நிர்மலா ராகவன்

எவரும் தாழ்ந்தவரில்லை

தன்னைவிட ஒரு படி மேலாக இருக்கும் பிறரைக் கண்டால், சிறுமை உணர்ச்சிக்கு ஆளாகாதவர்கள் வெகு சிலரே. அதைத் தணித்துக்கொள்ள, தன்னைவிடச் சிறந்த ஒருவருடன் எப்படியோ இணைந்தால், `நம் மதிப்பும் கூடாதா!’ என்று அவர்கள் எண்ணம் போகும்.

கதை

கல்வி, பொருளாதாரம், அழகு ஆகிய எல்லாவிதங்களிலும் தன்னைவிட உயர்ந்த ஒருத்தியைத் தேடி மணந்தான் சம்பத் — பிறர் பொறாமை அடையவேண்டும் என்ற நப்பாசையுடன்.

அவன் விரும்பியதுபோலவே, அவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. ஆனால், அதை மறைக்க, `ஏமாற்றிக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டான்!’ என்று அவனைக் கேலி செய்வார்கள் என்பதைத்தான் சம்பத் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

அந்த ஏமாற்றம் மனைவிமேல் கோபமாக மாறியது. அவளையும், அவள் குடும்பத்தினரையும் மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தான்.

தம்பதியர் இருவருக்குமே நிம்மதி பறிபோயிற்று.

குடும்பத்தில் உயர்வு தாழ்வு

ஒரு குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளும் ஒரே தன்மை உடையவர்களாக இருப்பார்களா?

இது புரியாது, பல பெற்றோர் பழிப்பார்கள்: `உன் தங்கையை, தம்பியைப் பார்! எவ்வளவு சுறுசுறுப்பாக, எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்! நீயும் இருக்கிறாயே!’

மூத்த குழந்தையின் பொறுமையை `அசமஞ்சம்!’ என்று, எடுத்துக்கொள்வார்கள். எதையும் பிழையின்றி பொறுப்பாகச் செய்யும் குணம், `இவன் எல்லாவற்றிலும் அதிநிதானம்!’ என்ற கேலிக்குரியதாக ஆகிவிடுகிறது.

சிறு வயதில், பெற்றோரும் பிறரும் தன்னைப்பற்றி என்ன அபிப்ராயம் கொண்டு நடத்துகிறார்களோ, அதை அப்படியே குழந்தைகள் நம்பிவிடுவார்களே!

அதனால், `நான் என் பிறரைப்போல் புத்திசாலி இல்லை!’ என்று சிந்தனைபோக, தாழ்மை உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது.

உடல் ரீதியாகவோ, அறிவாலோ, தம்மைத் தாழ்ந்தவர்களாக உணர்கிறவர்கள் பிறருடன் பழகத் தயங்கி, ஒதுங்குவதும் உண்டு.

கதை

என் மாணவன் ஒருவன் வெள்ளைக்காரச் சாயலாக இருப்பான். அவனோ மலாய் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

ஆங்கிலேயர்களின் வசம் அன்றைய மலாய் நாடு இருந்தபோது, அவன் வம்சத்தில் யாரோ ஒரு பெண் வெள்ளைக்காரருடன் தகாத உறவு பூண்டிருக்கவேண்டும். (அவர்கள் உள்நாட்டவர்களை மணந்ததில்லை).

பல தலைமுறைகளுக்குப்பின், இவனிடம் அந்த ஜீன்ஸ் தன் வேலையைக் காட்டிவிட்டதுதான் பரிதாபம். அவன் வயதொத்த மாணவர்கள் அவனை ஏற்கவில்லை. ஏதோ கேலிப்பொருளைப்போல் அவனை நடத்தினார்கள். அவர்களை எதிர்க்கும் தைரியமின்றி, பிறரிடமிருந்து ஒதுங்கியே இருந்தான். மூளையும் மந்தமாகிவிட்டதுபோல் இருந்தது.

என் வயதொத்த சுபீராவின் கதையும் கிட்டத்தட்ட அவனுடையதுபோல்தான்.

ஒரு வித்தியாசம்: அவளுடைய தந்தை ஜப்பான்காரர். (ஆங்கிலேயர்களுக்குப்பின், ஜப்பானியர் சில காலம் மலாயாவை ஆண்டார்கள்).

சுபீராவின் தந்தை பெயர் Putih (மலாயில், வெள்ளை) என்று அடையாளக்கார்டில் குறிப்பிட்டிருந்ததால், யாரும் எதையும் சந்தேகிக்கவில்லை. அவளே சொல்லித்தான் எனக்கு மட்டும் தெரியும்.

நான் சற்று வியப்புடன், ஒரு சரித்திர ஆசிரியையைக் கேட்டேன்: “ஜப்பானியர் மலாய்ப்பெண்களை மணந்தார்களா?”

“இல்லை. அப்பெண்களை வைத்திருந்தார்கள்!”

எனக்கு ஏதோ புரிந்ததுபோலிருந்தது.

எங்கள் பள்ளிக்கு வந்த புதிதில், அவள் எல்லாருக்கும் ஏதாவது தின்பண்டங்கள் வாங்கி வருவாள்.

(ஏதோ உள்ளர்த்தத்துடன்தான் இதைச் செய்கிறாள் என்று எனக்குத் தோன்ற, நான் வாங்க மறுத்துவிடுவேன்).

விரைவிலேயே, எல்லாரும் அவளை ஒரேயடியாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். அவளுடைய அதிகாரம் வலுத்தது. அவள் சொல்வதை யாரேனும் ஏற்காவிட்டால், சண்டை பிடித்து, அவர்களிடம் பேசவேமாட்டாள்.

வட்டார ரீதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு நாங்கள் இருவரும் எங்கள் பள்ளியின் சார்பில் அனுப்பப்பட்டிருந்தோம். அங்கு அவள் ஒரு வார்த்தைகூடப் பேசாது இருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

தான் ஏதாவது சொல்லப்போய், பிறர் மாற்றுக்கருத்து கூறினால், சண்டை போடத் தோன்றுமே என்று தன்னையே அடக்கிக்கொண்டிருப்பாள். ஒரு வேளை, தாழ்மை உணர்ச்சியாலோ, என்னவோ!

சமூகத்தால் அவர்களை ஏற்க முடிகிறதோ, இல்லையோ, முறையாகப் பிறக்காத குழந்தைகளால் தங்களைத் தாமே  ஏற்க முடிவதில்லை.

கதை

`பல குழந்தைகளைப் பெற்ற ஒருவரின் ஆசைநாயகியாகச் சில காலம் இருந்தவள் பெற்ற பிள்ளை நான்!’ என்ற உணர்வு கிட்டுவைத் தகித்தது.

அவன் பிறக்குமுன்பே தந்தை இறந்துவிட்டபின், அவருடைய மனைவி அன்புடன் அவனையும் அவன் தாயையும் ஏற்றாள். ஆனால், `இவர்தான் என் தந்தை!’ என்று அவன் பெருமையுடன் எங்கும் சொல்லிக்கொள்ள முடியவில்லை.

தன்னையும் அவர்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக ஏற்றவர்களைப் பழிக்கு ஆளாகச் செய்யவேண்டும் என்ற வன்மமாக மாறியது கிட்டுவின் ஆத்திரம்.

இவனைத் `தம்பி’ என்று அருமையாக ஏற்றவனுடைய மனைவியை மயக்கி, தன்னுடன் இணைந்து வாழும்படி செய்தான். அப்படியும், அவனைப் பெருந்தன்மையுடன் நடத்தினார்கள். ஆனால், சமூகத்தில் அவனுடைய மதிப்பு அறவே போயிற்று.

உயர்வும் தாழ்வும்

நாம் எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் பிறரைவிடச் சற்றுத் தாழ்ந்த நிலையில்தான் இருப்போம்.

தன் அறிவுகூர்மையை எண்ணிப் பெருமைப்படுகிறவன்  ஒரு சிறு பிழை புரிந்துவிட்டாலும், ஏதோ செய்யக்கூடாததைச் செய்துவிட்டாற்போல் குறுகிவிடுவான்.

ஒரு போட்டியில் வெற்றி பெற்றவர்கள், `நான் எல்லாரையும்விட மேலானவன், திறமைசாலி!’ என்ற மிதப்புடன், தலையை நிமிர்த்தி நடப்பதைக் கண்டிருப்பீர்கள்.

`இப்படிப்பட்டவர்களுக்குத் தோல்வி என்பதே கிடையாதா!’ என்று பிறர் அதிசயிக்க வேண்டுமாம்!

ஒரு சிறு தோல்வி வந்தாலும், இவர்கள் துடித்துப்போய்விடுவார்கள். வெற்றி, தோல்வி நிரந்தரமல்ல என்பதை உணராதவர்கள் இவர்கள்.

பிறருடன் எப்போதும் ஒப்பிட்டுக்கொள்ளும் குணம் நிலைத்துவிடுவதால், தன்னைவிட அழகானவர், திறமையானவர், பணக்காரர் என்று தோன்றினால், அவர்களைக் கண்டு வயிற்றெரிச்சல் எழுகிறது பெரும்பாலோருக்கு.

தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவரைப் பார்த்தோ, கருணை எழுவதில்லை. அவர்களைக் கேலி செய்யத் தோன்றுகிறது. அப்போதுதானே, தான் மேலானவன் என்று காட்டிக்கொள்ளலாம்! அவர்களிடம் தன் திறமைகளை, தான் சாதித்ததைப் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள்.

கதை

பள்ளி இறுதிப் பரீட்சையில் தான் தமிழ்ப்பாடத்தில் எவ்வளவு சிறப்பான தேர்ச்சி பெற்றோம் என்று, ஆங்கிலத்தில், நீண்ட உரை நடத்தினாள் ஒரு மாது – அவளைப் பார்த்து நானும் பிரமிக்க வேண்டும் என்று எண்ணியவள்போல்.

ஒருவழியாக ஓய்ந்ததும், “உங்களுக்குத் தமிழில் எழுதத் தெரியுமா?” என்று சவால் விடுவதுபோல் என்னிடம் கேட்டாள்.

வலுவில் வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன், “நான் ஒரு தமிழ் எழுத்தாளர்,” என்று பதிலளித்தேன். அவள் அடைந்த அதிர்ச்சியைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

தாம் பின்பற்றும் மதம்தான் உயர்வானது என்று பலர் கருதி, அதைப் பற்றியே பேசி, மறைமுகமாகப் பிறரை மட்டம் தட்டுவார்கள். தம்மைப் பற்றிய சந்தேகம் அவர்களுக்கே எழுந்ததாலோ?

பணவசதி குறைந்தவர்கள் பணக்காரர்களைப் பார்த்துப் பொருமுவார்கள் என்றால், பணக்காரர்களாக இருப்பவர்கள் குடும்ப வாழ்விலோ, ஆரோக்கியத்திலோ நிறைவு இன்றி, தம்மைப்போல் இல்லாத பிறரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள்.

முன்காலத்தில், சில அரசர்கள் தங்கத்தால் ஆன சிம்மாசனம் செய்துகொண்டார்கள். (மைசூரில் இன்றும் காணலாம்).

கழிப்பறையில் உபயோகப்படுத்தும் சாதனத்தைத் தங்கத்தால் செய்துகொண்டார்கள் வேறு சிலர். அதில் ரத்தினக்கற்கள் பதித்துக்கொண்டவர்களும் உண்டு!

வருவாயை எப்படிப் பிறருக்கு உபயோகமான வகைகளில் செலவிடலாம் என்ற அக்கறை இல்லாததாலா?

இல்லை, தம் குடிமக்களைவிடத் தாம் உயர்வானவர்கள் என்று காட்டிக்கொள்ளவோ?

சில வம்சங்களின் அழிவுக்கு இத்தகையவர்கள்தாம் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

`நான் மேலானவன் (அல்லது தாழ்ந்தவன்)’ என்ற எண்ணப்போக்கு இல்லாது, இருக்கிறபடியே தம்மை ஏற்பவர்களிடம்தான் நிம்மதி நிலைத்திருக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.