Tag: மலர்சபா

  • நான் அறிந்த சிலம்பு – 119

     

    மலர் சபா
    மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

    அங்ஙனம் திருமாலைத் தொழுது வலம் வரும் போது
    அங்கே நிலத்தையே பிளக்கும்படி விழுகின்றala
    சிலம்பாற்றின் அகன்ற கரையில்
    வாசமலர்கள் பூத்த கோங்க மரத்தின்கீழ்
    கார்மேகக் கூந்தலையும்
    தொடி அணிந்த தோளையும் உடைய
    பெண்ணொருத்தி தோன்றி,
    “நான் இம்மலையடிவாரத்தில் வசிப்பவள்;
    எனது பெயர் வரோத்தமை.
    இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இம்மையும் எது?
    இம்மை மறுமை இவை இரண்டும் இன்றி
    ஓர் உயிர் செம்மையாக எப்போதும் நிற்பது எங்ஙனம்?

    இதற்குத் தக்க விடையளிப்பவர்
    ஏவிய பணிகள் நன்கு புரிவேன்.
    விடை அளித்தீர்களேயானால்
    பாக்கியம் பெற்ற உங்களுக்கு
    இக்குகையின் கதவை இப்போதே திறந்துவிடுவேன்”
    என்று கூறுவாள்.

    கதவுகள் திறந்து அவள் காட்டும்
    அந்நல்வழி சென்றால்
    பல கதவுகளையுடைய வாயில்களும்
    இடைக்கழியும் உண்டு.
    ஆங்கே, இரட்டைக் கதவுகள் கொண்ட
    வழியொன்று காணப்படும்.

    அந்த வாயிலில் வரையப்பட்ட
    சித்திரப்பாவை எதிரே தோன்றி,
    “இறுதியான இன்பம் எங்கிருக்கிறது என்று
    நீவிர் விடையுரைத்தால்
    வேண்டிய பொருள் தருவேன்” என்றுரைப்பாள்.
    “விடை கூறாது போயினும்
    உமக்கு இடர் செய்யேன்;
    நீங்கள் செல்ல வேண்டிய வழியில்
    செல்ல அனுமதிப்பேன்” என்பாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 108 – 125
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://tamil.thehindu.com/society/spirituality

    Share
  • நான் அறிந்த சிலம்பு!… 96

    மலர்சபா

     

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை*

     

    கவுந்திஅடிகள் ஊழின் வலிமையை எடுத்துக் காட்டியதோடு மதுரை செல்ல இருக்கும்

    தமது விருப்பத்தையும் வெளியிடுதல்

     

    அது கேட்ட கவுந்தியடிகள் கூறலானார்

    “பாடகம் அணிந்த இவள் சீறடிகள்

    பரல் கற்கள் நிறைந்த

    பாதையில் செல்வதைப்

    பொறுத்திட மாட்டா;

    இடையில் காடுகள் நிறைந்த நாட்டினை

    நீங்கள் கடப்பதும் ஏற்புடையதாகாது;

    நீங்கள் இங்ஙனம் வந்ததை

    யாரும் அறிந்திடவில்லையோ?

     

    இவள் இத்தகைய

    பயணம் செல்வது ஏற்புடையதன்று;

    பயணத்தை விடுத்து

    இங்கே தங்கிவிடுங்கள் என்று

    நான் கூறினாலும்

    நீங்கள் ஏற்கப்போவதில்லை;

     

    குற்றமற்ற உரைகள் பகரும்

    அறிவுடைய மாதவர்களின்

    உரைகளைக் கேட்பதற்காகவும்

    அங்கு இருக்கும் அருகக் கடவுளின்

    அடிகளை வணங்கித் தொழவும்

    நானும் மதுரை செல்லவேண்டும் என்றிருந்தேன்.

    புறப்படுங்கள்! நானும் உங்களுடன்

    மதுரைக்கு வருகிறேன்.”

     

    கோவலன்அடிகளின்வருகையைஉவந்துகூறல்”

     

    இங்ஙனம் உரைத்த கவுந்தியடிகளிடம்

    கோவலன் கைகளால் வணங்கிப்பின் கூறினான்:

    “அடிகள் நீங்களே அருள்செய்வீராயின்,

    வளைந்த வளையணிந்த

    தோள்களையுடைய இவளது

    துன்பம் எல்லாம் போக்கியவன் ஆவேன்.”

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 51 – 63

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 93

    மலர்சபா

     

    *புகார்க் காண்டம் – 10. நாடுகாண் காதை*

     

    இந்திரவிகாரங்களை வணங்கிப் போதல்!..

     

    கோயிலைக் கடந்த பின்

    கோவலனும் கண்ணகியும்,

    உயர்ந்த ஐந்து பெரிய கிளைகளையும்

    பசுமையான இலைகளையும் உடைய

    சிறப்புப் பொருந்திய மகாபோதி மரத்தின்

    அழகு வாய்ந்த நிழலிலே

    எழுந்தருளிய புத்ததேவன்

    அருளிச்செய்த பிடகநூலதன் கருத்துகளை

    விண்ணில் இருந்து மண்ணுக்கு

    இறங்கி வந்த சாரணர்

    மக்களுக்கு ஓதி விளக்கி உரைக்கும்

    இந்திரன் ஆக்கிவைத்த விகாரங்கள் ஏழினையும்

    வலம் வந்து சென்றனர்.

     

    “சிலாதலத்தைத் தொழுது வலம் கொள்ளல்”

     

    *அதன்பின் அவர்கள்

    அருகதேவன் கோயிலான

    ஸ்ரீகோயிலை அடைந்தனர்.

    புலால் உணவைக் கைவிட்டு

    பொய்கூறாத நோன்பினைக் கடைப்பிடித்து

    அழுக்காறு அவா முதலியன நீத்து

    ஐம்புலன்களையும் அடக்கிய கொள்கையராய்

    உண்மைமைத்திறனை அறிந்த சீரிய சமணர்

    கூடும் அக்கோயிலில்….

     

    பஞ்சபரமேட்டிகள் தங்குகின்ற

    ஐந்து சந்திகள் ஒன்றாகக் கூடுகின்ற

    இடத்தில் இருந்த

    பெரிய மன்றமதனில்

     

    பொன்னிறப் பூக்களுடன் தழைத்திருந்த

    அசோக மரத்தின் அடர்ந்த நிழலில்

    திருமஞ்சன நீராட்டு விழா அன்றும்

    தேர்த்திருவிழாவின் போதும்

    ஆகாயத்திலிருந்து சாரணர்கள் வரக்கூடும்

    என்றேதான் கருதிய இல்லற மகளிரான

    சாவகர் பலரும் கூடிநின்ற

    ஒளிபொருந்திய சந்திர காந்தக் கல்லால் செய்த

    ஆசன மேடையைக்

    கோவலனும் கண்ணகியும் வலம் வந்து வணங்கினர்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 11 – 25

     

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 43. (29.10.12)

     

    மலர்சபா

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

    மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களைக் காதலிக்குக் காட்டி விஞ்சை வீரன் மகிழ்தல்
    (அடுத்த ஆறு வகைகள்)
     
     
    6. குடைக்கூத்து
     
    சூரனின் படைவீரர்களாகிய அசுரர்
    தாம் போர் செய்யவென
    எடுத்த படைக்கலங்களைக்
    கீழே போட்டுவிட்டுப்
    போர் புரிய இயலவில்லையே என
    வருத்தமுற்ற தருணத்தில்,
    குடையை அவர் முன் சாய்த்து
    முருகப்பெருமான் ஆடிய
    குடைக்கூத்து இது பாராய்!
     
     7. குடக் கூத்து
     
     வாணன் தன் மகள் உழை காரணமாகக்
    காமன் மகன் அநிருத்தனைச்
    சிறைப் பிடிக்க,
    சிறைமீட்டும் பொருட்டு,
    வாணாசுரனது ‘சோ’ எனும்
    பெருநகர வீதியில்,
    நீள் நிலத்தைத்
    தன் பாதங்களில் தாவியளந்த மாயவன்
    மண்ணாலும் உலோகங்களாலும் செய்த
    குடங்கள் கொண்டு ஆடிய
    குடக்கூத்து இது பாராய்!
     
    8. பேடி ஆடல்
     
    அநிருத்தனை மீட்கவென
    ‘சோ’ நகர வீதிகளில்
    தந்தையவன் காமன்
    தன் ஆண்தன்மையினின்று மாறுபட்டுப்
    பெண்கோலம் புனைந்து ஆடிய
    பேடி ஆடல் இது பாராய்!
       
    9. மரக்கால் கூத்து
     
    கொதிக்கின்ற சினம் கொண்ட
    அசுரர்கள் தமது வஞ்சத்தால்
    பாம்பு தேள் பூரான் உருக்கொண்டு
    போரிட்ட தருணமதில்
    அவர்தம் கொடுஞ்செயல் பொறுக்காத
    மாயவள் துர்க்கை ஆடிய
    மரக்கால் கூத்து இது பாராய்!
     
    10. பாவைக் கூத்து
     
     சினந்து போர்க்கோலம் பூண்ட அசுரர்கள்
    காமத்தின் வயப்பட்டு,
    போரினை மறக்கச் செய்ய
    செந்நிறத் திருமகள்
    கொல்லிப்பாவை வடிவம் கொண்டு ஆடிய
    பாவைக் கூத்து இது பாராய்!
     
    11. கடையம்
     
    வாணர் நகராகிய சோ நகரத்தின்
    வடக்கு வாயில் கண்ணுள்ள
    வயலிடத்தே நின்று
    உழத்தியர் வடிவம் கொண்டு
    இந்திராணி ஆடிய
    கடையக் கூத்து இது பாராய்!
     
    அன்றொரு நாள்
    தாது அவிழ்ப் பூம்பொழிலில்
    நான் கூறிய உருப்பசி மரபில் வந்த
    மாதவி இவள் நடனம் பாராய்!
    அனைத்து தெய்வங்கள்
    ஆடிய கூத்தையும்
    தக்க மரபுகளுடன்
    கூத்தநூல் முறைப்படி ஆடிய
    அழகு பாராய்!

     
    இங்ஙனம்
    நிகழ்வுகளைக் காதலிக்கு விவரித்த
    விஞ்சையன், அவன் காதலியுடன்
    மண்ணுலக மக்கள் அறிந்திராதபடி
    விண்ணுலகத் தேவர்களும் வந்திருந்து
    இந்திர விழா நிகழ்வுகளைக்
    கண்டுதான் களித்திருந்தனர்.
     
     
    அடிப்படையாய் அமைந்திருந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 52 – 73
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram15.html
     
     
    படத்துக்கு நன்றி:
    http://www.cyberkerala.com/rajaravivarma/ravivarma-oil-painting-129.htm
    natiyam 2.jpg    natiyam 2.jpg

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 42 (22.1012)

     

    மலர்சபா

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை
     
     
    விஞ்சை வீரன் தன் காதலியுடன் வந்து விழாக் காணுதல்
     
     
    உச்சி உயர்ந்த இமயமலையையும்
    வளமையான நீருடைய கங்கையாற்றையும்
    அழகு பொருந்திய உச்சயினி நகரத்தையும்
    விந்திய மலை சூழ்ந்த காட்டையும்
    வேங்கடம் என்னும் மலையையும்
    நிலம் கொள்ளாத அளவு
    பெருவிளைச்சல் காணும்
    காவிரி பாயும் சோழநாட்டினையும்
    தன் காதலிக்குக் காட்டிய பின்
    இதழ்விரி பூக்கள் நிறைந்த
    தோட்டங்களை உடைய
    புகார்நகரம் அடைந்தனன்
    விஞ்சையன்.
     
     
    இந்திரனைத் தொழுது,
    எல்லா இடங்களையும்
    முறைமைப்படியே
    அவளுக்குக் காட்டியபின்
    வளம் பொருந்திய புகார் நகர்
    இந்திரவிழாவினையும்
    மாதவியின் ஆடலையும்
    காணலுற்றனர்.
     
     
    மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களைக் காதலிக்குக் காட்டி விஞ்சை வீரன் மகிழ்தல்
    (முதல் ஐந்து வகைகள்)

     
    திருமாலைப் புகழும் தேவபாணியும்
    வருணப்பூதர் நால்வரைப் புகழும்
    நால்வகைத் தேவபாணியும்
    பல வகை உயிர்களும் தம் ஒளியால்
    நன்மை பெறும் தன்மையுடைய
    வானூர்ந்து செல்லும்
    நிலவைப் பாடும் தேவபாணியும்
    ஆகிய
    இசைப்பாடல்களைப் பாடிய பின்னர்
    அவதாளம் நீங்கிய
    நல் தாளத்தின் இயல்பு பொருந்த
    மாதவி புரிந்த நடன வகைகள்
    ஒவ்வொன்றையும் தன் காதலிக்குக்
    காட்டி மகிழ்ந்தனன்.
     
     
    1. கொடுகொட்டி
     
     
    பாரதி(பைரவி) ஆடியமையால்
    பாரதியரங்கம் எனப்பட்ட சுடுகாட்டில்…
    திரிபுரத்தையும் எரியச் செய்ய
    தேவர்கள் வேண்டியதால்,
    தீயினைத் தலையாய் உடைய
    திருமாலாகிய அம்பினை
    ஏவிய சிவன்
    திரிபுரத்தைச் சாம்பலாக்கினன்.
     
    அத்தருணத்தில்
    உமையவளைத் தன் ஒருபாகமாகக் கொண்டு
    தேவர் யாவரினும் சிறந்த இறைவன்
    வெற்றிக் களியில் கைகொட்டி ஆடிய
    கொடுகொட்டி ஆடல்
    இது பாராய்!
     
     
    2. பாண்டரங்கம்
     
     
    தன் தேரின் முன்
    பாகன் என நின்றிட்ட
    நான்முகன் காணும்படி
    பாரதி வடிவம் பூண்டு
    திருநீறு அணிந்து
    சிவபெருமான் ஆடிய
    பாண்டரங்கக் கூத்து
    இது பாராய்!
     
     
    3. அல்லியம்
     
     
    கஞ்சனின் வஞ்சனை
    வெல்ல நினைத்து
    அவன் ஏவி அனுப்பிய
    யானையின் கொம்பை ஒடிப்பதற்காக
    அஞ்சன வண்ணன் நின்றாடிய
    அல்லியக் கூத்து
    இது பாராய்!
     
     
    4. மல்லாடல்
     
     
    கஞ்சன் அவன் ஏவிய
    அசுரர்களை வெல்ல
    திருமால் ஆடிய
    மல்லாடல் எனும் கூத்து
    இது பாராய்!
     
     
    5. துடிக் கூத்து
     
     
    கருமையான கடலது நடுவே
    நீர் அலைகளே அரங்கமெனக் கொண்டு
    தன்னை எதிர்த்து முன்நின்ற
    வஞ்சச் சூரனை
    எதிர்த்துக் கொன்ற முருகன்
    துடி கொட்டி ஆடிய
    துடிக் கூத்து
    இது பாராய்!

     

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 28 – 30
     
     
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 31- 51
     
     

    படத்திற்கு நன்றி :

    http://macaulay.cuny.edu/eportfolios/judell12/2012/09/15/the-elegant-dance-form/

    Share