Month: November 2013

  • பட்டியும் விக்ரமாதித்தனும் ஜெயமோகனும்!

    வில்லவன் கோதை

    ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?

    (நவம்பர் 4 – 2013 தி இந்து நாளிதழில்ஜெயமோகன் எழுப்பிய வினாவின் எதிரொலி)

    இந்த ஜெயமோகனின் அபத்தமான ஆலோசனைகளை தமிழ் இந்து பத்திரிக்கை  பிரசுரித்து  தன்னிடம் திறன் மிக்க ஆசிரியர் குழுவொன்று   தற்போதைக்கு இல்லை என்ற தகவலை பறையடித்து சொல்லியிருக்கவேண்டாம்.

    அவர் எழுப்பிய ஆலோசனை விவாதத்துக்குறிய விஷயமே  அல்ல.  அடிப்படையிலேயே  உதறத்தகுந்தவை.

    எப்போதுமே படைப்பாளிகளைக் காட்டிலும் பதிப்பாளர்கள் அடிப்படையில் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அவர்களைத்தாண்டி எந்த அபத்தங்களும் இப்படி அச்சுக்கு வந்ததில்லை.

    முன்பெல்லாம் பத்திரிக்கை ஆசிரியர்களும் பதிப்பாளர்களும் பிரசுரிக்கப்பெறும் விஷயங்களில் எப்போதும் தரத்தில் சமரசம் செய்து கொண்டதில்லை. ஒன்றிரெண்டு களவாடப்பட்ட படைப்புகள் கூட அன்றைக்கெல்லாம் அத்தனை எளிதாக அச்சுக்கு வந்துவிட முடியாது.

    இன்று நி​லைமை அப்படியில்லை.

    பத்துப் பதினைந்து நூல்கள் எழுதி பதிப்பித்தவர்கள் அனுப்புகிற சரக்குகளை பிரித்துப் பார்க்க   அலுப்புற்று நேராக அச்சுக்கு அனுப்புகிற பத்திரிக்கைகளும்  இருக்கிறது. ஒரு சில நூல்கள் எழுதியதாலேயே அவர்கள் அந்த தகுதியை பெற்றுவிடுகிறார்கள்.

    பிரபலமான எழுத்தாளரின் லாண்டரி கடை கணக்குகள்கூட  அச்சுக்குப்போன கதையை சுஜாதா சொல்லி கேட்டிருக்கலாம்.

    இந்த யோசனைகளை உதிர்த்த ஜெயமோகன்  –

    நிரம்ப உழைப்பவராகவும்  எதையாவது மிகுதியாக வாசிப்பவராகவும் எத்தகைய கருத்துக்களுக்கும் உடனடியாக பதிலளிப்பவராகவும் நட்புக்கினியவராகவும்  நான்  அறிந்திருக்கிறேன்.

    வளைந்து நெளிந்து செல்லும் அருவியைப்போன்ற வேறுபட்ட நடையில் எம் தமிழை கையாளுவதை கண்டிருக்கிறேன்.

    இன்றைக்கு  எழுதுகிற அத்தனை நவீன எழுத்தாளர்களின் ஆரம்பப் பாடசாலையாயிருந்த திராவிட இயக்கங்களை அவர்களைப்போலவே சபிப்பவராகவும்

    சவமேடைகளில்கூட சம்மந்தப்பட்டவரிடம் காணநேர்ந்த குற்றங்குறைகளை கருத்துத் தளங்களில் நின்று துணிவோடு பேசுபவராகவும்  பார்த்திருக்கிறேன்.

    அண்டைமாநிலத்தின் ஓரத்தில் அவர் வாழுகின்ற வாழ்க்கை அவருக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். இந்த இரட்டை குடியுரிமை அவர் பேச்சிலும் எழுத்திலும் ஊடுருவிக் கிடப்பது எனக்குத் தெரிகிறது..

    இவருடைய  எழுத்தின் வீச்சுக்கு  நான் நேசிக்கிற தந்தை பெரியாரோ பேரறிஞர் அண்ணாவோ  இன்னும் தேசபிதா காந்தியோ விலக்கில்லை என்பதையும் அறிந்திருக்கிறேன்.

    ஆனால் –

    மேற்கிளையில் அமர்ந்து அடிக்கிளையைக்கூட அவரால் வெட்ட முடியும் என்பதை  இப்போதுதான் பார்க்கிறேன்.

    இப்படியொரு அபத்தமான ஆலோசனைகள் பாரம்பரியமிக்க இந்துவின் பார்வையில் எப்படி நழுவிற்று.

    நினைத்தாலே நன்றாக சிரிக்கலாம் என்று கூடத் தோன்றுகிறது.

    ஒருவர் ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழ் புத்தகங்களின் படைப்பாளி.

    இன்னொன்று இன்றைய தமிழ் வாசகர்களின் பரவலான எதிர்பார்ப்பைப் பெற்ற பாரம்பரியம்மிக்க தி இந்து  நிறுவனம்.

    இருவருக்குமே ஒருவகையில் செலவுக்கு கைகொடுக்கும் சமாச்சாரம். சோறுபோடும் மொழி என்று சொல்லமாட்டேன்.

    இப்படியொரு கூற்றைக்கூட  விவாதிக்கவேண்டிய கருத்தென்பது எத்தனை அபத்தம்.

    மொழி உயிரென்றால் எழுத்துரு உடலல்லவா. எழுத்துரு இருந்தால்தானே இலக்கியமும் இலக்கணமும்  வரும். இலக்கணமும் இலக்கியமும் இருந்தால்தானே மொழி தொடர்ந்து  வாழும்.

    துருக்கி மொழியும் மலயா மொழியும்  முறையான எழுத்துக்கள் அற்றபோது  கூடுவிட்டு கூடு பாய வேண்டிய கட்டாயத்துக்குள்ளாயிற்று.   துருக்கி மொழியும் மலாய் மொழியும்  எடுத்த நிலைப்பாடு தமிழுக்கு தேவையற்து. உறுப்புக்கள் இல்லாதவனுக்கும்  உறுப்புக்களை இழந்தவனுக்கும் தாமே மாற்று உறுப்புக்கள் பொருத்தப்படுகிறது.

    ஆங்கிலத்தில் இப்போது இருக்கிற எழுத்துருக்கள் ஆங்கிலத்துக்கே சொந்தமற்றபோது அதற்கு மாறச்சொல்வது எத்தனை பேதமைதானே.

    எம்மொழியும் தோன்றாத காலத்தே இலக்கிய இலக்கணங்களோடு வாழ்ந்து ஒவ்வொரு கால கட்டங்களிலும்  தன்னைத் தானே செதுக்கிக்கொண்டு இன்றும் சீரிளமையோடு நிற்கின்ற செம்மொழியல்லவா எம் தமிழ்.

    எம் தமிழோடு கலக்கும் தைரியம் இன்றுவரை வேறெந்த மொழிக்கும் ஏற்பட்டதில்லை.`

    2000 ஆண்டுகளுக்கு மேலாக ஏறக்குறைய சீரான எழுத்துருக்களுடன் எம்மொழியின் கலப்பின்றி  தனித்து நிற்கும் எம்மொழியா கூடுவிட்டு கூடு பாயவேண்டும்?

    ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்து வெளியில் காணப்பட்ட கல்வெட்டுக்கள் சொன்னதென்ன.,

    அசோகர் காலத்தில் கண்டெடுக்கப்பெற்ற  பிராமி கல்வெட்டுகள்

    அதைத்  தொடர்ந்த பௌத்தர்களின்   தாக்கம்  அத்தனையும் கடந்துதானே எம்தமிழ் வந்திருக்கிறது.

    பிராமி முறையில் காணப்பட்ட எழுத்துருக்கள் தமிழ் ஒலிகளை ஏற்க இயலாமற் போனபோது பிறந்ததுதானே தமிழ் பிராமி.

    அடுத்து

    கல்வெட்டுப்பதிவுகளைத்தாண்டி ஓலைகளில் எழுதப் பட்டபோது தமிழ் வட்டெழுத்து முறைக்கு மாறுகிறது.

    ஏறக்குறைய பதினோராம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து முறை முற்றிலுமாக ஒதுக்கப்பெற்று பல்லவர்களால் மேலும் சீரமைக்கப் பெறுகிறது. பல்லவர் காலத்திலேயே இன்றைய தமிழின் நெருங்கிய தோற்றத்தை எம்மொழி பெற்றுவிட்டது எம்மொழிக்கும் கிட்டாத பேரங்கீகாரம் அல்லவா?

    பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கிறித்துவமத பிரச்சாரத்துக்கு வந்த பெஸ்கி என்ற வீரமாமுனிவர்  அன்னை தமிழுக்கு பொட்டிட்டு (எழுத்துருவுக்கு புள்ளி சேர்த்து  இலக்கணங்கள் தந்து) அணிகலன் படைத்து அணி சேர்க்கிறார்.

    உலகிலேயே எம்மொழிக்குமில்லாத வரலாறு கொண்ட, எம்மொழியிலும் காணக்கிடைக்காத இலக்கணங்களும் இலக்கியங்களும் நிறைந்த தாய்த் தமிழை கற்பதற்கா எம்மக்கள் அல்லலுறுகிறார்கள்?

    இன்றைய குழந்தைகளுக்கு இவை ஒரு பொருட்டே அல்ல. அவர்களின்  விரிந்த  பார்வைக்கு விருந்தளிக்க நவீன யுகத்தின் கதவுகள் திறந்தே கிடக்கின்றன. அதனால் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அறிந்து கொள்கிற திறனும் கையாளுகிற நேர்த்தியும் மிகுதியாக நம் குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள்.

    அவர் சொல்லுவது போல இரண்டு எழுத்துருக்களைக் கற்க அவர்களுக்கு தேவையான இரண்டு மூன்று வருடங்கள்  அவர்கள் கல்வி வாழ்க்கையில் மிக மிகக் குறைவானவையே. நெடுங்காலம் மும்மொழியை கற்ற அனுபவமும் எம் குழந்தைகளுக்குண்டு. இன்றும் வேற்றுமாநிலங்கள் பலவற்றில் மூன்று மொழிக்கு குறைவின்றிதானே கல்வி கற்பிக்கப்படுகிறது.

    மிருகங்களையும் பறவைகளையும் வித்தை என்ற இலக்குக்காக பழக்கியபின்  அவைகள் நிகழ்த்தும் சாகசங்கள் வியக்கத்தக்கவை. பிள்ளைப்பிராயத்தில் பயிற்றுவைத்தால்  குழந்தைகளும்  அப்படித்தான்.

    கற்பதில் சிரமமும் கையாளுவதில் சங்கடங்களும் ஏற்படும்போது மொழியை மேலும் மேலும் சீரமைப்பது காலத்தின் கட்டாயம். அதைத்தான் இதுவரை கண்டிருக்கிறோம். காலப்போக்கில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் அது தவிர்க்க முடியாதவைதான். ஆனால் இலக்கு ஒன்றாகத்தான் இருக்கும்.

    அப்படி வளர்ந்து வளர்ந்துதான் தமிழ்மொழி இப்போது கணினிக்குள்ளே நுழைந்திருக்கிறது.

    பதிமூன்றாண்டுகாலம் ஆங்கிலத்திலேயே தமிழை தான் தட்டச்சு செய்த சாகசத்தை சொல்லும் ஜெயமோகன் ஒன்றை கவனிக்க வேண்டும். அது கணினிக்குள் தமிழ் கால் வைத்த காலம்.

    தட்டச்சே அறியாத நான் இன்று அவர் பேசும் வேகத்தில் தமிழிலேயே தட்டச்சு செய்கிறேன். இதைக்கற்க எனக்கு ஒருநாள்கூட தேவைப்பட்டிருக்கவில்லை.

    ஒருவேளை ஜெயமோகன் கூற்று நிகழ்ந்து விட்டால் குழந்தைகள் அவர் சொல்வதுபோல் வேகமாக வாசிக்கக்கூடும். ஆனால் அவருடைய படைப்புகளையோ  எம் கவிஞர்கள்  உணர்வுகளையோ அவை பிரதிபலிக்கக்கூடும் என்று தோன்றவில்லை. இப்போதே இயல்பாக மொழிமாற்றம் செய்யப்பெற்ற எத்தனையோ இனிய தமிழ் நூல்கள் உயிரின்றி உடலோடு உலாவுவது வெளிப்படை.

    என்னதான் z h போட்டு எழுதினாலும் ழகரத்தை உச்சரித்தறியாதோர் பட்டியலில் நம் இனமும் சேரும்.

    பெரியாரை வெறுப்பவர்கள்கூட மொழிக்கெதிராக முணுமுணுக்கும்போது அவரை சேர்க்கத் தவறுவதில்லை.

    அவர் வாழ்ந்த காலத்தில் அவர் வாழ்வில் முன்னுரிமை கொடுத்தது உயர்வு தாழ்வற்ற சமதர்ம சமுதாயம் படைப்பதற்கே. அவருக்கு மொழி அடுத்தபட்சமாகவே இருந்திருக்கிறது.

    தமிழில் காணப்படுகிற எழுத்துகளின் எண்ணிக்கைய குறைத்து  எம்குழந்தைகளின் சிரமத்தை குறைக்க வேண்டுமென பெரியார் பேசியது உண்மைதான்.

    அதை வலியுறுத்தவே  மொழியின் உடலையே மாற்றிய துருக்கி கமால் பாட்சாவை அவர்தான் நினைவூட்டினார்.

    எழுத்துருவை இழக்கும்போது தமிழின் கதி  –

    எண்ணிப் பார்க்கவே  ஏதோ விபரீதம் புலப்படுகிறது.

    கூடுவிட்டு கூடு பாய்ந்த பட்டி விக்ரமாதித்தன்  கதைகளை படித்தவர்கள் ஜெயமோகனின்  கூடுவிட்டு கூடு பாயும் யோசனைகளில் இருக்கும் விபரீதத்தை  உணரக்கூடும்.

    இந்த ஆலோசனைகள்  அவர்  குறிப்பிட்டதைப்போல அபத்தமாகவும் அதீதமாகவும்தான்  இருக்கிறது. மேலும் யோசிக்க யோசிக்க  அது  நிரூபணமும் ஆகக்கூடும்.

    எல்லா மாற்றங்களும் முதலில் அபத்தமாகத்தான் தோன்றும் என்பதில் நம்பிக்கை கொண்ட ஜெயமோகன் தமிழும் ஆங்கிலத்தை மீறி சகல துறைகளிலும் ஒளிரும் என்பதை  ஏன் ஏற்கக்கூடாது.

    கிளியின் உடலில் கூடு பாய்ந்த விக்ரமாதித்தன்  கிளியாக வாழலாமே தவிர விக்ரமாதித்தனாக முடியாது!

    Share
  • ஓடாதே…

    ரிஷி ரவீந்திரன்

    ”ஓடாதே…”

    அம்மா பயத்துடன் கத்திக்கொண்டிருந்தார்.

    10 வயது துருதுருப்புடன் எப்பொழுதும் நான் ஓடி விளையாடுவதைப் பார்த்து எங்கள் வீட்டில் அனைவருமே “ஓடாதே” என எச்சரிப்பர். இதிலென்ன அதிசயம்…? இது எல்லார் வீட்டிலும் சகஜம்தானே…?

    அடடா… நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்லவேயில்லையே..! நான்…?

    என் பெயர் சீனிவாசன். என்னை சீனு என்றே செல்லமாக அழைப்பர். நான் என் அண்ணனின் தம்பியா அல்லது மகனா என்று தெரியவில்லை.

    என்ன தலை சுழல்கின்றதா….?

    வெங்கடேஷ் அண்ணாவின் உடலிலிருந்து செல்லினை எடுத்து க்ளோனிங்க் முறையில் உருவாக்கப்பட்ட இந்த உலகின் முதல் க்ளோனிங் குழந்தை.

    உலகமே என்னை உருவாக்கத் தடைசெய்தது… கடவுளுக்கும் இயற்கைக்கும் செய்யும் கொடுமை என எச்சரித்தனர்.

    யார் சொன்னது க்ளோனிங் குழந்தை என்றால் அலட்சியம் செய்து வளர்ப்பார்கள் என்று…? எங்கள் வீட்டிற்கு வந்து பாருங்கள்… என் மீது பொழியும் அன்பு மழைக்கு நான் என்ன தவம் செய்தேனோ…? குறிப்பாக வெங்கடேஷ் அண்ணா என் மீது காட்டும் பரிவும் அன்பும் அபரிமிதமானது. ஒருவேளை அவரது உடலிலிருந்து செல்லெடுத்து நகலெடுக்கப்பட்டதால் என் மீது அபரிமிதமான பாசமோ…? அனைவரும் என்னை ஓடாதே என்று அன்பால் எப்பொழுதும் எச்சரித்துக் கொண்டிருப்பர்.

    ஒரு நாள் ஓடி விளையாடி விட்டு வீட்டிற்கு வந்தேன். அப்பொழுது நான் ஜன்னலில் ஏறி ஹேய் என்று கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி பயப்பட வைக்கவேண்டும் என எண்ணி ஜன்னலருகே சென்றேன். அம்மாவும் வெங்கடேஷ் அண்ணாவும் பேசிக்கொண்டிருந்தனர். பேச்சில் என் பெயர் அடிபடவே நான் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தேன்.

    “டேய் வெங்கடேஷ்…. கொஞ்சம் பொறுடா… அவனுக்கு இப்பத்தான் 10 வயசு ஆகுது…. அவனோட உடம்பு நல்லா வளரட்டும்… அப்பொழுது தான் அவனோட உடல் உறுப்புக்கள் நல்ல ஆரோக்யமாக இருக்கும்… இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள அவனோட இதயத்தை எடுத்து உனக்கு ட்ரான்ஸ்பிளாண்ட் பண்ணிடலாம்… மீதி உறுப்புக்களை நல்ல விலைக்கு வித்துடலாம்…”

    Share
  • சுதந்திரம்!…

    நடராஜன் கல்பட்டு 

     

    அப்பா இப்பொ கல்யாணத்துக்கு என்னப்பா அவசரம்இப்பொதான் எனக்கு பதினாறு வயசாகுது. நான் காலேஜுக்குப் போயி படிச்சு பட்டம் வாங்கணும்பாசங்கீதத்துலெ இன்னும் நெறய கத்துக்க வேண்டியது இருக்குப்பாபல மேடேலெ ஏறிக் கச்சேரி பண்ணணும்பத்து பேரு சொல்லணும், “மீனாட்சி கச்சேரியாமிஸ் பண்ணக் கூடாதுப்பா ன்னுசித்திரம் நெறெய வரையணும்சிறுகதையும் எழுதணும்பா.”

    அவ்வொளோ தானா இன்னும் எதுனா பாக்கி இருக்குதா?”

    தோணுற போது அப்பொப்போ சொல்லறேம்ப்பா.”  சிரித்துக் கொண்டே ஒடுகிறாள் மினாட்சி.

    சுந்தரத்தின் மனம் ஐந்தாண்டுகள் பின்னே செல்கிறதுமனைவி மரணப் படுக்கையில்அவன் கையைப் பிடித்துக் கொண்டு சன்னக் குரலில் கெஞ்சுகிறாள், “நாளெக் கடத்தாமெ என் அண்ணன் மவன் மதியழகன் கையிலெ நம்ம பொண்ணெப் புடிச்சுக் கொடுத்துடுங்கஅதான் அவளுக்கு வாள்க்கெ பூரா காவலா இருக்கும்.”  கண்களைத் துடைத்தபடி, “சரி சரி என்கிறார் அவர்அவளும் கண்களை மூடினாள் நிரந்தரமாய்.

    கொடுத்த வாக்கெக் காப்பாத்த வாணாம் சுந்தரம்அதனால தான் மீனாட்ச்சிவாணாம்பான்னு சொன்னாலும் கேக்காமெ கல்யாண்த்தெ நடத்தி முடித்தார்.

    மீனாட்சி புகுந்த வீடு சென்றடைந்தாள்வீடு சிறிய ஓட்டு வீடுதான்பக்கம் பக்கமாகப் பல வீடுகள் அந்தத் தெருவில்விட்டிலே மதியழகனைத் தவிற வேறு யாரும் கிடையாது  அவன் ஆத்தா போய் இரண்டு வருடங்களுக்குள்ளேயே அப்பனும் போய்விட்டான்கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லைதனிக் கட்டை அவன்.

    மதி சுய தொழில் செய்பவன்வீடுகளுக்கு வெள்ளை, பெயின்டு அடிப்பவன்காலை எட்டு மணிக்குக் கிளம்பிப் போனால் இரவு ஒன்பது மணிக்கோ பத்து மணிக்கோதான் திரும்புவான், தனியாக அல்ல உடலுக்குள்ளே சில பாட்டில்கள் சாராயத் தண்ணியோடு.

    மணமாகி ஒரு வாரம் கழிந்ததுவாசலில் வந்த மல்லிகைப்பூவில் இரு முழம் வாங்கி வீட்டில் இருந்த ஒரே சாமி படத்துக்கு ஒரு முழம் வைத்துத் தானும் வைத்துக் கொண்டாள் தலையில் மிச்சத்தை மீனாட்சி,.

    இரவு வந்த மதி கத்தினான் வீட்டிற்குள் காலடி வத்ததும், “என்னடீ இது வீடு பூரா பொண நாத்தம்?”

    மல்லிகெ நல்லா இருந்தீச்சு வாசமா இருக்குமேன்னு நாந்தான் வாங்கினேன்.”

    மல்லிகெயுமாச்சு மண்ணாங் கட்டியு மாச்சு. இதெப் பாகுறப்போல்லாம் எங்க ஆத்தா நெப்புதான் வருதுஅவொ மஞ்சளோடெ போய்ட்டான்னு மல்லிகெப் பூவெ மாலெ மாலெயா வாங்கி சாத்தி இருந்தாங்க. தூக்கி எறிடீ வாசல்லே.”, என்று கத்தினான் மதி எட்டு வீட்டிற்குக் கேட்கும் படியாக.

    கண்களில் இருந்து வழிந்த நீரைத் துடைத்தபடி தலையிலும் படத்திலும் இருந்த மல்லிகைப் பூ சரத்தை எடுத்து வாசலில் வீசினாள் மீனாட்சி.

    வீட்டில் தனிமையில் வாடிய மீனாட்சி தன்னுடன் கொண்டு வந்திருந்த சுருதிப் பெட்டியை வைத்துக் கொண்டு தான் கற்ற சில பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பாள் தன் பொழுதைப் போக்கிடதான் பாடுவதை சுவர்கள் தான் கேட்டுக் கொண்டிருக்கின்றன என்று எண்ணிவந்த மீனாட்சிக்கு ஒரு அதிர்ச்சி.

    ஒரு நாள் அவள் பாடிக் கொண்டிருந்த போது ஜன்னலருகே ஒரு உருவம் நகர்ந்தது போல் தெரியவே வாசல் கதவைத் திறந்து பார்த்தாள்அங்கு ஒரு பத்து பன்னிரெண்டு வயதுள்ள சிறுவன் நின்று கொண்டிருந்தான்.

    யாரு நீஎதுக்கு எங்க வீட்டு ஜன்னல் கிட்டெ நிக்கிறெ?”

    அக்கா எம் பேரு பாலுபக்கத்து ஊட்டுலெதான் இருக்கேன்எனக்கு பாட்டுன்னா ரொம்பப் புடிக்கும்எங்கெ பாட்டு வந்தாலும் நின்னு கேட்டு கிட்டு இருப்பேன்எங்கூடப் படிக்குற பசங்களெல்லாம் என்னெஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் வந்திடுச்சிடா ம்பாங்கதினோம் நீங்க பாடும் போது வாசல்லெதான் நின்னு கேட்டுகிட்டு இருப்பேன்இன்னிக்கித்தான் இவ்வொளோ நல்லாப் பாடுறாங்களே யாரு பாடுறதுன்னு பாக்கலாம்னு சன்னல் வழியே எட்டிப் பாத்தேன். தப்பு தாங்காநீங்க சின்னஞ்சிறு கிளியேன்னு ஒரு பாட்டு பாடினீங்களே அதெ இன்னோரு வாட்டி பாடுங்க அக்காஅதெக் கேக்குற போதெல்லாம் என் செத்துப் போன அக்கா ஞாபகம் வரும்கண்ணுலெ தண்ணி தானா வரும்ஆனாலும் அந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் புடிக்கும்.”

    சரி பாடறேன்வா உள்ளெ வந்து ஒக்காரு, என்று சொல்லியபடி சுருதிப் பெட்டியை மீண்டும் இயக்க ஆரம்பித்தாள் மீனாட்சி.

    சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்று மீனாட்சி ஆரம்பித்த உடனேயே கண்கள் குளமுடைக்க தலையைத் திருப்பிக்க் கொண்டான் பாலுஅழுவது மீனாட்சிக்குத் தெரியக் கூடாது என்ற எண்ணமோ என்னவோ தெரியவில்லைஅப்படியே திரும்பிய தலையை ஒரு 360 டிகிரி சுற்றி வீட்டின் சுவர்களை ஒரு நோட்டம் விட்டான்ஆங்காங்கே காகிதத்தில் வரைந்து ஒட்டப் பட்ட ஓவியங்கள்ஒன்றை விட ஒன்று அழகு.

    அமுத கானம் வந்து கொண்டிருந்தது மீனாட்சியின் வாயில் இருந்து.

    உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்

     உதிரம் கொட்டுதடி

    என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா

    என்னுயிர் நின்னதன்றோ?”

    என்று மீனாட்சி பாடியபோது பாலுவின் நெஞ்சில் உதிரம் கொட்டாததுதான் பாக்கிஅவன் கண் முன்னே படுக்கையில் அவன் அக்கா, பேச இயலாத நிலையில்அவன் கைகளை அவளருகே நீட்ட மெல்ல முயற்சி செய்து அவன் கைகளைத் தொட்டாள்இருவர் கண்களிலும் கண்ணீர்அதுதான் அவர்கள் கடைசியாகப் பேசிக் கொண்ட மவுன வார்த்தைகள்.

    பாட்டு முடிந்தது.

    நினைவுகளை மாற்ற எண்ணி, பாலு கேட்டான், “அக்கா இதெல்லாம் நீங்க வரெஞ்சதா?”

    ஆமாம். எனக்குப் போது போகலேன்னா படம் வரைவேன்இல்லேன்னா குட்டி குட்டி கதெய்ங்கெ எழுதுவேன்.”

    கதெ கூட எழுதுவீங்களாபத்திரிகைகள்லெ ஒங்க ஓவியங்களெ, கதெய்ங்களெப் போட்டதுண்டா அக்கா?”

    போடலாந்தான்யாரு அனுப்பறது?”

    அக்கா எங்கிட்டெ குடுங்கக்காநான் நம்மூர்லெ இருக்குற பத்திரிகெ ஆபீசுலெ கொண்டு சேக்குறேன்.”

    ஒரு வாரம் கழிந்ததுஒரு சனிக்கிழமை.

    கையில் ஒரு வாரப் பத்திரிகையை வைத்துக்கொண்டு மூச்சிறைக்க தாழ்ப்பாள் போடாதிருந்த கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்த பாலு கத்தினான், “அக்கா ஒங்களோட படமும், கதெயும் இந்த வாரம் வந்துருக்கக்காஎன்று.

    வேலைக்குத் செல்லாமல் வீட்டில் படுத்திருந்த மதி கத்தினான், “எவண்டா அவன் எனக்குப் புதுசா மொளெச்ச மச்சான்நான் ஊட்டுலெ இல்லதபோது ரெண்டு பேருமா கொஞ்சிக் கும்மாளம் அடிக்கிறீங்களா?”

    பேச்சோடு நிற்கவில்லை மதிஎழுந்து பளார் என்று பாலுவின் கன்னத்தில் அறைந்தான்.

    சின்னப் பையனைப் போய்…” சொல்ல வந்ததை பூராவுமாகச் சொல்லி முடிக்க வில்லை அவள்மீனாட்சியின் கன்னத்தில் விழுந்தது அடுத்த அறை.

    என்னடி? சின்னப் பையன் கேக்குதோ ஒனக்குநான் கெளவனாயிட்டேனோ?”

    பாலு ஒன்றும் பேசாது வெளியே சென்றான்மீனாட்சியும் ஒன்றும் பதில் பேசவில்லைகுடிகாரனிடம் நியாயமா பேச முடியும்

     மறு நாள் காலை ஏழு மணிக்கு எழுந்த மதி பல் துலக்கி விட்டுஏய் மீனாச்சி டீ கொண்டாடி நான் வேலெக்கு போவணும் என்றான்ஐந்து நிமிஷம் ஆயிற்றுமீனாட்சியைக் காணோம்.

    சமயல் அறைக்குள் சென்று பார்த்தான்அங்கும் அவளைக் காண வில்லைபக்கத்து வீட்டு வாசலில் நின்று கத்தினான், “ஏய் பாலூ வாடா வெளியே, என்றுபாலுவின் அம்மா வந்து சொன்னாள்பாலு காலெலெயே வெளிலெ கெளம்பிப் போயிட்டானுங்களே.”

    எங்கெ போனான்?”

    சொல்லீட்டு போகலீங்களே.”

    அவங்கூட ஓடிப் போயிருப்பாளோஇருக்காதுஎங்க போயிருக்கப் போறா களுதெஅப்பன் ஊட்டுக்குப் போயிருப்பாராவிக்கு வந்துருவாநாம போவலாம் வேலெக்கு என்று மனதிற்குள் சொல்லியபடி வீட்டைப் பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

    இரவு மதி வீடு திரும்பியபோது வீடு பூட்டியபடி இருந்ததுபக்கத்து வீட்டில் இருந்து சாவியை வாங்கிக் கொண்டு பூட்டை திறந்து ஊள்ளே சென்றான்வயிற்றில் பசி கொல்ல அடுப்பங்கரைக்குச் சென்றால் அங்கு பாத்திரங்கள் எல்லம் கவிழ்த்தபடி இருந்தனகளுதெ வரட்டும்.  “நாளெக்கி அவளுக்கு வெச்சுக்கறேன் கச்சேரி, என்றபடி தரையில் படுத்தான்.

    மறு நாள் காலை வீட்டுக் கதவை யாரோ தட்ட, மதி கதவைத் திறக்க, வாசலில் இரு போலீஸ்காரர்கள்அவர்களில் ஒருவர் கையில் இருந்த கடிதத்தை மதியிடம் நீட்டி, “நேத்து கடற்கரைலெ ரெண்டு பாடி ஒதுங்கீச்சு. ஒண்ணு சுமார் அம்புது வயசு ஆம்பிளெஇன்னோணு பதினாறு, பதினேளு வயசுப் பொண்ணுஅக்கம் பக்கத்துலெ விசாரிச்சதுலெ இந்தப் பொண்ணு இந்த ஊட்டுலெதான் இருந்தீச்சுன்னு சொன்னாங்க. இதெப் படிச்சுப் பாருங்க என்றார்.

    கடிதத்தை வாங்கிப் படித்தான் மதி.

    நான் எண்ணியபடி வாழத்தான் சுதந்திரம் இல்லை எனக்குசாகவுமா இருக்காது அது எனக்குஎன்னை பிறர் கண் படாதபடி வைத்து, விஷமென மனம் நோக வார்த்தைகளைக் கக்கி, உடல் நோக அடித்து வளர்த்த என் புருசனின் கைகளுக்கு காப்புகள்தான் போட வேண்டும்நானும் அப்பாவும் செல்கிறோம் இவ்வுலகை விட்டு. இப்படிக்கு மீனாட்சி.

    கடிதத்தைப் படித்த மதி, “அடிப்பாவீ, இப்படிப் பண்ணீட்டெயெடி என்று கத்தியபடி ஓடப் பார்த்தான்அவனைத் தாவிச்சென்று பிடித்த போலீஸ்காரர், “நான் போடுறேன் காப்பு ஒங்க கைக்கு.பி.கோ. செக்ஷன் 306ன் கீழெ கேசும் ஏற்கெனவே பதிவு பண்ணி வெச்சிருக்காரு இன்ஸ்பெக்டர் ஐயா என்றபடி மதியை போலீச் வண்டியில் ஏற்றினார்.

    தெருக் கோடியில் இருந்த பூங்காவில் வானொலியில் டி.கே. பட்டம்மாள் பாடிய

     ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

     ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்

    என்று ஆடுவோமே

    என்ற பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.

    மதியழகன் என்று அழகாகப் பெயர் வைத்தார்களேயொழிய அவன் மதி அழகில்லாமல் போய் விட்டதே என்ன செய்யபெயர்வைக்கும் போது அவன் குணம் எப்படி இருக்கும் என்று தெரியாதே.

    என்று வரும் நாட்டுக்கு உண்மை சுதந்திரம்

     இந்த சாராயக் கடைகள் தானோ நிரந்தரம்

     

    Share
  • ஒளி!…

     சு.கோபாலன்

     

    தேயும் இரவு முடிய அதிகாலை விடியத் தோன்றும் உதய சூரியன் ஒளி

    சாயும் மாலைப் பொழுதில் தேயும் சூரியனின் மங்கும் அஸ்தமன ஒளி

    விண்ணிலே மோதும் கார்மேகங்களின் சினமாய் மின்னிடும் மின்னல் ஒளி

    விண்ணிலே தங்கத் தட்டாய்த் தகதகக்கும் வெண்ணிலாவின்  தண் ஒளி

     

    வான் பரப்பிலே வைரங்களாய் பதிந்து கண் சிமிட்டும் தாரகைகளின் ஒளி

    வான் திரையிலே தோன்றும் எழில் ஓவியம் வானவில்லின் வண்ண ஒளி

    விட்டு விட்டு ஒளிர்விட்டுப் பறக்கும் மின்மினிப் பூச்சிகளின் ‘மினி’ஒளி

    வெயில் பட்டுப் பளபளக்கும் கோவில் கோபுர கலசங்களின் கம்பீர ஒளி

     

    பூசை அறையிலே நெய்த்திரி இட்டு ஏற்றிய குத்து விளக்கின் மங்கள ஒளி

    ஆசைமிக கார்த்திகை தினம் ஏற்றிய அகல் விளக்குகளின் அலங்கார ஒளி

    எண்ணிலா பக்தர்கள் கண்டு வணங்கும் அண்ணாமலை தீப அகண்ட ஒளி

    கண்ணிலே கண்டதும் பக்தர்கள் பரவசப்படும் சபரிமலை மகரவிளக்கு ஒளி

     

    தான் அழிந்தாலும் இறுதி வரை ஒளிதந்து இருள் போக்கும் மெழுகுவர்த்தி

    நாம் எல்லாம் அறிந்து உணர வேண்டிய பாடமாய்த் தரும் தியாக ஒளி

    போர்க்களத்தில் இருட்டிலும் விளக்கேந்தி சலியாது சேவை புரிந்த செவிலி

    பார்போற்றிய ‘விளக்கின் சீமாட்டி’ ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் சேவைஒளி

     

    ஒளிமிக்க வாழ்வு யாவர்க்கும் அருள்மிக்க இறைவன்  அருள்வாராக!

    Share
  • வார ராசி பலன்!…18-11-13 – 24-11-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

     

    மேஷம்: வண்டி வாகனங்களை வாங்கி விற்பவர்கள் முறையான வழியைக் கடைப்பிடித்தால், எந்த சிக்கலும் தோன்றா மலிருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களுடைய கொள்கைகளைக் கட்டிக்காக்க போராட வேண்டியிருக்கும். கூட்டுத் தொழிலில், பங்குதாரர் விலகினாலும், புதியவர் சேர்க்கையால் தொழில் வளம் சீராக இருப்பதால், வியாபாரிகள் தெம்புடன் திக்ழ்வார்கள். பொது வாழ்வில் இருப்போர்கள் வந்து சேரும் பொறுப்பு களை சுமப்பதற்கு அதிக உழைப்பை போட வேண்டியிருக்கும். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சொற்படி நடந்தால், மனக் கவலையின்றி சிறகடித்து பறக்கலாம்.

    ரிஷபம்: இந்த வாரம் கலைஞர்களுக்கு ஏமாற்றமாய் இருந்த விஷயங்கள் சாதகமாய் மாறும் சூழல் உருவாகும். வியாபாரிகள் பண விவகாரங்களில், பங்குதாரர்களுடன் கலந்து பேசி செயல்படுதல் நல்லது. மாணவர்கள் உங்கள் அமைதி, கடும் வார்த்தைகளாலும், அவசர செயல்களாலும் பாதிப்படையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பெண்கள் அலுவலக அளவில் நட்புகளை ஓர் எல்லையோடு நிறுத்திக் கொண்டால்,மன சஞ்சலம் குறைவதோடு அதிக இழப்புகளும் இராது. சுய தொழில் புரிபவர்கள் ஆரம்ப முயற்சிகளில் சுணக்கம் காட்டாமலும் இருந்தால், வெற்றி வரும் வழி, லாபம் இரண்டும் உறுதியாகும்.

    மிதுனம்: மாணவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலாக்கி வைத்துக் கொண்டால், மறதியால் வரும் சிக்கல்கள் அகலும். கலைஞர்கள் வருமானத்தை அதிகப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு உறவும், நட்பும் கை கொடுப்பதால், மகிழ்ச்சிக்கு குறைவிராது. இந்த வாரம் கரைந்த சேமிப்பை ஈடுகட்ட எடுக்கும் முயற்சியில் பெண்கள் ஓரளவு வெற்றி காண்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கும் நண்பர்களையும், வாய்ப்புக்களையும் நழுவ விடாமல் தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொண்டால், எதிர்காலம் வளமாய் அமையும்.கடினமான பணிகளில், மூத்த அதிகாரிகளின் ஆலோச னையை பின்பற்றுதல் நலம்.

    கடகம்: பெண்கள் தங்களின் உயர்வான எண்ணங்கள் ஈடேறுவதற்கு ஆரோக்கியம் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் ஈடுபாடோடு எந்த செயலைச் செய்தாலும் அதில் வெற்றி காண முடியும். பிள்ளைகள் பெற்றோர்களின் மனதிற்கேற்ப நடந்து கொள்ள முன்வருவார்கள். நண்பர்கள் பிணக்கை மறந்து இணக்கமாக நடந்து கொள்வர் . பணியில் உள்ள ஒரு சிலருக்கு தேவையில்லாத இடமாற்றம் உண்டாகும். கலைஞர்கள் உங்கள் புகழைக் கண்டு பொறாமைப் படுபவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். மறைமுக எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட மன உறுதி தேவைப்படும்.

    சிம்மம்: கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கின்ற சலுகையை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சரக்கு வினியோகம் செய்பவர்கள் வெறும் வாய் வார்த்தையை நம்பி பொருள் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டால் நஷ்டம் இராது. பெண்கள் இல்லத்திலும், அலுவலகத்திலும் வீண் பேச்சுக்களைக் குறைத்தால், அமைதிக்கு பங்கம் வராமலி ருக்கும். சுய தொழில் புரிபவர்கள் காலத்தின் மதிப்பும் அருமையும் உணர்ந்து செயல்பட்டால், எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். வியாபாரிகள் சுகமான வாழ்க்கைக்கு ஆசைபட்டாலும்,இந்த வாரம் அங்கும், இங்கும் சுற்றித்திரியும் நிலைதான்.

    கன்னி: முக்கியமான பொறுப்புக்களை வகிப்பவர்கள், சிந்தனையை பணியில் செலுத்தி எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரவிருக்கும் பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம். வெளியூர்ப் பயணங்களால் செலவுகள் கூடினாலும்,வியாபாரிகள் நினைத்த காரியத்தை முடித்து விடுவீர்கள். கவனக் குறை வாகச் செயல்படும் பிள்ளைகளை இதமாகக் கண்டிப்பதே நல்லது. புதிய இடங்களு க்குச் செல்பவர்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்தால், பயணங்கள் இனிமையாக அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் பெண்கள் இல்லத்தை அழகு படுத்தும் பணிகளை விருப்பத்துடன் செய்வார்கள்.

    துலாம்: நாணயத்தின் அடிப்படையில் செயல்பட்டால் எந்த ஒப்பந்தமும் எளிதில் கலைஞர்கள் வசமாகும். பணியில் இருப்பவர்கள் அதிகமாகப் புகழ்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப் பது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் சமயோசி தமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். குற்றம் சொல்லும் உறவினரின் தேவைகளை பெண்கள் முதலில் பூர்த்தி செய்தால், இல்லம் அமைதியாக இருப்பவும், உறவுகள் வலுவாகவும் திகழும். மாணவர்கள் சாதாரணமாய் சொல்லும் வார்த்தைகளை சண்டைக்குக் காரணமாக்குபவர்களிமிருந்து விலகி இருங்கள். பாதி பிரச்னைகள் தானே குறைந்து விடும்.

    விருச்சிகம்: வாடிக்கையாளர்களின் வரவால், வியாபாரிகள் மகிழ்வர். இந்த வாரம் தந்தை வழி உறவுகளுடன் மோதல், அதிருப்தி அன்று அங்கலாய்த்துக் கொள்ளும் நிலை இருந்தாலும்,பக்குவமாக நடந்து கொள்வது புத்தி சாலித்தனமாகும். கலைஞர்கள் செய்யும் வேலையில் கண்ணும் கருத்தாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும். பணி சுமை கூடுவதால்,பெண்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகலாம். பணியில் இருப்பவர்கள், தெரிந்தவர்களுக்கு மட்டும் சில சலுகைகளை அளிப்பது, விதிமுறைகளைத் தளர்த்துவது போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உங்கள் கௌரவம் குலையாமலிருக்கும்.

    தனுசு: வீடு,மனை விஷயங்கள் உங்களுக்கு சாதகமாய் முடிய, சமாதானமாய் போவது புத்திசாலித் தனமாகும்.மாணவர்கள் எந்தவொரு விஷயத்தையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் கவனத்துடன் இருப்பது அவசி யம். வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருப்பதால், வியாபாரிகள் கட்டட விரிவாக்கம் ஆகியவற்றை சற்று ஆறப் போடுவது நல்லது. பெண்கள் உங்களை புகழ்பவர்களை நல்லவர்கள் என்று நம்பி உங்கள் ரகசியங்களை பரிமாறிக் கொள்ள வேண்டாம். உயர்பதவி வகிப்பவர்கள் நிர்வாக விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் அதனைத் தீர்க்கும் நபரிடம் பொறுப்புக்களை அளிப்பது அவசியம்.

    மகரம்: பங்கு தாரர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் வீண் சண்டைகளைத் தவிர்த் தால், வெற்றிக்கான வாய்ப்பு கை நழுவாமல் உங்கள் வசம் இருக்கும். எடுத்தகாரியம் யாவும் நன்கு முடிவதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் தன்னம்பிக் கையுடன் செயலாற்றுவார்கள். கலைஞர்கள் கடன் தொல்லைகளிலிருந்து பெருமளவு விடுபடுவர். எனினும் எந்த சூழலிலும் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளாமலிருப்பது அவசியமாகும். பிள்ளைகள் வெளியில் செலவிடும் நேரம் அதிகமாக இருக்கும் என்பதால், பெற்றோர்கள் அவர்களின் நடவடிக்கையை கவனித்து வருவதோடு இதமாக புத்தி சொல்லித் திருத்தினால், அவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவர்.

    கும்பம்: பெண்கள் நினைக்கின்ற விஷயங்களில் வெற்றி பெற உங்கள் வாக்குச் சாதுர்யம் கை கொடுக்கும். மாணவர்கள் சஞ்சலங்கள் வளர இடம் கொடாதாவாறு மனத் திடத்துடன் இருந்தால், மகிழ்வுக்கு குறைவிராது. முதியவர்கள் நோய்களுக்கு நீங்களே மருந்துகளை தேடாமல், தகுந்த மருத்துவரை அணுகுதல் நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடிய அளவிற்கு வியாபாரிகளுக்கு மன வலிமையும், உடல் வலிமையும் கூடும். பணியில் இருப்பவர்கள் புதிய ஊழியர்களிடம் உங்கள் வாதத் திறமையை காட்டாமல் எளிய முறையில் பழகி வந்தால், நல்ல நட்பு உருவாகும். சரளமான பணப்புழக்கம் தனித் தெம்பைத் தரும்.

    மீனம்: மாணவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலாக்கி வைத்துக் கொண்டால், மறதியால் வரும் சிக்கல்கள் அகலும். கலைஞர்கள் வருமானத்தை அதிகப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு உறவும், நட்பும் கை கொடுப்பதால், மகிழ்ச்சிக்கு குறைவிராது. இந்த வாரம் கரைந்த சேமிப்பை ஈடுகட்ட எடுக்கும் முயற்சியில் பெண்கள் ஓரளவு வெற்றி காண்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் உங்களுக்கு உதவக் காத்திருக்கும் நண்பர்களையும், வாய்ப்புக்களையும் நழுவ விடாமல் தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொண்டால், எதிர்காலம் வளமாய் அமையும்.கடினமான பணிகளில், மூத்த அதிகாரிகளின் ஆலோச னையை பின்பற்றுதல் நலம்.

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 15ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    பத்தெட்டாய் ஓரைந்தாய்ப் பதின்மூன்றையும் கடந்த
    ஒத்திட்டு நின்றது ஓர் ஓவியத்தைப் போற்றாமல்
    தெத்திட்டு நின்ற திரிகண்ணிக்கு உள்ளாகி
    வித்திடாய் நெஞ்சே விடவும் அறியாயே. 1.

    ஓ என்றன் மனமே! *முப்பத்தாறு தத்துவங்களையும் (அதாவது பத்து+எட்டு+ஐந்து+பதிமூன்று=முப்பத்திஆறு) கடந்து அதற்கு அப்பால் நின்று கொண்டிருக்கும் ஓவியம் போன்றவனான சிவபெருமானின் அற்புத தரிசனம் கண்டு அப்பரப்பிரம்ம ஸ்வருபத்தில் நிலைத்த இன்பத்தைக் காணாமல், உலகத்தில் சுலபமாகக் கிடைக்ககூடிய அற்ப சுகங்கள் எனும் வலையில் மாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி வந்து உன் புத்தியை அதில் விதைத்துவிட்டு நிற்கிறாயே, அதனின்றும் விலகி வாழ அறிந்து கொள்ளவில்லையே. (*சைவ சித்தாந்தத்தில் முப்பத்தியாறு தத்துவங்கள் சொல்லப்படுகின்றன, அவற்றைப் பற்றிய விவரங்களைச் சைவ சித்தாந்த நூல்களில் காணமுடியும்)

    அஞ்சுடனே ஏழாகி ஐமூன்றும் எட்டும் ஒன்றாய்
    மிஞ்சி யிருந்த விளக்கொளியைப் போற்றாமல்
    பஞ்சிலிடு வன்னியைப் போல் பற்றிப் பிடியாமல்
    நஞ்சுண்ட கெண்டையைப் போல் நான் அலைந்து கெட்டேனே. 2.

    மறுபடி மீண்டும் இங்கும் அதே முப்பத்தாறு தத்துவம் பேசப்படுகிறது. அவை (5+7+(5×3)15+8+1=36) முப்பத்தியாறு தத்துவங்களைத் தாண்டி நிற்கும் அந்த ஜோதிஸ்வரூபனான சிவபெருமானைப் போற்றி வழிபடாமல், பஞ்சில் தீப்பிடித்தது போல சட்டென்று பிடித்துக் கொள்ளாமல், நஞ்சை உண்ட கெண்டை மீனைப் போல அங்குமிங்குமாய் அலைந்து கெட்டேனே.

    ஊனமுடனே அடையும் புழுக்கட்டை*
    மானமுடனே சுமந்து மண்ணுலகில் மாளாமல்
    ஆனதொரு பஞ்சவர்கள் ஆண்டிருந்த தெசம் விட்டுப்
    போனது போலே நாம் போய்ப்பிழைத்தோ மில்லையே. 3.

    இந்த உடல் பூவுலகின் கேடுகளையெல்லாம் செய்து சீர்கெட்டுப் போன கிருமிகள் வாழ்கின்ற கேவலமான வஸ்து. இந்த உடலை வைத்துக் கொண்டு மானம், மரியாதை இவற்றோடு வாழ்ந்து, இப்பூவுலக வாழ்வை முடித்துக் கொண்டு போகும் இடத்துக்குப் புண்ணியத்தைத் தேடாமல், பஞ்ச பாண்டவர்கள் செல்வச் செறுக்கோடு வாழ்ந்திருந்த தேசத்தை விட்டுக் காட்டுக்குப் போய் பிழைத்தது போலே நாமும் கானகம் சென்று அந்த இறைவனை நினைந்து தவம் செய்து வாழ்ந்தோமில்லையே.

    (*புழுக்களுக்கு இரையாவதும், புழுத்துப் போகும் நிலை கொண்டதுமான இந்த உடலைப் பற்றி பலரும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். யாக்கை நிலையாமை என்பது தமிழிலக்கியத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. மணிமேகலை காப்பியத்திலும் கூட “வினையின் வந்தது; வினைக்கு விளைவாயது, புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது; பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்; மனித யாக்கை இது” என வரும் வரிகளை நினைவு கூரலாம்.)

    ஊறையிறைக்கின்ற உப்பிருந்த பாண்டத்தை
    நாறாமல் நாறி நழுவும் புழுக்கூட்டை
    வீறாம்புரத்தை விரும்புகின்றது எப்படி என்று
    ஆறாத நாட்டில் அகன்றிருந்தேன் இல்லையே. 4.

    கழிவுகளை உடலினின்றும் வெளியேற்றும் உப்பூரும் பாத்திரமாம் இந்த பூதவுடல் உயிர் உள்ளபோதும் அசுத்தங்களை வைத்துக் கொண்டு நாற்றமெடுக்கிறது, அதுமட்டுமல்லாமல் வண்டுகள் அழியக்கூடியதான கூடுகளைக்கட்டி அதில் புழுவினைக் கொண்டு வைத்துச் சேர்த்து பின்னர் அவை அழிக்கப்படுவதைப் போன்ற உடலை, நான் எனது எனும் அகங்காரமும் ஆணவமும் ஆட்கொண்டிருந்த இந்த உடலைப் போற்றி பாதுகாத்து வந்தது அல்லாமல் இதுபோன்ற கேடுகள் இல்லாத புண்ணித் தலங்களைப் பற்றி அறியாமல் அவற்றிலிருந்து எட்டாத தூரத்தில் இருந்துவிட்டேனே.

    அரிய அரிதேடி அறியா ஒரு முதலைப்
    பரிவுடனே போற்றும் பரஞ்சுடரைப் போற்றாமல்
    கரிய பெருவாழ்வை நம்பிக் காமத்து அழுத்தியே
    அரிவாயில் பட்ட கரியது போலானேனே. 5.

    அடி முடி காண்பதற்காக பிரம்மனும், ஹரியும் மேலும் கீழுமாய்ச் சென்றும் காணமுடியாத ஒப்பிலாத முதல்வனை சதாகாலமும் வழிபடவேண்டிய அந்தப் பெருஞ் சுடராம் சிவபெருமானைப் போற்றி வழிபட்டு வாழாமல், நிலையற்ற இந்த புவிவாழ்வை சதமென்று எண்ணிக் காம உணர்வுகளில் மூழ்கித் திளைத்து சிங்கத்தின் வாயில் அகப்பட்ட யானையைப் போல ஆகிவிட்டேனே.

    தந்திரத்தை உன்னித் தவத்தை மிகநிறுத்தி
    மந்திரத்தை உன்னி மயங்கித் தடுமாறி
    விந்துருகி நாதமாம் மேலொளியைக் காணாமல்
    அந்தரத்தே கோலெறிந்த அந்தகன் போல் ஆனேனே. 6.

    ஆகமங்களை அறிவதால் பலன் இல்லை என்று எண்ணி தவமே மேலென்று அதிலே மனம் செலுத்தி, வேதத்தை சிறப்பென்று ஓதியும் மனம் தெளிவின்றி மயங்கித் தடுமாறி, விந்து நாதத்திற்கு அப்பால் ஓங்கி நிற்கும் பெரும் ஜோதியாம் பரம்பொருளைக் காணாமல், ஆகாயத்தின் வெட்டவெளியில் கோலை எறிந்துவிட்டு அது எங்கு போனது, என்ன ஆனது எப்படிப் பிடிப்பது என்று தெரியாமல் தவித்துத் தடுமாறும் அந்தகனைப் போல ஆகிவிட்டேனே.

    விலையாகிப் பாணனுக்கு வீறடிமைப் பட்டதும் பின்
    சிலையார் கைவேடன் எச்சில் தின்னானைப் போற்றாமல்
    அலைவாய்த் துரும்பது போல் ஆணவத்தினால் அழுங்கி
    உலைவாய் மெழுகது போல் உருகினையே நெஞ்சமே. 7.

    மதுரையம்பதியில் புகழ்பெற்ற பாணனான பாணபத்திரரின் இசைக்கு அடிமையானதும், பின்னர் காளத்தி வேடன் கண்ணப்பன் கொணர்ந்து தந்த எச்சில் பண்டத்தை உண்டவனான சிவபெருமானைப் போற்றி வழிபடாமல், கடல் அலையில் விழுந்த துரும்பினைப் போல் அங்குமிங்குமாய் அலைக்கழித்து நிலை தடுமாறி, ஆணவப் பேய் தலையில் அமர்ந்து கொண்ட நிலையில், நெருப்பினைக் கக்கும் உலையில் விழுந்த மெழுகு உருகுவது போல மனம் உருகித் தவிக்கின்றனையே என் நெஞ்சமே.

    Share
  • சீதாயணம் படக்கதை -7

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

     

    சீதாயணம் படக்கதை

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

    +++++++++++++++++++++

    image

     

    [தொடரும்]

    +++++++++++++++

    தகவல்

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

    3. Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]

    6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]

    http://jayabarathan.wordpress.com/

    Scene -12

    Scene -13

     

    Share
  • ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

    வணக்கம், வாழியநலம்

    கார்த்திகை முதல்நாள்.

    கோடானுகோடி ஐயப்ப பக்தர்கள் ஐயனின் தரிசனம் விழைந்து
    பரவசத்தோடு துளசிமணிமாலை தரித்து விரதம் தொடங்கும் தினம்!

    இந்நன்னாளில் ஐயப்பன் மீது இயற்றப்பட்ட பஞ்சகமும், ஐயனின் எண்ணெய்வண்ண ஓவியமும் இணைப்பாக..

    Ayiappan Finished Oil on Canvass 2

    அடியொன்றுக்கு ஒற்றெழுத்து நீங்கலாக 21 எழுத்துகள் என்று அமைந்த விருத்தப் பாக்கள்…

    பார்க்க, படிக்க, ரசிக்க..

    நடைவழி தொடரும்…

    சு.ரவி

    ஐயப்பன் பஞ்சகம்

    சீலமுயர் வாழ்வை யொரு யோகமெனவே பயிலும் சாதகர்தமைக்
    காலனொருபோதும் அணுகாதபடி நாளுமவன் காத்தருளுவான்!
    நீலமுகி லாடுமலை சோலைபல சூழுமலை நீலிமலையாம்
    வாலியணுகாதமலை வாழுமிறை பாதமலர் வாழ்த்துமனமே!

    யானெனதிலாத நிலையோடுபல காடுமலை ஏறிவருவார்
    தானவர்தம் காவலென வீடுமனை வாசலவன் காத்தருளுவான்!
    யானைகள் உலாவுமலை, வானரமி லாதமலை யாளுமரசன்
    தேனமர் துழாய் புரளும் தோளழகன் பாதமலர் தேடுமனமே!

    எண்ணிய எலாமருளும் ஏழைபங்காளான் சிவபாலன் இவனை
    நண்ணும் அடியார்களொருபோதும் நலியாதபடி காத்தருளுவான்
    திண்ணிய மரங்கள் உயர் கானகம் அடர்ந்தமலை காந்தமலைமேல்
    விண்ணிலெழு ஜோதிமல ரானபர தேவனை விரும்பு மனமே

    பூரணை மணாளனவன், புஷ்கலையின் காதலனைப் போற்றுமடியார்
    தாரணியில் பேறு,புகழோடு பல காலமுறக் காத்தருளுவான்!
    நாரணியும், ஆறணியும் நாயகனும் கூட உருவாகி மலை மேல்
    பூரண நிலாவென உலாவும் அவன் பொன்னடிகள் எண்ணு மனமே!

    மேதினியில் ஏதிலிகள் தோழனவன் மாமலையைத் தேடுமடியார்
    சோதனையுறாதபடி, சோர்வு தழுவாதபடி காத்தருளுவான்!
    வேதஒலி சூழுமலை,வேடுவரில் யோகியவள் வாழுமலை மேல்
    நாதவடிவானவனை, பூதகண நாயகனை நண்ணு மனமே!

    சு.ரவி

    Share
  • 2013 ஆண்டு முடிவுக்குள் பரிதியிலே துருவ மாற்றம் நிகழ்ந்து விடலாம் .. !

    Sun's Pole Reversal

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=34gNgaME86Y

     [The Sun’s Magnetic Field is About to Flip by NASA ]

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=y3_vW5yrNek

    [ Hidden Magnetic Portals Around the Earth ]

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6j4bl57D_1U

    [ Solar Max Double Peaked ]

    பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறை

    பரிதியின் காந்த துருவங்கள்

    மீண்டும் மீண்டும்

    மாறி விடுதில் தவறுவது இல்லை !

    சூரிய முக வடுக்கள் பெருகி

    உச்சமாகி மாறும் துருவங்கள் !

    பரிதிப் புயல்கள் பாய்ந் தடிக்கும் அப்போது !

    பூமியின் சூழ்வெளி மண்டலத்தை

    அலை அலையாய்த் தாக்கும்

    ஒளித்துகள்கள் !

    மின்னியல் நுட்பக் கருவிகள்

    தன்னியல்பை   இழக்கும்

    சுற்றும் துணைக் கோள்களில் ! பரிதி

    வடுக்களின் காந்தப் புயல்கள்

    நடுங்க வைக்கும் பூமியை  !

    குவல யத்தின் உட்கருவும்  அதிரும் !

    அவல நிலை ஏற்படப்

    பூதளம் தோளசைத்து மேளம் போல்

    தாளமிடும் !

    கடல் பொங்கிச் சுனாமி படை எடுக்கும் !

    எரிமலைப் புண் புரையோடி

    ஆறாக ஓடும் அக்கினிக் குழம்பு !

    சூறாவளிப் பேய் மழை அடிக்கும் !

    துக்க வினைகள் என்ன நேரும், எப்படி நேரும்

    எக்கணம் நேருமென்று

    எந்த விஞ்ஞானியும் அறியார் !

    +++++++++++++++++++++++++++

    Corona Mass Ejection

    “பரிதியில் துருவம் முனைநோக்கி நகரும் போது தற்போதுள்ள எதிர்த்துருவத்தை மெதுவாய் அழிக்கிறது.   காந்த தளம் பூஜியமாகி, பிறகு எதிர்த்துருவமாய்த் துள்ளி எழுகிறது.   அது கடற்கரையில் அலை எழுச்சி [Tide] வருவது போலும், அகல்வது போலும் தெரிகிறது.  ஒவ்வோர் அலை அடிப்பும் சிறிதளவு மிகையான நீரைச் சேர்ப்பது போல், முடிவில் முழுத் துருவ மாற்றம் நிரம்பி நிகழ்கிறது.   அதனால் புறக்கோளான பூதக்கோள் வியானிலும் பெரும் புயல்கள் எழுகின்றன !  சனிக்கோளில் கூடத்  துருவமுனைத் தோரணங்கள் [Auroras] தோன்றுகின்றன !”  [2013 நவம்பர் முதல்வாரம், பிலிப்பைன்ஸ் தீவுகளில்  அடித்த கோரச் சூறாவளிப் பேய்மழையும் இதனால் ஏற்பட்டதா என்று நாம் சிந்திக்கலாம்].

    டாடு ஹோக்சீமா,  [சூரிய பௌதிக விஞ்ஞானி, ஆளுநர், ஸான்ஃபோர்டு வில்காக்ஸ் பரிதி ஆய்வகம்]

    “பரிதியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் துருவமாற்றத்தில் ஓர் விந்தையான விளைவு என்ன வென்றால், பரிதியின் பாதிக் கோளங்கள் [Hemispheres]  வெவ்வேறு வீதத்தில் மாறி வருகின்றன !   இவ்வாண்டு [2013] வேனிற் காலத்தில் வடபுறக் கோளம் துருவத்தை மாற்றியது.  ஆனால் தென்புறக் கோள் துருவம் இனிமேல்தான் ஆண்டு முடிவுக்குள் மாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.”

    டாடு ஹோக்சீமா,  [சூரிய பௌதிக விஞ்ஞானி, ஆளுநர், ஸான்ஃபோர்டு வில்காக்ஸ் பரிதி ஆய்வகம்]

    Sun's pole change 2013

    சூரியனில் ஒரு பெரும் நிகழ்ச்சி நேரப் போகிறது.  நாசா உதவி செய்து இணைந்துழைக்கும் விண்ணோக்கு ஆய்வகங்கள் அனுப்பிய அளவீடுகளின்படி, பரிதியின் பரந்த காந்த தளத்தில் துருவ மாற்றம் வெகு சீக்கிரம் நிகழப் போகிறது !   அதாவது இன்னும் 2 மாதங்களுக்குள் இம்மாற்றம் நேரப் போவதுபோல் தெரிகிறது. இந்த மாறுதல் பூமி உட்படச் சூரிய மண்டலக் கோள்களில் அதிர்வலைகளைப் பரப்பிடும். அதாவது பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறைப் பரிதியின் காந்த துருவங்கள் மாறுகின்றன.  சூரிய வடுத்தோற்றச் சுழற்சியின் உச்சியில், பரிதியின் உட்கருக் காந்த ஜெனனி   [Sun’s Inner Magnetic Dynamo]  தன்னை நேரியக்கி, ஒருமைப் படுத்திக் கொள்கிறது.   இந்த மாற்றம் துருவச் சுழற்சி 24 இன்  மையத்தில் உண்டாகும்.

    டாடு ஹோக்சீமா [Todd Hoeksema, Solar Physicist, Stanford University]  [August 7, 2013]

    சூரிய காந்தசக்தி பலவீனமாகிப்  பூஜியமாகி, எதிர்த் துருவமாகி மீண்டும் வலுப் பெறும்.   இது பரிதியில் நேரும் இயல்பான சுழற்சி நடப்பு.   பரிதியின் வட துருவம் ஏற்கெனவே தன் சின்னத்தை மாற்றிக் கொண்டது.    இப்போது தென் துருவம் தன்னை மாற்றிக் கொள்வதில் விரைவாய்  முனைந்துள்ளது !  சீக்கிரம் இரு துருவங்களும் திருப்பமாகி, அடுத்த பாதி, பரிதி உச்சம்  [Solar Max]  பூர்த்தியாகும்.

    பிலிப்ஸ் செர்ரர்  [Philips Scherrer,  Solar Physicist, Stanford University]  

     

    Solar Activity

    2013 ஆண்டு முடிவுக்குள் பரிதியின் துருவ மாற்றம் எக்கணமும் நிகழலாம் !

    வெகு சீக்கிரம் பூமியைச் சுற்றியுள்ள, புலப்படாத பேரளவு காந்த தளங்கள்,  துகள்களின் கதிர்வீச்சு, மற்ற பெருங் கோள்களின் பண்புகளும் பரிதியின் துருவ மாற்றத்தால் மாறப் போகின்றன.   குறிப்பாக சூரியனின் துருவ காந்த தளமும், வடதென் துருவங்களும் திசை மாற்றம் அடையும்.   இந்தத் திருப்பம் பரிதி உச்சத்தில் [Solar Maximum] நிகழும்.   அந்த உச்ச நிலையில் சூரிய வடுக்கள் [Sun Spots], தீ நாக்குகள்   [Flares],  பிழம்பு நிறை வீச்சுகள் [Corona Mass Ejections (CME)] ஆகியவற்றின் இயக்கம் மிகையாய் இருக்கும்.   அந்தத் துருவச் சுழற்சி மாற்றம் 11 ஆண்டுக்கு  ஒருமுறை மீள்கிறது.   ஆனால் அம்மாற்றம் மெதுவாக நிகழ்கிறது.  முழுமாற்றம் முடிய  கூடியவரை 18 மாதங்கள் கூட நீடிக்கலாம்.   அப்போது சூரிய துருவங்களின் காந்த தளம் கீழிறங்கி பூஜியமாகி எதிர்த்திசையில் மீண்டும்  உருவாகிறது.

    சில மாதங்களுக்கு முன் [2013  ஆண்டு வேனிற் காலத்தில்] பரிதியின் வடதுருவம் ஏற்கனவே தன்னை மாற்றிக் கொண்டது.  ஆனால் இன்னும் தென்துருவம் இதுவரை தன்னை மாற்றிக் கொள்ள வில்லை.   அந்த நிகழ்ச்சியும் 2013 முடிவுக்குள் எக்கணமும் நேரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.    அப்போது பரிதியிலிருந்து 10,000 கி.மீ. அடர்த்தியுள்ள மின்னியல் துகள்கள் [Electrically Charged Particles] மில்லியன் கணக்கான கி.மீ. நீட்சியில் வெளியாகும்.    இந்தத் துகள்கள் வீச்சு, புளுடோ வரை பரிதி மண்டலம் முழுவதும் பரவுகின்றன.

    What happens to the Sun

     

    பரிதியின் துருவகங்கள்  மாறுவதில் நிகழ்வது என்ன ?

    சூரியனில் ஒரு பெரும் நிகழ்ச்சி நேரப் போகிறது.  நாசா உதவி செய்து இணைந்துழைக்கும் விண்ணோக்கு ஆய்வகங்கள் அனுப்பிய அளவீடுகளின்படி, பரிதியின் பரந்த காந்த தளத்தில் துருவ மாற்றம் வெகு சீக்கிரம் முடியப் போகிறது !   அதாவது இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் இம்மாற்றம் நேரப் போவதுபோல் தெரிகிறது. இந்த மாறுதல் பூமி உட்படச் சூரிய மண்டலக் கோள்களில் அதிர்வலைகளைப் பரப்பிடும். அதாவது பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறைப் பரிதியின் காந்த துருவங்கள் மாறுகின்றன.  சூரிய வடுத்தோற்றச் சுழற்சியின் உச்சியில், பரிதியின் உட்கருக் காந்த ஜெனனி   [Sun’s Inner Magnetic Dynamo]  தன்னை நேரியக்கி, ஒருமைப் படுத்திக் கொள்கிறது.   இந்த மாற்றம் துருவச் சுழற்சி 24 இன்  மையத்தில் உண்டாகும்.

    சூரிய துருவ மாற்றம் உண்டாக்கும் திரிபுகள் பரிதி மண்டலம் பூராவும் நேருகின்றன.   அவை பூதளக் காந்த தளத்தில் புதிய அலை அடிப்பை உண்டாக்கிக் கலக்குகின்றன.   எழுந்த இம்மாறுதல்கள் விண்வெளிக் காலநிலைத் [Space Weather] திரிபை  ஏற்படுத்தும்.   பூமியின் காந்த தளம், மேல் நிலைச் சூழ்வெளி  [Earth’s Magnetic Field and Upper Atmosphere] இவற்றால் பாதகம் அடையும்.  அப்போது பூமியின் துருவத் தோரணங்கள் பேரளவுக் காட்சியாய் ஒளிரும்.   அத்துடன் பூமியில் தூண்டப் பட்ட “பூகாந்த மின்னோட்டங்கள்”  [Geomagnetic Currents] மனித சமுதாயத்துக்குப் பேரளவு சீரழிவைத் தரும்.

     

     

    2013 SunspotsSolar cycles 22-23-24

     

    2013 ஆண்டு இறுதி மாதங்களுக்குள் பரிதியின் துருவங்கள் மாறப் போகின்றன.

    சூரியனில் ஒரு பெருத்த துருவ மாற்றம் சமீபத்தில் சீக்கிரம் நிகழப் போகிறது.    அம்மாதிரி துருவ மாற்றங்கள் 11 ஆண்டுகட்கு ஒருமுறை பரிதியில் நேரிடும்.   2000 -2002 ஆண்டுகளில் ஒருமுறை துருவங்கள் மாறி 11 ஆண்டுகள் கழித்து 2013 -2014 இல் அடுத்து மீண்டும் துருவங்கள் திருப்பம் அடையப் போகின்றன. சூரிய காந்தசக்தி பலவீனமாகிப்  பூஜியமாகி, எதிர்த் துருவமாகி மீண்டும் வலுப் பெறும்.   இது பரிதியில் நேரும் இயல்பான சுழற்சி நடப்பு.   பரிதியின் வட துருவம் ஏற்கெனவே தன் சின்னத்தை மாற்றிக் கொண்டது.    இப்போது தென் துருவம் தன்னை மாற்றிக் கொள்வதில் விரைவாய்  முனைந்துள்ளது !  சீக்கிரம் இரு துருவங்களும் திருப்பமாகி, அடுத்த பாதி, பரிதி உச்சம்  [Solar Max]  பூர்த்தியாகும்.

    பரிதியின் துருவ மாற்றத்தால் விளையும் விளைவுகள்: 

    சூரிய மண்டலத்தில் பரிதியில் வடுக்கள் [Sunspots] தோன்றுவதும், அவற்றின் உச்சத்தில் 11 ஆண்டுகட்கு ஒருமுறை, துருவங்கள் மாறுவதும் ஒரு பெரும் விண்வெளி  நிகழ்ச்சி விளைவாகக் கருதப்படுகிறது.  அந்த காந்த தளத் திசை மாற்ற அலை அதிர்வு, பல பில்லியன் மைலுக்கு அப்பால் உள்ள புளுடோ கோளைத் தாண்டியும் செல்கிறது !   பரிதி பௌதிக விஞ்ஞானிகள் அதைப் பற்றிச் சொல்லும் போது, தாறுமாறான காந்த மட்டத் தன்மையை -அதாவது “மின்னோட்டத் தாளை”   [Current Sheet]   குறிப்பிடுவார்.    அது சூரிய மத்திய ரேகைப் பகுதியில் மெதுவாய்ச் சுற்றும் காந்த தளம் தூண்டும் மின்னோட்டத்தைக் காட்டுவதே.   உண்டாகும் மின்னோட்டம் சதுர மீட்டர் பரப்பில் மிகச் சிறியதே.  ஆனால் மொத்தப் பரப்பளவில் மிகையானது.  

    Sun spots

    துருவ மாற்ற சமயத்தில்  “மின்னோட்டத் தாள்”  அதிர்வலைகள் மிகுந்திருக்கும்.  நமது பூமி பரிதியைச் சுற்றும் போது, இந்த மின்னோட்டத் தாளில் மூழ்கியும், மேல் எழுந்தும் வருகிறது.   இது ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நிகழும் போது, பூமியில் சூறாவளிப் புயல்கள் கிளம்பும்.   அப்போது அகிலக்கதிர்களும் [Cosmic Rays] பாதிப்படையும்.   காலக்ஸிகளில் அதி விரைவுச் சக்தி துகள்கள், ஒளி வேகத்தை ஒட்டிய பெரு வேகமுற்று,   சூப்பர் நோவா வெடிப்புகள் நேர்ந்திடும் !    மின்னோட்டத் தாள் அகிலக் கதிர்களுக்கு அரணாக அமைந்து திசைமாற வைத்துவிடும்.   துருவ மாற்றங்கள் முடிவடையும் போது, பரிதியின் இரு கோளங்கள் [Lower and Upper Spheres] சீரற்றுப் போய் [Out of synch] அவை முரணாய்  இயங்கும். சூரிய காந்தசக்தி பலவீனமாகிப்  பூஜியமாகி, எதிர்த் துருவமாகி மீண்டும் வலுப் பெறும்.   இது பரிதியில் நேரும் இயல்பான சுழற்சி நடப்பு.   பரிதியின் வட துருவம் ஏற்கெனவே தன் சின்னத்தை மாற்றிக் கொண்டது.    இப்போது தென் துருவம் தன்னை மாற்றிக் கொள்வதில் விரைவாய்  முனைந்துள்ளது !  சீக்கிரம் இரு துருவங்களும் திருப்பமாகி, அடுத்த பாதி, பரிதி உச்சம்  [Solar Max]  பூர்த்தியாகும். 2013 ஆண்டு முடிவில் வடுக்கள் உச்சமடைந்து துருவ மாற்றம் பூரணம் அடையும் போது அதனால் என்ன விளைவுகள் உண்டாகும், எப்படி உண்டாகும், எப்போது உண்டாகும் என்பது விளைவுகள் நிகழ்ந்த பின்புதான் தெரியும் என்று விஞ்ஞானிகள்கள் கூறுகிறார்.

    Fig 1 Increases Solar Activity

    “2011 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2012 ஆண்டு நடுவில் நேரப் போகும் பரிதியின் “24 ஆம் சுழல் நிகழ்ச்சி” எனப்படும் காந்தத் துருவத் திருப்பம் (Solar Cycle 24) 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் (Plus or Minus 6 Months) முதலிருந்தே ஆரம்பமாகும் !  2013 ஆண்டு துருவத் திருப்பம் முழுமை அடையும்.   அந்த சுழல் நிகழ்ச்சியின் தீவிரம் வலுத்ததா அல்லது பலவீனமானதா என்று விஞ்ஞானிகள் முன்னறிவிப்பதில் ஏகோபித்த முடிவின்றி பிளவு மனப்பான்மையில் உள்ளது. எவ்வளவு சீக்கிரம் தோன்றிப் புதிய சுழல் நிகழ்ச்சி பழைய தேயும் நிகழ்ச்சியை மூழ்க்கி விடுகிறதோ அத்துணைத் தீவிரத்தில் பற்பல பரிதி வடுக்கள் (Sunspots) தோன்றி வலுவான காலநிலை மாறுதல் இருக்கும் என்னும் கருத்தில் இருதரப்பாரும் ஒத்துப் போகிறார்.  புதிய சுழல் நிகழ்ச்சி முழுவதும் மலரும் போது மென்மேலும் பரிதி வடுக்கள் பெருகிப் (பூமியில்) அதிகமான பூதப் புயல்களை உண்டாக்கும்.”

    நோவா விஞ்ஞானி டக்லஸ் பைசேக்கர் முன்னறிப்பு (Douglas Biesecker NOAA) (National Oceanic & Atmospheric Administration) (ஏப்ரல் 25, 2007)

    “விண்வெளிப் பொறிநுணுக்க ஆய்வு அடிப்படையில் நமது வளரும் உளவியல் கருவிகள் உன்னத முறைகளில் அமைக்கப்படத் தேவைப்படுகின்றன.  அதற்குக் காரணம் கடந்த காலத்தை விடத் தற்போது நாம் மிகையாக விண்வெளிக் காலநிலைப் பாதிப்புகளுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.”

    அமெரிக்கன் ஓய்வு வைஸ் அட்மிரல், டாக்டர் கொன்ராடு லௌடன்பாச்சர் (Conrad Lautenbacher Junior)

    Fig 1A Solar Initiation of Global Problems

    கடந்த வரலாற்றுப் பதிவுகள் பூமியின் அடுத்த துருவத் திருப்பம் வரப் போவதை வழிமொழிகின்றன.  சராசரியாக 400,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூதளக் காந்த துருவ மாற்றம் நிகழ்கிறது.  அந்தக் கால எண்ணிக்கைத் தாறுமாறாகவும் வேறுபடுகின்றது.  பூமியின் சென்ற துருவத் திருப்பம் சுமார் 800,000 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்திருப்பதாகப் பூதளவியல் வரலாற்றுப் பதிப்புகள் கூறுகின்றன.  துருவத் திருப்பங்கள் எதிர்பாராத கால வேறுபாடுகளில் தோன்றுபவை.  அந்தத் துருவ மாற்றம் இன்னும் சில நூற்றாண்டுகளில் வரலாம்.  அல்லது சில மில்லியன் ஆண்டுகள் கழிந்தும் ஆகலாம்.”

    ஆன்ரு பிக்கின்.

    “கடந்த ஆண்டுகளில் சில பறவை இனங்கள் துருவத் திருப்பக் காலங்களில் கடற் பயணம் புரிந்த போது திசை தடுமாறிப் போயுள்ளன !  ஒற்றைச் செல் உயிர் ஜந்துகள் (Single-celled Organisms) சில மேல், கீழ் நிலை அறிய முடியாதபடி அழிந்து போயிருக்கின்றன !  கடந்த காந்த முனை மாற்ற காலங்களில் மனித இனம் பிழைத்து எழுந்திருப்பதாகத் தெரிகிறது.  ஆகவே அடுத்து வரப் போகும் புதியத் துருவத் திருப்பத்தில் மனித இனம் பாதகம் அடையாமல் மீட்சி பெறலாம் !”

    டேவிட் குப்பின்ஸ், லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து.

    Fig 1B Earth's Atmosphere

    நோவா விஞ்ஞானிகள் 2012 ஆண்டு பரிதிச் சுழல் நிகழ்ச்சி பற்றி முன்னறிப்பு

    பரிதியின் அடுத்த பதினோர் ஆண்டுத் துருவத் திருப்ப நிகழ்ச்சி 2008 மார்ச் மாதத்திலே ஆரம்பித்து விட்டது !  அதன் உச்ச நிலை 2011 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2012 ஆம் ஆண்டு மத்தியில் உண்டாகி இன்னும் ஓராண்டு கூட நீடிக்கலாம் என்று அமெரிக்க §சீய கடற் சூழ்வெளிக் கண்காணிப்பு ஆணையகம் (NOAA) (National Oceanic & Atmospheric Administration) ஓர் எச்சரிக்கை முன்னறிப்பை உலக நாடுகளுக்கு வெளியிட்டுள்ளது.  பரிதியின் அந்த இயற்கை துருவத் திருப்பம் “பரிதிச் சுழல் நிகழ்ச்சி 24″ (Solar Cycle 24) என்று விஞ்ஞானிகளால் குறிப்பிடப் படுகிறது.  நோவாவின் விஞ்ஞானக் குழுவினர் அந்நிகழ்ச்சி யின் எதிர்காலப் பாதக விளைவுகளைக் கணிக்கும் போது, அவை தீவிரம் மிகுந்ததா அல்லது குன்றியதா என்று கூறுவதில் ஏகோபித்த உடன்பாடில்லாது அவர்களுக்குள் பிளவு பட்ட முரணான ஊகிப்பே தெரிய வருகிறது !  மேலும் அது ஓர் கோர நிகழ்ச்சியாக இருக்கலாம் என்றும் உறுதியாக இருதரப்பாரும் கூற முடியவில்லை !

    Protection for Earth

    “நோவாவின் விண்வெளிச் சூழ்நிலை மையம் (NOAA’s Space Environment Center) அண்ட வெளிக் காலநிலை (Space Weather) விழிப்பூட்டல், எச்சரிக்கை, முன்னறிவிப்பு ஆகிய உலகப் பணிகளை மேற்கொண்டுள்ளது,  (பூமியைச் சுற்றும் விண்ணுளவிகள் மூலம்) பரிதி முதல் புவியின் கடல்வரை இரவும் பகலும் வருடம் பூராவும் கண்காணித்து வருகிறது” என்று நோவாவின் வணிகத்துறைச் செயலாளர் அமெரிக்கன் ஓய்வு வைஸ் அட்மிரல், டாக்டர் கொன்ராடு லௌடன்பாச்சர் (Conrad Lautenbacher Junior) கூறுகிறார்.

    சூரியக் கொந்தளிப்பு விளைவால் பூமியில் ஏற்படும் கோர நிகழ்ச்சிகள்

    தீவிர இயக்கப் போக்கின் சமயத்தில் பரிதியில் அசுரக் கொந்தளிப்புகள் ஏற்பட்டு அடிக்கடி “கனல் நாக்குகள்” (Solar Flares) பல மில்லியன் மைல்கள் நீண்டு அனைத்துக் கோள் களையும் தாக்குகின்றன.  சூரியத் தீ நாக்குகள், வாயுக் கனல் உமிழும் அகண்ட வெடிப்புகள் (Vast Explosions Known as Coronal Mass Ejections), அதி தீவிர ஒளித் துகள் களையும் (Energetic Photons), மின்கொடை மிகுந்து முறுக்கேறிய பிண்டங்களையும் (Highly Charged Matter) பூமியை நோக்கி எறிகின்றன.  அப்போது பூமியில் என்ன பாதிப்புகள் நேருகின்றன ?

     

    Fig 1D Satellite Communications

     

    1. பூமியின் அயனிக் கோளத்துக்கு (Ionoshere) தீ நாக்குகளால் ஓர் உதை கிடைக்கிறது.

    2. பூகோளக் காந்த தளத்திற்கு (Geomagnetic Field) தீ நாக்குகளால் ஓர் உதை கிடைக்கிறது.

    3. மின்சக்தி பரிமாற்ற இணைப்பு ஏற்பாட்டில் (Power Grid) மின்னோட்டத் துண்டிப்புகள் நிகழும்.

    4. இராணுவக் கண்காணிப்பு, ஆகாய விமானத் தொடர்பு, துணைக் கோள்கள் தொடர்பு, பூகோள இடக்குறிப்பீடு நோக்குச் சமிக்கைகள் (Global Positioning System Signals) போன்றவை தடைப்படும் !

    5 அண்டவெளிப் பயணங்களில் விண்வெளி விமானிகள் தீங்கிழைக்கும் கதிர்வீச்சுத் தாக்கப் பட்டுப் (Harmful Radiations) பாதிக்கப்படுவார்.

    6 துருவப் பகுதிகளில் செந்நிறத்திலும், பச்சை நிறத்திலும் விண்வெளியில் வேடிக்கை காட்டும் “வண்ணொளிக் கோலங்களுக்குப்” (Colourful Aurora) பேரொளி ஊட்டப்படும்.

    Sunspot Prediction of Solar Cycle 24

     

    சூரியனில் துருவத் திருப்பத்தைப் புரியும் பரிதி வடுக்கள்

    பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறை சூரியனின் துருவத் திருப்பத்தைத் தூண்டுபவை பரிதியின் முகத்தில் தேமல் போல் முளைக்கும் செந்நிற வடுக்களே !  இந்தப் பரிதி வடுக்களைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு. 2100) பார்த்து அறிந்தவர் சைனாவின் வானியல் ஞானிகள்.  17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் முதன்முதல் தன் தொலைநோக்கி மூலம் கண்டவர் இத்தாலிய வானியல் மேதை காலிலியோ.  ஆயினும் பரிதி வடுக்களை முறையாக 1826 ஆம் ஆண்டில் பதிவு செய்தவர் ஜெர்மன் விஞ்ஞானி சாமுவெல் ஹென்ரிச் சுவாபே (Samuel Henrich Schwabe)  1843 இல் அவர் உறுதியாகச் சோதித்துப் பரிதி வடுக்கள் எண்ணிக்கையில் நீச்சத்திலிருந்து உச்சத்துக்கும், பிறகு உச்சத்திலிருந்து நீச்சத்துக்கும் மாறி வருவதாகக் காட்டி பரிதிச் சுழல் நிகழ்ச்சி நியதியை முதன்முதல் உருவாக்கினார்.

    Solar field strength

    1915 இல் காலி·போர்னியா மௌன்ட் வில்ஸன் நோக்ககத்தின் அமெரிக்க வானியல் விஞ்ஞானி ஜியார்ஜ் எல்லெரி ஹேல் (GeorgeEllery Hale) பரிதி வடுக்கள் பொதுவாக இரட்டை இரட்டையாக இருப்பவை என்றும் அவை பரிதி மத்தியக் கோட்டு இணையாக (Parallel to the Sun’s Equator) இருப்பவை என்றும் எடுத்துக் காட்டினார். மேலும் இரண்டு வடுக்களும் வெவ்வேறாக நேர் எதிர்த் துருவக் காந்தத்தில் மாறி இருக்கும் விந்தையைக் கண்டு பிடித்தார்.  அடுத்த விந்தையாக பரிதியின் வடகோளப் பகுதியில் இருந்த அத்தனை இரட்டை வடுக்களும் வட திக்கை நோக்கி இருப்பதையும், தென்கோளப் பகுதியில் உள்ள இரட்டை வடுக்கள் அனைத்தும் தென் திக்கை நோக்கி இருப்பதையும் அறிவித்தார்.  அதாவது பரிதியின் துருவ முனைகளின் வடதென் திசையை நிர்ணயம் செய்பவை பரிதியின் வடுக்களே என்பது உறுதிப் படுத்தப் பட்டது !

    சராசரி 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி தனது துருவ முனைகளைத் திருப்புகிறது என்பது தெளிவாக அறியப் பட்டது.  வட துருவம் தென் துருவமாகவும், தென் துருவம் தென் துருவ மாகவும் சூரியனில் தவறாமல் நிகழும் ஓர் இயற்கை நிகழ்ச்சியாக இருந்தது.  அதாவது 22 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழல் நிகழ்ச்சியாக ஒரு துருவம் திசைமாறி மறுபடியும் ஒரே திசைக்கு மீண்டது.  பரிதியின் இந்தப் புதிர் நிகழ்ச்சி ஏன் அவ்விதம் ஓர் சுழல் நிகழ்ச்சியாக  மீண்டும் மீண்டும் நேருகிறது என்று விஞ்ஞானிகள் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை !  அதுபோல் பூமியும் 780,000 ஆண்டுகளுக்கு முன் தனது துருவத்தின் திசையை ஏன் மாற்றியது என்பதற்கும் விஞ்ஞானிகள் காரணம் அறிய முடியவில்லை !  1645 ஆண்டு முதல் 1715 வரை பரிதி வடுக்கள் நீச்ச அளவில் (Maunder Minimum) இருந்ததை பிரிட்டிஷ் வானியல் விஞ்ஞானி வால்டர் மௌண்டர் (Walter Maunder) பதிவு செய்துள்ளார்.  பரிதியின் சுழல் நிகழ்ச்சியின் தீவிரம் பரிதி வடுக்களின் உச்ச எண்ணிக்கையைப் பொறுத்தது.  அந்த உச்ச எண்ணிக்கை அப்பகுதியில் நேரும் காந்தக் கொந்தளிப்பைக் காட்டுகிறது.  மிகையான பரிதி வடுக்கள் அப்பகுதியிலிருந்து எழும் அசுரப் புயல் அடிப்பின் தீவிரத்தைக் எடுத்துக் காட்டும்.

    Fig 1F Sunspot Build up

    பூமியில் நேரும் இயற்கைத் தீங்குகளைத் தூண்டும் காரணிகள்

    நியூட்டனின் முதல் நகர்ச்சி நியதி கூறுகிறது : “ஓர் அண்டம் முடங்கிக் கிடக்கும் அல்லது சீராகத் தொடர்ந்து செல்லும், வேறோர் வெளிப்புறத் தூண்டுதல் அதை உந்தித் தள்ளா விட்டால்.”  இந்த அரிய நியதியே நமக்கு எதிர்ப்படும் இயற்கைத் தீங்குகளைத் தூண்டும் காரணிகளைக் கூறும்.  பூமியில் திடீரென எரிமலை வெடிப்பது ஏன் ?  யாரும் அறியாமல் பூமி அதிர்ந்து பூகம்பம் உண்டாவது ஏன் ?  கடற்தள அடித்தட்டுகள் உந்தப்பட்டுக் கடல் வெள்ளம் பொங்கி அசுர வேகத்தில் சுனாமியாக மாறிக் கடற்கரைகளைத் தாக்குவது ஏன் ?  பூமிக்குள்ளே உலோகத் திரவத்துக்குள் பம்பரமாய்ச் சுழலும் இரும்பு உட்கரு உருண்டை எப்படி இவற்றை எல்லாம் இயக்கிப் பூமிக்கு மேல் எழச் செய்து மக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறது என்னும் கேள்வி நமக்கு எழுகிறது.  உட்கருவில் இந்தக் கொந்தளிப்பைத் திடீரென உண்டாக்கும் வெளிப்புறத் தூண்டுதல்களில் பரிதிப் புயல்கள் ஒரு காரணம் என்று சொல்லலாம் !  அடுத்து பதினோர் ஆண்டுகட்கு ஒருமுறை பரிதி வடுக்கள் எண்ணிக்கை பெருகிக் கதிர்வீச்சுகளோ, காந்த எழுப்புகளோ பூமியைத் தாக்குவது ஒரு காரணம் என்று சொல்லலாம் !  எல்லாவற்றுக்கும் மேலாக பூமியில் அரைமில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை நேரும் பயங்கரத் துருவ மாற்றமும் ஒரு காரணம் என்று நாம் கூறலாம் !

    [தொடரும்]

    +++++++++++++++++++

    தகவல்: Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world (1998)

    8. Physics for Poets By :  Robert March (1983)

    9. Atlas of the Skies (2005)

    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)

    11 (a) Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)

    11 (b)  Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)

    12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]

    13 Pure Energy System News : Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton

    14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)

    15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)

    16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)

    17 Solar Pole Shift & Pole Reversal in 2012 ( http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools ) By : Patrich Geryl (May 19, 2009)

    18 Science at NASA – The Sun Does a Flip (February 15 2001)

    19 India Daily Technology Team (Aug 8, 2005)

    20 NASA Claims Sun Polar Shift Due in 2012 (Dec 9, 2005)

    21 Earth Wobbles Linked to Extinctions (Oct 11, 2006)

    22 The Sun’s Magnetic Cycle By Dr. David Stern (April 12, 2007)

    23 Earth’s Magnetic Reversals & Moving Continents By Dr. David Stern (Feb 23, 2008)

    24 The Sunspot Cycle By Mitzi Adams (June 6 2009)

    25 ECTV News Letter – Has The Solar Magnetic Pole Reversal Already Begun ? By : Mitch Battros (Oct 10, 2005)

    26 New Sunspot Activity Threatens Mobile Phone Networks (Jan 7, 2008)

    27 Sun’s Polar Reversal 2012 – The Next Magnetic Polar Shift & Consequences

    28 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40906041&format=html (Earth’s Pole Reversal)

    29 National Geographic – Sun Bursts By Curt Suplee (July 2004)

    30 American National Oceanic & Atmospheric Administration (NOAA) Forecast – Next Solar Storm Cycle 24 Will Start Late NOAA Website : http://www.noaa.gov & NOAA’s Space Environment Center: (April 25, 2007)

    31 Solar Cycles & the Earth’s Weakening Magnetic Field By Alexi Ansari (April 23, 2009)

    32   http://lynleahz.com/2013/08/06/nasa-confirms-suns-magnetic-field-is-about-to-flip/  [August 6, 2013]

    33  http://dddusmma.wordpress.com/2013/07/12/sun-spots/  [July 12, 2013]

    34  http://survivingthepoleshift.com/tag/solar-maximum/  [July 24, 2013]

    35  http://www.npr.org/blogs/thetwo-way/2013/08/08/210184749/nasa-sun-getting-ready-for-a-field-flip  [August 8, 2013]

    36  http://www.spacedaily.com/reports/The_Suns_Magnetic_Field_is_about_to_Flip_999.html [August 7, 2013]

    37  http://www.universetoday.com/103960/   [August 6, 2013]

    38  http://science.nasa.gov/science-news/science-at-nasa/2013/05aug_fieldflip/  [November 15, 2013]

    39.  http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6j4bl57D_1U

    40  http://blogs.scientificamerican.com/life-unbounded/2013/10/22/dont-panic-its-just-a-solar-field-reversal/  [October 22, 2013]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (November 16, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    YouTube – Videos from this email
    Share
  • த்ரில்

    கோதை நாராயணன் 

    “ஏய்  உன் பட்டிக்காட்டு மச்சான் வந்துட்டாண்டி ….”

    “வாட் நான்சென்ஸ்… இன்னொரு தடவை என்னோட மச்சான்னு சொன்னீங்க நடக்கிறதே வேற….”

    “ஏண்டி நீ ப்ரொபசர் பொண்ணு அப்டிங்கறதுக்காக ஒன்லி ஃபார் சிட்டி பாயிஸ் அப்டின்னு ரூல் இருக்காடி… அவன் உன் சொந்த காரன் வேற…. “தோழிகள் மேலும் கலாய்க்க…

    “ஐயோ…. ஸ்டாப் திஸ் சில்லி திங்… ரித்திகா உண்மையிலேயே டென்ஷன் ஆக ஆரம்பித்தாள் .

    அவனும் அவன் மூஞ்சியும், ஐய…பேரப் பாரு துரைப்பாண்டி… அம்மாவை சொல்லணும் என்னமோ நன்றி கடனாம், அதுக்கு வேற கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்திருக்கலாமே… இப்டி நான் படிக்கிற,அதுவும் என் டிபாட்மெண்டெ… ஐயோ ஒவ்வொரு நாளும் ப்ரண்ட்ஸ் அடிக்கிற கொட்டம் தாளல… இதுக்கு ஒரு முடிவு கட்டணும்… தீர்மானித்தபடியே வகுப்புக்கு சென்றாள் .

    ப்ரொபசர் மல்லிகாவின் புதல்வி ரித்திகா, சிறு வயதிலேயே ரித்திகாவின் அப்பா பரலோக பதவி அடைந்து விட்டதால், தனி பெண்ணாக போராடி முன்னிலைக்கு வந்தவர் மல்லிகா. அப்படி அவர் கஷ்டப்பட்ட காலங்களில், மேல்படிப்பிற்கு பணம் கட்ட வழி இல்லாத ஒரு காலகட்டத்தில் பணம் கொடுத்து உதவியவராம் மயில்சாமி தாத்தா. அதற்கு நன்றி கடனாக தான் அவருடைய மகன் வழி பேரன் துரைப்பாண்டிக்கு, தான் வேலை பார்க்கும் அதே கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்தார். கிராமத்திலேயே  பிறந்து வளர்ந்து, பள்ளிப் படிப்பையும் முடித்தமையால் துரைப்பாண்டி இங்கு நகரத்திலேயே பிறந்து வளர்ந்து நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் தன் சக தோழர்களுக்கு நடுவில் அல்லோலபட்டுக் கொண்டிருந்தான்.

    மறுநாள் கல்லூரி சுற்றுலா செல்ல அனைவரும் ஆயத்தப்பட்டு கொண்டு இருந்தார்கள். அனைவர் மனதிலும் உற்சாகமும், குதூகலமும் …..

    ரித்திகாவும் தன் தோழிகளுடனும்,தோழர்களுடனும் அமர்க்களப்படுத்தி கொண்டு இருந்தாள். ப்ரொபசர் என்பதால் மல்லிகாவும் வேறு சில பேராசிரியர்களும் என ஒரு பெரிய படையே கிளம்பியது. மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் என இரண்டு பேருந்துகள் கிளம்பின .

    மல்லிகாவின் பைகளை கொடுக்க வந்த ரித்திகா மாணவர்களின் பேருந்திலேயே இருக்கும்படி ஆயிற்று. ரித்திகாவுக்கு அம்மாவின் மேல் ஒரே கோபம் .

    “போம்மா ….உன்னால தான் லேட் …”

    “சரி இப்போயென்ன ரித்தி… அடுத்த நிறுத்தத்தில் நீ இறங்கி மாறிக்கோ….”

    அவருக்கு தெரியாது அல்லவா அடுத்த நிறுத்தம் வரப்போவதே இல்லை என்று.

    “ப்ச்” என சலித்தபடியே தன் மாணவ தோழர்களுடன் போய் அமர்ந்து கொண்டாள் .

    அனைவரும் கை தட்டி பாட்டு பாடிய படியே பேருந்து சென்று கொண்டிருந்தது.

    “ஏலே …”

    “ஏ …துரைபாண்டி …!” மாணவர்கள் கிண்டலாக இப்படி தான் அழைத்து கொண்டிருந்தார்கள். இங்கும் அங்குமாக அவர்கள் இழுப்புக்கெல்லாம்  சிரித்தபடியே சென்று கொண்டிருந்தான்.

    ரித்திகாவுக்கு தமாசாக இருந்தது அவனைப் பார்க்க……கை தட்டி துரையை அழைத்தாள்.

    வேகமாய் வந்து நின்றான்.

    “போய் …பின்னாடி ராஜேஷ் கிட்ட வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வா ….”

    “சரி”யென …வெட்கமாய் சிரித்தபடியே சென்றான்.

    “கொடுமைடா சாமி” என முணுமுணுத்துக் கொண்டாள்.

    போன வேகத்தில் இல்லையென வந்தவனை …ப்ச் … என எரிச்சலாய் முறைத்து விட்டு தானே எழுந்து பின் சீட்டிற்கு சென்றாள்.

    ரித்திகாவை கண்டதும் சில ஆல்ஹகால் பாட்டில்கள் மறைக்கப்பட்டன…

    “என்ன ரித்தி ….?”

    “இல்ல …நானும் அப்போதிலிருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன், எல்லோரும் அப்பப்போ பின்னாடி சீட்டுக்கு வந்துட்டு போறீங்களே… அதான் நானும் வந்தேன்…”

    அசட்டு சிரிப்பு சிரித்தபடியே “இதையெல்லாம் கண்டுக்காத ரித்தி… உனக்கு தெரியாதாயென்ன?” — இது ராஜேஷ்.

    மறைக்கப்பட்ட பாட்டில்களை பார்த்த ரித்திகா, “ஐயோ! கர்மம் கர்மம்! ஏண்டா, இன்னும் நாம பார்க்க வேண்டிய இடத்தை ரீச் பண்ணவே இல்ல … அதுக்குள்ளவா ?”

    “இதெல்லாம் ஒரு த்ரில் ரித்தி… காலேஜ் டூர் அதிலும் இறுதி ஆண்டு ஒரு த்ரில் வேண்டாமா?” — இது ரவி.

    “ஒவ்வொரு நிமிஷத்தையும் என்ஜாய் பண்ணனும் ரித்தி” — இது ரிஷி.

    “அங்க முன்னாடி உங்க மாம் பிளஸ் மேம் இருக்கிறதால இப்டி பின்னாடி வந்துட்டு போறோம்” –அரவிந்த் கிண்டலாக.

    “ம்….அதுவரைக்கும் சந்தோஷம்” எனக் கூறி சிரித்தபடியே ரித்திகா தன் இருக்கைக்கு வர திரும்பிய கணப்பொழுதில் அது நடந்தது.

    எதிரே வந்த லாரியின் மேல் இவர்களது பேருந்து மோதுவதிலிருந்து காப்பாற்ற அருகிலிருந்த மரத்தில் லேசாக மோதி டிரைவர் வண்டியை நிறுத்த, நின்று கொண்டிருந்தமையால் ரித்திகாவால் சுதாரிக்க முடியாமல் போக, உடைந்த கண்ணாடி ஒன்று அவள் தோளில் பலமாக பதம் பார்க்க, இரத்த வெள்ளத்தில் மயங்கினாள் ரித்திகா.

    கூக்குரல் எடுத்து முதலில் கத்தி பின் நிலைமையை உணர்ந்த அனைவரும் படபடவென இறங்கினார்கள். மாணவர்கள் என்பதால் வேக வேகமாக செயல்பட்டார்கள்.

    மல்லிகா சத்தமாக அழ ஆரம்பித்தார் .”ஐயோ ரித்தி… கண்ணை முழிச்சு பாருடி…”

    “மேம்… டோண்ட் ஒரி மேம்… பக்கத்துல தான் ஹாஸ்ப்பிடல்… சீக்கிரம் போய்டலாம்”

    “டே ய்! வாங்கடா சீக்கிரம்”

    ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு அனைவரும் ஹாஸ்ப்பிடல் வந்து சேர்ந்தனர்.

    எமர்ஜென்சி பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட ரித்திகாவை சோதித்து விட்டு வெளியே வந்த டாக்டரை அனைவரும் சூழ்ந்தனர்.

    அழுதபடியே மல்லிகா,”டாக்டர் ……..?”

    “நத்திங் டு ஒர்ரி… மயக்கம் இன்னும் கொஞ்ச நேரத்துல தெளிஞ்சுடும்… ஒரு மைனர் ஆபரேஷன் தோளில் பண்ணனும்… இரத்தம் ரொம்ப வெளியேறி இருப்பதால் உடனடியாக இரத்தம் தேவை… அதற்கு பிரச்சனை இருக்காது இல்​லையா…?”

    “பிரச்சனை இல்லை டாக்டர் அதற்கு என் மாணவர்கள் இவ்ளோ பேர் இருக்கிறார்கள் …” என திரும்பி தன் மாணவர்களை பார்த்தார்.

    ‘த்ரில்லில்’ ஈடுபட்டிருந்த அத்தனை மாணவர்களும் மல்லிகாவை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து பின்வாங்க, “நான் தருகிறேன் டாக்டர் என் இரத்தத்தை” எனக் கூறிய துரைப்பாண்டியின் குரல் மயக்கதிலிருந்த ரித்திகாவின் காதுகளுக்கு உயிராக ஒலித்தது.

    Share
  • சச்சின் டெண்டுல்கர் – இந்தியக் கிரிக்கெட்டின் ஒரு சகாப்தம்

    சு. ரவி

    SACHIN TENDULKAR

    இச்சிறு  பாலகன் தான்

    இந்திய  நாட்டைப் புகழின்

    உச்சியில் ஏற்றிவைத்தான்

    உண்மையில் கிரிக்கெட்டுக்கே

    அச்சினைப் போலே நிற்பான்;

    ஆணிவேர் போலே ஆவான்

    சச்சினைப் போலே இங்கே

    சகாப்தமாய் நிற்பார்  யாரே?

     

    எத்தனை சதங்கள்? மொத்தம்

    எத்தனை  ஆயிரங்கள்?

    எத்தனை களங்கள் ? மற்றும்

    எத்தனை சாதனைகள்?

    அத்தனை  உயரம் கண்டும்

    அணுவள வேனும் கருவம்

    சச்சினைத் தொட்டதாகச்

    சரித்திரம் சொன்ன தில்லை!

     

    சாதனை நிகழ்த்தும் போதும்

    சட்டென வீழ்ந்த போதும்

    சோதனையாக நடுவர்

    சொதப்பிடும் தீர்ப்பின்போதும்

    யாதொரு சலனம் தோன்றா

    ஓவியத் தலர்ந்த பூவாய்

    மேதகு கம்பன்  வாக்கின்

    மெய்ப்பொருள் போலே நிற்பான்!

     

    கறங்கெனச் சுழலும்  மட்டை

    கையிலே தாங்கும் வீரன்

    விறல்மிகும் ஆட்டம் கண்டு

    வியந்தவர், பந்து வீச

    மறந்தவர், களத்தில் நிற்க

    மருண்டவர், பந்து வீச்சைத்

    துறந்தவர்,துரத்திசென்று

    துவண்டவர்-எத்தனைபேர்?

     

    நிருத்தனப்  பாதம்  வைத்து

    நீவிளையாடி உந்தன்

    குருத்திளம்   தோள்கள் மீது

    குன்றெனச் சுமந்தாய்! உனபோல்

    ஒருத்தரும் இருந்த தில்லை!

    ஓய்வினை விருப்பம் கொண்டாய்!

    வருத்தமாய்  விழிநீர் சோர

    விடைகொடுக் கின்றோம்! வாழி!

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 14ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    உடைக்கை யொருக்கி உயிரை அடைத்து வைத்த

    சடக்கைச் சதமென்று சார்ந்து அங்கு இறுமாந்தை
    உடைக்கைத் தகர்த்தே உயிரை யமன் கொள்கையிலே
    அடக்கமாய் வைத்த பொருள் அங்கு வரமாட்டாதே. 1.

    புலால் உடலைக் காற்றால் நிரப்பி மூடி, அதில் உயிரை அடைத்து இந்த உடலை நிரந்தரமானது என்று எண்ணி இறுமாப்போடு அதில் குடியிருந்தாய்; பிறகு எமதர்மன் வந்து இந்த உடலில் நிரம்பியிருந்த உயிரைப் பறித்துக் கொண்டு போகின்ற காலத்தில், நீ அதுநாள் வரை சேர்த்து மறைந்து வைத்திருந்த பொருட்களும், செல்வங்களும் உன்கூட வராது என்பது உனக்கும் தெரியும் அல்லவா, அப்போது என்ன செய்வாய்?

    தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை
    முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல்
    பற்றிப் பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம்
    சுற்றியிருக்கும் வினை சூழந்தனையே நெஞ்சமே. 2.

    ஏ மனமே! சொல்லச் சொல்லத் தெவிட்டாத தேனைப் போன்றது சிவனுடைய ஐந்தெழுத்து மந்திரம். அப்படிப்பட்ட தித்திக்கும் தெவிட்டாத தேனை ருசிக்காமல், தேவர்கள் அருந்தும் அமிழ்தத்தையொத்த *முப்பாழாம் அதிமுக்கிய தத்துவங்களை வணங்கிப் போற்றிப் புகழாமலும் தலை வணங்காமலும், எமன் வந்து உயிரைத் தான் பாசக்கயிற்றால் கட்டிப் பற்றி இழுக்கும்போது உன்னைச் சுற்றியிருக்கும் தீவினைகள் எனும் காட்டில் அழுந்திக் கிடக்கின்றனையே.

    (*முப்பாழாவன மாயைப் பாழ், போதப்பாழ், உபசாந்தப்பாழ் ஆகியன. போதப்பாழ் என்பது ஆன்ம அறிவு அகல விளங்குதல், உபசாந்த நிலையில் பரவெளியில் இருத்தல் உபசாந்தப் பாழ். மாயைப் பாழில் தத்துவங்கள் தூய்மை அடையும்; போதப் பாழில் ஆன்மா தூய்மை அடையும்; காரிய காரண உபாதைகள் நீங்குவதால் உபசாந்தம் உண்டாகும் என்கிறது “திருமந்திரம்”. ‘தத்வமசி’ நீ அதுவாகிறாய் எனும் வாக்கின் பொருளை விளக்கும் விதத்தில் அமைந்த கருத்து. தத்+துவம்+அசி இவை ‘இரண்டு அல்லாதது” அதாவது பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறு வேறானவை அல்ல என்பது. இதன் பொருள் “நீ அதுவாகிறாய்”7

    மாயப்பாழும், சீவப்பாழும், உபசாந்தப் பாழும் நிலைபெற்ற பரனின் அறிவுக்கு அப்பாற்பட்ட முப்பாழ் என்கிறது. சிவசக்தியான அருளில் ஜீவன் ஓங்கி நிற்கும் மூன்று பாழ்நிலைகளாம். அத்தகைய தூய்மையான சிவ சொரூபத்தில் அடங்கி நிற்பதே ‘தத்வமசி’ எனும் வாக்கியத்தின் முடிவாகும்.)

    அஞ்செழுத்தாய் எட்டெழுத்தாய் ஐம்பத்தோ ரட்சரமாய்ப்
    பிஞ்செழுத்தாய் நின்ற பெருமானைப் போற்றாமல்
    வஞ்சகமாயுற்ற முலை மாதவர் வலைக்குள்ளாகிப்
    பஞ்சரித்துத் தேடிப் பாழுக் கிரைத்தோமே. 3.

    ஒப்புயர்வற்ற எழுத்து பஞ்சாட்சரம் எனும் ஐந்தெழுத்து மந்திரம்; எட்டு அட்சரம் கொண்டது அஷ்டாட்சரம்; ஐம்பத்தோரு அட்சரமாகவும், சக்தியின் பீஜாக்ஷரமாகவும் விரிந்து பரவியுள்ள நம் பரமேஸ்வரனைத் துதித்துப் போற்றாமல் வஞ்சக மனமும், மயக்கும் மார்பகமும் கொண்ட பெண்களின் மாயா மோக வலையில் அகப்பட்டு அவர்களிடம் அடிமைப்பட்டுக் கீழ்ப்படிந்து மன்றாடி நின்று காலத்தை வீணடித்தோமே.

    (அஞ்செழுத்து என்பது “சிவாயநம” எனும் மந்திரம். எட்டெழுத்து என்பது “ஓம்; ஆம்; அவ்வும்’ என்பதாகும், இதுவும் சிவாயநம: என்பதாகும். ஐம்பத்தோரு அட்சரம் என்பதை பிஞ்செழுத்து, சத்தியாக்ஷரமாகிய வகரம் ஆகியவைகளை குரு மூலமாக உபதேசம் பெறுதல் வேண்டும் என்கின்றனர் பெரியோர்)

    அக்கறுகு கொன்றை தும்பை அம்புலியும் சூடுகின்ற
    சொக்கர் திருத்தாளைத் தொழுது வணங்காமல்
    மக்கள் பெண்டிர் சுற்றமுடன் வாழ்வை மிகநம்பி அன்பாய்
    எக்காலமும் உண்டென எண்ணினையே நெஞ்சமே. 4.

    ஓ என் நெஞ்சே! சிவனுக்கே உரிய ருத்திராக்ஷ மாலையும், கொன்றை மலர்களையும், தும்பைப் பூக்களையும், பிறைச் சந்திரனையும் தன் முடியில் சூடிய எம்பெருமான் சொக்கநாதரின் திருவடிகளே சரணமென்று விழுந்து வணங்காமல், நீ இன்னாள் வரை என்ன செய்து கொண்டிருந்தாய்? நான் எனது எனும் ஆணவ மலத்தோடு கூடிய உறவு முறையில் என் மக்கள், என் மனைவி, என் சுற்றம் என்று இந்த வாழ்வு என்னவோ நிரந்தரமானது என்று நம்பிக்கொண்டு இந்த உறவுகளோடு எப்போதும் இப்படியே மகிழ்ச்சியோடு உறவாடிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தாயே, சரிதானா?

    ஆண்ட குருவின் அருளை மிகப் போற்றி
    வேண்டும் கயிலாய வீட்டு வழிபாராமல்
    பூண்ட குழல் மாது நல்லார் பொய் மாய்கைக்கு உள்ளாகித்
    தூண்டிலில் அகப்பட்டுத் துடி கெண்டை யானேனே. 5.

    உலகத்து உயிர்களையெல்லாம் அருள்பாலித்து ஆண்டு அனுக்கிரகம் செய்யும் பரமகுருவான சிவபெருமானின் பேரருளைப் போற்றி வழிபட்டு அவனடியில் வீழ்ந்து வீடுபேறு பெற்று கயிலாயம் செல்ல வழி காணாமல், வாசமலர்களை அணிந்த அழகிய மாதரார்தம் பொய்மை மயக்கத்துக்கு ஆட்பட்டுத் தூண்டிலில் மாட்டிக் கொண்ட கெண்டை மீனைப் போல துடிக்கலானேனே, என் செய்வேன்.

    ஏணிப் பழுவாம் இருளை அறுத்தாள முற்றும்
    பேணித் தொழுங் கயிலை பேறு பெறமாட்டாமல்
    காணவரும் பொருளாய்க் கண் கலக்கப்பட்டு அடியேன்
    ஆணியற்ற மாமரம் போல் ஆகினனே நெஞ்சமே. 6.

    ஓ எந்தன் மனமே! கேள். ஏணிப் படிகளைப் போல ஒன்றன் மேலொன்றாக மனத்தில் ஆணவ இருள் வளர்ந்து கொண்டிருக்க, அவற்றை முழுவதுமாக அறுத்தெறிந்து விடுபட்டு கயிலை நாதனாம் சிவபெருமானை தொழுது அடி பணிந்து பெரும்பேற்றைப் பெறமுடியாமல், உயிரையும், சேர்த்து வைத்த செல்வம் முதலான பொருளையும் நிலையானது என்ற ஆணவத்தில் அடியவனான நான் இப்போது ஆணிவேர் அறுந்த மாமரம் போல ஆகிவிட்டேனே என் செய்வேன்.

    கோத்துப் பிரகாசம் கொண்டு உருகி அண்டமெல்லாம்
    காத்தபடியே கயிலாயம் சேராமல்
    வேற்றுருவப் பட்டு அடியேன் வெள்ளம் போல் உள்ளுருகி
    ஏற்றுங் கழுவிலிருந்த பணமானேன். 7.

    மனத்தில் அருள் ஒளியுண்டாகி இவ்வண்டங்களையெல்லாம் தன் கருணையினால் காத்தருளும் கயிலாசவாசியான சிவபெருமானின் திருவடிகளே சரணமென்று சென்றடையாமல், மனவேறுபாட்டோடு அடியவனான நான் மனத்தினுள் வருந்தி கலக்கமடைந்து கழுவில் ஏற்றப்பட்ட பிணம்போல காட்சி தருகின்றேனே.

    நிலைவிட்டு உடலை உயிர் நீங்கி அகலுமுன்னே
    நிலை தொட்ட வேடன் எச்சில் தின்னானைச் சேராமல்
    வலைபட்டு உழலுகின்ற மான்போல் பரதவித்துத்
    தலைகெட்ட நூலதுபோல தட்டழிந்தாய் நெஞ்சமே. 8.

    ஓ என் நெஞ்சே! ஊர்மெச்ச வாழ்ந்த உயர்ந்த நிலையில் இருந்த இந்த பூதவுடலைவிட்டு உயிரானது பிரிந்து செல்லும் முன்பாகவே, காளத்தி வேடனாம் கண்ணப்பன் எச்சிற்படுத்திக் கொடுத்த உணவை உண்ட அந்த சிவபிரான் கழல்களைச் சேர்ந்து உய்ய வழிகாணாமல், இப்படி வலைக்குள் சிக்கிய மான் போல பரிதவித்துத் நூற்கண்டின் நூல் நுனி எது என்றறியாமல் துழாவிடும் மனிதனைப் போல் தவிக்கின்றேனே.

    முடிக்குமயிர்ப் பொல்லா முழுக் குரம்பை மின்னாரின்
    இடைக்கு நடைக்கு இதங்கொண்ட வார்த்தை சொல்லி
    அடிக்கொண்ட தில்லை வனத்து ஐயனே நாயனையேன்
    விடக்கை இழந்த மிருகமது வானேனே. 9.

    எனையாளும் தில்லையில் நடம் பயிலும் நடராசப் பெருமானே! கேவலம் நான் ஒரு நாயைப் போல அலைகின்றேனே. புழு நெளிந்து புண்ணழுகி யோசனை நாறும் கழிமுடை நாற்றத்த உடலைக் கொண்ட மாதரார் கூந்தலை வர்ணித்து, இடையைக் கண்டு மகிழ்ந்து, நடையைப் பார்த்துப் பாராட்டி, மனத்துக்கு இதம் தரும் சொற்களால் அவள் மனத்தை மகிழவைத்து இறுதியில் உன் திருவடிகளை அடையாமல் வாயில் கவ்வியிருந்த மாமிசத்தை இழந்து ஏமாந்து போன மிருகமாய் ஆகிவிட்டேனே.

    பூவாணர் போற்றும் புகழ் மதுரைச் சொக்கரது
    சீபாதம் போற்றிச் சிவலோகம் சேராமல்
    தாவாரம் தோறும் தலை புகுந்த நாய்போல்
    ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே. 10.

    எனக்கு எதிரியான என் நெஞ்சமே! இப்பூமியில் வாழும் மாந்தரெல்லாம் போற்றி வழிபடும் மதுரை சொக்கநாதக் கடவுளின் சீரான பாதங்களைப் போற்றி வழிபட்டு சிவலோகம் சென்றடையும் வழி காணாமல், வீணில் வீடுதோறும் சென்று தலைகாட்டிவிட்டு வரும் நாயைப் போல அலையவிட்டாயே நியாயமா?

    (இன்னும் வரும்)

    Share
  • தன்னைச் சுடும்!..

    ஜெயஸ்ரீ ஷங்கர்

     

    ஹேய்….இங்க பாரேன் கிரி….! மூணு மாசக் குழந்தையைக் கூட இந்த ‘மாண்டசரி ஸ்கூல்ல’ சேர்த்துக்கறாளாம். வெரி நைஸ்…இல்லபா …நல்லவேளையா இப்ப ..நம்ம கீட்ஸு க்கு நாளையோட அவன் பொறந்து நாலாவது மாசம் முடியப் போறது ..இன்னி வரைக்கும் இந்த ஹோர்டிங் அட்வெர்டைஸ்மென்ட் என் கண்ணுலயே படல பார்த்தியா..? டூ யு நோ திஸ் பிஃபோர் ரா….?

    நோ….பார்…….!

    தெரியாதுங்கறியா….? இல்ல ‘நோ பார்’னே சொல்றியா..

    இல்ல பார்கவி தெரியாதுன்னு சொல்றேன். நானும் உன்கூட சேர்ந்து இப்பத்தான் இதைப் படிக்கறேன்..

    யூ…சோம்பேறி …டெய்லி இந்த வழியாத் தானே வரே நீ…அதெப்படி உன் கண்ணுலேர்ந்து இவ்ளோ பெரிய ஹோர்டிங் தப்பிச்சது ?

    இதெல்லாம் உங்க கண்ணுக்குள்ள மட்டும் தான் சிக்கும் ….நான் பாட்டுக்கு ரேடியோ மிர்ச்சி கேட்டுக்கிட்டு எனக்கு முன்னாடி யார் வண்டி ஓட்டறா..? ஏதாவது அம்ச ஃபிகர் கண்ணுல மாட்டாதான்னு டைம் பாஸ் சைட் அடிச்சுண்டு இருப்பேன்..போயும் போயும் இதெல்லாம் யாருக்கு வேணும்? நான் தனியா வெளில வந்தாச்சுன்னா அவ்ளோ தான். சென்ட் பெர்செண்ட் பாச்சலர் ரா…!

    அதே .தான் நானும் திங் பண்ணேன்…உன்னைப் பத்தி….நீயே அதை அக்செப்ட் பண்ணீட்டே…ஹேய் மிஸ்டர் கிரி….நீ தான் மிஸஸ் பார்கவியாகி ரெண்டு வருஷமாயாச்சு….அதுக்கு அடையாளமா..?

    உன் கழுத்துல தாலி தொங்கலை….!

    ம்கும்….உன் காதுல கடுக்கண் மின்னறது மச்சான்….மண்டைக்கு சூடு போட்டுக்கோ சொல்லிட்டேன்….ஒழுங்கா ஆபீஸ் போனமா….வேலையை மட்டும் பார்த்தோமா…பார்கவிக்கும், கீட்சுக்கும் பிடிச்சதை வாங்கித் தந்தோமான்னு நல்ல பையனா லட்சணமா சமத்தா நடந்துக்கணம்…..சரியா….காரை ஒட்டிக் கொண்டிருந்த கிரியின் காதைத் திருகி அழகு காட்டினாள் பார்கவி.

    அங்க பாரேன்… பார்….அந்தப் பொண்ணு எப்படி பைக்குல அவனோட ஒட்டிக்கிட்டுப் போறாள்னு….நீயும் இருக்கியே….ஆயிரம் சொல்லு பைக் பைக்கு தான் கார் ….கார்…தான். இல்லியா பார்….!

    நீ திருந்தவே மாட்ரா ..! உன்னோட லொள்ளும்…ஜொள்ளும் ..

    என்னோட கவச குண்டலங்கள் மாதிரி…!

    வீட்டுக்கு வா…அம்மா காதுல போட்டு வைக்கிறேன்…..உன்னோட திருவிளையாடலை….! உங்கம்மா பண்ற அர்ச்சனைக்கு மட்டும் தான் நீ அடங்குவே..!

    வேண்டாண்டி…பார்….என் பாவமான மூஞ்சியைப் பாரேண்டி ..! அம்மாவுக்கு, ஆரம்பிச்சா நிறுத்தத் தெரியாதுன்னு உனக்கே தெரியுமே.

    .சரி.சரி…ஜோக்ஸ் அபார்ட்…..இப்ப விஷயத்துக்கு வா……நம்ம கீட்ஸுக்கு நல்ல ஸ்கூல் கிடைச்சாச்சு…நாளைக்கே போயி விசாரிக்கணம்….அட்ரெஸ மெசேஜ் பண்ணி சேவ்ல போட்டு வெச்சுக்கோ.

    கஷ்டம் கஷ்டம்..இவன் பொறந்து வெறும் நாலே மாசம் தானே ஆறது….அதுக்குள்ளே உனக்கு என்னாச்சு பார் .? இவ்ளோ அவசரப் படறே. அட…நான் தான் மறந்தே போய்ட்டேன்….நீ தான் ஒன்பது மாசம் முடிஞ்சதுமே ஹாஸ்பிடல்ல ரூம் போட்டு, இன்னிக்கு இந்த நட்சத்திரத்துல தான் என் குழந்தை பொறக்கணும்னு அடம் பிடிச்சு சிசேரியன் கேஸாச்சே.உன் கிட்ட என் பருப்பு வேகாது…..!.

    ஆஸ்பத்திரி வாசல்ல நாதஸ்வரம் ஏற்பாடு பண்ணி வெச்சு குழந்தை பொறந்த உடனே வாசிக்க சொல்லியிருந்தேனே அதை நீ பாராட்டவேயில்லை…கிரி ….!

    ஆமாமா…..அதான் குழந்தை பயத்தில், பிறந்ததும் இன்குபேட்டர்ல போய் படுத்துண்டான்…இதெல்லாம் என்னமோ…தெரியலை….நீ மட்டும் தான் அப்படியா இல்லை உன் குடும்பத்துல வேற யாராச்சும் இப்படி மரை கழண்ட கேஸுகள் இன்னும் இருக்கா…?

    உனக்குத் தெரியாதா….? இதெல்லாம் கூட வாஸ்து மாதிரி தான்…இப்பல்லாம் இதெல்லாம் ஃபேஷனாவே ஆயாச்சு.. இப்படில்லாம் பண்ணாதவா தான் குறைவு.

    நான் இதுல ஜீரோ….பட் நோ..பெயின் ……நோ கெய்ன்டி பார்….!

    ம்கும்…நோ பெயின் பட் கெய்ன்..கீட்ஸ்…!

    நான் உன்ன மாதிரி..என்னை மாதிரியெல்லாம் நம்ம குழந்தையை வளர்க்க மாட்டேனாக்கும். எனக்குன்னு ஒரு ப்ளான். என் கசின் சிஸ் திவ்யா தெரியுமா.?..ஞாபகம் இருக்கா?

    ம்ம்….அந்த பரட்டைத் தலை…..அச்சச்சோ….அந்த பாப் தலைவி…!

    அது…..! அவள்….குழந்தை வயித்தில இருக்கும்போதே அதுக்குன்னு எதோ ஒரு கிளாசுக்கு போயிருக்கா…அதனாலத் தான் அவ குழந்தை பிரேமுக்கு ஒரு வயசு தான் ஆறது…அதுக்குள்ளே புத்தகத்துல இருக்கும் அத்தனை படத்தையும் ஐடெண்டிஃபை
    பண்ணி டக்கு டக்கு ன்னு சொல்றானாம். இவளுக்கு ரொம்பப் பெருமையா இருக்காம்…போன வாரம் கூட ஃபோன் பண்ணிச் சொல்லி சந்தோஷப் பட்டாள் .

    ரொம்ப முக்கியம்….! இல்ல…..இல்ல….பிரேம் இப்பவே நம்ம கீட்ஸ் க்கு வில்லனாயிட்டானா..? ன்னு.

    என்ன நீ கிரி…..நம்ம கீட்ஸ் கூட அவனை மாதிரி வரவேண்டாமா…? அதுக்குத் தான் இந்த ஸ்கூல்.

    இந்த விஷயத்தில் நீ அவசரப் படாதே பார்…! அம்மாட்டயும் கேட்கணும்..அவாளுக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே இருக்காது நீ வேணாப் பாரேன்……எவனோ காசு பிடுங்க போடற ஐடியாவில் நீங்க முதலீடு செய்யாதேங்கோன்னு சொல்வா.

    ஆமாமா…அப்டித் தான் சொல்வா…நான் சொல்ற எதுக்கு உங்கம்மா உடனே அப்படியா சரின்னு சொல்லிருக்கா..?அதெல்லாம் கேட்டுண்டு இருந்தா நம்ம குழந்தை கடைசி பெஞ்சுல கண்ணைக் கட்டிண்டு உட்காரணம், பரவாயில்லையா..? உங்களுக்கு வேணா பரவாயில்லைன்னு இருக்கலாம்….என்னால முடியாது.ஐ வில் மேக் ஹிம் தி பெஸ்ட் கிட் …! உலகம் எவ்வளவு வேகமா போறது தெரியுமா? அதுக்கேத்த வேகம் இருந்தாத் தான் வர காலத்துல பிழைக்க முடியும்.

    வீட்டுக்குள் போனதும் என்ன மாதிரியான வாக்குவாதம் நடக்கப் போறதோ….இப்பவே மனத்தில் 70mm அளவுக்குத் திரை விழுந்து அதில் பார்கவி ஃபுல் ஸ்க்ரீனில் முறைத்துக் கொண்டு தெரிந்தாள் . அதை ஜூம் அவுட் பண்ணுவதற்குள் வீடு வந்து விட்டது.

    காரைப் பார்க் செய்து விட்டு, ஹேய்….கமான் பார்…..பி ரிலாக்ஸ்ட்….இங்கேர்ந்தே மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்காதே….அம்மா கண்டு பிடிச்சுடுவா…! ஒ கே. கூல் பேப்..கொஞ்சம் சிரியேன் .

    எனக்குத் தெரியாதா..? உங்கம்மாக்கு உடம்பெல்லாம் கண்ணுன்னு..இதுக்கொண்ணும் குறைச்சலில்லை…..ஈஈஈஈ ……போதுமா…?

    அது சரி…ரொம்ப வாராதே..! ரொம்ப ஜாஸ்தி….கொஞ்சம் குறைச்சுக்கோ பரவாயில்லை ‘சின்ன இ’ யே…போதும்.

    நான் என்ன இங்க ஈயாப் பிடிக்கறேன்….’சின்ன ஈ’ போதும்…வெ வெ வெ வெ ..கிரியைப் பார்த்து அழகு காட்டினாள்…இங்க பாரு .அம்மாக்கிட்ட எனக்கு நீ சப்போர்ட் பண்ணிப் பேசணம் ..புரிஞ்சுதா? நான் என் குழந்தைக்கு எது செஞ்சாலும் அவன் நல்லதுக்குத் தான் செய்வேன்.

    அது சரி…..எல்லாருக்குமே அப்படித்தான் குழந்தை மேல பாசம் உண்டு பார்.

    யார் இல்லைன்னா…..அப்டி இருந்தால் எனக்கு யார்ட்டயும் இதுக்காக கெஞ்சவே வேண்டாமே..நாளைக்கே அந்த ஸ்கூல்ல சேர்த்துடலாம்….இல்லையா?

    வீட்டுக்குள் நுழையும் வரை பேசிக் கொண்டே செருப்பைக் கழற்றி விட்டு, உள்ளே நுழைந்ததும்,

    ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டே ‘சரவணன் மீனாட்சி ‘ சீரியலில் ஐக்கியமாகி பார்த்துக் கொண்டிருந்த சுபத்ரா , ஊஞ்சலை நிறுத்தி விட்டு, ஷாப்பிங் போய்ட்டு வந்தாச்சா…? கீட்ஸ் பசிச்சு அழுதானா….முதல்ல அவனுக்கு திருஷ்டி சுத்திப் போடணம். என்றபடி ஊஞ்சலிலிருந்து இறங்கினாள் .

    ம்மா…..உன் மருமகள் சொல்வா….கேளேன்…..நம்ம கீட்ஸ்சை நாளையிலேர்ந்து ஸ்கூல்ல சேர்க்கப் போறாளாம்..

    என்னடாது கூத்தாயிருக்கு…?.பொறந்து நாலு மாசம் கூட கழியலை…இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கெல்லாம் யார் ஸ்கூலை கட்டி வெச்சுண்டு உட்கார்ந்திருக்கா . நன்னாருக்கு போ..!

    அதெல்லாம் இருக்கு. குழந்தை வயித்துக்குள்ள இருக்கும்போதே சொல்லித் தர ஸ்கூல் எல்லாம் கூட வந்தாச்சாம். பார்கவி சொல்றா. நமக்கு தான் இதெல்லாம் ஒண்ணும் தெரியலை.

    அதுக்குள்ளே ஸ்கூலாவது….கீலாவது … நான் இதுக்கு ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். ப்ளே ஸ்கூலுக்கு போக மூணு வயசானவட்டு பார்த்துக்கலாம்.

    ம்மா…நீ கொஞ்சம் சும்மா இரேன்….கிரி அம்மாவின் வாயை அடைத்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த பார்கவி,
    ஏன் நிறுத்திட்ட கிரி…நீயே அம்மாட்ட சொல்லியாச்சா..?

    இல்லையில்ல இப்பத் தான் சொல்லிண்டு இருக்கேன்.

    இதோ பார் பார்கவி…அவன் எல்லாம் சொன்னான்….ஆனா அதெல்லாம் நம்மாத்து குழந்தைக்கு இந்தக் கூத்தெல்லாம் ஒண்ணும் வேண்டாம். பொறந்து நாலு மாசம் ஆகும் குழந்தையை யாராவது ஸ்கூல்ல சேர்ப்பாளா ? இன்னும் முகம் பார்க்கவே முழுசா ஆரம்பிக்கலை.

    இப்பல்லாம் வயித்தில் இருக்கும் குழந்தைக்கே பாடம் சொல்லித் தர ஸ்கூல் இருக்கு தெரியுமா?

    அந்தக் கண்றாவியெல்லாம் நமக்கெதுக்கு? யாரோ பைத்தியம் பிடிச்சவா பண்ணினா நம்மளும் பண்ணணமா ? குழந்தைக்கு செர்லாக் கரைத்துக் கொண்டே சொல்லும் சுபத்ராவைப் பார்த்து,

    அதெல்லாம் ஒண்ணுமாகாதும்மா . கீட்ஸ் கண்டிப்பா இந்த ஸ்கூல்ல சேருவான். ஒரே வருஷத்தில் அத்தனையையும் கத்துப்பான்…நீங்களே பார்த்து அசந்து போயிடுவேள்.

    கிரிதரனை நாங்க அஞ்சு வயசுல தான் ஸ்கூல்லயே சேர்த்தோம்…அவனுக்கு என்ன படிப்பா வரலை…? அவன் அப்பா பள்ளிக் கூடம் போன வயசென்ன தெரியுமா..? பத்தோ பன்னெண்டோ…அவர் என்ன வக்கீலாகலையா?

    அது அந்தக் காலம்…நீங்க அந்தக் காலத்துலேயே இன்னும் இருந்தாக்கா நான் என்ன செய்றது? காலத்துக்கேத்தா மாதிரி மாறித் தானே ஆக வேண்டியிருக்கு. கோபத்துடன் அடம் பிடிக்கும் கீட்ஸின் வாயில் செர்லாக்கைத் திணித்தபடியே சொன்னாள் பார்கவி.

    அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் சொன்னால் கேளு. காலம் ஒண்ணும் அப்படியே தலை கீழா மாறிப் போகலை. கொஞ்சம் மாடர்னா இருக்கு..ஒத்துக்கறேன்.கட்டினவனை வாங்கோ…போங்கோ..ன்னு கூப்பிடறதிலிருந்து வா..போ..ன்னு பேசறது வரைக்கும்…மத்தபடி ஒண்ணும் பெரிய மாற்றம் இல்லை.

    நீங்க இந்த வீட்டுக்குள்ள இருந்துண்டு இவ்ளோ தான் மாற்றம்னு சொன்னா ஆச்சா?

    இல்லையே…டீவி சீரியல்ல இப்பத் தான் கேட்டேன்..சரவணனை மீனாட்சி…வாடா…போடான்னு ஏலம் போடறாளே, அதை வெச்சுத் தான் சொல்றேன். ஏன்….நம்மாத்தில் நடக்கலையா?

    இதைக் கேட்டதும், படக்கென்று குழந்தையை மடியிலிருந்து வாரியெடுத்து தோளில் சார்த்திக் கொண்டு கிண்ணங்களை தொப் தொப்பென்று கிட்சன் சிங்கில் போட்டு விட்டு விருட்டென்று படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டு கதவைச் சார்த்திக் கொள்கிறாள் பார்கவி.

    ஒண்ணுமே இல்லாததுக்கு இவ்ளோ கோபமா? சிவ சிவா….! இந்தக் காலத்துப் பொண்களுக்கு பேருக்கு ஆம்படையான் பேரைப் பின்னாடி வாலாட்டமா எழுதறாப்பல.முன்னால கோபிஷ்டின்னு சேர்த்தாலும் தேவலை போலத் தோணறது.

    டேய்…கிரி….நீங்க ரெண்டு பேரும் சாப்டாச்சா? வெளில வாசல்ல போயிட்டு வந்தாலே கூடவே ஏதாவது பிரச்சனையையும் சேர்த்து வாங்கீண்டு வந்தால் நான் என்ன பண்ணுவேன் ? எல்லார் சௌகரியம்…நான் சொல்லியாச்சு…கேட்டால் கேளுங்கோ…கேக்காட்டா எப்படியோ ஆகட்டும்….அறுத்தவ சொல்லு அந்த அடுக்களை முட்டும் தான் எந்த அம்பலமும் ஏறாதுன்னு தெரியும்…..இருந்தும் நான் மாமியார் பவுசு காட்டறேன் பார்…என் புத்தியைச் சொல்லணம் …அவாள்லாம் படிச்சவா….பல இடம் போறவா….வரவா……ம்ம்ம்ம்….டேய்…கிரி……பார்கவியை சாப்பிடக் கூப்பிடு. மத்தபடி அவளோட எந்த விஷயத்துலயும் நான் என் ஜலதோஷ மூக்கை நுழைக்கலை. சொல்லிக் கொண்டே வாஷ்பேசினை நோக்கிச் சென்று மூக்கைச் சீந்தி அலம்புகிறாள்.

    ம்ம்மா….போகட்டும் .விடேன்…நீ வீணா இதுல தலையிடாதே. அவளுக்கு நம்ம கீட்ஸ் ரொம்ப சின்ன வயசிலயே நிறைய படிச்சுடணம்னு ஆசைப்படறா . நான் ஏற்கனவே சொல்லிப் பார்த்தாச்சு…உனக்குத் தான் அவ குணம் தெரியுமே.

    நல்ல குணம்..!தான் பிடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு ….!

    கொஞ்சம் விட்டுப் பிடிச்சா சரியாயிடும்மா..!

    என்ன…தும்ப விட்டு வாலைப் பிடிக்கச் சொல்றே? நான் விடறேன் நீ பிடிச்சுக்கோ. நீயாச்சு…உன் பொண்டாட்டியாச்சு. நானா சம்பாத்திக்கறேன்…நானா காசு கட்டப் போறேன்…?

    அப்போ சும்மா இரேன்…!

    எப்பவும் நான் சும்மா இருந்தா உங்களுக்கு சந்தோஷம் தானேப்பா.

    ம்மா, பார்த்தியா கோச்சுக்கறே.

    இப்பல்லாம் உங்க காட்ல மழை…..ஜமாயிங்கோ. நான் ஏன் கோவிச்சுக்கப் போறேன்..? அந்தக் காலம் போலையா இந்தக் காலம்…அதான் இந்தக் காலத்துக்கு புதுசா கம்ப்யூட்டர் கொம்பு முளைச்சிருக்கே…!

    இந்த ஒரு வார்த்தை பச்சைக் கொடியில் , பார்கவி ‘கீட்ஸ்’ஸுக்கு அடுத்த நாளே அட்மிஷன் போட்டு விட்டாள். நம்ம கீட்ஸ் கிட்ட ஒரு போட்டோவை காண்பிக்க, அவன் எவ்வளவு உன்னிப்பா அதையே பார்த்துண்டு இருந்தான் தெரியுமா..?

    ஏதோ பெரிய விஷயமாக அதைச் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள்.

    ஆமா…..எல்லாம் சரி தான்..இதுக்கு அவாளுக்கு எவ்வளவு தட்சணை எடுத்து வெச்சேள் ?

    நாலு மாசத்திலேர்ந்து ஒரு வயசு வரைக்கும் இருபதாயிரம் ஃபீஸ். அதுக்கப்பறம் கூட பத்தாயிரம் ஆகுமாம்.

    பேஷ்….பேஷ்…ரொம்ப நன்னாருக்கு….முகம் பார்க்க ஆரம்பிக்கிற குழந்தைக்கு என்னத்தை அப்படி சொல்லித் தந்துடுவா? அப்போ என் பேரன் ஐஸ்டின் மாதிரியோ இல்லாட்டா அப்துல் கலாம் மாதிரியோ வரப் போறானா?

    இந்த நக்கல் தானேம்மா வேண்டாங்கறது…நிச்சயமா என்னை மாதிரியோ உங்க பிள்ளை மாதிரியோ இருக்க மாட்டான்…முகத்தில் பெருமை பொங்கச் சொன்னவள் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் .இவனும் ஏதாவது புதுசாக் கண்டுபிடிச்சு இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பான். அதுக்கு இப்பல்லாம் நிறைய ஆப்பர்ச்யூனிட்டி இருக்கு. இவாளுக்குத் தான் இனிமேல் நிறைய ஓபனிங்ஸ். அம்மா…இன்னைக்கு நிஜம்மா நீங்க இவனுக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கோ…அப்டியே எனக்கும்…! என்று சொன்ன பார்கவியைப் பார்த்து,

    அது சரி….! என்னமோடிம்மா …உன் ஆசைக் கனவு ஜெயிச்சால் நான் நல்ல மாமியார்…தான்..என்று கேலியாகச் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைகிறாள் சுபத்ரா.

    என்னம்மா நீங்க…இதுக்குப் போயி அலட்டிகறேள். ஐம் சாரிம்மா…..கெஞ்சலான குரலில் ஐஸ் வைத்து சொல்வதைக் கேட்டதும் சுபத்ராவும் உருகித் தான் போனாள்.

    காலச் சக்கரச் சுழற்சியில் பத்து வருடங்களை முழுங்கியிருந்தது. சுபத்ரா தெய்வமாகி சட்டத்துக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்….மென் மேலும் பதவி உயர்வில் கிரி நேரமே இல்லாமல் தவித்தான். பார்கவி கூடிப்போன பத்து கிலோவை தன் உடம்பிலிருந்து கரைக்க அரும்பாடு பட்டு டயட்டில் தவித்துக் கொண்டிருந்தாள். கீட்ஸ் மட்டும் பத்து வயது சிறுவனா அல்லது இருபது வயது வாலிபனா என்று அனைவரையும் சிந்திக்க வைத்தான்.

    கீட்ஸ்…படிச்சுட்டியா…ஹோம் வொர்க் பண்ணியாச்சா?

    ஓவர்….நத்திங் பெண்டிங். படிக்க ஒண்ணுமேயில்லை …ஐம் கோயிங் டு வாட்ச் மூவி நௌ .

    மா….இட்ஸ் ஸோ போரிங் …எனக்கு வெளில போகணும்….கார் சாவி தாயேன் ..ஒரு ரவுண்ட் போயிட்டு வரேன்..

    அய்யய்யோ வேண்டாம்டா ப்ளீஸ்….!

    ….ம்ம்ம்மா……ஐ கான்ட் டாலரேட் யூ .மாம்…நீங்க சும்மாயிருங்க ..எனக்கு இப்பவே காரை எடுத்துண்டு வெளில போகணும்…நான் போறேன்…பை….என்று துள்ளிக் குதித்து வெளியில் ஓடும் போது, பார்கவி ஆடித்தான் போவாள்.

    ஒண்ணா….ரெண்டா….பத்து வயதுப் பையனுக்கு என்ன தோணுமோ, அதெல்லாம் அவனுக்கு மூணு வயசிலயே தெரிஞ்சு போன மாதிரியும், இப்போ அவன் ஒரு காலேஜ் படிக்கிற பையனைப் போல நடந்து கொள்ளும்போது மனசு கலங்கித் தான் போனது பார்கவிக்கு.

    நாளாக நாளாக , இதுவே பெரிய தலைவலியாகிப் போனது அவளுக்கு.

    டாட்….எனக்கு ஐ போன், வேணும்….ப்ளூ ரே கேம் சிடீஸ் வாங்கிக்கறேன்…ஒரு டென் தௌசண்ட் செக் எழுதுங்கோ.

    இவன் பார்க்கும் தோரணையில், கிரியின் கை, தானாக செக்கில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விடும்.

    டாட்…எனக்கும் ஒரு பேங்க் அக்கௌண்ட், கிரெடிட் கார்ட் எல்லாம் வேணும்..ப்ளீஸ் டூ இட். ஒரு பெரிய பிஸ்னெஸ் பண்ணப் போறேன்….கேமிங்….!

    போச்சுடா…! ரெண்டு கைகளையும் தலையில் வைத்துக் கொள்வார்.

    ஸ்கூல் டீச்சர் தினசரி போன் செய்து, உங்க சன் கீட்ஸ் மத்த பசங்களைக் கெடுக்கிறான்….பர்ஸ்ட் ரேங்க் மட்டும் வாங்கினாப் போதாது…மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாது..அவனுக்கு நாங்க டபிள் ப்ரமோட் பண்ணி வேற கிளாஸ்ல போடலாம்னு யோசிக்கறோம்..ஹி இஸ் ஓவர் ஸ்மார்ட்…வெரி வெரி இன்டெல்லிஜென்ட். அதான்…என்று தயங்க.

    பெருமை ஒரு பக்கம் இருந்தாலும்…..இது எங்கே கொண்டு விடுமோ என்று அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு பயந்து கொண்டே இருந்தாள் பார்கவி.

    ஒரு நாள் அவள் பயந்தது கூட நடந்தது.

    டபிள் பிரமோஷனில் இன்னும் துளிர் விட்டுப் போனது கீட்ஸ்ஸுக்கு. தன்னுடன் படிக்கும் பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுக்கப் போக, மைனர் பெண்ணின் கவனத்தைச் சிதறல் செய்கிறான் என்று அவர்கள் வீட்டிலிருந்து நாலு பேர்கள் இவர்கள் வீட்டை முற்றுகையிட்டு எச்சரித்து விட்டுப் போகையில், பார்கவிக்கும், கிரிக்கும்…கீட்ஸ்ஸுக்குமிடையே பூகம்பமே வெடித்தது.

    கடைசியில் இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பார்கவி நீ ? நீ நினைச்சது ஒண்ணு …நடக்கறது ஒண்ணாச்சே….ஆரம்பத்தில் அம்மா சொன்னதைக் கேட்டிருந்தால்…இப்படியெல்லாம் நடந்திருக்காதோ என்னவோ.?

    கற்றுக்கொள்ளும் வயதில் அத்தனையும் தெரிந்து விட்ட நிலையில் அடுத்தது என்ன என்ற தேடலின் உச்சியில் இருந்தாலும் அங்கு அவனுக்கென்று ஒன்றுமே இல்லாதது போலவும்…உலகப் பாடத்தில் கற்றுக் கொள்ளவென்று எதுவுமே தனக்கு இல்லை என்றும் உணர்வுகளோடு நடந்தான் கீட்ஸ்.

    எப்போதும் எல்லோரையும் பார்க்கும் போதும் தனக்கு மட்டும் எல்லாம் தெரிந்து விடுகிறது என்ற ஆளுமையும் அதிகார உணர்வும் மேலோங்கிய அவனை யார் கண்டாலும் ‘திமிர் பிடித்தவன்’ பெரிய கர்வம் பிடிச்சவன்….என்றெல்லாம் பட்டம் கொடுத்து கேலி பேசுவார்கள். இவன் வருவதையும் தவிர்ப்பார்கள்.

    பட்டமும், கேடயமும், பரிசுக் கோப்பைகளும் ஒரு புறம் நிரம்பி வழிந்தாலும்…அதைத் தரை மட்டமாக்கும் நிகழ்வுகளும் கூடவே நடக்கத் தொடங்கி அவனை நிலை குலைய வைத்தது.

    அது கோபமாக வெளியேறத் துவங்கிய போது பார்கவிக்கும் கிரிக்கும் பிள்ளைப் பாசத்தைக் கடந்து ‘இவனை வைத்துக் கொண்டு சமாளிப்பது கடினம் என்று தோன்றியது’.

    பார்…இப்பப் பார்….! எவ்ளோ சொன்னேன்…அப்பவே சொன்னேன்…இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு. உலகத்தோட ஒத்துப் போகத் தெரியாமல் உன்னோட பேராசைக்கு நம்ம பையனை பலியாடாக ஆக்கி வைச்சுட்டியே..

    டாக்டரே சொல்லிட்டார். அதுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இன்ஃ பாக்ட் சின்னக் குழந்தையா இருக்கும்போதே அவன் படு சுட்டி..ஹைபர் ஆக்டிவ் சைல்ட். தெரிஞ்சுக்கோ. வாட்ஸ் நெக்ஸ்ட்….! இது இப்ப அவனை மனசுக்குள் ரொம்பப் படுத்தறதுன்னு நினைக்கறேன்.

    அவனை ஒரு சைக்கியார்டிஸ்ட்ட அழைச்சிண்டு போனால் எல்லாம் சரியாய்டும். பார்கவி சமாதானப் படுத்தினாள் .

    இப்பத் தானே பதினைந்து வயசாறது. அதுக்குள்ளே எங்க வந்து நிக்க வெச்சுட்டான் பாரேன் ? பார்.கிரி புலம்பிக் கொண்டிருந்தான்..எல்லாம் உன்னால…வந்த வினை.

    அதே சமயம் அவனைப் பாராட்டு கிரி…..அவன் ஷேர் ட்ரேட் பண்றான்….ரியல் எஸ்டேட்ல என் பேர்ல இன்வெஸ்ட் பண்ணிருக்கான். லேப்டாப் ரிப்பேர் பண்றான்…கம்ப்யூட்டர் அசெம்பிள் பண்றான்…இதெல்லாம் அவனோட பிளஸ்…தெரியுமா?
    வி ஷுட் கவுண்ட் ஹிஸ் குட் திங்க்ஸ் டூ…! எவ்ளோ அட்வான்ஸ்டா திங் பண்றான்.

    அவனுக்கு எது வேணும் எது வேண்டாம்னு நம்மால சிந்திக்க முடியலை. நம்ம நினைக்கறது எல்லாமே அவனுக்கு அவுட் டேட்டட்டா இருக்கு. இப்பவாவது உனக்கு புரியறதா? என்னால நிம்மதியா இருக்க முடியலை பார்.

    இதெல்லாம் ரொம்ப காமன் தான்…கிரி. நாம தான் இன்னும் கொஞ்சம் அவனுக்கேத்தா மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.

    நாம பண்ணிக்கலாம்….வெளி உலகம் பண்ணிக்குமா? போடா சர்தான்னு சொல்லிட்டுப் போகும். எல்லாத்துலயும் நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்புன்னு இருந்தா, ஹௌ எனி ஒன் வில் டாலரேட் திஸ்.? இப்பக் கூட ஒரு நல்ல ஃப்ரெண்ட் இல்லை அவனுக்கு.

    நீ சொல்றாப்பல லாப்டாப், கம்ப்யூட்டர், ன்னு எல்லாத்தையும் பிரிச்சு மேயறான்…சரி தான். அதே நேரம் அவனுக்குக் கோபம் வந்தால் அதே கம்ப்யூட்டரைத் தூக்கிப் போட்டு உடைக்கிறானே. கேட்டது கிடைக்கலைன்னு தெரிஞ்சா சுவத்துல ஓங்கி குத்தி தன் கையைத் தானே காயப் படுத்திக்கறானே….எல்லாம் அவனுக்கு சாதகமா நடக்கணும்னு யோசிக்கறானே இதெல்லாம் தப்பில்லையா ? அஃப் கோர்ஸ்….அது ஜெனெடிக்னு வெச்சிக்கலாம்.

    கோபத்தில் தன் கையிலிருந்த காப்பி டம்ப்ளரைத் தூக்கி எறிகிறாள் பார்கவி.

    இத…இத….இதத் தான் சொன்னேன்…என்று கிரி சொல்லவும்

    பார்கவி ‘ஓ’ வென தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள்.

    சரி…சரி….ஸாரி …அழாதே…நீ மட்டும் என்ன செய்வே.?..நாளைக்கு டாக்டர்கிட்ட போகலாம். அப்பாயின்ட்மென்ட் வாங்கிடறேன் சரியா…அவளை சமாதானப் படுத்தி விட்டுப் படுத்துக் கண்களை மூடிக் கொள்கிறார் கிரிதரன். வழக்கம் போலவே தூக்கம் அவருக்கு ‘டா டா…பை பை ‘ சொல்லிக்கொண்டு ஓடியது. எத்தனை இரவுகள் தூக்கம் போயிருக்கும்..? தூக்கம் மட்டுமா…அப்படியே தலையைத் தடவிப் பார்க்கும் போது மொழு மொழுவென்று வழுக்கைத் தலையில் விரல்கள் வழுக்குகிறது.

    அடுத்த நாள் இரவு…!

    என்னங்க மேடம் இது…இதுக்குப் போயா உங்க பையனுக்கு கவுன்சிலிங் பண்ண அழைச்சிட்டு வந்தீங்க. தயவுசெய்து உங்க வீணான கவலையை விட்டுத் தள்ளுங்க. நான் அவன்கிட்ட தனியாப் பேசிப் பார்த்த பிறகு தான் இதைச் சொல்றேன்….உங்க சன் செம ஸ்மார்ட். மூளைதான் அவனோட மூலதனம். எங்க போனாலும் பின்னிப் பெடலெடுப்பான் . டோன்ட் வொர்ரி. என்ஜினீயரிங் சேர்த்து விடுங்க…கோல்ட் மெடல அள்ளிட்டு வந்திடுவான். அப்பப்பப்பப்பா….எதைக் கேட்டாலும் டக்கு டக்குன்னு நெத்தியடியா பதில் சொல்ற பிள்ளைய கைல வெச்சிட்டு நீங்க கலங்கினா…ஐம் சாரி….உங்களைத் தான் பார்க்கறவங்க தப்பு சொல்லுவாங்க…சம்திங் ராங்ன்னு…! இப்ப இருக்குற காலத்துக்கு இவ்ளோ ஸ்பீட் ரொம்ப ரொம்ப அவசியம். உங்களுக்கு இப்பப் புரியாது. போகப் போகப் பாருங்க..!

    டாக்டர் சொல்லியனுப்பியத்தை நினைத்துக் கொண்டே கண்களை வெறுமனே மூடியபடி படுத்திருந்தாள் பார்கவி.

    நிம்மதியா தூங்குவதா…..? இவ்வளவு இண்டெலிஜெண்ட் கீட்ஸ்ஸுக்கு ஏன் அடிக்கடி விரக்தி வருகிறது…? கோபம் வருகிறது?
    வீட்டிலும் இருக்கப் பிடிப்பதில்லை…..பள்ளியில் இருக்கவும் பிடிப்பதில்லை…..மனம் அமைதியில்லாமல் அலைபாய்கிறது.
    எங்க போனாலும் தனக்கு மிஞ்சியவர் யாருமே இல்லைங்கற ஒரே எண்ணத்தில் தானே நுழைகிறான். அவனுக்குள் இருக்கும் சுபீரியர் தாட்ஸ் தான் எல்லாத்துக்கும் காரணம். அவன்கிட்ட சொல்லிப் புரிய வைக்கலாம்னு நினைச்சால்..பேசவே விட மாட்டேங்கறான். என்னன்னு சொல்லறது..?

    நாட்களும் வாரங்களும் மாதங்களுமாக ஓடி வருடங்களைக் கடத்திச் சென்றன.

    மனசுக்குள் புகுந்து கொண்டு இறங்க மறுத்த வருத்தம் பார்கவியின் வயதை இருபது வருடங்கள் கூட்டியது.சுகரும், இரத்த அழுத்தமும் கூட துணைக்கு வந்து அவளுடன் கைத்தடி போலச் சேர்ந்து கொண்டது.

    பாதி நாட்கள் வீட்டுக்கே வராமல், படிப்பையும் முடிக்காமல் கீட்ஸ், இமயமலை வரைக்கும் சென்று வந்து…மாம்….ஐ லைக் ஒன்லி ஹில்ஸ்…அதும் ஹிமாச்சல் ..நான் அங்கயே கூட போய் இருந்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்…..கீட்ஸ் இதைச் சொன்னதும், அவள் தலையில் இமயமலையையே ஏற்றி வைத்தது போலிருந்தது பார்கவிக்கு.

    என்னடா சொல்றே….கீட்ஸ்..? உனக்கு இப்பத்தான் முப்பது வயசாகுது….ஒரு கல்யாணம் காட்சி செய்யாமல்…குடும்பம்னு ஒண்ணு இருந்தால் இந்த மாதிரி தாட்ஸ் எல்லாம் வராது…! வாழ வேண்டிய வயசில் நீ இப்படிச் சொல்றது கொஞ்சம் கூட சரியில்லை.

    மாம்….டாட்…நீங்க தான் நான் இன்னும் சின்ன வயசா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க..பட் ….எனக்கு இந்த மெட்டீரியல் வேர்ல்ட்ல எதுவும் பெரிசா இருக்கறதாத் தெரியலை. ஐ ஹேட் எவெரிதிங். ப்ளீஸ் லீவ் மீ அலோன். ஐ கான்ட் ஸ்டே எனிமோர் ஹியர்.
    ஐ நீட் பீஸ்….அமைதி மட்டும் தான் நிரந்தரம்…அது தான் எனக்கு வேணும்.இந்த உலகம் ரொம்ப ஸ்லோ…அதனால தான் ஒரு அமைதியான இடத்தில் என்னை அமைதியாக்கிக்க பழகிக்கப் போறேன்..ஏன்னா எனக்கு இந்த மைண்ட் ஸ்பீட் பிடிக்கலை.

    இதைக் கேட்டு அதிர்ந்தே போனாள் பார்கவி. அவள் தலை தானாகக் குனிந்தது. கிரிதரன் விழிகளில் கண்ணீர் நிறைந்த பார்வை அவனது அம்மாவின் படத்தின் மேல் விழுந்தது.

    இந்த வார்த்தை தான் அவர்களை பெற்றவர்களாக அழைத்து மதித்து அவன் பேசிய கடைசி பேச்சு. அன்று தான் கீட்ஸை அவர்கள் கடைசியாகப் பார்ப்பது என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

    மகன் கிளம்பிப் போய் வீடு வெறிச்சென்று சூனியம் பிடித்தாற்போலிருந்தது. ஒரே நாளில் அனைத்தையும் இழந்த செல்வந்தரின் நிலை போல உணர்ந்த இருவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படுத்துவது போல ஒரு அழைப்பு மணி அடித்தது.

    மீண்டும் மகன் வந்து விட்டானோ….? ஓடிச்சென்று கதவைத் திறந்த பார்கவியால் நம்ப முடியவில்லை.

    அங்கு, கையில் ஆறு மாதக் குழந்தையுடன் அழகானப் பெண்றொருத்தி “ஐ ம் தீட்சா…திஸ் இஸ் கீட்ஸ்’ஸ் சன்…” சொல்லிக் கொண்டே பார்கவியைத் கடந்து வீட்டுக்குள் நுழைகிறாள்.

    Share
  • குறவன் பாட்டு – 17

    சச்சிதானந்தம்

    குறவனும் குறத்தியும் தத்தம் பயணத்தைத் தொடர்தல்

     

    பசியும் தாகமும் தணிய, நடு

    நிசிபோல் கண்கள் சுழன்று இழுக்க,

    அசையும் தருக்கள் தென்றல் வீச,

    அசைவின்றித் துயின்றனர் குறவனும், குறத்தியும்!                           131

     

    இடியெனப் பிளிறிய பிடியின் ஒலியால்,

    திடுக்கிட்டுக் குறத்தியின் தூக்கம் கலைய,

    அடிமனம் அடைந்த படபடப் பாலே,

    நொடியினில் குறவனின் தூக்கம் கலைத்தாள்!                                                                                    132

     

    குறவன் எழுந்து குறத்தியை இழுத்து,

    சேயை அணைக்கும் தாயைப் போல,

    மார்பில் அணைத்து அச்சம் நீக்க,

    அச்சம் நீங்கி, நாணம் கொண்டாள்!                                                                                                              133

     

    நாணம் நீங்காக் குறத்தி மீண்டும்,

    குறவனை நீங்கிக் கானகம் சென்றாள்,

    குறவனும், குறத்தியின் அச்சம் எண்ணிக்,

    கலங்கிய மனதுடன் மறுதிசை சென்றான்!                                                                                             134

     

     

     

    பிற்பகல் உறக்கம்

     

    குறவனும் குறத்தியும் துயின்றதைப் போல,

    குரங்குகள் இரண்டு மரத்தின் மேலே,

    இயற்கை அரங்கின் எழிலில் மயங்கி

    உறங்கும் அழகைக் குறத்தியும் கண்டாள்!                                                                                             135

     

    மனிதர்கள் மந்திகள் மட்டும் அல்ல,

    பறவைகள் விலங்குகள் தருக்களின் உடனே,

    ஆறுகள், ஏரிகள், மீன்களும் கூட,

    பிற்பகல் உறக்கம் கொள்வது இயற்கை!                                                                                                  136

     

    இமையற்ற மீன்களும் நீருக் குள்ளே,

    அமைவுற்ற பாறையின் பிளவுக் குள்ளே,

    தமையுற்று உறங்கும் கண்ணுக் குள்ளே,

    இணையற்ற பிற்பகல் நற்பொழு தினிலே!                                                                                             137

     

    முதலை போலத் தோலைக் கொண்ட,

    தவளை ஓன்று முயலைப் போல,

    தாவிக் குதித்துத் தாமரை மீது,

    ஏறிப் படுத்துத் தூங்கிடும் பிற்பகல்!                                                                                                             138

     

    மேற்திசைக் கதிரவன் மேகத்திற்குள் மறைந்ததுபோலக்,

    கதிர்களின் வீச்சில் வெம்மை குறைந்து,

    மென்மை வளர, விலங்குகள் பறவைகள்,

    மீண்டும் வெளிவரக் கானகவாழ்க்கை தொடர்கிறதே!                                                                    139

     

    Share
  • வாழ்க்கை நலம் – 35

    குன்றக்குடி அடிகள்

    35. பொறாமை கொள்ளற்க!

     

    அழுக்காறு  – அழுக்கு நிறைந்த வழி. அதாவது நன்மையும் இன்பமும் இல்லாத வழி. இத்தகு அழுக்கு வழியில் வாழ்தல் வளர்ச்சிக்குத் துணை செய்யாது. இனியவை கூறல் பற்றிப் பல குறட்பாக்கள் இயற்றிய திருவள்ளுவர். “அழுக்காறு என ஒரு பாவி” என்று அழுகாற்றினைத் திட்டுகிறார்.

    ஆம்! அழுக்காறு ஒரு பொழுதும் நன்மை பயக்காது.  மாறாகத் தீமையைத் தரும். இந்த அழுக்காறு தான் மக்கள் மத்தியில் “பொறாமை” என்று பேசப்படுகிறது. அதாவது மற்றவர்களின் ஆக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமை பொறுத்துப் போற்ற முடியாமை அழுக்காறு ஆகும்!

    ஆனால் இன்று பலர் நல்லவைகளில்   – கல்வியில் பொறாமைப்படலாம். தீமையன்று என்று அறியாமல் கூறுகின்றனர். இது தவறு. ஒருவர் நன்மை செய்வதில் அழுக்காறு கொள்பவன், நன்மை செய்ய முனைப்புக் கொள்ள மாட்டான். அழுக்காறு நிறைந்த உள்ளத்தியல்பும், நன்மை செய்வதில் ஊக்கம் காட்டாது என்றே திருக்குறள் கூறுகிறது.

    நஞ்சு, அமுதாவது ஏது? சாக்கடை நன்னீராவது ஏது! அதுபோலவே தான் நல்ல மதிப்பெண் வாங்கும்  மாணவனைப் பார்த்து குறைந்த மதிப்பெண் வாங்குபவன் அழுக்காறு கொண்டால் கூடுதல் மதிப்பெண் வாங்கும் முயற்சியில் ஈடுபடமாட்டான். அதற்கு மாறாக அதிக மதிப்பெண் வாங்கியவன் மீது குற்றங்களை, குறைகளைக் கற்பித்துக் கூறுவான். ஏன் ‘காப்பியடித்து’ விட்டான் என்றே கூறுவான்.  மேலும் ‘மோசமாகி’ ஆசிரியர், கையூட்டுப் பெற்றுவிட்டார் என்று கூடக் கூறுவான்.  ஆதலால், எந்த வகையிலும் அழுக்காறு தீதே.

    அழுக்கற்றை அகற்றும் வழி, நல்லவர்களை  – வாழ்பவர்களைப் பாராட்டி மகிழ்வதுதான். அதோடு பெற்றவைகளைக் கொண்டு மகிழும் மனம் வேண்டும். பெறாதவைகளைப் பெறும் முயற்சியும் வேண்டும். உப்பரிக்கைகளைப் பார்த்துப் புழுங்குதலைத்  தவிர்த்து குடிசைகளில் வாழ்பவரை நோக்கி இரக்கங் கொள்ளுதல் வேண்டும். இத்தகு மனப்பான்மை வாழ்க்கைக்கு ஆக்கம் தரும்.

    எப்போதும் நல்லவனவற்றையே நாடுதல், நல்லனவற்றைப் பற்றியே பேசுதல் அழுக்கற்றிலிருந்து தப்பும் ஒரு வழி. எங்கும் எதிலும் எவரிடத்திலும் குற்றம்  – குறைகள் இருக்கும்.  எல்லாரும் கடவுளா என்ன? நாம் அவர்களிடத்தில் உள்ள குணங்களையே  எடுத்துக் கொள்ள வேண்டும். நல்லவைகளைப் பாராட்ட வேண்டும். நாம் ரோசாச் செடியில் முட்களை எடுக்கக் கூடாது. மலர்களையே எடுக்க வேண்டும்.

    அழுக்காறு என்ற தீய குணத்திலேயே மனித குலம் ஒன்றுபட்டு வாழ முடியவில்லை. பகையில் சிக்கித் தவிக்கிறார்கள். அழுக்காறு தனித்தும் நிற்காது. அழுக்காற்றின் படை அவா, வெகுளி இன்னாதன சொல்லல், கலகம் எல்லமேயாம்.

    ஆதலால் அழுக்காறு கொண்ட மனிதன் வளர்தல் அரிது; வாழ்தல் அரிது; அதனாலேயே ‘திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்’ என்றது திருக்குறள். தேளின் கொடுக்கு, நஞ்சாம் தன்மைபோல அழுகாறுடையார் உள்ளம் நஞ்சாகும்.

    அழுக்காறு கொள்ளற்க! மற்றவர் வாழ்வதைக்கண்டு மகிழ்க! நீயும் வாழ முயல்க!  நல்லனவற்றையே காண்க! நல்லனவற்றையே பேசுக. மற்றவர்கள் ஆற்றலை, அறிவைப் பாராட்டி மகிழ்க! எவரோடும் பழகுக! தோழமை கொள்க! மறந்தும் மற்றவர்களைப் பற்றிப் புழுக்கம் கொள்ளற்க!

     

     

     

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

    Share