’’ஆலால கண்டர்(ஈசர்) அருமை மைத்துனர்,
ஆலா பனைசெய்யும் ஆண்டவர், -கோலோகர்,
மேலோட் டவாசிப்பு(வைகுண்ட வாசிப்பு) வாலாட்டும் மாட்டுக்கு:
மேலோட் டமாய்பார்க்க மேய்ப்பு’’….கிரேசி மோகன்…!
Month: June 2017
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் மின்னுந்துவிசை விண்சிமிழ் சுமந்த அசுர ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
++++++++++++++++
நிலவைச் சுற்றிய சந்திரயான் -1
உலவிச் சென்று நாசா
துணைக்கோளுடன் வடதுருவத்தில்
ஒளிமறைவுக் குழியிலே
பனிப்படிவு கண்டது !
நீரா அல்லது வாயுவா என்று
பாரதமும் நாசாவும் ஆராயும் ஒன்றாக !
சந்திரனில் சின்னம் வைத்தது
இந்திய மூவர்ணக் கொடி !
யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்
பந்தய மில்லை !
விந்தை புரிந்தது இந்தியா !
சந்திராயன் -2
2018 ஆண்டில் மூன்று அனுப்பும்
விண்ணுளவி , தளவுளவி, தளவூர்தி.
பாரத விண்வெளித் தீரர் இயக்கும்
சீரான விண்கப்பல் 2024 இல்
தாரணி சுற்றி வரும் !
செவ்வாய்க் கோள் செல்ல
சந்திரனில் தங்குமிடம் அமைக்கும்
திட்ட முள்ளது !
பூதப்பெரும் ராக்கெட் ஏவி சந்தரயான் -2
நிலவைச் சுற்றித்
தளவுளவி நிலவில் இறங்க,
தளவூர்தி 2018 இல்
தவழ்ந்து சென்று தளம் ஆயும்
திட்டமும் உள்ளது.+++++++++++
ISRO ROCKET GSLV MK III TESTING
[June 5, 2017]
எதிர்கால நீண்டதூரப் பெரும்பளு தூக்கிச் செல்ல எங்களது திட்டம் ஜியெஸ்எல்வி -3 [GSLV MK III (Geosynchronous Satellite Launch Vehicle – Mark III)] ராக்கெட்டைப் பயன்படுத்துவதே. மேலும் முதன்மையாகப் பளு குன்றிய மின்னுந்து விசைத் துணைக்கோள்களை ஏவிடத் துவங்கியுள்ளோம். இந்த பூதப்பெரும் ராக்கெட் முழுமையாக இந்தியப் பொறியியல் துறை வல்லுநரால் டிசைன் செய்யப்பட்டு கட்டுமானம் செய்யப்பட்டது. இந்த ராக்கெட்டில் எந்த அன்னிய நாட்டுச் சாதனமும் இல்லை; பின்பற்றப்பட்ட தொழில் நுணுக்கமும் இல்லை.
கிரண் குமார் [இந்திய விண்வெளி ஆய்வக அதிபர்]
ஆழ விண்வெளி ஆய்வுகளுக்கு அனுப்பும் பளுமிக்கத் துணைக்கோள்கள் இப்போது நிதி சுருங்கிய மின்னுந்து விசையால் இயக்கப்படப் போகின்றன. மின்னுந்து விசை ஏற்பாடுகள் மெதுவான வேகத்தில், வெகுதூரம் செல்லக் குறைவான உந்துவிசைத் திரவத்துடன் [Propellants] பயணம் செய்ய பூதப்பெரும் ராக்கெட்டில் பயன்படுகின்றன.
எம். என். வகியா [டாடா அடிப்படை ஆய்வக விஞ்ஞானி, மொம்பை]
GSLV MK III ROCKET READY FOR LAUNCHING
இந்திய விண்வெளி ஆய்வகம் முதன்முதல் ஏவிய பூதப்பெரும் ராக்கெட்.
2017 ஜூன் 5 ஆம் தேதி இந்தியாவின் பேராற்றல் படைத்த பூதப்பெரும் ராக்கெட் முதன்முதல் வெற்றிகரமாக ஏவப்பட்டு, மனிதனோடு பூமியைச் சுற்றிவரப் போகும் விண்வெளிப் பயணத்துக்கு அடுத்த ஓர் மைல் கல் நாட்டியது. 140 அடி [43 மீடர்] உயரமும், 640 டன் எடையுள்ள அந்த அசுர வடிவ ராக்கெட் தென்னிந்தியாவில் உள்ள ஶ்ரீகரி கோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. அந்த ராக்கெட்டில் உள்ள பேராற்றல் படைத்த எஞ்சின், இந்தியப் பொறியியல் நிபுணர் டிசைன் செய்துப் பல்லாண்டுகளாய் விருத்தி செய்தது. இனிமேல் இந்தியா ஈரோப்பிய எஞ்சின்களை வாங்க வேண்டியதில்லை. ஏவப்பட்ட அந்த ராக்கெட் மூன்று டன் பளுவுள்ள துணைக்கோள் ஒன்றை முதன்முறைத் தூக்கிச் சென்று, அதி உயரச் சுற்றுப்பாதையில் விட்டது. இதற்கு முன் 2 டன் பளுவுள்ள துணைக் கோள்தான் தூக்கிச் செல்லப்பட்டுள்ளது.
விண்வெளிப் போட்டியில் 2014 ஆண்டில், குறைந்த செலவில், இந்தியா சைனாவுக்கு முன்பு செவ்வாய்க் கோளை நெருங்கிச் சுற்றியதற்குப் பிறகு இந்த பூதப்பெரும் ராக்கெட் சோதனை அடுத்த பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா தனது நாசா மாவன் மார்ஸ் [NASA’s MAVEN MARS] பயணத்துக்கு 671 மில்லியன் டாலர் செலவழித்தது. செந்நிறக்கோள் செவ்வாய் செல்ல இந்தியா செலவழித்தது 73 மில்லியன் டாலர். அடுத்து, 4 டன் பளுச் சுமக்கும் தகுதியுள்ள இந்த பூதப்பெரும் ராக்கெட் மூலம், துணைக்கோள்கள் பூதக்கோள் வியாழனுக்கும், வெள்ளிக் கோளுக்கும் அனுப்பும் திட்டங்கள் இஸ்ரோ இந்திய விண்வெளித் தேடல் ஆணை யகத்தின் குறிக்கோளாய் உள்ளன. இம்முறை தூக்கிச் சென்ற மின்னுந்து விசைத் துணைக்கோள் மூன்று விண்வெளி விமானிகள் அமர்ந்து செல்லும் தகுதி உடையது. ஆனால் இன்னும் 7 ஆண்டுகள் கடந்து 2024 ஆண்டில்தான், மனிதர் இயக்கிப் பூமியைச் சுற்றும் விண்ணுளவி தயாராகும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.


“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”
டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, 2008]

இரண்டாம் நிலவுப் பயணத்துக்கு சந்திரயான் -2 விண்ணூர்தி தயாரிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பயணம் அடுத்த ஆண்டுக்குத் [2018 முதல் காலாண்டு] திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரனை நோக்கிப் போகும் சந்தரயான் -2 விண்ணூர்தி, [Mother Ship] கட்டுப்பாடுடன் மெதுவாய் நிலவில் தளவுளவியை இறக்க ஓர் எஞ்சின் இப்போது விருத்தியாகி வருகிறது. அதற்காகச் செயற்கை முறையில் நிலவுக்குழிகள் [Moon Craters] உள்ள சந்திரச் சூழ்வெளிப் போலி அமைப்பை விஞ்ஞானிகள் ஏற்படுத்தி, அந்த அரங்கில் தளவுளவி இறக்கம், மீள் ஏற்றம் [Lander Descent & Ascent ] சோதிக்கப்படும். மேலும் தளவூர்தி [Rover] பிரிந்து நிலவில் இயங்குவதும் சோதிக்கப்படும்.
கிரண் குமார் [இந்திய விண்வெளி ஆய்வு ஆணையக அதிபர்]

ரஷ்யாவின் கதிரியக்க ஏகமூலம் தயாரிக்கும் அணுவியல் கூடம் [JSC Isotope Sources] சந்திரயான் -2 விண்ணூர்தியில் இயங்கப் போகும், முக்கிய கியூரியம் -244 [Curium -244 (Cm-244)] கதிர்வீச்சு உலோகத்தை அனுப்பியுள்ளது. அது தளவூர்தி நிலவின் மண், பாறை ஆகியவற்றின் இரசாயனக் கலவைகளை அறிவிக்க உதவும் கருவிக்கு [Alpha Proton X-Ray Spectrometer] உடனிருக்கும்.
ரோஸாட்டம் [ Rosatom State Atomic Energy Corporation]
தளவுளவியில் உள்ள புதிய அமைப்புச் சோதிப்புகள் திட்டமிடப் பட்டன. தளவுளவி உணர்வுக் கருவிகள் இயக்கச் சோதனைகள் முடிந்தன. நிலவுத் தளப் போலிக்குழிகள் [Lunar Artificial Craters] கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டுப் பயிற்சிகள் முடிந்தன.

[Click to Enlarge]
தளவுளவியை மெதுவாய் இறக்கப் பயிலும் நிலவுத் தளப்பரப்புச் சோதனைச் சாதனம் [Lunar Terrain Test Facility for Lander Drop] தயாராக உள்ளது. மற்றும் தளவூர்தி நகர்ச்சிச் சோதிப்புகளும் [Rover Mobility Tests] தயாராக உள்ளன.
ஜித்தேந்திர சிங், விண்வெளி ஆய்வு உதவி மந்திரி
சிக்கலான GSLV இந்திய ராக்கெட் ஏவல்களில் வெற்றி எதிர்பார்ப்பு 50% மட்டுமே. இந்தியா இந்த முற்போக்கு தொழில் நுணுக்கத்தை அறிந்து பளுவான விண்வெளிச் சாதனங்களைச் சுய முயற்சியில் சுமந்து செல்ல விரும்பியது. அந்த முயற்சியில் தற்போதுதான் வெற்றி ஏற்பட்டுள்ளது.
அஜய் லேலி (Space Expert, Institute of Defense & Security Analysis, New Delhi)

[Click to Enlarge]
2018 ஆண்டில் மீண்டும் நிலவை நோக்கிப் போகும் சந்திரயான் -2 விண்ணூர்தி
2008 ஆம் ஆண்டு நவம்பர் 12 இல் சந்திரான் -1 விண்ணூர்தி நிலவை நெருங்கி வெற்றிகரமாகச் சுற்றி முதன்முதல் பனித்தள வடிவில் நீர் இருப்பதை எடுத்துக் காட்டியது. அது செய்ய முடியாத பணிகளைச் செய்து முடிக்க இப்போது சந்திரயான் -2 தயாராகி வருகிறது. சந்திரயான் -2 நிலவுத் தேடல் பயிற்சிகளில் தன்னுடன் நிலவில் மெதுவாய் இறங்கும் ஓர் தளவுளவியும் [Lunar Lander], அதிலிருந்து நிலவுத் தளப்பரப்பில் தவழ்ந்து சோதிக்கச் செல்லும் ஒரு தளவூர்தியும் [Lunar Rover] இணைக்கப் படும். ஆகவே சந்திரயான் -2 முதல் சந்திரயான் -1 விடப் பெரும் பளுவைத் தூக்கிச் செல்லும், பூத ராக்கெட் தயாரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் முதன்முதல் இந்திய விண்வெளி ஆய்வகம் நிலவில் மெதுவாய் இறங்கும் தளவுளவிப் பொறிநுணுக்கப் பயிற்சியில் வெற்றி பெற வேண்டும். மேலும் இறங்கிய தளவூர்தியிலிருந்து, நகர்ந்து செல்லும் தளவுளவி சோதிக்கப்பட வேண்டும். மேலும் சிறப்பாக, தளவுளவி நிலவின் தளத்தை ஆழ்ந்து சோதிக்க மண் மாதிரிகள் அனுப்புவதை, சந்திரயான் -2 மீளூர்தி [Return Trip] எடுத்துக் கொண்டு மீளவேண்டும். சவாலான இப்பணிகள் வெற்றி பெறப் பல்வேறு பயிற்சிகள் செய்து துணிவும், மன அழுத்தமும் வேண்டும். 2013 ஆம் ஆண்டில் ஏவப்பட வேண்டிய சந்திரயான் -2, ஐந்து வருடங்கள் தாமதமாகி 2018 ஆண்டு துவக்க மாதங்களில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வகம் அறிவித்துள்ளது. சந்திரயான் -2 திட்டத்துக்குத் தேவைப்படும் கனப்பளு தூக்கும் ஏவுகணை தயாரிப்பில் தாமதமானது முதல் காரணம். அடுத்துச் செவ்வாய்க்கோள் சுற்றும் மங்கல்யான் திட்டம் முதன்மை இடம் பெற்றது இரண்டாம் காரணம்.


2017 பிப்ரவரி 15 இல் கனப்பளு தூக்கும் ஒரே ஏவுகணையில் 104 துணைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி அனுபவம் பெற்றுள்ளது. சந்திரயான் -2 விண்வெளித் திட்டத்தில் நிலவுக்குச் செல்லும் ஒரு சுற்று விண்ணூர்தி, ஒரு தளவுளவி, ஒரு தளவூர்தி [One Orbiter, One Lander, One Rover] ஆகிய மூன்று விண்வெளிச் சாதனங்கள் கொண்டிருக்கும். சந்திரயான் -2 விண்ணூர்தி நிலவுக்கு 60 மைல் [100 கி.மீ] உயரத்தில் பறக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. விண்ணூர்தியிலிருந்து பிரித்து தளவுளவி மெதுவாய் இறக்கும் சிறிய எதிர்ப்பு ஏவுகணைகள் [Retro Rockets] நிலவுப் போலிக்குழிகள் [Lunar Craters] அமைக்கப்பட்டுச் சோதிக்கப் படுகின்றன. தளவூர்தியைச் சுமந்து கொண்டு தளவுளவி மெதுவாய் இறங்கி நிலவின் தளத்தில் நிலையாக அமரும். பிறகு தளவூர்தி தானாகப் பிரிந்து தவழ்ந்து சென்று தளப்பரப்பு மண், பாறைகளைச் சோதிக்கும். இந்தியப் பெரும் சாதனையாகக் கருதப்படும் சந்திரயான் -2 நிலவுத் திட்டத்துக்கு ஆகப் போகும் நிதிச் செலவு : சுமார் 91 மில்லியன் அமெரிக்க டாலர் [450 கோடி ரூபாய்] 2017 நாணய மதிப்பு. 2018 இல் சந்திரனில் தவழ்ந்து செல்லும் இந்தியத் தளவுளவி உலக நாடுகளில் பெரும் பரபரப்பூட்டும் என்பதில் ஐயமில்லை..
“முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை ! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் ! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் !”
டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).

“நிலவின் களத்தில் விஞ்ஞானச் செல்வக் களஞ்சியம் குவிந்துள்ளது. மேலும் சில வினாக்களுக்கு இன்னும் விடை தேட வேண்டியுள்ளது. உதாரணமாகப் பூமியிலிருந்து நேராக 41% பகுதி நிலவைக் காண முடியாது. சந்திரயான்-1 துணைக்கோள் செய்து வரும் சோதனைகள் நிலவின் விஞ்ஞானத் தகவலை மேம்பட உதவும்.”
எம். வொய். எஸ். பிரஸாத் (துணை ஆளுநர் ஸதிஷ் தவன் விண்வெளி மையம்)
“சந்திரயான் -1 துணைக்கோளைத் திட்டமிட்ட வட்டவீதியில் வெற்றிகரமாய்ப் புகுத்திச் சந்திரனுக்குச் செல்லும் பயணம் இப்போது முடிந்தது. அடுத்துத் தொடங்கப் போகும் ஆய்வுச் சோதனைகளை ஆரம்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”
மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர் (Chandrayaan Project Director) [நவம்பர் 13, 2008]

“இந்த தனித்துவச் சோதனையை (Unique Bi-Static Experiment) நிலவைச் சுற்றும் இரண்டு விண்ணுளவிகள் (சந்திரயான்-1 & நாசாவின் LRO நிலவு விண்ணுளவுச் சுற்றி) ஒரே சமயத்தில் வட்ட வீதியில் சுற்றி வந்தாலன்றிச் செய்ய இயலாது. விஞ்ஞானிகள் அந்த சோதனை சீராக இயங்கியதா வென்று இன்னும் சரிபார்த்து வருகிறார். இரண்டு விண்ணுளவிகளையும் சரியான தருணத்தில் சரியான இடத்தில் பறக்க வைத்துத் திட்டமிட்டபடிச் சோதனையைச் செய்து முடித்தார். இந்த இந்திய அமெரிக்கக் கூட்டு முயற்சி எதிர்காலத்தில் எழும் வாய்ப்பையும் காட்டுகிறது. அந்தக் கூட்டுழைப்பு விண்வெளித் தேடலில் ஓர் உன்னத முன்னடி வைப்பு.”
ஜேஸன் குரூஸன் நாசா தலைமைக் கூடம், வாஷிங்டன் D.C.
“தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது. நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை. கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம். பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைவுகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”
ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)
“சந்திராயன் -1 நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டு சந்திரனைச் சுற்று வீதியில் நிபுணர் புகுத்தியது மகத்தானதோர் நிகழ்ச்சி. அந்த இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டிருந்தாலும் துணைக் கோள் நிலவை விட்டு வழிதவறி விண்வெளியில் எங்கோ போயிருக்கும்.”
எஸ், ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் [நவம்பர் 9, 2008]
சந்திரயான் -2 நிலவுத் தளவுளவித் திட்டத்தில் ஏற்பட்ட தாமதம்
தற்போது ஏற்பட்ட GSLV -III (Geosynchronous Satellite Launching Vehicle III) முக்கட்ட ராக்கெட் சோதனைத் தோல்வியில் இந்தியாவின் சந்திரனில் இறக்கி ஆய்வு செய்யப் போகும் 2014 ஆண்டுச் சந்திரயான் -2 திட்டம் தாமதமாகப் போகிறது. அந்தப் பெருஞ் செலவுத் திட்டத்தில் சந்திரயான் -2 விண்கப்பல் நிலவில் இறங்கி உருண்டோடி ஆராயும் தளவுளவி யைத் தூக்கிச் செல்ல வேண்டும். தளவுளவி தயாரிப்பில் இந்தியாவுக்கு ரஷ்யா உதவி செய்கிறது. அப்போது அந்த உளவி எடுக்கும் நிலவுத் தள மண்கள் பூமிக்குக் கொண்டு வரப்படும். அந்த பேராசைத் திட்டம் 2014 ஆண்டில் இப்போது நிறைவேறாது என்பதே வருந்தத் தக்க செய்தி யாகும். பிரச்சனை எது வென்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அசுர சக்தி ஏவுகணைகள் சோதனை களில் பழுது /தவறு நேர்ந்து தோல்வி அடைந்து வருவதே ! 2010 ஆண்டு நாணய மதிப்பில் அண்டவெளித் திட்டங்களுக்கு அரசாங்க நிதி ஒதுக்கு 1.1 மில்லியன் டாலர் (58 பில்லியன் ரூபாய்). அதில் GSLV -III முக்கட்ட ராக்கெட்விருத்திக்கு மட்டும் சுமார் 500 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கு ! அந்த ராக்கெட் இணைப்பில் ரஷ்யாவின் “பூஜிய பூரண உஷ்ண எஞ்சின்” (Russian Cryogenic Engine) சேர்க்கப் பட்டிருந்தது. பின்னால் இந்தியா தயாரிக்கப் போகும் பூஜிய பூரண எஞ்சின் ராக்கெட் மூன்றாவது கட்டப் பகுதியோடு இணைக்கப் படும்.


சந்திரயான் -1 விண்ணுளவியை வெற்றிகரமாய் நிலவைச் சுற்ற அனுப்பிய இந்தியா, கடந்த பல ஆண்டுகளாய் ராக்கெட் ஏவு முயற்சிகளில் வெற்றியும் தோல்வியும் அடைந்துள்ளது. சந்திரயான் -1 தூக்கிச் செல்ல நடுத்தரம் உடைய PSLV (Polar Satellite Launch Vehicle) ராக்கெட் பயன் பட்டது. இந்தியா PSLV (Polar Satellite Launch Vehicle) ராக்கெட்களைப் பன்முறை இயக்கி வெற்றி அடைந்துள்ளது. புதியதாய்த் தயாராகும் சந்திரயான் -2 மிகக் கனமானது. தாய்க்கப்பல் ஆணைச்சிமிழ் தளவுளவி இறக்கியையும், தளவூர்தி வாகனத்தையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு கிரியோஜெனிக் எஞ்சின் (Cryogenic Engine) இயக்க முறைகளைக் கற்றுக் கொள்ளும் தகுதி அனுபவம் இப்போது முழுமையாய்க் கிடைத்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா போல் அதிகப் பளுதூக்கும் ராக்கெட் ஏவும் அனுபவமின்றி நிலவுத் தேடல் முயற்சிகளில் இந்தியாவுக்கு வெற்றிகள் கிடைக்க மாட்டா.

பழுதடைந்த கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் சாதன விபரங்கள்
GSLV -III ராக்கெட் நிலவுக்கு 4 டன் பளுவைத் தூக்கிச் செல்லும் தகுதி உடையது. புவிச் சுற்றிணைப்பில் நிலைமாறும் சுழல்வீதியில் (Geosynchronous Transfer Orbit) 10 டன் பளுவைச் சுமக்க வல்லது. ராக்கெட் எடை : 629 டன், உயரம் : 51 மீடர் (167 அடி), நிலைமாறும் சுழல்வீதியில் எடை : 10 டன், புவிச் சுற்றிணைப்புச் சுழல்வீதியில் எடை 5 டன். அதாவது அந்த ராக்கெட் புவிச் சுற்றிணைப்பு வீதியில் 10 டன் பளுவுள்ள துணைக் கோளை தூக்கி விட முடியும். இந்த கிரையோஜெனிக் எஞ்சின் விருத்தி செய்ய 500 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கில் சோதனை நடந்து வருகிறது. எதிர்கால நிலவுப் பயணத்துக்குச் செல்லும் மூவர் விண்கப்பலை இந்த GSLV -III ராக்கெட் மூன்றாவது கட்ட எஞ்சின் இழுத்துச் சென்று பூமிக்கு மீளும். 2010 ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியா தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சின் முதலில் சோ திப்பாகி பழுதடைந்து சரிவர இயங்கவில்லை.


2010 டிசம்பரில் ஆந்திராவில் உள்ள சத்தீஸ் ஸாவன் விண்வெளி மையத்தில் இந்த GSLV -III ராக்கெட் எஞ்சின் சோதிக்கப் பட்டது. எஞ்சின் சுடப்பட்டு 47 வினாடியில், ராக்கெட் வாகனக் கட்டுப்பாடை பொறித்துறை ஆணை நிபுணர் இழந்தனர். அடுத்த 16 வினாடியில் ராக்கெட் வெடித்து விட்டு நிபுணருக்கும், பார்வையாளருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. தூக்கிச் சென்ற துணைக்கோள் வங்காள விரிகுடாவில் வீசி எறியப்பட்டது. ராக்கெட், துணைக்கோள் ஆகிய வற்றின் விலை மதிப்பான 39 மில்லியன் டாலர் (1.75 பில்லியன் ரூபாய்) ஒருசில நிமிடங்களில் கரும்புகையாய் எரிந்து மறைந்தது. கடந்த 10 வருடங்களில் (2010 வரை) GSLV -III ராக்கெட் எஞ்சின் பூஸ்டர்கள் (Boosters : விரைவூக்கிகள்) ஏழில் நான்கு இதுபோல் பழுதாகிச் சிதைந்தன. அதே சமயத்தில் தொடர்ந்து 16 முறை வெற்றிகரமாக GSLV ராக்கெட் எஞ்சின்கள் எழும்பி விண்வெளியில் ஏறிச் சென்றுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். இந்திய ராக்கெட்கள் குறைந்த செலவில் பல வெளிநாட்டுத் துணைக்கோள்களைத் தூக்கி பூமிச் சுழல்வீதில் பன்முறை ஏற்றி விட்டுள்ளன. இப்போது அந்த வெளிநாட்டு வணிக வரவுகளை இந்தியா இழக்க நேரும். முக்கியமாக 2014 ஆண்டில் சந்திரயான் -2 தளவுளவி நிலவில் தடம் வைக்கும் பேராசைத் திட்டம் தள்ளிப் போடப்படும். தாமதமாகும்.
சந்திரனைச் சுற்றிவந்த முதல் இந்திய துணைக்கோள் !
2008 நவம்பர் 12 ஆம் தேதி சந்தரயான் -1 துணைக்கோள் திட்டமிட்ட 100 கி.மீடர் (60 மைல் உயரம்) துருவ வட்டவீதியில் (Polar Orbit) நிலவைச் சுற்றிவரத் துவங்கியது. பூமியைக் கடப்புச் சுற்றுவீதியில் சுற்றிவந்த சந்திரயான் நவம்பர் 8 ஆம் தேதியன்று, நிலவை நெருங்கும் போது 440 நியூட்டன் திரவ எஞ்சின் இயங்கி வேகம் குறைக்கப்பட்டு (367 metre/Sec) நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் கவரப்பட்டு முதன்முதல் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது. சந்திர விண்வெளி யாத்திரையில் பூமியிலிருந்து மனிதர் மின் சமிக்கைகள் அனுப்பி விண்சிமிழைத் திசை திருப்பி வேகத்தைக் குறைத்து நிலவைச் சுற்ற வைப்பது மிகச் சிரமமான பொறியியல் நுணுக்க முயற்சி. முதன்முதலில் அவ்விதம் செய்ய முயன்ற ரஷ்யா அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் துணைக்கோள்கள் சந்திரனைச் சுற்றாது சூரியநைச் சுற்றி வர நழுவிச் சென்றன. இந்தியா முதல் முயற்சியிலேயே நிலவைச் சுற்ற வைத்தது பாராட்டத் தக்க ஒரு நிபுணத்துவம். இதற்கு முன்பு பன்முறைத் துணைக்கோள்களைப் “புவியிணைப்புச் சுற்று வீதியில்” (Geosynchronous Orbit) இறக்கிப் பூமியைச் சுற்ற வைத்த கைப்பயிற்சியே அதற்கு உதவி செய்திருக்கிறது ! இந்த மகத்தான சிக்கலான விண்வெளி இயக்க நுணுக்கத்தைச் செய்து காட்டி இந்தியா தன்னை ஐந்தாவது சாதனை நாடாக உயர்த்தி இருக்கிறது. ஏற்கனவே இவ்விதம் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சைனா தேசங்கள் செய்து காட்டியுள்ளன. ஈசா எனப்படும் ஐரோப்பாவின் பதினேழு கூட்டு நாடுகளின் விண்வெளி ஆய்வகமும் [European Space Agency (ESA)]) இந்த விந்தையைப் புரிந்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்க நாசாவும் இணைந்து செய்த சோதனை
2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன. அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின ! முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது ! அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி.

அந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் ‘இரட்டை நிலைநோக்குச் சோதனை’ (Bi-Static Experiment). நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள “நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்” (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பி யுள்ளன. இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதி யாக உலகுக்கு அறிவிக்கப்படும் ! மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் ‘புதைபட்ட பனிப்படிவுகள்’ இருக்கலா மென்று தெரியவரும். இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப்பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும். இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது !

ஒன்பது மாதங்களாய்ச் சந்திரயான்-1 நிறைவேற்றிய சாதனைகள்அக்டோபர் 28 2008 முதல் ஆகஸ்டு 2009 வரைச் சந்தரயான்-1 நிலவை 3000 மேற்பட்ட சுற்றுக்கள் சுற்றி விட்டது. மேலும் சந்திரனுக்கு அருகே தணிவாக 60 மைல் (100 கி.மீ.) வட்ட வீதி உயரத்தில் பறந்து நிலவில் 70,000 படங்களை எடுத்து அனுப்பியதுடன் நிலவின் குழிகளையும் மலைகளை யும் வியப்புறும் வண்ணம் படமெடுத்து விபரங்களைக் காட்டியுள்ளது. நிலவின் துருவப் பகுதிகளில் நிரந்தரமாய் மறைந்துள்ள குழிகளின் படங்களை எடுத்துள்ளது. அத்துடன் தளப் பரப்புகளை உளவி இரசாயன மற்றும் தாதுக்கள் இருக்கும் தகவலைக் கொடுத்துள்ளது. மே மாதம் 19, 2009 தேதிதான் சந்திரயான்-1 விண்கப்பலின் உயரம் 60 மைலிலிருந்து 120 மைல் வட்ட வீதிக்குத் (100 கி.மீ –> 200 கி.மீ) தள்ளப் பட்டது. நாசாவின் நிலவு விண்ணுளவுச் சுற்றி 2009 ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஏவப் பட்டது. ஏப்ரல் 26, 2009 இல் சந்திரயான்-1 விண்மீனை ஒப்புநோக்கித் தன் இருப்பிடத்தைக் காட்டும் “தாரகை நோக்கிக்” (Star Sensor) கருவிப் பழுதாகி இன்னல் விளைவித்தது. இந்திய நிபுணர் துணைக்கோள் நேர்மைப்பாடுக் கருவியையும் ஏரியல் கம்பியையும் (Sensors of Gyroscopes & Antenna) பயன்படுத்திச் சந்திரயான் இருப்பிடத்தை அறிந்து கொண்டார். அந்த ஒரு பழுதைத் தவிர மற்ற கருவிகள் யாவும் இதுவரைச் செம்மையாக இயங்கி வந்துள்ளன.
பனிப்படிவு இரட்டை நிலைநோக்குச் சோதனை (Bi-Static Experiment) புரிய இரண்டு விண்ணு ளவிகள் தேவைப்படும். இரண்டு விண்ணுளவிகளும் நெருங்கிப் பறந்து வட்ட வீதிகளில் நிலவைச் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஆகஸ்டு 20, 2009 ஆம் தேதி சந்திரயானும் நாசாவின் நிலவு விண்ணுளவுச் சுற்றியும் (Lunar Reconnaissance Orbiter -LRO) 20 கிலோ மீடர் (12 மைல்) தூரத்தில் பறந்து செல்லக் கட்டுப்பாடு செய்யப்பட்டு நிலவின் துருவப் பகுதியில் எர்லாஞ்சர் குழியின் பனிப் படிவைக் கண்வைத்தன. அவற்றின் இரு உளவுக் கருவிகளும் (Mini Radio Frequency Instrument -Mini-RF) பனிப்படிவு இருப்பைக் கண்டு தமது ரேடார்க் (Synthetic Aperture Radars -SAR) கதிர்க் கற்றைகளை அனுப்பி அவற்றின் எதிரொலிப்பை உறிஞ்சின. தெறித்த சமிக்கைகளை உள்வாங்கிப் பூமியில் உள்ள கட்டுப்பாடு அரங்குகளுக்கு ஆராய விண்ணுளவிகள் அனுப்பி வைத்தன. அந்த பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும் என்று அறியப்படுகின்றது.
விண்ணுளவியின் முக்கிய குறிப்பணி வெண்ணிலவின் மேற்தளத்தை ஆராய்வது. நிலவின் துருவப் பரப்பில் அடித்தள நீர்ப்பனி உள்ளதா என்று அறிவது. பூமியில் அரிதாக இருக்கும் ஹீலியம்-3 ஏகமூல வாயு (Helium-3 -An Isotope of Helium-4 Gas) இருப்பைக் கண்டறிவது. எதிர்கால அணுப்பிணைவுச் சக்தி உற்பத்திக்கு ஹீலியம்-3 வாயு எரிசக்தியாகப் பயன்படும் என்று நம்பப் படுகிறது. இந்தப் பேரிச்சை விண்வெளித் திட்டத்துக்கு இந்தியா 78 மில்லியன் டாலர் (3800 மில்லியன் ரூபாய்) (2008 ஆகஸ்டு நாணய மதிப்பு) செலவு செய்கிறது !

இந்திய விண்வெளித் தேடலின் எதிர்காலத் திட்டங்கள்
இந்திய விண்வெளி ஆய்வகத்தின் (ISRO) இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்ணுளவி 2011-2012 இல் ஏவிச் செல்ல அடுத்து தயாராகி வருகிறது. அது சந்திரயான் -1 விட பல முறைகளில் வேறுபட்டது. முதன்முதல் இந்திய விண்ணுளவி சந்திராயன்-2 அணுக்கரு எரிசக்தியைப் பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விண்சிமிழ் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத்தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர தளத்தில் இறக்கும். தளவுளவி நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும். தளவுளவி, வாகன (Lunar Lander & Rover) அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறுகிறார். 16,000 பேர் பங்கெடுத்து வரும் ISRO வுக்கு 2008 ஆண்டு நாணய மதிப்புப்படி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கம் ஒரு பில்லியன் டாலர் என்று அறியப்படுகிறது !

2015 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆய்வுக் குழு இரண்டு அல்லது மூவர் இயக்கும் மனித விண்வெளிக் கப்பலைத் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதற்காகும் நிதி மதிப்பு 242 மில்லியன் டாலர் (1240 கோடி ரூபாய்). மூவர் இயக்கும் அந்த மனித விண்கப்பல் பூமியை 250 மைல் தணிந்த உயரத்தில் 7 நாட்கள் சுற்றி வரும். இந்திய அரசு மனிதப் பயணத் திட்டத்துக்கு 95 கோடி ரூபாய் நிதித் தொகையை அளித்துள்ளது. விண்வெளிப் பயண மனிதப் பயிற்சிக்கு 1000 கோடி ரூபாய்ச் செலவில் பங்களூரில் பயிற்சிக் கூடம் ஒன்றும் அமைக்கப்படும்.
அடுத்து இந்தியா செவ்வாய்க் கோள் பயணத்துக்கும், மனிதர் இயக்கும் விண்ணுளவியை நிலவுக்கு ஏவும் யாத்திரைக்கும் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப் படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது,” என்று ராக்கெட் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம், ஜனவரி 26, 2008 இல் நடந்த அகில நாட்டு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் பொதுக் கருத்தரங்கில் (International Conference on Aerospace Science & Technologies) கூறியிருக்கிறார். “கடந்த 50 ஆண்டுகளாய் விண்வெளி ஆராய்ச்சி, படைப்பல மேன்மை, அணுசக்தி ஆய்வுப் பங்கெடுப்பில் மூழ்கிய இந்தியா முதன்முதல் ஒரு வெற்றிகரமான சந்திரயான் -1 நிலவுப் பயணத்தைச் செய்து காட்டியுள்ளது,” என்று அந்தக் கருத்தரங்கில் டாக்டர் அப்துல் கலாம் பாரத நாட்டைப் பாராட்டினார்.
++++++++++++++++++++++
தகவல்:
Picture Credits :
The Hindu, ISRO & other Websites
1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
1A Stars & Planets By : Duncan John [2006]
1B. Astronomy Facts on File Dictionary (1986)
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4 Chennai Online News Service About Insat
4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/
geostationary.htm] 7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?
module=displaystory&story_id= 40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer] 9. Indian Space Program By: Wikipedia
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_
space_story/isro.html] 11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/
kalam1.html?200717] 12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.
in/scripts/presidentprofile. jsp 13 Dr. Abdul Kalam : India’s Missile Programhttp://www.geocities.
com/siafdu/kalam.html 14 http://www.thinnai.com/?
module=displaystory&story_id= 40810231&format=html(இந்தியாவி ன் முதல் துணைக்கோள் சந்திரனை நோக்கிச் செல்கிறது) 15 http://www.thinnai.com/?
module=displaystory&story_id= 40811131&format=html(இந்தியத் துணைக்கோள் சந்திரனைச் சுற்றுகிறது) 16. http://www.thinnai.com/?
module=displaystory&story_id= 40811201&format=html(இந்திய மூவர்ணக் கொடிச் சந்திரனில் தடம் வைத்தது) 17. Times Now India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]
18. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]
19 Cosmos Magazine The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]
20. https://jayabarathan.
wordpress.com/2008/05/24/ fusion5/[Fusion Power -1] 21. https://jayabarathan.
wordpress.com/2007/09/29/ nuclear-fusion-power/ [Fusion Power -2] 22. Space Expolaration Chembers Encyclopedic Guides (1992
23. National Geographic -50 Years Exploring Space [November, 2008]
24. Chandrayaan-1 Enters Lunar Orbit Makes History [Nov 8, 2008]
25. Latest News Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]
26 Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]
27. Chandrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008] 36. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]
28 India Mulls Using Nuclear Energy to Power Chandrayaan -2 (August 8, 2009)
29 The Search for Ice on the Moon Heats up By : Jeff Salton (August 2, 2009)
30 Space Spin – LRO, Chandrayaan -1 Team up for Unique Search for Water Ice By : Nancy Atkinson (August 19, 2009)
31 LRO & Chandrayaan -1 Perform in Tandem to Search for Ice on the Moon (August 22, 2009)
32 Hindustan Times – Indo-Asian News Service, Bangalore “India’s Lunarcraft Hunts for Ice on Moon with NASA Lunar Reconnaissance Orbiter (August 21, 2009)
33. IEES Spectrum Interview of G. Madhavan Nair Head of India Space Agency (June, 2009)
34 Indian Space Research Organization (ISRO) Press Release – ISRO–NASA Joint Experiment to Search for Water Ice on the Moon. (August 21, 2009)
35. http://en.wikipedia.org/
wiki/Category:Indian_space_ program (May 16, 2012) 36. http://www.time.com/time/
printout/0,8816,2040085,00. html(December 29, 2010) 37 http://en.wikipedia.org/
wiki/Indian_Space_Research_ Organisation 38. http://www.isro.org/gslv-
d3/gslv-d3.aspx ( Geosynchronous Satellite Launch Vehicle (GSLV) 39. Asia Times – India’s Space Program Takes a Hit By : Peter Brown (May 1, 2012)
40. Space Travel : New Moon for India By : Morris Jones, Sydney Australia (SPX) )May 28, 2012)
41 http://www.bharat-rakshak.
com/MONITOR/Space%20Essay/ entry3.htm (Indian Space Program -2020) 42. http://indianexpress.com/
article/technology/science/ chandrayaan-2-mission-isro- conducts-tests-for-moon- landing-4370169/ [November 11, 2016] 43. http://www.moondaily.com/
reports/India_Takes_Russian_ Help_to_Analyze_Chemical_ Composition_of_Lunar_Surface_ 999.html?mc_cid=508954fbaf&mc_ eid=bb33fe70f4 [February 17, 2017] 44. https://en.wikipedia.org/
wiki/Chandrayaan-2 [March 2, 2017] 45. http://www.moondaily.com/
reports/Indias_Moon_Mission_ on_2018_Target_Says_ISRO_ Chief_999.html?mc_cid= 508954fbaf&mc_eid=bb33fe70f4 [March 3, 2017] 47.http://www.spacedaily.com/
reports/India_shows_off_space_ prowess_with_launch_of_mega_ rocket_999.html [June 5, 2017] 48.http://www.spacedaily.com/
reports/Indian_Space_Agency_ to_Work_on_Electric_ Propulsion_for_Large_ Satellites_999.html [June 7, 2017] ******************
S. Jayabarathan (jayabarathans@gmail.com) (June 10, 2017) [R-2] -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘நினைத்திட நம்முள் நவநீதம் பொங்கும்
கனைத்திடக் காமம் கலங்கும்: -மணத்துழாய்
உச்சியில் ஏந்தி, உவக்கும் பசுக்(கு)உம்மா:
கச்சிதம் கேசவ் கிரேட்’’….கிரேசி மோகன்….! -
’’ஸ்ரீநிவாசர்’’….!(கண்ணன் வந்தார் எங்கள் கண்ணன் வந்தார்)….!
’’அன்புள்ள அனைவர்க்கும்’’…..அடியேன் நாத்திகன் கிரேஸி மோகன் நிச்சயமாய் அல்ல….விடிகாலை பத்து மணிக்கு துயிலெழும் சோம்பேறி ஆத்திகன் ‘’லேஸி மோகன்’’….கோயிலுக்குச் சென்று ஸ்ரீனிவாசரை ‘’காதலிக்க நேரமில்லை’’….இருந்தாலும் செடியாய் வல்வினை தீர்க்க சீனிவாசர், வருடா வருடம் அடியேன் தரிசிக்க வீதியுலா வந்திடும் வாத்ஸல்யர்….(கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன்)….!இது முன்னூட்டம்….இனி பின் ஊட்டச் சத்து-சித்து-ஆனந்தம்….!
சென்ற வருடம் ஸ்ரீனிவாசப் பெருமாள் வீட்டு வாசலில்
விடி காலை எழுந்தருளினார்….அப்போது எழுதிய வெண்பா….
———————————————————————————————————–சுற்றிடும் ஆழியை, சூழ்கடல்வெண் ஆழியைப்
பற்றி, எதிற்புரம் பத்தினிகள் -நிற்றிருக்க
புள்ளனெழாப் போதினிலே பல்லக்கில் ஊர்வலமாய்
கள்ளனென வந்தவரே காப்பு….!சேதியொன்று கேளீரோ வீதியுலா செங்கமல
மாதுவுடன் சீனு மயிலையில் -காதினில்
கொட்டொலி கேட்கிறது விட்டொழி தூக்கத்தை
சட்டென வாராய்வா சல்….!பேயோடு பொய்கையும் பூதமும் பாடிய
மாயோன் மணிவண்ணன் மாம்பழ -வாயோன்
வருகின்றான் வாசலுக்கு வந்தவனை வந்தி
தருகின்றான் நாளும் தவம்….!வாநீவா சல்பக்கம் வீதியுலா வந்துள்ளார்
தூணிவாச சிங்கன் திருமார்பன் -சீனிவாசர்
பிம்மாலைப் போதில் பெருமாளை சேவிக்க
நம்மாள் அருள்வார் நலம்….!இந்த வருடம் வந்த போது ஸேவித்து எழுதியது….!
————————————————————————————————‘’சனிக்கிழமை காலை சரியாக மூன்று
மணிக்கு மயிலையின் மாலர் -மணிக்கண்ணன்
செங்கமலத் தாயார் சமேதராய் வந்திருந்து
சங்கொலி செய்தார் சீனு’’….கிரேசி மோகன் -
அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 91
பீசா சாய்ந்த கோபுர அருங்காட்சியகம், பீசா, இத்தாலி
முனைவர் சுபாஷிணி
உலக அதிசயங்களில் ஒன்று. சரிந்து விழுந்து நொறுங்கி விடுமோ எனப் பலரும் நினைத்துத் திகைக்கும் கட்டிடம் என்று அடையாளம் காணப்படும் பீசா கோபுரம் பற்றியதுதான் இன்றைய கட்டுரை.
பீசா சாய்ந்த கோபுரம் அடிப்படையில் ஒரு மணிக்கூண்டு என்று தான் சொல்ல வேண்டும். பீசா நகரின் தேவாலயத்தின் ஆலய மணிகள் கட்டப்பட்ட கூண்டு தான் இது. கி.பி.1152ம் ஆண்டில் பீசா தேவாலயத்தின் கட்டிடப்பணிகள் தொடங்கப்பட்டு கி.பி.1363ம் ஆண்டில் நிறைவு பெற்றது. இந்தத் தேவாலயத்தை உலகம் முழுதும் உள்ள மக்கள் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, அதன் மணிக்கூண்டு உள்ள இந்த பீசா சாய்ந்த கோபுரம், அதன் சாய்வான கட்டிட அமைப்பிற்காகவே உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
பீசா சாய்ந்த கோபுரத்தின் அடித்தளத்தில் தான் பீசா கோபுர அருங்காட்சியகப் பகுதி இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் இந்தக் கோபுரத்தின் கட்டுமான விபரங்களை அளிக்கும் ஒரு அருங்காட்சியகம் மட்டுமே. இச்சாய்ந்த கோபுரத்தின் கட்டுமானப்பணிகள் தொடர்பான விபரங்களும் குறிப்புக்களும் புகைப்படங்களாகவும் விபரக்குறிப்புக்களாகவும் இப்பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்தாலிய மொழியிலும் ஆங்கிலத்திலும் இக்குறிப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
கோபுரம் சாய்ந்துகொண்டிருப்பதை பார்ப்போருக்கு அதற்குள் மனிதர்கள் சென்று வரலாமா ? அப்படிச் செல்லும் போது சாய்ந்த கோபுரம் சாய்ந்து விடுமா? என்பது போன்ற சந்தேகங்கள் எழலாம்.ஆனால் நாம் அஞ்சத்தேவையில்லை. பீசா சாய்ந்த கோபுரத்தின் உள்ளே சென்று மேல் மாடி வரை நடந்து சென்று அங்கிருந்து எழில் மிகும் பீசா நகரைக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்து மகிழலாம். இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தேவாலயத்தைக் கட்டியபோது, அதன் பின்னால் இருப்பது போல இந்த மணிக்கூண்டு கட்டிடத்தை அமைத்தனர். கட்ட ஆரம்பித்தபோது அடித்தளம் மென்மையானதாக இருந்தமையால் ஒரு பக்கம் தாழ்ந்த நிலையில் கட்டிடம் இறங்கிவிட்டது. கோபுரத்தைக் கட்டி முடித்தபோது, அதாவது கி.பி.13ம் நூற்றாண்டில் இந்தக் கோபுரம் இன்று நாம் பார்ப்பதற்கும் அதிகமாகச் சாய்ந்த நிலையில் இருந்தது. 20ம் நூற்றாண்டிலும் கடந்த நூற்றாண்டிலும் சில சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டதன் வழி இந்தக்கட்டிடத்தை ஓரளவு நிமிர்த்தியிருக்கின்றார்கள். ஆனாலும் இன்றும் இது சாய்ந்துதான் இருக்கின்றது. இந்தத் தன்மையே இதற்குத் தனிச்சிறப்பையும் அளித்திருக்கின்றது எனலாம்.
ஒரு பக்கம் சாய்ந்த வகையிலிருப்பதால் சாய்ந்த பக்கம் 55.86 மீட்டர் உயரமும் நேராக இருக்கும் பக்கத்திலிருந்து 56.67மீட்டர் உயரமும் கொண்டது பீசா கோபுரம். கோபுரத்தின் மொத்த எடை 14,500 மெட்ரிக் டன் ஆகும். தற்சமயம் இதன் சாய்ந்தபகுதி 3.99 பாகைச் சரிந்த வகையில் உள்ளது.
இந்தக் கோபுரத்தை வடிவமத்த கட்டிடக்கலைஞர் யார் என்பதில் ஆய்வாளர்கள் மத்தியில் சில குழப்பங்கள் இருந்தன. டியோட்டிசால்வி (Diotisalvi) என்ற கட்டுமானக் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான கிபி.12ம் நூற்றாண்டு அரிய கலைப்படைப்புதான் இந்த பீசா கோபுரம் என்பது ஆய்வுகளுக்குப் பின்னர் நிரூபணமானது. பீசா நகரிலிருக்கும் சான் நிக்கோலா கட்டிடத்தையும் இங்கிருக்கும் பாப்டிஸ்ட்ரியையும் வடிவமைத்தவரும் இவரே. கி.பி. 1173ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி தான் முதலில் இதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கி.பி. 1198ம் ஆண்டில் இக்கோபுரம் கட்டப்பட்டு முதல் ஆலயமணி கோபுரத்தில் பொருத்தப்பட்டது. கி.பி. 1272ம் ஆண்டில் கியோவான்னி டி சிமோன் என்ற கட்டுமானக் கலைஞரின் மேற்பார்வையில் கட்டுமானப் பணி மேலும் தொடரப்பட்டது. ஆறு தளங்களைக் கடந்து ஏழாவது தளத்தையும் கட்டு முடித்து இந்தக் கோபுரம் 1319ம் ஆண்டில் இன்றிருக்கும் வடிவத்தைப் பெற்றது. கீழ்த் தளத்திலிருந்து மேல் தளம் வரை செல்ல 251 படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறுகலான பளிங்குப்படிக்கட்டுக்களில் ஏறித்தான் ஒவ்வொரு தளமாகச் சென்று கண்டு வரமுடியும்.
இன்றைய நிலையில் உலகம் முழுவதிலுமிருந்து அதிகமான சுற்றுப்பயணிகள் இங்கு வந்து கூடுகின்றனர். ஆண்டில் 365 நாளும் இங்குச் சுற்றுப்பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். மிக அதிகமாக உலக மக்களால் வந்து பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்லப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று இது என்றால் அது மிகையல்ல. பீசா கோபுரத்தின் உள்ளே சென்று வரக் கட்டணம் கட்டி டிக்கட் பெற வேண்டும். ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்களை மட்டுமே காவல் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கின்றனர். கோபுரத்தின் அளவு சிறியதாக இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.
இந்தக் கோபுரத்தைக் கட்டி முடிக்க இரண்டு நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக கட்டுமானப் பணிகள் நடந்தன என்பதை நினைத்துப் பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கின்றது. இத்தாலியின் பீசா நகருக்குச் சிறப்பு சேர்க்கின்ற ஓர் அம்சம் என்று மட்டுமில்லாமல், இத்தாலிக்கும் ஒட்டு மொத்த ஐரோப்பாவிற்கும் புகழ் சேர்க்கும் சிறப்புச் சின்னமாக பீசா சாய்ந்த கோபுரம் திகழ்கின்றது.
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”பினாமிகா மாலர்க்கு, பூபாரம் போக்க
அனாமிகா அச்சுதன், ஆயர்க்(கு) -இனாமிகாவாய்(FREEயாய்)
வந்த இளவல், விரஜகுல சொத்தவர்,
நந்தன் யசோதைக்கண் ணன்’’….கிரேசி மோகன்….! -
சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? (5)
பவள சங்கரி
சம்பந்தமில்லாத வார்த்தைகள் அல்லது கூறுகளை இணைத்து கட்டமைக்கப்பட்ட களம் என்றாலும் புரட்சிகரமானதாகவோ, நவீனமானதோ அல்லது புதுமையானதொரு கருத்தைக் கொண்டிருக்கும்பட்சத்தில் அதனை முழுமையாக வரவேற்று வடிவமைப்பதில் பாதகமில்லை. கற்பனைக்களம் அமையுமிடம் ஆறோ, குளமோ, நடைமேடையோ, கானகமோ என எதுவாயினும் கனவுலகில் தோன்றும் கற்பனையை துளியும் சிதறாமல் அப்படியே மேலெடுத்துச் செல்லவேண்டியது அவசியம். உங்கள் கதை ஆரம்பமாகும் இந்த இடம்தான் சாத்தியமற்ற ஒன்றாகக் கருத்தப்படும் கற்பனைகளும் நினைவில் நிற்கும் அற்புதமான படைப்புகளாக உருவாகும் இடம் எனலாம்.
இலக்கியம் படைக்க எண்ணி அமரும்போது உள்ளம் வெற்றிடமாக கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோன்று இருண்ட காட்சியாக நிற்பது சாத்தியம். இந்த நேரத்தில் என்ன செய்யலாம்? மெல்ல நினைவுகளை பின்னோக்கி நகர்த்துங்கள்..
இளமைக்காலத்தில் விரும்பி வாசித்த நூல்கள், வாசிக்கப் பிடிக்காத நூல்கள், பெற்றோரின் கட்டாயத்திற்காக வாசித்த நூல்கள், பதின்மத்தில் மனம் கவர்ந்த நூல்கள், சில பாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் போன்றவற்றையும்,
இளமைக்கால அச்சங்கள், சாகசங்கள், மறக்க முடியாத மகிழ்ச்சித் தருணங்கள், பயமுறுத்திய கனவுகள், இனிய பயணங்கள், பிடித்த நிகழ்வுகள், நண்பர்கள், சம்பந்தப்பட்ட முக்கிய நிகழ்வுகள், நண்பர்களால் கிடைத்த உதவிகள், நம் முன்னேற்றத்தில் அவர்தம் பங்களிப்புகள், பள்ளியில் பெற்ற அனுபவங்கள், பத்தாம்பசலித்தனங்கள், மாற்றம் ஏற்படுத்திய முக்கிய நிகழ்வுகள், நட்பின் பிரிவு, இடமாற்றம், இப்படி பழைய நினைவுகளை ஒவ்வொன்றாக அசை போட ஆரம்பிக்கும்போது, ஓரிடத்தில் நினைவுகள் மேற்கொண்டு நகராமல் நின்று ஆழ்ந்து பயணிக்கும். அந்த இடத்தில் ஊன்றி கவனித்து கற்பனையையும் செலுத்தி காவியம் படைக்க வேண்டியதுதான்!
எது குழந்தைகள் / சிறார்கள் இலக்கியம்?
இலக்கியங்கள் பொதுவாக படைப்பாளர்களின் நடை, திறம், சுவை எனும் பல்வேறு கோணங்களில் வேறுபடத்தான் செய்கின்றன. ஆயினும் படைப்புகள் யாருக்காகப் படைக்கப்படுகிறதோ அதற்குண்டான பொதுவான சில அடிப்படை கட்டமைப்புகளை உணர்ந்து அதற்கேற்றவாரு தமது ஆக்கங்களை படைப்பவர்களே ஆகச்சிறந்த எழுத்தாளர்களாக மிளிர்கிறார்கள்.
மழலையரின் மகிழ்ச்சிக்காவியங்கள்:
பாடல்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. குழந்தையின் வயதிற்கேற்ப ஒரு நூல் இருக்கிறதா என்பதை யோசித்து அதற்கேற்ற நூல்களை வாங்க வேண்டும் என்று நினைக்கிற பெற்றோரின் புரிதல் நிலையில் நின்று படைப்பாளர்கள் சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது. எத்தகைய படைப்பாக இருந்தாலும் குழந்தை எழுத்தாளர் குழந்தையின் மன நிலையிலிருந்து தான் எழுத வேண்டும்.
குழந்தை தொட்டிலில் இருக்கும்போதே தாலாட்டுப்பாடல் பாடி படிப்பின் துவக்கத்தை ஆரம்பித்து வைக்கும் முதல் ஆசிரியை அன்னை. அறிவு, துணிவு, நற்பண்பு போன்றனைத்தையும் தொட்டிலிலேயே ஊட்டி வளர்ப்பவள் அந்த படைப்பாளி. பின் மழலை பேசத் தொடங்கும் பருவத்தில் ‘நிலா நிலா ஓடி வா’ ‘கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு’, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, சாயக்கிளியே சாய்ந்தாடு’ போன்ற பாடல்களை பாடுவதற்குப் பழக்குகிறாள். இங்குதான் ஆயத்தப் பாடல்கள் (motivation) கற்பித்தலின் முதல் படியாக முக்கியத்துவம் பெறுகிறது. துவக்க நிலையில் குழந்தைகள் நிறைய பாடல்களைக் கேட்பதும் தம் மழலை மொழியில் அதனை அழகாகப் பாடுவதும் அவர்களின் மொழித் திறன்களை வளர்க்க உதவுகிறது. மழலைப் பாடல்கள் குழந்தைகளைப் பரவசப்படுத்துகிறது என்பதே நிதர்சனம். குழந்தைகளின் மனதில் கதை சொல்லியாக, பாடகராக, நடிகராக, நடனக்காரராக இடம் பிடித்து விட்டால் அதுவே அந்த படைப்பாளரின் நிரந்தர வெற்றி என்றாகிவிடும்.
மழலையருக்காக வாசிக்கப்படும் பொம்மைப் புத்தகங்கள்
“இன்றுள்ள ஜனநாயக அமைப்பிலே, ஒரு குக்கிராமத்தில் ஒரு சின்னஞ்சிறு குடிசையிலே பிறந்த குழந்தையும், நாளைய குடியரசுத் தலைவராகலாம்; பிரதமராகலாம்; முதலமைச்சராகலாம்; உலகம் புகழும் விஞ்ஞானியாகலாம்; தொழில் நிபுணராகலாம்; மருத்துவராகலாம்; கவிஞராகலாம்; எழுத்தாளராகலாம்; கல்வியாளராகலாம்; இசை மேதையாகலாம்; கலைஞராகலாம். அவர்கள் அப்படி ஆவதற்கான அடித்தளத்தை அமைத்துத் தருபவை வாழ்க்கை வரலாறுகளே” என்று கூறுகிறார் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா.
சிறுவர் இலக்கிய வரலாறு:
பாட்டி வடை சுட்ட கதை, காக்கையும் நரியும், சிங்கமும் எலியும் போன்ற பல நூறு கதைகள் நம் முன்னோர்கள் கதை சொல்லிகளாக சிறார்களை மகிழ்வித்தவைகள் தொன்றுதொட்டு பரம்பரையாக இன்றுவரை வந்துகொண்டிருக்கின்றன.
பதினொன்றாம் நூற்றாண்டில் ஒளைவையார், ஆத்திச்சூடி எனும் நீதிபோதனையை குழந்தைகளுக்காக உருவாக்கினார். இதுவே இன்றைய பல புதிய குழந்தைகள் இலக்கியப் படைப்பாளர்களுக்கு முன்னோடியாக உள்ளது. அதன்பின் அதிவீரராம பாண்டியர் எழுதிய ‘வெற்றிவேற்கை’ சிறந்த படைப்பாக இருந்தது. உலகநாதர் எழுதிய உலகநீதி என்பதும் நீதி நூல்.
17ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்தகுரு கதைகள் அச்சில் வந்தது. 19ஆம் நூற்றாண்டில் கதா மஞ்சரி வெளியானது. 1853இல் ஈசாப் கதைகள், 1889இல் பன்ருட்டி சி.கோவிந்தசாமி, அதனைத்தொடர்ந்து 1917இல் அ.மாதவய்யா பால விநோதக் கதைகளை இயற்றி வெளியிட்டார். விக்ரமாதித்தன் கதைகள், தெனாலிராமன், மரியாதை ராமன், பீர்பால், முல்லா, ஈசாப் கதைகள், அரேபிய இரவுக் கதைகள் போன்று தொடர்ந்து வந்தன. பழங்கால பஞ்ச தந்திரக் கதைகளை அறியாதவர் இலர்.
சிறுவர் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் பாடல் என்றால் அது HA கிருஷ்ணப் பிள்ளை (1827-1900) இயற்றிய ‘இரட்சன்ய மனோகரம்’, அடுத்து 1886 ஆம் ஆண்டில் இலங்கை யாழ்பாணத்தின், தம்பி முத்துப்பிள்ளை இயற்றிய ‘பாலியக்கும்பி’ போன்றவை. 1900களின் தொடக்கத்தில் அய்யாசாமி என்பவர், ராமரின் பால்ய பருவத்தை மட்டும் பாடல் வடிவில் கொடுத்த நூலான பால இராமாயணம் இயற்றினார்.
பாரதியார், கவிமணி, பாரதிதாசன், சுத்தானந்த பாரதி, வாணிதாசன், தமிழ் ஒளி ஆகியோர் சிறுவர் பாடல்களை இயற்றியதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
18ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பக்காலங்களில் குழந்தைப்பாடல், விடுகதைகள் தவிர, நீதிபோதனைக் கதைகளோ, ஆன்மீகக் கதைகளோ இருக்கவில்லை. 1730 காலகட்டங்களில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் நூற்றுக்கணக்கான மிருகங்கள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்ட நூல்கள் வந்திருந்தன. 1740 ஆண்டுகளில் லண்டன் மாநகரில் குழந்தைகளுக்காக வெளியிடப்பட்ட நூல்கள் பெரும் திருப்பு முனையாக அமைந்திருந்தது. 1740 – 43களில் தாமஸ் போர்மன் என்ற எழுத்தாளர், முந்நூறு மிருகங்களின் வாழ்வியல் முறைமைகளைச் சுவையாக விளக்கும் வரலாற்றுத் தொடர்களை இயற்றியிருந்தார்.
குழந்தைகள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமைன்றி அவர்தம் பெற்றோர், உற்றோருக்கும் உளம் நிறைக்கும் இனிய ஆங்கில குழந்தைப் பாடல்களில் இன்றளவிலும் முன்னிலை வகிக்கும் “பா,பா பிளாக் ஷீப்”, (‘Bah, bah, a black sheep’,) “ஹிக்கரி டிக்கரி டாக்” (‘Hickory dickory dock’), லண்டன் பிரிட்ஜ் ஈஸ் ஃபாலிங் டவுன் ( ‘London Bridge is falling down’ ) சிங் எ சாங் ஆஃப் சிக்ஸ்பென்ஸ் ( ‘Sing a song of sixpence’) போன்ற பிரபலமான பாடல்கள் உருவான ஆண்டு 1744, உருவாக்கியவர் மேரி கூப்பர் . மெல்ல மெல்ல தொழில்நுட்ப உதவிகளுடன், பல மாற்றங்களைச் சந்திக்கத் துவங்கிய பாடல்கள் பெரிய பதிப்பகங்களையும் உருவாக்கியதன் காரணமாக 18 ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் குழந்தைகள் புத்தக விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன. மத்தியதர வகுப்பினர் மத்தியில் நீதி போதனைப் பாடல்கள், கதைகள் போன்றவைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதன் தொடர்ச்சியாக 1800களில் குழந்தைகள் நூல் விற்பனை சிறப்பானதொரு நிலையை எட்டியதால், குழந்தைகள் படைப்பாளர்கள் இதனை தம் குடும்பத்தைக் காக்கும் தொழிலாகவே நடத்தும் அளவிற்கு வருமானமும் பெற்றனர்.
தொடருவோம்.
-
கவிஞன்
அன்பின் பாலம்
ஆற்றலின் உறைவிடம்
இளமைத் துள்ளல்
ஈசல் குழுமம்
உழைப்பில் தேனீ
ஊறு நீக்கும் காட்டாறு
எழுச்சி விடியல்
ஏறு நடையோன்
ஐயம் தெளிபவன்
ஒப்பற்ற படைப்பாளி
ஒய்வின் பின்னும் உழைப்பாளி
இஃதே இவனை
இனம் காணும் முகவரி!– சித்ரப்ரியங்கா ராஜா,
திருவண்ணாமலை. -
புள்ளிகளும் கோலங்களும் !
எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா
வெள்ளை மனத்தினிலே கறுத்தப்புள்ளி வந்துவிட்டால்
வினையாவும் குடிபுகுந்து விட்டதென நாம்நினைப்போம்
புள்ளியினால் கோலங்கள் மாறுவதைக் கண்டுவிட்டால்
நல்லபுள்ளி வருவதற்கு நாம்முயற்சி செய்துநிற்போம் !புள்ளியினால் கோலங்கள் புறப்பட்டு வந்துநிற்கும்
புள்ளியது பிழைத்துவிடின் அலங்கோலம் ஆகிவிடும்
புள்ளியினை நாமென்றும் எள்ளிநகை யாடிவிடின்
நல்லகோல மெல்லாமே நரகலோக மாகிவிடும் !நல்லவராய் இருப்போரை நல்லபுள்ளி எனவழைப்போம்
வல்லவராய் இருப்போரும் நல்லபுள்ளி ஆகிடுவார்
சொல்லவல்ல விஷயமெல்லாம் நல்லபுள்ளி பெற்றுவிடும்
நல்லபுள்ளி நிறைந்துவிடின் நன்மையங்கே குவிந்துவிடும் !எழுத்துக்குப் புள்ளிவைத்தால் மெய்யெழுத்தாய் மிளிர்ந்துவிடும்
இழுக்குடைய செயல்செய்தால் மெய்மையங்கே அழிந்துவிடும்
புள்ளிவைத்த மானைத்தான் யாவருமே விரும்பிடுவார்
கள்ளநிறை நரியதனை காதலிப்பார் யாருமுண்டோ !புள்ளியது இடம்மாறின் கோலமெல்லாம் மாறிவிடும்
கரும்புள்ளி செம்புள்ளி காறியே உமிழவைக்கும்
நெற்றியிலே வைக்கும்புள்ளி வெற்றியினைக் காட்டிநிற்கும்
நற்றமிழில் புள்ளியது நவின்றுவிடும் இலக்கணமே !ஏட்டினிலே புள்ளிவைத்தால் எல்லாமே கிழிந்துவிடும்
புள்ளியில்லா எழுத்தினிலே தெள்ளுதமிழ் வளர்ந்ததுவே
பிற்காலப் பெரும்புலவோர் புள்ளியினைத் தான்புகுத்தி
இக்காலத் தமிழெழுத்தை எமக்களித்தார் ஏற்றமுடன் !பொட்டென்னும் பேரினிலே புள்ளிவைப்பார் தமிழ்மக்கள்
கட்டழைக் காட்டியது களிப்பினையே நல்கிநிற்கும்
மங்கலத்தைக் காட்டுதற்கு குங்குமத்தைப் பொட்டுவைத்து
சந்தனமும் சேர்த்திடுவார் சந்தோஷம் கூடிவரும் !பெரும்பணத்தைக் கொண்டாரை பெரும்புள்ளி எனவழைப்போம்
அரசியலில் பெரும்புள்ளி அனைத்தையுமே அள்ளிவிடும்
பெரும்புள்ளி பலபேரும் பேயாட்டம் ஆடிடுவார்
புள்ளியது பெயராலே புரட்சியே வெடித்தும்விடும் !வாசலிலே கோலமிட்டு மங்கலத்தைக் காட்டிடுவோம்
மாக்கோலம் பூக்கோலம் வகைவகையாய் போட்டிடுவோம்
புள்ளிவைத்துக் கோலமிடும் புள்ளிமானைக் குறிபார்க்கும்
நல்லபுள்ளி கெட்டபுள்ளி நாமறிந்தால் நல்லதன்றோ !நல்லபுள்ளி நல்லகோலம் நலம்பயங்கும் யாவருக்கும்
அல்லல்தரும் புள்ளியினால் அவதூறே வந்துநிற்கும்
புள்ளியினைத் தேர்ந்தெடுத்து புதுக்கோலம் அமைத்திடுவோம்
நல்லதெல்லாம் எம்வாழ்வில் அமைந்துவிடும் புள்ளியினால் ! -
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . ( 238 )
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்கள். இங்கிலாந்து வாழ் மக்கள் மனங்களில் மீண்டும் ஒரு பேரிடி. இரண்டு வாரங்களுக்கு முன்னர் துயரத்துடன் வரைந்த மடலின் துயர் ஆறுமுன்னே மீண்டும் ஒரு துயர் மடலை வரைவேன் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.
சிறிய காயம் பெரிய துன்பம் !
ஆறுமுன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போதும்
உள்ளம் பாவம் என்ன செய்யும் !எனும் கவியரசர் கண்ணதாசனின் வரிகள் இன்றைய இங்கிலாந்து பெரும்பான்மை மக்களின் (நானும் உட்பட) நிலையை அழகாக எடுத்தியம்புகிறது. இங்கிலாந்தின் சமர் எனப்படும் வசந்தகாலம் பகல் மிக நீண்டதாக இருக்கும். விண்டர் எனப்படும் குளிர்கால அசெளகரியங்களைத் தாக்குப்பிடித்து சமர் எனப்படும் வசந்த காலத்தை நோக்கி ஆவலுடன் காத்திருப்பார்கள். அத்தகையதோர் அழகிய மாலைப் பொழுதினை மகிழ்ச்சியுடன் கழித்து கொண்டிருந்த ஒரு சனிக்கிழமை முன்னிரவு வேளை. இங்கிலாந்தைப் பார்த்து மகிழ வேண்டும் என்று வந்திருந்த பல சுற்றுலாப் பயணிகள் பலரும் களிப்புடன் வலம் வரும் வேளை உலகின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றான லண்டன் மாநகரம் ஜே ஜே என்று குதூகலித்துக் கொண்டிருந்த வேளை. சுமார் 10 மணியளவில் ஒரு வெண்ணிற வான் லண்டன் பிரிட்ஜ் எனும் உலகப் பிரசித்தி பெற்ற லண்டன் மேம்பாலத்திலிருந்து தேம்ஸ் நதியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மிலேச்சத்தனமாக நடைபாதையில் ஏறித் தாக்கியது. ஆம் இனவெறி, ,மதவெறி கொண்ட மூளையற்ற மூன்று பயங்கரவாதிகளின் செயல் லண்டன் நகரையே பதை பதைக்க வைத்துள்ளது. அது மட்டுமா ! அந்த வெண்ணிற வானை பாலத்தோடு மோத விட்டு விட்டு குதித்து ஓடிய அந்த மூன்று மனித மிருகங்களும் அருகிலுள்ள பரோ ஹை ஸ்ட்ரீட் எனும் பெருவீதியினுள் நுழைந்து அங்கே முன்னிரவு வேளையை மகிழ்வுடன் கழித்துக் கொண்டிருந்த ஏதுமறியா அப்பாவி மக்களின் மீது சாராமாரியாக வேறுபாடு இல்லாமல் கத்திக்குத்து நடத்தியுள்ளன.
காவற்துறையினருக்கு செய்தி கிடைத்து சரியாக எட்டு நிமிடத்துக்குள் இங்கிலாந்து காவற்துறையினரால் அம்மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இம்மிலேச்சத்தனமான தாக்குதல்களின் விளைவு ! சுமார் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 48 பேர் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்கள். உயிரிழந்தவர்கள் இங்கிலாந்து தேசத்தவர்கள் மட்டுமல்ல பன்னாட்டைச் சேர்ந்தவர்களும் இதிலடங்குவர். காதலனின் கண்முன்னே ஒரு இளம்பெண் பத்துத் தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். இங்கிலாந்து போக்குவரத்துப் போலிஸ் உத்தியோகத்தவர் ஓய்விலிருந்தவேளையில் உதவிக்கு ஓடியபோது கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
ஏன் இந்த மிலேச்சத்தனம், ? இது யார் பெயரால் நடத்தப்படுகிறது ? இதனால் இவர்கள் காணப்போகும் விளைவுதான் என்ன ? எனும் பல கேள்விகள் இங்கிலாந்து மக்களின் மனங்களில் பெரும் அலைகளாக அடித்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே வேற்றினத்து மக்கள் , வேற்றுக் கலாச்சாரப் பின்னனி கொண்டவர்கள் இங்கிலாந்தில் இருப்பதை ஏற்றுக் கொள்ளாத இனத்துவேஷம், இனவாதம் முதலியவற்றைக் கொள்கைகளாகக் கொண்டவர்களின் கரங்களை வலுப்படுத்தும் செயல்களாகவே இவை அமைகின்றன. பல்லினக் கலாச்சாரம் எனும் வாழ்க்கை முறைக்கு இங்கிலாந்து ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது என்று பெரும்பான்மை இங்கிலாந்து மக்கள் மகிழ்வதுவே இந்ந்நாட்டின் நடைமுறை. ஆனால் அதே சமயம் தேசியவாதிகள் எனத் தம்மைக் காட்டிக் கொள்வோர் சிலர் இப்பல்லினக் கலாச்சாரம் இங்கிலாந்தின் வாழ்க்கை முறைக்கு ஒரு சவாலாகவே அமையும் என்று கூப்பாடு போட்டார்கள். அவர்கள் இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை தமது வாதத்துக்குச் சார்பாக எடுத்துக் கொள்கிறார்கள்.
இங்கிலாந்தில் வாழும் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் சமாதன மனமுடையவர்கள் . இந்நாட்டைத் தமது நாடாக எண்ணி வாழ்கிறார்கள். இத்தகைய தாக்குதல்கள் , மற்றும் தீவிரவாதக் கருத்துக்களை முற்றாக எதிர்ப்பவர்கள். ஆனால் இத்தகைய மூடர்களின் செயல்கள் ஒட்டுமொத்தமாக அனைத்து இஸ்லாமிய சமூகத்தின் மீதும் சேற்றை வாரி இறைக்கும் செயலாகவே இருக்கிறது. இஸ்லாமியர்கள் மட்டுமல்ல அனைத்து வேற்றுநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் மீதும், அவர்களின் சந்ததியின் மீதும் இங்கிலாந்து மக்களுக்கு ஒருவிதமான பயத்தையும், சந்தேகத்தையுமே தோற்றுவிக்கும். அதுவும் குறிப்பாக ஆசிய இனத்தவர் மீது ,. இது எதிர்பார்க்கப் படவேண்டிய ஒன்றே !
தத்தம்நாடுகளின் சர்வாதிகாரப் போக்குக்கு முகம் கொடுக்க முடியாமல் தனிமனித சுதந்திரத்தை இழந்து இங்லிலாந்துக்கு தஞ்சம் கேட்டு வருபவர்கள், உண்ணக் கொடுக்கும் கைகளையே கடிப்பது போல தமக்கு வாழ்வளித்த நாட்டையே சீரழிக்கும் செயலில் இறங்குவது மனதை மிகவும் வேதனைப் படுத்துகிறது.
என்னை எடுத்துக்கொள்ளுங்கள் சுமார் 42 வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்துக்குள் மாணவனாக நுழைந்தேன். நான் பிறந்த நாட்டில் பதினெட்டே ஆண்டுகள் தான் வாழ்ந்துள்ளேன். நான் இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்தததுக்கு எவ்விதமான அரசியல் காரணகளும் இல்லை. வெறும் உயர்கல்விக்காகவும் என் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்காகவுமே நான் புலம் பெயர்ந்தேன். எனக்கு உயர் கல்வியளித்து,, பட்டமளித்து, எனக்கு இங்கே நிரந்தர வசிப்பிடம் கொடுத்து, என்னத் தனது நாட்டின் பிரஜையாக்கி, பணிபுரியும் வாய்ப்பளித்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து வாழவைத்தது இங்கிலாந்து என்றால் மிகையாகாது. எனது இந்த 42 வருட காலத்தில் நான் வேறுநாட்டிலிருந்து இங்கு வந்தவன் எனும் உணர்வைக் கல்வியிலோ, அன்று உத்தியோக வாய்ப்புக்களிலோ என்றுமே உணரப்பண்ணியதில்லை. இத்தகைய ஒரு சகிப்புத் தன்மை கொண்ட சமூகத்தை கண்பதென்பது அரிய பாக்கியமே !
ஆனால் இன்றோ சிலர் தமக்கு அரசியல் தஞ்சமளித்த அன்றி வாறுமையிலிருந்து பாதுகாப்பளித்த இந்நாட்டிற்குத் தீங்கு விளைவிக்க எண்ணுவது, இந்நாட்டின் ஏதுமறியா மக்களின் உயிரைப் பறிக்கும் பாதகச் செயல்களைப் புரிவதை அவர்கள் எவ்வகையிலும் நியாயப்படுத்தி விட முடியாது. உலகின் எந்த ஒரு மதமும் அன்பையன்றி, அழிவை விதைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதில்லை. ஆனால் அம்மதத்தின் பெயரால் தமது வெறியைத் தணித்துக் கொள்வதினால் பல்லின மக்களும் இணைந்து வாழும் இம்மேற்கத்திஒய நாடுகளில் இனங்களிடையே கலாச்சாரப் பிரிவுகளைப் பெரிதாக்குவதையும், பிரிவினையைத் தோற்றுவிப்பதையும் தான் அவர்கள் சாதிக்கிறார்கள். அப்படி ஒரு சூழலை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாகத் தென்படுகிறது. தமது பின்புல நாடுகளில் பேச்சுரிமை, எழுத்துரிமை, தனிமனிதச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றை இழந்தவர்கள் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழ்வோரின் அத்தகைய உரிமைகளுக்கு குந்தகம் விளைவிப்பதற்காலவே இப்பயங்கரவாதச் செயல்களைப் புரிவது போலவே தென்படுகிறது .
இங்கிலாந்தின் பொதுத்தேர்தல் நடைபெறும் காலத்தில் அடுத்தடுத்து இரண்டு வார இடைவெளிகளில் இத்தகைய நிகழ்வுகளை நடத்தியது இங்கிலாந்தின் ஜனநாயகத் தேர்தலுக்கு இடையூறு விளைப்பதற்காகத்தான் இருக்கும் என்பது பலரது அபிப்பிராயம். ஆனால் இங்கிலாந்தின் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் தேர்தல் குறிப்பிட்ட தேதியில் நடந்தே தீரும் நாமனைவரும் ஒன்று பட்டு எவ்வித சமூகப் பிரிவுகளிக்கும் உட்படாது இப்பயங்கரவாதிகளின் நோக்கத்தைத் தோற்கடிப்போம் என்று சங்கற்பம் பூண்டிருக்கிறார்கள். ஆனால் இச்ச்செயல்கள் தேர்தல் பிரச்சார இறுதிக் கட்டத்தில் பிரச்சாரத்தின் போக்கை தேசியப் பாதுகாப்பென்னும் கொள்கையை நோக்கி அதிதீவிரமாக திசை திருப்பி விட்டிருக்கிறது.
இக்கட்டுரை வெளியிடப்படும் யூன் 9ம் திகதி இங்கிலாந்தின் புதிய அரசை யார் அமைக்கப் போகிறார்கள் என்று தெரிந்துவிடும். அதைத் தொடர்ந்து இம்மூர்க்கத்தனமான பயங்கரவாதச் செயல்களின் விளைவாக இங்கிலாந்தின் சட்டங்களில் எத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்படப் போகிறது என்பது தெரிந்துவிடும். அதைப் பற்றி அடுத்தடுத்த மடல்களில் கலந்துரையாடுவோம்.
அன்பும், சமாதனமும், மத, மொழியிணக்கமும், எதுவிதமான பேதங்களுமற்ற சகோதரத்துவமுமே உலகின் அமைதிக்கு வழிகோலும். நாமனைவரும் நாம் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்களை மதித்து, எமக்கு வாழ்வளித்த நாட்டுக்கு உண்மையான பிரஜைகளாக வாழ்வதே நாம் பிறந்த எமது தாய்மண்ணுக்கு பெருமையளிக்கும் என்பதுவே உண்மையாகும்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன் -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”மாடவர், மாதவர், மாதாகே சவ்விரல்
கோடவர், கோகுல கோபாலர், -வீடவர்,
ராதை கரம்விலக்கிக், கீதை உரைநிறுத்தி,
ஆதரவுக்(கு) ஓடும் அரி’’….கிரேசி மோகன்….! -
இரண்டாம் உலகத்தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு!
பவள சங்கரி
இதோ.. இதோ வந்துவிட்டது உலகத்தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டுத் திருவிழா! என்னுடைய அமர்வு 11-06-17 – ஞாயிற்றுக்கிழமை ஔவையார் அரங்கில் திருமிகு என்.கண்ணன் (செயலர், முத்தமிழ்ப்பேரவை, புதுதில்லி) முன்னிலை, திருமிகு முனைவர் காவ்யா சண்முகசுந்தரம் தலைமையில், கடல்சார் வணிகமும் பண்டைத்தமிழகமும் பண்பாடும் என்ற பொருண்மையில் அமைகிறது. மிக மகிழ்ச்சியான தருணம். அற்புதமான இந்த வாய்ப்பளித்த நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி.



























