ஜவஹர்லால் 

எண்ணிலா நோயில் இந்திய மக்கள்

இடர்ப்படல் கண்டு நொந்தாய்;

மண்ணிலே அவர்கள் வான்புகழ் காண

விடுதலை வேண்டு மென்றாய்;

இன்றுநம் நாடு விடுதலை பெற்றே

இருப்பதில் அய்ய மில்லை.

அன்றுள நோய்கள் அற்றன வாவென்

றறிந்திட வருவா யாநீ?

 

சொந்த நாட்டிலே அன்னியர்க் கடிமை

செய்திடல் நாண மென்றாய்;

சொந்த நாட்டிலே நம்மவர்க் கடிமை

செய்துமே வாழ லாமோ?

சிந்தனை கூடச் சொந்தமாய்ச் செய்யத்

துணிவிலா அடிமை நெஞ்சம்

இந்த நாட்டிலே இன்னு மிருப்பதை

அறிந்திட வருவா யாநீ?

 

சாதிகள் வேண்டாம்; மேலவர் கீழோர்

சங்கடம் வேண்டா மென்றாய்;

சாதிகள் சங்கம் தெருத்தொறும் முளைத்தே

சிரித்தெமை அலைக்க ழிக்கும்;

வேதனை விளைச்சல் கொஞ்சமா யில்லை;

வினைகளும் பஞ்ச மில்லை;

சாதிகள் சங்கப் பேயதை யோட்டச்

சடுதியில் வருவா யாநீ?

 

கீதை யளித்தவன் கீதச் சிரிப்பினைக்

கவிதையாய்க் கொட்டி நின்றாய்;

நாதி யற்றவ ரணைத்திடு தூய

ஏசுவைப் பாடிச் சென்றாய்;

ஆதித் தூயவர் அருமறை நபியை

அன்புடன் தொழுக வென்றாய்;

சாதிப் பிரிவினை தெய்வமே கொள்வதைத்

தெரிந்திட வருவா யாநீ?

 

விடுதலை பெற்ற மகிழ்வினில் திளைத்தோம்;

வீட்டவ ராண்டிடக் கண்டோம்;

கெடுதலை யோட்டி நன்மையைக் கூட்டக்

கவலையார் கொள்ளு கின்றார்?

விடுதலை நாட்டில் தீமைக ளின்னும்

விடுதலை யாகிட வில்லை;

நடுகிற பயிரைக் களைகளே தின்னல்

அறிந்திட வருவா யாநீ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.