க. பாலசுப்பிரமணியன்

கற்றலும் உணர்வுசார் நுண்ணறிவும் (Learning and Emotional intelligence )

education-1-1 

கற்றல் ஒரு மனிதனை தொழிலுக்காக மட்டுமின்றி நல்வாழ்க்கைக்காகவும் தயார்  செய்கின்றது. பல நூறாண்டு காலங்களாக இந்திய துணைக்கண்டத்தின் கற்றல் சார்ந்த கொள்கைகள் இந்த நோக்கையே அடிப்படியாகக் கொண்டிருந்தன. வள்ளுவமும் மிகத் தெளிவாக கற்றலின் நோக்கை விளக்கும் வகையில்

கற்க கசடறக்  கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

எனத் தெளிவாகக் கூறியுள்ளது. காலப்போக்கில் இந்த நோக்கைக் கைவிட்டு கற்றலை வாழ்வாதாரங்களுக்குப் பயன்படுவதற்காக மட்டும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இந்தத் தவறுக்கான பலன்களை தனி மனிதனும் சமுதாயமும் இன்று சந்தித்ததுக்கொண்டிருக்கின்றது. நாளையும் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதன் விளைவுகள் சமுதாய நல்லிணக்கங்களையும் கூடிவாழும் கோட்பாடுகளையும் அதிக அளவில் பாதிக்க ஆரம்பித்துவிட்டது.

மேலை நாடுகளில் தற்போதைய கல்வி முறையில் “வாழ்க்கை கல்வி க்கான” அடிப்படைகளின்  தேவையை அதிக அளவில் வற்புறுத்த ஆரம்பித்திருக்கின்றனர். இந்த வாழ்க்கைக் கல்வியின் முக்கிய முதலீட்டாக ஒரு தனி மனிதனின் உணர்வுசார் நுண்ணறிவு, அதன் வளம், அதன் செழுமை, ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகின்றது.  உணர்வுசார் நுண்ணறிவைப் பற்றிய ஆராய்ச்சியில்  மனநல இயல் ஆராய்ச்சியாளரும் மேதையுமான முனைவர் டேனியல் கோல்டுமேன் (Dr.Daniel Goldmaan) அவர்களின் கோட்பாடுகள் பல நாடுகளில் வழிகாட்டுதலாக கருதப்படுகின்றது.

உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Intelligence) ஒரு மனிதனை தன்னோடும் தன் சூழலில் மற்றும் சமுதாய, உலக அளவிலும் இருக்கின்ற உயிரூட்டங்களோடும் (Bio-environment) அமைதியுடனும் மாண்புடனும் பங்கீட்டு மனப்பான்மையுடனும் வாழ்வதற்கு உதவுகின்றது. தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ்விக்கும் வளம் கொண்ட சிந்தனையை வளர்க்கும் இந்த அறிவுச்சுடர் சீரான வாழ்க்கைக்கு (balanced life) முதல்படியாக அமைகின்றது.

உணர்வுசார் நுண்ணறிவு ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள்ளோ புத்தகப்  பெட்டகங்களுக்குள்ளோ கிடைப்பதில்லை.. மேலும் இதன் வளர்ச்சிப்பாங்கு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேறுபடுகின்றது. இருப்பினும் இதன் வளர்ச்சிப்படிகள் பொதுவாக எல்லா மனிதருக்கும் ஒரு குறிப்பிட்ட பாதையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிப்படிகள் “மன நலத்திற்கும்” (Mental Health) “முதிர்ச்சிக்கும்” (Maturity) அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

இதன் முதல் படியாக “விழிப்புணர்வு” (Self-Awareness) கருதப்படுகின்றது. கற்றலில் விழிப்புணர்வு தேடலின் முக்கிய அறிகுறி. ஆகவே வளரும் பருவத்தில், கற்றலின் முதல் பருவத்தில், விழிப்புணர்வுக்காக உணர்வுகளை வளர்ப்பது மட்டுமின்றி வளப்படுத்துதலும் அவசியம். பள்ளியில் முதல் வகுப்பில் மாணவர்கள் கற்றலை ஆரம்பிக்கும் பொழுதே விழிப்புணர்வைத் சார்ந்த அறிவுத்திறன்களை போதித்தல் அவசியம். இந்த விழிப்புணர்வுக்காக நுண்ணறிவுகள் அனுபவ பூர்வமாகக்  கற்பது அதன் திறனை வலுப்படுத்துகின்றது. இந்த அறிவினை சக-மாணவர்களுடன் சேர்ந்து உறவாடுதல் (peer learning) மூலமும், வீட்டில் உறவினர்களோடும் நண்பர்களோடு உறவாடுதல் மூலமும் மறைமுகமாக (informal learning) கற்பிக்கச் செய்தால் அது எளிதாகவும் மன- அழுத்தங்கள் இன்றியும் கற்றுக்கொள்ள ஏதுவாகின்றது..

விழிப்புணர்வு தேடலின் மூலமாக படிப்படியாக தன்னுடைய வலிமையையும் வளத்தையும் உறுதிசெய்துகொள்கின்றது. குழந்தைப்பருவத்தில் இந்தத் தேடலின் முதல் கேள்வி -“நான் யார்?”என்பதே.

இந்தக்கேள்வி வாழ்வின் பல காலக்கட்டங்களில் பல அர்த்தங்களையும் பல பதில்களையும் கொடுப்பதாக இருந்தாலும் இதன் முதல் சுற்று இளம் வயதிலேயே ஆரம்பமாகின்றது.

நான், எனது பெயர், எனது உடல், எனது தேவைகள், எனது சூழ்நிலைகள் .. என்று தன்னைப் பற்றிய பல ஆர்வப் புதிர்களுக்கு விடைகாணும் கற்றலாக இது அமைகின்றது. இந்த விழிப்புணர்வு குழந்தைகளிடம் முதல் முறையாக தன்னையும் தன்னைத் தவிர்த்த மற்றவரையும் அவர்களுடய தனிப்பட்ட தேவைகளையும் பிரித்துப் பார்க்க வழி வகுக்கின்றது. (From Recgonition to Differentiation and analysis)

இதனைத் தொடர்வது “எனது குடும்பம்” என்ற நுண்ணறிவு. எனக்கும் என்னைச் சார்ந்தவருக்கும் என்ன உறவு? –(Relating and Responding)  என்ற தேடல் “சொந்தங்கள் – உறவுகள் -சுற்றங்கள் ” பற்றிய அடுத்த நிலை அறிவுக்கு எடுத்துச் செல்கின்றது. இந்த நிலையில் தனக்கும் இந்த உறவுகளுக்கும் உள்ள உடன்பாடுகள், வேறுபாடுகள், கட்டுப்பாடுகள் ஆகியவை உறவுகளின் உணர்வு நிலையின் வெவ்வேறு மாற்றங்களை பற்றிய கற்றலுக்கு வழிகாட்டுகின்றன. இது குழந்தைகளின் மனநலத்திற்கும் உணர்வுகளின் மேன்மையான வளர்ச்சிக்கும் முக்கிய கட்டம். பெற்றோர்களும், உறவினரும் மற்றும் ஆசிரியர்களும் இதன் வளர்ச்சிக்குத் தங்களாலான பங்கை சிறப்புடன் ஆற்றுதல் அவசியம்.

இந்த வளர்ச்சிப்பருவத்தில் உறவுகளையும் சுற்றங்களையும் பற்றிய தவறான கருத்துக்களை விதைத்தலும், தரக்குறைவான வார்த்தைகளையோ அல்லது பழக்கங்களையோ குழந்தைகளுக்கு முன்மாதிரியாக வைத்தலும் அவர்களுடைய நினைவுகளில் தவறான பதிவுகளை ஏற்படுத்துகின்றது. இது அவர்களுடைய தனிவாழ்க்கைப் பாதையை பிற்காலத்தில் பாதிக்க வாய்ப்புக்கள் உண்டு.

சில நேரங்களில் தொலைக்காட்சிகளில் விளையாட்டுப் போக்காக குழந்தைகளிடம் பெற்றோர்களைப் பற்றியும் பெரியோர்களைப் பற்றியும் விபரீதமான கருத்துக்களைக் கேட்டுவாங்கும் பொழுது பலருக்கு அந்த நேரத்தில் சிரிப்பூட்டுவதாக இருந்தாலும் அதன்  தாக்கங்கள் தனிப்பட்ட அளவில் அதைப்  பார்க்கின்ற கேட்கின்ற குழந்தைகளின் மனநலத்தில் பாதிப்புக்கள் ஏற்படுத்த வாய்ப்புக்கள் உண்டு.. சிந்திக்கவேண்டிய விஷயம் .

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *