குறளின் கதிர்களாய்…(157)
–செண்பக ஜெகதீசன்
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். (திருக்குறள் -559: கொடுங்கோன்மை)
புதுக் கவிதையில்…
முறையானவற்றை விட்டு மன்னன்
முறையற்றவற்றைச் செய்தால்,
பெய்யும் காலத்திலும்
மழை
பெய்யாமல் போய்விடும்…!
குறும்பாவில்…
முறையற்ற மன்னர்தம் ஆட்சியில்,
நாட்டில்
வராமல் போய்விடும் வான்மழை…!
மரபுக் கவிதையில்…
நாட்டில் மக்கள் நலம்பெறவே
-நல்ல திட்டம் வகுக்காமல்,
வாட்டி வதைக்கும் கொடுங்கோலர்
-வேதனை மிக்க ஆட்சியிலே,
வாட்டம் போக்கக் காலத்திலே
-வந்து பெய்யும் மழையதுவும்,
நாட்டுப் பக்கம் பெய்யாமல்
-நலிய விட்டுப் போய்விடுமே…!
லிமரைக்கூ…
முறையாய் ஆட்சியதைச் செய்யாமல்,
கொடுங்கோலாட்சி செய்வோர் நாட்டிலெங்கும்
வரும்மழையும் போய்விடும் பெய்யாமல்…!
கிராமிய பாணியில்…
கூடாது கூடாது
கொடுங்கோலாட்சி கூடாது…
மக்களுக்குச்
செய்யவேண்டியதச் செய்யாம
செய்யக்கூடாததச் செய்வோர்
செய்யிற ஆட்சியால பலனில்ல…
அவரால
வாற காலத்தில வாற மழையும்
வராமலே வறண்டு போயிடுமே,
மக்கள்
வாழ்க்க இருண்டு போயிடுமே…
அதால,
கூடாது கூடாது
கொடுங்கோலாட்சி கூடாது…!