Month: February 2017

  • வெளிச்சம்

     

    கவிஞர் ஜவஹர்லால்

    இருட்டில் இருப்பவன் வெளிச்சம் வேண்டி
    வெளியில் தேடுகிறான் ––மனசை
    இருட்டுக் குகையென ஆக்கி வாழ்பவன்
    எங்கே கண்டிடுவான் ?

    அல்லவை தேடி அலையும் மனமொரு
    கனத்த இருட்குகையே –அதில்
    நல்லவை நாடி ஒருசிறு சுடரை
    ஏற்றிடில் ஒளிபிறக்கும்.

    சித்த மயக்கம் என்பது வாழ்வைச்
    சூழும் இருட்டாகும்; –அங்கே
    சித்தத் தெளிவினைச் சேர்க்கும் அறநூல்
    சிறந்த விளக்காகும்.

    சூழும் வஞ்சகம் சூது பொய்மை
    சூழ்ந்துள மனசெல்லாம் – இருட்டில்
    ஆழும் ஒருகுகை; அதனுள் பிசாசுகள்
    அண்டிக் குடியிருக்கும்.

    கருத்து வெளிச்சம் தானாய் வராது
    கற்பன கற்றிடுவாய்! -–மனம்
    வெறுத்து நீயே வீழ்ந்து விடாமல்
    காப்பது கற்பவையே!

    வெளிச்சம் தேடி வெளியில் அலைவோர்
    பாறையில் விதைப்பவரே ! -–அந்த
    வெளிச்சம் உள்ளே ஏற்றி வெளியே
    விளங்கச் செய்திடுநீ !

    அடுத்தவர் நலத்தை நினைத்துப் பார்நீ !
    அங்கொரு சுடர்தோன்றும் ! –உன்னைக்
    கெடுத்தவர் தமக்கும் நலமே செய்நீ !
    கருத்துள் ஒளிபிறக்கும்.

    உள்ளொளி தோன்றின் வெளியொளி பிறக்கும்
    உள்ளே விளக்கேற்று ! –மிகத்
    தெள்ளத் தெளிந்த அறிவொளி ஏற்றிச்
    சூழும் இருள்நீக்கு !

    வெளிச்சம் என்றும் வெளியில் இல்லை
    விளைகிற இடம்மனமே ! –அந்த
    வெளிச்சம் பிறர்க்கே ஒளிதர வேண்டும்;
    மேன்மை நீயடைவாய் !

    Share
  • பெருமாள் திருப் புகழ்….!

     

    கிரேசி மோகன்
    ———————————————-

     

    தனனதன தனனதன தனதான தானதன
    தனனதன தனனதன தனதான தானதன -தனதான….!
    “சகலவித சுகமதனில் உறவாடி ஆடியுடல்
    பிணிகளுற மரணயமன் வருநாளில் நாலுகர
    பலகைதனில் பலருமழ சுடுகாடு சேருகணம் -கருடாழ்வார்
    பறவைதனில் புவிமலர்ம கள்சமேத ராய்முதலை
    பிடிநழுவ களிறழுகை முதலாதி காதுபட
    விரையுஅதி துரிதமுடன் வரவேணும், நேமிவலம் -புரியோடு
    தகதகவெ னஜொலிகதை சிலைவாளும் தோளசைய
    அபயமென சரணமுறு எனதாவி வீடுபெற
    ரவிவரும னிறகுவரை கருநீல சோபையுடன் -பரிவாக.
    தளிருவிர லடியில்வரை துகளாக கோனமரன்
    பொழியுமழை இடையருடல் நனையாத வாறவனின்
    கருவமது ஒழியவெயில் விரிவானி லேழுநிற -சிலைமேவ,
    சுகமுரளி இசைபழகு யதுவாசி தோழனென
    வளருதயிர் கடையுமகள் முலைவாட, பூதகியின்
    விடமொழுகு முலைநுனியில் உயிர்போக வாயுறியும் -சிசுமாலே
    சிறகுமயில் முடிநழுவ, பழுதாக பீதகமும்
    அரையிறுகு கயிறுமுனை உரலூற மாமருதம்
    முறியயொளி சுரர்ககன வழிகாண லீலைபுரி -நவநீதா
    பகருமறை எழுதுகதை இதிகாச நாரதிய
    முனிவரொடு மலரயனும் கயிலாய வாசிசிவன்
    புகழுபதம் ஜெயவிஜயர் புரிகாவல் வாசல்வழி -நுழைவோர்காண
    பரமபத அலைகடலில் விடநாக மேளுபதம்
    கனகமழை பொழியவரு அலமேலு மேவுபதம்
    அடியவர்கள் வினைவிலக சரணுறு பாதமலர் -பெருமாளே”….கிரேசி மோகன்….!

    Share
  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 35

    மீனாட்சி பாலகணேஷ்

    திருநீறும் திருவைந்தெழுத்தும்

    சென்ற அத்தியாயம் வரை பெரும்பாலும் புலவர்கள் கற்பனை செய்து எழுதிய கதைகளையும், தொன்மங்களையும் பார்த்து மகிழ்ந்து வந்தோம்.

    வித்தியாசமாக இப்போது, பிள்ளைத்தமிழ்ப் புலவர்கள் எடுத்தாளும் மற்ற செய்திகளையும் காணலாமே!

    பிள்ளைத்தமிழின் காப்புப் பருவத்தினை எடுத்துக்கொண்டோமானால், குழந்தையைக் காப்பதற்காக முறைப்படி திருமாலிடம் துவங்கி, விநாயகர், சிவபெருமான், பார்வதி, அலைமகள், கலைமகள், பிரம்மா, இந்திரன், சப்தமாதர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் எனப் பலப்பல தெய்வங்களை விளிப்பதனைக் காணலாம். இவை பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்களின் காப்புப்பருவத்தின் பொதுவான அமைப்பாகும்.

    am
    முருகன் மீதான சில பிள்ளைத்தமிழ் நூல்களில் சிறப்பாகச் சைவசமயச் சின்னங்களாகிய திருநீற்றையும், ‘நமசிவாய,’ எனும் ஐந்தெழுத்தினையும், உருத்திராக்கத்தினையும் விளித்துக் குமரனாகிய குழந்தையைக் காக்கவேண்டுவர் புலவர்கள். திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழை இயற்றிய சிதம்பர அடிகளார் இவ்வாறு பாடியுள்ள இரு பாடல்களை இவ்வத்தியாயத்தில் காணலாமா?
    கந்தசாமி எனப்போற்றப்படும் முருகப்பிரான் உறையும் திருப்போரூர் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அழகிய ஊராகும். இவ்விடம் சென்னையிலிருந்து 40 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. பிரணவ மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு. முருகன் அசுரர்களுடன் நிகழ்த்தியபோரில் கடற்போரானது திருச்செந்தூரிலும், தரைப்போரானது திருப்பரங்குன்றத்திலும், ஆகாயப்போரானது திருப்போரூரிலும் நிகழ்ந்தது எனப் புராணங்கள் கூறும். தற்காலத்தைப்போலவே புராணகாலத்திலும் முப்படைகளைக் கொண்டு போரிட்டனர் என்பது அறியத்தக்கது. சிதம்பர அடிகளார் திருப்போரூர் சந்நிதிமுறை எனும் நூலை இயற்றியுள்ளார். இதனுள் பிள்ளைத்தமிழ் முதலாக 36 தலைப்புகளில் பாடல்கள் இயற்றியுள்ளார். அன்னை மீனாட்சியின் மீதும் மீனாட்சியம்மை கலிவெண்பா எனும் நூலைப் பாடியுள்ளார்.

    சைவர்களுக்கு, திருநீறு இன்றியமையாத ஒரு சமயச் சின்னமாகும். இதன் பெருமைகளும் கொஞ்சநஞ்சமல்ல. பாடலின் அமைப்பும் அதியற்புதமாகவுள்ளது. முதலிரு பகுதிகள் முருகனின் சிறப்பினையும், கடையிரு பகுதிகள் திருநீற்றின் சிறப்பினையும் அழகுற விளக்குகின்றன.

    முதற்கண் திருநீற்றின் சிறப்புகளைக் காணலாம்: ஆதிபகவன் எனப்படும் இறைவனின் மெய்யறிவு வடிவாகிய நெருப்பில் தோன்றியது திருநீறு. அதுவும் இறைவனைப்போன்றே என்றுமுள்ளது; நித்தியமானது. திருநீறு சிவபெருமானின் திருவுருவாகக் கொள்ளப்படும்; அச்சிவபெருமானே மகாபற்பமாவார்- ஆகவே ‘ஞானவடி அழலிற் பூத்து,’ எனப்பட்டதாம். அதுமட்டுமின்றி, சிவபிரான் என்றுமுள்ளவராதலால் அவரைப்போன்று அவருடைய திருவடிவம் ஆகிய திருநீறும் என்றும் (நித்தியமாய்) உள்ளது. தன்னை அணிந்தவர்களுக்கு வேண்டியதனைத்தையும் தருவது. இறைவன் திருவருளால் பாற்கடற்கண் தோன்றிய தேவாமிர்தமானது தன்னை உண்டவர்களுக்கு, நரை, திரை, மூப்பு ஆகியவற்றை நீக்குவதனைப்போல, திருநீறும் தன்னைச் சிறிது வாயிலிட்டு உண்பவர்களுக்கு நோய்தீர்க்கும் அமுதமென விளங்குவது. ஆகவே ‘அருந்தினோர்கட்கு ஆரமுதாய்’ எனக்கூறப்பட்டது. இன்றும் பல இடங்களில் திருநீறு மருந்தாக உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது. விதிவழியே செல்லுகின்ற ஆன்மாக்களுடன் ஒன்றிணைந்த ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நீக்கியருளும் தன்மைகொண்டது. திருநீற்றினைக் குழைத்து மீன்று பட்டைகளாக நெற்றி, மார்பு, வயிறு, கைகள் முதலானவற்றில் அணிவது வழக்கம். இது ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்கலையும் நீக்கியருளும் தன்மை கொண்டதாகையால் ‘நீதியறியும் பசுமலத்தை நீக்கும் ஒரு நற்குறி’ எனப்போற்றப்படுகிறது.

    ஆதி பகவன் ஞானவடி
    அழலிற் பூத்து நித்தியமாய்
    அணிந்தோர் தமக்கு வசிகரமாய்
    அருந்தி னோர்கட் காரமுதாய்
    நீதி யறியும் பசுமலத்தை
    நீக்கு மொருநற் குறிகாட்டி
    நிகழ்பே ரின்பக் கடலூட்டி
    நின்ற புகழ்வெண் திருநீறே.

    இந்தத் திருநீற்றினை அணிந்த குழந்தை முருகனை அது காக்க வேண்டும் எனப் புலவர் வேண்டுகிறார். அவன் சாமானியக் குழந்தையா என்ன?

    ‘ஒளிபொருந்திய மகரக்குண்டலங்களை அணிந்த அழகான தோள்கள் பன்னிரண்டினை உடையவன் அவன். சுருதி எனப்படுவதான வேதநூல்கள் (மறைகள்) முழங்கும் தண்டைகளை அணிந்த தனது இரு திருவடிகளையும் எனது தலையில் சூட்டியவன்; ‘மாது’ எனும் சிறப்பு அடைமொழி பெற்ற திருமகள் உறைகின்ற திருப்போரூரின் வாழ்வு அவனே!’ என்றும் கூறுகிறார். செல்வவளம் தழைத்து விளங்குவதால் திருமகளாகிய ‘மாது உறையும் சமரபுரி’ எனப்பட்டது. தேவர்களின் சிறந்த மணியாக விளங்குபவன் அவன். அழகான வேலினை ஏந்திய கையன்; மயிலில் ஏறி வருபவன். இவனை இத்திருநீறு ஈண்டுவந்து காத்தருள வேண்டும்.

    முழுமையான பாடல் இதோ:

    சோதி மகரக் குழைசெறிசுந்
    தரத்தோ ளீரா றுடையானைச்
    சுருதி யிரைக்குந் தண்டையந்தாள்
    துணையென் முடியிற் பொறித்தானை
    மாது வளருஞ் சமரபுரி
    வாழ்வை வானோர் சிகாமணியை
    வடிவே லரசை மயிலரசை
    வந்து புறங்காத் தளித்திடுமால்
    ஆதி பகவன் ஞானவடி
    அழலிற் பூத்து நித்தியமாய்
    அணிந்தோர் தமக்கு வசிகரமாய்
    அருந்தி னோர்கட் காரமுதாய்
    நீதி யறியும் பசுமலத்தை
    நீக்கு மொருநற் குறிகாட்டி
    நிகழ்பே ரின்பக் கடலூட்டி
    நின்ற புகழ்வெண் திருநீறே.

    (திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- திருநீறு- சிதம்பர அடிகளார்)

    *****

    அடுத்து சிதம்பர அடிகளார் திரு ஐந்தெழுத்தின் பெருமையினைப் போற்றுகிறார். மணிமந்திர ஔடதங்கள் என்பன சிவகண்மணி எனப்படும் உருத்திராட்சம், ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து, திருநீறு ஆகியனவேயாகும். இவற்றுள் திருவைந்தெழுத்தின் பெருமை கூறப்படுகின்றது.

    am1
    வாசம்கமழும் குராமலர்களையணிந்த வள்ளியம்மையின் நாயகன் குமரன்; கார்த்திகைப் பெண்டிரின் குடம்போலும் கொங்கைகளிலிருந்து பெருகிய பாற்கடலை உண்டு வயிறு நிரம்பியவன். அருணன் போல்பவன் இந்தக் குமரப்பெருமான்; இனிமையான சோலைகள் நிறைந்து பொலியும் சமரபுரி (போர் + ஊர்= போரூர்) எனும் திருப்போரூரில் நின்றுலவும் குமரனைக் காக்க வேண்டும்.

    யார் காக்க வேண்டும்? திருவைந்தெழுத்து காக்கவேண்டும்! அது இக்குமரனின் தகப்பனாகிய சிவபெருமானின் பெருமைமிகு பெயராகும். தனயனை அதுவே காக்கும். அந்தத் திருவைந்தெழுத்தின் பெருமைகளைக் கூறப்புகுகிறார் அடிகளார்.

    எண்ணுவதற்கு அரியதான பல உயிர்களும் (பாசம்) பந்தம் எனும் கரிய கடலைக்கடந்து கரையேற உதவும் மரக்கலமாகத் திகழுவதே இந்த ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து. திருவைந்தெழுத்தைக் கூறி பிறவிக்கடலை எளிதாகக் கடந்துவிடலாம் என்பது இதனால் பெறப்பட்டது. அன்பர்களாகிய அடியார்கள் தமது உள்ளங்களில் இவ்வைந்தெழுத்தை இருத்தி அதனையே ஐயன் திருவடிவாகக்கண்டு தியானம் செய்வார்கள். ‘உண்மைவிளக்கம்’ எனும் நூல் இதனை மிக நுட்பமாகக் கூறியருளும். இதனையே ‘அன்பர் உட்காட்சி’ என்கிறார். அரியமறைகளாகிய வேதங்களும் அறிவிக்க இயலாத அழகான பரமசுகப் பேற்றாயமைந்ததும் இவ்வைந்தெழுத்து ஒன்றே! அருமையான இறைவனுக்கு மிகவும் பொருத்தமான பெயர் இதுவே! சிவனுடைய பல பெயர்களில் மிகச்சிறப்பு வாய்ந்தது இப்பெயரே! அதனால் திருவைந்தெழுத்தாகிய ‘நமசிவாய’ என்பது ‘அரிய சிவன் உரிய பெயர்’ எனப்படுகிறது.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருவைந்தெழுத்தினைப்போற்றுவோமாக: ஏனெனில் இது நமது குமரனைக் காப்பதற்காகவே.

    கருதரி பலவுயிர்கள் பந்தனைக் கார்க்கடற்
    கரையிவர வருகலனை அன்பருட் காட்சியை
    அருமறையும் அறிவரிய அஞ்சுகப் பேற்றினை
    அரியசிவ நுரியபெயர் ஐந்தினைப் போற்றுதும்
    குரவுகமழ் குறவனிதை கொண்கனைக் கார்த்திகை
    குடமுலையின் அமுதகடல் உண்டகத் தேக்கனைத்
    தருணகும ரனையினிய தண்டலைச் சீர்ப்பொலி
    சமரபுரி தனில்நிலவு கந்தனைக் காக்கவே.

    (இவர- ஏற; தேக்கம்- நிறைவு)
    (திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- திருவைந்தெழுத்து- சிதம்பர அடிகளார்)

    இதுபோலும் சமயச் சின்னங்களையும் சிறப்பான தொண்டர்கள், மற்றும் தெய்வங்களையும் காப்புப்பருவத்தில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் போற்றியுள்ளன. தொடர்ந்து சிலவற்றை வரும் அத்தியாயங்களில் வெவ்வேறு நூல்களினின்றும் கண்டு மகிழ்வோம்.

    பிள்ளைத்தமிழ் நூல்கள், பிள்ளைப்பருவத்தின் இனிமையை மட்டுமே பாடாமல், அப்பிள்ளையைச் சார்ந்த சமய ஒழுக்கங்களையும், வழக்குகளையும் போற்றி உரைப்பது இயற்றிய புலவர்களின் பக்திநிலைக்கும், புலமைக்கும் சான்றான பதிவுகளாகவும் அமைந்துள்ளன.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • வரலாறுகளின் வேர் – 6

    அண்ணாமலை சுகுமாரன்

    ANS-1-1-1

    1898 ஆம் ஆண்டில் INDIAN ANTIQUITIES – BY THE LATE BISHOP CALDWELL என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதிய கால்டுவெல் அதை பரதகண்ட புராதனம் என்ற பெயரில் தானே வெளியிட்டார் .
    நான்கு பாகங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் ,

    இதன் முதல் பாகம் சதுர்வேதங்களைப்பற்றியது ,
    இரண்டாம் பாகம் இராமாயணத்தைப் பற்றியது ,
    மூன்றாம் பாகம் மகா பாரதத்தைப் பற்றியது ,
    நான்காம் பாகம் மற்றைய புராணங்களைப் பற்றியது ,
    அவ்வளவுதான்!
    இவைகளை ஆதாரமாக வைத்தே பாரதத்தின் புராதனம் எழுதப்பட்டது .

    நான்காம் பாகத்தின் இடையே 1841 ஆம் ஆண்டில் சென்னப் பட்டணத்திலிருந்து வெளிவந்த நான்கு காண்டம் கொண்ட ஓரு புத்தகம் குறிப்பிடப்படுகிறது .

    அது என்ன புத்தகம் தெரியுமா ?

    அதுவும் தக்ஷயாகம் எனும் புராணம் தான் . இத்தகைய நிலையே அந்த காலக்கட்டத்தில் நிலவி வந்தது. ஆதாரம் காட்ட நம்மிடம் புராணங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை .

    ஆனால் உண்மை என்னவோ, இதனில் மாறுபட்டது , நமது முன்னோர் விட்டுச் சென்ற தொன்மை ஆதாரங்கள் ,தேடுவாரின்றி மதிப்பறியாமல் கொட்டிக் கிடந்தன என்பதே நிதர்சனம் ஆகும்

    இத்தகைய நிலையில் தான் இந்தியாவில் அப்போது Archaeological Survey of India (ASI ) எனும்ஒரு தொல்லியல் ஆய்வு அமைப்பை நிறுவ கடும் முயற்சி எடுத்து அது நிறுவப்பட்டதும் அதன் முதல் தலைவராக இருந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் பற்றி இப்போது தெரிந்து கொள்ளப்போகிறோம் .

    அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் 1814 இல் பிறந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் தனது 19வது வயதில் இராணுவ பொறியாளராகப் பணியாற்ற இந்தியா வந்தார். அவருக்கு அப்போது இந்திய வரலாற்று ஆய்வில் பிரகாசித்துக்கொண்ட பிரின்செப் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது . அவர் மூலம் கன்னிங்ஹாம்க்கு இந்திய வரலாற்று செய்திகள் மற்றும் ஆய்வுகள் பற்றி பல செய்திகள் தெரியவந்தன . இத்தகைய ஆய்வில் அவருக்கு ஆர்வமும் தோன்றியது

    அந்த காலகட்டத்தில் எகிப்த்தில் பிரமிடுகள் பற்றிய ஆய்வு தீவிரமாக இருந்து வந்தது .பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பலரும் அத்தகைய ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர் . அதன் மூலம்அவர்கள் பெரும் பொருளும் ஈட்டினர் . ஆய்வில் கிடைக்கும் தொல் பழம் பொருள்களுக்கு நல்ல ஒரு சந்தை மதிப்பு அப்போதைய உலகில் ஏற்பட்டிருந்தது .

    தொல்லியல் ஆய்வு என்பது புத்திசாலிகளுக்கு தங்களின் அறிவை வெளிப்படுத்தும் ஒரு மதிப்பூட்டும் செயலாக அப்போது ஆகியிருந்தது. செல்வந்தர்கள் அதிகாரத்தில் இருப்போர் தொல்லியல் ஆய்வுகள் பற்றி விருந்துகளில் கலந்து பேசுவது ஒரு நாகரிகமாக அப்போது ஆகியிருந்தது. தொல்லியல் ஆய்வுகள் பற்றிய ஆர்வம் ஒரு உயர் வர்க மக்களின் குறியீடாகவே பிறநாடுகளில் போலவே இந்தியாவிலும் அப்போது மாறியிருந்தது .

    எனவே இந்தியாவில் மதிப்பாரற்று கொட்டிக்கிடந்த தொல்லியல் பொருள்களை சேகரம் செய்வதிலும் ஆதாரங்களை வெளிப்படுத்துவதிலும் தொகுப்பதிலும் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் போன்ற பலரும் கவனம் செலுத்தலானர் .

    1834 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பிரின்செப் செய்திருந்த அசோகரின் மணிக்யாளா ஸ்தூபியைப் பற்றிய முந்தய ஆய்வின் தொடர்ச்சியான ஒரு கட்டுரையை பெங்கால் ஆசியாட்டிக் சொசைட்டியின் ஏட்டில் எழுதி கன்னிங்ஹாம் வரலாற்று அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தார் .

    அதே ஆண்டில் 1834 இல் சாராநாத் என்னும் இடத்தில் இருக்கும் அசோகரின் ஸ்தூபியை அகழ்வாய்வு செய்து உலகிற்கு அறிவித்தார் .

    தொடர்ந்து 1837 இல் கர்னல் எப் ஸீ மைசெய் உடன் சேர்ந்து சாஞ்சியில் ஒரு அகழ்வாய்வு தொடங்கி அதன் மூலம் பல ஆதாரங்களைத் தொகுத்தார் .1842 இல் சாங்கிசா எனும் இடத்தில் அகழ்வாய்வு தொடங்கப்பட்டது .

    இவ்வாறு அசோகரின் பிராமியில் இருந்த கல்வெட்டுகள் பல படித்தறியப்பட்டன . நெடுங்காலமாக புரியாத புதிராக இருந்த அந்த ஊசி முனை எழுத்துகளுக்கு அர்த்தம் வெளிப்பட்டது .

    அசோகரின் கல்வெட்டுகள் , ஸ்தூபிகளைப் பற்றி எத்தகைய இடங்களில் எங்கே அகழ்வாய்வு செய்வது என்பதற்கு அந்த காலகட்டத்தில் எந்த வித இலக்கிய ஆதாரங்களோ வழிகாட்டுதலோ இல்லாத அந்தச் சூழலில் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் பண்டைய சீன பயணியான ஹுவாங் சுவாங் எழுதிய பயணக் குறிப்புகளைக்கொண்டு அவர் சென்ற வழியில் அவர் விவரித்த பல இடங்களைக் கண்டறிந்தார். பின்பு அத்தகைய இடங்களில் அகழ்வாய்வு செய்யப்பட்டது .

    1851 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்திய தொல்லியல் ஆய்வின் மதிப்பையும் ,அத்தகைய ஆய்வுகளின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தத் தொடங்கினார் .

    1854 இல் புத்த இயக்கத்தின் வரலாற்றை விவரிக்கும் பிளசா ஸ்தூபி (The Bhilsa Topes) எனும் புத்தகத்தை அப்போது கிடைத்திருந்த ஆதாரங்களின் அடிப்படையில் எழுதி வெளியிட்டார்

    1861 இல் அப்போது வைஸ்ராயாக இருந்த ஜான் கன்னிங் அவர்கள் கன்னிங்ஹாம்மை இந்திய அரசின் archaeological surveyor ஆக நியமித்தார் . அது அப்போதய நிலையில் புதிய பதவி அதில் முதல் நியமனம் கன்னிங்ஹாமுக்குத் தான் . அந்த பதவியில் அவர் 1861 முதல் 1865 வரை பணியாற்றி பல ஆய்வுகளிலும் சான்றுகளை சேகரம் செய்து பாதுகாப்பதிலும் ஈடுபட்டார் .

    ஆனால் அந்த பதவியும் 1865 இல் ரத்து செய்யப்பட்டது. காரணம் இப்போது போலவே அப்போதும் அதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை . பின்பு லண்டன் திரும்பிய கன்னிங்ஹாம் Ancient Geography of India என்னும் புத்தகத்தின் முதல் பகுதியை 1871 இல் வெளியிட்டார் . இடையே அடுத்த வைஸ்ராயாக வந்த மாயோ இந்தியாவில் முதல் தொல்லியல் ஆய்வுக்கான அமைப்பான Archaeological Survey of India (ASI) தோற்றுவித்து அதன் முதல் director-general ஆக கன்னிங்ஹாம்மை நியமித்தார் . அது 1ஆம் தேதி , ஜனவரி 1871 ஆகும் .

    இன்றைக்கு சரியாக 147 வருடங்களுக்கு முன் இந்தியாவின் வரலாற்றை ஆய்வு செய்ய ஒரு மகத்தான அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் முதல் தலைவர் கன்னிங்ஹாம் ஆவார் .இந்த அமைப்பு உருவாகவும் பெருமுயற்சிகள் செய்ததும் அவரே ஆகும். இந்த பதிவி வகிக்க இந்தியா திரும்பினார் கன்னிங்ஹாம். தனது பதவிக்காலத்தில் 24 ஆய்வறிக்கைகளை விரிவாக்கத் தயாரித்தளித்தார் . இதில் 13 ஆய்வறிக்கைகள் இவரே நேரடியாக மேற்கொண்ட ஆய்வுகள் . மீதமுள்ளதை இவரது வழிகாட்டலில் பிறரால் மேற்கொண்ட ஆய்வுகள் .

    30 செப்டம்பர் 1885 வரை ஏ ஸ் ஐ இல் தலைவராக இருந்த கன்னிங்ஹாம். பின்பு இங்கிலாந்து திரும்பினார் .

    அவரது பதவிக்காலத்தில் தஷீலா முதல் கவுர் ( Taxila to Gaur.) வரை பல கள ஆய்வுகளும், அகழ்வாய்வும் செய்யப்பட்டன .

    இவரது பதவிக் காலத்தில் அசோகரின் கல்வெட்டுகளைக்கொண்ட முதல் பகுதியை வெளியிட்டார் . (Corpus inscriptionum Indicarum) (1877) இந்திய வரலாற்றின் காலங்களின் ஆய்வான ஒரு அரிய புத்தகத்தை 1883 இல் எழுதி வெளியிட்டார் ( Book of Indian Eras )

    தனிப்பட்ட முறையில் கன்னிங்ஹாம் ஒரு பெரிய அளவிலான தொன்மை நாணயங்களின் சேகரிப்பை செய்து வைத்திருந்தார் . ஆனால் துரதிர்ஷ்ட்டவசமாக அவர் ஒரு முறை 1884 இல் இலங்கையின் அருகில் படகில் பயணம் செய்தபோது விபத்துக்குள்ளாகி அவரின் சேகரத்தில் இருந்த பெரும்பான்மை நாணயங்களை இழந்து விட்டார் .

    மீதி இருந்த தொன்மை தங்க வெள்ளி நாணயங்களை பிரிட்டிஷ் அருங்காட்சியகம் அவரிடமிருந்து விலைக்கு வாங்கி பாதுகாத்து வருகிறது .

    இவரின் ஆலோசனைப்படி பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் இந்தியப் பகுதியின் வாயில் சாஞ்சி ஸ்தூபி வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது .

    தனது 19 வது வயதில் இந்தியா வந்த ராணுவ பொறியாளர் கன்னிங்ஹாம் 28 வருட பணிக்குப் பின் மேஜர் ஜெனரல் ஆக 1861 இல் பதவி ஒய்வு பெற்றார் . பிறகு இந்திய தொல்லியல் ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டார் .

    கன்னிங்ஹாம் அவர்கள் வட இந்தியாவின் பல பண்டைய தொன்மை சின்னங்களை கண்டுபிடிப்பதிலும் அவைகளை ஆவணப்படுத்தி பாதுகாப்பதிலும் பெரும் பங்காற்றினார் .

    அவற்றில் சாஞ்சி, சாரநாத் , கயாவில் உள்ள மகாபோதி ஆலயம் , தசாவதார ஆலயம் போன்ற பல குறிப்பிடத்தக்கவை .

    இத்தகைய பல இன்று உலக மரபுச் சின்னங்களாக UNESCO வால் அறிவிக்கப்பட்டு இந்தியாவிற்கு சுற்றுலா மூலம் பெரும் பொருள் குவிய வழிவகுத்துள்ளது .

    அவர் எழுதிய முக்கிய புத்தகங்களின் பட்டியல் பிரமிப்பு அளிப்பதாகும். எத்தனை அரிய ஆய்வுகள் , தலைப்புகள் அவர்தந்தது !

    Physical, Statistical, and Historical with Notices of the Surrounding Countries (1854).

    –Bhilsa Topes (1854), a history of Buddhism

    –The Ancient Geography of India (1871)

    –Corpus Inscriptionum Indicarum. Volume 1. (1877)

    –The Stupa of Bharhut: A Buddhist Monument Ornamented with Numerous Sculptures

    –Illustrative of Buddhist Legend and History in the Third Century B.C. (1879)

    –The Book of Indian Eras (1883)

    –Coins of Ancient India (1891)

    –Mahâbodhi, or the great Buddhist temple under the Bodhi tree at Buddha-Gaya (1892)

    1823 இல் சார்லஸ் மேசன் எனும் ஆங்கிலேயப்பயணி இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பயணம் மேற்கொண்டார் . அப்போது அவர் ஹரப்பா எனும் குக்கிராமம் வழியே சென்றார் . அங்கே ஒரு சிறிய குன்றில் இடிந்துபோன சிதைந்த கோட்டை ஒன்றை பார்த்திருக்கிறார் .

    அதுகுறித்து அங்கே வசித்த கிராமவாசிகளிடம் விசாரித்தபோது , அங்கே சபிக்கப்பட்ட ஒரு அரசரின் தீய ஆவி இருப்பதாகவும் , அந்த அரசர் செய்த தீய செயல்களின் காரணமாக கடவுள் விண்ணில் இருந்து நெருப்புக் கோளத்தை அனுப்பி அந்த கோட்டையை அழித்துவிட்டதாகவும் , அதுமுதல் அந்த கோட்டை பல நூறு ஆண்டுகளாக இடிந்தே கிடப்பதாகவும் கூறியிருக்கிறார்கள் .

    பல தீய சக்திகள் அங்கே இருப்பதாகவும் அங்கே யாரும் செல்வதில்லை என பலவேறு கதைகளை கூறியிருக்கிறார்கள் .

    அந்த இடிந்த கோட்டை உயர்ந்த மதில் சுவர்களும் இடிபாடுகளும் நிறைந்ததாகவே பலநூறு ஆண்டுகளாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்

    1823 இல் அங்கே சென்ற சார்லஸ் மேசன் தான் கண்டதையும் ,கேட்டதையும் பெருமையாக இங்கிலாந்து சென்றதும் பத்திரிகையில் எழுதினர் .

    சில ஆண்டுகளுக்குப் பின் இந்த செய்தியை தற்செயலாகப் பார்த்த கன்னிங்ஹாம் , ஆய்வுகளின்பால் கொண்ட ஆர்வத்தால் அங்கே தேடித் சென்றார் . அவர் சென்றது 1853 வருடம் அதாவது முப்பது ஆண்டுகள் கழித்து . ஆனால் ஹரப்பா எனும் குக்கிராமத்தில் அந்த குன்று இருந்தது. ஆனால் அந்த இடிந்த கோட்டை அந்தக் குன்றில் இல்லை .இத்தனை நூறு ஆண்டுகள் தாக்குப்பிடித்து நின்ற அந்த இடிந்த கோட்டை முப்பது ஆண்டுகளில் இடிந்து தரை மட்டம் ஆகிவிட்டது .

    வரலாற்றிற்கு எத்தனை துரதிஷ்டம் பாருங்கள் .சிந்துவெளி நாகரீகத்தின் ஹரப்பா தான் நான் குறிப்பிடும் இந்த ஹரப்பாவும் ஆகும் .

    மனம் தளராத கன்னிங்ஹாம் அந்த குன்றில் இருந்த இடிபாடுகள் அத்தனையும் சல்லடையாக சலித்துப் பார்த்திருக்கிறார் .

    அதில் சதுரமான கல்துண்டு ஒன்று ,பள பளவென்று மெருகேற்றப்பட்டது அவரது கண்ணில் பட்டது .
    அதை எடுத்து ஆராய்ந்த கன்னிங்ஹாம் அதில் மிருகங்கள் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டார் . அது என்னவென்று அப்போது அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை . அது ஒரு சிந்துவெளி நாகரீக முத்திரை. இன்னமும் சரிவர புரிந்துகொள்ள இயலாத ஒரு முத்திரை .இதைப்போல் இன்னமும் அந்த ஹரப்பாவில் இத்தகைய பலநூறு முத்திரைகள் அகழ்வாய்வில் இருந்து கிடைக்கும் என்பது அவருக்கு அப்போது எப்படித் தெரியும் ?

    ஒருவேளை அந்த இடிந்த கோட்டை அவர் முப்பது ஆண்டுகள் கழித்து வரும்வரை இருந்திருந்தால் இந்த சிந்துவெளி முத்திரைகளின் உபயோகம் என்னவென்று நமக்கு அப்போதே அவருக்கு ஏதாவது துப்பு கிடைத்திருக்கக்கூடும் .

    ஆனால் கன்னிங்ஹாம் வந்து சென்றபிறகு பலவித முயற்சிகளுக்குப் பிறகு அந்த ஹரப்பாவில் மீண்டும் அகழ்வாய்வு செய்ய சுமார் 90 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ ஆய்வுகள் 1920 இல் தான் துவங்கப்பட்டது .

    அரசாங்க வேலைகளில் அவசரம் பார்க்க இயலுமா ?

    இந்த கால இடைவெளியில் அழிந்துபோன ஆதாரங்கள் எத்தனையோ ?

    இவ்வாறு ஆய்வுகளை இடையில் நிறுத்தப்பட்ட அரிக்கமேடு , ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் எப்போது மீண்டும் ஆய்வு தொடங்கப்படும் ,? முடிவுகள் எப்போது மக்களுக்குத் தெரியவரும் ?.
    அது ஒரு “கோடி” கொடுத்தாலும் பதில் தெரியாத கேள்வி .!

    இவ்வாறுதான் இப்போது இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற அகழ்வாய்வு கீழடியில் மண்போட்டு மீண்டும் மூடப்பட்டது

    திரு பாலசுப்ரமணியம் என்பவர் கீழடியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 1970 முதல் வரலாற்று ஆசிரியராக வேலை செய்து வந்திருக்கிறார் . .

    1979 இல் அவர் கீழடியின் ஒரு பகுதியில் பள்ளிச் சந்தைத்திடல் என்னும் இடத்தில் ஒரு மண்மேடை கண்டார். அதில் சில டெராகோட்டா மண் சிலைகளை கண்டெடுத்தார் . அவைகளை தொல்லியல் துறையில் காட்டியபோது அவை 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றனர் .வைகை நதிக்கரை நாகரீகம் பற்றி ஆய்வு செய்ய தொல்லியல் துறை 293 இடங்களைத் தேர்ந்தெடுத்திருந்தனர். அப்போது பள்ளிச் சந்தைத் திடல் பற்றிய செய்தி அவர்களுக்கு ஆர்வம் கொடுத்தது . எனவே கீழடியில் அகழ்வாய்வு செய்ய தீர்மானித்தனர் .

    இதற்கு ஒரு பள்ளிக்கூடத்தின் வரலாற்று ஆசிரியரான பாலசுப்ரமணியம் காரணம் ஆக இருந்தார் . ஆனால் 1978 இல் தொடங்கிய முயற்சி 2015 இல் தான் ஆய்வாக மலர்ந்தது .

    இந்தத் தகவல் விரிவாக செய்திக் கட்டுரையாக Frontline, February 19, 2016 இல் வந்துள்ளது . ( திரு நா .கணேசன் அவர்கள் அவருக்கு வந்த கடிதத்தை மின் தமிழ் குழுவில் இட்டிருந்தார் -அதில் இந்தத் தகவல்கள் உள்ளன -அவருக்கு நன்றி )

    இத்தனை முயற்சிக்குப் பின் மலர்ந்த இந்த ஆய்வு இரண்டு ஆண்டுகளே நீடித்தது . 5600 தொல்லியல் சான்றுகள் சேகரிக்கப்பதில் இரண்டு மட்டுமே ரேடியோ கார்பன் சோதனைக்கு அனுப்பப்பட்டது .

    எத்தகைய காரணங்கள் கூறப்பட்டாலும் வரலாற்று உண்மைகள் தக்க காலத்தில் வெளிவராவிட்டால் அதற்கான ஆதாரங்கள் அழிந்துவிடக்கூடும் .இது வருத்தம் அளிக்கும் போக்கு ஆகும் . இத்தகைய போக்கு வரலாற்று ஆய்வுக்குத்தான் பெரும் இழப்பு !என்று தணியும் நமது இத்தகைய அறியாமையும் , அலட்சியமும் ,?

    அடுத்த வேறு முக்கிய செய்திகளுடன் சிந்திப்போம் .
    கருத்துக்களைப் பகிர்த்தால் மகிழ்வேன் .

    Share
  • இந்துமதம் – ஒரு வாழும் நெறி

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

       வையத்துள் வாழ்வாங்கு வாழும் வகையினை யாவருக்கும் காட்டுகின்ற நெறிமுறைகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாக இந்துமதம் விளங்குகின்றது. ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என எண்ணுபவர்களையும், “இப்படித்தான் வாழவேண்டும்” என அன்புடனும், அரவணைப்புடனும் அணுகி அவர்கள் அனைவரும் வாழ்வதற்குத் தேவையான வற்றைக் காட்டி நிற்பதால் இந்துமதம் – “என்றும் வாழும் நெறியாக” இருந்து வருகிறது எனலாம். நெகிழ்ச்சியும், சகிப்புத்தன்மையும், சுதந்திரமும் கொண்டதாக இந்துமதம் திகழ்கின்றமையாலும் அதனை- ஒரு வாழும் நெறி என்று குறிப்பிடலாம்.              

      உலகில் பல மதங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் – தொடங்கியவர்கள், தொடங்கியகாலம் என ஒரு வரையறை காணப்படுகிறது. ஆனால் இந்துமதத்தை யார் தொடக்கினார்கள்? எப்பொழுது தொடங்கப்பட்டது? என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் காணப்படவில்லை. ஆதியும் அந்தமும் அற்ற மதமாக இந்துமதம் விளங்குவதைக் காண்கின்றோம். இதனால்தான் இந்துமதத்தை “சனாதன தர்மம்” என்று குறிப்பிட்டனர். ‘சனாதன’  என்றால் நிலையானது என்று பொருளாகும். அதாவது நித்தியமானது, அழிவில்லாதது என்பதாகும். இதனாலும் இதனை வாழும் நெறி என்று அழைக்கலாம்.                                  

       குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று கூறப்பட்டு வந்ததை நாமனைவரும் கேட்டிருக்கின்றோம்.அதற்கு எடுத்துக்காட்டாக ‘மனமொரு குரங்கு’ என்று ஓர் உதாரணம் காட்டப்படுவது நோக்கத்தக்கது.                                   

       விலங்காக இருந்த மனித சிந்தனை, செயற்பாடு யாவும் சற்று மாறுதலடைந்து சிந்திக்கதக்க மனிதனாக மாற்றம் அடைந்ததற்குக் காரணம் மனிதவாழ்விலேற்பட்ட  படிப்படியான மாற்றங்களேயாகும்.

      மாற்றம்மடைந்த மனிதனிடம் விலங்கின் தன்மைகள் முழுமையாக விட்டு நீங்கவில்லை என்பதைத் தக்க சமயத்தில் காணக்கூடியதாக இருக்கிறது. உணர்ச்சி மேலிட்டு நிற்கின்ற பொழுது மனிதனால் செய்யப்படுகின்ற ஆக்ரோஷமான நடவடிக்கைகள் – இன்னும் மனிதனிடமிருந்து மிருக இயல்புகள் மறையவில்லை என்பதையே காட்டிநிற்கிறது எனலாம்.

      அந்த இயல்புகளை மாற்றி மனிதனை மனிதனாகவும் – அந்த மனிதனைப் புனிதனாகவும் மாற்றும் தன்மைகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டதாக இந்துமதம் திகழ்வதால் அது   “ஒரு வாழும் நெறியாக” விளங்குகிறது எனலாம்.                                

     மதங்களும் – மதங்கள் வகுத்த கடவுள் கோட்பாடுகளும் மனிதனைப் புனிதம் மிக்கவனாக மாற்றுவதற்கே அன்றி – அவனை அடக்கி, ஒடுக்கிவைப்பதற்கு அல்ல. மதங்களும் அவற்றின்  கொள்கைகளும் மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றம் கொள்ளவும்  அவனுள் தூய்மையை ஏற்படுத்தவுமே அமைந்தன. ஆனால் சில மதங்கள்  மனித சமுதாயத்தை அடக்கி, ஒடுக்கிவைக்க முனைகின்றன. சர்வாதிகாரப் போக்குடையனவாகவும் காணப்படுகின்றன. செய் அல்லது செத்துமடி என்னும் இராணுவத் தோரணை கொண்டனவாகவும் இருகின்றன.  சமயமாக இல்லாமல் சர்வாதிகாரம் கொண்டனவாக மாற முற்படுகின்றன.                  

      இவற்றுக்கு மத்தியில் இந்துமதமோ மாறுபட்டு, வேறுபட்டு நிற்கிறது. பூரண சுதந்திரம் கொண்டதாக இந்துமதம் விளங்குகின்றது. இந்து மதத்தவர்கள் அம்மதத்தை விட்டுச்சென்றாலும் சரி – வேறு மதத்தவர்கள் இந்துமதத்தில் இணைந்தாலும் சரி அதையிட்டு இந்துமதம் கண்டு கொள்ளுவதேயில்லை.

      கடலினுள் பல இடங்களிலிருந்து வரும் ஆறுகள் கலக்கின்றன. அந்த ஆறுகள் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி கடல் ஒரு போதும் கவலைப்படுவதே இல்லை. வருகின்ற ஆறுகளை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளுவதைப் போன்று – பரந்து விரிந்த கடலாக விளங்கும் இந்துமதமும் வருவோரையெல்லாம் மகிழ்வோடும் பரிவோடும் அணைத்துக்கொள்ளும் அன்பும், சகிப்புத்தன்மையும் கொண்டிருப்பதனால்தான் அது என்றும் “ஒரு வாழும் நெறியாக” இருக்கின்றது.                                              

      வாழ்க்கையை எப்படி வாழலாம் என்பதற்கு இந்துமதம் பல படிமுறைகளைக் காட்டுகின்றது.பிரமசாரியாக, கிரகஸ்தனாக, வானப்பிரசஸ்தனாக, சன்னியாசியாக வாழலாம் என்று காட்டிநிற்கிறது. நடைமுறைக்கு இது ஏற்கக் கூடியது எனப் பெரியவர்கள் இன்று கருதுகின்றனர். இல்லறவாழ்வில் ஈடுபடும் முன்பு ஒருவன் மாணவனாக இருந்து கல்வி கற்கவேண்டும். மாணவப் பருவம் பிரமசாரியத்துக்கு உரியது என்பதை எவரும் மறுக்கமுடியாதல்லவா?

      கற்றுத் தேர்ந்தபின் நல்ல மனைவியாகத் தேர்ந்தெடுத்து வாழுதல் கிரகஸ்தம் ஆகிறது. கற்று முடித்தபின் இல்லறத்தில் ஈடுபடும் பொழுது வாழ்வு பயனுடையதாக அமையும்  அல்லவா? பொருள் ஈட்டவும், தானதர்மம் செய்யவும் , மக்கட் செல்வங்கள், உற்றார் உறவினருடன் இசைந்து வாழவும் இல்லறமாகிய நல்லறம் பொருத்தமானதாக இருக்குமல்லவா?

       இல்லற இன்பத்தில் திளைத்துப் பின் வாழ்வின் நெளிவு சுளிவுகளை நன்றாக உய்த்து  உணர்ந்தபின் மனம் துறவையே நாடுவது இயல்பான ஒன்றே. இதுவே உண்மையான முதிர்ச்சியும் கூட. எனவே இல்லறமாம் நல்லறத்தின் நிறைவில் ஏற்படுவது துறவறம்  ஆகிறது.

       மனித வாழ்வை மிகவும் நுட்பமாக மதிப்பீடு செய்து – அதற்கான பருவங்களையும்  அடையாளம் கண்டு – அதன்படி வாழும் நிலைகளில் என்னென்ன கடமைகளை எல்லாம் ஆற்றவேண்டுமென்பதையும் வகுத்து வைத்து வாழ்க்கையை வாழ விழைபவர்களுக்குக் காட்டிநிற்கிறது இந்துமதம். இதனால்தான் இது “வாழும் நெறி ” எனப் போற்றப்படுகின்றது.                                                                        

        இல்லற வாழ்வை இந்துமதம் பெரிதும் போற்றுகின்றது. இல்லற வாழ்வில் பெண்ணின் இடம் மிகவும் உன்னதமானதாகும். பெண்ணைப் போற்றாத எந்த ஒரு அமைப்பும் உயிரோட்டம் உள்ளதாக இருக்க மாட்டாது. இதனை நன்குணர்ந்த காரணத்தால் – பெண்மைக்கு  உயரிய இடத்தை இந்துமதம் வழங்கியிருக்கிறது எனலாம்.                                 

      பெண்மையென்றால் – மென்மையும், பொறுமையும், அன்பும், அரவணைப்பும், பாசமும், நேசமும் மிக்கதென்பதே கருத்தாகும். இவையனைத்தையும் கொண்டதாக இறைத்தன்மையும் இருக்கின்றது. இதனால்தான் பெற்ற தாயைத் தெய்வமாகப் போற்றும் நிலையை இந்து மதம் தன்னுள் கொண்டிருக்கின்றது.                                                                 

       பெண்மையைத் தெய்வமாக்கிய பெருமையை இந்துமதம் எடுத்துக் கொள்கிறது. கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் எந்தமொழி,எந்தநாடு, எந்தவினம் என்று இல்லாமல் யாவருக்கும் தேவையானதே. அது மட்டுமல்ல இவை மூன்றும் இல்லாவிட்டால்  முழுமை என்பதற்கே அர்த்தம் இல்லாது போய்விடும். அடிப்படையான அத்தியாவசியமான இம்மூன்றையும் தருகின்ற கடவுள் சக்தியாக சரஸ்வதி, லக்‌ஷமி, துர்க்கை எனப் பெண்மையையே  உருவகப்படுத்திக் காட்டிய இந்துமதம் உண்மையிலேயே சிறந்த ஒரு வாழும் நெறிதான் என்பதை மறுக்கமுடியாது.

       கல்வி,செல்வம், வீரம் இவற்றை நினைத்தவுடன் பெற்றுவிட முடியாது. இவற்றைப் பெறுவதற்கு மிகுந்த பொறுமை வேண்டும். பல சோதனைகளை வேதனைகளைத் தாங்க வேண்டும். சில தியாகங்களைச் செய்ய வேண்டும். தன்னம்பிக்கை நிறையவே வேண்டும்.  இவையாவும் பெண்களிடம் நிறைந்து காணப்படுவதால்தான் பெண்மை  தெய்வீகம் ஆக்கப்பட்டது.

       இந்துமதம் இல்லறத்தைப் போற்றுகின்ற போதும் – துறவறத்தையும் ஒதுக்கிவிடவில்லை. இல்லற இன்பம் நிறைவுபெறும் நிலைவந்ததும்  துறவறம் என்னும் ஒரு நிலையும் இருக்கிறது என்று இந்துமதம் காட்டுகிறது. இல்லற வாழ்வில் ஈடுபட விருப்பம்  இல்லாவிட்டால் துறவறத்தை தேர்ந்தெடுத்து அதன்படியும் நடக்கலாம் என்றும் வழிகாட்டி நிற்கிறது. துறவறம்தான் கட்டாயம் என்றோ – இல்லறந்தான் கட்டாயமென்றோ வற்புறுத்த வில்லை. இரண்டையும் காட்டி விரும்பியதை வாழ்க்கை ஆக்கிக்கொள் என்னும் சுதந்திரத்தை இந்துமதம் வழங்கி நிற்கிறது.

       உயிர்வாழ்வதற்கு உணவு இன்றியமையாதது.’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பது இதனை வலியுறுத்தி நிற்கின்றது. இந்துமதம் பலவிதமான தர்மங்களைக் காட்டி நிற்கிறது. அவற்றில் அன்றும் இன்றும் என்றுமே தலையான தர்மம் அன்னம் இடுதலேயாகும். எந்த தானத்தைச் செய்தாலும் அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் திருப்தியை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் அன்னத்தைப் பெற்றுத் தனது பசியினைப் போக்கியவர்கள் மட்டுமே – உலகில் மனமாரத் திருப்தி அடைந்து மகிழ்ச்சியுடன் போதும் என்று வாய்விட்டுச்சொல்லிநிற்பார்கள். இதனால்தான் அன்னதானத்தைச் செய்வது மேலானது என இந்து மதம் சொல்லுகிறது. இது ஒரு சிறந்த வாழும் நெறி அல்லவா?

       குடும்ப உறவு வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது தாய், தந்தை, மகன், மகள், மாமா, மாமி, மைத்துனன் எனக் குடும்ப உறுப்பினர்கள் வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கின்றனர். இப்படியான உறவு நிலைகளை இந்துமதம் மிகவும் நுட்பமாகக் கடவுள் கொள்கையுடன்  இணைத்துவிட்டது.

       கடவுளை வழிபடுகின்ற பக்தன் கடவுளைத் தாயாக, தந்தையாக, நண்பனாக, காதலனாக, காதலியாக, குழந்தையாக, நினைந்து வழிபடுகின்றபொழுது அவனது மனம் இறைஅருளில் ஒன்றிவிடுகிறது.

       சிவன் தந்தையாகவும், பார்வதி தாயாகவும், விநாயகரும் முருகனும் அவர்களது பிள்ளைகளாகவும், பிரம்மா, விஷ்ணு , இந்திரன் உறவினராயும் – தேவர்கள் ஏனைய உறவுகளாவும் நண்பர்களாகவும் இந்துமதம் கடவுளையே குடும்பத்துக்குள் கொண்டுவந்துவிட்டது. இந்தச் செயற்பாடானது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் விநோதமானதாயும் இருக்கும். ஆனால் இதனை வேடிக்கை என்று எடுத்துக் கொள்ளல் கூடாது.

       ஆண்டவன் என்பவன் யாராலும் அணுகமுடியாதவன் அல்ல. அன்பும், பாசமும், அரவணைப்பும் கொண்ட குடும்ப உறுப்பினன் போன்றவனே ஆண்டவன். அவனை அடைய அவன் அருளைப்பெற அன்பும், பொறுமையும், தயாளமும், தர்மமும், சகிப்புத்தன்மையும், பாசமும், உள்ளத்தில் ஏற்படுமானால் நிச்சயமாக ஆண்டவனைக் காணமுடியும் என்னும் உயர்ந்த தத்துவத்தை யாவருக்கும் விளங்கப்பண்ணுவதற்கே இந்துமதம் குடும்ப உறவை  இறைவனுடன் இணைத்தது என்பது மிகவும் கவனிக்கப் படவேண்டிய விஷயமாகும்.

       நாளாந்தம் நாம் கைக்கொள்ளும் நடைமுறைகள் அத்தனையிலும் இந்துமதம் தன்னை உள்நுழைத்துக் கொண்டுள்ளது. உண்பது தொடக்கம் உறங்குவதுவரை இந்துமத நெறிகள் பரவிக் கிடப்பதைக் காணலாம்.

      இந்து மதத்தில் மிகவும் முக்கியமானது ஆசாரமாகும்.ஆசாரம் என்றால் என்ன? ஆசாரம் என்றால் சுகாதாரம் என்பதுதான் கருத்து. உடலையும் சுத்தமாக வைத்திரு; உள்ளத்தையும் சுத்தமாக வைத்திரு இதுதான் இந்துமதத்தின் அடிப்படை வாழும்நெறி எனலாம். இதற்குப் பலவிதிமுறைகளை இந்துமதம் வைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் எவரும் உலகத்தில் கடைப்பிடிக்கலாம். அப்படிக் கடைப்பிடிப்பதற்கு இந்துமதம் எந்தத் தடையும் போடவில்லை. கடைப்பிடிப்பவர்கள் யாவரும் இந்துநெறிப்படி வாழ்பவர்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளும் பரந்த நோக்கே இந்துமதம் இன்னும் வாழும் நெறியாக இருப்பதற்குக் காரணம் எனலாம்.

       அவசர கதியில் இன்று உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மக்களும் அதன் வழியிலேயே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களிடம் அமைதி இல்லை. ஆனந்தம் ஓடிவிடுகிறது. எதற்கும் பதட்டமும் படபடப்பும் ராஜச வாழ்க்கைதான் அவர்களிடம் குடிபுகுந்து விட்டது. இதற்குக் காரணம்  நாகரிகம் என்னும் உருவத்தில் உள்புகுந்த தீராத தலைவலியே எனலாம்.

       வாழ்கைமுறை மாறிவிட்டது. மனிதர்களின் சமூக அமைப்பே மாறிவிட்டது. இந்த நிலை நீடிக்கக் கூடாது எனப் பல பெரியவர்கள் கூக்குரல் எழுப்புகிறார் கள். ஆனால் அவையும் எடுபடுவதாக இல்லை.

        நவீன நாகரிகத்தினை உயர்வெனக் கருதியவர்கள் மத்தியிலேயே ஒரு விழிப்புணர்ச்சி ஆரம்பித்திருக்கிறது. அதாவது – இந்துமத நெறிகளின்படி வாழ்வதுதான் சிறந்தது என்னும் சிந்தனையாகும். மொழிகடந்து நாடுகடந்து இனம்கடந்து இந்த எழுச்சி வந்திருக்கிறது.அதற்கு அடிப்படை இந்து மதத்தின் சாத்வீகமாகும்.

      இந்துமதம் என்பது உலகினுக்கு நல்ல வாழும் நெறியைக் காட்டி நிற்கிறது. எவரையும் நோகடிக்காமல் அன்பினால் கட்டியணைக்கும் தத்துவத்தை இந்து மத நெறி வழங்கி நிற்கிறது. மதம் பிடிக்கும் மனித இனத்தை மீட்கவேண்டும் என்பதுதான் இந்துமதத்தின் முக்கிய குறிக்கோளாகும். எந்த மதத்தாரையும் அரவணைக்கும் உயரிய பாங்கினை இந்துமதம் தன்னுள்ளே கொண்டிருக்கி றது. நல்லவற்றை வாழ்க்கை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று சாத்வீகமாக அனைவருக்கும் வழங்கும் நெறியினை இந்துமதம் நெறியாக்கி வைத்திருப் பதனால் அது ஒரு சிறந்த வாழும் நெறியாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.

    Share