சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? (5)
பவள சங்கரி
சம்பந்தமில்லாத வார்த்தைகள் அல்லது கூறுகளை இணைத்து கட்டமைக்கப்பட்ட களம் என்றாலும் புரட்சிகரமானதாகவோ, நவீனமானதோ அல்லது புதுமையானதொரு கருத்தைக் கொண்டிருக்கும்பட்சத்தில் அதனை முழுமையாக வரவேற்று வடிவமைப்பதில் பாதகமில்லை. கற்பனைக்களம் அமையுமிடம் ஆறோ, குளமோ, நடைமேடையோ, கானகமோ என எதுவாயினும் கனவுலகில் தோன்றும் கற்பனையை துளியும் சிதறாமல் அப்படியே மேலெடுத்துச் செல்லவேண்டியது அவசியம். உங்கள் கதை ஆரம்பமாகும் இந்த இடம்தான் சாத்தியமற்ற ஒன்றாகக் கருத்தப்படும் கற்பனைகளும் நினைவில் நிற்கும் அற்புதமான படைப்புகளாக உருவாகும் இடம் எனலாம்.
இலக்கியம் படைக்க எண்ணி அமரும்போது உள்ளம் வெற்றிடமாக கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோன்று இருண்ட காட்சியாக நிற்பது சாத்தியம். இந்த நேரத்தில் என்ன செய்யலாம்? மெல்ல நினைவுகளை பின்னோக்கி நகர்த்துங்கள்..
இளமைக்காலத்தில் விரும்பி வாசித்த நூல்கள், வாசிக்கப் பிடிக்காத நூல்கள், பெற்றோரின் கட்டாயத்திற்காக வாசித்த நூல்கள், பதின்மத்தில் மனம் கவர்ந்த நூல்கள், சில பாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் போன்றவற்றையும்,
இளமைக்கால அச்சங்கள், சாகசங்கள், மறக்க முடியாத மகிழ்ச்சித் தருணங்கள், பயமுறுத்திய கனவுகள், இனிய பயணங்கள், பிடித்த நிகழ்வுகள், நண்பர்கள், சம்பந்தப்பட்ட முக்கிய நிகழ்வுகள், நண்பர்களால் கிடைத்த உதவிகள், நம் முன்னேற்றத்தில் அவர்தம் பங்களிப்புகள், பள்ளியில் பெற்ற அனுபவங்கள், பத்தாம்பசலித்தனங்கள், மாற்றம் ஏற்படுத்திய முக்கிய நிகழ்வுகள், நட்பின் பிரிவு, இடமாற்றம், இப்படி பழைய நினைவுகளை ஒவ்வொன்றாக அசை போட ஆரம்பிக்கும்போது, ஓரிடத்தில் நினைவுகள் மேற்கொண்டு நகராமல் நின்று ஆழ்ந்து பயணிக்கும். அந்த இடத்தில் ஊன்றி கவனித்து கற்பனையையும் செலுத்தி காவியம் படைக்க வேண்டியதுதான்!
எது குழந்தைகள் / சிறார்கள் இலக்கியம்?
இலக்கியங்கள் பொதுவாக படைப்பாளர்களின் நடை, திறம், சுவை எனும் பல்வேறு கோணங்களில் வேறுபடத்தான் செய்கின்றன. ஆயினும் படைப்புகள் யாருக்காகப் படைக்கப்படுகிறதோ அதற்குண்டான பொதுவான சில அடிப்படை கட்டமைப்புகளை உணர்ந்து அதற்கேற்றவாரு தமது ஆக்கங்களை படைப்பவர்களே ஆகச்சிறந்த எழுத்தாளர்களாக மிளிர்கிறார்கள்.
மழலையரின் மகிழ்ச்சிக்காவியங்கள்:
பாடல்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. குழந்தையின் வயதிற்கேற்ப ஒரு நூல் இருக்கிறதா என்பதை யோசித்து அதற்கேற்ற நூல்களை வாங்க வேண்டும் என்று நினைக்கிற பெற்றோரின் புரிதல் நிலையில் நின்று படைப்பாளர்கள் சிந்திக்கவேண்டியது அவசியமாகிறது. எத்தகைய படைப்பாக இருந்தாலும் குழந்தை எழுத்தாளர் குழந்தையின் மன நிலையிலிருந்து தான் எழுத வேண்டும்.
குழந்தை தொட்டிலில் இருக்கும்போதே தாலாட்டுப்பாடல் பாடி படிப்பின் துவக்கத்தை ஆரம்பித்து வைக்கும் முதல் ஆசிரியை அன்னை. அறிவு, துணிவு, நற்பண்பு போன்றனைத்தையும் தொட்டிலிலேயே ஊட்டி வளர்ப்பவள் அந்த படைப்பாளி. பின் மழலை பேசத் தொடங்கும் பருவத்தில் ‘நிலா நிலா ஓடி வா’ ‘கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு’, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, சாயக்கிளியே சாய்ந்தாடு’ போன்ற பாடல்களை பாடுவதற்குப் பழக்குகிறாள். இங்குதான் ஆயத்தப் பாடல்கள் (motivation) கற்பித்தலின் முதல் படியாக முக்கியத்துவம் பெறுகிறது. துவக்க நிலையில் குழந்தைகள் நிறைய பாடல்களைக் கேட்பதும் தம் மழலை மொழியில் அதனை அழகாகப் பாடுவதும் அவர்களின் மொழித் திறன்களை வளர்க்க உதவுகிறது. மழலைப் பாடல்கள் குழந்தைகளைப் பரவசப்படுத்துகிறது என்பதே நிதர்சனம். குழந்தைகளின் மனதில் கதை சொல்லியாக, பாடகராக, நடிகராக, நடனக்காரராக இடம் பிடித்து விட்டால் அதுவே அந்த படைப்பாளரின் நிரந்தர வெற்றி என்றாகிவிடும்.
மழலையருக்காக வாசிக்கப்படும் பொம்மைப் புத்தகங்கள்
“இன்றுள்ள ஜனநாயக அமைப்பிலே, ஒரு குக்கிராமத்தில் ஒரு சின்னஞ்சிறு குடிசையிலே பிறந்த குழந்தையும், நாளைய குடியரசுத் தலைவராகலாம்; பிரதமராகலாம்; முதலமைச்சராகலாம்; உலகம் புகழும் விஞ்ஞானியாகலாம்; தொழில் நிபுணராகலாம்; மருத்துவராகலாம்; கவிஞராகலாம்; எழுத்தாளராகலாம்; கல்வியாளராகலாம்; இசை மேதையாகலாம்; கலைஞராகலாம். அவர்கள் அப்படி ஆவதற்கான அடித்தளத்தை அமைத்துத் தருபவை வாழ்க்கை வரலாறுகளே” என்று கூறுகிறார் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா.
சிறுவர் இலக்கிய வரலாறு:
பாட்டி வடை சுட்ட கதை, காக்கையும் நரியும், சிங்கமும் எலியும் போன்ற பல நூறு கதைகள் நம் முன்னோர்கள் கதை சொல்லிகளாக சிறார்களை மகிழ்வித்தவைகள் தொன்றுதொட்டு பரம்பரையாக இன்றுவரை வந்துகொண்டிருக்கின்றன.
பதினொன்றாம் நூற்றாண்டில் ஒளைவையார், ஆத்திச்சூடி எனும் நீதிபோதனையை குழந்தைகளுக்காக உருவாக்கினார். இதுவே இன்றைய பல புதிய குழந்தைகள் இலக்கியப் படைப்பாளர்களுக்கு முன்னோடியாக உள்ளது. அதன்பின் அதிவீரராம பாண்டியர் எழுதிய ‘வெற்றிவேற்கை’ சிறந்த படைப்பாக இருந்தது. உலகநாதர் எழுதிய உலகநீதி என்பதும் நீதி நூல்.
17ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்தகுரு கதைகள் அச்சில் வந்தது. 19ஆம் நூற்றாண்டில் கதா மஞ்சரி வெளியானது. 1853இல் ஈசாப் கதைகள், 1889இல் பன்ருட்டி சி.கோவிந்தசாமி, அதனைத்தொடர்ந்து 1917இல் அ.மாதவய்யா பால விநோதக் கதைகளை இயற்றி வெளியிட்டார். விக்ரமாதித்தன் கதைகள், தெனாலிராமன், மரியாதை ராமன், பீர்பால், முல்லா, ஈசாப் கதைகள், அரேபிய இரவுக் கதைகள் போன்று தொடர்ந்து வந்தன. பழங்கால பஞ்ச தந்திரக் கதைகளை அறியாதவர் இலர்.
சிறுவர் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் பாடல் என்றால் அது HA கிருஷ்ணப் பிள்ளை (1827-1900) இயற்றிய ‘இரட்சன்ய மனோகரம்’, அடுத்து 1886 ஆம் ஆண்டில் இலங்கை யாழ்பாணத்தின், தம்பி முத்துப்பிள்ளை இயற்றிய ‘பாலியக்கும்பி’ போன்றவை. 1900களின் தொடக்கத்தில் அய்யாசாமி என்பவர், ராமரின் பால்ய பருவத்தை மட்டும் பாடல் வடிவில் கொடுத்த நூலான பால இராமாயணம் இயற்றினார்.
பாரதியார், கவிமணி, பாரதிதாசன், சுத்தானந்த பாரதி, வாணிதாசன், தமிழ் ஒளி ஆகியோர் சிறுவர் பாடல்களை இயற்றியதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
18ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பக்காலங்களில் குழந்தைப்பாடல், விடுகதைகள் தவிர, நீதிபோதனைக் கதைகளோ, ஆன்மீகக் கதைகளோ இருக்கவில்லை. 1730 காலகட்டங்களில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் நூற்றுக்கணக்கான மிருகங்கள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்ட நூல்கள் வந்திருந்தன. 1740 ஆண்டுகளில் லண்டன் மாநகரில் குழந்தைகளுக்காக வெளியிடப்பட்ட நூல்கள் பெரும் திருப்பு முனையாக அமைந்திருந்தது. 1740 – 43களில் தாமஸ் போர்மன் என்ற எழுத்தாளர், முந்நூறு மிருகங்களின் வாழ்வியல் முறைமைகளைச் சுவையாக விளக்கும் வரலாற்றுத் தொடர்களை இயற்றியிருந்தார்.
குழந்தைகள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமைன்றி அவர்தம் பெற்றோர், உற்றோருக்கும் உளம் நிறைக்கும் இனிய ஆங்கில குழந்தைப் பாடல்களில் இன்றளவிலும் முன்னிலை வகிக்கும் “பா,பா பிளாக் ஷீப்”, (‘Bah, bah, a black sheep’,) “ஹிக்கரி டிக்கரி டாக்” (‘Hickory dickory dock’), லண்டன் பிரிட்ஜ் ஈஸ் ஃபாலிங் டவுன் ( ‘London Bridge is falling down’ ) சிங் எ சாங் ஆஃப் சிக்ஸ்பென்ஸ் ( ‘Sing a song of sixpence’) போன்ற பிரபலமான பாடல்கள் உருவான ஆண்டு 1744, உருவாக்கியவர் மேரி கூப்பர் . மெல்ல மெல்ல தொழில்நுட்ப உதவிகளுடன், பல மாற்றங்களைச் சந்திக்கத் துவங்கிய பாடல்கள் பெரிய பதிப்பகங்களையும் உருவாக்கியதன் காரணமாக 18 ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் குழந்தைகள் புத்தக விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன. மத்தியதர வகுப்பினர் மத்தியில் நீதி போதனைப் பாடல்கள், கதைகள் போன்றவைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதன் தொடர்ச்சியாக 1800களில் குழந்தைகள் நூல் விற்பனை சிறப்பானதொரு நிலையை எட்டியதால், குழந்தைகள் படைப்பாளர்கள் இதனை தம் குடும்பத்தைக் காக்கும் தொழிலாகவே நடத்தும் அளவிற்கு வருமானமும் பெற்றனர்.
தொடருவோம்.