சு.கோபாலன்

 

தேயும் இரவு முடிய அதிகாலை விடியத் தோன்றும் உதய சூரியன் ஒளி

சாயும் மாலைப் பொழுதில் தேயும் சூரியனின் மங்கும் அஸ்தமன ஒளி

விண்ணிலே மோதும் கார்மேகங்களின் சினமாய் மின்னிடும் மின்னல் ஒளி

விண்ணிலே தங்கத் தட்டாய்த் தகதகக்கும் வெண்ணிலாவின்  தண் ஒளி

 

வான் பரப்பிலே வைரங்களாய் பதிந்து கண் சிமிட்டும் தாரகைகளின் ஒளி

வான் திரையிலே தோன்றும் எழில் ஓவியம் வானவில்லின் வண்ண ஒளி

விட்டு விட்டு ஒளிர்விட்டுப் பறக்கும் மின்மினிப் பூச்சிகளின் ‘மினி’ஒளி

வெயில் பட்டுப் பளபளக்கும் கோவில் கோபுர கலசங்களின் கம்பீர ஒளி

 

பூசை அறையிலே நெய்த்திரி இட்டு ஏற்றிய குத்து விளக்கின் மங்கள ஒளி

ஆசைமிக கார்த்திகை தினம் ஏற்றிய அகல் விளக்குகளின் அலங்கார ஒளி

எண்ணிலா பக்தர்கள் கண்டு வணங்கும் அண்ணாமலை தீப அகண்ட ஒளி

கண்ணிலே கண்டதும் பக்தர்கள் பரவசப்படும் சபரிமலை மகரவிளக்கு ஒளி

 

தான் அழிந்தாலும் இறுதி வரை ஒளிதந்து இருள் போக்கும் மெழுகுவர்த்தி

நாம் எல்லாம் அறிந்து உணர வேண்டிய பாடமாய்த் தரும் தியாக ஒளி

போர்க்களத்தில் இருட்டிலும் விளக்கேந்தி சலியாது சேவை புரிந்த செவிலி

பார்போற்றிய ‘விளக்கின் சீமாட்டி’ ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் சேவைஒளி

 

ஒளிமிக்க வாழ்வு யாவர்க்கும் அருள்மிக்க இறைவன்  அருள்வாராக!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க