சச்சிதானந்தம்

குறவனும் குறத்தியும் தத்தம் பயணத்தைத் தொடர்தல்

 

பசியும் தாகமும் தணிய, நடு

நிசிபோல் கண்கள் சுழன்று இழுக்க,

அசையும் தருக்கள் தென்றல் வீச,

அசைவின்றித் துயின்றனர் குறவனும், குறத்தியும்!                           131

 

இடியெனப் பிளிறிய பிடியின் ஒலியால்,

திடுக்கிட்டுக் குறத்தியின் தூக்கம் கலைய,

அடிமனம் அடைந்த படபடப் பாலே,

நொடியினில் குறவனின் தூக்கம் கலைத்தாள்!                                                                                    132

 

குறவன் எழுந்து குறத்தியை இழுத்து,

சேயை அணைக்கும் தாயைப் போல,

மார்பில் அணைத்து அச்சம் நீக்க,

அச்சம் நீங்கி, நாணம் கொண்டாள்!                                                                                                              133

 

நாணம் நீங்காக் குறத்தி மீண்டும்,

குறவனை நீங்கிக் கானகம் சென்றாள்,

குறவனும், குறத்தியின் அச்சம் எண்ணிக்,

கலங்கிய மனதுடன் மறுதிசை சென்றான்!                                                                                             134

 

 

 

பிற்பகல் உறக்கம்

 

குறவனும் குறத்தியும் துயின்றதைப் போல,

குரங்குகள் இரண்டு மரத்தின் மேலே,

இயற்கை அரங்கின் எழிலில் மயங்கி

உறங்கும் அழகைக் குறத்தியும் கண்டாள்!                                                                                             135

 

மனிதர்கள் மந்திகள் மட்டும் அல்ல,

பறவைகள் விலங்குகள் தருக்களின் உடனே,

ஆறுகள், ஏரிகள், மீன்களும் கூட,

பிற்பகல் உறக்கம் கொள்வது இயற்கை!                                                                                                  136

 

இமையற்ற மீன்களும் நீருக் குள்ளே,

அமைவுற்ற பாறையின் பிளவுக் குள்ளே,

தமையுற்று உறங்கும் கண்ணுக் குள்ளே,

இணையற்ற பிற்பகல் நற்பொழு தினிலே!                                                                                             137

 

முதலை போலத் தோலைக் கொண்ட,

தவளை ஓன்று முயலைப் போல,

தாவிக் குதித்துத் தாமரை மீது,

ஏறிப் படுத்துத் தூங்கிடும் பிற்பகல்!                                                                                                             138

 

மேற்திசைக் கதிரவன் மேகத்திற்குள் மறைந்ததுபோலக்,

கதிர்களின் வீச்சில் வெம்மை குறைந்து,

மென்மை வளர, விலங்குகள் பறவைகள்,

மீண்டும் வெளிவரக் கானகவாழ்க்கை தொடர்கிறதே!                                                                    139

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “குறவன் பாட்டு – 17

 1. அச்சம் நீங்கி
  நாணம் கொண்டது,
  நல்ல
  அகநாநூறு…!

 2. பசியும் தாகமும் தணிய, நடு
  நிசிபோல் கண்கள் சுழன்று இழுக்க,
  கடல் அலையும் தென்றல் வீச
  துயில் என்னை அனைக்குது
  குறவன் பாட்டு மதி தன்னில் நிறைந்ததால்.

 3. குறவன் பாட்டு கவிதைகளை தொடர்ந்து இரசித்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்து வரும் நண்பர்கள் திரு.தனுசு மற்றும் திரு.செண்பக ஜெகதீசன் அவர்களுக்கும் என் அன்பு நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *