Month: August 2025

  • இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும்

    இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும்

    அண்ணாகண்ணன்

    இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும்

    ஒரு மகத்தான ஆளுமையுடன் இவரை ஒப்பிடுவது அணுவளவும் பொருந்தாது என்றாலும் ஒரே ஒரு மனநிலைக்காக இந்த ஒப்பீடு.

    காங்கிரஸ் கட்சியில் இராஜாஜி இருந்தபோது இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல், இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாண முதலமைச்சர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்தியாவின் உள்துறை அமைச்சர் என அதி உயர் பதவிகள் பலவற்றை வகித்தார். பின்னர், ஜவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் காங்கிரசிலிருந்து விலகினார். சுதந்திரா கட்சியைத் தொடங்கினார். 1967 தேர்தலில் தி.மு.க. உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாகத் தலையெடுக்கவே இல்லை. ஒரே ஒரு காய்நகர்த்தலில் காங்கிரஸ் கட்சியின் தலையெழுத்தையே மாற்றினார் இராஜாஜி.

    அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறைகள் இருந்தார். துணை முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, எதிர்க்கட்சி துணைத் தலைவராகப் பதவி வகித்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய வலது கரமாக இருந்தார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். தீய சக்தி என ஜெயலலிதாவால் அழைக்கப்பட்டவரின் மகனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தேடிச் சென்று சந்தித்துள்ளார். “அரசியலில் நண்பர்களும் இல்லை. எதிரிகளும் இல்லை. எதிர்காலத்தில், தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம்” என்று வேறு கூறியுள்ளார். தன்னை மதிக்காத அதிமுக, பாஜக கட்சிகளுக்குப் பாடம் புகட்ட, தி.மு.க. அணியில் அவர் இணையக்கூடும். தேர்தல் பரப்புரையில் திமுகவுக்காக ஓ.பன்னீர்செல்வம் வாக்குக் கேட்பது, அரசியலில் விநோதமான காட்சி. இது வாக்குகளாக மாறுவது ஐயமே என்றாலும் அதிமுக – பாஜக அணிக்கு கருத்தியல் ரீதியாக ஒரு பின்னடைவாக அமையலாம்.

    இராஜாஜியும் ஓ.பன்னீர்செல்வமும் இந்த ஒரு புள்ளியில் இணைகிறார்கள். அது, தாங்கள் கொலு வீற்றிருந்த கட்சியை அழிக்க, நேரெதிர் அணிக்கும் மாறத் துணிகிற மனநிலை. இந்தக் கசப்பு, மிகக் கடுமையானது. நான் அழிந்தாலும் பரவாயில்லை, உன்னை அழிக்காமல் விடமாட்டேன் என்ற அளவுக்குத் தீவிரமானது.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம்!

    திருத்தொண்டர் புராணம் என்கிற பெரிய புராணம்

     

    பவள சங்கரி

     

    தோரணவாயில்

     

    தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த

    தொல்லையதாம் திருத்தொண்டத் தொகையடியார் பதம் போற்றி

    ஒல்லையவர் புராண கதை உலகறிய விரித்துரைத்த

    செல்வமலி குன்றத்தூர் சேக்கிழார் அடி போற்றி

     

    தூக்கு சீர்திருத் தொண்டத் தொகை விரி

    வாக்கினாற் சொல்ல வல்ல பிரானெங்கள்

    பாக்கியப் பய னாப்பதி குன்றைவாழ்

    சேக்கி ழானடி சென்னி இருத்துவாம்.

    சைவ சமயத்தின் முக்கிய நூல்களில் ஒன்றான, வரலாற்றுக் கருவூலமாக விளங்கும் திருத்தொண்டர் புராணம் என்கிற பெரிய புராணம் சிவபெருமானின் 63 தனி அடியார்கள், தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமையில்லாத புலவர், பத்தராய்ப் பணிவார், பரமனையே பாடுவார், சித்தத்தை சிவன்பாலே வைத்தார், திருவாரூர் பிறந்தார், முழுநீறு பூசிய முனிவர், முப்போதும் திருமேனி தீண்டுவார், அப்பாலும் அடிசார்ந்தார் எனும் 9 தொகை அடியார்கள் வரலாறுகள் பற்றியும், அவர்கள் சிவபெருமானுக்கு செய்த தொண்டுகளும், சிவபெருமான் அவர்களை ஆட்கொண்ட பாங்கையும் அழகுற எடுத்தியம்பும் நூல்.

    பெருங்காப்பிய இலக்கணங்களைக் கொண்ட, சேக்கிழார் பெருமானாரால் எழுதப் பெற்ற இந்நூல் அறுபத்து மூன்று நாயன்மார்களையும், இரண்டு பெண் அடியார்களின் வாழ்க்கை வரலாறுகளையும், அடியார்களின் பக்தியையும், இறைத் தொண்டையும் போற்றிப் பாடுகின்றது. அனைத்திற்கும் மேலாக சைவ சமயத்தினர் தங்கள் வழிபாட்டு முறைகளையும், பக்தியையும் பின்பற்ற ஒரு வழிகாட்டியாகவும் இந்நூல் விளங்குகின்ற வகையில் பக்திக் காவியங்களின் மணிமுடியாகத் திகழ்கின்றது.

    கி.பி. 12- ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்நூலின் ஆசிரியர் சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித் தேவர் அல்லது உத்தம சோழ பல்லவன் என்பர். அரசன் இவருக்கு இட்ட பெயரே சேக்கிழார் என்பதாம். சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூர் எனும் ஊரில் வேளாளர் மரபில் பிறந்தவர் இவர்.

    செயற்கரிய செய்வர் பெரியர் என்பதற்கேற்ப அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஆழ்ந்த இறைப்பக்தி நெறியையும், தொண்டு நெறியையும் அழகுற விளக்கும் நூலே பெரிய புராணம். பல்வேறு நாடு, ஊர், சாதி, தொழில் கொண்டவர்களான நாயன்மார்களுடைய வாழ்க்கையின் மூலம் அக்காலச் சமுதாய வரலாற்றையும் அறிந்துகொள்ளும் வகையில் எளிய, இனிய நடையில் எடுத்துரைக்கின்றது இந்நூல். தில்லை அம்பல நடராசப்பெருமானான சிவபெருமானாரே, ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்கும் வரம் பெற்றவரான சேக்கிழார் பெருமானார் இயற்றி அருளிய இந்நூல் குறைவிலாத இறையருட் திறமும், குன்றாத பக்தி வளமும் நிறைந்த இலக்கியப் பெருங்களஞ்சியமாகத் திகழ்கிறது. சாதி, மத, இன வேறுபாடில்லாமல் அடியார் நோக்கில் கண்டு இறைவனை வழிபட்டு முத்திபேறு பெற்ற தன்மைகள், அடியார்களின் வழிபாட்டு நெறிமுறைகள், சிவபெருமான் அடியார்களை ஆட்கொண்ட விதம் போன்று பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கு நேரில் சென்று, அவ்விடத்தில் செவிவழி மரபாக வழங்கும் வரலாற்றுச் செய்திகளையும் தொகுத்து இந்நூலை அமைத்தார் என்பர்.

    தமிழகச் சூழலில் இயற்றப் பெற்றுள்ள இப்பெருங்காப்பியம் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் கொண்டுள்ளதோடு 4286 விருத்தப் பாக்களையும் உடையது. அமர காவியமாக விளங்கும் பெரிய புராணம் மானுடச் சமுதாயம் வாழ்வாங்கு வாழ சிறந்த வாழ்வியல் நெறிகளைக் கற்பித்து மக்கள் அனைவரும் மாக்கள் ஆகாமல் முக்திப்பேறு பெறும் வழிமுறைகளையும் வலியுறுத்துகிறது என்றாலும் மிகையாகா. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தமது சேக்கிழார் பிள்ளைத் தமிழில், “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வளவ” என்று சேக்கிழார் பெருமானை பாராட்டிப் பரவுகிறார்.

    கி.பி.11, 12-ஆம் நூற்றாண்டில் அகண்ட தமிழகமாக இருந்த காலகட்டத்தில், சோழநாட்டை ஆட்சி செய்த மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழனான, அநபாய சோழனின் அவையில் முதல் அமைச்சராகப் பணி புரிந்தவர் சேக்கிழார். அம்மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவனடியார்களின் உயர்ந்த வாழ்க்கையை உலகறியச் செய்ய விழைந்ததன் விளைவாக பெரிய புராணத்தைப் பாடினார் சேக்கிழார். ஐந்து இலக்கணங்களிலும் வடமொழியிலும் வல்லவரான சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் வரலாறுகளைப் பாடப்பணிந்த பின்பு பாடப்பணித்த அநபாய மன்னனிடம் தம் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாகக் கடிதம் கொடுத்துள்ளார்.

    சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு பெரிய புராணத்தைச் சார்பு நூலாகப் படைத்தார் சேக்கிழார். இந்நூல் தேசிய காப்பியம் என்றும் போற்றப்படுகிறது.

    அற்புதமான இந்நூலின் பெருமையை உணர்ந்த அநபாய மன்னன், அவரைப் பட்டத்து யானையின் மீதேற்றி நகர்வலம் செய்து உத்தம சோழப் பல்லவராயன் என்னும் பட்டம் தந்து சிறப்பித்ததை பெரும்பேறாகக் கருதினான். தொண்டர்களின் சீர்மிகு வரலாற்றை திறம்பட எழுதி சிறப்பித்த காரணத்தால் இவருக்குத் தொண்டர்சீர் பரவுவார் என்னும் சிறப்புப் பெயரும் கொண்டார். மேலும் கல்வெட்டுகளில் சேக்கிழார் பெருமான்  மாதேவடிகள் என்றும் இராமதேவர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.

    தில்லையின் எல்லையில் இறங்கியவர் அம்பலவாணரை வணங்கிவிட்டு மண்ணையும் பொன்னாக நினைத்து மண்டியிட்டு வணங்கினார். திருவருள் நிறைந்த சிவகங்கைத் திருக்குளத்தில் நீராடிப் பொன்னம்பலக் கூத்தரை வணங்கியவர் இக்காவியம் பாட திருவருள் புரிய வேண்டும் என்றும் வேண்டி நின்றபோது தில்லைவாழ் அந்தணரும் மக்கள் அனைவரும் பேராச்சரியம் கொள்ளுமாறு வானில் அருள் ஞான ஒலியாக, ‘உலகெலாம்’ என்று ஒலிக்க அம்பலவாணர் சந்நதியில் பரிவட்டமும், திருநீரும் பெற்ற சேக்கிழாரடிகள் சமயக் குரவர்களை வணங்கி, ஆயிரங்கால் மண்டபம் சென்றவர் அங்கு தவ ஒழுக்கத்துடன் திருவருளைச் சிந்தித்து சிவபெருமான் எடுத்துக் கொடுத்த ‘உலகெலாம்’ எனும் முதலெழுத்தைக் கொண்டு இனிய செந்தமிழ்ப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.

    உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்

    நிலவுலாவிய நீர்மலி வேணியன்

    அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்

    மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

    காத்தல் எழுத்தாகிய உகரத்தைக் கொண்டே உலகெலாம் எனத் தொடங்கியவரின் அடியொற்றியே கம்பரும் தமது இராமாயணக் காவியத்தை உலகம் யாவையும் எனத் தொடங்கினார். சேக்கிழாருக்கு முன்னர் வாழ்ந்த நக்கீரர் உலகம் உவப்ப என்று தொடங்கினார். சிவஞான போதத்தின் காப்புச் செய்யுளில் பனிரெண்டு சூத்திரங்களைக் கொண்டது அந்நூல் எனக் காட்டப் பனிரெண்டு சொற்கள் உள்ளன போன்று சேக்கிழாரடிகள் உலகெலாம் என்ற பாயிரப் பாடலில் அறுபத்து மூன்று  நாயன்மார்களின் வரலாறுகளைக் குறிக்கும் வகையில் அறுபத்து மூன்று எழுத்துகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கன.

     திருஞானசம்பந்தர் திருவவதாரம் புரிந்த நாளான சித்திரை மாதம் திருவாதிரை நாளன்று, திருத்தொண்டர் புராணம் மிகச்சிறப்பாக அரங்கேற்றம் பெற்றது.

    தொடருவோம்

     

    Share
  • பெண்ணாகப் பிறந்தாலும் மண்சிறக்க வாழ்ந்தார்!

    பெண்ணாகப் பிறந்தாலும் மண்சிறக்க வாழ்ந்தார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பன்மொழிகள் பாரெங்கும் பரவியே இருக்கு
    பசுந்தமிழோ தனித்துவமாய் எழுந்துமே இருக்கு
    பக்தியை இலக்கியமாய் கண்டதும் தமிழே
    பாருக்குப் பண்ணிசையைக் கொடுத்ததும் தமிழே

    கடவுளையே மொழியாக்கிக் கண்டதும் தமிழே
    கடவுளே தமிழ்கேட்க விரும்பியதும் உயர்வே
    அடியார்கள் தமிழ்கேட்டு ஆண்டவனே மகிழ்ந்தான்
    அகிலத்தில் தமிழ் மொழியே அமுதமாயிருக்கு

    எம்மொழியும் பக்தியினைத் தொட்டதும் இல்லை
    பக்தியெனும் பெரு வெளியில் பயணிக்கவில்லை
    எம்மொழியாம் தமிழொன்றே பக்தியினைப் பற்றியதே
    இதனாலே தமிழுமே தனித்துவமாய் மிளிர்கிறது

    பக்தியை இலக்கியமாய் பாருமே பார்ப்பதற்கு
    படைத்திட்ட எங்கள்மொழி பாருக்குள் உயர்வாகும்
    பக்திக்குள் மூழ்கிவிட்டால் பரவசமே உருவாகும்
    பரவசத்தை அளிப்பது பாங்குடைய தமிழாகும்

    பக்தி இலக்கியத்தை தொடக்கிய முன்னோடி
    காரைக்கால் ஈன்றெடுத்த கனிவான பெண்ணாவார்
    மாதரில் மாணிக்கமாய் மாசில்லா மங்கையாய்
    மாதவத்தின் உருவமாய் வந்துமே பிறந்திட்டார்

    நல்லறமாம் இல்லறத்தில் நங்கையும் இணைந்திட்டாள்
    நற்கணவன் கைபிடித்து நலமுடனே வாழ்ந்திட்டாள்
    தெய்வமது சித்தத்தால் சீரான குடும்பமதில்
    தித்திக்கும் மாங்கனி திசைமாறச் செய்ததுவே

    கைபிடித்த கணவன் கண்ணான மனைவியை
    சந்தேக மனத்துடனே சஞ்சலத்துள் ஆழ்த்தினான்
    மாங்கனியின் மாயத்தை மனமேற்க மறுத்ததால்
    மாதரசி மங்கையினை மனமொதுக்கி அகன்றிட்டான்

    பதிறித் துடித்தாள்  பரமனையே பற்றினாள்
    அழகுடைக் கோலத்தை அருவருப்பாய் எண்ணினாள்
    யாருமே விரும்பாத கோலத்தை மனங்கொண்டாள்
    பேயுருவை பெருவிருப்பாய்  பெற்றிட்டாள் இறைவனிடம்

    காரைக்கால் அம்மை பேயுருவாய் மாறினார்
    கணக்கில்லாப் பேரன்பை கடவுளிடம் காட்டினார்
    பக்திப் பெருவெளியில் பயணிக்கத் தொடங்கினார்
    பரமனைப் பாடினார் பக்திக்கும் வித்திட்டார்

    அன்னைத் தமிழுக்கு அம்மையார் பெருஞ்சொத்தே
    முன்னவராய் இருந்து இணைத்திட்டார் பக்தியினை
    பக்தி இலக்கியமாய் மலர்வதற்கு வித்திட்டார்
    பசுந்தமிழும் அதையேற்று பார்போற்ற எழுந்ததுவே

    இசையாலே தமிழ்பாடி இறைதுதிக்க வழிசெய்த
    எங்கள்தமிழ் முன்னோடி காரைக்கால் அம்மையே
    அவர்வகுத்த அடியொற்றி அவர்பின்னே வந்தடியார்
    ஆண்டவனைப் பண்ணோடு அன்புருகப் பாடினரே

    அந்தாதி தந்தார் பதிகமும் தந்தார்
    திருவிரட்டை மணிமாலை சிறப்பாகத் தந்தார்
    பதிகத்தைத் தொடக்கி பக்தியைக் காட்டி
    அந்தாதிக் கருத்திருத்தி ஆண்டவனைப் பாடினார்

    பக்திப் பாமரபில் முன்னோடி  அம்மையார்
    பதிகத்தைத் தொடக்கியவரும் காரைக்கால் அம்மையார்
    வெண்பாவைத் தொட்டார் விருத்தத்தை காட்டினார்
    பண்பாடிப் பக்தியிலே பலர்தொடர வழிவகுத்தார்

    இசைத் தமிழால் பாடுதற்கு வித்தானாரிவரே
    பண்பாடி பக்தியினைப் பரப்புதற்கும் முன்னோடி
    நாயன்மார்  பண்ணோடு  நற்றதமில் பாட
    காரைக் காலம்மையே தனிப்பாதை வகுத்தார்

    சைவத்தை மேலாகத் தன்னகத்தில் கொண்டார்
    தமிழ்ப் பக்தியியக்கத்தின் முன்னோடி ஆனார்
    பேயுருவை உவந்தேற்ற பெரும்பெண்ணும் ஆனார்
    பெம்மானே அம்மையென அழைத்த பெண்ணுமாவர்

    இறையுணர்வை இலக்கியத்தில் இணைத்த பெண்ணாவார்
    இறையடியில் இருப்பதை இன்பமாய் ஏற்றார்
    பேயுருவில் கைலாயம் சென்ற பெண்ணாவர்
    பெம்மானின் கோவிலில் இருப்பிடமும் பெற்றார்

    காரைக்கால் அம்மையை கருத்தினிலே வைப்போம்
    காலத்தால் அழியாத கவிமரபை அளித்திட்டார்
    திருமுறைகள் வருவதற்குத் திறவுகோல் அவராவார்
    அவர் நினைவை அனவருமே அகமிருத்துவோமே

    பெண்ணாகப் பிறந்தாலும் மண்சிறக்க வாழ்ந்தார்
    பெருமானின் திருவடியை பெரும்பேறாய் கொண்டார்
    பக்திப் பெருவெளியில் முத்தாக ஒளிர்ந்தார்
    பாடினார் பாடினார் பரமனுமே மகிழ்ந்திட்டார்

    Share
  • பெண் மடலேறுதல்

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப்பேராசிரியர்,
    அரிய கையெழுத்துச் சுவடித்துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    E.mail.Kumaritathithan@gmail.com

    பக்தி இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்களுள் தனித்த இடம் பெறுகின்றன. அவற்றுள் சைவத் திருமுறைகளும், வைணவ நாலாயிரத்திவ்யப் பிரபந்தமும் பக்தியின் ஊற்றாய் விளங்குகின்றன.  இவற்றுள் சங்ககால அக இலக்கிய மரபுகள் பெரிதும் எடுத்தாளப்பட்டுள்ளன.  அதேநேரம் அகமரபுகளின் புதிய மரபுத்தோற்றம் இப்பக்தி இலக்கியங்களில் நிகழ்ந்துள்ளன.

    அன்பின் ஐந்திணையில் தலைமக்களின் பெயர் சுட்டப்படாதது சங்க மரபு. அதில் இருந்து மாறுபட்டு பக்தி இலக்கியக்கால இலக்கியங்களில் சுட்டும் மரபினைக் காணலாம். அதேபோல பெண்பாற் கைக்கிளையும் பெண் மடலேறுவேன் எனக்கூறும் கூற்றுகளும் இடம்பெற காணலாம்.  இவை பக்தி இலக்கியக் காலக்கட்டத்தில், இலக்கிய அமைப்பில் ஏற்பட்ட படிநிலை வளர்ச்சி எனலாம்.

    சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மடலேறுதல் என்பது தலைவியை மணம்புரிந்து கொள்ள ஆசைப்பட்டு தலைவியின் ஓவியத்தைத் தாங்கி பனை மரத்தின் கருக்குமட்டைகளால் செய்யப்பட்ட குதிரையின் மீது ஏறி ஊர்ந்து செல்வதாகப் பாவிப்பதாகும்.  பிற்கால இலக்கண நூல்கள் இதனை மடல் ஏற்றம், மடல் கூற்று என இரண்டாகப் பகுத்து விவரிக்கின்றன.  பனையின் கருக்கு மட்டைகளால் ஆன குதிரையின் மேல் ஏறி தான் விரும்பும் தலைவியின் ஓவியத்தைத் தாங்கி ஊரறிய வலம் வந்து, அவளின் பெயரைச் சொல்லிப் புலம்பும் நிலையானது மடல் ஏற்றம் என்றும், மடலேற முயல்வதாக மட்டும் கூறும் வகையில் அமைவதனை மடல் கூற்று எனவும்  வழங்கப்படுகின்றன.

    நம்மாழ்வார் திருவாய்மொழியில்,

    “யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அம்கைப்பிரானுடைத்
    தூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம்
    ………………………………………………..”

    என்னும் பாடலில் பெண் மடலேறுதல் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தாம் மடலேறப் போவதாக இறைவன் மீது ஆசைகொண்ட தலைவி சொல்வதாக அமைந்தது இப்பாடல்.  திருமங்கையாழ்வார் ஒருபடி மேலே சென்று சிறிய திருமடல், பெரியத் திருமடல் என்று தனித்த சிற்றிலக்கிய வகை என்று கூறும் வகையில் பாடியுள்ளார்.

    சங்க மரபில் பெண் மடலேறுதல் இல்லை என்றாலும், திருமங்கையாழ்வார் மடலேறத்துடிக்கும் பெண்ணை அறிமுகப் படுத்தியிருக்கும் பாங்கு சுவையுடையது, தமது பாசுரத்தின் நாயகியான பரகாலநாயகி இறைவனை அச்சுறுத்தும் வகையில் மடலேறப் போவதாக அச்சுறுத்தும் பாடல்கள் நயம் மிகுந்தவை.

    இறைவன் மீது தணியாத, காதல் கொண்ட பரகாலநாயகி திவ்யதேசங்கள் அனைத்திற்கும் மடலேறிச் செல்வேன் என்கின்றாள்.  நாராயணன் தவம் புரிந்த திவ்ய தேசங்களுக்கெல்லாம், அவனது பெருமைகளுக்குரிய ஆயிரம் திருநாமங்களையும் கூறிக்கொண்டே மடலேறுவேன்

    “ஊரார் இகழிலும் ஊரா தொழியேன் நான்
    வாரார்பூம் பெண்ணை மடல்”

    என்பதனால் ஊரார் அனைவரும் பழித்தாலும் விடேன். அழகிய பனைமட்டையினைக் கொண்டு மடலேறிச் செல்வதை விடமாட்டேன் என பரகால நாயகி கூறுவதை அறியலாம்.  அதே நேரம் சிறிய திருமடலாக இருந்தாலும், பெரிய திருமடலாக இருந்தாலும் அவற்றில் மடலேறப் போவதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, மடலேறியதாகக் குறிப்பிடப்படவில்லை.  இவ்வாறு மடல் நூல்களிலும் தலைவியின் துன்பத்தைக் கருவியாகக் கொண்டு, இறைவனின் புகழையும் இறைவன் கோயில் கொண்டுள்ள இடங்களின் சிறப்புக்களையும் எடுத்துரைப்பது தனிச்சிறப்பாகும்.

    இங்கு மக்களிடையே பக்திநெறி பரவ, அகமரபினை மீறி மடல் இலக்கியத்தை ஒரு கருவியாகக் கொண்டு பாசுரங்களைப் பாடியுள்ளனர்.  இதனை நுணுகி ஆராயுமிடத்து இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட ஒரு மரபு மாற்றம் என்றே குறிப்பிட வேண்டும்.

    Share