நலம் .. நலமறிய ஆவல் – (45)
நிர்மலா ராகவன்
மனோபலமே பலம்
`நான் பலசாலி!’ என்று தன் புஜபலத்தால் மார் தட்டிக்கொள்ளும் ஒருவர் தனக்கென வாழ்வில் ஒரு இடர் வந்துவிட்டால் அதைத் தாங்கிக்கொள்வாரா? யோசிக்கவேண்டிய விஷயம்.
உடல் வலிமை இருந்தால் மட்டும் போதும் என்று நிறைவடைவது கற்காலத்திற்கு ஏற்றதாக இருந்திருக்கலாம். இன்று நாம் எந்த கொடிய விலங்குகளுடன் நேருக்கு நேர் மோதுகிறோம்!
மாற்ற முடியாததை ஏற்பது
நம் வாழ்வில் நடப்பவை எல்லாமே நம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில்லை. இயற்கைச் சீற்றத்தால், பிற மனிதர்கள் அளிக்கும் தொல்லையால், அல்லது நம் மனமே நமக்கு எதிராகச் செயல்படுவதால் துன்பம் வரக்கூடும். வெளியிலிருந்து வரும் கஷ்டங்களை தவிர்க்க முடியாதுதான். ஆனால், நம் மனத்தை மாற்றிக்கொண்டால், அவைகளைச் சமாளிக்கலாமே!
பலம் எப்படி வருகிறது?
`என்னை ஒருவருக்குப் பிடிக்கிறது!’ என்ற உணர்வு எழும்போது, மனோபலமும் வருகிறது. சிறு வயதில், குடும்பத்தினர் எந்த எதிர்பார்ப்புமில்லாது காட்டும் அன்பே ஒரு குழந்தைக்குப் பலம் அளிக்கிறது.
வாழ்க்கையில் ஒரு துன்பம் வந்தால், அதை எப்படிச் சமாளிப்பது என்று புரியாது, கோபத்தாலும் வருத்தத்தாலும் தம் இயலாமையை வெளிப்படுத்திக்கொள்பவர்கள் எவ்வளவுதான் தேக பலம் கொண்டவர்களாக இருப்பினும், அவர்களை வலிமை மிக்கவர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. கவலைப்பட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு பலமும் குறைந்துகொண்டே போகாதா!
மாறாக, மாற்றமுடியாதவைகளை ஏற்று, துன்பத்தால் தம் தைரியத்தை இழக்காது இருப்பவர்களே பலம் பொருந்தியவர்கள். நீண்ட காலம், இடைவிடாது, போராட நேரிடலாம். இருந்தாலும், இவர்கள் மனம் தளர்வதில்லை. நினைப்பதைச் சாதிப்பார்கள்.
கதை
ஹெலன் கெல்லர் (1880 – 1968) தமது ஒன்றரை வயதிலேயே பார்வை மட்டுமின்றி, செவிப்புலனையும் இழந்தவர். பேச மட்டும் முடியும் என்ற நிலை. ஆனால், பார்க்கவோ, கேட்கவோ முடியாது, எப்படிப் பேச முடியும்?
ஆசிரியையின் உதட்டைத் தொட்டு, `தண்ணீர்’ என்ற சொல்லை அறிய கொட்டும் நீரின்கீழ் கையை வைத்து உணர்ந்து, ஒவ்வொரு எழுத்தாக உச்சரிக்கவும், பேசவும் கற்றார். பிற்காலத்தில், பட்டதாரி, விரிவுரையாளர், பதினோரு புத்தகங்களை எழுதியவர், தன்முனைப்புப்பற்றிய மேடைப்பேச்சாளர் என்று இவரது சாதனைகள் பல.
பெற்ற தாய் மட்டுமின்றி, அவருக்குக் கற்பித்த ஆசிரியையின் அன்பினாலும், விடாமுயற்சியாலும்தான் பிற்காலத்தில் ஹெலன் கெல்லர் பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக ஆனார்.
கூடி வாழ்ந்தால்..
பலத்தை அதிகரிக்க இன்னொரு வழி நம்மை ஒத்தவர்களுடன் கூடிச் செயல்படுவது. என் பள்ளி நாட்களில், `Combined study’ என்ற முறையை வற்புறுத்துவார்கள் ஆசிரியைகள்.
படித்து முன்னுக்கு வருவதில் ஆர்வம்கொண்ட நான்கு மாணவிகள் ஒரு குழுவில் இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் ஒரு பாடத்தைப் படித்துவந்து, தனக்குத் தெரிந்த விதத்தில் விளக்கவேண்டும். நிறைய விவாதங்களும் இருக்கும். யாராவது ஒருவர் அநாவசியமாகப் பேசி நேரத்தை வீணடித்தால், அவர் எச்சரிக்கை செய்யப்படுவார்.
இம்முறையால் கல்வி கற்பது சுவாரசியமாக இருக்கும். குறைந்த நேரத்தில் நிறைய கற்கவும் முடியும். தோழிகளுடன் கலந்து பேசுவதால், கண் மட்டுமின்றி, காது, வாய் எல்லாவற்றிற்கும் வேலை. அதனால் பாடம் மறக்கவே மறக்காது.
பலவீனமாக இருக்கும் பலர் ஒன்றுகூடி, பலம் பெற்றுவிட்டதாக மனப்பால் குடிப்பதும் உண்டு. இவர்களுக்குத் தனியாக நின்று எதையும் செய்யத் துணிவு இருப்பவர்களைக் கண்டு பயம் எழும்.
கதை
இருபத்து ஐந்து வருடங்களுக்குமுன், நான் ஒரு புதிய பள்ளிக்கூடத்திற்கு மாற்றலாகிச் சென்றேன். அங்கு பெரும்பான்மையான ஆசிரியைகளும் மாணவிகளும் சீனர்கள்.
ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கு நான் வித்தியாசமாக இருந்ததாகப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் மாஜோங் என்ற சூதாட்டத்துக்கு இரவு வேளைகளில் வரும்படி என்னை அழைத்தபோது மறுத்துவிட்டேன். அவர்கள் அளித்த பன்றி இறைச்சி கலந்த உணவுப்பொருட்களையும் வாங்கவில்லை.
`நாங்கள் கொடுக்கும் உணவுப்பொருட்களை வாங்காதவர்களை Rude (முரட்டுத்தனமானவர்கள்) என்போம்!’ என, நான் பதிலுக்கு, `என்னுடைய கொள்கைகளை மதிக்காதவர்களைத்தான் நான் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறேன்!’ என்றேன்.
போதாத குறைக்கு, நெற்றியில் திலகமிட்டு, புடவை கட்டிப்போனேனா! (அங்கிருந்த ஆறு தமிழ் பேசும் ஆசிரியைகளும் கேலி செய்யப்பட்டதால், பொட்டு வைத்துக்கொள்வதையே விட்டுவிட்டதாக பிறகு அறிந்தேன். `நீங்கள் வந்தபிறகுதான் தைரியமாக பொட்டு வைத்துக்கொள்கிறோம்!’ என்று ஓர் ஆசிரியை தெரிவித்தாள்!)
என்னையும் அப்படிப் பணியவைக்க முடியவில்லையே என்ற ஆத்திரத்தில், பிறர் சார்பில் ஒருத்தி மட்டும் ஓயாது என்னை கேலி செய்வதுபோல் மட்டம் தட்டி, துன்புறுத்தியவண்ணம் இருந்தாள்.
ஒரு நாள் பொறுக்கமுடியாது, “You think I am also stupid like you aah? (என்னையும் உன்னைப்போல் முட்டாள் என்று நினைத்தாயா) என்று இரைந்தேன்.
எல்லாருடைய முகத்திலும் ஒரே கோபம். ஆனால் மேலே எதுவும் பேச அவர்களுக்குத் துணிவிருக்கவில்லை.
அதற்குப்பின் என்ன! ஒரே மரியாதைதான், அது போலியாக இருந்தாலும்!
பரோபகாரம் பலமாகுமா?
வெகு சிலர், `பிறருக்கு உதவுவது நல்லது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,’ என்று செயல்படுவார்கள். இவர்களது குணமறிந்த பலரும் இவர்களை வேலைவாங்கி, பிறகு கண்டும் காணாததுபோல் நடந்துகொள்வார்கள். அப்போது ஏமாற்றத்தால் இவர்களது மனம் உடைந்துவிடும். பொதுவாக, உலகின்மேலேயே கசப்பு ஏற்பட்டுவிடும்.
உதவி செய்பவர் பலமடைய, யாரால் தமக்குத் தாமே உதவி செய்துகொள்ள முடியவில்லையோ அவர்களுக்குமட்டும் உபகாரம் செய்வது அவசியம். இதை ஒட்டித்தான், `பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
அதிகாரத்தால் பலமா?
தமக்குக் கீழே இருப்பவர்களை ஓயாது அதிகாரம் செய்வது ஒருவரது பலவீனத்தைத்தான் குறிக்கிறது. பிறரின் ஒத்துழைப்பை அதிகாரத்தால் பெற முடியாது.
கதை
என் மாணவிகள் கழுத்தில் சுளுக்கு, வயிற்றுவலி என்று என் உதவியை நாடுவார்கள். அவர்களின் விரல்களை Reflexology முறைப்படி அழுத்தியோ, ஹிப்னாடிச முறைப்படியோ குணப்படுத்துவேன்.
ஜாவியா என்ற ஆசிரியை `தலைவலி’ என, சில மாணவிகள், என்னைக் கைகாட்டி விட்டிருக்கிறார்கள்.
என்னிடம் வந்து அதிகாரமாக, “என் கையை அமுக்கி, என் தலைவலியைப் போக்கு,” என்றாள். அவள் குடும்பத்தில் மூத்தவள். அவளுக்குப்பின் பத்து பேர். ஆளுங்கட்சியில் ஏதோ ஒரு குழுத்தலைவியாம். அதற்காக பார்ப்பவர்கள் எல்லாரும் தான் சொற்படிதான் நடக்க வேண்டும் என்றால் முடியுமா?
நான் அலட்சியமாக, “நீயே செய்துகொள்ளலாம். இந்த இடங்களை அமுக்கிக்கொள்,” என்று காட்டிவிட்டேன். ஒருவருக்கு இம்முறையால் சிகிச்சை அளித்தால், அளிப்பவர் தன் கையை நன்றாகக் கழுவிவிட வேண்டும். இல்லையேல், அந்த உபாதை அவருக்கும் வந்துவிடும்.
“நீதான் பண்ணணும்,” என்று அவள் பிடிவாதம் பிடிக்க, “ஸாரி. இது சின்ன விஷயம்தானே?” என்று விலகினேன்.
உரக்கவோ, அதிகாரமாகவோ பேசினால்தான் பலம் என்று நினைத்து வந்திருக்கிறாள் ஜாவியா. என்னிடம் அடைந்த தோல்வியை எதிர்பாராததால், அவள் முகத்தில் அப்படி ஓர் ஆத்திரம்!
அமைதி குன்றாமல், மென்மையாகப் பேசுகிறவர்களை பலவீனர்கள் அல்லது முட்டாள்கள் என்று எடைபோடுகிறது இன்றைய உலகம். அப்படி எண்ணுபவர்கள்தாம் முட்டாள்கள்.
தொடருவோம்