாள். தாய் சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதுபோல் நடந்துகொண்டாள்.

    பெரியவளாகப் போனதும், தன்னைச் சுந்திரமாக நடக்கவிடாமல் செய்துவிட்ட தாயின்மேல் வெறுப்பு எழுந்தது.

    தாய் இறந்தபின், அக்காளைப் பார்த்து சாரதாவுக்கு ஆச்சரியம். “நீ எப்படி அம்மாமேல் ஆத்திரப்படாமல் இருக்கிறாய்? நீ திட்டு வாங்கும்போதெல்லாம், மாற்றாந்தாய் குழந்தையோ என்றுகூட நினைப்பேன்!”

    “அப்பா நிறைய செல்லம் கொடுத்தார். அம்மாவும் அப்படி இருந்திருந்தால், நான் கெட்டுப்போயிருப்பேனோ, என்னவோ! இப்போது, யார் என்னைத் திட்டினாலும், அவர்கள் ஏன் அப்படி நடக்கிறார்கள் என்று என் யோசனை போகிறது”.

    ஒரே அனுபவம்தான். ஆனால், சகோதரியர் இருவரும் அதைப் புரிந்துகொள்ளும் விதம் வித்தியாசமாக இருந்தது.

    பிறர் நம்மைக் காயப்படுத்தினாலும், அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று ஆராய்வதுதான் விவேகம். அப்போதுதான் நாமும் அதேபோல் நடந்து, அவர்களைத் துன்புறுத்தமாட்டோம். அவர்கள் நம்மிடம் காட்டாத பொறுமையையும் மென்மையையும் பதிலாக அளிக்கமுடியும்.

    எச்சரிக்கை: கணவன்மாரிடம் வதைபடும் பெண்கள் பொறுமையாக நடந்தால், வதை அதிகரிக்கும்.

    சிறுவயதில் ஒருவர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், மனைவியையும் அதேபோல் பாடுபடுத்த வேண்டும் என்று எண்ணுவது இயற்கை. இருந்தாலும், தவறுதான்.

    ஒரு பெண் எவ்வளவுதான் உறுதுணையாக இருந்தாலும், அவள் உதவியை நாடும் சிலர் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்துகொண்டே இருப்பது வீண்.

    கதை

    கணவரிடம் உடல்ரீதியாக வதைபட்ட பெண்கள் காவல்துறையினரால் அனுப்பப்பட்ட இல்லம் அது. கோலாலம்பூரில் உள்ளது. அவர்களுக்கு சட்ட ரீதியான ஆலோசனை, அவரவர் மத வழிபாடு எல்லா வசதிகளும் உண்டு.

    கிட்டத்தட்ட உயிர்போகும் நிலைக்கு வந்தவர்கள் சிலர் மீண்டும் கணவருடன் போய்விடுவார்கள்.

    “அழுவறாருங்க. பாவமா இருக்கு!” இருபத்தேழு ஆண்டுகள் வதைபட்ட பெண்மணி என்னிடம் கூறியது.

    அவள் பக்கத்தில் இருந்தவள் லேசாகச் சிரித்தபடி, முட்டியை இறுக்கி, அவள் முகத்தில் குத்துவதுபோல் பாவனை செய்தாள்.

    இவ்வாறு, மூன்று முறை தம் வீட்டுக்கே சென்றுவிட்டபின், திரும்பவும் பாதுகாப்பான அந்த இல்லத்திற்கு வர அனுமதி கிடையாது.

    பெண்களுக்கு இரக்க சுபாவம் இருக்கலாம். ஆனால், சற்று விவேகம் வேண்டாமா?

    நான்தான் விவேகமானவன்

    என்னைப்போல் இல்லாதவர்கள் முட்டாள்கள்!

    கதை

    ஒரு விமரிசகர் இசைத்துறையில் முன்னணியில் இருந்த பாடகியை விமரிசனம் செய்தார்: `தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டு, அதிலிருந்து சற்றும் விலகமாட்டார்!” என்று, அது ஒரு பெரிய குறைபாடு என்பதுபோல் எழுதியிருந்தார்.

    பாடகியின் முழுத்திறனையும் புரிந்துகொள்ளும் இசைஞானம் அவருக்கு இருக்கவில்லை. குறையைத் தன்னிடம் வைத்துக்கொண்டு, பிறரைக் குறைகூறினார்.

    இன்னொருவரிடம் குற்றம் கண்டுபிடிப்பதால் தான் மிகப் புத்திசாலி என்று நினைப்பவர்கள் பிறரிடமிருந்து விலகிவிடுகிறார்கள்.

    இவர்களது குணம் புரிந்து, `திருத்தி’க்கொள்ள முயற்சிக்காமல் இருப்பதுதான் விவேகம்.

    “பிறரைப் புரிந்துகொள்வது அறிவு. தன்னையே புரிந்துகொள்வது விவேகம்” (சீனத் தத்துவஞானி, லாவோஜி, LAOZI).

    எனக்குப் புரிகிறது

    இந்த இரு வார்த்தைகளுக்கும் நல்ல சக்தி உண்டு.

    ஒருவர் நம்மைத் தாக்கும்போது, “உங்கள் உணர்ச்சி எனக்குப் புரிகிறது,” என்று சொல்லிவைத்தால், அவர் அடங்கிவிடுவார். உண்மையில் அது நமக்குப் புரிகிறதா, இல்லையா என்பது வேறு விஷயம்.

    உற்றவரை இழந்து தவிப்பவர்களிடம் ஆறுதலாக எல்லாரும் சொல்வார்கள்: “உங்கள் துக்கம் எனக்குப் புரிகிறது”.

    இந்தப் போலித்தன்மையால் துக்கப்பட்டிருப்பவர்களின் மனதை ஆற்ற இயலுமா?

    ஒருவர் தானே அனுபவித்தால்தான் துன்பமோ, துயரமோ புரியும். பிறரும் அதே நிலையில் இருக்கும்போது, உண்மையாக ஆறுதல் கூறமுடியும்.

    “இறைவன் நமக்குக் கஷ்டங்களைக் கொடுப்பது நாம் பிறரது கஷ்டங்களைப் புரிந்துகொள்வதற்குத்தான்!” (மகாத்மா காந்தி).

    இதற்கு விதிவிலக்கானவர்களும் உண்டு.

    ஒரு கவுன்சிலர் பிறரது மனநிலையில் தன்னைப் பொருத்திக்கொண்டு, அவர்கள் மனம்விட்டுச் சொல்வதை உள்ளபடி புரிந்துகொள்கிறார். அதாவது, அவரது எதிர்பார்ப்போ, பின்னணியோ குறுக்கிடுவதில்லை.

    அவருக்கு அதே அனுபவம் கிடைத்திருக்காவிட்டாலும், பிறருடைய மனதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வெகு சிலரால்தான் இப்படி நடக்கமுடியும்.

    அவரிடம் தம் குறைகளைச் சொல்ல வருகிறவர்கள் அவரது புரிந்துணர்வால் நெகிழ்ந்து போய்விடுகிறார்கள். `காதல்’ என்று அதை எண்ணிவிடுவார்கள்!

    அறிவான பிராணிகள்

    பேசத் தெரியாவிட்டாலும், தன்னை வளர்ப்பவர்களின் உணர்ச்சியைப் புரிந்துகொள்கின்றன இல்லத்தில் வளையவரும் பிராணிகள்.

    எங்கள் வீட்டுப் பூனை, நாள் முழுவதும், என் காலைத் தடுக்காத குறையாக என்கூடவே நடக்கும். சிறு வயதிலேயே தாயிடமிருந்து பிரிந்துவிட்டதால், நான்தான் அதன் அம்மா.

    ஒரு காலைப்பொழுதில், “குறுக்கே, குறுக்கே நடக்காதே! தூக்கக்கலக்கத்தில் நான் விழுந்து வைக்கப்போறேன். ஒரு ஓரமா ஒக்காரு!” என்று கண்டித்தேன்.

    உடனே புரிந்துகொண்டு, சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டது. எனக்கே பரிதாபமாகிவிட்டது.

    மறுநாள் சொல்லிவைத்தாற்போல், தானே அந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டது, நான் அங்கும் இங்கும் நடக்க சௌகரியமாக.

    எத்தனை மனிதர்களுக்குப் பிறர் உணர்ச்சிகளைப் புரிந்து நடக்கும் திறமை இருக்கிறது?

    அடுக்கடுக்காகக் கேள்வி கேட்பது

    சிலர் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். எதிராளியின் பதிலைக் காதில் வாங்கிக்கொள்ளுமுன், அடுத்த கேள்வி வந்துவிடும்.

    கேள்வி கேட்பது புத்திசாலித்தனம் என்று நினைத்திருப்பார்கள்! ஒருவர் கேட்கும் கேள்விகளாலேயே அவரது அறிவுகூர்மை வெளிப்பட்டுவிடும்.

    எத்தகைய கேள்விகள் கேட்கிறோம், அதனால் யாருக்காவது பயன் இருக்கிறதா என்பது முக்கியம்.

    நிதானம் தவறாதே!

    “உங்கள் மகன் இறந்துவிட்டான் என்பது உறுதியானதும், என்ன செய்தீர்கள்?” என்று என் நெருங்கிய தோழி ஒரு கேள்வி கேட்டாள்.

    “`அவன் கண்களைத் தானம் கொடுத்துவிடலாமா?’ என்று என் கணவரைக் கேட்டேன்,” என்று நான் பதிலளித்ததும், “ஐயோ!” என்று அதிர்ந்தாள்.

    எந்த சூழ்நிலையிலும் நிதானம் தவறாது இருப்பவர்கள் பிறரது அச்சத்திற்கு – பாராட்டுக்கல்ல – ஆளாகிறார்கள். அதற்காக நிதானம் இழக்கலாமா?

    வெற்றி கிடைக்க

    `எனக்கு வெற்றி கிட்டுவதேயில்லை. யாரும் ஊக்குவிப்பதில்லை’. பலரின் புலம்பல் இது.

    வெற்றியும் தோல்வியும் அவரவர் கையில்தான் இருக்கிறது.

    நாம் நன்றாக இருக்கவேண்டும் என்பதில் நம்மைவிட யாருக்கு அதிக அக்கறை இருக்கமுடியும்?

    பிறரது பாராட்டையோ, புகழையோ எதிர்பார்த்து ஒரு காரியம் செய்து அடையும் மகிழ்ச்சி நீடிக்காது.

    நாம் எதை அடையவேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அதை நோக்கிப் பயணிப்போம், நம்மையும் அறியாமல். ஆனால், அது நம் திறமைக்குட்பட்டதாக, நியாயமான வழிகளில் இருக்கவேண்டும்.

    கதை

    பதின்ம வயதினனான அவன் ஒரு குண்டர் கும்பலில் இணைந்திருந்தவன்.

    மிகுந்த பிரயாசைக்குப்பிறகு நான் அவனைப் பேட்டி கண்டேன்.

    சிரித்தபடி, இக்கருத்தை என்னிடம் வெளியிட்டான் மூன்று கொலைகள் புரிந்திருந்த அப்பையன்: “சாகப்போகிறோம் என்று புரிந்ததும், ஒருவர் கண்ணில் தோன்றும் பயம் இருக்கிறதே, அப்போது எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடே கிடையாது!”

    சொல்லும்போதே அவன் கண்கள் கிறங்கியிருந்தன. நான் அதிர்ந்தே போனேன்.

    மகிழ்ச்சி தரும் காரியமெல்லாம் வெற்றி என்பதல்ல, தான் தேர்ந்தெடுத்த பாதை தவறானது என்று உணர்ந்தபின், அதிலிருந்து விலகும் விவேகம் அவனுக்கு இருந்தது.

    அவனுக்குள் இருந்த முரட்டுத்தனத்தை விளையாட்டுகளின்மூலம் வெளியிடக் கற்றான்.

    பிறரைப் பயமுறுத்துகிறவர்கள் பயந்தவர்கள் என்று புரிந்தால், பலரும் அநாவசியமாக அஞ்சத் தேவையில்லை.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 78

    பழகத் தெரிய வேணும் – 78

    நிர்மலா ராகவன்

    தவறுகள் பலவிதம்

    எல்லாரும்தான் தவறு செய்கிறார்கள். ஆனால், ஒரு வித்தியாசம். ஒருசிலருக்குத்தான் அவற்றிலிருந்து கற்கும் துணிச்சல் உண்டு.

    பிறரோ, தவறு செய்வது தம் தோல்வியைக் குறிக்கும் என்று நாணுவார்கள். அதனாலேயே வெற்றி அவர்களைவிட்டு விலகிப் போய்விடும்.

    கதை

    ஆங்கிலத்தில் சிறுகதைப்போட்டி ஒன்று நடந்தது.

    “நீங்கள் கலந்துகொள்ளவில்லையா?” என்று கேட்டாள் என் சக ஆசிரியை. (அதற்குமுன், அதேபோன்ற வேறொரு போட்டியில் நான் பரிசு வாங்கி, எல்லா மொழி பத்திரிகைகளிலும் என் பெயர் வெளியானது என் அந்தஸ்தை உயர்த்தியிருந்தது).

    என் பதில் அலட்சியமாக வந்தது: “கலந்துகொண்டேன். பரிசு கிடைக்கவில்லை”.

    பக்கத்தில் அமர்ந்திருந்தவள் விழிகள் விரிய, சற்று அதிர்ச்சி அடைந்தாற்போல் இருந்தது, `இதையெல்லாம் ஒப்புக்கொள்வார்களா!’ என்பதுபோல்.

    வெற்றியும் தோல்வியும் நம் கையில் இல்லை என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால்தான் அமைதி நிலைக்கும். தொடர்ந்து வெற்றிகள் கிடைக்கும்.

    தவறு செய்யலாமா?

    பள்ளியில் படிக்கையில், தவறான விடைக்கு, `பிழைதிருத்தம்’ என்று மூன்று முறை சரியான பதிலை எழுத வைப்பார்கள்.

    அதிலும் தவறா?

    ஐந்து முறை!

    செய்த தப்பையே திரும்பத் திரும்பச் செய்வது அறிவீனம் என்று மறைமுகமாக உணர்த்தும் வழி இது.

    தவறே செய்யாமல் இருக்கத்தான் யாரால் முடியும்? தவறு செய்ய அஞ்சுவதுதான் தவறு.

    நமக்கு எல்லாமே தெரிந்திருந்தால், அதன்பின், கற்க என்ன இருக்கிறது!

    கதை

    நான்கு வயதுச் சிறுவனான குகனுக்குத் தாய் பாடம் சொல்லிக்கொடுக்க, அவன் பென்சிலால் எழுத ஆரம்பித்தான்.

    “இது இப்படி இருக்கவேண்டும். ரப்பரால் அழித்துவிட்டுத் திரும்பவும் எழுது!” என்று அம்மா சொல்ல, அழ ஆரம்பித்தான்.

    தான் ஒரு தப்பு செய்வதா!

    `புத்திசாலி!’ என்று குடும்பத்தில் எல்லாரும் புகழ்ந்ததைக் கேட்டு வளர்ந்த பிள்ளை ஆயிற்றே!

    அறியாமையால் பிழை செய்ய நேர்ந்தால், அதற்காக வருத்தமோ, வெட்கமோ அநாவசியம் என்று புரிந்தவள் அத்தாய்.

    ஆகவே, மகன் ஏற்கும் விதத்தில் கூறினாள்: “பென்சிலையும் ரப்பரையும் காசு கொடுத்து, கடையில்தானே வாங்குகிறோம்? அந்தக் கடைக்காரர் அப்பாமாதிரி ஆபீஸ் போகமாட்டார். நாம்ப வாங்கினாதான் அவருக்குக் காசு கிடைக்கும். அவருடைய குழந்தைகள் சாப்பிட முடியும்”.

    அவனைப்போன்ற குழந்தைகளின் நலனுக்காக என்று அவள் ஒப்பிட்டது குகனுக்குப் புரிந்தது.

    அதன்பின்னரும் தப்புத் தப்பாக எழுதி, அழிக்க நேர்ந்தது. அதற்காக அவன் வருந்தவில்லை. கவனமாக இருக்கப் பழகிக்கொண்டான்.

    வளர்ந்தபின்னர், நல்ல காரியங்களில் சிறக்க இக்குணம் உதவியது.

    எப்போதாவது தவறு செய்தாலும், அளவுக்கு அதிகமாக அவன் வருந்தவோ, வெட்கவோ இல்லை. உடனுக்குடன் திருத்திக்கொண்டான்.

    இக்குணத்தால் வாழ்க்கையில் உபயோகமானவற்றை அவனிடமிருந்து பிறர் கற்க முடிந்தது.

    தவறு செய்வது மனிதனின் இயற்கை!

    இந்தத் தாரக மந்திரத்தை சிலர் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள்.

    ஒவ்வொரு முறையும் கணக்குப் பரீட்சையில் நிறைய பிழைகள் செய்துவிட்டு, “அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன்!” என்று, மிதப்புடன் தோள்களைக் குலுக்கிக்கொள்வார்கள் என் மாணவிகளில் சிலர்.

    ஒவ்வொரு முறையும் செய்த தப்பையே செய்துகொண்டிருந்தால், அது கவனக்குறைவு, அலட்சியம்.

    இப்படிச் செய்தால் என்ன?

    செய்வது `தவறு’ என்று தெரிந்தே செய்பவர்கள் பலர். `கலிகாலம்!’ என்றோ, அவர்களால் நமக்கும் ஏதோ ஆதாயம் கிடைக்கிறதே என்றோ, பிறர் ஏற்றாலும், விளைவு வினையாகத்தான் முடியும்.

    கதை (அண்மையில் படித்தது)

    லண்டனில் மிகச் சிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் படித்துக்கொண்டிருந்த இளைஞன் அவன்.

    சிங்கப்பூரில் உள்ள பொதுக்கழிப்பறை ஒன்றில் காமெரா வைத்து, இளம்பெண்களைப் படமெடுத்தான். ஓரிரு முறை அப்படிச் செய்தும், மாட்டிக்கொள்ளாது போனதில் துணிச்சல் அதிகரித்தது.

    ஏழாவது முறை பிடிபட, குற்றத்தை ஒத்துக்கொண்டான். ஒவ்வொரு குற்றத்திற்கும் ஓராண்டு சிறைத்தண்டனை, அபராதம்.

    சட்டத்திற்குப் புறம்பான காரியங்களைச் செய்வது அறிவீனம் – அது எவ்வளவுதான் கிளர்ச்சி ஊட்டுவதாக அமைந்தாலும். அறிவாளியான அவன் இதை ஏனோ உணராமல் போனான்!

    புத்தி தீய வழியில் போனதால், அவனுடைய கல்வி, எதிர்காலம் இரண்டுமே பாழ்.

    பழிக்குப் பழி!

    வீம்புடன், பிறருக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் தமது வாழ்க்கையுடன், பிறருடையதையும் வீணாக்கிவிடுவார்கள்.

    கதை

    இளம் மனைவி தனக்குத் துரோகம் செய்துவிட்டதை மன்னிக்கவோ, மறக்கவோ முடியவில்லை மாதுவால்.

    தன்னைப்போலவே அவளும் நோகவேண்டும், அதுதான் அவளுக்குப் பாடம் கற்பிக்கும் வழி என்று கருதி, அவளுக்குத் தெரிந்தே பிற பெண்களுடன் உறவுபூண்டான்.

    எத்தனை வயதாகியும், அவனுடைய ஆத்திரம் அடங்கவில்லை. மனைவிபோல் இல்லாத, உலகம் தெரியாத பெண்களை மயக்குவதைக் கலையாகக் கற்றான்.

    அந்த நடத்தையால் சமூகத்தில் அவனுக்கு இருந்த மதிப்பு அறவே குலைந்தது. உறவினர்கள் அவனைத் தவிர்த்தார்கள்.

    தன் தீய நடத்தைக்கு ஒரு காரணம் கற்பித்தான்: `எனக்கு மனைவி சரியில்லை!’

    ஒரு பிழையை இன்னொன்றால் சரிசெய்ய முடியுமா?

    தெரியாமல் பிழை

    தெரியாமல் செய்த தவற்றுக்காக, தன்னையே வருத்திக்கொள்வதால் என்ன பயன்?

    கதை

    அந்த வீட்டுக்கூரைமேல் இருந்த கூட்டிலிருந்து கீழே விழுந்துவிட்டது ஒரு குருவிக்குஞ்சு.

    அதை மிதித்துவிட்ட சிறுமி லதா, தன் அஜாக்கிரதையால் ஓர் உயிர் போய்விட்டதே என்று அழ ஆரம்பித்தாள்.

    `நடந்தது உன் தப்பு இல்லை,’ என்று தாய் எத்தனைதான் சமாதானப்படுத்தியும், அவள் மனம் அடங்கவில்லை.

    அதன்பின், இறந்த எந்த பிராணியைக் கண்டாலும், தான் செய்த `குற்றம்’ நினைவில் எழ, பயம், அழுகை.

    பெரியவளாகி, நன்கு படித்து, வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்தபோதும், `தாய்க்குருவி என்னைச் சபித்துவிட்டது!’ என்பாள். என்றோ எழுந்த சோகமும், குற்ற உணர்வும் மறையவேயில்லை. அவற்றைப் போக்க என்னென்னவோ மருந்துகள்!

    தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவற்றுக்காக நம்மையே தண்டித்துக்கொள்ளாது, மன்னிக்க வேண்டுவது அவசியம். இல்லாவிட்டால், வாழ்க்கையில் நிம்மதி பறிபோய்விடும்.

    ஆண்-பெண் உறவில் வெற்றி, தோல்வி

    கதை

    ஏழையாக இருந்தாலும், சந்திரன் அறிவாளி. பணக்காரர் ஒருவர் தன் மகளை அவனுக்கு மணமுடித்து, மேற்படிப்புக்கும் உதவினார்.

    கணவனை விலைக்கு வாங்கிவிட்ட பெருமிதம் அவன் மனைவி தாராவிற்கு. பலர் முன்னிலையில் அவனை அவமதிப்பதை வழக்கமாக்கிக்கொண்டாள்.

    `மாறுவாள்,’ என்ற நம்பிக்கையுடன், முதலில் பொறுத்துப்போன சந்திரன் சில வருடங்கள் கழிந்ததும் அவளை விவாகரத்து செய்தான்.

    அழகிலும், பொருளாதாரத்திலும் தன்னைவிட உயர்ந்த நிலையில் இருந்த பெண்ணை மணந்தது தான் செய்த தவறு என்று தோன்றிப்போக, தாராவைப்போல் இல்லாத ஒரு பெண்ணைக் காதலித்து மணந்தான்.

    “குண்டாக இருக்கிறாளே!” என்று நண்பர்கள் ஆச்சரியப்பட்டு, முகத்தைச் சுளித்தார்கள்.

    சந்திரன் சிரித்துக்கொண்டான்.

    தான் தேடி, மணந்த பெண் குண்டுதான். ஆனால், அன்பானவள். எல்லாவிதத்திலும் அவனுக்குப் பக்கபலமாக இருந்தாள்.

    பெண்கள் காதல் தோல்வியை அவ்வளவு எளிதாக ஏற்பதில்லை.

    கதை

    முப்பது வயதுக்கு மேலாகியும் திருமணமாகாமல் இருந்தாள் என் சக ஆசிரியை வித்யா.

    `இவ்வளவு அழகான பெண்ணை ஆண்கள் எப்படி விட்டுவைத்திருக்கிறார்கள்!’ என்ற ஆச்சரியம் எனக்குள் எழ, அவளிடமே கேட்டேன்.

    “ஆண்களை நம்பவே பயமாக இருக்கிறது,” என்றாள் வித்யா. ஒருவனைக் காதலித்து, அவன் ஏமாற்றிவிட்டதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தாள், தான்தான் குற்றம் புரிந்ததுபோல்.

    “அவனைப்போல் பகட்டாகவோ, கலகலப்பாக இல்லாது, அமைதியாக, ஆழமாக இருக்கும் ஒருவர் உனக்கு வாய்ப்பார். அந்த வாழ்க்கையிலேயே நிறைவு கிடைத்துவிடும், பார்!” என்றேன், ஆறுதலாக.

    தவறு செய்தால் என்ன?

    அதையே திரும்பத் திரும்பச் செய்யாமல் இருப்பதுதானே புத்திசாலித்தனம்!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 77

    பழகத் தெரிய வேணும் – 77

    நிர்மலா ராகவன்

    கஷ்டப்படு, வலிமை பெருகும்

    “கொடுத்துவைத்தவன்! பணக்கார வீட்டுச் செல்லப்பிள்ளை! கேட்டதெல்லாம் கிடைக்கிறது!”

    இவ்வாறு பிறரது பொறாமைக்கு ஆளாகும் ஒருவன் எந்தவித கஷ்டத்தையோ, துயரத்தையோ அனுபவித்திருக்கமாட்டான். அவன் அதிர்ஷ்டசாலிதானா?

    இல்லை. வாழ்வில் இடர்களைச் சந்தித்து, அவைகளிலிருந்து விடுபடும் முயற்சிகளால்தான் ஒருவன் வலிமை பெறுகிறான்.

    மாணவர்களிடமிருந்து நான் கேட்டறிந்த கதை

    காவல்துறையில் பெரிய பதவி வகித்திருந்தவரின் மகன் என் மாணவன் ரசாலி. அதனாலேயே, அவன் வயதுப் பையன்கள் செய்ய அஞ்சிய காரியங்களைத் துணிந்து செய்தான்.

    பதினான்கு வயதில், தான் எவ்வாறு நீலப்பட வீடியோக்களைக் கடையிலிருந்து வாங்குகிறோம் என்பதைப் பெருமையுடன் தெரிவித்தபோது, எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாது கேட்டுக்கொண்டேன்.

    தன் வகுப்பு நண்பர்களிடமிருந்து காசு வசூலித்து, யார் வீட்டிலேயாவது அவற்றைப் போட்டுக்காட்டுவான். (உடன் வரும் பெண்களுக்கு இலவசம்). அச்சமயத்தில் அவர்கள் `glue sniffing” என்ற முறையில் போதை அடைந்திருப்பார்களாம்.

    “அப்படியென்றால் என்ன?” என்று நான் அசட்டுத்தனமாகக் கேட்க, ஆசிரியைக்கே போதிக்கும் வாய்ப்பு வந்ததே என்ற மகிழ்ச்சியுடன், என்னைச் சூழ்ந்து உட்கார்ந்துகொண்டு, போட்டி போட்டுக்கொண்டு விளக்கினார்கள் பல மாணவர்கள்.

    அந்த வகுப்பின் மாணவத் தலைவன் ஒருவன் மட்டும் தங்களிடமிருந்து விலகியிருந்தது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

    நான் அவனை அழைத்து விசாரிக்க, “பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கின்றன இப்படங்கள்! எனக்குப் பிடிக்கவில்லை,” என்றான்.

    போதை மற்றும் படங்கள் அளித்த பாதிப்பால், கைரி என்ற பையன் தன்னுடன் வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தான். `வேடிக்கை,’ என்றெண்ணி, அவனது நண்பர்கள் அவளது திமிறலை அடக்கி, உடலுறவுக்கு உள்ளாக்கினார்கள்.

    அவள் கருவுற்றதும்தான் பெற்றோருக்குத் தெரிந்தது. போலீஸ் விவகாரமாகி, பள்ளிக்கூடத்தில் பலரும் வேடிக்கை பார்க்க, கைரியை விலங்கிட்டு அழைத்துப்போனார்கள்.

    ரசாலியோ, “என் தந்தை எனக்குப் பக்கபலமாக இருக்கிறார். எனக்கு என்ன பயம்!” என்று திமிராக என்னிடம் கூறினான்.

    மனம்போனபடி நடக்கலாம், தான் மாட்டிக்கொள்ளாமல் எவராவது பார்த்துக்கொள்வார் என்று, ரசாலியைப்போல் நடப்பவர்களுக்கு மனோபலம் கிடையாது. எத்தனை காலம்தான் பிறரைச் சார்ந்திருக்க முடியும்!

    நான் இச்சம்பவத்தைச் சிறுகதையாக ஒரு பத்திரிகையில் எழுதினேன்.

    ஓராண்டுக்குப்பின், வேற்றூரிலிருந்து ஒருவர் என்னைத் தொடர்புகொண்டார். “என் நண்பனும் அந்த வயசிலே இதே காரியம் செய்து, சிறுவர்கள் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான். இப்போ, நல்லாயிருக்கான். சொந்தமா மினிமார்க்கெட் வெச்சிருக்கான்!” என்று கூறினார்.

    “அவன் நல்லாயிருக்கான்,” என்று, அழுத்தமாகப் பலமுறை கூறினார்.

    `இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளலாமா?’ என்று நீண்ட காலம் யோசித்துவிட்டு, என்னுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்!

    `நண்பன் செய்தான்’ என்று, தான் செய்ததை வேறு ஒருவரின் தலையில் கட்டப்பார்க்கிறாரோ என்ற ஐயம் எனக்குள் எழுந்தது.

    யாராக இருந்தால் என்ன!

    தவறு செய்து தண்டனை அனுபவித்ததால், நல்லதோர் அனுபவம் கிடைத்திருக்கிறது. இனியும் தவறு செய்யக்கூடாது, நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்ற உறுதி பிறந்திருக்கிறது அவருக்கு.

    இப்படிப்பட்டவர்களுக்கு உண்மையை ஒத்துக்கொள்ளும் துணிவும், கடின உழைப்பும் இருக்கும்.

    பழக்கமில்லாத காரியங்களில் ஈடுபடும்போது, அவற்றில் தேர்ந்த பிறரது ஆலோசனையை நாடலாம். அதனால் வலிமை குன்றிவிடாது.

    எவருக்கும் தனக்குள் இருக்கும் திறமை தெரிவதில்லை. எதையாவது இழந்தபின்னரோ, அல்லது ஏமாற்றம் ஏற்பட்டாலோ, ஆழமாகச் சிந்திக்கும்போதுதான் வெளிப்படும்.

    மாறவே மாட்டோம்!

    “என்ன, இப்படி மாறிவிட்டீங்களே!” என்று பிறரைப் பார்த்து அதிசயப்படுகிறவர், `நாங்க மாறவே மாட்டோம்!’ என்று பெருமை பேசுவார்.

    மாற அஞ்சி, ஒரே நிலையில் இருந்தால், புதிய அனுபவங்கள் எப்படிக் கிடைக்கும்?

    புதிய அனுபவங்களை நாடினால், `பிறரது கேலிக்கோ, ஏச்சுப்பேச்சுக்கோ ஆளாகிவிடுவோமோ!’ என்ற அச்சமே பலரை ஒரே நிலையில் இருக்கச்செய்கிறது. அதிகம் யோசிக்காது, பிறரது கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிடுவர்.

    மற்றவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்று உன்னிப்பாகக் கவனித்து, அவர்களைக் கட்டுப்படுத்த நினைப்பவர் சுயக்கட்டுப்பாடு இல்லாதவர். ஆனாலும், தலைமைப் பதவியை நாடுபவர்.

    இந்த உண்மை புரிந்து, இத்தகையவர்களை அலட்சியம் செய்தால், முன்னேறலாம்.

    கதை

    தான் மணக்கப்போகிறவர் எப்படி எப்படியோ இருக்கவேண்டும் என்று, (எல்லாப் பெண்களையும்போல்) கனவு கண்டிருந்தாள் சுகன்யா.

    இறுதியில், அவளுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத ஒருவன் வாய்க்க, `நினைத்ததெல்லாம் நடக்குமா!’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள்.

    அந்த அனுபவத்தால், ஒரு கணவன் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று புரிந்தது. பிற இளம்பெண்களுக்கு ஆலோசனை கூறினாள்.

    அவர்களில் எத்தனைபேருக்கு அது புரிந்ததோ!

    ஊருக்கு உபதேசம்

    பிறருக்கு அறிவுரை கூறினால், தம் வலிமை பெருகுகிறதென்று பலரும் நம்பி நடக்கிறார்கள்.

    என் சக ஆசிரியை மூன்றாவது முறையாகக் கருவுற்றிருந்தபோது, அவள் உடலில் ஏதோ பாதிப்பு.

    சும்மா விடுவார்களா பிற பெண்கள்?

    அவரவருக்குத் தோன்றியபடி அறிவுரை கூற ஆரம்பித்தார்கள்.

    நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

    “ஏதாவது சொல்லுங்களேன்!” என்று என்னை ஒருத்தி வற்புறுத்த, “நான் டாக்டரில்லை. கர்ப்பம் தரித்தவளின் உடலுடன் விளையாடக்கூடாது!” என்றேன் கடுமையாக.

    காற்று போன பலூனைப்போல அவர்கள் சுருங்கிப்போய், கலைந்தார்கள்.

    யாருடன் பழகுவது?

    சிலர் அயல்நாட்டிற்குப் போய் தங்க நேரிட்டாலும், தம் நாட்டவர்களுடன்தாம் பழகுவார்கள். இவ்வாறு செய்வதில் ஒருவித பாதுகாப்பை உணர்ந்தாலும், புதிய அனுபவங்கள் கிடைக்குமா?

    பிறருடன் பழக நேரிடும்போது, நாம் கேலிக்கு உள்ளாகலாம். அது புரிந்தால், பெரிதாக பாதிப்பு அடையமாட்டோம்.

    நான் இறைச்சி உண்ணமாட்டேன் என்று சொல்லக்கேட்டு, “அப்படிக்கூட உயிர் வாழ முடியுமா?” என்றாள் ஒருத்தி, கேலியாக. அவள் உணவில் மாட்டிறைச்சி உண்டு.

    “என்னைப் பார்த்தால், சாகப்போகிறவள் மாதிரியா இருக்கிறது?” என்று பதில் கேள்வி கேட்டு, அவள் வாயை அடைத்தேன்.

    பிழைகளை எப்படித் தவிர்க்கலாம்?

    பள்ளிப் பரீட்சை முடிந்து, வினாத்தாளை மாணவிகளுக்குக் கொடுத்தபின், ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடையை கரும்பலகையில் எழுதுவார்கள் சில ஆசிரியைகள்.

    தாம் எங்கு தவறு செய்தோம் என்று சிலருக்குப் புரியும். அடுத்தமுறை, கவனமாக இருப்பார்கள்.

    ஆனால், எல்லாரும் இவ்வகையில் கற்பார்கள் என்பதில்லை.

    வாழ்க்கையிலும் இப்படித்தான். தவறு செய்பவர்களுக்கெல்லாம் அனுபவம் கிடைக்கும் என்பதில்லை. செய்த தவற்றையே மீண்டும் மீண்டும் செய்வதில்லையா!

    சுயதணிக்கை ஏன்?

    எழுத்தாளர்களாக விரும்புகிறவர்களுக்கு என்ன எழுதலாம், எத்தனை நீளம் எழுதலாம், இப்படியெல்லாம் எழுதினால் பெயர் கெடுமோ என்றெல்லாம் ஐயம் பிறக்கும். தவறு செய்யப் பயந்து, யோசித்தபடியே இருப்பதால், எழுதவே மாட்டார்கள்.

    என் அனுபவம்: தோன்றுவதையெல்லாம், சுயதணிக்கை செய்துகொள்ளாது, எழுதவேண்டும். எழுதி முடித்ததும், அதை அப்படியே வைத்துவிட்டு, வேறு வேலைகளில் கவனம் செலுத்திவிட்டு, ஒரு வாரம் கழிந்தபின்னர் அந்த எழுத்துப்படிவத்தைப் படித்துப்பார்த்தால், சம்பந்தம் இல்லாதவை, வேண்டாதவை என்று சில தட்டுப்படும்.

    `கஷ்டப்பட்டு எழுதினேனே!’ என்ற தன்னிரக்கத்திற்கு இடங்கொடாது, அவற்றை வெட்டிவிட வேண்டியதுதான்.

    “முக்கியமான எதுவுமே சொல்லிக்கொடுக்கப் படுவதில்லை” என்கிறார் அயர்லாந்து நாட்டவரும், பிரபல நாடகாசிரியருமான ஆஸ்கர் ஒயில்ட்.

    வாழ்வில் சிறக்க, நாமே கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டும். யாரும் சொல்லிக்கொடுக்கப் போவதில்லை.

    எதிர்நீச்சல் போடு!

    ஆசிய எழுத்தாளர்களுக்காக நடத்தப்பட்ட ஆங்கிலச் சிறுகதைப்போட்டி ஒன்றின் இறுதிச்சுற்றில் என் பெயரும் இருந்தது.

    `அப்பட்டியலில் இடம்பெற்றிருந்த இருபது எழுத்தாளர்களுக்கிடையே இருந்த ஒற்றுமை’ என்று நீதிபதிகள் எதைக் குறிப்பிட்டிருந்தார்கள், தெரியுமா?

    அவர்கள் அனைவரும் இரு நாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள்.

    புதிய நாட்டின் மொழி, மதம், கலாசாரம் போன்றவற்றில் பற்பல வித்தியாசங்களைக் கண்டு, தான் எவ்விதத்திலோ தாழ்ந்துவிட்டோம் என்று அஞ்சி, சுருங்கிவிடாது, தைரியமாக எதிர்நீச்சல் போட்ட அனுபவம் பிறவற்றிலும் கைகொடுத்திருக்கவேண்டும்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 76

    பழகத் தெரிய வேணும் – 76

    நிர்மலா ராகவன்

    மறக்காவிட்டாலும், மன்னித்துவிடு!

    ”எனக்கு அவளை/அவனைப் பிடிக்கவே பிடிக்காது!”

    “அந்த இனத்தைக் கண்டாலே எனக்கு வெறுப்பு!”

    ஏதோ ஒரு தருணத்தில் இவ்வாறு கூறியிருப்பார்கள் பலரும்.

    கதை

    ஏதோ கட்டாயத்தின்பேரில், வேறொரு சாதியைச் சேர்ந்த ஒருவனை மணந்தாள் குமுதா.

    கணவனிடம் வெகுவாக வதைப்பட்டபின், அவனை விவாகரத்து செய்தாள்.

    “ஈன ஜாதி இப்படித்தான் நடக்கும், நிர்மலா!” என்று குமைந்தாள், தான் மேல்சாதி என்ற பெருமையுடன்.

    கணவன்மேல் கொண்ட ஆத்திரத்தில், அவனது துணிகளை எரித்து, அவன் நட்டுவைத்த மரத்தை எரித்து, என்று என்னென்னவோ செய்துபார்த்திருக்கிறாள்.

    பழிக்குப் பழி என்று நடந்தால், அதற்கு ஏது முடிவு!

    பல வருடங்களுக்குப் பின்னரும் குமுதா தன் கணவனை மறக்கவுமில்லை, அவன்பால் கொண்ட வெறுப்பும் தணியவில்லை என்றவரை எனக்குப் புரிந்தது.

    ஆனால், என்னைவிடப் பெரியவளான அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. நிறையக் கேள்விகள் கேட்டு, அவள் மனப்பாரத்தைச் சிறிதாவது இறக்கிவிட முயற்சி செய்தேன்.

    `நம்மை ஏன் ஒருவர் அவ்வாறு வருத்தினார்?’ என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை.

    நாம் ஒருவரை எண்ணி ஆத்திரப்படுவதால், மன அமைதியை இழந்து, தன்னிரக்கத்துடன் வாடுவது நாமாகத்தான் இருக்கும். நம் வெறுப்புக்கு ஆளானவருக்கு என்னவோ, அது தெரியப்போவதில்லை. அதனால் அவருக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

    யாரை மறக்கவேண்டும் என்று எண்ணுகிறோமோ, அவரைப்பற்றி ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருந்தால், அவரிடமிருந்து விலகமாட்டோம் – எத்தனை தொலைவில் இருந்தாலும். உணர்ச்சிபூர்வமாக தொடர்புகொண்டு, அவர் நம்மை வதைத்துக்கொண்டேதான் இருப்பார்.

    `மெல்ல மெல்ல விஷம் அருந்துவதுபோல்’ என்று இப்போக்கைக் குறிப்பிடுகிறார்கள்.

    `மறதிதான் மகிழ்ச்சிக்கு இன்றியமையாத மருந்து!’ என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்!

    இதைத் தடுத்து, நிம்மதியும், மகிழ்ச்சியுமான எதிர்காலத்திற்கு வழிசெய்ய ஒரே வழி: மன்னிப்பு!

    கதை

    இரவில் நண்பர்களுடன் விளையாடப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு, அடிக்கடி வெளியில் போய்விடுவான் சாமா.

    `நண்பர்கள்’ என்று கணவன் குறிப்பிட்டது தன் காதலியைத்தான் என்றறிந்து, தான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று தன்மேலேயே வெறுப்பு எழுந்தது சாவித்திரிக்கு. கொதித்தெழுந்தாள்.

    எதையும் மறைக்காது, உண்மையை ஒத்துக்கொண்டான் சாமா. வழக்கம்போல், சண்டை, அழுகை.

    “விவாகரத்து வேண்டாம். இனி உன்னை ஏமாற்றவே மாட்டேன்!” என்று கணவன் கெஞ்சியபோது, அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு.

    “எப்படி அவன் உனக்குச் செய்த துரோகத்தைப் பொறுத்துக்கொள்கிறாய்!” என்று ஆச்சரியப்பட்டுக் கேட்ட தோழியிடம், “நான் மட்டும் தப்பே செய்திருக்க மாட்டேனா! குழந்தைகளிடமும், என்னிடமும் அன்பாகத்தானே நடந்துகொள்கிறார்!” என்று பதிலளித்தாள் சாவித்திரி. “கடந்துபோனதை நான் நினைவுபடுத்துவதில்லை. அதற்காக, அதை மறந்துவிட்டேன் என்று அர்த்தமில்லை”.

    மன்னிக்கலாம். ஆனால், எதற்காக மறப்பது?

    ஒரு முறை அவதிப்பட்டால், அதன்பின் கவனமாக இருக்கவேண்டாமா?

    மீண்டும் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி வருந்துவதோ, வதைப்படுவதோ என்ன புத்திசாலித்தனம்?

    மன்னித்தபின், பாதித்தவரிடம் கடந்தவைகளைப் பற்றி நினைவுபடுத்துவதும் வேண்டாத வேலை. `குப்பை!’ என்று ஒதுக்கவேண்டியதுதான். இல்லாவிட்டால், நிம்மதி பறிபோய்விடும்.

    நீண்ட காலம் இணைந்து வாழும் தம்பதிகளின் ரகசியம் புரிந்ததா? பல முறை மன்னித்து, ஒருவரையொருவர் ஏற்றிருப்பார்கள்.

    ஒவ்வொரு முறையும் ஒருவரே மன்னிப்பு கேட்பார் என்பதில்லை. விட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கமுடியுமா?

    அவர்கள் சண்டையே போட்டிருக்க மாட்டார்களா, என்ன!

    அவர்களில் ஒருவர் சில நாட்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டு போயிருக்கலாம். அதன் முடிவில், தம்பதியரில் ஒருவர், `ஸாரி,’ என்றுவிடுவார், யார்மேல் தவறு என்று அலசிப் பார்க்காது. இல்லையேல், சமாசாரத்தை அடியோடு மறந்துவிட்டதுபோல் நடந்துகொள்வார்.

    மன்னிப்பு கேட்பதற்குக்கூட மனோபலம் வேண்டும். மன்னித்தபின் சக்தி கூடியதுபோல உணர முடியும்.

    வெறுத்துக்கொண்டே இருந்தாலோ, அவர் நம்மீது செலுத்தும் ஆக்கிரமிப்பு குறையாதிருக்கும்.

    யாரை மன்னிக்கவேண்டும்?

    தவறு என்று புரிந்தே, நமக்குக் கெடுதல் செய்தவர்களை.  அவமதிப்பவர்களை. இப்படிச் செய்பவர்கள் நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ இருக்கலாம்.

    அவர்களை மன்னிப்பது நாம் அவர்களுக்குச் செய்யும் நற்காரியமல்ல. நமக்கே செய்துகொள்வது.

    எத்தனை காலம்தான் கடந்தவைகளிலேயே நிலைத்து நின்று, வருந்துவது! அதனால் நம் முன்னேற்றம் தடைப்பட்டுவிடாதா!

    பிறரை வருத்திக்கொண்டே இருப்பவர்கள்

    கதை

    அண்ணாசாமிக்கு யாரும் மரியாதையாகப் பேசக் கற்றுக்கொடுக்கவில்லையோ என்பதுபோல்தான் நினைக்கத் தோன்றும், அவன் வாயைத் திறந்தால். எல்லாரிடமும் சண்டை. தான் செய்த தவறு பிறரால் வந்தது என்று விதண்டாவாதம் புரிவான்.

    அவன் குணம் புரியாதவர்கள் தம்மிடம்தான் தவறு என்று முதலில் நினைப்பார்கள்.

    பெரிய குடும்பத்தில் வேண்டாத பிள்ளையானதால், இளம்பிராயத்தில் அவனை யாரும் சரிவரக் கவனிக்காததாலோ, சிறு தவறு செய்தாலும், அதற்காகத் தண்டனை பெற்றதாலோ அவன் வயதுக்கேற்ற முதிர்ச்சி அடையவில்லை.

    அந்த வருத்தம் அவனையும் அறியாது, பிறரும் தன்னைப்போல் வருந்தி, குழம்பவேண்டும் என்பதுபோல் வெளிப்பட்டது.

    இது புரிந்து, அவன் மனைவி மக்கள் அவனை எதிர்த்து வாயாடாது, அடங்கிப்போனார்கள்.

    எப்போதோ ஒருமுறை மன்னித்து, மறந்தால் போதாது; அதை ஒரு பழக்கமாகவே ஆக்கிக்கொண்டால்தான் நிம்மதி கிடைக்கும் என்று புரிந்தவர்கள் அவனுடைய குடும்பத்தினர். அதனால், அவர்கள் பலகீனமானவர்கள் என்றாகாது.

    சுயநலக்காரர்கள் ஒரு பொருட்டல்ல

    இப்போதெல்லாம், பலரும் சுயநலமிகளாகத்தான் இருக்கிறார்கள். மற்றவர்களின் மனப்போக்கை அறிய அக்கறையோ, ஆர்வமோ காட்டுவதில்லை.

    ஒருவர் வெற்றி பெற்றால், அவரது நட்பைப் பெற பலர் விரும்புவார்கள். ஒரு முறை தோல்வியடைந்தாலும், விலகிவிடுவார்கள். இவர்கள் உண்மையான நண்பர்களா என்பது யோசிக்கவேண்டிய சமாசாரம்.

    முன்பு நண்பர்களாக இருந்தவர்களும், வெற்றி பெற்றவரிடம் குறை கண்டுபிடிப்பார்கள். விலகுவார்கள்.

    கதை

    சிறந்த அறிவாளியும், உழைப்பாளியுமான ரகுவிற்கு உத்தியோகத்தில் பெரிய பதவி அளிக்கப்பட்டது. அவன் கல்வித்திறனுக்குக் கூடுதலான அந்த உயர்வு பழைய நண்பர்களின் பொறாமையைத் தூண்டப் போதுமாக இருந்தது.

    “நீ படித்த படிப்புக்கு..! எந்த அதிகாரியை, எப்படியெல்லாம் காக்காய் பிடித்தாயோ!” என்று பலவாறாகக் கேலி செய்தனர். அவனுடன் முன்போல் பேசப் பிடிக்காது ஒதுங்கினர்.

    நண்பர்களின் பராமுகத்தால் ஆரம்பத்தில் வருத்தம் ஏற்பட்டாலும், அப்படிப்பட்டவர்களின் ஏச்சுப்பேச்சை அலட்சியம் செய்யப் பழகிக்கொண்டான் ரகு.

    `இவர்களுக்கெல்லாம் பயந்து, வெற்றி பெறத் தயங்கலாமா?’ என்று தன்னைத் தேற்றிக்கொண்டதில், முன்பு அவனுடைய மேலதிகாரியாக இருந்தவரைவிட அதிகமான பரிசுகளும் விருதுகளும் பெற்றான்.

    `இதுதான் உலகம்!’ என்ற விரக்தி ஏற்பட்டு, அதிலேயே உழன்றிருந்தால், வாழ்வில் முன்னேற முடியாது என்று தெளிவுபெற்றான்.

    முக்கியமான வேறுபாடு!

    பிறர் தமக்குச் செய்த தீங்கை ஆண்கள் எளிதில் மறந்துவிடுவார்கள். ஆனால், மன்னிக்கமாட்டார்கள்.

    பெண்களோ, மன்னித்துவிடுவார்கள். ஆனால், மறக்கமாட்டார்கள்!

    எப்போதோ நடந்ததைக் கிளறும் குணம் பெண்களுக்குத்தான். சும்மாவா, பெண்களை கணினிக்கு ஒப்பிடுகிறார்கள்!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 75

    பழகத் தெரிய வேணும் – 75

    நிர்மலா ராகவன்

    அனுபவித்தால் புரியும்

    சிந்திப்பது நல்ல குணம்தான். அதற்காக, சுவரை வெறித்துக்கொண்டிருந்தால் நன்மை விளைந்துவிடுமா?

    புதிய அனுபவங்களை நாடப் பலருக்கும் பயம்.

    `பிறர் என்ன சொல்வார்களோ!’

    `எதற்காகப் புதிதாக எதையாவது செய்து, அதற்கான வேண்டாத விளைவுகளை அனுபவிக்க வேண்டும்? இப்போதே வாழ்க்கை சௌகரியமாகத்தானே இருக்கிறது!’

    இப்படியெல்லாம் தமக்குத் தாமே தடை விதித்துக்கொண்டால், வாழ்வில் என்ன சுவாரசியம் இருக்கும்?

    கனவிலேயே சிலர் சுகம் கண்டுவிடுகிறர்களே, ஏன்? கனவை நனவாக்கும் முயற்சியில் தோல்வி கண்டுவிடுவோமோ என்ற பயம்தான் காரணம்.

    அனுபவம் என்றால், நன்மைகளும் இருக்கும், வேண்டாதவையும் எதிர்ப்படும்.

    நாம் எண்ணியதுபோல் நடக்காவிட்டால், அதை அனுபவம் என்று கொள்ளவேண்டியதுதான். சரியாகத் திட்டமிட்டு இருக்கமாட்டோம் என்று, அடுத்த முறை கவனமாகச் செயல்படலாமே!

    ஒரு காரியத்தைப் பலமுறை செய்தாலும், திருப்தி ஏற்படவில்லையா?

    அப்படியானால், `இதில் நமக்குத் திறமை போதாது,” என்று தெளிந்து, வேறொரு காரியத்தில் ஈடுபட வேண்டியதுதான்.

    தோல்விகளும் ஏமாற்றமும்தான் நல்ல அனுபவம். வெற்றி கிடைத்து, அதிலேயே மகிழ்ந்திருந்தால், ஒரே நிலையில்தான் இருக்க நேரிடும். முன்னேற இயலாது.

    புத்தகப் படிப்பால் அனுபவம்?

    சமையல் புத்தகங்களைக் கரைத்துக் குடித்தாலும், அக்கலையில் தேர்ச்சிபெற்ற ஒருவரைக் கவனித்தாலும் போதுமா?

    அதன்படி தானும் செய்ய முயன்றால்தான் சுமாராகவாவது சமைக்க வரும்.

    அனுபவமின்மையால், முதலில் சிறு சிறு விபத்துகள் நிகழும். கையில் சூடுபட்டுக்கொண்டு, கூரான கத்தியால் கீறிக்கொண்டு, மிளகாய் நெடியால் தும்மிக்கொண்டு, அதிகச் சூட்டில், போதிய நீர் இல்லாது பாத்திரத்தின் அடி பிடித்துக்கொண்டு — இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

    இவற்றால் மனம் தளராது தொடர்ந்தால், பல வருடங்களுக்குப் பின், பிறருக்குச் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு உயர முடியும்.

    குற்றம் கண்டுபிடிக்காதே!

    தற்காப்புக் கலையில் தேர்ச்சிபெற்ற ஒரு சிறுமியின் நடை `அழகை’க் கண்டு, சற்றே பெரிய அவள் தோழிகள் செய்த விமரிசனம்: `ஆம்பளை மாதிரி நடக்குது!’

    கால்களை அகட்டி வைத்துக்கொண்டு நடப்பது பெண்மைக்கு அழகில்லை என்று அவர்கள் சிறுவயதிலேயே கண்டிக்கப்பட்டு, அதன்படி ஒயிலாக நடந்த பெருமை அவர்களுக்கு.

    கேலி செய்தால், அவள் நடை மாறிவிடுமா?

    `ஒவ்வொரு காலையும் இன்னொரு காலுக்கு முன்னால் வைத்து நட! பக்கவாட்டில் இல்லை!’ என்ற அறிவுரை வழங்கப்பட்டபோது, முயன்று, சிறிது நாட்களில் தானே மாறினாள்.

    குழந்தைகளிடம் போதனை

    தாம் பெற்ற குழந்தைகளிடம், “தைரியமாக இரு!” என்று சொல்லி வளர்ப்பார்கள் பலரும்.

    அப்படிச் சொன்னால் மட்டும் போதுமா?

    அச்சம் தரும் சந்தர்ப்பத்தில் அவர்கள் தைரியத்தைக் கடைப்பிடிக்க வழிகாட்டுவதும் அவசியம்.

    அடுப்பிலிருந்து அப்போதுதான் இறக்கிவைத்த பாத்திரத்தைத் தொட ஆர்வம் காட்டுவார்கள் ஒரு வயதே ஆகிய குழந்தைகள்.

    “சுடும்!” என்று எச்சரித்தால் புரியாது. ஏனெனில், அந்த வார்த்தை அவர்களுக்குப் பழக்கமில்லை.

    இதற்கு நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். சற்றே ஆறிய பாத்திரத்தின் வெளியே குழந்தையின் கையை வைப்பேன். பயத்தில் அதன் விழிகள் விரியும்.

    “ஊ..!” என்று அதை விளக்குவேன்.

    அடுத்த முறை, கத்தியைத் தொட முழலும்போது, “ஊ..!” என்று நான் எச்சரிக்கை விடுக்கையில், கை தானே பின்னால் போகும்.

    நான் ஏதோ தைக்கும்போது, என் மகள் மிக அருகில் வந்து உட்கார்ந்து, எட்டிப்பார்த்தாள். குழந்தையை நகர்த்தி உட்கார வைத்தும் பயனில்லாது போயிற்று. மீண்டும், மீண்டும் அருகில் வந்தாள்.

    நான் சற்று யோசித்து, அவள் விரலை என் கையால் பிடித்துக்கொண்டு, ஊசி முனையால் லேசாகச் சுரண்டினேன்.

    “ஊ..!” என்றாள், பயத்தால் கண்கள் விரிய. தானே பின்னால் நகர்ந்தாள்.

    இந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த என் தாய், “இப்போ மட்டும் எப்படிப் புரிஞ்சுது?” என்று கேட்டாள்.

    சைகையால் விளக்கினேன், பெருமையாக.

    அம்மா ஒரேயடியாக அதிர்ந்து, “ஒன்றரை வயசுக் குழந்தை கையைக் குத்தினியா? என்ன அம்மா நீ!” என்று வைதாள்.

    “பின்னே எப்படிப் புரியவைக்கறது!” என்று அலுத்தேன்.

    சொல்வதைவிடச் செய்துகாட்டுவதுதானே பலனளிக்கும்!

    வயதானதால் அனுபவம் அதிகமா?

    காலத்தின் மாறுதல்களை மனதில் கொண்டுதான் அறிவுரை வழங்கவேண்டும்.

    `எனக்கு உன்னைவிட வயது அதிகம். நான் சொல்வதைக் கேள்!’

    வயதானால் மட்டும் நிறைய அனுபவம் கிடைத்திருக்கும் என்று அர்த்தமில்லை.

    அந்தந்த வயதில், துணிச்சலுடன் அவர்கள் எத்தனை புதிய காரியங்களில் இறங்கி வெற்றியோ, தோல்வியோ பெற்றிருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்.

    அத்துடன், `நான் உன் வயதில்..,’ என்று ஆரம்பித்தாலும் குழந்தைகளின் மரியாதை கிட்டாது.

    குழந்தைகளுக்கு நாம் எத்தனைதான் அறிவுரை கூறினாலும், அதை அவர்களே அனுபவிப்பதுபோல் ஆகாது.

    கதை

    பதின்ம வயதான ரூபாவிற்கு அவள் தாய் புத்திமதி கூறினாள்: “உன்னைவிட இரண்டு வயது பெரிய பையன்களால் தொந்தரவு அவ்வளவாகக் கிடையாது. ஆனால், உன்னைவிட மிகப் பெரிய ஆண்களிடம் பத்திரமாக இருக்க வேண்டும்”.

    காரணத்தை மகள் கேட்டபோது, “உன்னைப் போன்ற விவரம் புரியாத பெண்களைப் பேசிப் பேசி மயக்குவது அவர்களுக்கு எளிது. உன் அழகை, புத்திசாலித்தனத்தை வானளாவப் புகழ்வார்கள். `உன் வயதுக்கு நீ எவ்வளவு அறிவு முதிர்ச்சி அடைந்திருக்கிறாய்! உன்னை யாராலும் புரிந்துகொள்ள முடிவதில்லை, இல்லையா?’ என்று பலவாறாகப் புகழ்ந்து, மனத்தைக் கலைப்பார்கள்”.

    ரூபாவிற்குச் சந்தேகம் எழுந்தது. “என் வயதுப் பையன்கள்?”

    “அவர்கள் ஆத்திரத்தில் தவறு செய்யலாம். ஆனால், முதலிலேயே யோசித்து வைத்திருக்க மாட்டார்கள்”.

    பல வருடங்கள் கழித்து, வேறு நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த மகள், ”வயதில் மூத்த ஆண்களிடம் பத்திரமாக இருக்கவேண்டும் என்று நீ கூறியிருக்கிறாய். ஆனால், அப்போது அது விளங்கவில்லை. இப்போது அனுபவித்துவிட்டேன்,” என்று தாயிடம் கூறினாள்.

    அடுத்த முறை கவனமாக இருப்பாள்.

    சொல்லிக் கொடுத்த வார்த்தை எத்தனை நாட்களுக்கு வரும்!

    புதிய அனுபவங்களைப் பெற

    பயணங்கள் மேற்கொண்டால் அனுபவங்கள் பெருகும்.

    எதிர்பாராத, அல்லது பழக்கமில்லாதவை நடந்தால், அவற்றை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் அனுபவம் பெருகுகிறது.

    கதை

    இருபது ஆண்டுகளுக்குமுன், கனடா நாட்டிலிருந்த விக்டோரியா தீவிற்குச் சென்றிருந்தேன். மலேசியாவில் சந்தித்த என் கனடா நாட்டுத் தோழி இசை, நாட்டியம் இரண்டிலும் வல்லவள். பொது இடங்களில் இருவரும் அவரவர் பாணியில் ஆட, உல்லாசமாக மூன்று வாரங்கள் கழிந்தன.

    திரும்பும் நாள் வந்தது. மூன்றுமணி ferry படகில் தீவைக் கடந்து, வான்கூவர் (Vancouver) சென்றதும், அங்கிருந்து, விமானப் பயணம் – நியூயார்க் செல்ல.

    என்னுடைய டிக்கெட்டில் விமானம் புறப்படும் நேரம் 2.00 மணி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    நான் விடியற்காலை இரண்டு மணி என்றெண்ணி, நள்ளிரவில் விமான தளத்தை அடைந்தேன்.

    “மத்தியானமே அந்த விமானம் போய்விட்டதே!” என்று கேட்டு, அதிர்ச்சிதான் ஏற்பட்டது.

    அடுத்த விமானம் மறுநாள் இரண்டு மணிக்குத்தான் என்று கேட்டதும், தண்டம் அழுது, புதிய டிக்கெட் வாங்கிவிட்டு, அடுத்த பன்னிரண்டு மணி நேரத்தை எப்படிக் கழிப்பது என்று யோசித்தேன்.

    பெரிய சூட்கேஸைத் தள்ளிக்கொண்டு, காலம் கடத்த முடியாது. அதனால், முதல் வேலையாக, அதைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு செய்தேன்.

    நியூயார்க்கிலிருந்த என் மகளுக்குத் தகவல் கூறியதும், “நாளைக்கு அதே நேரமா? சரி,” என்றாள், எதுவுமே நடக்காததுபோல். என்னைவிட அவளுக்கு அனுபவங்கள் அதிகம்.

    இரவு அங்கேயிருந்த பெஞ்சில் படுத்தேன். ஆனால், தூங்கப் பயம். கைப்பையில் கடப்பிதழ், பணம்! நான் அணிந்திருந்த தங்க நகைகள் வேறு!

    பொழுது விடிந்ததும், களைப்பைப் போக்க, நின்ற இடத்திலேயே யோகப் பயிற்சி செய்தேன்.

    சற்றுத் தள்ளி நின்றிருந்த ஒருவர், என் அருகில் வந்து, உற்றுப் பார்த்துவிட்டுப் போனார்!

    “மலேசியாவில், பகல் பன்னிரண்டுக்குப் பிறகு மத்தியானம் இரண்டு மணியை 14.00 என்றுதானே குறிப்பிடுவார்கள்! அதுதான் இந்தத் தவறு நடந்திருக்கிறது,” என்றாள் மகள் அலட்சியமாக.

    என் தோழியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டதும், “. “எதிர்பாராதது நடந்தாலும், அடுத்து என்ன செய்வது என்ற பதற்றமில்லாமல், பெட்டியை லக்கேஜில் வைத்தாயே! சமயோஜிதமாக நடந்ததற்கு உனக்கு 80% மதிப்பெண்கள் கொடுக்கிறேன்,” என்று பாராட்டினாள்.

    அந்த அனுபவத்தால் இன்னொரு முறை ரயிலையோ, விமானத்தையோ தவற விடமாட்டேன் என்று அர்த்தமில்லை. ஆனால், எதிர்பாராதது நடந்தால், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் மிகாது.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 74

    பழகத் தெரிய வேணும் – 74

    நிர்மலா ராகவன்

    பெண்களின் குற்ற உணர்ச்சி

    மூன்றுவயதுக் குழந்தைகளாக இருக்கும்போதே, குற்ற உணர்ச்சி நமக்குள் விதைக்கப்பட்டுவிடுகிறது.

    `கூடாது’ என்று அம்மா கண்டித்திருந்த காரியத்தைச் செய்துவிட்டு, பிடிப்பட்ட குழந்தை திருதிருவென்று விழிக்கும்.

    கதை: வதையும் குற்ற உணர்வும்

    தான் ஏதோ ஒரு விதத்தில் தாழ்ந்திருப்பதால்தான் தந்தை வதைக்கிறார் என்று தோன்றிப்போக, சிறு வயதிலேயே தாழ்மை உணர்ச்சிக்கு ஆளானாள் சியாமளா. காரணம் அவரது குடிபோதை என்று அப்போது புரியவில்லை.

    பிறரால் பாலியல் பலாத்காரத்துக்கும் உள்ளானபோது, தன்மேல்தான் ஏதோ தவறு என்று நினைத்தாள்.

    பிறருடன் அதைப் பகிர்ந்துகொள்ளவும் தெரியாமல் போக, குற்ற உணர்வு மிகுந்தது.

    அவள் செய்த எந்தக் காரியத்திலும் ஓயாமல் குற்றம் கண்டுபிடிக்கும் ஒருவனை மணந்ததும், குழப்பம் எழுந்தது. இனம்புரியாத பயம். அவனுடன் தனிமையில் கழிப்பதைத் தவிர்த்தாள்.

    மனைவியின் மன உளைச்சல் புரியாது, “நீ எட்டு மணிக்கே தூங்கப்போகிறாயே! அப்புறம் `ஏதாவது’ நடந்தால், என்னைக் குறை சொல்லாதே!” என்று கணவன் மிரட்டுவானாம்.

    எனக்கு சியாமளாவைச் சிறுவயதிலிருந்தே தெரியும். அவள் தன் மணவாழ்க்கையின் அவலத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டதும், சிறு வயதில் அனுபவித்த கொடுமைகளால் அவளுடைய உணர்வுகள் இப்படி ஆட்டுவிக்கின்றன என்று விளக்கினேன். சிலவற்றை அவளே மறந்திருந்தாலும், அவற்றின் பாதிப்புகள் தங்கிவிட்டிருந்தன.

    குற்ற உணர்ச்சி தன்னைத்தானே தாழ்மையாக ஒருவர் நினைக்க வழிவகுக்கும். இப்படிப்பட்டவரைப் பிறர் மிரட்டுவார்கள், எதிர்ப்பே இல்லாததால்.

    “எந்தவித வதையானாலும், உடனே எதிர்க்கவேண்டும். பொறுமையுடன் சகித்துக்கொண்டால், அதிகரிக்கும்,” என்று நான் தூபம் போட்டேன். அதற்கு உடனே பலன் கிடைத்தது.

    அடுத்த முறை, `ஏதாவது நடந்தால், என்னைக் குறை சொல்லாதே!’ என்ற வசனத்தையே கணவன் திரும்பச் சொல்ல, அதற்குமேலும் பொறுக்க முடியாது, “நான் என்ன செய்தாலும் தப்பு என்கிறீர்கள். தப்பித் தவறி, கால் உங்கள்மேல் பட்டால், அதற்கு வேறு திட்டு வாங்கவேண்டும்!” என்று படபடத்தாள் சியாமளா.

    நம்பமுடியாது அவளைப் பார்த்தான் அவன். “விளையாடுகிறாயா? அதற்கெல்லாமா திட்டுவார்கள்!”

    நிறைய அழுகை, சண்டை எல்லாம் தொடர்ந்தன.

    உள்ளுக்குள்ளேயே வைத்துப் புழுங்கினால் நிலைமை எப்படி மாறும்?

    ஒதுக்கிவிடு!

    என்றோ நடந்தது – அது எவருடைய தவறாக இருந்தாலும் — அதையே நினைத்து, மறுகிக்கொண்டிருந்தாற்போல் அது மாறிவிடப்போகிறதா?

    நிலைமை இன்னும் மோசமாக, `செய்யக்கூடாததைச் செய்துவிடுவோமோ!’ என்ற அச்சம்தான் அலைக்கழைக்கும்.

    எதற்காக நம்மை நாமே தண்டித்துக்கொள்வது?

    இவ்வாறு மகிழ்ச்சியை இழப்பதைவிட, `திரும்பவும் அதே தவற்றைச் செய்யமாட்டேன்!’ என்ற உறுதிபூண்டு, பழைய நினைவுகளைப் பின்னுக்குத் தள்ளவேண்டியதுதான்.

    பிள்ளைகளின் கடமை?

    தம்பிக்கு மூளையில் குறைபாடு இருந்ததால் பெற்றோர் மனம் வாடுகிறார்கள் என்பது அருணாவுக்குச் சிறு வயதிலேயே புரிந்தது.

    `நான் மட்டும் புத்திசாலியாக இருக்கலாமா?’ என்ற குற்ற உணர்ச்சி எழ, பெற்றோருக்கு மிக மிக நல்ல மகளாக, எல்லா விதத்திலும் அவர்களுக்குப் பெருமை தேடித்தரும் வகையில் நடக்கத் தீர்மானித்தாள்.

    அந்த சிறுபிள்ளைத்தனமான முடிவால், மன அழுத்தம் அதிகரித்தது. தன் இயலாமையை நெருங்கிய தோழிகளுடன் பகிர்ந்துகொண்டாள்.

    அருணாவின் தாய், “என் மகள் எங்கள் மனம் சிறிதும் கோணாது நடப்பாள். இப்படி ஒரு மகளைப் பெற நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!” என்று என்னிடம் கூறினாள், பூரிப்புடன்.

    எப்போதும் ஒரு சிறு தவறுகூடச் செய்யாது இருக்க யாரால்தான் முடியும்?

    “தம்பியின் குறையை ஈடு செய்வதற்காக, அரும்பாடுபட்டு முயல்கிறாள்,” என்று விளக்கினேன். “அவள் மிகுந்த பிரயாசைப்பட்டு நல்லவிதமாக நடந்துகொள்வது உங்களுக்காக!”

    “இது அவள் குற்றம் இல்லையே!” என்று தழுதழுத்தாள் தாய். “நான் கவனிக்கிறேன்”.

    “வெளிப்படையாகக் கேட்டுவிடு,” என்று அழுத்திக் கூறினேன்.

    எதற்குத்தான் குற்ற உணர்ச்சி என்று பல பெண்களுக்குப் புரிவதில்லை.

    கதை

    இடைநிலைப் பள்ளியில் என் மகள் படித்தபோது, அவளுடைய வகுப்புத் தோழிகள், `படித்தால் பெரிய வேலை கிடைக்கும். உத்தியோகம் ஆண்களுக்கு அழகு என்றுதானே சொல்லிவைத்திருக்கிறார்கள்? நாம் அவர்களுடன் போட்டி போடலாமா? ஏதோ தப்பு செய்வதுபோல் இருக்கிறது,’ என்பார்களாம்.

    “எங்களுக்கு அந்த குற்ற உணர்ச்சி இல்லையே! ஏன்?” என்று மகள் கேட்டாள்.

    எங்கள் குடும்பத்தில், இப்போது சுமார் நூறு வயதாகி இருக்கக்கூடிய இரு பெண்மணிகள் பெரிய படிப்பு படித்து, அதற்கேற்ற உத்தியோகமும் வகித்திருந்தனர்.

    அந்தக் காலத்தில் படித்து, வேலைக்குப் போய், சுயசம்பாத்தியம், அதனால் கிடைத்த சுதந்திரம் இதற்கெல்லாம் கிடைத்த அவதூறை அவர்கள் அனுபவித்திருப்பார்கள்.

    அதற்குப்பின் வந்த என்னைப்போன்ற பெண்களுக்கு நல்லதொரு பாதை வகுத்திருந்தார்கள்.

    சாவினால் குற்ற உணர்வா?

    நமக்கு நெருங்கிய ஒருவர் இறந்தால், முதலில் எழுவது குற்ற உணர்வு.

    `அவருடன் இன்னும் அதிக நேரத்தைக் கழித்திருக்கலாமோ!’  என்று நம்மையே வருத்திக்கொள்வோம்.

    கதை

    மாமியார் இருந்தவரை, அவளுடைய அன்பு புரியவில்லை சங்கரிக்கு.

    அவள் மறைவுக்குப் பின்னர், `அம்மா,’ என்று யாராவது ஆரம்பித்தாலே, கண்களில் நீர்ப்பெருக்கெடுக்கும்.

    நான் அதிசயப்பட்டு, விசாரித்தேன்.

    “`இன்னும் அன்பாக நடத்தியிருக்கலாமோ?’ என்று வருத்தமாக இருக்கிறது. அம்மாவின் நல்ல மனம் அப்போது புரியவில்லை!” என்று விம்மினாள்.

    குற்ற உணர்வு குழப்பத்தை மட்டுமின்றி, ஏமாற்றத்தையும் அச்சத்தையும் விளைவிக்கிறது. தன்னம்பிக்கை குன்றிவிடுகிறது.

    நல்ல மனைவியாக இருப்பது எப்படி?

    இந்தக் கேள்விக்குப் பதிலை தமிழ் திரைப்படங்களிலிருந்து கற்காதீர்கள், பெண்களே! அது ஆண்களுக்குச் சாதகமாக இருக்கும்.

    கணவனுடைய ஒவ்வொரு தேவையையும் கவனித்து, ஏதோ கைக்குழந்தைபோல் அவனைப் பாவித்து நடத்தினால்தான் நல்ல மனைவியா?

    கொண்டவன் மனம் கோணக்கூடாது, அவன் என்ன சொன்னாலும் ஏற்றால்தான் பிறரது பாராட்டுக்கு உரியவர்களாகலாம் என்று நினைத்து, அதன்படி நடப்பார்கள் பலர்.

    அப்படி இல்லாதவளை, “மோசமான மனைவி” என்று பிறர் கருதலாம். அவர்களை நம்பினால், குற்ற உணர்வுதான் மிகும்.

    விடியற்காலையில் எழுந்து, சமையலறையில் உழன்று, அவன் அலுவலகத்திற்குப் புறப்படும்வரை, `தனக்கும் தேவைகள் இருக்கலாம்’ என்பதையே மறந்த நிலையில் இருக்கும் பெண், `நான் ஆதர்சமான மனைவி!’ என்று பெருமை கொள்ளலாம்.

    ஆனால், ஓயாமல் உழைப்பதால் எழும் எரிச்சல், அவளையுமறியாது சிடுசிடுப்பாக மாறும்.

    அவள் வெகுவாகக் களைத்திருக்கும்போது, அன்பு செலுத்துவதாக நினைத்து, கணவன் அவள் கையைப் பிடித்தால் அவளால் ரசிக்க முடியுமா?

    நான் நல்ல தாய் இல்லை

    உத்தியோகத்திற்குப் போகும் பெண்களில் சிலர் தாம் சிறுவயதில் அனுபவித்ததுபோல் தாயின் கவனிப்பு ஒவ்வொரு நிமிடமும் தம் குழந்தைகளுக்கும் கிடைக்கவில்லையே என்று வருந்துவார்கள்.

    அப்படிப்பட்ட இளம்தாய் ஒருத்தி, “என் மகளுக்கு எதுவுமே சொல்லிக்கொடுக்க எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு நல்ல அம்மா இல்லை,” என்று, அழமாட்டாக்குறையாக என்னிடம் முறையிட்டாள்.

    பெரிய உத்தியோகம் வகித்த அப்பெண் ஓய்வு தினங்களில் மகளுக்குப் பிடித்ததைச் சமைத்துப்போடுவாள். அன்புடன் அவளை நடத்துவாள்.

    குழந்தைக்கு அந்த அன்பு புரிந்தது. “அம்மாவை ரொம்பப் பிடிக்கும்,” என்று தானே என்னிடம் கூறினாள்.

    காலம் மாறுவதற்கேற்ப நாமும் மாறவேண்டியிருக்கிறது. இது புரிந்தால், மனைவியோ, தாயோ, தன்னையே வருத்திக்கொள்ள வேண்டியதில்லை.

    பெண்களுக்குள் இந்த குற்ற உணர்வை வலியப் புகுத்த முயல்கிறவர்களும் உண்டு.

    கதை

    “என் மகள், கணவர் இருவரும், `உனக்கு எங்கள்மேல் அக்கறையே கிடையாது. அதுதான் எங்களுடன் போதிய நேரத்தைக் கழிக்காது, வேலைக்குப் போகிறாய்,’ என்று தினமும் குற்றம் சாட்டுகிறார்கள்,” என்று வருத்தத்துடன் முறையிட்டாள் என் தோழி மாலினி.

    “வேலையை விட்டுவிடுகிறேன் என்று மிரட்டு!”

    “சொல்லிப்பார்த்தேனே! அதற்கும் இணங்கவில்லை!”

    போதிய அனுபவம் இல்லாத மகளுக்குத்தான் புரியவில்லை.

    தந்தையாவது, “அம்மாவும் சம்பாதிப்பதால்தான் நாம் தாராளமாகச் செலவு செய்ய முடிகிறது!” என்று புத்தி சொல்லி இருக்கவேண்டாமோ?

    மனைவியைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி வருத்துவதில் அப்படி என்ன மகிழ்ச்சி?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 73

    பழகத் தெரிய வேணும் – 73

    நிர்மலா ராகவன்

    குழந்தைகளும் கைத்தொலைபேசியும்

    பெண்களுக்கு இயற்கையாக, மூளையின் இரு பக்கங்களும் ஒரே சமயத்தில் மாறி, மாறி வேலை செய்யும். ஒரு பக்கம் குழந்தை அழ, சமையலையும் அதனுடன் கவனித்துக்கொண்டு, இன்னும் பிற வேலைகளையும் ஒரே சமயத்தில் செய்ய முடியும்.

    Lateral thinking (பக்கவாட்டு சிந்தனை) என்னும் இத்திறனைப் பெற ஆண்களுக்குப் புத்தகங்கள் வழிகாட்டுகின்றன.

    தொலைக்காட்சி, கைத்தொலைபேசி போன்று, திரையையே உற்றுப் பார்க்க வைப்பவையோ, இரு பக்க மூளைக்கும் வேலை கொடுப்பதில்லை. அதன் நடுப்பாகத்தைத்தான் உபயோகிக்கின்றன. இதனால் ABSTRACT THINKING குறைந்துவிடுகிறது. அதாவது, எதிரில் இல்லாத பொருளைப் புரிந்துகொள்வது கடினமாகிவிடுகிறது.

    பாலர் பள்ளியில், இரண்டும் இரண்டும் என்பதுபோன்ற எளிதான கூட்டல் கணக்கு போட, கரும்பலகையில் இரு ஆப்பிள்களை வரைந்து காட்டும் நிலை இன்று.

    இதைத் தவிர்க்க, சிறுவயதில் இருபது நிமிடங்களுக்குமேல் இச்சாதனங்களைப் பயன்படுத்த விடுவது நல்லதல்ல.

    சிறுவயதிலிருந்தே, பக்கத்திலிருப்பவர்களுடன் பேசுவதைவிட, எங்கோ ஆயிரக்கணக்கான மைல் தூரத்திலிருக்கும், முகமறியாத `நண்பர்களுடன்’ பேசுவதுதான் பழக்கமாகிவிடுகிறது.

    அவர்களில் எத்தனைபேர் நல்லெண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்? தம் குழந்தைகள் நல்ல நண்பர்களுடன் பழகுகிறார்களா என்று கண்காணிப்பது அவசியமாக இருந்தாலும், கடினமாகிவிடுகிறது.

    தனித்திருந்தால் கற்பனை வளம் பெருகும். ஆனால், இவ்வாறெல்லாம் தனிமையையே நாடுகிற குழந்தைகளுக்குப் பிறருடன் பழகத் தெரிகிறதா என்பது சந்தேகம்தான்.

    தூக்கமே வரதில்லே!

    படுத்துக்கொண்டு கைத்தொலைபேசியை உபயோகித்தால், களைப்பில்லாது பல மணி நேரத்தைச் செலவிடலாம். ஆனால், கண்கள் பழுதாகிவிடுவது என்னவோ உறுதி.

    இரவில் தூங்கப்போகுமுன், படுத்தபடி கைபேசியில் கவனம் செலுத்துகிறவர்கள் விரைவில் தூங்க முயற்சித்தாலும் அது இயலாத காரியமாகிவிடும். ஏதேதோ யோசனைகள் எழும். மிகுந்த ஒளியுடன் இருக்கும் திரை செய்யும் காரியம் அது. இதனால், அடுத்த நாள் பள்ளியில் தூங்கிவிழுவார்கள்.

    அதன் விளைவு?

    பள்ளிக்கூட இடைவேளையில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துகிறவர்களின் கற்கும் திறன் குன்றுவதோடு, மன நிலையையும் பாதிக்கப்படுகிறது. நட்பு இருக்கவேண்டிய இடத்தில் முரட்டுத்தனம், இல்லை, அதிகாரம்.

    இச்சாதனத்தைப் பள்ளிக்குக் கொண்டுவரக் கூடாது என்று சில பள்ளிகள் விதித்திருப்பதன் காரணம் இதுதான்.

    `குழந்தைகளின் நச்சரிப்பிலிருந்து தப்பலாம்’ என்று, இரண்டுவயதுக் குழந்தைகளைக்கூட இச்சாதனங்களை உபயோகிக்கப் பழக்கும் பெற்றோர், பதின்ம வயதில் அவர்கள் தம்முடன் அதிகம் பேசுவதில்லையே என்று குறைப்படுவது என்ன நியாயம்!

    மூளையில் பாதிப்பு

    இரு நிமிடங்கள் உபயோகித்தபின், கைத்தொலைபேசியிலிருந்து எழும் வானொலி அலைகள் குழந்தைகளின் மூளையில் ஒரு மணி நேரம்வரை தங்கியிருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

    பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மூளை பெரியவர்களைவிட 60% அதிகமாகக் கதிர்வீச்சை உள்வாங்கிக்கொள்கிறதாம். அதனால் மூளையிலும் காதிலும் கட்டிகள் வரக்கூடும்.

    ஐபேட் (I pad) போன்றவற்றைச் சிறுவயதிலேயே உபயோகிக்க ஆரம்பிக்கும் குழந்தைகள் ரோபாட்போன்று இயந்திரகதியில் பேசுகிறார்கள்.

    கணினி, கைத்தொலைப்பேசி போன்றவை இன்று அவசியமானதாக இருந்தாலும், செய்யவேண்டிய வேலைகளை ஒத்திப்போட வைக்கின்றன என்பதுதான் உண்மை.

    `இவற்றை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது,’ என்ற நல்லெண்ணத்துடன் சிறுவர்களைத் தடுத்தால், அழுது, முரட்டுத்தனம் செய்கிறார்களா? அப்படியானால், அவர்களுக்கு இப்பழக்கம் போதை அளிக்கிறது என்று அர்த்தம். ஆரம்பத்திலேயே தவிர்க்கவேண்டும்.

    இப்படிப் பல வேண்டாத விளைவுகளை எப்படித் தவிர்ப்பது?

    நான் பெரியவனாப் பிறந்திருக்கணும்

    எங்கள் குடும்பத்தில், `பத்து வயதுப் பையனுக்கு அரைமணி, ஏழு வயதிற்கு கால்மணி’ என்று நான் பேரன்களுக்கு உத்தரவு போட, “நான் ஏன் மொதல்லே அம்மா வயத்திலிருந்து வரலே?” என்று சின்னவன் சண்டை பிடித்தான்!

    அத்துடன், `புத்தகங்களும் படித்தாக வேண்டும்,’ என்ற கட்டாயத்திற்கு உள்ளாக்கினோம். சிந்தனைவளம் வேறு எப்படித்தான் பெருகும்!

    முந்தைய தலைமுறைகளில், குடும்பத்திலுள்ள பெரியவர்கள் கதை சொன்னார்கள், குரலில் ஏற்ற இறக்கத்துடன்.

    இரவு வேளைகளில், அல்லது உணவருந்தும்போது, பயனுள்ள கதைகள் சொல்வது நன்மையை விளைவிக்கும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

    என்ன நன்மை?

    படிக்கத் தெரியாத வயதில் கதை கேட்பதாலோ, பிறகு சுயமாகப் படிப்பதாலோ, கற்பனாசக்தி வளரும்.

    தம் நலனில் அக்கறைகொண்டு, நேரத்தைச் செலவிடும் பெரியவர்களிடம் அன்பும் மரியாதையும் நிலைக்கும். தம் அன்றாட வாழ்க்கையை அவர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள்.

    வித்தியாசமான பிறரைப் புரிந்துகொள்ளவும் முடியும்.

    குழந்தைகளை விடுங்கள்! அலுவலகத்தில் வேலை செய்யும்போதே கைத்தொலைபேசியில், `புதிதாக என்ன வந்திருக்கிறது?’ என்று இடையிடையே பார்ப்பவர்களின் I.Q (நுண்ணறிவு) பத்து எண்கள் குறைந்துவிடுகிறதாம். மரியுவானா என்று போதைப்பொருளால் விளையும் தீங்கைப்போல் இருமடங்கு!

    இரு காரியங்களை ஒரே சமயத்தில் செய்வது

    புத்தகம் படிக்கும்போதோ, காரோட்டிப் போகையிலோ, கைத்தொலைபேசியில் கண்ணைப் பதித்தால் சக்தி விரயமாவதுடன், கவனமும் குறைந்துவிடும். தெரு விபத்துகள் அதிகரிக்காமல் என்ன ஆகும்?

    எல்லாவற்றிற்கும் ஒரே கருவி

    கைத்தொலைபேசி உபயோகத்தில் வந்ததிலிருந்து, புகைப்படக் கருவிகளுக்கு அவசியம் இல்லாது போயிற்று. மணிக்கட்டில் கட்டிய கைக்கடிகாரத்தைவிட தம் விரல்களுடன் சொந்தம் கொண்டாடும் தொலைபேசியைத்தான் ஆண்கள் பார்க்கிறார்கள், நேரத்தைத் தெரிந்துகொள்ள. தேதி பார்க்க இனி எதற்கு காலண்டர்?

    `என்ன சாப்பிடுகிறோம்?’ என்றே புரியாது, கண் கைத்தொலைபேசியில் நிலைக்கிறது பலருக்கும்.

    “கைத்தொலைபேசி இளைத்துக்கொண்டே வருகிறது. மனிதர்களோ, அதற்கு நேர் எதிரிடை!” என்று புலம்புகிறார் ஒருவர்.

    முகமறியாதவர்களுடன் ஓயாமல் பேசிக்கொண்டும், திரையை வெறித்துக்கொண்டும் இருந்தால், உடற்பயிற்சிக்கு ஏது நேரம்?

    `அதுதான், சாயங்கால வேளைகளில் உலவப்போகிறேனே!’ என்கிறீர்களா?

    அப்போதுகூட, கைத்தொலைபேசி, அதன் பெயருக்கேற்ப, கையைவிட்டு இறங்குவதில்லையே!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 72

    பழகத் தெரிய வேணும் – 72

    நிர்மலா ராகவன்

    சுயசிந்தனையும் நிந்தனையும்

    `என்னை எல்லாருக்கும் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும்!’ என்று கூறும் சிறுவர்கள் வெகு சிலரே.

    கதை

    பல பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்ட தற்காப்புக்கலை நிகழ்ச்சி அது.

    எனக்கு அறிமுகமில்லாத ஒரு சீனப் பெண்மணி, “என் மகளுக்கு பர்சனாலிடியே (ஆளுமை) கிடையாது,” என்று, பக்கத்தில் அமர்ந்திருந்த என்னிடம் முறையிட்டாள்.

    அந்த ஏழு வயதுச் சிறுமி பக்கத்திலேயே நின்றிருந்தாள்.

    சோனியாக இருந்தாள்.

    பாராட்ட வேண்டிய தாயே தன்னைப் பற்றிப் பிறரிடம் குறையாகக் கூறினால், பின் எப்படி இருப்பாள்?

    அந்த தாயைத்தான் குறை கூற வேண்டும். ஏனென்றால், பிற குழந்தைகளுடன் அவளை ஒப்பிட்டு, இல்லாதவற்றுக்காகப் பழிக்கலாமா? அச்சிறுமியிடம் நற்குணங்களே இருக்காதா, என்ன!

    `கூடாது என்பதைச் செய்தால் தவறா?’ என்று குழந்தைகள் ஆர்வத்துடன் செய்துபார்ப்பார்கள். சரி, தவறு புரியாத வயது அது.

    தவறு என்று தெரிந்தே, `அம்மா என்னதான் செய்துவிடுவாள்!’ என்று, தாயைப் பரிசோதனை செய்வதற்காகச் செய்தால், கண்டிக்கலாம். ஆனால், புதிய முயற்சியில் ஈடுபடும் தைரியத்தையே இழக்கும் அளவுக்குக் குறைகளைப் பெரிது பண்ண வேண்டாமே!

    கதை

    என் மூன்று வயது மகன் சசி `வாஷிங் மெஷின்’ ஓடிக்கொண்டிருந்தபோதே, மிகுந்த பிரயாசையுடன் திறந்தான். `அம்மா செய்வதுபோல் தானும் செய்யலாமே!’ என்ற ஆர்வம்தான் காரணம்.

    அப்புறம் என்ன!

    அதனுள்ளிருந்து தண்ணீர் வெள்ளமாகப் பெருக, அலறியபடி ஓடினான்.

    “போனாப்போறது! இனிமே, நான் சொல்றபோது திற, என்ன!” என்றுவிட்டு, சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கினேன். அவனே பயந்தபோது, நான் வேறு எதற்காகத் தண்டிப்பது!

    அடுத்த முறை, அதன் அருகிலேயே உட்கார்ந்திருந்தான்.

    “இந்த விளக்கு அணைந்ததும்தான் திறக்கணும்,” என்று காட்டினேன்.

    அதன்படி நடந்தபோது, அவனுக்குப் பெருமையாகிவிட்டது.

    இன்னொரு முறை, எதையோ அரைக்கப் போட்டிருந்தேன். `பிளெண்டரை’ மூடவில்லை.

    சசி அதை இயக்கிவிட்டான். அதனுள்ளிருந்த தேங்காய், மிளகாய் வற்றல் எல்லாம்…!

    அவன் பயந்து ஓடினான். நான் திட்டுவேன் என்று பயந்தல்ல. சூறாவளிபோல் பறந்தவைகளைக் கண்டு.

    அதிலிருந்து, நான் பக்கத்தில் இருக்க, சமையலறையில் எந்தவித மின்சார இயந்திரமானாலும், அதை இயக்குவது அவன் வேலையாகப் போயிற்று.

    வெற்றிகரமாக வேலையை முடித்ததும், அவன் முகத்தில் எழும் பூரிப்புக்காக நான் பொறுமையாகக் காத்திருப்பேன்.

    வீட்டில் ஒவ்வொருவரிடமும் போய், பெருமையாகச் சொல்லிக்கொள்வான், “நான்தான் cabbage (முட்டை கோஸ்) நறுக்கினேன்!” என்று.

    “நீ ரொம்ப புத்திசாலி!” என்று அவர்களும் பாராட்டுவார்கள்.

    குழந்தைகளுக்குத் தம்மையே பிடித்துப்போக பாராட்டுகள் அவசியம். ஏனெனில், பிறர் சொல்வதை அப்படியே நம்பும் வயது அவர்களுக்கு.

    சில தவறுகள் புரிந்தாலும் என்ன மோசம்! அதன்பின் செய்வது எல்லாமே தவறென்று ஆகிவிடுமா?

    கதை

    பாலர் பள்ளி மாணவனாக இருந்தபோது, என் பேரன், `இன்னிக்கு நிறைய வீட்டுப்பாடம் இருக்கு!’ என்று பெருமூச்செறிந்தான்.

    தினமும் அப்படிச் சொல்லிக்கொண்டுதான் வீடு திரும்புவான்!

    அவன் செய்ய வேண்டிய வேலை: ஒரே எழுத்தை பத்து முறை எழுதவேண்டும்.

    `வரிக்குமேல்’ என்று, ஆசிரியை ஒவ்வொருவரின் நோட்டுப்புத்தகத்திலும் உதாரணமாக ஒருமுறை எழுதியிருந்தாள்.

    அந்த வயதில், `பள்ளிக்கூடத்தில்தான் படிப்பு என்றால், வீட்டிலுமா! எப்படித்தான் எழுதி முடிக்கப்போகிறேனோ!’ என்ற அயர்ச்சி எழுவது சகஜம்.

    “எழுதி முடித்ததும், பூங்காவில் விளையாடப் போகலாம்,” என்பதுபோல், அவனுக்குப் பிடித்த எதையாவது சொல்லி, ஆசைகாட்டுவோம்.

    நினைத்ததைவிட வேலை எளிதாக, விரைவாக, முடிந்துவிடும். அப்போது தன்னம்பிக்கை கூடும். அது மேலும் பல வெற்றிகளுக்கு வழிவகுக்கும்.

    என் நெருங்கிய தோழி, முதல் வகுப்பிற்கான பரீட்சைத்தாளைப் பார்த்து, “எவ்வளவு எளிதாக இருக்கிறது!” என்று அதிசயப்பட்டாள்.

    “அந்த வயதில், உனக்கும் இது கஷ்டமாகத்தான் இருந்திருக்கும், ஸ்டுபிட்!” என்று நான் சிரித்தேன்.

    அவளும் சிரித்தாள். “அட, ஆமாம்!” என்று ஒத்துக்கொண்டாள்.

    எந்த வயதிலும், ஒவ்வொரு படியாக ஏறினால்தானே மேலே போகமுடியும்! மலைத்துப்போய் கீழேயே நின்றுகொண்டிருக்கலாமா?

    சுயசிந்தனையும் நிந்தனையும்

    தாயின் அறிவுரைப்படி நடக்காது, சுயசிந்தனையோடு செயல்படுவார்கள் சிலர். அந்த நிலையில், தோல்வியையோ, பழியையோ ஏற்க நேரலாம்.

    `நான் படித்துப் படித்துச் சொன்னேனே! கேட்டாயா? உனக்கு உலகத்தின் போக்கு புரியவில்லை,’ என்று தாய் குற்றம் சாட்டினால், மகளுக்குக் குற்ற உணர்ச்சிதான் ஏற்படும். அடங்கிப்போவதே சிறந்தது என்று தீர்மானித்துவிடுவாள் – அதனால் மனக்குறை ஏற்பட்டாலும்.

    பெற்றோரால் புகழப்படாது, சிறு வயதிலிருந்தே அவர்கள் கூறுவதையெல்லாம் ஏற்கும்படி வளர்க்கப்பட்டவர்கள், வளர்ந்தபின்னரும் தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்வார்கள்.

    `என்னைப் பற்றி உயர்வாகச் சொல்லிக்கொண்டால் தற்பெருமை என்பார்களே! அதற்கு மாறாக, `நான் மட்டம்!’ என்பதுபோல் சொல்லிக்கொண்டால், அது அடக்கம் இல்லையா?’ என்று இவர்கள் யோசனை போகிறது.

    “எனக்குத் தைரியமே கிடையாது. நான் சரியான பயந்தாங்கொள்ளி!” எத்தனைபேர் இப்படிச் சொல்கிறார்கள்!

    `ஏன் பயம்? எங்கிருந்து ஆரம்பித்தது?’ என்று யோசிக்கலாமே!

    “எதையும் உரிய காலத்தில் செய்யும் நல்ல வழக்கம் எனக்குக் கிடையாது. தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பேன்!” இப்படிக் கூறிய ஆங்கில தினசரி ஆசிரியை ஒருத்தியிடம் நான் மறுத்துக் கூறியது: “உன் குறைகளைப் பிறர் கண்டுபிடிக்கட்டும் என்று விடு. நீயே ஏன் கூறிக்கொள்கிறாய்?”

    “நீங்கள் சொல்வதும் சரிதான்,” என்று ஏற்றுக்கொண்டாள்.

    `கிடையாது,’ என்று நாம் உரக்கக் கூறும் ஒவ்வொரு நற்குணமும் நம்மிடமிருந்து சிறுகச் சிறுக விலகிவிடுகிறது. ஏனெனில், நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் மூளையில் பதிந்துவிடுகிறது.

    எனக்கு என்னைப் பிடிக்கும்!

    தம் திறமைகளில் கொண்ட நம்பிக்கையுடன் புதிய காரியங்களில் ஈடுபடுகிறவர்கள், `எனக்கு என்னைப் பிடிக்கும்,’ என்ற திருப்தி உடையவர்கள். அதனாலேயே அமைதிகொண்டவர்கள்.

    ஒருவர் தனக்கேநம்பிக்கை அளித்துக்கொள்ளும் வழி இது.

    (நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதைப் பிறரிடம் எதற்காகப் பகிர்வது? `தற்பெருமை!’ என்று, பொறாமையுடன் பழிப்பார்கள்).

    `என்னால் முடியும். செய்துகாட்டுவேன்!” என்று விடாமுயற்சியுடன் செய்கிறவர்கள் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவார்கள். தவறோ, தோல்வியோ கிடைத்தாலும் தளர்ச்சி ஏற்படாது.

    வெற்றி அடைபவர்கள் தனித்துச் செயல்பட்டாலும், உதவி வேண்டும் என்று தோன்றும்போது, துணிந்து கேட்பார்கள்.

    தம் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த இயலுவதால், இவர்களுக்குப் பிறரைக் கண்டு பொறாமை எழுவதில்லை.

    பொதுவாக, ஒருவருக்குத் தன்னையே பிடித்துப்போனால், அவரைப்போல் நிறையபேர் இருக்கமாட்டார்கள் என்று கூறலாம். ஆனால், வித்தியாசமாக இருக்கும் பிறரையும் அவரால் ஏற்கவும், மதிக்கவும் முடியும்.

    எதுவும் அளவோடுதான்

    ஒருவருக்குத் தன்னையே பிடித்துப்போவது விரும்பத்தக்கது என்றாலும் அதுவும் ஓரளவோடுதான் இருக்கவேண்டும்.

    தன்னைத்தவிர மற்ற அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் குறைந்தவர்கள் என்று எண்ண ஆரம்பித்தால், யார் அவரை மதிப்பார்கள்!

    அப்படி எண்ணுவதே தன்னம்பிக்கை இல்லாததைத்தான் காட்டுகிறது.

    “தன்னம்பிக்கை குறைந்து வாழ்வது காரை ஓட்டிப் போகும்போது, `ஹாண்ட் ப்ரேக்’கை (HAND BRAKE) கீழே இறக்காது போவதுபோல்,” என்கிறார் ஓர் அனுபவசாலி. பாதை கரடுமுரடாகத்தான் இருக்கும்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 71

    பழகத் தெரிய வேணும் – 71

    நிர்மலா ராகவன்

    தனித்திருந்தால் தவறேதுமில்லை

    “ஏம்மா, யார் எது சொன்னாலும், எல்லாரும், `ஆமா, ஆமான்னு சொல்வா, நீ மட்டும் அப்படிச் சொல்றதில்லையே!” கேட்டது என் மகள். அப்போது அவளுக்குப் பன்னிரண்டு வயது.

    இறைவனின் படைப்பில் எல்லா உயிர்களும் – அது மனிதனோ, பிராணியோ – ஒன்றுபோல் இருப்பதில்லை.

    இது புரியாமலோ, அல்லது ஒத்துக்கொள்ள விரும்பாததாலோ, தன்னுள் அடங்கியிருக்கும் எல்லாரும் ஒரேமாதிரிதான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது ஒவ்வொரு சமூகமும்.

    இவ்வகையான, எழுதப்படாத கட்டுப்பாடு குடும்பத்தில் ஆரம்பித்து, பள்ளிக்கூடத்திலும், அதற்குப் பின்பும் – ஆயுள் முழுவதும் — தொடர்கிறது.

    அநாவசியமான கட்டுப்பாட்டை எதிர்க்கத் துணிபவர்கள் பற்பல ஏச்சுப்பேச்சுக்கும் தண்டனைக்கும் தயாராக இருக்கவேண்டும்.

    ‘இவர்கள் நம்மை மதிக்கவில்லை!’ என்ற ஆத்திரத்துடன், பிறர் அவர்களைத் தனிமைப்படுத்தக்கூடும்.

    இதற்கெல்லாம் பயந்துதான், பெரும்பான்மையோர் பிறரைப் பின்பற்றி நடந்துவிடுகிறார்கள்.

    அதனால் இயற்கையிலேயே தமக்கு அமைந்த கற்பனாசக்தி குன்றிவிடுகிறது என்பதை ஒரு சிலர் உணர்ந்தாலும், எதிர்த்து நடக்கும் துணிவு எல்லாருக்கும் இருப்பதில்லை.

    `பிறரைப்போல் இருக்கவேண்டும்!’ என்று, தம் குழந்தைகளிடம் சிறு வயதிலேயே போதித்துவிடுகிறார்கள் தாய்மார்கள்.

    தாம் அருமையாக வளர்த்த செல்வங்கள் வித்தியாசமாக நடந்து, பிறரது ஏச்சுப்பேச்சுக்கு ஆளாகிவிடுவார்களோ என்ற பயம்தான் காரணமோ?

    கதை

    எங்கள் பள்ளி விழா ஒன்றிற்கு, ஆசிரியை, மிஸஸ்.ஸா (Saw), தன் ஐந்து வயது மகளைத் தன்னுடன் அழைத்து வந்திருந்தாள்.

    சிறுமியை, `புத்திசாலி!’ என்று நான் கணித்தேன்.

    சில மாதங்களுக்குப்பின், ஓய்வு வேளையில் பேசிக்கொண்டிருந்தாள் அந்த ஆசிரியை, `கேட்பவர்கள் கேட்கட்டும்’ என்ற தன் வழக்கப்படி.

    “என் பெண்ணுக்குப் பிறருடன் பழக ரொம்பப் பிடித்திருக்கிறது,” என்று ஆற்றாமையுடன் ஆரம்பித்தாள், மகள் செய்யக்கூடாத ஒன்றைச் செய்வதுபோல்.

    “எப்போதும் அண்டை அயலில் உள்ள தோழிகளுடன் விளையாடப்போகிறாள். என் நாத்தனார்கள்போல் இவளும் extrovert (கலகலப்பு)! இது என்ன கெட்ட வழக்கம்! பிரம்பால் விளாசினேன்!”

    அடுத்த முறை, அப்பெண் பயந்தவளாகக் காணப்பட்டாள். அம்மாவின் நிழல்போல் எங்கும் நடந்தாள். பேசும்போது, வாய் திக்கியது! பரிதாபமாக இருந்தது எனக்கு.

    இயல்பான குணத்தைத் தடைசெய்து, பிறர்போல், பெரியவர்கள் விரும்புவதுபோல், நடக்கும்படி செய்தால் குழப்பம்தான் விளையும்.

    `ஒரு பெண் அழகாக இருந்தால்தான் ஆண்களுக்குப் பிடிக்கும். புத்திசாலியாக இருக்கக்கூடாது – பயந்து விடுவார்கள்,’ என்று மிஸஸ்.ஸாவின் பாட்டி `புத்திமதி’ கூறியிருந்தாளாம்! என்னிடம் விவாதித்தாள், பெண்களுடைய அறிவுத்தாகம் பெருத்த தவறு என்பதுபோல்.

    அதன்படி, மகளுக்கு விதவிதமான ஆடை அணிகள் வாங்கிக்கொடுத்து, `அவள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறாள்!’ என்று முடிவு கட்டினாள்.

    ங் (NG) என்ற ஒரு சீன இளைஞன் என்னிடம் கூறியது நினைவில் எழுந்தது. “உங்களைப்போல் என்னால் எழுத முடியாது. பிறர்போலவே இருக்கவேண்டும் என்ற கண்டிப்பும் கட்டுப்பாடும் எங்களுக்கு அதிகம். அதனால், எங்கள் கற்பனைத் திறன் காணாமல் போய்விடுகிறது!”

    எல்லாரும் அறிவாளிகளாகவோ, பிறர் மெச்சும்படியாகவோ இருக்க முடியாது.

    கதை

    ஆடிசம் (autism) என்ற நரம்பியல் கோளாறு உள்ளவன் ஜான். அவனால் பிறருடன் கலந்து பழக முடியாது. பேச்சும் குழறும்.

    முதல் முறை, நீச்சல் குளத்தில், வாய் நிறைய இருந்த நீரை என்மேல் உமிழ்ந்தான் அந்த எட்டு வயதுப் பையன்.

    பதறிய அன்னை க்ளோரியா, என்னிடம் வெகுவாக மன்னிப்புக் கேட்டாள். “இவனுக்கு மூளை சரியில்லை,” என்றாள் கெஞ்சலாக.

    “தெரியும் பரவாயில்லை,” என்றேன் சுருக்கமாக.

    அவள் சமாதானமாகாது, “ஆன்ட்டிக்கிட்ட ஸாரி சொல்லு!” என்று மகனைக் கண்டித்தாள்.

    அவன் எங்கோ பார்த்துக்கொண்டு, “ஸாரி ஆன்ட்டி,” என்றான்.

    “சரியாச் சொல்லு,” என்று அவன் முகவாயைப் பிடித்து, என் புறம் திருப்பினாள்.

    `நெருப்பு சுடும்!’ என்று தாய் எத்தனை முறை எச்சரித்தாலும், புரியாதாம். வருத்தத்துடன் தெரிவித்தாள்.

    கூடவே, “எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்களைப்போலவே நடித்துக் காட்டுகிறான்!” என்று பெருமையுடன் தெரிவித்தாள் க்ளோரியா.

    அது மட்டுமா! அவடைய நீச்சல் திறமையைப் பார்த்தால், மீன் துள்ளி விளையாடுவதுபோல் இருக்கும்.

    எல்லோராலும் அப்படிச் செய்ய முடியுமா?

    இருந்தாலும், `மகன் மற்றவர்களைப்போல் இல்லையே!’ என்ற வருத்தம் தாய்க்கு.

    அதன்பின், அங்கு அவனைப் பார்க்கும்போதெல்லாம், “குட்மார்னிங், ஜான்!” என்று முகமன் கூறுவேன்.

    பார்வை எங்கோ பதிந்திருக்க, அவனும், “குட்மார்னிங் ஆன்ட்டி நிர்மலா!” என்று குரலில் ஏற்ற இறக்கம் இல்லாது பதில் கூறுவான்.

    பல வருடங்களுக்குப் பின்னர் அவனை ஒரு கடையில் பார்த்தபோது, நான், “குட் ஈவினிங், ஜான்,” என, என்னைத் திரும்பிக்கூட பாராது, “குட் ஈவினிங் ஆன்ட்டி நிர்மலா!” என்று தன்போக்கில் சொல்லியபடி நடந்தான். அப்போது அவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கும். என்னை மறக்கவில்லை. அத்துடன், என் குரலை வைத்தே என்னை அடையாளம் கண்டிருக்கிறான்!

    `இப்படித்தான் இருக்கவேண்டும்!’ என்று இவனைப் போன்றவர்களைக் கண்டித்துக்கொண்டே இருந்தால், இன்னும் குழம்பிவிட மாட்டார்களோ?

    குறைபாடுகள் இருந்தாலும், அவற்றையே பெரிதுபண்ணாது, அவர்களால் இயன்றதைப் பாராட்டக்கூடாதா!

    கட்டுப்படுத்தப்பட்ட பெண்கள்

    `சரியாக உட்கார்!’

    மிகச் சிறிய வயதிலேயே, பல முறை பெண்குழந்தைகள் கேட்கும் திட்டு இது.

    `உட்காரத் தெரியாமல் உட்காரும்’ அந்த வயதில், கிட்டத்தட்ட முழங்கால்வரை நீண்ட உள்ளாடையை எனக்கு அணிவித்திருந்தாள் என் தாய். அதனால், என்னை எவரும் கண்டிக்கவில்லை.

    பதின்ம வயதில், `என்ன இருந்தாலும், உன் அண்ணன் (அல்லது தம்பி) ஆண்பிள்ளை!’ என்று, பெண்ணாகப் பிறந்த `குற்ற’த்திற்காக பெண்களுக்குப் பல சலுகைகள் மறுக்கப்படலாம்.

    ஒரு சில பெண்கள் வாய்திறவாமல் இதை ஏற்றாலும், வேறு சிலருக்கு இத்தகைய பாரபட்சம் ஆத்திரம் மூட்டும்.

    கதை

    என் முன்னாள் மாணவி ஸ்யூ லின் (SIEW LIN) எங்கள் பள்ளிக்கூடத்திலேயே தாற்காலிக ஆசிரியையாகச் சேர்ந்தாள்.

    “நீ நன்றாகப் படிப்பாயே! ஏன் பட்டப்படிப்பு படிக்கவில்லை?” என்று கேட்டேன்.

    அவள் முகம் வாடியது. “என் பெற்றோர் என் அண்ணனைப் படிக்க வைக்கத்தான் பணம் இருக்கிறது என்றுவிட்டார்கள்! `அவன் என்ன உயர்த்தி?’ என்று நான் சண்டைபிடித்தேன். அவன் நன்றாகக்கூடப் படிக்கமாட்டான். அதற்கு என் அம்மா என்ன சொன்னார்கள், தெரியுமா?”

    என் பதிலுக்குக் காத்திராமல், அவளே தொடர்ந்தாள்: “அவன்தான் கடைசி காலத்தில் எங்களை வைத்துக் காப்பாற்றுவான். நீ, எப்படியும், கல்யாணமாகி, இன்னொரு வீட்டுக்குப் போகப்போகிறவள்தானே!”

    எத்தனை பெண்கள் இப்படி ஒடுக்கப்பட்டிருப்பார்கள் என்று என் யோசனை போயிற்று.

    ஸ்யூ லினது மனக்குமுறல் மேலும் வெளிவந்தது. “`அண்ணா உங்களைக் காப்பாற்றுவான் என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்?’ என்றுகூட வாதாடினேன். என் பெற்றோர் மசியவில்லை,” என்றவள், தன் எதிர்காலக் கனவைப் பற்றிப் பேசினாள்.

    “மிஸஸ் ராகவன், எனக்குப் பெண்குழந்தைகள் பிறந்தால், அவர்களை நிறையப் படிக்கவைப்பேன். விரும்பும் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளுங்கள் என்று சுதந்திரமாக நடக்கவிடுவேன்!’ அழுதுவிடுவாள் போலிருந்தது.

    என் தாயும் இதையே பிறரிடம் கூறக் கேட்டிருக்கிறேன் –வேறொரு தலைமுறையில்.

    இக்காலத்திலும், `பெண் என்றால், அதிகப் பொறுப்பு. பிற பெண்களைப்போல் இருந்தால், பலரும் பாராட்டாவிட்டாலும், குறை கூறமாட்டார்கள்!’ என்று தாய்மார்கள் எண்ணுவதால், தம் பெண்குழந்தைகள் அவர்கள் விருப்பப்படி – அது நல்லவிதமாக இருந்தாலும் – விடுவதில்லை.

    அது எப்படி, ஒரு சில பெண்கள் மட்டும் சாதனைகள் புரிவதில் தனித்து நிற்கிறார்கள்?

    பதில்: அவர்களுக்குப் பின்னால் எப்போதும் ஓர் ஆண்துணை இருக்கும்: பால்யப் பருவத்தில் தந்தை, அதன்பின் கணவர், மகன். இன்னும், மருமகன், பேரன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். மொத்தத்தில், ஆண் துணை.

    ஒரு பெண்ணின் திறமைகளைப் பாராட்டி, தகுந்த நேரத்தில் தைரியம் அளித்து, தன்னை நம்பியிருப்பவள் முன்னுக்கு வருவாள், வரவேண்டும், என்பதில் உறுதியாக நிற்பவர்கள் இத்தகைய ஆண்கள்.

    Share