பட்டியும் விக்ரமாதித்தனும் ஜெயமோகனும்!

2

வில்லவன் கோதை

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?

(நவம்பர் 4 – 2013 தி இந்து நாளிதழில்ஜெயமோகன் எழுப்பிய வினாவின் எதிரொலி)

இந்த ஜெயமோகனின் அபத்தமான ஆலோசனைகளை தமிழ் இந்து பத்திரிக்கை  பிரசுரித்து  தன்னிடம் திறன் மிக்க ஆசிரியர் குழுவொன்று   தற்போதைக்கு இல்லை என்ற தகவலை பறையடித்து சொல்லியிருக்கவேண்டாம்.

அவர் எழுப்பிய ஆலோசனை விவாதத்துக்குறிய விஷயமே  அல்ல.  அடிப்படையிலேயே  உதறத்தகுந்தவை.

எப்போதுமே படைப்பாளிகளைக் காட்டிலும் பதிப்பாளர்கள் அடிப்படையில் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அவர்களைத்தாண்டி எந்த அபத்தங்களும் இப்படி அச்சுக்கு வந்ததில்லை.

முன்பெல்லாம் பத்திரிக்கை ஆசிரியர்களும் பதிப்பாளர்களும் பிரசுரிக்கப்பெறும் விஷயங்களில் எப்போதும் தரத்தில் சமரசம் செய்து கொண்டதில்லை. ஒன்றிரெண்டு களவாடப்பட்ட படைப்புகள் கூட அன்றைக்கெல்லாம் அத்தனை எளிதாக அச்சுக்கு வந்துவிட முடியாது.

இன்று நி​லைமை அப்படியில்லை.

பத்துப் பதினைந்து நூல்கள் எழுதி பதிப்பித்தவர்கள் அனுப்புகிற சரக்குகளை பிரித்துப் பார்க்க   அலுப்புற்று நேராக அச்சுக்கு அனுப்புகிற பத்திரிக்கைகளும்  இருக்கிறது. ஒரு சில நூல்கள் எழுதியதாலேயே அவர்கள் அந்த தகுதியை பெற்றுவிடுகிறார்கள்.

பிரபலமான எழுத்தாளரின் லாண்டரி கடை கணக்குகள்கூட  அச்சுக்குப்போன கதையை சுஜாதா சொல்லி கேட்டிருக்கலாம்.

இந்த யோசனைகளை உதிர்த்த ஜெயமோகன்  –

நிரம்ப உழைப்பவராகவும்  எதையாவது மிகுதியாக வாசிப்பவராகவும் எத்தகைய கருத்துக்களுக்கும் உடனடியாக பதிலளிப்பவராகவும் நட்புக்கினியவராகவும்  நான்  அறிந்திருக்கிறேன்.

வளைந்து நெளிந்து செல்லும் அருவியைப்போன்ற வேறுபட்ட நடையில் எம் தமிழை கையாளுவதை கண்டிருக்கிறேன்.

இன்றைக்கு  எழுதுகிற அத்தனை நவீன எழுத்தாளர்களின் ஆரம்பப் பாடசாலையாயிருந்த திராவிட இயக்கங்களை அவர்களைப்போலவே சபிப்பவராகவும்

சவமேடைகளில்கூட சம்மந்தப்பட்டவரிடம் காணநேர்ந்த குற்றங்குறைகளை கருத்துத் தளங்களில் நின்று துணிவோடு பேசுபவராகவும்  பார்த்திருக்கிறேன்.

அண்டைமாநிலத்தின் ஓரத்தில் அவர் வாழுகின்ற வாழ்க்கை அவருக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். இந்த இரட்டை குடியுரிமை அவர் பேச்சிலும் எழுத்திலும் ஊடுருவிக் கிடப்பது எனக்குத் தெரிகிறது..

இவருடைய  எழுத்தின் வீச்சுக்கு  நான் நேசிக்கிற தந்தை பெரியாரோ பேரறிஞர் அண்ணாவோ  இன்னும் தேசபிதா காந்தியோ விலக்கில்லை என்பதையும் அறிந்திருக்கிறேன்.

ஆனால் –

மேற்கிளையில் அமர்ந்து அடிக்கிளையைக்கூட அவரால் வெட்ட முடியும் என்பதை  இப்போதுதான் பார்க்கிறேன்.

இப்படியொரு அபத்தமான ஆலோசனைகள் பாரம்பரியமிக்க இந்துவின் பார்வையில் எப்படி நழுவிற்று.

நினைத்தாலே நன்றாக சிரிக்கலாம் என்று கூடத் தோன்றுகிறது.

ஒருவர் ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழ் புத்தகங்களின் படைப்பாளி.

இன்னொன்று இன்றைய தமிழ் வாசகர்களின் பரவலான எதிர்பார்ப்பைப் பெற்ற பாரம்பரியம்மிக்க தி இந்து  நிறுவனம்.

இருவருக்குமே ஒருவகையில் செலவுக்கு கைகொடுக்கும் சமாச்சாரம். சோறுபோடும் மொழி என்று சொல்லமாட்டேன்.

இப்படியொரு கூற்றைக்கூட  விவாதிக்கவேண்டிய கருத்தென்பது எத்தனை அபத்தம்.

மொழி உயிரென்றால் எழுத்துரு உடலல்லவா. எழுத்துரு இருந்தால்தானே இலக்கியமும் இலக்கணமும்  வரும். இலக்கணமும் இலக்கியமும் இருந்தால்தானே மொழி தொடர்ந்து  வாழும்.

துருக்கி மொழியும் மலயா மொழியும்  முறையான எழுத்துக்கள் அற்றபோது  கூடுவிட்டு கூடு பாய வேண்டிய கட்டாயத்துக்குள்ளாயிற்று.   துருக்கி மொழியும் மலாய் மொழியும்  எடுத்த நிலைப்பாடு தமிழுக்கு தேவையற்து. உறுப்புக்கள் இல்லாதவனுக்கும்  உறுப்புக்களை இழந்தவனுக்கும் தாமே மாற்று உறுப்புக்கள் பொருத்தப்படுகிறது.

ஆங்கிலத்தில் இப்போது இருக்கிற எழுத்துருக்கள் ஆங்கிலத்துக்கே சொந்தமற்றபோது அதற்கு மாறச்சொல்வது எத்தனை பேதமைதானே.

எம்மொழியும் தோன்றாத காலத்தே இலக்கிய இலக்கணங்களோடு வாழ்ந்து ஒவ்வொரு கால கட்டங்களிலும்  தன்னைத் தானே செதுக்கிக்கொண்டு இன்றும் சீரிளமையோடு நிற்கின்ற செம்மொழியல்லவா எம் தமிழ்.

எம் தமிழோடு கலக்கும் தைரியம் இன்றுவரை வேறெந்த மொழிக்கும் ஏற்பட்டதில்லை.`

2000 ஆண்டுகளுக்கு மேலாக ஏறக்குறைய சீரான எழுத்துருக்களுடன் எம்மொழியின் கலப்பின்றி  தனித்து நிற்கும் எம்மொழியா கூடுவிட்டு கூடு பாயவேண்டும்?

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்து வெளியில் காணப்பட்ட கல்வெட்டுக்கள் சொன்னதென்ன.,

அசோகர் காலத்தில் கண்டெடுக்கப்பெற்ற  பிராமி கல்வெட்டுகள்

அதைத்  தொடர்ந்த பௌத்தர்களின்   தாக்கம்  அத்தனையும் கடந்துதானே எம்தமிழ் வந்திருக்கிறது.

பிராமி முறையில் காணப்பட்ட எழுத்துருக்கள் தமிழ் ஒலிகளை ஏற்க இயலாமற் போனபோது பிறந்ததுதானே தமிழ் பிராமி.

அடுத்து

கல்வெட்டுப்பதிவுகளைத்தாண்டி ஓலைகளில் எழுதப் பட்டபோது தமிழ் வட்டெழுத்து முறைக்கு மாறுகிறது.

ஏறக்குறைய பதினோராம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து முறை முற்றிலுமாக ஒதுக்கப்பெற்று பல்லவர்களால் மேலும் சீரமைக்கப் பெறுகிறது. பல்லவர் காலத்திலேயே இன்றைய தமிழின் நெருங்கிய தோற்றத்தை எம்மொழி பெற்றுவிட்டது எம்மொழிக்கும் கிட்டாத பேரங்கீகாரம் அல்லவா?

பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கிறித்துவமத பிரச்சாரத்துக்கு வந்த பெஸ்கி என்ற வீரமாமுனிவர்  அன்னை தமிழுக்கு பொட்டிட்டு (எழுத்துருவுக்கு புள்ளி சேர்த்து  இலக்கணங்கள் தந்து) அணிகலன் படைத்து அணி சேர்க்கிறார்.

உலகிலேயே எம்மொழிக்குமில்லாத வரலாறு கொண்ட, எம்மொழியிலும் காணக்கிடைக்காத இலக்கணங்களும் இலக்கியங்களும் நிறைந்த தாய்த் தமிழை கற்பதற்கா எம்மக்கள் அல்லலுறுகிறார்கள்?

இன்றைய குழந்தைகளுக்கு இவை ஒரு பொருட்டே அல்ல. அவர்களின்  விரிந்த  பார்வைக்கு விருந்தளிக்க நவீன யுகத்தின் கதவுகள் திறந்தே கிடக்கின்றன. அதனால் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அறிந்து கொள்கிற திறனும் கையாளுகிற நேர்த்தியும் மிகுதியாக நம் குழந்தைகள் பெற்றிருக்கிறார்கள்.

அவர் சொல்லுவது போல இரண்டு எழுத்துருக்களைக் கற்க அவர்களுக்கு தேவையான இரண்டு மூன்று வருடங்கள்  அவர்கள் கல்வி வாழ்க்கையில் மிக மிகக் குறைவானவையே. நெடுங்காலம் மும்மொழியை கற்ற அனுபவமும் எம் குழந்தைகளுக்குண்டு. இன்றும் வேற்றுமாநிலங்கள் பலவற்றில் மூன்று மொழிக்கு குறைவின்றிதானே கல்வி கற்பிக்கப்படுகிறது.

மிருகங்களையும் பறவைகளையும் வித்தை என்ற இலக்குக்காக பழக்கியபின்  அவைகள் நிகழ்த்தும் சாகசங்கள் வியக்கத்தக்கவை. பிள்ளைப்பிராயத்தில் பயிற்றுவைத்தால்  குழந்தைகளும்  அப்படித்தான்.

கற்பதில் சிரமமும் கையாளுவதில் சங்கடங்களும் ஏற்படும்போது மொழியை மேலும் மேலும் சீரமைப்பது காலத்தின் கட்டாயம். அதைத்தான் இதுவரை கண்டிருக்கிறோம். காலப்போக்கில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் அது தவிர்க்க முடியாதவைதான். ஆனால் இலக்கு ஒன்றாகத்தான் இருக்கும்.

அப்படி வளர்ந்து வளர்ந்துதான் தமிழ்மொழி இப்போது கணினிக்குள்ளே நுழைந்திருக்கிறது.

பதிமூன்றாண்டுகாலம் ஆங்கிலத்திலேயே தமிழை தான் தட்டச்சு செய்த சாகசத்தை சொல்லும் ஜெயமோகன் ஒன்றை கவனிக்க வேண்டும். அது கணினிக்குள் தமிழ் கால் வைத்த காலம்.

தட்டச்சே அறியாத நான் இன்று அவர் பேசும் வேகத்தில் தமிழிலேயே தட்டச்சு செய்கிறேன். இதைக்கற்க எனக்கு ஒருநாள்கூட தேவைப்பட்டிருக்கவில்லை.

ஒருவேளை ஜெயமோகன் கூற்று நிகழ்ந்து விட்டால் குழந்தைகள் அவர் சொல்வதுபோல் வேகமாக வாசிக்கக்கூடும். ஆனால் அவருடைய படைப்புகளையோ  எம் கவிஞர்கள்  உணர்வுகளையோ அவை பிரதிபலிக்கக்கூடும் என்று தோன்றவில்லை. இப்போதே இயல்பாக மொழிமாற்றம் செய்யப்பெற்ற எத்தனையோ இனிய தமிழ் நூல்கள் உயிரின்றி உடலோடு உலாவுவது வெளிப்படை.

என்னதான் z h போட்டு எழுதினாலும் ழகரத்தை உச்சரித்தறியாதோர் பட்டியலில் நம் இனமும் சேரும்.

பெரியாரை வெறுப்பவர்கள்கூட மொழிக்கெதிராக முணுமுணுக்கும்போது அவரை சேர்க்கத் தவறுவதில்லை.

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் வாழ்வில் முன்னுரிமை கொடுத்தது உயர்வு தாழ்வற்ற சமதர்ம சமுதாயம் படைப்பதற்கே. அவருக்கு மொழி அடுத்தபட்சமாகவே இருந்திருக்கிறது.

தமிழில் காணப்படுகிற எழுத்துகளின் எண்ணிக்கைய குறைத்து  எம்குழந்தைகளின் சிரமத்தை குறைக்க வேண்டுமென பெரியார் பேசியது உண்மைதான்.

அதை வலியுறுத்தவே  மொழியின் உடலையே மாற்றிய துருக்கி கமால் பாட்சாவை அவர்தான் நினைவூட்டினார்.

எழுத்துருவை இழக்கும்போது தமிழின் கதி  –

எண்ணிப் பார்க்கவே  ஏதோ விபரீதம் புலப்படுகிறது.

கூடுவிட்டு கூடு பாய்ந்த பட்டி விக்ரமாதித்தன்  கதைகளை படித்தவர்கள் ஜெயமோகனின்  கூடுவிட்டு கூடு பாயும் யோசனைகளில் இருக்கும் விபரீதத்தை  உணரக்கூடும்.

இந்த ஆலோசனைகள்  அவர்  குறிப்பிட்டதைப்போல அபத்தமாகவும் அதீதமாகவும்தான்  இருக்கிறது. மேலும் யோசிக்க யோசிக்க  அது  நிரூபணமும் ஆகக்கூடும்.

எல்லா மாற்றங்களும் முதலில் அபத்தமாகத்தான் தோன்றும் என்பதில் நம்பிக்கை கொண்ட ஜெயமோகன் தமிழும் ஆங்கிலத்தை மீறி சகல துறைகளிலும் ஒளிரும் என்பதை  ஏன் ஏற்கக்கூடாது.

கிளியின் உடலில் கூடு பாய்ந்த விக்ரமாதித்தன்  கிளியாக வாழலாமே தவிர விக்ரமாதித்தனாக முடியாது!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பட்டியும் விக்ரமாதித்தனும் ஜெயமோகனும்!

  1. மிகவும் வரவேற்கத் தகுந்த கட்டுரை. தமிழிலேயே கணிணியின் பயன்பாடு கூட இப்போது சாத்தியமாகி விட்ட நிலையில் இந்த யோசனை தேவையில்லையே.

    //மொழி உயிரென்றால் எழுத்துரு உடலல்லவா. எழுத்துரு இருந்தால்தானே இலக்கியமும் இலக்கணமும்  வரும். இலக்கணமும் இலக்கியமும் இருந்தால்தானே மொழி தொடர்ந்து  வாழும்.//

    தமிழ் மொழியின் மேல் பற்றுக் கொண்டவர்கள் சொல்ல நினைக்கும் கருத்துக்களை கட்டுரையாளர் வில்லவன் கோதை, ஆணித்தரமாக வெளிப்படுத்தி இருக்கிறார். வாழ்த்துக்கள்!

  2. சிலர் தங்கள் புத்திசாலித்தனத்தைத் தெரிவிக்க இப்படி சிரிப்பு வரவழைக்கும் கருத்துகள் சொல்வதுண்டு. அதை தான் ஜெயமோகனும் செய்துள்ளார். நகைச்சுவையாக நினைத்துக் கொண்டு புறக்கணிப்பது நல்லது.

    நேற்று இப்படித் தான் இந்துவில் இன்னொரு கருத்து திருவாய் மலர்ந்தருளினார். புதிய பகுத்தறிவு இயக்கம் வர வேண்டுமாம். திருநீறு அணிந்தால் சளி ஜலதோசம் போகும் என்று சொல்கிறார்கள், ஏன் டால்கம் பவுடர் போடக்கூடாது என்று கேட்கிறார். திருநீறு வாழ்க்கையின் அநித்தியம் உள்பட பல ஞானச் செய்திகளை தெரிவிக்கிறது. அதனை அணிந்து கொண்டால் ஆன்மிக பலனுடன் ஆரோக்கியப் பலனும் இருக்கிறது என்று அறிஞர்கள் சொல்வதை முழுவதும் புரிந்து கொள்ளாமல் ஜெயமோகன் கிண்டல் அளிக்கிறார். டால்கம் பவுடர் போட்டால் கூட ஜலதோசம் போகும் தான். ஆனால் அதில் ஆன்மிக செய்தி உண்டா? ஒரு மூத்த எழுத்தாளரிடம் இருந்து இது போன்ற அரைவேக்காட்டு கருத்துகளை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *