ஒருகணம்நாம் சிந்திப்போம் !
( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா )
பரந்திருக்கும் கடலதனை
பலருக்கும் உவமிப்பர்
பட்டம்பல பெற்றவரை
பதவியிலே உயர்ந்தவரை
பெட்டிநிறை பணம்கொண்டார்
அத்தனபேர் தனையுலகில்
கடலெனவே பெயர்சூட்டிக்
களிப்புடனே அழைத்திடுவர் !
உவமிக்கும் உவமானம்
உயர்வினையே தரவேண்டும்
உவர்நிறைந்த கடலதனை
உவமித்தல் உகந்ததன்றோ
உவர்நிறைந்த கடலதனை
உவமானம் ஆக்கிவிடின்
உயர்வென்று கருதுவதில்
ஒருகுறைவு வருமன்றோ !
தந்தாலும் பலவளத்தை
தாகமதைத் தீர்க்காத
கடலதனை உவமித்தல்
கற்பனைக்கே பொருத்தமில்லை
பசுமைதனைத் தருவதற்கும்
பயிர்வளர்ச்சி யடைவதற்கும்
ஒருபொழுதும் உதவாமல்
இருக்குதன்றோ உவர்கடலும் !
மேலிருக்கும் மேகமது
கீழிருக்கும் கடல்தன்னுள்
ஆதவனின் உதவியுடன்
ஆவியென நீரெடுத்து
பூமிதனைக் குளிர்விக்க
பொழிகின்ற மழையெனவே
மாறிவிட்டால் பின்னால்தான்
மற்றவர்க்கு உதவுதது !
பட்டம்பல பெற்றவர்கள்
பண்புநிலை உயர்வதில்லை
பணம்கொண்ட பலபேர்கள்
குணம்கூட மாறமாட்டார்
உவர்கொண்ட கடல்போல
உளமெல்லாம் உயிர்ப்பின்றி
அவர்வாழும் நிலையினைநாம்
அகிலத்தில் காணுகிறோம் !
கருணைக் கடலென
கடவுளைக் கூறுகிறோம்
கற்பனைக் கடலென்று
கவிஞர்தமை அழைக்கின்றோம்
பரந்திருக்கும் காரணத்தால்
பெருவாழம் கொண்டதனால்
கடலெனவே கருதிநின்று
உலகிலுள்ளோர் அழைக்கின்றார் !
ஆழத்தை நோக்கிடினும்
அகலத்தை நோக்கிடினும்
மாக்கடலின் உவர்தன்மை
மாறிவிட மாட்டாது
உவர்தன்மை கொண்டகடல்
உயர்வுக்குப் பொருத்தமன்று
உள்ளமதில் அதையெண்ணி
ஒருகணம்நாம் சிந்திப்போம் !
மேலிருக்கும் மேகம்தான்
கீழ்கடலை பயன்படுத்தும்
மேலான பணிதன்னை
மேதினியில் செய்கிறது
மேலான குணமுடையார்
வெளிவந்து நின்றுவிடின்
கீழான குணமெல்லாம்
கிறுகிறுத்து ஓடிவிடும் !