இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 35
மீனாட்சி பாலகணேஷ்
திருநீறும் திருவைந்தெழுத்தும்
சென்ற அத்தியாயம் வரை பெரும்பாலும் புலவர்கள் கற்பனை செய்து எழுதிய கதைகளையும், தொன்மங்களையும் பார்த்து மகிழ்ந்து வந்தோம்.
வித்தியாசமாக இப்போது, பிள்ளைத்தமிழ்ப் புலவர்கள் எடுத்தாளும் மற்ற செய்திகளையும் காணலாமே!
பிள்ளைத்தமிழின் காப்புப் பருவத்தினை எடுத்துக்கொண்டோமானால், குழந்தையைக் காப்பதற்காக முறைப்படி திருமாலிடம் துவங்கி, விநாயகர், சிவபெருமான், பார்வதி, அலைமகள், கலைமகள், பிரம்மா, இந்திரன், சப்தமாதர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் எனப் பலப்பல தெய்வங்களை விளிப்பதனைக் காணலாம். இவை பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்களின் காப்புப்பருவத்தின் பொதுவான அமைப்பாகும்.
முருகன் மீதான சில பிள்ளைத்தமிழ் நூல்களில் சிறப்பாகச் சைவசமயச் சின்னங்களாகிய திருநீற்றையும், ‘நமசிவாய,’ எனும் ஐந்தெழுத்தினையும், உருத்திராக்கத்தினையும் விளித்துக் குமரனாகிய குழந்தையைக் காக்கவேண்டுவர் புலவர்கள். திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழை இயற்றிய சிதம்பர அடிகளார் இவ்வாறு பாடியுள்ள இரு பாடல்களை இவ்வத்தியாயத்தில் காணலாமா?
கந்தசாமி எனப்போற்றப்படும் முருகப்பிரான் உறையும் திருப்போரூர் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அழகிய ஊராகும். இவ்விடம் சென்னையிலிருந்து 40 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. பிரணவ மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு. முருகன் அசுரர்களுடன் நிகழ்த்தியபோரில் கடற்போரானது திருச்செந்தூரிலும், தரைப்போரானது திருப்பரங்குன்றத்திலும், ஆகாயப்போரானது திருப்போரூரிலும் நிகழ்ந்தது எனப் புராணங்கள் கூறும். தற்காலத்தைப்போலவே புராணகாலத்திலும் முப்படைகளைக் கொண்டு போரிட்டனர் என்பது அறியத்தக்கது. சிதம்பர அடிகளார் திருப்போரூர் சந்நிதிமுறை எனும் நூலை இயற்றியுள்ளார். இதனுள் பிள்ளைத்தமிழ் முதலாக 36 தலைப்புகளில் பாடல்கள் இயற்றியுள்ளார். அன்னை மீனாட்சியின் மீதும் மீனாட்சியம்மை கலிவெண்பா எனும் நூலைப் பாடியுள்ளார்.
சைவர்களுக்கு, திருநீறு இன்றியமையாத ஒரு சமயச் சின்னமாகும். இதன் பெருமைகளும் கொஞ்சநஞ்சமல்ல. பாடலின் அமைப்பும் அதியற்புதமாகவுள்ளது. முதலிரு பகுதிகள் முருகனின் சிறப்பினையும், கடையிரு பகுதிகள் திருநீற்றின் சிறப்பினையும் அழகுற விளக்குகின்றன.
முதற்கண் திருநீற்றின் சிறப்புகளைக் காணலாம்: ஆதிபகவன் எனப்படும் இறைவனின் மெய்யறிவு வடிவாகிய நெருப்பில் தோன்றியது திருநீறு. அதுவும் இறைவனைப்போன்றே என்றுமுள்ளது; நித்தியமானது. திருநீறு சிவபெருமானின் திருவுருவாகக் கொள்ளப்படும்; அச்சிவபெருமானே மகாபற்பமாவார்- ஆகவே ‘ஞானவடி அழலிற் பூத்து,’ எனப்பட்டதாம். அதுமட்டுமின்றி, சிவபிரான் என்றுமுள்ளவராதலால் அவரைப்போன்று அவருடைய திருவடிவம் ஆகிய திருநீறும் என்றும் (நித்தியமாய்) உள்ளது. தன்னை அணிந்தவர்களுக்கு வேண்டியதனைத்தையும் தருவது. இறைவன் திருவருளால் பாற்கடற்கண் தோன்றிய தேவாமிர்தமானது தன்னை உண்டவர்களுக்கு, நரை, திரை, மூப்பு ஆகியவற்றை நீக்குவதனைப்போல, திருநீறும் தன்னைச் சிறிது வாயிலிட்டு உண்பவர்களுக்கு நோய்தீர்க்கும் அமுதமென விளங்குவது. ஆகவே ‘அருந்தினோர்கட்கு ஆரமுதாய்’ எனக்கூறப்பட்டது. இன்றும் பல இடங்களில் திருநீறு மருந்தாக உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது. விதிவழியே செல்லுகின்ற ஆன்மாக்களுடன் ஒன்றிணைந்த ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நீக்கியருளும் தன்மைகொண்டது. திருநீற்றினைக் குழைத்து மீன்று பட்டைகளாக நெற்றி, மார்பு, வயிறு, கைகள் முதலானவற்றில் அணிவது வழக்கம். இது ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்கலையும் நீக்கியருளும் தன்மை கொண்டதாகையால் ‘நீதியறியும் பசுமலத்தை நீக்கும் ஒரு நற்குறி’ எனப்போற்றப்படுகிறது.
ஆதி பகவன் ஞானவடி
அழலிற் பூத்து நித்தியமாய்
அணிந்தோர் தமக்கு வசிகரமாய்
அருந்தி னோர்கட் காரமுதாய்
நீதி யறியும் பசுமலத்தை
நீக்கு மொருநற் குறிகாட்டி
நிகழ்பே ரின்பக் கடலூட்டி
நின்ற புகழ்வெண் திருநீறே.
இந்தத் திருநீற்றினை அணிந்த குழந்தை முருகனை அது காக்க வேண்டும் எனப் புலவர் வேண்டுகிறார். அவன் சாமானியக் குழந்தையா என்ன?
‘ஒளிபொருந்திய மகரக்குண்டலங்களை அணிந்த அழகான தோள்கள் பன்னிரண்டினை உடையவன் அவன். சுருதி எனப்படுவதான வேதநூல்கள் (மறைகள்) முழங்கும் தண்டைகளை அணிந்த தனது இரு திருவடிகளையும் எனது தலையில் சூட்டியவன்; ‘மாது’ எனும் சிறப்பு அடைமொழி பெற்ற திருமகள் உறைகின்ற திருப்போரூரின் வாழ்வு அவனே!’ என்றும் கூறுகிறார். செல்வவளம் தழைத்து விளங்குவதால் திருமகளாகிய ‘மாது உறையும் சமரபுரி’ எனப்பட்டது. தேவர்களின் சிறந்த மணியாக விளங்குபவன் அவன். அழகான வேலினை ஏந்திய கையன்; மயிலில் ஏறி வருபவன். இவனை இத்திருநீறு ஈண்டுவந்து காத்தருள வேண்டும்.
முழுமையான பாடல் இதோ:
சோதி மகரக் குழைசெறிசுந்
தரத்தோ ளீரா றுடையானைச்
சுருதி யிரைக்குந் தண்டையந்தாள்
துணையென் முடியிற் பொறித்தானை
மாது வளருஞ் சமரபுரி
வாழ்வை வானோர் சிகாமணியை
வடிவே லரசை மயிலரசை
வந்து புறங்காத் தளித்திடுமால்
ஆதி பகவன் ஞானவடி
அழலிற் பூத்து நித்தியமாய்
அணிந்தோர் தமக்கு வசிகரமாய்
அருந்தி னோர்கட் காரமுதாய்
நீதி யறியும் பசுமலத்தை
நீக்கு மொருநற் குறிகாட்டி
நிகழ்பே ரின்பக் கடலூட்டி
நின்ற புகழ்வெண் திருநீறே.
(திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- திருநீறு- சிதம்பர அடிகளார்)
*****
அடுத்து சிதம்பர அடிகளார் திரு ஐந்தெழுத்தின் பெருமையினைப் போற்றுகிறார். மணிமந்திர ஔடதங்கள் என்பன சிவகண்மணி எனப்படும் உருத்திராட்சம், ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து, திருநீறு ஆகியனவேயாகும். இவற்றுள் திருவைந்தெழுத்தின் பெருமை கூறப்படுகின்றது.
வாசம்கமழும் குராமலர்களையணிந்த வள்ளியம்மையின் நாயகன் குமரன்; கார்த்திகைப் பெண்டிரின் குடம்போலும் கொங்கைகளிலிருந்து பெருகிய பாற்கடலை உண்டு வயிறு நிரம்பியவன். அருணன் போல்பவன் இந்தக் குமரப்பெருமான்; இனிமையான சோலைகள் நிறைந்து பொலியும் சமரபுரி (போர் + ஊர்= போரூர்) எனும் திருப்போரூரில் நின்றுலவும் குமரனைக் காக்க வேண்டும்.
யார் காக்க வேண்டும்? திருவைந்தெழுத்து காக்கவேண்டும்! அது இக்குமரனின் தகப்பனாகிய சிவபெருமானின் பெருமைமிகு பெயராகும். தனயனை அதுவே காக்கும். அந்தத் திருவைந்தெழுத்தின் பெருமைகளைக் கூறப்புகுகிறார் அடிகளார்.
எண்ணுவதற்கு அரியதான பல உயிர்களும் (பாசம்) பந்தம் எனும் கரிய கடலைக்கடந்து கரையேற உதவும் மரக்கலமாகத் திகழுவதே இந்த ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து. திருவைந்தெழுத்தைக் கூறி பிறவிக்கடலை எளிதாகக் கடந்துவிடலாம் என்பது இதனால் பெறப்பட்டது. அன்பர்களாகிய அடியார்கள் தமது உள்ளங்களில் இவ்வைந்தெழுத்தை இருத்தி அதனையே ஐயன் திருவடிவாகக்கண்டு தியானம் செய்வார்கள். ‘உண்மைவிளக்கம்’ எனும் நூல் இதனை மிக நுட்பமாகக் கூறியருளும். இதனையே ‘அன்பர் உட்காட்சி’ என்கிறார். அரியமறைகளாகிய வேதங்களும் அறிவிக்க இயலாத அழகான பரமசுகப் பேற்றாயமைந்ததும் இவ்வைந்தெழுத்து ஒன்றே! அருமையான இறைவனுக்கு மிகவும் பொருத்தமான பெயர் இதுவே! சிவனுடைய பல பெயர்களில் மிகச்சிறப்பு வாய்ந்தது இப்பெயரே! அதனால் திருவைந்தெழுத்தாகிய ‘நமசிவாய’ என்பது ‘அரிய சிவன் உரிய பெயர்’ எனப்படுகிறது.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருவைந்தெழுத்தினைப்போற்றுவோமாக: ஏனெனில் இது நமது குமரனைக் காப்பதற்காகவே.
கருதரி பலவுயிர்கள் பந்தனைக் கார்க்கடற்
கரையிவர வருகலனை அன்பருட் காட்சியை
அருமறையும் அறிவரிய அஞ்சுகப் பேற்றினை
அரியசிவ நுரியபெயர் ஐந்தினைப் போற்றுதும்
குரவுகமழ் குறவனிதை கொண்கனைக் கார்த்திகை
குடமுலையின் அமுதகடல் உண்டகத் தேக்கனைத்
தருணகும ரனையினிய தண்டலைச் சீர்ப்பொலி
சமரபுரி தனில்நிலவு கந்தனைக் காக்கவே.
(இவர- ஏற; தேக்கம்- நிறைவு)
(திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- திருவைந்தெழுத்து- சிதம்பர அடிகளார்)
இதுபோலும் சமயச் சின்னங்களையும் சிறப்பான தொண்டர்கள், மற்றும் தெய்வங்களையும் காப்புப்பருவத்தில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் போற்றியுள்ளன. தொடர்ந்து சிலவற்றை வரும் அத்தியாயங்களில் வெவ்வேறு நூல்களினின்றும் கண்டு மகிழ்வோம்.
பிள்ளைத்தமிழ் நூல்கள், பிள்ளைப்பருவத்தின் இனிமையை மட்டுமே பாடாமல், அப்பிள்ளையைச் சார்ந்த சமய ஒழுக்கங்களையும், வழக்குகளையும் போற்றி உரைப்பது இயற்றிய புலவர்களின் பக்திநிலைக்கும், புலமைக்கும் சான்றான பதிவுகளாகவும் அமைந்துள்ளன.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}
********************************