Presentation1

நிர்மலா ராகவன்

நீடிக்கும் உறவுகள்

அன்பு என்பது ஒருவரை அவர் உள்ளபடியே ஏற்பது. மற்றவரிடம் எதை எதையோ எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் உண்டாகும்.

திரைப்படங்களில் நாம் காண்பது – கணவர் அலுவலகத்திற்குப் புறப்படுமுன் மனைவி வாசலுக்கு வந்து அவருக்குத் தேவையானவற்றைக் கையில் கொண்டுவந்து கொடுக்கிறாள். அவருக்குச் சுயமாக எடுத்துக்கொள்ளத் தெரியாதா?

இப்படிப் பழக்கப்பட்ட ஆண் தன் மனைவி ஒரு தனி நபர், ஒரு பெண்ணுக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கலாம் என்பதை உணர்வதில்லை.

அவள் தன்னையும் கவனித்துக்கொண்டால், அது சுயநலமாகாது. அவளுக்கென்று ஆசைகள், தனிப்பட்ட கருத்துகள் இருக்காதா, இருக்கக்கூடாதா?

`எனக்குத் திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்காது. அதனால் நீயும் பார்க்கக்கூடாது!’ என்றானாம் என் சக ஆசிரியையின் கணவன்.

தம்மிடமிருந்து, தாம் நம்புவதிலிருந்து, மாறுபட்டவர்களைக் கண்டால் இவனைப்போன்ற பலருக்கும் ஏதோ பயம். அது கோபமாக மாறுகிறது. அது புரிந்து, மனைவியும் விட்டுக்கொடுத்துக்கொண்டே போகிறாள். அவளால் முடிந்தது – தன் தோழிகளிடம் சொல்லி வருந்துவதுதான்.

பெண் அழகாக இருந்தாலும் ஆபத்துதான்.

ஒரே பார்வையில், `அழகாக இருக்கிறாள்!’ என்று எடைபோட்டு ஒரு பெண்ணை மணக்கச் சம்மதித்துவிட்டு, மணமானதும் பிற ஆண்களும் அப்படித்தானே மயங்கிவிடுவார்கள் என்ற சந்தேகமும் பொறாமையும் எழ, அவளை ஒரேயடியாக அடக்குவார்கள் பல கணவன்மார்கள்.

திருமணமானதும் பழக்கவழக்கங்கள் மாறிவிடும். அனேகமாக, பெண்கள்தாம் ஐந்திலிருந்து பத்து கிலோவரை எடை கூடுகிறார்கள் என்கிறது ஓர் ஆராய்ச்சி.

பதினெட்டு வயதுவரை உடல் வளர்வதால் சாப்பிடும் அளவும் அதிகரிக்கும். அதன்பின் குறைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

அழகாக இருந்தால் ஆண்களை வசீகரிக்கலாம் என்று கவனமாக உடலைப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் திருமணம் நிச்சயம் ஆனதுமே வழக்கத்திற்கு விரோதமாக நிறைய சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். மகிழ்ச்சியால் பூரிக்கிறார்களாம்!

பிள்ளை பெற்றதும், `வீட்டு வேலை, குழந்தைகளைக் கவனிப்பதற்கே நேரம் போதவில்லை! உடற்பயிற்சி வேறா!’ என்ற சாக்கு. சமையலுக்குப் பலவிதமான இயந்திரங்கள்வேறு. இதனால் உடல் பருத்துக்கொண்டேபோகிறது.

நாற்பது வயதுக்குமேல் அழகு குறைந்துபோக, எப்போதும் தனக்கு அடங்கி நடக்கும் மனைவியைக் கண்டால் எரிச்சல் எழுகிறது. அவளைப்போல் இல்லாது, இளமையுடன் கலகலப்பாகவும் இருக்கும் பெண்களிடம் மனம் போகும். மனைவிக்கோ, தன்னம்பிக்கை குறைந்துகொண்டே போக, சற்றே கூனல் விழுகிறது.

கதை

என்னுடன் ஒரே மாதம் வேலைபார்த்த கணபதி, “நீங்கள் வெஜிடேரியனா?” என்று கேட்டபோது, “ஆமாம்,” என்றேன்.

உடனே கோபமாக, “எத்தனை பிராமணர்கள் `எல்லாவற்றையும்’ சாப்பிடுகிறார்கள், தெரியுமா?” என்று கத்தினார்.

நான் அமைதியாக, “நீங்கள் என்னைப்பற்றிக் கேட்டீர்கள். அதற்கு நான் பதில் சொன்னேன். `எல்லா பிராமணர்களும்’ என்று கேட்டிருந்தால், வேறு விதமாக பதில் அளித்திருப்பேன்,” என்றேன்.

அவருடைய முகம் சுருங்கிப்போயிற்று.

மனைவி என்றால் தனது அதிகாரத்தை ஏற்கவிருப்பவள் என்று எண்ணுவதுபோல் நடப்பவர் பேசும் சுதந்திரத்தைக்கூட தன் மனைவிக்கு அளித்திருக்கமாட்டார்.

ஏன் தன் மனைவி கலகலப்பாக இல்லை என்ற குழப்பம் எழ, “என் மனைவி படித்தவள். (இதை இருமுறை அழுத்தமாகக் கூறினார்). ஆனால், உங்களைப்போல் இல்லையே!” என்று என்னிடம் குறைப்பட்டார் கணபதி.

என் பதில்: “நீங்கள் நினைப்பதை, சொல்வதை, பிறர் அப்படியே ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி இல்லாவிட்டால் கோபம் வருகிறது. உங்களுக்கு என்னைப்போன்ற மனைவி சரிப்படமாட்டாள்”.

கணவன் மனைவியருக்குள் போட்டி எதற்கு? தான் மனைவியைவிட ஏதோ ஒரு வகையில் தாழ்ந்தவன் என்ற மனப்பான்மை கொண்டவன்தான் பிறர் முன்னிலையிலும் அவளைக் கட்டுப்படுத்துகிறான். குறையைத் தன்னிடம் வைத்துக்கொண்டு, மனைவி தான் எதிர்பார்த்தபடி இல்லையே என்று வருந்தி என்ன பயன்?

துணுக்கு

ஓர் இளைஞன் தன் தாயிடம் பெருமையாகச் சொன்னான்: என் காதலி நான் வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று சொல்கிறாள்.

தாய் கேட்டாள்: உனக்கு அவளிடம் என்ன பிடிக்கும்?

பதில்: அவள் என்னை வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று புகழ்வது.

கதை

திருமண வாழ்க்கையில் பெண்ணாலும் மகிழ்ச்சி குன்றுவிடக்கூடும்.

புதுமணத் தம்பதிகளான பிரபாவும் பார்த்திபனும் ஈராண்டுகள் மகிழ்ச்சியாகக் கழித்தனர். அப்போது மனைவியின் முகம் சிறிது கோணினாலும், உடனே மன்னிப்பு கேட்டுவிடுவான் பார்த்திபன். தான் தவறு செய்திருக்கலாமோ என்ற சந்தேகத்தால் அல்ல. உடல் நெருக்கம் மட்டுமே முக்கியமாக இருந்த காலம் அது.

அழகு, கல்வி, பொருளாதாரம் எல்லாவற்றிலும் கணவனைவிடச் சிறந்திருந்ததால் பிரபாவின் கை ஓங்கியது. அதன்பின், அறிவு முதிர்ச்சி இன்றி, எந்த வாய்ச்சண்டையிலும் தான்தான் வெல்லவேண்டும் என்று நினைப்பவளாக ஆனாள்.

`என்ன பேச ஆரம்பித்தாலும், ஏனோ வாக்குவாதத்தில் முடிகிறதே!’ என்று பார்த்திபன் அவளிடமிருந்து லேசாக விலகலானான்.

மனைவி தன்னை எப்போதும் சாடுகிறாளே என்று வருந்தியவனின் குமுறல்: “நான் அவளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அவள் பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவள், வீட்டு வேலை செய்யப் பிடிக்காது என்று வீட்டில் சமையலுக்குக்கூட ஆள் போட்டிருக்கிறேன். அவளுடைய சொந்த உபயோகத்திற்கு கார். இன்னும் என்ன வேண்டும்?”

கணவனுக்குப் பெரிய வேலை, அதனால் பொறுப்புகள் நிறைய இருக்கும் என்பதெல்லாம் அவளுக்கும் புரியாமலில்லை.

வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குப் போய்வரும்போதெல்லாம் பரிசுப்பொருட்கள் வாங்கி வருகிறான். இருந்தாலும், தனக்காக அவ்வளவு நேரத்தைச் செலவழிப்பதில்லை என்ற வருத்தம் கோபமாக மாறிவிட்டது.

காதலனாக இருந்தபோது இப்படியா இருந்தான்! எவ்வளவு எதிர்பார்ப்புடன், குடும்பத்தை எதிர்த்து அவனை மணந்தாள்!

இப்போது அவளுக்கு வேண்டியது அவனுடைய அன்பான கவனிப்பு. வேறு எதுவும் அதற்கு ஈடாகாது.

வெளிப்படையாகக் குறைகூறாது அனுசரித்து நடந்தால், இருவரில் ஒருவர் தானாக மாறலாம். இல்லை, மாற்ற முடியாததை ஏற்க வேண்டும்.

ஐம்பது வருடங்களுக்குமேல் தாம்பத்தியத்தில் இணைந்திருப்பவர்களைப் பார்த்தால், அவர்களுக்குள் சண்டையே வந்திருக்காதா, எப்படி மனம் ஒத்துப்போயிற்று என்றெல்லாம் அதிசயமாக இருக்கும்.

நெருக்கமான உறவில் மட்டும் அடுத்தவருக்குப் பிடிக்காத குணங்கள் இருக்காதா, என்ன! வருத்தமும் ஆத்திரமும் ஏற்படுத்திய சம்பவங்களும் நடந்திருக்கலாம். இருப்பினும், அவைகளைக் கடந்தால்தான் உறவு நீடிக்கும் என்று புரிந்தவர்கள் அவர்கள்.

பொதுவாக, எல்லாத் தம்பதிகளையும்போல் பிரபாவின் பெற்றோரும் அவ்வப்போது வாக்குவாதம் செய்வதுண்டு. மௌனமாக இருப்பதற்கு அது மேல் என்று புரிந்தவர்கள்.

பிரபா தாயிடம் கலந்து ஆலோசித்தாள். “அது எப்படி, நீயும் அப்பாவும் இத்தனை வருடங்களாக ஒருவரையொருவர் பொறுத்துப்போனீர்கள்?”

“யாரிடம்தான் குறையில்லை? அடி, உதையில் இறங்காதவரை, பொறுத்துப்போக வேண்டியதுதான்,” என்று வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கினாள் தாய். “அப்பா சிறு தவற்றைச் செய்யும்போது, அதை கவனிக்காததுபோல் இருந்துவிடுவேன். அவரைப்பற்றிப் பிறரிடம் புகார் செய்வதும் கிடையாது”.

அமைதியாகப் பேசினால் பயன் கிடைக்கும். மௌனம் சாதித்தால், ஒருவர் மனதில் இருப்பதை மற்றவர் எப்படிப் புரிந்துகொள்ள இயலும்?

“குறையே இல்லாதவராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் நடக்கிற காரியமா? நான் மட்டும் என்ன, தப்பே செய்யமாட்டேனா? விட்டுப்பிடி,” என்று முடித்தாள் பிரபாவின் தாய்.

கதை

அமெரிக்கப் பெண்மணி காதரின் கலகலப்பானவள். அவளுடைய கணவரோ நேர்எதிர். அழுமூஞ்சி என்று சொல்லத்தக்கவர்.

சற்று பழகியதும், நான் அவளிடம் கேட்டேன்: “உனக்கும் உன் கணவருக்கும் பொருத்தமே இல்லையே! எப்படி அவருடன் இருக்கிறாய்?”

உடனே, “அப்படிப் பார்த்துக்கொண்டே இருந்தால், முடிவே கிடையாது,” என்று பதிலளித்தாள். சற்றுப் பொறுத்து, “என் கணவர் விவாகரத்து ஆனவர். அவருடைய முதல் மனைவியை ஒருமுறை சந்தித்தேன். என்னைப்போலவே இருந்தாள்,’ என்று தெரிவித்தாள்.

வெளிப்படையாகக் கட்டுப்படுத்தாது, அவருடைய குறைகளைப் புரிந்து, அவற்றுடன் அவரை ஏற்கும் விவேகம் நிறைந்தவள் அவள். அதனால் அவர்களுடைய தாம்பத்தியம் குறுகிய காலத்தில் முடிந்துவிடவில்லை. தன் குறைகளை உணர்ந்த கணவரும் அவளிடம் நன்றி செலுத்தும் விதமாக மிக்க அன்புடன் நடந்துகொண்டார்.

காதலர்களாக இருக்கும்போது, உல்லாசமாக ஊர்சுற்றி, செலவைப் பார்க்காமல் ஒருவர் மற்றவருக்கு ஏதாவது வாங்கிக்கொடுத்து, சிரிப்பும் களிப்புமாக இருந்திருக்கலாம். ஆனால், வாழ்க்கை நம்மைப் புரட்டிப் போடும்போது ஒருவருக்கொருவர் ஆதரவாக நடக்க வேண்டியதும் அவசியம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.