-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

   வையத்துள் வாழ்வாங்கு வாழும் வகையினை யாவருக்கும் காட்டுகின்ற நெறிமுறைகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாக இந்துமதம் விளங்குகின்றது. ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என எண்ணுபவர்களையும், “இப்படித்தான் வாழவேண்டும்” என அன்புடனும், அரவணைப்புடனும் அணுகி அவர்கள் அனைவரும் வாழ்வதற்குத் தேவையான வற்றைக் காட்டி நிற்பதால் இந்துமதம் – “என்றும் வாழும் நெறியாக” இருந்து வருகிறது எனலாம். நெகிழ்ச்சியும், சகிப்புத்தன்மையும், சுதந்திரமும் கொண்டதாக இந்துமதம் திகழ்கின்றமையாலும் அதனை- ஒரு வாழும் நெறி என்று குறிப்பிடலாம்.              

  உலகில் பல மதங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் – தொடங்கியவர்கள், தொடங்கியகாலம் என ஒரு வரையறை காணப்படுகிறது. ஆனால் இந்துமதத்தை யார் தொடக்கினார்கள்? எப்பொழுது தொடங்கப்பட்டது? என்பதற்கு எந்தவித ஆதாரங்களும் காணப்படவில்லை. ஆதியும் அந்தமும் அற்ற மதமாக இந்துமதம் விளங்குவதைக் காண்கின்றோம். இதனால்தான் இந்துமதத்தை “சனாதன தர்மம்” என்று குறிப்பிட்டனர். ‘சனாதன’  என்றால் நிலையானது என்று பொருளாகும். அதாவது நித்தியமானது, அழிவில்லாதது என்பதாகும். இதனாலும் இதனை வாழும் நெறி என்று அழைக்கலாம்.                                  

   குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று கூறப்பட்டு வந்ததை நாமனைவரும் கேட்டிருக்கின்றோம்.அதற்கு எடுத்துக்காட்டாக ‘மனமொரு குரங்கு’ என்று ஓர் உதாரணம் காட்டப்படுவது நோக்கத்தக்கது.                                   

   விலங்காக இருந்த மனித சிந்தனை, செயற்பாடு யாவும் சற்று மாறுதலடைந்து சிந்திக்கதக்க மனிதனாக மாற்றம் அடைந்ததற்குக் காரணம் மனிதவாழ்விலேற்பட்ட  படிப்படியான மாற்றங்களேயாகும்.

  மாற்றம்மடைந்த மனிதனிடம் விலங்கின் தன்மைகள் முழுமையாக விட்டு நீங்கவில்லை என்பதைத் தக்க சமயத்தில் காணக்கூடியதாக இருக்கிறது. உணர்ச்சி மேலிட்டு நிற்கின்ற பொழுது மனிதனால் செய்யப்படுகின்ற ஆக்ரோஷமான நடவடிக்கைகள் – இன்னும் மனிதனிடமிருந்து மிருக இயல்புகள் மறையவில்லை என்பதையே காட்டிநிற்கிறது எனலாம்.

  அந்த இயல்புகளை மாற்றி மனிதனை மனிதனாகவும் – அந்த மனிதனைப் புனிதனாகவும் மாற்றும் தன்மைகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டதாக இந்துமதம் திகழ்வதால் அது   “ஒரு வாழும் நெறியாக” விளங்குகிறது எனலாம்.                                

 மதங்களும் – மதங்கள் வகுத்த கடவுள் கோட்பாடுகளும் மனிதனைப் புனிதம் மிக்கவனாக மாற்றுவதற்கே அன்றி – அவனை அடக்கி, ஒடுக்கிவைப்பதற்கு அல்ல. மதங்களும் அவற்றின்  கொள்கைகளும் மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றம் கொள்ளவும்  அவனுள் தூய்மையை ஏற்படுத்தவுமே அமைந்தன. ஆனால் சில மதங்கள்  மனித சமுதாயத்தை அடக்கி, ஒடுக்கிவைக்க முனைகின்றன. சர்வாதிகாரப் போக்குடையனவாகவும் காணப்படுகின்றன. செய் அல்லது செத்துமடி என்னும் இராணுவத் தோரணை கொண்டனவாகவும் இருகின்றன.  சமயமாக இல்லாமல் சர்வாதிகாரம் கொண்டனவாக மாற முற்படுகின்றன.                  

  இவற்றுக்கு மத்தியில் இந்துமதமோ மாறுபட்டு, வேறுபட்டு நிற்கிறது. பூரண சுதந்திரம் கொண்டதாக இந்துமதம் விளங்குகின்றது. இந்து மதத்தவர்கள் அம்மதத்தை விட்டுச்சென்றாலும் சரி – வேறு மதத்தவர்கள் இந்துமதத்தில் இணைந்தாலும் சரி அதையிட்டு இந்துமதம் கண்டு கொள்ளுவதேயில்லை.

  கடலினுள் பல இடங்களிலிருந்து வரும் ஆறுகள் கலக்கின்றன. அந்த ஆறுகள் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி கடல் ஒரு போதும் கவலைப்படுவதே இல்லை. வருகின்ற ஆறுகளை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளுவதைப் போன்று – பரந்து விரிந்த கடலாக விளங்கும் இந்துமதமும் வருவோரையெல்லாம் மகிழ்வோடும் பரிவோடும் அணைத்துக்கொள்ளும் அன்பும், சகிப்புத்தன்மையும் கொண்டிருப்பதனால்தான் அது என்றும் “ஒரு வாழும் நெறியாக” இருக்கின்றது.                                              

  வாழ்க்கையை எப்படி வாழலாம் என்பதற்கு இந்துமதம் பல படிமுறைகளைக் காட்டுகின்றது.பிரமசாரியாக, கிரகஸ்தனாக, வானப்பிரசஸ்தனாக, சன்னியாசியாக வாழலாம் என்று காட்டிநிற்கிறது. நடைமுறைக்கு இது ஏற்கக் கூடியது எனப் பெரியவர்கள் இன்று கருதுகின்றனர். இல்லறவாழ்வில் ஈடுபடும் முன்பு ஒருவன் மாணவனாக இருந்து கல்வி கற்கவேண்டும். மாணவப் பருவம் பிரமசாரியத்துக்கு உரியது என்பதை எவரும் மறுக்கமுடியாதல்லவா?

  கற்றுத் தேர்ந்தபின் நல்ல மனைவியாகத் தேர்ந்தெடுத்து வாழுதல் கிரகஸ்தம் ஆகிறது. கற்று முடித்தபின் இல்லறத்தில் ஈடுபடும் பொழுது வாழ்வு பயனுடையதாக அமையும்  அல்லவா? பொருள் ஈட்டவும், தானதர்மம் செய்யவும் , மக்கட் செல்வங்கள், உற்றார் உறவினருடன் இசைந்து வாழவும் இல்லறமாகிய நல்லறம் பொருத்தமானதாக இருக்குமல்லவா?

   இல்லற இன்பத்தில் திளைத்துப் பின் வாழ்வின் நெளிவு சுளிவுகளை நன்றாக உய்த்து  உணர்ந்தபின் மனம் துறவையே நாடுவது இயல்பான ஒன்றே. இதுவே உண்மையான முதிர்ச்சியும் கூட. எனவே இல்லறமாம் நல்லறத்தின் நிறைவில் ஏற்படுவது துறவறம்  ஆகிறது.

   மனித வாழ்வை மிகவும் நுட்பமாக மதிப்பீடு செய்து – அதற்கான பருவங்களையும்  அடையாளம் கண்டு – அதன்படி வாழும் நிலைகளில் என்னென்ன கடமைகளை எல்லாம் ஆற்றவேண்டுமென்பதையும் வகுத்து வைத்து வாழ்க்கையை வாழ விழைபவர்களுக்குக் காட்டிநிற்கிறது இந்துமதம். இதனால்தான் இது “வாழும் நெறி ” எனப் போற்றப்படுகின்றது.                                                                        

    இல்லற வாழ்வை இந்துமதம் பெரிதும் போற்றுகின்றது. இல்லற வாழ்வில் பெண்ணின் இடம் மிகவும் உன்னதமானதாகும். பெண்ணைப் போற்றாத எந்த ஒரு அமைப்பும் உயிரோட்டம் உள்ளதாக இருக்க மாட்டாது. இதனை நன்குணர்ந்த காரணத்தால் – பெண்மைக்கு  உயரிய இடத்தை இந்துமதம் வழங்கியிருக்கிறது எனலாம்.                                 

  பெண்மையென்றால் – மென்மையும், பொறுமையும், அன்பும், அரவணைப்பும், பாசமும், நேசமும் மிக்கதென்பதே கருத்தாகும். இவையனைத்தையும் கொண்டதாக இறைத்தன்மையும் இருக்கின்றது. இதனால்தான் பெற்ற தாயைத் தெய்வமாகப் போற்றும் நிலையை இந்து மதம் தன்னுள் கொண்டிருக்கின்றது.                                                                 

   பெண்மையைத் தெய்வமாக்கிய பெருமையை இந்துமதம் எடுத்துக் கொள்கிறது. கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் எந்தமொழி,எந்தநாடு, எந்தவினம் என்று இல்லாமல் யாவருக்கும் தேவையானதே. அது மட்டுமல்ல இவை மூன்றும் இல்லாவிட்டால்  முழுமை என்பதற்கே அர்த்தம் இல்லாது போய்விடும். அடிப்படையான அத்தியாவசியமான இம்மூன்றையும் தருகின்ற கடவுள் சக்தியாக சரஸ்வதி, லக்‌ஷமி, துர்க்கை எனப் பெண்மையையே  உருவகப்படுத்திக் காட்டிய இந்துமதம் உண்மையிலேயே சிறந்த ஒரு வாழும் நெறிதான் என்பதை மறுக்கமுடியாது.

   கல்வி,செல்வம், வீரம் இவற்றை நினைத்தவுடன் பெற்றுவிட முடியாது. இவற்றைப் பெறுவதற்கு மிகுந்த பொறுமை வேண்டும். பல சோதனைகளை வேதனைகளைத் தாங்க வேண்டும். சில தியாகங்களைச் செய்ய வேண்டும். தன்னம்பிக்கை நிறையவே வேண்டும்.  இவையாவும் பெண்களிடம் நிறைந்து காணப்படுவதால்தான் பெண்மை  தெய்வீகம் ஆக்கப்பட்டது.

   இந்துமதம் இல்லறத்தைப் போற்றுகின்ற போதும் – துறவறத்தையும் ஒதுக்கிவிடவில்லை. இல்லற இன்பம் நிறைவுபெறும் நிலைவந்ததும்  துறவறம் என்னும் ஒரு நிலையும் இருக்கிறது என்று இந்துமதம் காட்டுகிறது. இல்லற வாழ்வில் ஈடுபட விருப்பம்  இல்லாவிட்டால் துறவறத்தை தேர்ந்தெடுத்து அதன்படியும் நடக்கலாம் என்றும் வழிகாட்டி நிற்கிறது. துறவறம்தான் கட்டாயம் என்றோ – இல்லறந்தான் கட்டாயமென்றோ வற்புறுத்த வில்லை. இரண்டையும் காட்டி விரும்பியதை வாழ்க்கை ஆக்கிக்கொள் என்னும் சுதந்திரத்தை இந்துமதம் வழங்கி நிற்கிறது.

   உயிர்வாழ்வதற்கு உணவு இன்றியமையாதது.’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பது இதனை வலியுறுத்தி நிற்கின்றது. இந்துமதம் பலவிதமான தர்மங்களைக் காட்டி நிற்கிறது. அவற்றில் அன்றும் இன்றும் என்றுமே தலையான தர்மம் அன்னம் இடுதலேயாகும். எந்த தானத்தைச் செய்தாலும் அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் திருப்தியை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் அன்னத்தைப் பெற்றுத் தனது பசியினைப் போக்கியவர்கள் மட்டுமே – உலகில் மனமாரத் திருப்தி அடைந்து மகிழ்ச்சியுடன் போதும் என்று வாய்விட்டுச்சொல்லிநிற்பார்கள். இதனால்தான் அன்னதானத்தைச் செய்வது மேலானது என இந்து மதம் சொல்லுகிறது. இது ஒரு சிறந்த வாழும் நெறி அல்லவா?

   குடும்ப உறவு வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது தாய், தந்தை, மகன், மகள், மாமா, மாமி, மைத்துனன் எனக் குடும்ப உறுப்பினர்கள் வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கின்றனர். இப்படியான உறவு நிலைகளை இந்துமதம் மிகவும் நுட்பமாகக் கடவுள் கொள்கையுடன்  இணைத்துவிட்டது.

   கடவுளை வழிபடுகின்ற பக்தன் கடவுளைத் தாயாக, தந்தையாக, நண்பனாக, காதலனாக, காதலியாக, குழந்தையாக, நினைந்து வழிபடுகின்றபொழுது அவனது மனம் இறைஅருளில் ஒன்றிவிடுகிறது.

   சிவன் தந்தையாகவும், பார்வதி தாயாகவும், விநாயகரும் முருகனும் அவர்களது பிள்ளைகளாகவும், பிரம்மா, விஷ்ணு , இந்திரன் உறவினராயும் – தேவர்கள் ஏனைய உறவுகளாவும் நண்பர்களாகவும் இந்துமதம் கடவுளையே குடும்பத்துக்குள் கொண்டுவந்துவிட்டது. இந்தச் செயற்பாடானது பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் விநோதமானதாயும் இருக்கும். ஆனால் இதனை வேடிக்கை என்று எடுத்துக் கொள்ளல் கூடாது.

   ஆண்டவன் என்பவன் யாராலும் அணுகமுடியாதவன் அல்ல. அன்பும், பாசமும், அரவணைப்பும் கொண்ட குடும்ப உறுப்பினன் போன்றவனே ஆண்டவன். அவனை அடைய அவன் அருளைப்பெற அன்பும், பொறுமையும், தயாளமும், தர்மமும், சகிப்புத்தன்மையும், பாசமும், உள்ளத்தில் ஏற்படுமானால் நிச்சயமாக ஆண்டவனைக் காணமுடியும் என்னும் உயர்ந்த தத்துவத்தை யாவருக்கும் விளங்கப்பண்ணுவதற்கே இந்துமதம் குடும்ப உறவை  இறைவனுடன் இணைத்தது என்பது மிகவும் கவனிக்கப் படவேண்டிய விஷயமாகும்.

   நாளாந்தம் நாம் கைக்கொள்ளும் நடைமுறைகள் அத்தனையிலும் இந்துமதம் தன்னை உள்நுழைத்துக் கொண்டுள்ளது. உண்பது தொடக்கம் உறங்குவதுவரை இந்துமத நெறிகள் பரவிக் கிடப்பதைக் காணலாம்.

  இந்து மதத்தில் மிகவும் முக்கியமானது ஆசாரமாகும்.ஆசாரம் என்றால் என்ன? ஆசாரம் என்றால் சுகாதாரம் என்பதுதான் கருத்து. உடலையும் சுத்தமாக வைத்திரு; உள்ளத்தையும் சுத்தமாக வைத்திரு இதுதான் இந்துமதத்தின் அடிப்படை வாழும்நெறி எனலாம். இதற்குப் பலவிதிமுறைகளை இந்துமதம் வைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் எவரும் உலகத்தில் கடைப்பிடிக்கலாம். அப்படிக் கடைப்பிடிப்பதற்கு இந்துமதம் எந்தத் தடையும் போடவில்லை. கடைப்பிடிப்பவர்கள் யாவரும் இந்துநெறிப்படி வாழ்பவர்கள் என்றுதான் எடுத்துக்கொள்ளும் பரந்த நோக்கே இந்துமதம் இன்னும் வாழும் நெறியாக இருப்பதற்குக் காரணம் எனலாம்.

   அவசர கதியில் இன்று உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மக்களும் அதன் வழியிலேயே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களிடம் அமைதி இல்லை. ஆனந்தம் ஓடிவிடுகிறது. எதற்கும் பதட்டமும் படபடப்பும் ராஜச வாழ்க்கைதான் அவர்களிடம் குடிபுகுந்து விட்டது. இதற்குக் காரணம்  நாகரிகம் என்னும் உருவத்தில் உள்புகுந்த தீராத தலைவலியே எனலாம்.

   வாழ்கைமுறை மாறிவிட்டது. மனிதர்களின் சமூக அமைப்பே மாறிவிட்டது. இந்த நிலை நீடிக்கக் கூடாது எனப் பல பெரியவர்கள் கூக்குரல் எழுப்புகிறார் கள். ஆனால் அவையும் எடுபடுவதாக இல்லை.

    நவீன நாகரிகத்தினை உயர்வெனக் கருதியவர்கள் மத்தியிலேயே ஒரு விழிப்புணர்ச்சி ஆரம்பித்திருக்கிறது. அதாவது – இந்துமத நெறிகளின்படி வாழ்வதுதான் சிறந்தது என்னும் சிந்தனையாகும். மொழிகடந்து நாடுகடந்து இனம்கடந்து இந்த எழுச்சி வந்திருக்கிறது.அதற்கு அடிப்படை இந்து மதத்தின் சாத்வீகமாகும்.

  இந்துமதம் என்பது உலகினுக்கு நல்ல வாழும் நெறியைக் காட்டி நிற்கிறது. எவரையும் நோகடிக்காமல் அன்பினால் கட்டியணைக்கும் தத்துவத்தை இந்து மத நெறி வழங்கி நிற்கிறது. மதம் பிடிக்கும் மனித இனத்தை மீட்கவேண்டும் என்பதுதான் இந்துமதத்தின் முக்கிய குறிக்கோளாகும். எந்த மதத்தாரையும் அரவணைக்கும் உயரிய பாங்கினை இந்துமதம் தன்னுள்ளே கொண்டிருக்கி றது. நல்லவற்றை வாழ்க்கை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று சாத்வீகமாக அனைவருக்கும் வழங்கும் நெறியினை இந்துமதம் நெறியாக்கி வைத்திருப் பதனால் அது ஒரு சிறந்த வாழும் நெறியாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *