கண் விழிக்கும் நாளெல்லாம் நீல கண்டர் சிவராத்திரி….கேசவ் தாமத்திற்க்கு மன்னிக்கவும்….இன்று விடிகாலைதான் “மஸ்கெட்டிலிருந்து’’ அடியேன் வந்தேன்….விடிய விடிய கண்விழித்து விமானப் பயணம்….!

ஆட வருகவே….
———————–

kesav

முனிவர்கள் கூடி மெளனம் காத்திட
தனி ஆவர்த்தனம் நந்தி முழங்கிட
பனி மலை வாசன் பார்வதி யுடனிம்
மனிதனில் தாண்டவம் ஆட வருகவே….(1)

முகார விந்தம் முறுவல் பூத்திட
அகார,உகார,மகார அம்பிகை
அகோர மூர்த்தியை அணைத்து என்மன
விஹாரில் தாண்டவம் ஆட வருகவே….(2)

துந்துபி முழங்க டமருகம் ஒலிக்க
கந்தன் கணபதி கைக்கட்டி நிற்க
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியென்
சிந்தையில் தாண்டவம் ஆட வருகவே….(3)

மாலவன் சங்க நாதம் ஊதிட
நாலு முகன் நல்வேதம் ஓதிட
ஞால அன்னையும் அப்பனும் எந்தன்
மூளையில் தாண்டவம் ஆட வருகவே….(4)

யாழில் பாரதி ஏழிசை சுரக்க
வாழிய கோஷம் வைதேஹி போட
ஊழி முதல்வனும் உமையும் எந்தன்
தோளில் தாண்டவம் ஆட வருகவே….(5)

பாக்கு வெற்றிலைப் போன்று இணைந்த
தேக்கு மேனியரும் தளிர் இடையாளும்
பாக்கள் பூக்களாய்ப் புலர்ந்திட எந்தன்
வாக்கில் தாண்டவம் ஆட வருகவே….(6)

பாஸியும் நீருமாய்ப் பிணைந்த இருவரும்
தூசி தோஷங்கள் தொல்லை இராது
வாசிவாசியென சுவாசிக்க எந்தன்
நாசியில் தாண்டவம் ஆட வருகவே….(7)

தென்னாடுடையான் தன்தேவியுடன்
பெண்ணாடுடலொடு பாவியேன் நானுனை
மன்றாடுதலால் மனமிசைந்(து) எந்தன்
முன்னால் தாண்டவம் ஆட வருகவே….(8)

வேத புராண இதிகாசங்கள்
பாதச் சிலம்பில் பதிந்திடவே திரு
வாதிரையான் தன் வாமியுடன் என்
காதில் தாண்டவம் ஆட வருகவே….(9)

வாடிய பயிரென் வாழ்க்கையிலே நீர்
ஆடிய பாதராய் அழகுமையாளை
சூடிய வண்ணம் சேர்ந்தென் முன்னால்
ஜோடியாய் தாண்டவம் ஆட வருகவே….(10)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *