மீனாட்சி பாலகணேஷ்

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே
– திருமூலர்

* * * * *

சிவப்பழமான ஒரு முதியவர், திறந்த மார்பு, நெற்றி எங்கும் பட்டை பட்டையாகத் திருநீறு அணிந்தவர், அதிக மனித சந்தடி இல்லாத அந்த வேளையில் சுவாமிசந்நிதியின் பிராகாரத்திலமர்ந்து திருமுறைகளிலிருந்து பாடல்களை கணீரென்ற உரத்த குரலில், ஆனால் உள்ளம் நெகிழும் வண்ணம் பாடிக் கொண்டிருந்தார்.

புடவைத் தலைப்பால் நன்கு போர்த்தி மூடியவாறு தலைகுனிந்து, தளர்ந்த நடையுடன் பிராகாரத்தை வலம் வந்து கொண்டிருந்த சைலஜா மேற்கூறிய இந்தத் திருமந்திரப் பாடலைக் கேட்டதும் துணுக்குற்று நின்றாள். ‘எனக்குப் புரிய வைப்பதற்காகவே இங்கு இம்முதியவர் பாடிக் கோண்டிருப்பது தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது தெய்வச் செயலா?’ உடல் புல்லரித்தது.

‘சைலஜா, உன் மனதை உறுத்திக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. நீயே, உன் மனதில் உருவாக்கிக்கொண்ட மனநோய்க்கு அடிமைப்பட்டு, உள்ளத்தையும் உடலையும் பாழடித்துக் கொண்டு ஒரு வெற்று வாழ்க்கை வாழ்ந்துவந்தாய். இத்தனை ஆண்டுகள் எதைத்தேடுகிறோம் என்று அறியாமல் தேடி அலைந்தாய். ‘நான்’ என்ற நினைவு மனத்தில் நிரம்பி வழிய, உன்னை மிகவும் நேசிக்கும் கணவனையும் குழந்தையையும் கூடப் புறக்கணித்தாய். தேடியது கிடைக்காத போது அன்பு, சுயநலமற்ற அன்பு, ஆடலரசு, அமுதா, ஜிம், கீதா வடிவில் திரும்ப உனக்குக் கிட்டியுள்ளது.

‘ஏற்றுக்கொள்ள உன் சுயகௌரவம் தடுக்கிறது. பாழாக்கிக் கொண்ட உடலையும் உள்ளத்தையும் திரும்பவும் ஜிம்மின் அன்புக்கு அர்ப்பணிக்க நீ தயங்குகிறாய். முடிவு எடுக்க முடியாமல் மயங்குகிறாய்.

‘உன் கனவுகளைப் புரிந்துகொண்டு மதித்தவன் ஜிம். உன்னை, உன் இதயத்தைப் பூஜிப்பவன், ‘நான்’ என்ற எண்ணத்தைத் துறந்து, அவனுடைய மனைவி, கீதாவின் தாய், அவர்களுடைய நல்வாழ்வு என்றெண்ணி, உன்னை அதற்குக் காரணமாக்கிக்கொள். விளங்கும், நீ தேடியலைந்தது என்னவென்று…”

உடலின் வலுவெல்லாம் இழந்தவள்போல் அப்படியே அந்தச் சன்னிதியில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு தூணில் சாய்ந்திருந்தாள். எவ்வளவு நேரமாயிற்றோ?

“அம்மா, அம்மா, உங்களைத்தானே. இப்போ கதவைச் சார்த்தப்போறோம். இனிமே சாயரட்சை பூஜைக்குத்தான்- கொஞ்சம் எழுந்திருக்கிறேளா?” ஒரு இளைய அர்ச்சகர் வேண்டினார். எழுந்து வெளியே வந்தாள். உச்சி வெய்யிலின் உக்கிரத்தில் கால்சுட்டது. அது உறைக்காமலே கோவிலின் நுழைவாயிலருகே நின்றவள் திரும்பிப் பார்த்து அந்த ராஜகோபுரத்தை நோக்கிக் கைகூப்பிக் கண்மூடினாள்.
_________________________%_______________________

கடந்த இரு நாட்களாகத் தனிமையில் சிந்திக்க வேண்டி, திருவண்ணாமலைக்கு வந்து விட்டாள் சைலஜா. ‘இனி என் பாதை எது?’ என்ற கேள்விக்கு பதிலைத் தேடி கோவிலிலும் தங்கியிருந்த ஆச்ரமத்திலும் மாற்றி மாற்றி அமர்ந்து சிந்தனை செய்து நேரத்தை செலவிட்டு, உள்ளத்தை வருத்தியபடி மயங்கினாள்.

அன்றொரு நாள், ஆடலரசுடன் நடந்த ஒரு பெரிய ‘டிஸ்கஷனு’க்குப் பின் தான் இவ்வாறு வந்திருந்தாள் சைலஜா.

‘ஆஸ்பத்திரி மீட்டிங்கில் இருக்கிறார்,’ என்று அவன் செக்ரெடரி கூறியபோது பொறுமை இன்றிக் கிளம்பிவந்து, ரிஸப்ஷனில் காத்துக் கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட ஐம்பது நிமிடங்களுக்குப் பின் வெளியே வந்தவன் அவளைப்பார்த்து வியப்படைந்து, இது ஏதோ முக்கியமான விஷயம் எனப் புரிந்துகொண்டான்.
“சைலா, என் வேலை ஆயிற்று. நான் இன்னும் ‘லஞ்ச்’ சாப்பிடவில்லை. கொஞ்சம் வெளியே போகலாமா? சாப்பிட்டபடி பேசலாமே,” இவளது அவசரங்களை அவனால் எப்படி உணர முடிகிறது?

அந்த நட்சத்திர ஹோட்டலின் மிக அமைதியான மூலையில் நாற்காலியின் ‘மெத்’தில் அழுந்தியவர்கள் ‘லிம்கா’ ஆர்டர் செய்தார்கள். மாலை மூன்று மணியை நெருங்கி விட்டதால் கூட்டம் இல்லை.

“இரண்டு ரொட்டி, வெஜிடபிள் கறி,” என ஆர்டர் செய்தவன் சைலா ஒன்றுமே வேண்டாம் என மறுத்ததால், “ஓகே. சொல்லம்மா, உன் மனதிலுள்ளதை,” எனக் கரிசனத்துடன் வினவினான்.

“அரசு, நான் ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறேன்.”
“பார்த்தாலே தெரிகிறதே…”

“என் குழப்பத்தை எப்படி விவரிப்பது என்று புரியவில்லை. ஜிம் நான் திரும்ப அவனுடன் வரவேண்டும் என்று கேட்கிறான், கீதாவும் கூடத்தான் மிகவும் மகிழ்ந்து போவாள். ஆனால்…” வார்த்தைகளைத் தேடினாள்.

“ஆனால் என்ன? எதை யோசித்து மலைக்கிறாய்?”
“எப்படி உங்களுக்குப் புரிய வைப்பது அரசு? என் கடந்த காலம் என ஒன்றிருக்கிறதே. ஊர் சிரிக்க, முறையற்று, தான்தோன்றித்தனமாக நான் வாழ்ந்த வாழ்வு. எதன் மீதோ நான் கொண்ட வெறுப்பில், ‘எதுவும் என்னால் முடியும். யார் என்னைத் தட்டிக்கேட்பது’ என்ற இறுமாப்பில் அல்லவா என் வாழ்வை என் விருப்பப்படி வாழ்ந்தேன். என்னுடைய பிஸினஸில் நான் உயர்ந்து வெற்றிக்கொடி பறக்க விட்டபோது உண்டான திமிரில் நானாகத் தேடிக் கொண்ட வம்பு அது. ‘ஜிம்மிற்கு இது தெரியும்’ என்பதனால் நான் கவலைப் படவில்லை. அவன் தவறி அமெரிக்காவில் பிறந்து விட்ட ஒரு இந்தியன். மிக உயர்ந்த ஆத்மா. நம் பண்பாட்டை மிக உயர்வாக மதிப்பவன். என் அழுக்கான கடந்த காலத்தைப் பற்றித் தெரிந்து கொண்டால் கூட, என்மீது உள்ள அன்பினால், என்னை ஏற்றுக் கொள்வான்,” திடீரெனப் பேசுவதை நிறுத்தித் தன்னுள் ஆழ்ந்து போனாள் சைலஜா.

சர்வர் வந்து உணவைத் தட்டில் பரிமாறி விட்டுப் போனதும், “நிதானமாக யோசித்துப்பாருங்கள். என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள்,” என்றபடி ரொட்டியைப் பிய்த்துச்சாப்பிடலானான் ஆடலரசு.

“இத்தனை நாள் தாயாகவும் தந்தையாகவும் இருந்து எங்கள் குழந்தையை வளர்த்துவிட்டான் ஜிம். இது எத்தனை பெரிய சாதனை! இப்போது இந்த நிலையில் நான் எதற்காகத் திரும்பிப்போவது? என்னிடம் எதை எதிர்பார்த்து என்னை அழைக்கிறான் ஜிம்? அவனிடம் எப்படி இதைக்கேட்பேன் அரசு? என்னால், இந்த வெறுக்கத்தக்க பெண்ணால் அவனுக்கு ஆக வேண்டியதென்ன?” குரல் கம்மக் கேட்டாள் சைலஜா.

மௌனமாகச் சில நிமிடங்கள் கழிந்தன. யோசித்தபடி உணவை உண்டான் ஆடலரசு. ஒரு ரொட்டியை சாப்பிட்டு முடித்தவன், ஆழமாக ஒரு பார்வை பார்த்தபடி சைலஜாவிடம், “உங்களுடைய ஜேம்ஸ் ராபர்ட்ஸைப் போல நான் தத்துவம் படித்தவனல்ல. ஆனால் மனித உணர்வுகளை எடை போடுவதில் கொஞ்சம் சமர்த்து எனக்கு உண்டு.

“சைலா, ஒன்று கேட்கிறேன். யோசித்துப் பாரம்மா. நான், நான் என்று எப்போதும் உன்னைப் பற்றிய நினைப்புத்தானே உனக்கு? ‘என்’ வாழ்வு அவலமானது; ‘என்னைப்’ பற்றி என்ன நினைப்பார்கள்? என்னால் ஜிம்மிற்கு என்ன பிரயோஜனம்? என்று நினைவு முழுவதும் அந்த ‘என்னைப்’ பற்றியே சுழன்று கொண்டிருக்கிறதே உனக்கு, கவனித்தாயா? கொஞ்சநாள் முன்பு வரை ‘என்’னால் முடியாதது ஒன்றுமில்லை, ‘என்’னைத் தட்டிக் கேட்பவர் யார்? நான் ‘என்’ மனம் போனபடி நடப்பேன் என்று அந்த ‘என்’னைத் தான் சுற்றிச் செயல்கள் மையம் கொண்டிருந்தன. இப்போதைக்கும் அப்போதைக்கும் ஒரே வித்தியாசம், இப்போது இது பச்சாதாபத்தில் உழல்கிறது. அப்போது மமதையில் உழன்றது. சூழ்நிலை தான் வேறே தவிர, ‘தீம்’, அதாவது ‘உட்கரு’ ஒன்றே தான். அது ‘நான்’ என்பது.”

“அரசு, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நான் என்ன, சுயநலக்காரியா?” தொண்டை தழதழத்தது. கண்களில் பிரவாகம் பொங்கத் தயாராகியது.

“இல்லையம்மா, இல்லை. உன்னுடைய எண்ணத்தை ‘நான்’ என்ற வரம்பைத் தாண்டி மற்றவர்களை நோக்கி விரிவு படுத்திப் பார். ஜிம்மை சந்தோஷமாக வைப்பது, கீதாவுக்கு அன்பான தாயாக விளங்குவது, எங்களுக்கும் நல்ல நண்பராக இருப்பது- இவை ‘என்னால் முடியும்’ என்பதை விட ‘அவர்களுக்காகச் செய்கிறேன்’ என்று வேறு விதமாக எண்ணிப் பார்.

“முதலில் உன்னிடம் அன்பு செலுத்தும், உன் மீது உயிரையே வைத்திருக்கும் குடும்பத்தினரிடம் உனது தன்னலமற்ற அன்பையும் கடமையையும் காட்டிப்பார். ‘நம் மீது அன்பு கொண்டவர்கள்,’ ‘நம் குடும்பம்,’ என்ற எல்லைகளைச் சிறிதுசிறிதாக விரிவாக்கிப் பின்பு இத்தகைய உயர்ந்த அன்பும் சேவையும் எல்லாருக்குமே பொதுவாகும்படி ஏதாவது சமூக சேவையில் கூட ஈடுபடலாம்…”

பேசியபடியே அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அது கிரகணம் விலகிய சந்திரன் போலத் தெளிவு பெறுவதைக் கண்டு வியந்தான். தன்னுடைய இந்த அறிவுரை எத்தகைய செயலைச்செய்ய அவளைத்தூண்டும் என்று அவன் அறிந்தானா என்ன!

___________________________________________________________

முண்டாசு அணிந்த ஒரு கவிஞன் காளியை நோக்கி வரம் கேட்டபடி பாடி வந்தான். இப்போது அக்கவிஞன் நின்ற இடத்தில் ஒரு சிறுபெண் நின்று அவன் பாடிய பாட்டைத் திரும்பத் தன் இனிய குரலில், உயிரை உருக்கும் சாருகேசி ராகத்தில் பாடலானாள்.

‘நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்……..
…………………………………….இனி
என்னைப் புதிய உயிராக்கி –எனக்
கேதும் கவலையறச் செய்து- மதி
தன்னை மிகத் தெளிவு செய்து -என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்’-

எல்லா மாணவிகளும் ஏன் ஆசிரியர்களும்கூடக் கைதட்டி ஆரவாரிக்கின்றனர். முதல் பரிசு அந்த சிறுமிக்குத்தான். பரிசு கிடைத்த புத்தகக்கட்டை மார்போடணைத்தபடி சந்தோஷத்தில் மிதந்தபடி நடக்கிறாள் சிறுமி சைலஜா.
‘குக்கூ’ கடிகாரம் கூவி மணி ஐந்து என அறிவித்தது. ‘டக்’கென்று விழித்துக் கொண்ட ஷீலா தன்னருகே விரிந்து கிடந்த ‘பாரதியார் கவிதைகளை’க் கண்டவள், தன் கனவின் இனிமையையும், பொருளையும் உணர்ந்து மகிழ்ந்தபடி எழுந்தாள். மனம் ஒன்றையே விடாமல் எண்ணிக் கொண்டிருந்தால் கனவுகளும்கூட அதைச் சார்ந்தேதான் வருமோ? தெளிவான உள்ளத்துடன் உறங்கச்சென்றதால், நல்ல நிம்மதியான உறக்கத்தின் பின் வரும் புத்துணர்ச்சி மிகுந்திருந்தது.

திரையை விலக்கி, அந்தப் புலர்ந்தும் புலராத காலைப் பொழுதில் ஜன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்தாள். பறவைகளின் இன்னொலி நிரம்பியிருந்தது. விரிந்து சிதறியிருந்த பவழ மல்லிகை, இன்னும் என்னென்னவோ மலர்களின் நறுமணங்களை அள்ளியபடி வந்தது இளங்காற்று. நெஞ்சு நிறைய அந்த ஆரோக்கியமான காற்றை நிரப்பிக் கொண்டு சிலமுறை ஆழ்ந்து சுவாசித்தாள் ஷீலா.

ஆதித்தனின் தேர் கிளம்பி விட்ட செய்தி அடிவானத்தில் சிறு வெள்ளிக் கீற்றுகளாக வெளியிடப் பட்டு விட்டது. தான் செயல்படுத்த வேண்டிய காரியங்களை நினைவு படுத்திக் கொண்டவள் அந்த நாளை எதிர்கொள்ளத் தயாரானாள். நேரம் குறைவு- செய்ய வேண்டியவை மிக அதிகம்!

அரைமணி நேரத்தில் இரவே ‘பாக்’ செய்து வைத்திருந்த தன் சிறிய பெட்டி சகிதம் மாடிப்படிகளில் இறங்கினாள். அந்தக் காலைப்பொழுதில் தோட்டத்தில் சிறிது உலவ வேண்டும் எனத்தோன்றவே, ‘பத்து நிமிடம் தாமதமாகக் கிளம்பினால் தான் என்ன? காரில்தானே போகிறேன்?’ என்று பெட்டியை வைத்து விட்டுத் தோட்டத்தில் புகுந்தாள்.

தன் ரசனைக்காக வளர்ககப்பட்டுத் தன்னால் ரசிக்கவே படாத ரோஜாக்கள் அழகாகத் தலையசைத்து வரவேற்றபோது உள்ளம் துள்ளியது. அவைகளை வருடியும், முகர்ந்து பார்த்த படியும் நடந்தாள்.

சைலஜாவுக்கு உயிரான ஏழடுக்கு மல்லிகைப் புதர் விண்மீன்களைப் போல் சுடர்விடும் வெள்ளிய பெரிய மலர்களுடன் சிரித்தது.

உள்ளமெனும் பாத்திரத்தில் அள்ள அள்ளக் குறையாத இனிய எண்ண ஊற்றுகளுடன் சைலஜா மெல்ல உலாவினாள்.

பவழமல்லிகை மரத்திலிருந்து மலர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மெல்ல விழுந்து கொண்டிருந்தன. தெய்வானுபவமான ஒரு சுகந்தம் கமழ்ந்தது. மெல்ல, விழுந்திருந்த மலர்களை மிதிக்காமல் நடந்து மரத்தடியில் இருந்த சிறிய கல்பெஞ்சில் அமர்ந்தாள். குனிந்து, கை நிறைய மலர்களை அள்ளி எடுத்து முகத்தை அதில் லேசாகப் புதைத்துக் கொண்டாள்.

காற்று சிறிது பலமாக வீசியதில் ‘கலகல’வெனப் பவழமல்லி மலர்கள் அவள்மீது சொரிந்தன.

மனமென்ற சிமிழின் மூடியைத் திறந்து, சுகானுபவமான எண்ணங்களை வெளியே உலவவிட்டுத் திளைத்தாள் சைலா.

ஜிம்மின் மனதை மிகவும் கவர்ந்த மலர் பவழ மல்லிகை!

“எவ்வளவு சிறிய, எளிய, இனிமையான மலர் இது. மல்லிகையைப் போல் இல்லாமல், தன் வாசனையைக் கூட, கிட்டே போய் மென்மையாக முகர்ந்து பார்த்தால் தான் தெரிவிக்கின்றது. மண்ணில் விழுந்து கிடந்தாலும்கூட, எடுத்துப் பூஜையில் சேர்க்கின்றீர்கள். சிம்பிள் பட் டிவைன் அண்டு பியூட்டிபுல்,” அவனை எவ்வளவு தூரம் அது கவர்ந்துவிட்டது என்பது பிற்பாடு தானே தெரிந்தது!

திருமணத்துக்குப் புடைவை வாங்க வெங்கடேசன் இருவரையும் காஞ்சிபுரம் அழைத்துச்சென்றார். சைலஜா எடுத்த ஐந்தாறு புடைவைகளை ரசித்தவன், மேலும் பலவற்றை அவற்றின் அழகை ரசிப்பதற்காகப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்,  நடுவில் ஒரு புடைவை – வெண்மை நிற காஞ்சிப் பட்டில், சுடர் போன்ற ஆரஞ்சு வர்ண பார்டர் ஜரிகையும் நூல்வேலையுமாக ஒரு கவிதைபோல் இருந்தது. “ஷீலா, இதோ பவழமல்லிகை போன்ற ஒரு புடைவை. ப்ளீஸ், நான் உனக்கு இதை வாங்கித்தரட்டுமா? நம் திருமணத்தில் நீ இதை உடுத்துக் கொள்வாயா?”
அவன் கேட்ட தொனியும், குரலில் தென்பட்ட உற்சாகமும், உவகையுடன் ஷீலாவை அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள வைத்தன.

________________________________________

நினைவுகளைக் கடிவாளம் போட்டு ஒரு நிலையில் நிறுத்தியவள் திரும்ப வந்து ரமணி அம்மாளின் அறைக் கதவைத் தட்டி, “நான் வருகிறேன். திரும்பி வர மூன்று நான்கு தினங்கள் ஆகலாம்,” என விடை பெற்றுக் கொண்டாள்.

அவளுடைய பிரத்தியேக உபயோகத்திற்கு என்றிருந்த பென்ஸ் வண்டியை டிரைவர் மாத்யூ கொண்டு வந்து போர்டிகோவில் நிறுத்தியிருந்தார். “மாத்யூ, கவலைப்படாதீங்க. நான் பத்திரமா ஓட்டறேன். மெதுவாவே போறேன் என்ன? திருவண்ணாமலை தானே- நாலுமணி நேர டிரைவ் தானே!” என்றபடி சூட்கேஸை பின் சீட்டில் வைத்து விட்டுத் தெளிந்த மனத்துடன் வண்டியை ஸ்டார்ட் செய்து நகர்த்தினாள்.

வண்டி புள்ளியாக மறையும்வரை பார்த்தபடி நின்ற மாத்யூ, தன் எஜமானி ஷீலாவை, இத்தனை வருடங்கள் வேலைபார்த்த பின்னும் புரிந்துகொள்ள முடியாமல் போனதற்காக வருந்தி ஏங்கினார். “கடவுள் உங்களுடன் இருக்கட்டும் மேடம்,” என்றபடி சிலுவைக்குறி இட்டுக் கொண்டார்.

ஆசிரமத்தில் தங்கியதும், மணிக்கணக்காக அமைதியாக அமர்ந்து மனதை ஒருமைப்படுத்தி அடக்க முயன்றதும்தான் அவளுக்கு அடுத்த இரு தினங்களுக்கு வாழ்வின் பொருளாக இருந்தது. சிந்தனைகள் பெருகி வந்துவந்து ஓய்ந்தன. எண்ண அலைகள் வீசிவீசி ஆர்ப்பரித்தன. மெல்லச் சிறிது சிறிதாக அவற்றைக் கட்டுப்படுத்தினாள்.

தன்னைப் பரிவுடனும், கனிவுடனும், கருணையுடனும், ஆசிர்வதித்த தந்தை எனும் தெய்வத்தைச் சிந்தையில் பதித்துக் கொண்டாள். அருவமான ஒன்றின் அன்பில் (தன் மீது ஜிம்மும் கீதாவும், ப்ரியா, ஆடலரசு, அமுதா இவர்கள் பொழியும் அன்பு தான் அது) தான் கரையத்தயார் என்ற உணர்வு மூன்றாம்நாள் வந்தது. மனம் ஆனந்தத்தில் லயித்தது.

ஒற்றைப்பாயில், தரையில் உறங்கியபோது கனவுக்கும் நினைவுக்கும் இடைப்பட்ட ஒருநிலையில், விடை உருக்கொள்ள ஆரம்பித்தது. மனம் தெளிந்து விட்டது.
ஷீலா போன்ற வெகு புத்திசாலியான ஒரு பெண்ணுக்குத் தன் சிந்தனைகளையும் வாழ்க்கை முறைகளையும் ஒழுங்கு படுத்திக் கொள்வது ஒன்றும் கடினமானதாக இருக்கப் போவதில்லை!

இருட்டான பாதையில் வெளிச்சம் தெரிந்ததும் ஷீலா பயணத்தைத் தொடரத் தயாரானாள். கோவில் சன்னிதியில் புகுந்து வழிபட்டு விட்டுத் திரும்பத் தன் வீட்டை நோக்கி, ஜிம்- கீதாவை எதிர் கொள்ளத் தயாராகக் கிளம்பி விட்டாள்.

(தொடரும்)

மறு பகிர்வு: தாரகை இணைய இதழ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *