சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள். இங்கிலாந்து வாழ் மக்கள் மனங்களில் மீண்டும் ஒரு பேரிடி. இரண்டு வாரங்களுக்கு முன்னர் துயரத்துடன் வரைந்த மடலின் துயர் ஆறுமுன்னே மீண்டும் ஒரு துயர் மடலை வரைவேன் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

சிறிய காயம் பெரிய துன்பம் !
ஆறுமுன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போதும்
உள்ளம் பாவம் என்ன செய்யும் !

எனும் கவியரசர் கண்ணதாசனின் வரிகள் இன்றைய இங்கிலாந்து பெரும்பான்மை மக்களின் (நானும் உட்பட) நிலையை அழகாக எடுத்தியம்புகிறது. இங்கிலாந்தின் சமர் எனப்படும் வசந்தகாலம் பகல் மிக நீண்டதாக இருக்கும். விண்டர் எனப்படும் குளிர்கால அசெளகரியங்களைத் தாக்குப்பிடித்து சமர் எனப்படும் வசந்த காலத்தை நோக்கி ஆவலுடன் காத்திருப்பார்கள். அத்தகையதோர் அழகிய மாலைப் பொழுதினை மகிழ்ச்சியுடன் கழித்து கொண்டிருந்த ஒரு சனிக்கிழமை முன்னிரவு வேளை. இங்கிலாந்தைப் பார்த்து மகிழ வேண்டும் என்று வந்திருந்த பல சுற்றுலாப் பயணிகள் பலரும் களிப்புடன் வலம் வரும் வேளை உலகின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றான லண்டன் மாநகரம் ஜே ஜே என்று குதூகலித்துக் கொண்டிருந்த வேளை. சுமார் 10 மணியளவில் ஒரு வெண்ணிற வான் லண்டன் பிரிட்ஜ் எனும் உலகப் பிரசித்தி பெற்ற லண்டன் மேம்பாலத்திலிருந்து தேம்ஸ் நதியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மிலேச்சத்தனமாக நடைபாதையில் ஏறித் தாக்கியது. ஆம் இனவெறி, ,மதவெறி கொண்ட மூளையற்ற மூன்று பயங்கரவாதிகளின் செயல் லண்டன் நகரையே பதை பதைக்க வைத்துள்ளது. அது மட்டுமா ! அந்த வெண்ணிற வானை பாலத்தோடு மோத விட்டு விட்டு குதித்து ஓடிய அந்த மூன்று மனித மிருகங்களும் அருகிலுள்ள பரோ ஹை ஸ்ட்ரீட் எனும் பெருவீதியினுள் நுழைந்து அங்கே முன்னிரவு வேளையை மகிழ்வுடன் கழித்துக் கொண்டிருந்த ஏதுமறியா அப்பாவி மக்களின் மீது சாராமாரியாக வேறுபாடு இல்லாமல் கத்திக்குத்து நடத்தியுள்ளன.

காவற்துறையினருக்கு செய்தி கிடைத்து சரியாக எட்டு நிமிடத்துக்குள் இங்கிலாந்து காவற்துறையினரால் அம்மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இம்மிலேச்சத்தனமான தாக்குதல்களின் விளைவு ! சுமார் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 48 பேர் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்கள். உயிரிழந்தவர்கள் இங்கிலாந்து தேசத்தவர்கள் மட்டுமல்ல பன்னாட்டைச் சேர்ந்தவர்களும் இதிலடங்குவர். காதலனின் கண்முன்னே ஒரு இளம்பெண் பத்துத் தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். இங்கிலாந்து போக்குவரத்துப் போலிஸ் உத்தியோகத்தவர் ஓய்விலிருந்தவேளையில் உதவிக்கு ஓடியபோது கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

ஏன் இந்த மிலேச்சத்தனம், ? இது யார் பெயரால் நடத்தப்படுகிறது ? இதனால் இவர்கள் காணப்போகும் விளைவுதான் என்ன ? எனும் பல கேள்விகள் இங்கிலாந்து மக்களின் மனங்களில் பெரும் அலைகளாக அடித்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே வேற்றினத்து மக்கள் , வேற்றுக் கலாச்சாரப் பின்னனி கொண்டவர்கள் இங்கிலாந்தில் இருப்பதை ஏற்றுக் கொள்ளாத இனத்துவேஷம், இனவாதம் முதலியவற்றைக் கொள்கைகளாகக் கொண்டவர்களின் கரங்களை வலுப்படுத்தும் செயல்களாகவே இவை அமைகின்றன. பல்லினக் கலாச்சாரம் எனும் வாழ்க்கை முறைக்கு இங்கிலாந்து ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது என்று பெரும்பான்மை இங்கிலாந்து மக்கள் மகிழ்வதுவே இந்ந்நாட்டின் நடைமுறை. ஆனால் அதே சமயம் தேசியவாதிகள் எனத் தம்மைக் காட்டிக் கொள்வோர் சிலர் இப்பல்லினக் கலாச்சாரம் இங்கிலாந்தின் வாழ்க்கை முறைக்கு ஒரு சவாலாகவே அமையும் என்று கூப்பாடு போட்டார்கள். அவர்கள் இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை தமது வாதத்துக்குச் சார்பாக எடுத்துக் கொள்கிறார்கள்.

இங்கிலாந்தில் வாழும் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் சமாதன மனமுடையவர்கள் . இந்நாட்டைத் தமது நாடாக எண்ணி வாழ்கிறார்கள். இத்தகைய தாக்குதல்கள் , மற்றும் தீவிரவாதக் கருத்துக்களை முற்றாக எதிர்ப்பவர்கள். ஆனால் இத்தகைய மூடர்களின் செயல்கள் ஒட்டுமொத்தமாக அனைத்து இஸ்லாமிய சமூகத்தின் மீதும் சேற்றை வாரி இறைக்கும் செயலாகவே இருக்கிறது. இஸ்லாமியர்கள் மட்டுமல்ல அனைத்து வேற்றுநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் மீதும், அவர்களின் சந்ததியின் மீதும் இங்கிலாந்து மக்களுக்கு ஒருவிதமான பயத்தையும், சந்தேகத்தையுமே தோற்றுவிக்கும். அதுவும் குறிப்பாக ஆசிய இனத்தவர் மீது ,. இது எதிர்பார்க்கப் படவேண்டிய ஒன்றே !

தத்தம்நாடுகளின் சர்வாதிகாரப் போக்குக்கு முகம் கொடுக்க முடியாமல் தனிமனித சுதந்திரத்தை இழந்து இங்லிலாந்துக்கு தஞ்சம் கேட்டு வருபவர்கள், உண்ணக் கொடுக்கும் கைகளையே கடிப்பது போல தமக்கு வாழ்வளித்த நாட்டையே சீரழிக்கும் செயலில் இறங்குவது மனதை மிகவும் வேதனைப் படுத்துகிறது.

என்னை எடுத்துக்கொள்ளுங்கள் சுமார் 42 வருடங்களுக்கு முன்னால் இங்கிலாந்துக்குள் மாணவனாக நுழைந்தேன். நான் பிறந்த நாட்டில் பதினெட்டே ஆண்டுகள் தான் வாழ்ந்துள்ளேன். நான் இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்தததுக்கு எவ்விதமான அரசியல் காரணகளும் இல்லை. வெறும் உயர்கல்விக்காகவும் என் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்காகவுமே நான் புலம் பெயர்ந்தேன். எனக்கு உயர் கல்வியளித்து,, பட்டமளித்து, எனக்கு இங்கே நிரந்தர வசிப்பிடம் கொடுத்து, என்னத் தனது நாட்டின் பிரஜையாக்கி, பணிபுரியும் வாய்ப்பளித்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து வாழவைத்தது இங்கிலாந்து என்றால் மிகையாகாது. எனது இந்த 42 வருட காலத்தில் நான் வேறுநாட்டிலிருந்து இங்கு வந்தவன் எனும் உணர்வைக் கல்வியிலோ, அன்று உத்தியோக வாய்ப்புக்களிலோ என்றுமே உணரப்பண்ணியதில்லை. இத்தகைய ஒரு சகிப்புத் தன்மை கொண்ட சமூகத்தை கண்பதென்பது அரிய பாக்கியமே !

ஆனால் இன்றோ சிலர் தமக்கு அரசியல் தஞ்சமளித்த அன்றி வாறுமையிலிருந்து பாதுகாப்பளித்த இந்நாட்டிற்குத் தீங்கு விளைவிக்க எண்ணுவது, இந்நாட்டின் ஏதுமறியா மக்களின் உயிரைப் பறிக்கும் பாதகச் செயல்களைப் புரிவதை அவர்கள் எவ்வகையிலும் நியாயப்படுத்தி விட முடியாது. உலகின் எந்த ஒரு மதமும் அன்பையன்றி, அழிவை விதைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதில்லை. ஆனால் அம்மதத்தின் பெயரால் தமது வெறியைத் தணித்துக் கொள்வதினால் பல்லின மக்களும் இணைந்து வாழும் இம்மேற்கத்திஒய நாடுகளில் இனங்களிடையே கலாச்சாரப் பிரிவுகளைப் பெரிதாக்குவதையும், பிரிவினையைத் தோற்றுவிப்பதையும் தான் அவர்கள் சாதிக்கிறார்கள். அப்படி ஒரு சூழலை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாகத் தென்படுகிறது. தமது பின்புல நாடுகளில் பேச்சுரிமை, எழுத்துரிமை, தனிமனிதச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றை இழந்தவர்கள் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழ்வோரின் அத்தகைய உரிமைகளுக்கு குந்தகம் விளைவிப்பதற்காலவே இப்பயங்கரவாதச் செயல்களைப் புரிவது போலவே தென்படுகிறது .

இங்கிலாந்தின் பொதுத்தேர்தல் நடைபெறும் காலத்தில் அடுத்தடுத்து இரண்டு வார இடைவெளிகளில் இத்தகைய நிகழ்வுகளை நடத்தியது இங்கிலாந்தின் ஜனநாயகத் தேர்தலுக்கு இடையூறு விளைப்பதற்காகத்தான் இருக்கும் என்பது பலரது அபிப்பிராயம். ஆனால் இங்கிலாந்தின் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் தேர்தல் குறிப்பிட்ட தேதியில் நடந்தே தீரும் நாமனைவரும் ஒன்று பட்டு எவ்வித சமூகப் பிரிவுகளிக்கும் உட்படாது இப்பயங்கரவாதிகளின் நோக்கத்தைத் தோற்கடிப்போம் என்று சங்கற்பம் பூண்டிருக்கிறார்கள். ஆனால் இச்ச்செயல்கள் தேர்தல் பிரச்சார இறுதிக் கட்டத்தில் பிரச்சாரத்தின் போக்கை தேசியப் பாதுகாப்பென்னும் கொள்கையை நோக்கி அதிதீவிரமாக திசை திருப்பி விட்டிருக்கிறது.

இக்கட்டுரை வெளியிடப்படும் யூன் 9ம் திகதி இங்கிலாந்தின் புதிய அரசை யார் அமைக்கப் போகிறார்கள் என்று தெரிந்துவிடும். அதைத் தொடர்ந்து இம்மூர்க்கத்தனமான பயங்கரவாதச் செயல்களின் விளைவாக இங்கிலாந்தின் சட்டங்களில் எத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்படப் போகிறது என்பது தெரிந்துவிடும். அதைப் பற்றி அடுத்தடுத்த மடல்களில் கலந்துரையாடுவோம்.

அன்பும், சமாதனமும், மத, மொழியிணக்கமும், எதுவிதமான பேதங்களுமற்ற சகோதரத்துவமுமே உலகின் அமைதிக்கு வழிகோலும். நாமனைவரும் நாம் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்களை மதித்து, எமக்கு வாழ்வளித்த நாட்டுக்கு உண்மையான பிரஜைகளாக வாழ்வதே நாம் பிறந்த எமது தாய்மண்ணுக்கு பெருமையளிக்கும் என்பதுவே உண்மையாகும்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *