பெரிய புராணம் எனும் பேரமுதம்!
திருத்தொண்டர் புராணம் என்கிற பெரிய புராணம்

பவள சங்கரி
தோரணவாயில்
தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாம் திருத்தொண்டத் தொகையடியார் பதம் போற்றி
ஒல்லையவர் புராண கதை உலகறிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர் சேக்கிழார் அடி போற்றி
தூக்கு சீர்திருத் தொண்டத் தொகை விரி
வாக்கினாற் சொல்ல வல்ல பிரானெங்கள்
பாக்கியப் பய னாப்பதி குன்றைவாழ்
சேக்கி ழானடி சென்னி இருத்துவாம்.
சைவ சமயத்தின் முக்கிய நூல்களில் ஒன்றான, வரலாற்றுக் கருவூலமாக விளங்கும் திருத்தொண்டர் புராணம் என்கிற பெரிய புராணம் சிவபெருமானின் 63 தனி அடியார்கள், தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமையில்லாத புலவர், பத்தராய்ப் பணிவார், பரமனையே பாடுவார், சித்தத்தை சிவன்பாலே வைத்தார், திருவாரூர் பிறந்தார், முழுநீறு பூசிய முனிவர், முப்போதும் திருமேனி தீண்டுவார், அப்பாலும் அடிசார்ந்தார் எனும் 9 தொகை அடியார்கள் வரலாறுகள் பற்றியும், அவர்கள் சிவபெருமானுக்கு செய்த தொண்டுகளும், சிவபெருமான் அவர்களை ஆட்கொண்ட பாங்கையும் அழகுற எடுத்தியம்பும் நூல்.
பெருங்காப்பிய இலக்கணங்களைக் கொண்ட, சேக்கிழார் பெருமானாரால் எழுதப் பெற்ற இந்நூல் அறுபத்து மூன்று நாயன்மார்களையும், இரண்டு பெண் அடியார்களின் வாழ்க்கை வரலாறுகளையும், அடியார்களின் பக்தியையும், இறைத் தொண்டையும் போற்றிப் பாடுகின்றது. அனைத்திற்கும் மேலாக சைவ சமயத்தினர் தங்கள் வழிபாட்டு முறைகளையும், பக்தியையும் பின்பற்ற ஒரு வழிகாட்டியாகவும் இந்நூல் விளங்குகின்ற வகையில் பக்திக் காவியங்களின் மணிமுடியாகத் திகழ்கின்றது.
கி.பி. 12- ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்நூலின் ஆசிரியர் சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித் தேவர் அல்லது உத்தம சோழ பல்லவன் என்பர். அரசன் இவருக்கு இட்ட பெயரே சேக்கிழார் என்பதாம். சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூர் எனும் ஊரில் வேளாளர் மரபில் பிறந்தவர் இவர்.
செயற்கரிய செய்வர் பெரியர் என்பதற்கேற்ப அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஆழ்ந்த இறைப்பக்தி நெறியையும், தொண்டு நெறியையும் அழகுற விளக்கும் நூலே பெரிய புராணம். பல்வேறு நாடு, ஊர், சாதி, தொழில் கொண்டவர்களான நாயன்மார்களுடைய வாழ்க்கையின் மூலம் அக்காலச் சமுதாய வரலாற்றையும் அறிந்துகொள்ளும் வகையில் எளிய, இனிய நடையில் எடுத்துரைக்கின்றது இந்நூல். தில்லை அம்பல நடராசப்பெருமானான சிவபெருமானாரே, ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்கும் வரம் பெற்றவரான சேக்கிழார் பெருமானார் இயற்றி அருளிய இந்நூல் குறைவிலாத இறையருட் திறமும், குன்றாத பக்தி வளமும் நிறைந்த இலக்கியப் பெருங்களஞ்சியமாகத் திகழ்கிறது. சாதி, மத, இன வேறுபாடில்லாமல் அடியார் நோக்கில் கண்டு இறைவனை வழிபட்டு முத்திபேறு பெற்ற தன்மைகள், அடியார்களின் வழிபாட்டு நெறிமுறைகள், சிவபெருமான் அடியார்களை ஆட்கொண்ட விதம் போன்று பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கு நேரில் சென்று, அவ்விடத்தில் செவிவழி மரபாக வழங்கும் வரலாற்றுச் செய்திகளையும் தொகுத்து இந்நூலை அமைத்தார் என்பர்.
தமிழகச் சூழலில் இயற்றப் பெற்றுள்ள இப்பெருங்காப்பியம் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் கொண்டுள்ளதோடு 4286 விருத்தப் பாக்களையும் உடையது. அமர காவியமாக விளங்கும் பெரிய புராணம் மானுடச் சமுதாயம் வாழ்வாங்கு வாழ சிறந்த வாழ்வியல் நெறிகளைக் கற்பித்து மக்கள் அனைவரும் மாக்கள் ஆகாமல் முக்திப்பேறு பெறும் வழிமுறைகளையும் வலியுறுத்துகிறது என்றாலும் மிகையாகா. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தமது சேக்கிழார் பிள்ளைத் தமிழில், “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வளவ” என்று சேக்கிழார் பெருமானை பாராட்டிப் பரவுகிறார்.
கி.பி.11, 12-ஆம் நூற்றாண்டில் அகண்ட தமிழகமாக இருந்த காலகட்டத்தில், சோழநாட்டை ஆட்சி செய்த மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழனான, அநபாய சோழனின் அவையில் முதல் அமைச்சராகப் பணி புரிந்தவர் சேக்கிழார். அம்மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவனடியார்களின் உயர்ந்த வாழ்க்கையை உலகறியச் செய்ய விழைந்ததன் விளைவாக பெரிய புராணத்தைப் பாடினார் சேக்கிழார். ஐந்து இலக்கணங்களிலும் வடமொழியிலும் வல்லவரான சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் வரலாறுகளைப் பாடப்பணிந்த பின்பு பாடப்பணித்த அநபாய மன்னனிடம் தம் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாகக் கடிதம் கொடுத்துள்ளார்.
சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு பெரிய புராணத்தைச் சார்பு நூலாகப் படைத்தார் சேக்கிழார். இந்நூல் தேசிய காப்பியம் என்றும் போற்றப்படுகிறது.
அற்புதமான இந்நூலின் பெருமையை உணர்ந்த அநபாய மன்னன், அவரைப் பட்டத்து யானையின் மீதேற்றி நகர்வலம் செய்து உத்தம சோழப் பல்லவராயன் என்னும் பட்டம் தந்து சிறப்பித்ததை பெரும்பேறாகக் கருதினான். தொண்டர்களின் சீர்மிகு வரலாற்றை திறம்பட எழுதி சிறப்பித்த காரணத்தால் இவருக்குத் தொண்டர்சீர் பரவுவார் என்னும் சிறப்புப் பெயரும் கொண்டார். மேலும் கல்வெட்டுகளில் சேக்கிழார் பெருமான் மாதேவடிகள் என்றும் இராமதேவர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.
தில்லையின் எல்லையில் இறங்கியவர் அம்பலவாணரை வணங்கிவிட்டு மண்ணையும் பொன்னாக நினைத்து மண்டியிட்டு வணங்கினார். திருவருள் நிறைந்த சிவகங்கைத் திருக்குளத்தில் நீராடிப் பொன்னம்பலக் கூத்தரை வணங்கியவர் இக்காவியம் பாட திருவருள் புரிய வேண்டும் என்றும் வேண்டி நின்றபோது தில்லைவாழ் அந்தணரும் மக்கள் அனைவரும் பேராச்சரியம் கொள்ளுமாறு வானில் அருள் ஞான ஒலியாக, ‘உலகெலாம்’ என்று ஒலிக்க அம்பலவாணர் சந்நதியில் பரிவட்டமும், திருநீரும் பெற்ற சேக்கிழாரடிகள் சமயக் குரவர்களை வணங்கி, ஆயிரங்கால் மண்டபம் சென்றவர் அங்கு தவ ஒழுக்கத்துடன் திருவருளைச் சிந்தித்து சிவபெருமான் எடுத்துக் கொடுத்த ‘உலகெலாம்’ எனும் முதலெழுத்தைக் கொண்டு இனிய செந்தமிழ்ப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.
உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்
காத்தல் எழுத்தாகிய உகரத்தைக் கொண்டே உலகெலாம் எனத் தொடங்கியவரின் அடியொற்றியே கம்பரும் தமது இராமாயணக் காவியத்தை உலகம் யாவையும் எனத் தொடங்கினார். சேக்கிழாருக்கு முன்னர் வாழ்ந்த நக்கீரர் உலகம் உவப்ப என்று தொடங்கினார். சிவஞான போதத்தின் காப்புச் செய்யுளில் பனிரெண்டு சூத்திரங்களைக் கொண்டது அந்நூல் எனக் காட்டப் பனிரெண்டு சொற்கள் உள்ளன போன்று சேக்கிழாரடிகள் உலகெலாம் என்ற பாயிரப் பாடலில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறுகளைக் குறிக்கும் வகையில் அறுபத்து மூன்று எழுத்துகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கன.
திருஞானசம்பந்தர் திருவவதாரம் புரிந்த நாளான சித்திரை மாதம் திருவாதிரை நாளன்று, திருத்தொண்டர் புராணம் மிகச்சிறப்பாக அரங்கேற்றம் பெற்றது.
தொடருவோம்
