பவள சங்கரி
தலையங்கம்

அனைத்துலகும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒபாமா மற்றும் மிட் ராம்னி என் இரு பெரும் தலைவர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய ஜனநாயக விழா, பல ஆயிரம் கோடி (5500 டாலர்) செலவில் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் எதுவாக இருப்பினும் நிலையான முடிவுகள் என்று சில உண்டு. இந்தியாவுடனான தொடர்புகள் தொடரப்போவதில் சந்தேகம் இல்லை. சீனாவுடனான வணிகத் தொடர்புகள் கட்டுப்பாட்டுக்குள் வரலாம். பாகிஸ்தானுக்கான உதவிகள் தொடர்ந்தாலும் அவைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். தகவல் தொழில்நுட்பத் துறையில் வெளிநாட்டவருக்கான வேலை வாய்ப்பு, போன்றவைகள் யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்வதற்கான சாத்தியங்கள் அதிகம். வெற்றிகரமான தொழில் அதிபரா அல்லது மக்களின் மனதில் குடிகொண்டிருக்கும் அதிபரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்னும் 48 மணி நேரத்தில் ஓரளவிற்குத் தெரிந்துவிடும். பணக்காரத் தத்துவம் நிறைந்த , சிறந்த தொழிலதிபரான மிட் ராம்னி தேர்ந்தெடுக்கப்பட்டால் செல்வந்தரின் நலனுக்காக மட்டுமே முடிவெடுத்து, செயல்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தொழிலகங்களிலும் கொத்துக் கொத்தாக மக்கள் வேலை இழக்கக்கூடிய அபாயம் மேலும் அதிகரிக்கலாம். அமெரிக்க முதலாளித்துவ தத்துவங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் பெரும்பாலும் பெரும் செல்வந்தர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பதாகவே அமையும். அதிபர் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டால் ஏழை மக்களின் நலவாழ்வு பாதுகாக்கப்படும் வாய்ப்பு அதிகம். புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் தொடர்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். ஏழை மக்களின் கண்ணீர் துடைப்புகளுக்கான நம்பிக்கை அதிகரிக்கலாம். ஏழை மக்களின் கண்ணீரா அல்லது செல்வந்தரின் பாதுகாக்கப்படும் செல்வமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். வாழ்க அமெரிக்க ஜனநாயகம்!
படத்திற்கு நன்றி :
http://www.bbc.co.uk/news/world-us-canada-20180630

Leave a Reply