பழகத்தெரிய வேணும் – 83
நிர்மலா ராகவன்
சுதந்திரம் என்பது
ஒரு குழந்தை, புதிய விளையாட்டில் ஈடுபடும்போது, “எனக்கு முடியும்!” என்று, தன் உதவிக்கு வரும் தாயை விலக்கிவிடும், இரண்டு வயதிலேயே.
சுயமாக ஒரு காரியத்தைச் செய்து, அதில் வெற்றிபெற்றுவிட்டோம் என்று மனமகிழ்ந்து சிரிக்கும் குழந்தைக்குப் பிறரது பாராட்டோ, பரிசுப்பொருட்களோ தேவையில்லை. தன் திறமையால் கிடைக்கும் திருப்திதான் பெரிதாகப்படும்.
சுதந்திரத்தை நாடும் மனிதனின் அடிப்படை குணம் இது.
அதே குழந்தை நாய் துரத்தும்போதோ, இன்னொரு குழந்தை மிரட்டும்போதோ, ஓடிவந்து தாயைக் கட்டிக்கொள்ளும். சுதந்திரத்திற்கு எதிர்மாறான பாதுகாப்பை நாடும் இத்தன்மையும் இயற்கைதான்.
வயது ஏற, ஏற, சுதந்திரத்தைச் சிறிது சிறிதாக இழக்க நேரிடுகிறது. அது இயற்கைக்கு விரோதமானதாக இருப்பதால், மகிழ்ச்சியும் குறைந்துகொண்டே வரும்.
பாலர் பள்ளியிலோ, அதன்பின்னரோ, முதன்முறையாக கல்வி கற்கப்போகும் குழந்தைகள் எவராவது சிரித்த முகத்துடன் போவதைப் பார்த்திருக்கிறீர்களா?
சில குழந்தைகள் தமக்கே தெரிந்த விதத்தில் எதிர்ப்பார்கள்.
அன்றைய மதராஸில், என்னை முதல் வகுப்பில் சேர்த்ததும், என் ஓயாத, உரத்த அழுகையைக் கண்டு பயந்த பள்ளி நிர்வாகம், “இனி உங்கள் பெண்ணைப் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்! இவளைப் பார்த்து, மற்ற குழந்தைகளும் அழுகிறார்கள்!” என்றுவிட்டதால் நான் பிழைத்தேன். வீட்டில் சுதந்திரமாக, சுவற்றுடன் பேசிக்கொண்டிருக்க முடிந்தது.
ஆரம்பப்பள்ளியில், ஆசிரியைகள் பெற்றோரின் புரிந்துணர்வுடன் நடத்தமாட்டார்கள். `கட்டொழுங்கு’ என்ற பெயரில் அநாவசியமாக மிரட்டுவார்கள், தண்டிப்பார்கள்.
அவர்களுக்குப் பயந்து, `ஆசிரியை என்ன சொல்வார்கள்?’ என்று யோசித்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்ய முயலும்போது, சுயமாகச் சிந்திப்பது குறைந்துவிடுகிறது. பெரியவர்களானபோதும் இதே பழக்கம் தொடர்கிறது.
உன்னையே அறிந்துகொள்!
நமக்குப் பிடித்தது-பிடிக்காதது, பலம்-பலவீனம், கனவுகள் போன்றவைகளைப் புரிந்து நடந்தால் எப்போதும் எதையோ இழந்ததுபோன்ற உணர்வு எழுவதைத் தடுக்கலாம்.
சுதந்திரமாகச் சிந்திப்பதற்குத் துணிச்சல் வேண்டும். சொந்த நாட்டில் `பொறுக்கமுடியாதவை’ என்று இருப்பவைகளைப் பகிரங்கமாகச் சொன்னாலோ, எழுதினாலோ தண்டிக்கப்பட்டவர் எத்தனை பேர்! நெல்சன் மண்டேலா ஒரு தகுந்த உதாரணம்.
தம் துறையில் சாதித்தவர்கள், சாதிப்பவர்கள், எவரை எடுத்துக்கொண்டாலும், பிறரது பழிச்சொற்களை ஏற்காது, தம் சுதந்திரமான எண்ணங்களையும், போக்கையும் விட்டுக்கொடுக்காது இருந்ததைக் காணலாம்.
`இந்தக் காரியத்தை எப்படித்தான் செய்து முடிக்கப்போகிறோமோ!’ என்ற சலிப்பு அவர்களுக்குக் கிடையாது. ஒரு காரியத்தை ஆரம்பித்துவிட்டு, அதை முடிக்கும் தைரியமின்றி, பாதியில் பிறர் விட்டுப்போனவற்றை எடுத்துச் செய்வார்கள். அதனால் வரக்கூடிய பாதிப்புகளைப் பொருட்படுத்தாது, இறுதிவரை போராடுவார்கள்.
தவறு செய்ய சுதந்திரம்
புதிதாக எதையாவது செய்ய முயலும்போது பிழைகளைத் தவிர்க்கமுடியாது. கண்டனத்திற்கும் கேலிக்கும் அஞ்சினால், புதிய முயற்சிகளில் இறங்குவது ஏது!
பிறர் நம்மைக் கட்டுப்படுத்த விடாது நடப்பதுதான் சுதந்திரம். பிறருக்காகப் பயந்தோ, அல்லது கடமை உணர்ச்சியாலோ தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்கிறவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் பறிபோய்விடுகிறது. அதன் விளைவாக, கற்பனைத்திறன் காணாமல் போய்விடும்.
கதை
மலேசிய ஈப்போ மாநிலத்தில், தவசகாயம் (64 வயது) ஒரு காண்டோமினியத்தின் காவலராகப் பணிபுரிந்துவந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தொற்றுநோய் பரவாதிருக்க நாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
அங்கு வந்திருந்த விருந்தினர் ஒருவரது மகன் அதை மீறி, அந்த வளாகத்திலிருந்து நீச்சல் குளத்தில் இறங்கப்போனபோது, தவசகாயம் தடுத்தார்.
ஆத்திரமடைந்த தந்தை ஒரு மேசையால் அவர் தலையில் கடுமையாகப் பலமுறை தாக்க, கிட்டத்தட்ட கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தவசகாயம். விருந்தினருக்கு `வேண்டுமென்றே கடுமையாகத் தாக்கிய’ குற்றத்திற்காகத் தண்டனை வழங்கப்பட்டது.
எட்டு மாதங்கள் நிலைமை மாறாது இருந்த காவலர் அண்மையில் மரணமடைந்தார்.
மலேசிய மக்கள் கொதித்தெழுந்தனர். அநியாயமாக ஓர் உயிரைப் போக்கியவர் செய்தது கொலைக்குற்றம் என்று கையெழுத்து மனு ஒன்று பரவியது. சட்டம் அதை ஏற்றால், மரண தண்டனை.
`எங்கள் சுதந்திரத்தை ஒருவன் பறிப்பதா!’ என்று எண்ணியதுபோல் நடந்தவர் மற்றவரது சுதந்திரம், கடமை இவற்றையெல்லாம் மதிக்காதது ஏன்?
`என்னை ஏழைத் தொழிலாளி ஒருவன் தடுப்பதா!’ என்று, தன்னை மிக உயர்வாக மதித்ததாலோ?
குழந்தைகளுக்குச் சுதந்திரம்
தம் குழந்தைகளிடம் அன்பு செலுத்தும் முறை அவர்கள் எந்தத் தவறும் செய்யாமல் பாதுகாப்பது என்றுதான் பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அந்த நோக்கத்துடன், அவர்களுடைய ஒவ்வொரு செயலையும் கண்காணிக்கிறார்கள்.
குழந்தைகள் எத்தகைய நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்று தெரிந்திருக்கவேண்டியது அவசியம்தான். ஆனால், `நம் அதிகாரம் பறிபோய்விடுமே!’ என்ற கவலையுடன், எத்தனை வயதானாலும், தம் சொற்படியே அவர்கள் எப்போதும் நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அக்குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்காதா?
தமக்கு மகிழ்ச்சி அளிப்பது எது என்றே சிலருக்குப் புரியாது போய்விடுவது இத்தகைய பெற்றோரால்தான்.
அண்மையில் சீனாவில் நடந்த கதை
ஏழிலிருந்து பதினோரு வயதான ஏழு சிறுவர்கள் இசை நிகழ்ச்சி ஒன்றில் பெரும் வெற்றி பெற்றனர். இசை மட்டுமின்றி, பல்வித வாத்தியங்கள் வாசிப்பதிலும், வண்ணம் பூசுவதிலும் தங்கள் திறமையைக் காட்ட, Panda Boys புகழேணியின் உச்சாணிக்கொம்பிற்கே போய்விட்டனர்.
அவர்களுடைய புகழ் நான்கு நாட்களே நிலைத்தது.
“இந்த வயதில் குழந்தைகள் தம் வயதினருடன் கலந்து பழக வேண்டும், விளையாடவேண்டும், கல்வி பயிலவேண்டும். இதைவிட்டு, முகவரும் (agent), பெற்றோரும் பணம் சம்பாதிக்கும் கருவிகளாக அவர்களை ஆட்டிப்படைக்கலாமா? அவர்கள் செய்வது சிறார்வதை!” என்று, சமூக வலைத்தளத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இவர்களுக்குமுன் பல சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருப்பதையும் எடுத்துக்காட்ட, அவர்களைப்பற்றிய எல்லா விவரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.
நிறைவேறாமல்போன தமது கனவுகளைப் பிள்ளைகள்மூலம் சாதிக்க எண்ணியவர்களுக்குத் தகுந்த பாடம் இது.
எது சுதந்திரம்?
`என் பெற்றோர் சுதந்திரம் என்பது என்னவென்றே அறியாது வாழ்ந்துவிட்டார்கள். நான் அப்படி இருக்கப்போவதில்லை!’ என்று, இளம்வயதினர் பலர் மனம்போனபடி நடப்பார்கள். தம்மைப்போல் இல்லாதவர்களைக் கேலி செய்து, அவர்களையும் மாற்ற முயல்வார்கள்.
தீய பழக்கங்களில் ஈடுபடுவதும், சட்டத்தில் பிடிபடுவதும் சுதந்திரமில்லை.
தனக்கோ, பிறருக்கோ எந்தவிதத் தீங்கும் இழைக்காது, தன் திறமைகளை மேலும் வெளிக்கொணர நடப்பதுதான் ஒருவர் தனக்குத் தானே செய்துகொள்ளும் உதவி.
வெளிநாட்டில்
சூழ்நிலைக்கு ஏற்றவாறு தமக்குப் பிடித்ததைச் செய்யும் சுதந்திரமோ, அதற்கான துணிச்சலோ, எத்தனைபேருக்கு இருக்கிறது?
வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்குப் போகிறவர்கள் பலர், தம்மைச் சிறுமையாக உணர்வார்கள். நிறையப் பணம் சம்பாதித்தாலும், ஏதோ வெறுமை இருக்கும். பொறாமை, வலுச்சண்டை — இதெல்லாம் வலுத்துவிடுகிறது.
தம் சுதந்திரத்தைப் பிறருக்காக விட்டுக்கொடுத்துவிடுகிறோம் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
அந்நிய நாடு பொருளாதாரத்தில் உயர்ந்ததாக இருக்கலாம். கலாசாரத்தால் வேறுபடலாம். அதனால் அந்நாட்டவர்கள் உயர்ந்தவர்களாகிவிட மாட்டார்கள்.
அவர்கள் நம்மை மட்டம்தட்டிப் பேசினால், அவர்களது கருத்தை ஒத்துக்கொள்வதைப்போல் அசட்டுச்சிரிப்புச் சிரிக்காது, எதிர்க்கவேண்டும்.
அதாவது, `என்னைப் பொறுத்தவரை, நானும், என்னைச் சேர்ந்தவர்களும் உயர்ந்தவர்கள்தாம்!’ என்கின்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், சிறுமை உணர்ச்சியும், மன இறுக்கமும் தாக்காது நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும். ஒரேயடியாக மாற வேண்டிய அவசியமுமில்லை.
அத்தகைய மனஉறுதியைச் சிலர் மறுக்கிறார்களா?
அவர்கள் நண்பர்களே அல்ல.