Month: February 2017

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”பைகொண்ட பாம்பில் பசுவோ(டு) அமர்ந்ததனை,
    மெய்கண்ட ஸூரியாய் மேய்த்திடும், -வைகுண்ட
    நாதர்க்கு ,நாட்காலே நீராடும் நங்கையாம்
    கோதையின் கீதையே(திருப்பாவை) காப்பு’’….

    (OR)
    நாதர்க்கு நாட்காலே நீராடி நின்னளிப்பு(கேசவ்)
    ஃபாதர்க்கு(FATHERக்கு) தந்தாய் ஃபிகர்(FIGURE)”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”சாமதான பேததெண்ட” , சத்குரு கீதய்யன்,
    ராமனாதர் பின்வந்த ராஜீவர் , -காமதேனு
    உற்சாகம்(வால்மயிற்பீலியுடன்) கொண்டவர் உச்சி முகர்ந்திட,
    பொற்சரக்(தங்கக் கை கண்ணன்) கையால் பிணைப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி .. (101)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    17035141_1246977972023066_1740125676_n
    லோகேஷ்வரன் ராஜேந்திரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.03.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • மீசை நாய்க்கர்

     

    கவியோகி வேதம்

     

     

    meesai naaikar

     

     

     

     

     

     

     

     

     

     

    மீசை நாய்க்கர் ஒருசுரங்கம்!-அவரின்

    ..மீசை!உழைப்பு!-கலைஅரங்கம்!

    ஆசை யாகப் பலஆண்டு,-நெய்யை

    …”ஆண்டே” மீசை  இவர் வளர்த்தார்!

     

    இங்கிலீஷ் எழுத்து “டபிள்யூ’போல்-ஐயா!

    ..ஏனோ இதனை வளர்க்கின்றீர்?

    பொங்கும் அலைபோல் வளைகிறதே!-ஐயா!

    பூரிப் பு கண்ணில் தெரிகிறதே!”

     

    என்றே கேட்டால் சிரித்திடுவார்!-“கின்னஸ்”

    ..இதற்கே பரிசாய்த் தரும்என்பார்!

    இன்னல் இதனால் வரவிலையா?-என்றால்,

    ..எதில்தான் சிக்கல் இல்லை?என்பார்!

     

    பாம்பாய் நெளியும் மீசையைப்போல்-இவர்

    ..பத்து கலையும் அறிந்திடுவார்!

    வீம்புக் கிதனைச் சொல்லவில்லை-செய்யும்

    ..வேலை சொன்னால் மிகையுமில்லை!

     

    ஈனும் பசுவுக் கருகிலிருப்பார்!-முதுகை

    ..இதமாய்த் தடவி வலிகுறைப்பார்!

    பூனை உடலில் புனுகெடுப்பார்!-நீரைப்

    …பூமி உறிஞ்சும் ஒயில்.இருக்கும்!

     

    காளை முதுகின் உண்ணிகளை-விரைவாய்க்

    …கரண்டி நெருப்பில் போடுகையில்,

    வாளை மீன்தன் வால்சுழற்றி-நீரில்

    ..வட்டம் போடும் கலைதெரியும்!

     

    ஜாதிச் சேவல் மடியில்வர-கேப்பை.

    ….ஜலம்கலந்தே ஊட்டுகையில்

    ஜாதி மொக்கு விரியஅதில்-தேனீ

    ..ஜாலம் பண்ணும் நினைவுவரும்!

     

    விடலைப் பனையின் குருத்தெடுத்தே-பாலர்க்கு

    ..விசிறி பண்ணித் தருகையிலோ

    இடர்கள் களையும் இராமனுக்கே-பழம்

    ..ஈந்த ‘சபரி” முகம்தெரியும்!

     

    மீசை வளர்க்கும் கலையிலும்தான்,–லட்சிய

    ..வேட்கை அன்றோ தெரிகிறது!

    பூசை,’தெய்வம்’ இவர்அறியார்!-உழைப்புப்

    …”பொழுதே” கடவுள் என்றறிவார்!

     

    கரணை கரணை யாய்கைகள்!- நல்ல

    ..கடுவன் பூனை நாய்க்கர்முகம்!

    கருத்த உருவம், “காளி’யைப்போல்!-எனினும்

    ..கருணை வடிவம் அவர்இதயம்!

    .

    மீ சை நாய்க்கர் ஒரு சுரங்கம்!- அவர்

    மீசை, உழைப்பு,.. கலைஅரங்கம்

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”ரிஷிகேசர்’’….!
    ———————————

    பெருமாளின் த்வாதசநாமத் துதியில் ‘’ரிஷிகேசர்’’….அயிகிரி நந்தினி மெட்டில்….

    kesav

    பெருமாள் த்வாதச நாமத் துதி….
    “அசுரநி சாசரர் அதரும நீசர்கள்
    அழியச ராசரம் வந்தவனை
    தசவித வேஷனை முனிமன வாசனை
    தவரிஷி கேசனை வந்தனம்செய்
    தசமுகன் சாகவும் குசலவர் ஏகவும்
    ரகுபதி ராகவ ரூபமெடு
    தசரத மைந்தனை குகனோடு ஐந்தென
    தரணியில் உய்ந்தவன் தாபமுறு”….(8)
    ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஏக ரேகா கண்ணன்….
    ——————————

    kesav

    “ஏகத்திற்(கு) ஏதுகை ரேகை, நாமெல்லாம்
    காகநிறக் கண்ணனின் கைபொம்மை, -போகவர,
    பூமத்ய ரேகையில் போட்டெடுத்து, ஏகாக்ர
    சூமந்த்ர காளி, சுகம்”….கிரேசி மோகன்….

    Share
  • மகா சிவராத்திரி

    கண் விழிக்கும் நாளெல்லாம் நீல கண்டர் சிவராத்திரி….கேசவ் தாமத்திற்க்கு மன்னிக்கவும்….இன்று விடிகாலைதான் “மஸ்கெட்டிலிருந்து’’ அடியேன் வந்தேன்….விடிய விடிய கண்விழித்து விமானப் பயணம்….!

    ஆட வருகவே….
    ———————–

    kesav

    முனிவர்கள் கூடி மெளனம் காத்திட
    தனி ஆவர்த்தனம் நந்தி முழங்கிட
    பனி மலை வாசன் பார்வதி யுடனிம்
    மனிதனில் தாண்டவம் ஆட வருகவே….(1)

    முகார விந்தம் முறுவல் பூத்திட
    அகார,உகார,மகார அம்பிகை
    அகோர மூர்த்தியை அணைத்து என்மன
    விஹாரில் தாண்டவம் ஆட வருகவே….(2)

    துந்துபி முழங்க டமருகம் ஒலிக்க
    கந்தன் கணபதி கைக்கட்டி நிற்க
    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியென்
    சிந்தையில் தாண்டவம் ஆட வருகவே….(3)

    மாலவன் சங்க நாதம் ஊதிட
    நாலு முகன் நல்வேதம் ஓதிட
    ஞால அன்னையும் அப்பனும் எந்தன்
    மூளையில் தாண்டவம் ஆட வருகவே….(4)

    யாழில் பாரதி ஏழிசை சுரக்க
    வாழிய கோஷம் வைதேஹி போட
    ஊழி முதல்வனும் உமையும் எந்தன்
    தோளில் தாண்டவம் ஆட வருகவே….(5)

    பாக்கு வெற்றிலைப் போன்று இணைந்த
    தேக்கு மேனியரும் தளிர் இடையாளும்
    பாக்கள் பூக்களாய்ப் புலர்ந்திட எந்தன்
    வாக்கில் தாண்டவம் ஆட வருகவே….(6)

    பாஸியும் நீருமாய்ப் பிணைந்த இருவரும்
    தூசி தோஷங்கள் தொல்லை இராது
    வாசிவாசியென சுவாசிக்க எந்தன்
    நாசியில் தாண்டவம் ஆட வருகவே….(7)

    தென்னாடுடையான் தன்தேவியுடன்
    பெண்ணாடுடலொடு பாவியேன் நானுனை
    மன்றாடுதலால் மனமிசைந்(து) எந்தன்
    முன்னால் தாண்டவம் ஆட வருகவே….(8)

    வேத புராண இதிகாசங்கள்
    பாதச் சிலம்பில் பதிந்திடவே திரு
    வாதிரையான் தன் வாமியுடன் என்
    காதில் தாண்டவம் ஆட வருகவே….(9)

    வாடிய பயிரென் வாழ்க்கையிலே நீர்
    ஆடிய பாதராய் அழகுமையாளை
    சூடிய வண்ணம் சேர்ந்தென் முன்னால்
    ஜோடியாய் தாண்டவம் ஆட வருகவே….(10)

    Share
  • வருவாயா நீ?

    ஜவஹர்லால் 

    எண்ணிலா நோயில் இந்திய மக்கள்

    இடர்ப்படல் கண்டு நொந்தாய்;

    மண்ணிலே அவர்கள் வான்புகழ் காண

    விடுதலை வேண்டு மென்றாய்;

    இன்றுநம் நாடு விடுதலை பெற்றே

    இருப்பதில் அய்ய மில்லை.

    அன்றுள நோய்கள் அற்றன வாவென்

    றறிந்திட வருவா யாநீ?

     

    சொந்த நாட்டிலே அன்னியர்க் கடிமை

    செய்திடல் நாண மென்றாய்;

    சொந்த நாட்டிலே நம்மவர்க் கடிமை

    செய்துமே வாழ லாமோ?

    சிந்தனை கூடச் சொந்தமாய்ச் செய்யத்

    துணிவிலா அடிமை நெஞ்சம்

    இந்த நாட்டிலே இன்னு மிருப்பதை

    அறிந்திட வருவா யாநீ?

     

    சாதிகள் வேண்டாம்; மேலவர் கீழோர்

    சங்கடம் வேண்டா மென்றாய்;

    சாதிகள் சங்கம் தெருத்தொறும் முளைத்தே

    சிரித்தெமை அலைக்க ழிக்கும்;

    வேதனை விளைச்சல் கொஞ்சமா யில்லை;

    வினைகளும் பஞ்ச மில்லை;

    சாதிகள் சங்கப் பேயதை யோட்டச்

    சடுதியில் வருவா யாநீ?

     

    கீதை யளித்தவன் கீதச் சிரிப்பினைக்

    கவிதையாய்க் கொட்டி நின்றாய்;

    நாதி யற்றவ ரணைத்திடு தூய

    ஏசுவைப் பாடிச் சென்றாய்;

    ஆதித் தூயவர் அருமறை நபியை

    அன்புடன் தொழுக வென்றாய்;

    சாதிப் பிரிவினை தெய்வமே கொள்வதைத்

    தெரிந்திட வருவா யாநீ?

     

    விடுதலை பெற்ற மகிழ்வினில் திளைத்தோம்;

    வீட்டவ ராண்டிடக் கண்டோம்;

    கெடுதலை யோட்டி நன்மையைக் கூட்டக்

    கவலையார் கொள்ளு கின்றார்?

    விடுதலை நாட்டில் தீமைக ளின்னும்

    விடுதலை யாகிட வில்லை;

    நடுகிற பயிரைக் களைகளே தின்னல்

    அறிந்திட வருவா யாநீ?

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (45)

    நிர்மலா ராகவன்

    மனோபலமே பலம்

    நலம்-2-1-1

    `நான் பலசாலி!’ என்று தன் புஜபலத்தால் மார் தட்டிக்கொள்ளும் ஒருவர் தனக்கென வாழ்வில் ஒரு இடர் வந்துவிட்டால் அதைத் தாங்கிக்கொள்வாரா? யோசிக்கவேண்டிய விஷயம்.

    உடல் வலிமை இருந்தால் மட்டும் போதும் என்று நிறைவடைவது கற்காலத்திற்கு ஏற்றதாக இருந்திருக்கலாம். இன்று நாம் எந்த கொடிய விலங்குகளுடன் நேருக்கு நேர் மோதுகிறோம்!

    மாற்ற முடியாததை ஏற்பது

    நம் வாழ்வில் நடப்பவை எல்லாமே நம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில்லை. இயற்கைச் சீற்றத்தால், பிற மனிதர்கள் அளிக்கும் தொல்லையால், அல்லது நம் மனமே நமக்கு எதிராகச் செயல்படுவதால் துன்பம் வரக்கூடும். வெளியிலிருந்து வரும் கஷ்டங்களை தவிர்க்க முடியாதுதான். ஆனால், நம் மனத்தை மாற்றிக்கொண்டால், அவைகளைச் சமாளிக்கலாமே!

    பலம் எப்படி வருகிறது?

    `என்னை ஒருவருக்குப் பிடிக்கிறது!’ என்ற உணர்வு எழும்போது, மனோபலமும் வருகிறது. சிறு வயதில், குடும்பத்தினர் எந்த எதிர்பார்ப்புமில்லாது காட்டும் அன்பே ஒரு குழந்தைக்குப் பலம் அளிக்கிறது.

    வாழ்க்கையில் ஒரு துன்பம் வந்தால், அதை எப்படிச் சமாளிப்பது என்று புரியாது, கோபத்தாலும் வருத்தத்தாலும் தம் இயலாமையை வெளிப்படுத்திக்கொள்பவர்கள் எவ்வளவுதான் தேக பலம் கொண்டவர்களாக இருப்பினும், அவர்களை வலிமை மிக்கவர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. கவலைப்பட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு பலமும் குறைந்துகொண்டே போகாதா!

    மாறாக, மாற்றமுடியாதவைகளை ஏற்று, துன்பத்தால் தம் தைரியத்தை இழக்காது இருப்பவர்களே பலம் பொருந்தியவர்கள். நீண்ட காலம், இடைவிடாது, போராட நேரிடலாம். இருந்தாலும், இவர்கள் மனம் தளர்வதில்லை. நினைப்பதைச் சாதிப்பார்கள்.

    கதை

    ஹெலன் கெல்லர் (1880 – 1968) தமது ஒன்றரை வயதிலேயே பார்வை மட்டுமின்றி, செவிப்புலனையும் இழந்தவர். பேச மட்டும் முடியும் என்ற நிலை. ஆனால், பார்க்கவோ, கேட்கவோ முடியாது, எப்படிப் பேச முடியும்?

    ஆசிரியையின் உதட்டைத் தொட்டு, `தண்ணீர்’ என்ற சொல்லை அறிய கொட்டும் நீரின்கீழ் கையை வைத்து உணர்ந்து, ஒவ்வொரு எழுத்தாக உச்சரிக்கவும், பேசவும் கற்றார். பிற்காலத்தில், பட்டதாரி, விரிவுரையாளர், பதினோரு புத்தகங்களை எழுதியவர், தன்முனைப்புப்பற்றிய மேடைப்பேச்சாளர் என்று இவரது சாதனைகள் பல.

    பெற்ற தாய் மட்டுமின்றி, அவருக்குக் கற்பித்த ஆசிரியையின் அன்பினாலும், விடாமுயற்சியாலும்தான் பிற்காலத்தில் ஹெலன் கெல்லர் பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக ஆனார்.

    கூடி வாழ்ந்தால்..

    பலத்தை அதிகரிக்க இன்னொரு வழி நம்மை ஒத்தவர்களுடன் கூடிச் செயல்படுவது. என் பள்ளி நாட்களில், `Combined study’ என்ற முறையை வற்புறுத்துவார்கள் ஆசிரியைகள்.

    படித்து முன்னுக்கு வருவதில் ஆர்வம்கொண்ட நான்கு மாணவிகள் ஒரு குழுவில் இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு பாடத்தைப் படித்துவந்து, தனக்குத் தெரிந்த விதத்தில் விளக்கவேண்டும். நிறைய விவாதங்களும் இருக்கும். யாராவது ஒருவர் அநாவசியமாகப் பேசி நேரத்தை வீணடித்தால், அவர் எச்சரிக்கை செய்யப்படுவார்.
    இம்முறையால் கல்வி கற்பது சுவாரசியமாக இருக்கும். குறைந்த நேரத்தில் நிறைய கற்கவும் முடியும். தோழிகளுடன் கலந்து பேசுவதால், கண் மட்டுமின்றி, காது, வாய் எல்லாவற்றிற்கும் வேலை. அதனால் பாடம் மறக்கவே மறக்காது.

    பலவீனமாக இருக்கும் பலர் ஒன்றுகூடி, பலம் பெற்றுவிட்டதாக மனப்பால் குடிப்பதும் உண்டு. இவர்களுக்குத் தனியாக நின்று எதையும் செய்யத் துணிவு இருப்பவர்களைக் கண்டு பயம் எழும்.

    கதை

    இருபத்து ஐந்து வருடங்களுக்குமுன், நான் ஒரு புதிய பள்ளிக்கூடத்திற்கு மாற்றலாகிச் சென்றேன். அங்கு பெரும்பான்மையான ஆசிரியைகளும் மாணவிகளும் சீனர்கள்.

    ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு நான் வித்தியாசமாக இருந்ததாகப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் மாஜோங் என்ற சூதாட்டத்துக்கு இரவு வேளைகளில் வரும்படி என்னை அழைத்தபோது மறுத்துவிட்டேன். அவர்கள் அளித்த பன்றி இறைச்சி கலந்த உணவுப்பொருட்களையும் வாங்கவில்லை.

    `நாங்கள் கொடுக்கும் உணவுப்பொருட்களை வாங்காதவர்களை Rude (முரட்டுத்தனமானவர்கள்) என்போம்!’ என, நான் பதிலுக்கு, `என்னுடைய கொள்கைகளை மதிக்காதவர்களைத்தான் நான் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறேன்!’ என்றேன்.

    போதாத குறைக்கு, நெற்றியில் திலகமிட்டு, புடவை கட்டிப்போனேனா! (அங்கிருந்த ஆறு தமிழ் பேசும் ஆசிரியைகளும் கேலி செய்யப்பட்டதால், பொட்டு வைத்துக்கொள்வதையே விட்டுவிட்டதாக பிறகு அறிந்தேன். `நீங்கள் வந்தபிறகுதான் தைரியமாக பொட்டு வைத்துக்கொள்கிறோம்!’ என்று ஓர் ஆசிரியை தெரிவித்தாள்!)

    என்னையும் அப்படிப் பணியவைக்க முடியவில்லையே என்ற ஆத்திரத்தில், பிறர் சார்பில் ஒருத்தி மட்டும் ஓயாது என்னை கேலி செய்வதுபோல் மட்டம் தட்டி, துன்புறுத்தியவண்ணம் இருந்தாள்.

    ஒரு நாள் பொறுக்கமுடியாது, “You think I am also stupid like you aah? (என்னையும் உன்னைப்போல் முட்டாள் என்று நினைத்தாயா) என்று இரைந்தேன்.

    எல்லாருடைய முகத்திலும் ஒரே கோபம். ஆனால் மேலே எதுவும் பேச அவர்களுக்குத் துணிவிருக்கவில்லை.

    அதற்குப்பின் என்ன! ஒரே மரியாதைதான், அது போலியாக இருந்தாலும்!

    பரோபகாரம் பலமாகுமா?

    வெகு சிலர், `பிறருக்கு உதவுவது நல்லது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,’ என்று செயல்படுவார்கள். இவர்களது குணமறிந்த பலரும் இவர்களை வேலைவாங்கி, பிறகு கண்டும் காணாததுபோல் நடந்துகொள்வார்கள். அப்போது ஏமாற்றத்தால் இவர்களது மனம் உடைந்துவிடும். பொதுவாக, உலகின்மேலேயே கசப்பு ஏற்பட்டுவிடும்.

    உதவி செய்பவர் பலமடைய, யாரால் தமக்குத் தாமே உதவி செய்துகொள்ள முடியவில்லையோ அவர்களுக்குமட்டும் உபகாரம் செய்வது அவசியம். இதை ஒட்டித்தான், `பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    அதிகாரத்தால் பலமா?

    தமக்குக் கீழே இருப்பவர்களை ஓயாது அதிகாரம் செய்வது ஒருவரது பலவீனத்தைத்தான் குறிக்கிறது. பிறரின் ஒத்துழைப்பை அதிகாரத்தால் பெற முடியாது.

    கதை

    என் மாணவிகள் கழுத்தில் சுளுக்கு, வயிற்றுவலி என்று என் உதவியை நாடுவார்கள். அவர்களின் விரல்களை Reflexology முறைப்படி அழுத்தியோ, ஹிப்னாடிச முறைப்படியோ குணப்படுத்துவேன்.

    ஜாவியா என்ற ஆசிரியை `தலைவலி’ என, சில மாணவிகள், என்னைக் கைகாட்டி விட்டிருக்கிறார்கள்.

    என்னிடம் வந்து அதிகாரமாக, “என் கையை அமுக்கி, என் தலைவலியைப் போக்கு,” என்றாள். அவள் குடும்பத்தில் மூத்தவள். அவளுக்குப்பின் பத்து பேர். ஆளுங்கட்சியில் ஏதோ ஒரு குழுத்தலைவியாம். அதற்காக பார்ப்பவர்கள் எல்லாரும் தான் சொற்படிதான் நடக்க வேண்டும் என்றால் முடியுமா?

    நான் அலட்சியமாக, “நீயே செய்துகொள்ளலாம். இந்த இடங்களை அமுக்கிக்கொள்,” என்று காட்டிவிட்டேன். ஒருவருக்கு இம்முறையால் சிகிச்சை அளித்தால், அளிப்பவர் தன் கையை நன்றாகக் கழுவிவிட வேண்டும். இல்லையேல், அந்த உபாதை அவருக்கும் வந்துவிடும்.

    “நீதான் பண்ணணும்,” என்று அவள் பிடிவாதம் பிடிக்க, “ஸாரி. இது சின்ன விஷயம்தானே?” என்று விலகினேன்.

    உரக்கவோ, அதிகாரமாகவோ பேசினால்தான் பலம் என்று நினைத்து வந்திருக்கிறாள் ஜாவியா. என்னிடம் அடைந்த தோல்வியை எதிர்பாராததால், அவள் முகத்தில் அப்படி ஓர் ஆத்திரம்!

    அமைதி குன்றாமல், மென்மையாகப் பேசுகிறவர்களை பலவீனர்கள் அல்லது முட்டாள்கள் என்று எடைபோடுகிறது இன்றைய உலகம். அப்படி எண்ணுபவர்கள்தாம் முட்டாள்கள்.

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் (67)

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றலும் உணர்வுசார் நுண்ணறிவும் (Learning and Emotional intelligence )

    education-1-1 

    கற்றல் ஒரு மனிதனை தொழிலுக்காக மட்டுமின்றி நல்வாழ்க்கைக்காகவும் தயார்  செய்கின்றது. பல நூறாண்டு காலங்களாக இந்திய துணைக்கண்டத்தின் கற்றல் சார்ந்த கொள்கைகள் இந்த நோக்கையே அடிப்படியாகக் கொண்டிருந்தன. வள்ளுவமும் மிகத் தெளிவாக கற்றலின் நோக்கை விளக்கும் வகையில்

    கற்க கசடறக்  கற்பவை கற்றபின்

    நிற்க அதற்குத் தக.

    எனத் தெளிவாகக் கூறியுள்ளது. காலப்போக்கில் இந்த நோக்கைக் கைவிட்டு கற்றலை வாழ்வாதாரங்களுக்குப் பயன்படுவதற்காக மட்டும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இந்தத் தவறுக்கான பலன்களை தனி மனிதனும் சமுதாயமும் இன்று சந்தித்ததுக்கொண்டிருக்கின்றது. நாளையும் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதன் விளைவுகள் சமுதாய நல்லிணக்கங்களையும் கூடிவாழும் கோட்பாடுகளையும் அதிக அளவில் பாதிக்க ஆரம்பித்துவிட்டது.

    மேலை நாடுகளில் தற்போதைய கல்வி முறையில் “வாழ்க்கை கல்வி க்கான” அடிப்படைகளின்  தேவையை அதிக அளவில் வற்புறுத்த ஆரம்பித்திருக்கின்றனர். இந்த வாழ்க்கைக் கல்வியின் முக்கிய முதலீட்டாக ஒரு தனி மனிதனின் உணர்வுசார் நுண்ணறிவு, அதன் வளம், அதன் செழுமை, ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகின்றது.  உணர்வுசார் நுண்ணறிவைப் பற்றிய ஆராய்ச்சியில்  மனநல இயல் ஆராய்ச்சியாளரும் மேதையுமான முனைவர் டேனியல் கோல்டுமேன் (Dr.Daniel Goldmaan) அவர்களின் கோட்பாடுகள் பல நாடுகளில் வழிகாட்டுதலாக கருதப்படுகின்றது.

    உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Intelligence) ஒரு மனிதனை தன்னோடும் தன் சூழலில் மற்றும் சமுதாய, உலக அளவிலும் இருக்கின்ற உயிரூட்டங்களோடும் (Bio-environment) அமைதியுடனும் மாண்புடனும் பங்கீட்டு மனப்பான்மையுடனும் வாழ்வதற்கு உதவுகின்றது. தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ்விக்கும் வளம் கொண்ட சிந்தனையை வளர்க்கும் இந்த அறிவுச்சுடர் சீரான வாழ்க்கைக்கு (balanced life) முதல்படியாக அமைகின்றது.

    உணர்வுசார் நுண்ணறிவு ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள்ளோ புத்தகப்  பெட்டகங்களுக்குள்ளோ கிடைப்பதில்லை.. மேலும் இதன் வளர்ச்சிப்பாங்கு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேறுபடுகின்றது. இருப்பினும் இதன் வளர்ச்சிப்படிகள் பொதுவாக எல்லா மனிதருக்கும் ஒரு குறிப்பிட்ட பாதையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிப்படிகள் “மன நலத்திற்கும்” (Mental Health) “முதிர்ச்சிக்கும்” (Maturity) அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

    இதன் முதல் படியாக “விழிப்புணர்வு” (Self-Awareness) கருதப்படுகின்றது. கற்றலில் விழிப்புணர்வு தேடலின் முக்கிய அறிகுறி. ஆகவே வளரும் பருவத்தில், கற்றலின் முதல் பருவத்தில், விழிப்புணர்வுக்காக உணர்வுகளை வளர்ப்பது மட்டுமின்றி வளப்படுத்துதலும் அவசியம். பள்ளியில் முதல் வகுப்பில் மாணவர்கள் கற்றலை ஆரம்பிக்கும் பொழுதே விழிப்புணர்வைத் சார்ந்த அறிவுத்திறன்களை போதித்தல் அவசியம். இந்த விழிப்புணர்வுக்காக நுண்ணறிவுகள் அனுபவ பூர்வமாகக்  கற்பது அதன் திறனை வலுப்படுத்துகின்றது. இந்த அறிவினை சக-மாணவர்களுடன் சேர்ந்து உறவாடுதல் (peer learning) மூலமும், வீட்டில் உறவினர்களோடும் நண்பர்களோடு உறவாடுதல் மூலமும் மறைமுகமாக (informal learning) கற்பிக்கச் செய்தால் அது எளிதாகவும் மன- அழுத்தங்கள் இன்றியும் கற்றுக்கொள்ள ஏதுவாகின்றது..

    விழிப்புணர்வு தேடலின் மூலமாக படிப்படியாக தன்னுடைய வலிமையையும் வளத்தையும் உறுதிசெய்துகொள்கின்றது. குழந்தைப்பருவத்தில் இந்தத் தேடலின் முதல் கேள்வி -“நான் யார்?”என்பதே.

    இந்தக்கேள்வி வாழ்வின் பல காலக்கட்டங்களில் பல அர்த்தங்களையும் பல பதில்களையும் கொடுப்பதாக இருந்தாலும் இதன் முதல் சுற்று இளம் வயதிலேயே ஆரம்பமாகின்றது.

    நான், எனது பெயர், எனது உடல், எனது தேவைகள், எனது சூழ்நிலைகள் .. என்று தன்னைப் பற்றிய பல ஆர்வப் புதிர்களுக்கு விடைகாணும் கற்றலாக இது அமைகின்றது. இந்த விழிப்புணர்வு குழந்தைகளிடம் முதல் முறையாக தன்னையும் தன்னைத் தவிர்த்த மற்றவரையும் அவர்களுடய தனிப்பட்ட தேவைகளையும் பிரித்துப் பார்க்க வழி வகுக்கின்றது. (From Recgonition to Differentiation and analysis)

    இதனைத் தொடர்வது “எனது குடும்பம்” என்ற நுண்ணறிவு. எனக்கும் என்னைச் சார்ந்தவருக்கும் என்ன உறவு? –(Relating and Responding)  என்ற தேடல் “சொந்தங்கள் – உறவுகள் -சுற்றங்கள் ” பற்றிய அடுத்த நிலை அறிவுக்கு எடுத்துச் செல்கின்றது. இந்த நிலையில் தனக்கும் இந்த உறவுகளுக்கும் உள்ள உடன்பாடுகள், வேறுபாடுகள், கட்டுப்பாடுகள் ஆகியவை உறவுகளின் உணர்வு நிலையின் வெவ்வேறு மாற்றங்களை பற்றிய கற்றலுக்கு வழிகாட்டுகின்றன. இது குழந்தைகளின் மனநலத்திற்கும் உணர்வுகளின் மேன்மையான வளர்ச்சிக்கும் முக்கிய கட்டம். பெற்றோர்களும், உறவினரும் மற்றும் ஆசிரியர்களும் இதன் வளர்ச்சிக்குத் தங்களாலான பங்கை சிறப்புடன் ஆற்றுதல் அவசியம்.

    இந்த வளர்ச்சிப்பருவத்தில் உறவுகளையும் சுற்றங்களையும் பற்றிய தவறான கருத்துக்களை விதைத்தலும், தரக்குறைவான வார்த்தைகளையோ அல்லது பழக்கங்களையோ குழந்தைகளுக்கு முன்மாதிரியாக வைத்தலும் அவர்களுடைய நினைவுகளில் தவறான பதிவுகளை ஏற்படுத்துகின்றது. இது அவர்களுடைய தனிவாழ்க்கைப் பாதையை பிற்காலத்தில் பாதிக்க வாய்ப்புக்கள் உண்டு.

    சில நேரங்களில் தொலைக்காட்சிகளில் விளையாட்டுப் போக்காக குழந்தைகளிடம் பெற்றோர்களைப் பற்றியும் பெரியோர்களைப் பற்றியும் விபரீதமான கருத்துக்களைக் கேட்டுவாங்கும் பொழுது பலருக்கு அந்த நேரத்தில் சிரிப்பூட்டுவதாக இருந்தாலும் அதன்  தாக்கங்கள் தனிப்பட்ட அளவில் அதைப்  பார்க்கின்ற கேட்கின்ற குழந்தைகளின் மனநலத்தில் பாதிப்புக்கள் ஏற்படுத்த வாய்ப்புக்கள் உண்டு.. சிந்திக்கவேண்டிய விஷயம் .

    (தொடரும்)

    Share
  • உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -10

    உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

    பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத்

    ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

    தமிழாக்கம் :  சிஜெயபாரதன்கனடா

    +++++++++++

    umar

     

    [31]

    இப்புவியில்  ஏனென்று,  எப்போ தென்று,
    அறியாது,  திக்கற்ற நீரோடைபோல் நான்
    திசைமாறிக் கழிவுமேல் வீசும் காற்றாக,
    எங்கு போவ தறியேன் குறி நோக்க மின்றி.

    [31]
    Into this Universe, and Why not knowing,
    Nor Whence, like Water willy-nilly flowing:
    And out of it, as Wind along the Waste,
    I know not Whither, willy-nilly blowing. 

    +++++++++++

    [32]

     பூமத்தி தாண்டி வந்தேன் ஏழாம் வாசல் வழி
    ஆசனத்தின் மீது சனிக்கோள் அமர்ந்தி ருக்கும்
    பல முடிச்சுகள் அவிழ்ந்தன பாதை நெடுவே
    ஆயின் ஊழ்விதிக் கதிபன் முடிச்ச விழாது!

    [32]

    Up from Earth’s Centre through the Seventh Gate
    I rose, and on the Throne of Saturn sate,
    And many Knots unravel’d by the Road; 
    But not the Master-Knot of Human Fate. 

    +++++++++++ 

    [33]

     எனக்குச் சாவி காணாத கதவு அது!
    முகத்திரை நீக்கிப் பார்க்க முடிய வில்லை
    சிலகணம் உன்னை என்னைப் பற்றிச் சிற்றுரை
    பிறகு என்னைஉன்னைப் பற்றிப் பேச்சில்லை

     [33]

    There was the Door to which I found no Key:
    There was the Veil through which I could not see:
    Some little talk awhile of Me and Thee
    There was – and then no more of Thee and Me.

    +++++++++++++

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 232

    -மலர் சபா

    மதுரைக் காண்டம்கட்டுரைக் காதை

    கண்ணகியின் வினா

    மதுராபதி தெய்வம் கூறியதைக் கேட்ட கண்ணகி,
    துன்பத்தால் வாடியிருந்த தன் முகத்தை
    வலப்புறம் திருப்பி, அத்தெய்வத்தை நோக்கி,
    “என் பின்னால்  வருபவளே, நீ யார்?
    பொறுப்பதற்கு இய்லாத என் துன்பம்  kannaki
    எப்படிப்பட்டதென்று நீ அறிவாயோ?”
    எனக் கேட்டாள்.

    மதுராபதி சொல்லிய செய்திகள்
    தீவினை வந்த வகையைக் கூறல்

    அழகூட்டும் அணிகளை அணிந்தவளே!
    பொறுப்பதற்கு அரிதான
    உன் துன்பம் நான் அறிந்தேன்;
    நான் சிறப்பான இக்கூடல் நகரில் வாழும் தெய்வம்;
    மதுராபதி என்னும் பெயர் உடையவள்;
    உன்னிடத்தில் கூற
    அர்த்தமுள்ள செய்திகளுடன் வந்துள்ளேன்.
    உன் கணவன் கொலையுண்டது அறிந்து வருந்துகிறேன்;
    எனினும் நீ இதைக் கேட்பாயாக!

    பெருமைக்குரிய தகுதிகள் வாய்ந்த பெண்ணே!
    வருந்தும் என் உள்ளம் கூறும் மொழிகள் கேள்…
    எம் பாண்டிய மன்னனுக்கு
    ஊழ்வினை ஏற்பட்டதையும்
    அது எவ்வாறு ஏற்பட்டது என்ற காரணத்தையும்
    நீ கேட்பாயாக பெண்ணே!
    உன் கணவனுக்குத் தீங்கு நேர்ந்ததற்குக் காரணமான
    பழவினை குறித்த செய்தியைக் கேட்பாயாக!

     

     

     

    Share
  • பாப விமோசனம் – 2

    -வையவன்

    சற்றுத்தொலைவில் சதானந்தன் சரயூ நதியின் அருகில் கண்பார்வை படாத இடத்தில் நின்றான்.

    ஏதோ நிகழ இருக்கிறது. இந்திரன் விசாரிக்கப் படப்போகிறானா? தாய் அகல்யாவா? அந்தக் குற்றவிசாரணைக் கீழ்மையின் கொடுக்குகள் தன்னைத் தீண்டித் தாய்மையின் முறையீடு தனக்குள் எழுந்து  தான் செய்து வரும் தவத்திற்கு இடையூறு நேருமோ என்று  நிற்பது போலிருந்தது அது.

    யுகயுகங்களுக்கும் இனித் தலைநிமிர்வு இல்லை என்று  கூனிவளைந்த இந்திரனின் முதுகெலும்பு ஒப்புதல் சாட்சியம் அளித்தது .

    அகல்யா நிமிர்ந்து  நூறு நூறு அக்கினிப்பிரவேசங்களைக் கடந்து வந்த கற்பின் கனல் சுடர் வீச நின்றாள் .

    அவளது கண்கள் இந்திரனின் குனிந்த தலையை,தொங்கிய தோளை , அவளைத் தீண்டிய அந்தக் கரங்களை, இப்போது துடிக்கும் விரல்களை அவனது உடல் முழுவதும் கௌதம சாபம் வரைந்த ஆயிரம் யோனிக் குறிகளை பச்சாதாபத்தோடு பார்த்தன. தேவராஜனாய் இருந்தும், மண்ணாகப்போகிற  மனிதனுக்குரிய பலவீனம் அவனைப் பற்றிய அந்த இழுக்கிற்கு ஆளாக்கிய இரக்கம் அவளில் மிதந்தது. தான் பொறுப்பில்லை. தனது பேரழகு. காண்கிற எல்லோரையும் அது வசீகரிக்கின்ற காந்தம். இவை தான் காரணம் என்ற விடுபடல் அந்த இரக்கத்தில் வெளிப்பட்டது.

    சீதா அகல்யாவின்  முகத்தில் நிலவிய தேஜசைப் பார்த்தாள் அதனால்   ஈர்க்கப்பட்டாள். அவளையே கண்கொட்டாமல் பார்த்தாள்.

    கௌதமரோ  சாபம் இடுமளவு கொதித்த சினம் சாம்பல்   மேடாகி,  அதை மௌனமாகக் கடந்து வரும் சாம்பசிவம் போன்று உணர்ச்சியற்று நின்றார். இச்சை, மோகம், அழகு தருகின்ற லாகிரியின் அவஸ்தை எல்லாம் கடந்து அவற்றைக்காலில் சுற்றிய பாசியை, லேசாய்  சூலத்தினால் அகற்றி எறியும்  சாந்தம் நிலவியது.

    பட்டாபிஷேகக் கொண்டாட்டங்கள், ஆரவாரங்கள் எல்லாம் தீர்ந்து மழை விட்டுவிட்ட நிம்மதியில், பதிமூன்று  வருஷ கானக அமைதிக்கு மனம் ஏங்கியது. இராமனோடு தனிமை நாடி சரயூ நதிக்கரைக்கு வந்திருந்தாள்.

    கரையோரம் கௌதமர் ஆசிரமம் கண்ணுக்குப் பட இருவரும் சென்றபோது அங்கே மீண்டும் இந்திரன். சேவலாய்க்கூவி பொய்ப்பொழுதை விடியவைத்து, வெளியேறிய கௌதமர் திரும்பியதும் பூனையாய், பதுங்கி ஓடி இப்போது ருசிகண்ட நாயாக வந்திருக்கிறானோ!

    எதிரில் இடுப்பின் மேல் கைவைத்தபடி அகல்யா. தூரத்திலிருந்து  சற்றும் பதறாமல் வரும்  கௌதமர்.

    சீதா முதலில் திகைத்தாள். ஏதோ அசம்பாவிதமோ? அங்கே தான் நிற்கவேண்டுமா? காண விரும்பாமல்   விலகி நடக்க முயன்றாள்.

    “நில்லுங்கள்!” என்று தடுத்தாள் அகல்யா.

    சீதா நின்றாள்.

    “இந்திரன் ஏன் வந்தார்?” சீதா அகல்யாவைக் கேட்டாள். பதிதன் ஆயினும் ஆண். தேவேந்திரன். மரியாதை குறைக்கக்கூடாது.

    ‘அவனையே கேளுங்கள்!’ சொல் இல்லை. முகம் திரும்பி இந்திரனைச் சுட்டும் சைகை.

    “தேவேந்திரா!” சீதை நீதிபதி போல் இன்றி கருணை காட்டும் கனிவோடு கேட்டாள்.

    சற்றே நிமிர்ந்து சீதையைப்  பார்த்த இந்திரன் அதில் நிலவிய மேன்மையைப் பார்த்துச் சட்டென்று குனிந்து அவளது பாதங்களைத் தொடப்போனான் .

    ” நான் மனுஷி. நீங்கள் தேவேந்திரர்.”

    அருகில் வந்த கௌதமர் மார்பில் கைகட்டி நின்றார்.

    எழுந்துகொண்டு  இந்திரன் சொன்னான்.” இல்லை.அன்னையே! எந்தப் பாத தூசுக்கு விமோசன சக்தி உள்ளதோ அவரது பத்தினி தாங்கள்.”

    “இங்கே ஏன் மீண்டும் வந்தீர்கள்? “

    “பாப விமோசனம் கேட்க வந்தேன்.”

    “அகல்யா தேவியிடமா?”

    “ஆம், அன்னையே!”

    “சாபம் கொடுத்தவர் இவர். இவர் இல்லாத சமயத்தில் இங்கு வந்தால்  இவ்வளவும் நடந்த பின் வந்தால் ..அதற்கு என்ன பொருள்?”  கௌதமரைக் காட்டி சீதா கேட்டாள்.

    “சாபத்திற்கு அகல்யா தேவியை ஆளாக்கிய பாவத்திலிருந்து விமோசனம் வேண்ட  வந்தேன் “

    அகல்யாவின் மனசில் சாபவிமோசனம் கிடைத்தபின்பும் பாபக்கறையை  போக விடாத  எத்தனை பார்வைகள் ..அருவருப்பு..ஏளனம்.. இந்திரனை நினைத்துத் தனக்குள் தோன்றும் சபலம் மறைத்த பரிவுகள்.

    ahalya3“இவள் தான் அகல்யா.” தன்னைச் சுட்டிக் காட்டி அடையாளம் சொல்லும் எத்தனை ஆண்கள்  . எத்தனை ப் பெண்கள். ரிஷிபத்தினிகள் முதல் இளவரசிகள் வரை. சாபங்களுக்கு அஞ்சி நரிப்பார்வை பார்க்கிற கோழைகள்.

    “சாபம் கொடுத்தது என்  பலவீனம்.” என்றார் கௌதமர். அவர் குரல் கம்மியிருந்தது.

    சீதா அவரை வியப்போடு பார்த்தார். எதை முன்னிட்டுச் சொல்கிறார்? என்னென்னமோ எண்ணங்கள்  உள்ளத்தில் ஓடினாலும் இதுவாயிருக்குமோ அதுவாயிருக்குமோ என்ற சிந்தனை ஓட்டம் மேலும் அவளைக் கிளறியது.

    அக்கினிப் பிரவேசத்திற்கு முந்திய சீதை அல்ல அவள். இப்போது மிகவும் மாறியிருந்தாள்.

    “என்ன சொல்கிறீர்கள்  மகரிஷி?”

    திடீரென்று ஒரு சலசலப்பு கேட்டது. ஒரு சிறுத்தைப் புலியால் விரட்டப் பட்டு வந்த மான் ஒன்று மனிதத் சூழலைக் கண்டு சற்றே

    மருண்டு ஆசிரம வேலி தாண்டிக் குதித்து திறந்திருந்த குடிசைக் கதவுக்குள் பாய்ந்து நுழைந்தது. 

    “ஐயோ பாவம்” என்று மானைப்பார்த்து  அனுதாபத்தை வாய்விட்டுச் சொன்னாள் சீதை.

    “கொஞ்சம் பொறுங்கள். உள்ளே யாகத்திற்கு உரிய பாலும் தயிரும் வைத்திருக்கிறேன். மான் உருட்டி விடப்போகிறது. ” என்று அனுமதி கேட்டுக்கொண்டு அகல்யா குடிசையை நோக்கிப் போனாள்.

    சீதா அவள் போவதைப்பார்த்துவிட்டு கௌதமர் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.

    அதில் கௌதமரின் கருத்தறிந்து தேவை உணர்ந்து  அகல்யா பொறுப்புள்ள பத்தினியாக பணியாற்றி வருவதன் அங்கீகாரம் அந்தப்பார்வையில் வெளிப்பட்டது.

    “அகல்யா இல்லையேல் என் தபஸ் இல்லை.” அதற்குப் பதில் போல மெதுவாக தாடியை உருவிக்கொண்டு கௌதமர் சொன்னார்.

    அந்த இருவர் எதிரில் இன்னும் தான் நீசனாக நிற்பதன் சிறுமை இந்திரனின் தலையை  மீண்டும் ஒரு முறை குனிய வைத்தது.

    “சீதா!” கௌதமர் அவளை மெல்லிய குரலில் அழைத்தார். “ராமனைப் பார்க்க வந்த குகன் சரயூவின் இக்கரையில் காத்திருக்கிறான். அங்கே ராமனோடும் குகனோடும் அனுமனும் இருக்கிறான்.அவனும் உன்னைக் காண வேண்டி காத்திருக்கிறான். நாம் போவோமா?”

    “உள்ளே போன அகல்யா வந்து விடட்டுமே!”

    “இல்லை. நாம் போவோம். இந்திரன் அவளிடம் பாபமன்னிப்புக் கேட்க வந்திருக்கிறான். மன்னிப்புக் கேட்பவர், கொடுப்பவர்  இருவருக்குமே வேறு சாட்சிகள் இருப்பது தர்மசங்கடம்”

    ஒருமுறை இந்திரனையும், கதவுக்கு அப்பாலிருந்த அகல்யாவையும் பார்த்துவிட்டுக்  கௌதமரின் கம்பீரமான பெருந்தன்மைக்குக் கட்டுப்பட்டு சீதா அவரைப் பின்தொடர்ந்தாள்.

    அந்த இருவரை ஒன்றாகப் பார்த்ததற்குச் சபித்தவர், இப்போது இருவரையும் தனியே இருக்க விட்டு வரும் கண்ணியம் அவள் நெஞ்சைத் தொடாமலில்லை.

    சற்றுதூரம் வாய்ப்பேச்சின்றி நடந்தவர் ஒரு சலசலப்பு கேட்டு நின்றார்.ஆசிரம எல்லையில் ஒரு கனி மரத்தில் இருந்து ஒரு பழம் விழவும்,அதைக் கவ்விக்கொண்டு ஓட வந்து இரு கீரிகள் ஒன்றை ஒன்று துரத்திவர  , மரத்திலிருந்து பாய்ந்து குதித்தோடி  வந்த ஒரு அணில் அதைக் கவ்வி ஓடியதை, வெறித்துப் பார்த்தபடிக்கு நிற்கிற காட்சியைக் கண்டு கௌதமர் அனுதாபத்தோடு உச்சுக் கொட்டினார்.

    “இப்போது நான் அகல்யாவை உணர்ந்து கொண்டது போல் அப்போது உணர்ந்திருக்கவில்லை. எனக்குள்ளும் பொறுத்துக் கொள்ள வேண்டிய  அளவு போதிய தபோபலம் வளர்ந்திருக்கவில்லை.”

    சீதா அவரது கண்களில் நிலவிய சாந்தத்தை மனசிற்குள் வாங்கிக் கொண்டாள்.

    “சபிக்கும் அளவுக்குஅப்போது நான் பலவீனன். ஒரு ரிஷிபத்தினி  சாபங்களுக்கு அப்பாற்பட்டவள். சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவள். என் அறிவீனம் அவள் சபலங்களுக்கும் அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தது. என்ன அகந்தை! விளைவு பல ஆண்டுகள் கல்லின் கடினத்தை அவள் சுமந்தது.இந்திரனுக்கு இட்ட சாபத்தால் அவனைக் காண்பவர்கள் எல்லாரையும்  அகல்யாவின் வீழ்ச்சியை நினைக்கச் செய்து விட்டேன்”  

     எதிரில் ஒரு பெரிய பாறை தென்பட்டது.

    “அம்மா சீதா! அங்கு போய் சற்று அமர்ந்து பேசுவோமா?” என்று கேட்டார்.

    “ஆகட்டும் மகரிஷி!”

    இருவரும் எதிரெதிரே பார்த்தபடி அமர்ந்தனர்.

    “என் மனசில் வளர்ந்திருக்கும் புற்றிலிருந்து நான் இன்று வெளிவரவேண்டும் அம்மா சீதா!”

    சீதா புன்னகையோடு அவரை ஒரு குழந்தையைப் பார்ப்பது போல் பார்த்தாள்.

    “அகல்யா  பிரம்மாவின் மகள். அவரது கற்பனையை எல்லாம் குழைத்து இனி இவளுக்கு மேல் ஒன்று இருக்கக் கூடாது என்ற சங்கல்பத்தோடு உருவாக்கிய பேரழகி.தேவாதி தேவர்களையெல்லாம் ஓட்டப்பந்தயம் ஓடவைத்துப் பார்த்தபின் தேர்ந்தெடுத்த முனிவனான எனக்கு பத்தினியாக்கப் பட்டவள்.  முனிவனுக்கு மனைவியாக இருப்பது மட்டுமே போதும் என்று இயற்கையை நிர்ப்பந்திக்க முடியாது. அதுவும் தேவர்களுக்கே தலைவனான இந்திரன் தன்னை இச்சிக்கிறான் என்ற கர்வத்திலிருந்து விடுபட்டு நிற்கவும்  அகல்யா கற்பிக்கப் படவில்லை”

    ஆண் பெண் என்ற பாலின பேதம் கடந்த ஞானியாக எதிர்பாராவிதமாக கௌதமர் வெளிப்படுவதைக் கண்டு சீதா அந்த ஞானசாந்நித்தியத்தில் நிற்கிற அனுபவம் பெற்றாள்.

    “சீதா! உன் வைராக்கியம் பூஜிக்கத் தகுந்தது.அகல்யாவின் பலவீனம் மன்னிக்கத் தகுந்தது.”

    “மகரிஷி ..தாங்கள்..?” சீதா வாசகத்தை முடிக்காமல் இழுத்தாள்.

    “இந்திரன் மன்னிக்கப்படவேண்டியவன்.என்ன செய்கிறோம் என்பதன் கனம் அறியாமல் ஒரு கணத்தில் தவறிழைத்து விட்டான்.பாபம் அவனைச் சாராது .”

    “பின் யாரைச் சாரும்?”

    “அகல்யாவின் சிருஷ்டியை. அதை உருவாக்கிய  சிருஷ்டிகர்த்தாவை.”

    ஒரு கணம் கண் மூடி யோசித்து வானத்தைப்பார்த்தார். பிறகு எதிரிலிருந்த சீதையைப்  பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்.

    “இல்லை. தெளிவாக யோசித்தால் பிரம்ம தேவர் கூட இதற்குப் பொறுப்பாகமாட்டார். ஒரு பேரழகை தனக்குள் இச்சித்ததால் பிரம்மாவால் அனுக்கிரகிக்கப்பட்ட  வடிவம் அது. நாம் நம்மையே சிருஷ்டித்துக் கொள்கிறோம். அகல்யா அப்படி இச்சித்துப்பெற்ற அனுபவத்தால் தான்  அழகின் பிரமையில் இருந்து இப்போது விடுபட்டிருக்கிறாள்.”

    சீதைக்கு ராவணன் நினைவு வந்தது! எவ்வளவு பெரிய சக்திமான்!எப்பேர்ப்பட்ட வீரன்! கைலயங்கிரியைத் தன் கைகளால் அசைத்துப் பார்த்தவன். எப்படித் தன் அழகில் வீழ்ந்து அழியாத  அவப்பெயருக்கு ஆளானான்? அவன் பாவங்களை இராமபாணம் துருவித் துளைத்தெடுத்து விட்டது. அவன் மன்னிக்கப்பட்டிருப்பானா?

    இருக்காது என்ற எண்ணம் தோன்றியது. அவன் சிந்தையைக் குலைத்த அழகிற்குத் தான் காரணம் என்று நினைவு வந்தது. நடந்தது என்ன? விதி எழுதிய ஒரு பெரிய சோக நாடகமா? திரை விழுந்த பின் உணர்ச்சிகளுக்கு வேலையில்லை.

    சீதை ராவணனை மன்னித்தாள்.

     அவன் பாவங்களை எல்லாம் மன்னித்தாள்.

    பரிபூரணமான சாந்தி அவளுள் பிரவேசித்தது.

    இந்த சாந்தியை அகல்யாவும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாள்.

    வேறொன்றும் கேளாது “போவோம் மகரிஷி!”என்றாள்.

    இருவரும் சரயூவின் கரை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினர். 

    (முற்றும்)

     

    Share
  • சிரிப்பாய்ச் சிரிக்கட்டும் வாழ்க்கை

    எஸ் வி வேணுகோபாலன்

    சிரிக்கச் சொன்னால் காசு கேட்கும் சீமைச்சாமி…என்பது கண்ணதாசனின் ‘சாமியிலும் சாமி இது ஊமைச்சாமி’ (எங்கள் தங்க ராஜா) என்ற திரைப்படப் பாடலில் வரும் ஒரு வரி. உம்மு னு இருப்பது, உர்ர்ன்னு பார்ப்பது, வள்ளுன்னு பிடுங்கி எடுப்பது என பலருக்கும் அடையாள மொழி உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அன்றாட வாழ்க்கையின் வேகமான தாளகதி ஓட்டத்தில் சிக்கித் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள். இறுக்கமான முகங்களும், எப்போதும் பதட்டமான வேலைமுறையும்,எதிலும் பொருந்தாத ஓட்டமுமாகக் கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுதுகளில் அவர்களைச் சற்றே தளர்த்திக் கொடுத்துத் தரையில் கால் ஊன்ற வைத்துக் கொஞ்சம் சிரிக்கவும் வைக்காவிட்டால் என்ன ஆகும் நிலைமை என்பதை சமூகம் சற்று சிந்திக்க வேண்டிய காலமிது.

    நகைச்சுவை உணர்ச்சி மட்டும் இல்லை என்றால் நான் எப்போதோ என் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பேன் என்று மகாத்மா காந்தி ஒருமுறை சொன்னாராம். எத்தனை பளு தோள்களை அழுத்திக் கொண்டிருந்தாலும், அலட்டிக்கொள்ளாமல் ஜோக் அடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களையும் நாம் பார்க்கவே செய்கிறோம்.

    நண்பர்சீ னிவாச நாராயணன், ஓர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. அண்மையில் பார்க்க வந்த இடத்தில், “எனக்கு ரொம்ப நாளாக இருதய ஆபரேஷன் பண்ணனும்னு ஆசை….ஆனால் முடியலியே” என்றார். உடனே அருகில் இருந்த இன்னொரு நண்பர், அடடா, இதெல்லாம் தாமதம் செய்யக் கூடாதே என்றார். அவரோ அலட்டிக்கொள்ளாமல், “நான் ஆபரேஷன் செய்யத் தயாராத்தான் இருக்கேன், ஆனால் யாரும் என்கிட்டே செஞ்சுக்கத் தயாரா இல்லையே” என்றார். எத்தனை அசலான நகைச்சுவை…

    மன நல மருத்துவர் ஜி ராமானுஜம் அவர்களது ஹாஸ்யமான ஆங்கிலக் கட்டுரை ஒன்றை சில ஆண்டுகளுக்குமுன் தி இந்து நாளேட்டின் திறந்த பக்கத்தில் வாசித்த அந்தக் கணத்திலேயே அவரோடு நட்பு உருவாக்கிக் கொண்டேன். சில மாதங்களுக்குப் பிறகு சென்னை வந்தவர், ஒரு நாள் காலையில் அலைபேசியில் அழைத்து உங்கள் வீட்டுக்கு எப்படி வருவது என்று கேட்டார். அவரது உறவினர் வீட்டிலிருந்து மிக அருகில்தான் எங்கள் வீடு என்பதால் விலாவாரியாக வழியைச் சொல்லி முடித்ததும், ராமானுஜம் இப்படி சொன்னார்:”….அதெல்லாம் சரி, நான் உங்கள் வீட்டு வாசலுக்கு எப்போதோ வந்து சேர்ந்துவிட்டேன், வீட்டுக்குள் எப்படி வருவது என்றுதான் கேட்டேன்…” என்றார். அத்தனை அசத்தல் குறும்பு நிறைந்த மனிதர்.

    கல்லூரியில் எனக்கு வாய்த்த நண்பர்கள் பலர் அராஜகத்திற்கு நகைச்சுவை உணர்வு படைத்தவர்களாக இருந்தனர். ஒருமுறை அதில் ஒருவன் சொன்னான், “சட்டைப்பையில் ஐம்பது ரூபாய் இருக்கு…எப்படி செலவு செய்யறதுன்னு தெரியல”. உடனே அடுத்தவன் சொன்னான், என் கையில் கொடு, உடனே செலவழித்துக் காட்டுகிறேன் என்று. முதலாமவன் பதில் இதுதான்:”நான் குறிப்பிட்டதே உன் சட்டைப்பையில் உள்ள பணத்தைத் தான், எங்கே சீக்கிரம் அதைச் செலவழிக்கும் வழியைப் பார்”

    புகழ் பெற்ற இருதய மருத்துவர் பி எம் ஹெக்டே தமது கட்டுரை ஒன்றில், மனம் விட்டுச் சிரிக்கும்போது உடலின் நன்மைக்கு வழி வகுக்கும் என்டார்பின்கள் மூளையில் அதிகம் சுரக்கின்றன என்ற ஆய்வு பற்றிக் குறிப்பிட்டு, நகைச்சுவை உணர்வின் தேவையைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார் (“உள்ளங்கையில் உடல் நலம்” – விகடன் பிரசுரம்). அவர் மேற்கோள் காட்டி இருக்கும் சுவாரசியமான கதை இதுதான்: அமெரிக்காவில் அறுபதுகளில் வாழ்ந்த பிரபல பத்திரிகையாளர் நார்மன் கசின்ஸ், சிக்கலான தண்டுவட நோய் ஒன்று முற்றி இருந்த காரணத்தால் சுண்டுவிரலைக் கூட அசைக்க இயலாது மருத்துவமனையில் இருந்திருக்கிறார். அவரது ஆயுள் எப்போதும் முடிந்துவிடக் கூடும் என்று சொல்லப்பட்ட நிலையில், நண்பர்கள் பலர் அவரை வந்து பார்த்துச் சென்றுள்ளனர். அதில் ஒருவர் தங்களுக்கிடையே பகிர்ந்துகொண்ட பழைய துணுக்கு ஒன்றைச் சொல்லி சிரித்தபோது, நார்மன் விரல்களை அசைத்தது கவனிக்கப்பட்டது. உடனே, மிகவும் நகைச்சுவை நிரம்பிய காணொளி நாடாக்கள் தருவிக்கப்பட்டு அவருக்குப் போட்டுக் காட்டப்பட்டதில், நான்கே வாரங்களில் உடல்நலம் தேறி அந்த மனிதர் வீடு திரும்பிய அசாத்திய நிகழ்வு பற்றி ஹெக்டேவின் கட்டுரை பேசுகிறது.

    “வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாக்கும் இந்தச் சிரிப்பு” என்று சிரிப்பை மேன்மைப்படுத்தினார் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன். ஆனால், நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கும் சிரிப்பு உணர்ச்சி உண்டு, ஆனால் அவற்றின் நீண்ட முகவாகு காரணமாக அவை சிரிப்பது தெரிவதில்லை என்று சில ஆய்வாளர்கள் கருதுவதாக அதே கட்டுரையில் ஹெக்டே சுட்டிக்காட்டுகிறார். மனிதர்களாகிய நமக்கு சிரிக்கத் தயக்கம் என்ன….

    எழுத்தாளர் சுஜாதா அநியாயத்திற்கு ஹாஸ்ய உணர்ச்சி கொண்டிருந்தவர் என்பதை அவரது எழுத்துக்களில் சாதாரணமாகப் பார்க்க முடியும். அவர் வார இதழொன்றில் கேள்விகளுக்குப் பதில் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் “எழுதுவதை எப்போது நிறுத்துவீர்கள்?” என குதர்க்கமாக வந்த கேள்விக்கு அவர் அளித்த பதில்: “பெரும்பாலும் இரவு பத்தரை மணி. அதற்குமேல் விழித்திருந்து எழுத முடிவதில்லை”.

    வாசகரோ, பத்திரிகையாளரோ யாரும் எளிதில் சந்தித்து நேர்காணல் செய்துவிட முடியாது என்று சொல்லப்பட்ட புகழ்வாய்ந்த எழுத்தாளர் ஆர் கே நாராயண் பெங்களூருவில் வசித்துவந்தபோது, சுஜாதா அவரை சந்திக்கச் சென்றிருக்கிறார். பல தடைகளை எதிர்கொண்டு முன்னேறி அவரோடு இரண்டு மணி நேரத்திற்கு உட்கார்ந்து பேசியுமிருக்கிறார். ஒரு கட்டத்தில், “ரொம்ப சந்தோஷம் …அப்ப, உத்தரவு வாங்கி கொள்கிறேன்” என்று எழுந்தாராம் சுஜாதா. அலட்டிக் கொள்ளாமல் காதுகளில் இருந்து பஞ்சை எடுத்து வெளியே போட்டுவிட்டு, “போய்வாருங்கள்” என்றாராம் ஆர் கே நாராயண்!

    அப்புசாமி-சீதாப்பாட்டி (சீதே கெயவி !) பாத்திரங்களை பாக்கியம் ராமசாமி (ஜரா சுந்தரேசன்) படைக்கவும், அதற்கு உயிர்கொடுத்த ஓவியர் ஜெயராஜ் தமது லெட்டர் பேடில் அந்த இருவர் ஓவியத்தையே பதிந்து கொண்டார் என்று சொல்லப்பட்டதுண்டு. பாரதியார் நூற்றாண்டை ஒட்டி எழுதப்பட்ட கதையில், மகாகவி வாழ்ந்த வீட்டைக் காட்சிப்பொருளாக்கிக் காசு பண்ணத்துடிக்கும் அப்புசாமி அண்ட் கம்பெனி (ரசகுண்டு, பீமாராவ்) எங்கிருந்தோ யாரோ பயன்படுத்திய பழம்பொருள்கள் பலவற்றை மூர்மார்கெட் உள்பட தேடிச்சென்று வாங்கி வந்து நிரப்பி தடாலடி அடித்து, “இது பாரதி உட்கார்ந்த நாற்காலி, இது பாரதி பயன்படுத்திய மேசை…” என்றெல்லாம் அட்டைகள் எழுதி வைத்து முடித்திருக்கும். முதல்நாள் இரவு அங்கே நுழையும் சீதாப்பாட்டி, அப்புசாமியின் தொண்டுப்பணியைத் தனது ஒயிலான ஆங்கிலத்தில் பாராட்டிவிட்டுச் செல்வார். மறுநாள் காலை அமைச்சர் திறந்துவைத்துப் பார்த்துக் கொண்டே வருகையில் ஓரிடத்தில் வைக்கப்பட்ட பொருளைப் பார்த்ததும் பதறிப்போய் கோபத்தோடு என்ன இதெல்லாம் என்று கத்துவார். அவர் கை காட்டும் இடத்தில் ஒரு கலர் டிவி பெட்டியை வைத்து, பாரதியார் பார்த்த தொலைக்காட்சிப்பெட்டி என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும். வேறு யார், சீதே கெயவியின் வேலைதான்…மாட்டிக் கொள்பவரோ அப்புசாமி!

    வால்ட் டிஸ்னியின் டாம் அண்ட் ஜெர்ரி தொடர்களைப் பிடிக்காத மனிதர் யார் இருப்பார் ! அந்த எலிக்குட்டியின் அட்டகாசத்தால் ஒவ்வொருமுறையும் தலையில் கையை வைத்துக்கொண்டு ஏமாந்து நிற்கும் டாம் எத்தனை பெரிய குறியீட்டுப் பாத்திரம்! ஒரு எபிசோடில், ஜெர்ரிக்கு அஞ்சலில் வந்துசேரும் புத்தகத்தை எடுத்து வைத்துப் படிக்கத் தொடங்கும் டாம் பெரிய எரிச்சல் அடையும். தான் வெவ்வேறு முறையில் ஜெர்ரியுடன் மோதி ஏமாந்த கதைகள் பலவற்றை எழுதி ஒரு புத்தகம் ஆக்கிவிட்டிருக்கும் ஜெர்ரி. கோபத்தோடு அதை அடிக்கலாம் என்று டாம் எழுந்திருக்கையில், தனக்கு வந்திருக்கும் ஒரு காசோலையுடன் ஜெர்ரி, டாம் எதிரே வந்து நிற்கும். இணைப்புக் கடிதத்தில் புத்தகத்திற்கான ராயல்டியில் ஒரு பகுதி டாமுக்குச் சேரும் என்று எழுதப்பட்டிருக்கும். அப்புறமென்ன, காசுதான் வருகிறதல்லவா, எந்தப்புத்தகத்தைப் பார்த்து வெகுண்டதோ, அதே புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு யாரைப் பற்றியோ படிக்கிறதுமாதிரி விழுந்து விழுந்து சிரித்தபடி படித்துக் கொண்டிருக்கும் டாம்!

    பொருளில்லாமல் சிரிக்க வேண்டாம். சிரிக்காமல் இருப்பதிலும் பொருளில்லை. உன்னால் சிரிக்க முடியாவிட்டால் என்ன, உலகம் உன்னைப்பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விடும் என்றார் அறிஞர் ஒருவர். புகைப்படக் கலைஞர்கள் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்று கெஞ்சிக் கேட்கும் நிலையில்தான் சமூகம் தீவிரமான முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. உற்சாகமிக்க மனமிருந்தால் நோய்கள் விரைந்து குணமாகும் என்று மறைந்த மருத்துவர் குமாரசாமி, பிரபல மருத்துவர் கே வி திருவேங்கடம் அவர்களோடு இணைந்து எழுதிய ஆய்வுக்கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். கண்ணீர் ததும்பும் வாழ்க்கையைக் கூட கண்ணில் நீர் வர சிரித்து மாற்றிக் கொள்வோம்.

    நகைச்சுவை நிறைக்கட்டும் நம் வாழ்க்கைத் தடங்களை..

    ***********

    நன்றி: வண்ணக்கதிர் (பிப்ரவரி 26, 2017 ஞாயிறு தீக்கதிர் நாளிதழ் இணைப்பு)

    Share
  • ஒருகணம்நாம் சிந்திப்போம் !

       ( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )

     

     

    பரந்திருக்கும் கடலதனை

    பலருக்கும் உவமிப்பர்

    பட்டம்பல பெற்றவரை

    பதவியிலே உயர்ந்தவரை

    பெட்டிநிறை பணம்கொண்டார்

    அத்தனபேர் தனையுலகில்

    கடலெனவே பெயர்சூட்டிக்

    களிப்புடனே அழைத்திடுவர் !

     

    உவமிக்கும் உவமானம்

    உயர்வினையே தரவேண்டும்

    உவர்நிறைந்த கடலதனை

    உவமித்தல் உகந்ததன்றோ

    உவர்நிறைந்த கடலதனை

    உவமானம் ஆக்கிவிடின்

    உயர்வென்று கருதுவதில்

    ஒருகுறைவு வருமன்றோ !

     

    தந்தாலும் பலவளத்தை

    தாகமதைத் தீர்க்காத

    கடலதனை உவமித்தல்

    கற்பனைக்கே பொருத்தமில்லை

    பசுமைதனைத் தருவதற்கும்

    பயிர்வளர்ச்சி யடைவதற்கும்

    ஒருபொழுதும் உதவாமல்

    இருக்குதன்றோ உவர்கடலும் !

     

    மேலிருக்கும் மேகமது

    கீழிருக்கும் கடல்தன்னுள்

    ஆதவனின் உதவியுடன்

    ஆவியென நீரெடுத்து

    பூமிதனைக் குளிர்விக்க

    பொழிகின்ற மழையெனவே

    மாறிவிட்டால் பின்னால்தான்

    மற்றவர்க்கு உதவுதது !

     

    பட்டம்பல பெற்றவர்கள்

    பண்புநிலை உயர்வதில்லை

    பணம்கொண்ட பலபேர்கள்

    குணம்கூட மாறமாட்டார்

    உவர்கொண்ட கடல்போல

    உளமெல்லாம் உயிர்ப்பின்றி

    அவர்வாழும் நிலையினைநாம்

    அகிலத்தில் காணுகிறோம் !

     

    கருணைக் கடலென

    கடவுளைக் கூறுகிறோம்

    கற்பனைக் கடலென்று

    கவிஞர்தமை அழைக்கின்றோம்

    பரந்திருக்கும் காரணத்தால்

    பெருவாழம் கொண்டதனால்

    கடலெனவே கருதிநின்று

    உலகிலுள்ளோர் அழைக்கின்றார் !

     

    ஆழத்தை நோக்கிடினும்

    அகலத்தை நோக்கிடினும்

    மாக்கடலின் உவர்தன்மை

    மாறிவிட மாட்டாது

    உவர்தன்மை கொண்டகடல்

    உயர்வுக்குப் பொருத்தமன்று

    உள்ளமதில் அதையெண்ணி

    ஒருகணம்நாம் சிந்திப்போம் !

     

    மேலிருக்கும் மேகம்தான்

    கீழ்கடலை பயன்படுத்தும்

    மேலான பணிதன்னை

    மேதினியில் செய்கிறது

    மேலான குணமுடையார்

    வெளிவந்து நின்றுவிடின்

    கீழான குணமெல்லாம்

    கிறுகிறுத்து ஓடிவிடும் !

    Share