சிரிப்பாய்ச் சிரிக்கட்டும் வாழ்க்கை

0

எஸ் வி வேணுகோபாலன்

சிரிக்கச் சொன்னால் காசு கேட்கும் சீமைச்சாமி…என்பது கண்ணதாசனின் ‘சாமியிலும் சாமி இது ஊமைச்சாமி’ (எங்கள் தங்க ராஜா) என்ற திரைப்படப் பாடலில் வரும் ஒரு வரி. உம்மு னு இருப்பது, உர்ர்ன்னு பார்ப்பது, வள்ளுன்னு பிடுங்கி எடுப்பது என பலருக்கும் அடையாள மொழி உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அன்றாட வாழ்க்கையின் வேகமான தாளகதி ஓட்டத்தில் சிக்கித் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள். இறுக்கமான முகங்களும், எப்போதும் பதட்டமான வேலைமுறையும்,எதிலும் பொருந்தாத ஓட்டமுமாகக் கடந்து சென்று கொண்டிருக்கும் பொழுதுகளில் அவர்களைச் சற்றே தளர்த்திக் கொடுத்துத் தரையில் கால் ஊன்ற வைத்துக் கொஞ்சம் சிரிக்கவும் வைக்காவிட்டால் என்ன ஆகும் நிலைமை என்பதை சமூகம் சற்று சிந்திக்க வேண்டிய காலமிது.

நகைச்சுவை உணர்ச்சி மட்டும் இல்லை என்றால் நான் எப்போதோ என் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பேன் என்று மகாத்மா காந்தி ஒருமுறை சொன்னாராம். எத்தனை பளு தோள்களை அழுத்திக் கொண்டிருந்தாலும், அலட்டிக்கொள்ளாமல் ஜோக் அடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களையும் நாம் பார்க்கவே செய்கிறோம்.

நண்பர்சீ னிவாச நாராயணன், ஓர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. அண்மையில் பார்க்க வந்த இடத்தில், “எனக்கு ரொம்ப நாளாக இருதய ஆபரேஷன் பண்ணனும்னு ஆசை….ஆனால் முடியலியே” என்றார். உடனே அருகில் இருந்த இன்னொரு நண்பர், அடடா, இதெல்லாம் தாமதம் செய்யக் கூடாதே என்றார். அவரோ அலட்டிக்கொள்ளாமல், “நான் ஆபரேஷன் செய்யத் தயாராத்தான் இருக்கேன், ஆனால் யாரும் என்கிட்டே செஞ்சுக்கத் தயாரா இல்லையே” என்றார். எத்தனை அசலான நகைச்சுவை…

மன நல மருத்துவர் ஜி ராமானுஜம் அவர்களது ஹாஸ்யமான ஆங்கிலக் கட்டுரை ஒன்றை சில ஆண்டுகளுக்குமுன் தி இந்து நாளேட்டின் திறந்த பக்கத்தில் வாசித்த அந்தக் கணத்திலேயே அவரோடு நட்பு உருவாக்கிக் கொண்டேன். சில மாதங்களுக்குப் பிறகு சென்னை வந்தவர், ஒரு நாள் காலையில் அலைபேசியில் அழைத்து உங்கள் வீட்டுக்கு எப்படி வருவது என்று கேட்டார். அவரது உறவினர் வீட்டிலிருந்து மிக அருகில்தான் எங்கள் வீடு என்பதால் விலாவாரியாக வழியைச் சொல்லி முடித்ததும், ராமானுஜம் இப்படி சொன்னார்:”….அதெல்லாம் சரி, நான் உங்கள் வீட்டு வாசலுக்கு எப்போதோ வந்து சேர்ந்துவிட்டேன், வீட்டுக்குள் எப்படி வருவது என்றுதான் கேட்டேன்…” என்றார். அத்தனை அசத்தல் குறும்பு நிறைந்த மனிதர்.

கல்லூரியில் எனக்கு வாய்த்த நண்பர்கள் பலர் அராஜகத்திற்கு நகைச்சுவை உணர்வு படைத்தவர்களாக இருந்தனர். ஒருமுறை அதில் ஒருவன் சொன்னான், “சட்டைப்பையில் ஐம்பது ரூபாய் இருக்கு…எப்படி செலவு செய்யறதுன்னு தெரியல”. உடனே அடுத்தவன் சொன்னான், என் கையில் கொடு, உடனே செலவழித்துக் காட்டுகிறேன் என்று. முதலாமவன் பதில் இதுதான்:”நான் குறிப்பிட்டதே உன் சட்டைப்பையில் உள்ள பணத்தைத் தான், எங்கே சீக்கிரம் அதைச் செலவழிக்கும் வழியைப் பார்”

புகழ் பெற்ற இருதய மருத்துவர் பி எம் ஹெக்டே தமது கட்டுரை ஒன்றில், மனம் விட்டுச் சிரிக்கும்போது உடலின் நன்மைக்கு வழி வகுக்கும் என்டார்பின்கள் மூளையில் அதிகம் சுரக்கின்றன என்ற ஆய்வு பற்றிக் குறிப்பிட்டு, நகைச்சுவை உணர்வின் தேவையைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கிறார் (“உள்ளங்கையில் உடல் நலம்” – விகடன் பிரசுரம்). அவர் மேற்கோள் காட்டி இருக்கும் சுவாரசியமான கதை இதுதான்: அமெரிக்காவில் அறுபதுகளில் வாழ்ந்த பிரபல பத்திரிகையாளர் நார்மன் கசின்ஸ், சிக்கலான தண்டுவட நோய் ஒன்று முற்றி இருந்த காரணத்தால் சுண்டுவிரலைக் கூட அசைக்க இயலாது மருத்துவமனையில் இருந்திருக்கிறார். அவரது ஆயுள் எப்போதும் முடிந்துவிடக் கூடும் என்று சொல்லப்பட்ட நிலையில், நண்பர்கள் பலர் அவரை வந்து பார்த்துச் சென்றுள்ளனர். அதில் ஒருவர் தங்களுக்கிடையே பகிர்ந்துகொண்ட பழைய துணுக்கு ஒன்றைச் சொல்லி சிரித்தபோது, நார்மன் விரல்களை அசைத்தது கவனிக்கப்பட்டது. உடனே, மிகவும் நகைச்சுவை நிரம்பிய காணொளி நாடாக்கள் தருவிக்கப்பட்டு அவருக்குப் போட்டுக் காட்டப்பட்டதில், நான்கே வாரங்களில் உடல்நலம் தேறி அந்த மனிதர் வீடு திரும்பிய அசாத்திய நிகழ்வு பற்றி ஹெக்டேவின் கட்டுரை பேசுகிறது.

“வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாக்கும் இந்தச் சிரிப்பு” என்று சிரிப்பை மேன்மைப்படுத்தினார் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன். ஆனால், நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கும் சிரிப்பு உணர்ச்சி உண்டு, ஆனால் அவற்றின் நீண்ட முகவாகு காரணமாக அவை சிரிப்பது தெரிவதில்லை என்று சில ஆய்வாளர்கள் கருதுவதாக அதே கட்டுரையில் ஹெக்டே சுட்டிக்காட்டுகிறார். மனிதர்களாகிய நமக்கு சிரிக்கத் தயக்கம் என்ன….

எழுத்தாளர் சுஜாதா அநியாயத்திற்கு ஹாஸ்ய உணர்ச்சி கொண்டிருந்தவர் என்பதை அவரது எழுத்துக்களில் சாதாரணமாகப் பார்க்க முடியும். அவர் வார இதழொன்றில் கேள்விகளுக்குப் பதில் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் “எழுதுவதை எப்போது நிறுத்துவீர்கள்?” என குதர்க்கமாக வந்த கேள்விக்கு அவர் அளித்த பதில்: “பெரும்பாலும் இரவு பத்தரை மணி. அதற்குமேல் விழித்திருந்து எழுத முடிவதில்லை”.

வாசகரோ, பத்திரிகையாளரோ யாரும் எளிதில் சந்தித்து நேர்காணல் செய்துவிட முடியாது என்று சொல்லப்பட்ட புகழ்வாய்ந்த எழுத்தாளர் ஆர் கே நாராயண் பெங்களூருவில் வசித்துவந்தபோது, சுஜாதா அவரை சந்திக்கச் சென்றிருக்கிறார். பல தடைகளை எதிர்கொண்டு முன்னேறி அவரோடு இரண்டு மணி நேரத்திற்கு உட்கார்ந்து பேசியுமிருக்கிறார். ஒரு கட்டத்தில், “ரொம்ப சந்தோஷம் …அப்ப, உத்தரவு வாங்கி கொள்கிறேன்” என்று எழுந்தாராம் சுஜாதா. அலட்டிக் கொள்ளாமல் காதுகளில் இருந்து பஞ்சை எடுத்து வெளியே போட்டுவிட்டு, “போய்வாருங்கள்” என்றாராம் ஆர் கே நாராயண்!

அப்புசாமி-சீதாப்பாட்டி (சீதே கெயவி !) பாத்திரங்களை பாக்கியம் ராமசாமி (ஜரா சுந்தரேசன்) படைக்கவும், அதற்கு உயிர்கொடுத்த ஓவியர் ஜெயராஜ் தமது லெட்டர் பேடில் அந்த இருவர் ஓவியத்தையே பதிந்து கொண்டார் என்று சொல்லப்பட்டதுண்டு. பாரதியார் நூற்றாண்டை ஒட்டி எழுதப்பட்ட கதையில், மகாகவி வாழ்ந்த வீட்டைக் காட்சிப்பொருளாக்கிக் காசு பண்ணத்துடிக்கும் அப்புசாமி அண்ட் கம்பெனி (ரசகுண்டு, பீமாராவ்) எங்கிருந்தோ யாரோ பயன்படுத்திய பழம்பொருள்கள் பலவற்றை மூர்மார்கெட் உள்பட தேடிச்சென்று வாங்கி வந்து நிரப்பி தடாலடி அடித்து, “இது பாரதி உட்கார்ந்த நாற்காலி, இது பாரதி பயன்படுத்திய மேசை…” என்றெல்லாம் அட்டைகள் எழுதி வைத்து முடித்திருக்கும். முதல்நாள் இரவு அங்கே நுழையும் சீதாப்பாட்டி, அப்புசாமியின் தொண்டுப்பணியைத் தனது ஒயிலான ஆங்கிலத்தில் பாராட்டிவிட்டுச் செல்வார். மறுநாள் காலை அமைச்சர் திறந்துவைத்துப் பார்த்துக் கொண்டே வருகையில் ஓரிடத்தில் வைக்கப்பட்ட பொருளைப் பார்த்ததும் பதறிப்போய் கோபத்தோடு என்ன இதெல்லாம் என்று கத்துவார். அவர் கை காட்டும் இடத்தில் ஒரு கலர் டிவி பெட்டியை வைத்து, பாரதியார் பார்த்த தொலைக்காட்சிப்பெட்டி என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும். வேறு யார், சீதே கெயவியின் வேலைதான்…மாட்டிக் கொள்பவரோ அப்புசாமி!

வால்ட் டிஸ்னியின் டாம் அண்ட் ஜெர்ரி தொடர்களைப் பிடிக்காத மனிதர் யார் இருப்பார் ! அந்த எலிக்குட்டியின் அட்டகாசத்தால் ஒவ்வொருமுறையும் தலையில் கையை வைத்துக்கொண்டு ஏமாந்து நிற்கும் டாம் எத்தனை பெரிய குறியீட்டுப் பாத்திரம்! ஒரு எபிசோடில், ஜெர்ரிக்கு அஞ்சலில் வந்துசேரும் புத்தகத்தை எடுத்து வைத்துப் படிக்கத் தொடங்கும் டாம் பெரிய எரிச்சல் அடையும். தான் வெவ்வேறு முறையில் ஜெர்ரியுடன் மோதி ஏமாந்த கதைகள் பலவற்றை எழுதி ஒரு புத்தகம் ஆக்கிவிட்டிருக்கும் ஜெர்ரி. கோபத்தோடு அதை அடிக்கலாம் என்று டாம் எழுந்திருக்கையில், தனக்கு வந்திருக்கும் ஒரு காசோலையுடன் ஜெர்ரி, டாம் எதிரே வந்து நிற்கும். இணைப்புக் கடிதத்தில் புத்தகத்திற்கான ராயல்டியில் ஒரு பகுதி டாமுக்குச் சேரும் என்று எழுதப்பட்டிருக்கும். அப்புறமென்ன, காசுதான் வருகிறதல்லவா, எந்தப்புத்தகத்தைப் பார்த்து வெகுண்டதோ, அதே புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு யாரைப் பற்றியோ படிக்கிறதுமாதிரி விழுந்து விழுந்து சிரித்தபடி படித்துக் கொண்டிருக்கும் டாம்!

பொருளில்லாமல் சிரிக்க வேண்டாம். சிரிக்காமல் இருப்பதிலும் பொருளில்லை. உன்னால் சிரிக்க முடியாவிட்டால் என்ன, உலகம் உன்னைப்பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விடும் என்றார் அறிஞர் ஒருவர். புகைப்படக் கலைஞர்கள் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்று கெஞ்சிக் கேட்கும் நிலையில்தான் சமூகம் தீவிரமான முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. உற்சாகமிக்க மனமிருந்தால் நோய்கள் விரைந்து குணமாகும் என்று மறைந்த மருத்துவர் குமாரசாமி, பிரபல மருத்துவர் கே வி திருவேங்கடம் அவர்களோடு இணைந்து எழுதிய ஆய்வுக்கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். கண்ணீர் ததும்பும் வாழ்க்கையைக் கூட கண்ணில் நீர் வர சிரித்து மாற்றிக் கொள்வோம்.

நகைச்சுவை நிறைக்கட்டும் நம் வாழ்க்கைத் தடங்களை..

***********

நன்றி: வண்ணக்கதிர் (பிப்ரவரி 26, 2017 ஞாயிறு தீக்கதிர் நாளிதழ் இணைப்பு)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.