Tag: மலர்சபா

  • நான் அறிந்த சிலம்பு – 241

     

    மதுரைக் காண்டம் – கட்டுரைக் காதை

     

    வார்த்திகனைச் சிறை விடுத்து, அவனுக்கு இரண்டு ஊர்களை அளித்தல்

     

    நல்ல நீர் வளம் மிக்க கழனிகள் சூழ்ந்த
    அந்த திருத்தங்கால் எனும் ஊருடன்
    குறைவில்லாத விளைச்சல் விளையும்
    வயலூர் என்ற ஊரையும்
    அவனுக்கு மானியமாய் வழங்கிக்
    கற்புடைய கார்த்திகை என்னும் பெண்ணுக்கும்
    அவள் கணவன் வார்த்திகனுக்கும் முன்னே
    பெரிய நிலமடந்தையாம் தம் தேவிக்குத்
    தன் மார்பினில் இடம் அளித்து,
    அவளது தணியாத காமத்தையும்
    சற்றே தணிக்கும் வண்ணம்
    நிலத்தில் விழுந்து கும்பிட்டான்.

    அந்தப்பொழுதில்,
    என்றும் நிலையாக விளங்கும்
    கூடல் மாநகரின் நீண்ட வீதிகளில்
    மலை போன்று உயர்ந்து நின்ற
    மாடமாளிகைகள் எங்கும் கேட்கும்படி,
    மானை ஊர்தியாகக் கொண்டு அமர்ந்திருந்த
    கொற்றவையின் கோயில் கதவுகள்
    மிக்க ஒலியுடன் திறந்தன.

    மன்னன் மனம் மகிழ்ந்து,
    “சிறை அதிகாரிகள் சிறைக்கதவுகள் திறந்து
    எல்லோரையும் விடுதலை செய்யுங்கள்” என்றும்;
    வரி வசூல் செய்பவர்கள்
    மக்களிடம் இருந்து பெற வேண்டியது
    எவ்வளவு வரியானாலும்
    அதை வசூல் செய்யாது விடுங்கள் என்றும்;
    பிறர் கொடுத்த பொருள் என்றால்
    அதை பெற்றுக் கொண்டவர்க்கும்
    புதையல் என்றால்,
    அது எடுத்தவர்க்கும் சொந்தமாகும் என்றும்”
    யானையின் பிடரியில்
    அழகிய முரசினை ஏற்றி வைத்து,
    அரசு ஆணையைப் பறையடித்து அறிவித்தான்.

    இங்ஙனம் தன் செங்கோல் முறைமையை
    மக்களுக்கு அறிவித்த வெற்றி வேந்தன்
    “பாண்டிய செடுஞ்செழியனே
    முறை தவறிய காரணத்தைக் கூறுகிறேன்
    அதையும் கேட்பாயாக” என்று கூறினான்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 236

    மலர்சபா

     

    மதுரைக் காண்டம் – கட்டுரைக் காதை

     

    வார்த்திகனுக்கு நீதி செய்த வரலாறு
    பராசரன் சேரனைக் காணச் சென்று பார்ப்பன வாகை சூடி மீளுதல்

     

    ‘வளமையான தமிழ் அறிந்த அந்தணர்க்கு
    வான் உறை தந்த
    வலிமையான் நீண்ட வேலினை உடைய
    சேரமன்னனைக் காண்பேன்’ என்று கூறிக்
    காடுகள் நாடுகள் பல கடந்து
    உயர்ந்த நிலையில் உள்ள
    பொதியின் மலை அடைந்து

    ஆங்கே

    ஒன்று புரி கொள்கை
    இரண்டு பிறப்பினை உடையவரும்
    மூன்று வேள்வி
    நான்கு மறை
    ஐந்து பெருமையுடைய
    வேள்விகள் செய்யும் தொழிலைப் பேணும்
    ஆறு தொழிலுடைய அந்தணர்
    பெறுகின்ற முறையை
    அந்தப் பராசரனுக்கு
    வகைப்படுத்திக் கொடுக்க…

    நாவாலே தருக்கம் செய்து வெற்றி கொண்டு
    பகைவர்களை ஓடச் செய்து
    பார்ப்பன வாகை சூடி
    பொருத்தமான அணிகளைப் பெற்றுத்
    தன் ஊருக்கு மீண்டு செல்வோன்….

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 225

    மதுரைக் காண்டம் – அழற்படு காதை

    வணிக பூதம்

    ama

    சிவந்த நிறம் கொண்ட
    பொன்போன்ற மேனியுடையவன்;
    நிலையான சிறப்பையும்,
    வீரம் மிகுந்த வேலையும்
    கையில் கொண்டவன்;
    அரசனின் அணிகலன்களில்
    மணிமுடி தவிர அனைத்தையும் அணிந்தவன்;
    வணிகர்க்கே உரித்தான் வணிகத் தொழிலால்
    இவ்வுலகம் முழுவதையும் காப்பவன்;

    கலப்பையும் துலாக்கோலும்
    கையில் கொண்டவன்;
    புகழ்வாய்ந்த பொன்னிற ஆடையை
    இடுப்பில் அணிந்தவன்;
    வெட்சி, தாழை, ஆம்பல்,
    சேடல், நெய்தல், பூளை, மருதம் ஆகிய
    பூக்களால் ஆன மாலையைத்
    தன் கழுத்தில் அணிந்தவன்;

    பொன்போன்ற
    நல்ல நிறம் கொண்ட சாந்தினை
    மின்னல் போல் ஒளிர்கின்ற
    மார்பிலே பூசியவன்;
    கொள், பயிறு, துவரை, உளுந்து
    ஆகியவற்றைக் கலந்து சமைத்த உணவை
    விரும்பி உண்ணும் இயல்பினன்;
    அகன்ற நெற்களம், பறவைகள் உள்ள கழனி,
    வணிக மேடை, காஞ்சி மரத்தின் அடர்த்தியான நிழல்,
    இந்த இடங்களில் முற்பகல் பொழுதில் உண்பவன்;

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 220

    மலர்சபா

    *மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை*

    ama

    அங்ஙனம் அவள் எறிந்த நேரத்தில்
    நீல நிறத்தையும்
    செந்நிறமான நீண்ட சடையையும்
    பாலைப் போன்ற
    வெள்ளிய எயிற்றையும் உடைய
    பார்ப்பன வடிவத்துடன்
    நன்றாக இருக்கின்ற
    எதையும் எரிக்க வல்ல
    தீக்கடவுள் வெளியே வந்து,
    “நிறைந்த கற்புடையவளே!
    இந்நகர் உனக்கு மிகவும் தவறிழைத்துவிட்டது.
    பரந்த நெருப்புக்கு
    இந்நகரை இரையாக்கும் ஏவலை
    நான் முன்னரே பெற்றுள்ளேன்.
    இங்கே யார் மட்டும் பிழைத்திருக்க வேண்டும்?”எனக் கண்ணகியைக் கேட்டது.

    *கண்ணகியின் கட்டளையால் மதுரையில் தீ எழல்*

    அந்தணர் அறவோர் பசுக்கள்
    பத்தினிப் பெண்டிர்
    வயதில் முதிர்ந்தோர் குழந்தைகள்
    ஆகிய இவர்கள் தவிர்த்து,
    தீய தன்மையுடையவர்களை மட்டும்
    அழித்து நிற்பாயாக” எனக் கண்ணகி ஏவியதும்
    அத்தீக்கடவுள், தேரையுடைய பாண்டியன் நகர் நோக்கித்
    தீயை முடுக்கிவிட
    நகர் எங்கும் புகை மண்டியது.

    *வெண்பா*

    சிறப்புடைய மன்னவனும்
    மகளிரும் மாளிகையும்
    விற்படை வேழப்படையும்
    கண்ணகியின் கற்புத்தீ சுட்டெரித்தது.
    தீமை நல்கிய கூடல் நகர்
    தீயில் கருகியது.

    *வஞ்சினமாலை முற்றியது*

    Share
  • மதுரைக் காண்டம் 11. வஞ்சின மாலை (கோப்பெருந்தேவியை நோக்கிக் கண்ணகி கூறுதல்)

    மலர்சபா

    gopikas

    கோவேந்தன் தேவியே!

    நான் கணவனை இழந்தவள்

    ஒன்றும் அறியாத் தன்மையுடையவள்.

    பிறர் ஒருவருக்கு முற்பகல்

    ஒரு கேடு நினைத்தால்

    அக்கேட்டினை

    அன்று பிற்பகலே காணும்

    தன்மை உடையவை வினைகள்.

     

    கற்புடை மகளிர் எழுவர் வரலாறு

    வன்னி மரத்தையும் மடப்பள்ளியையும்

    நற்பகல் ஒன்றில்

    தனக்குச் சாட்சிப் பொருட்களாய்

    அனைவரும் காணும்படி

    முன்னிலையில் கொண்டுவந்து

    நிறுத்திக் காட்டினாள்

    அடர்ந்த கூந்தலையுடைய

    பத்தினிப் பெண்ணொருத்தி.

     

    பொன்னியாற்றின் மணற்பரப்பில்

    மகளிர் சிலர் விளையாடும்போது,

    ஒருத்தி ஒரு மணற்பொம்மையைச் செய்து

    ‘இதுதான் உன்னுடைய கணவன்’ என

    விளையாட்டாய்க் கூறியதும்,

    அதை உண்மை என்று நம்பி

    அங்கேயே தங்கி,

    அலைகள் அப்பொம்மையை அழித்துவிடாமல்

    காத்து நின்றாள்

    வரிபொருந்திய அகன்ற அல்குலை உடைய

    பத்தினிப் பெண்ணொருத்தி.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 215

    மலர்சபா

     

    மதுரைக் காண்டம் 10. வழக்குரை காதை

     

    மன்னன் உண்மையை உரைத்து உயிர் துறத்தல்

    662c3773-c25e-4821-be98-cef2b724115c

    தெறித்த மாணிக்கங்கள் கண்டு
    மருண்டான் மன்னன்.
    “என் குடை தாழ்ந்ததே!
    என் செங்கொல் வீழ்ந்ததே!
    பொன் செய்யும் கொல்லன்
    பேச்சை ஆராய்ந்து பார்க்காமல்
    அதை உண்மை என எடுத்துக்கொண்ட
    நான் தானா அரசன்?
    இல்லை நானே கள்வன்!

    மக்களைப் பாதுகாத்து நிற்க வேண்டிய
    எம் பாண்டி நாட்டு ஆட்சி
    என்னை முதலாகக் கொண்டு
    தவறு இழைத்து விட்டது.
    என் வாழ்நாள் அழிந்து போவதாக”
    என்று கூறி மடிந்து வீழ்ந்தான்.
    உயிரது துறந்தான்.

    கோப்பெருந்தேவியும் உடன் மாய்தல்

    மன்னனின் மனைவி கோப்பெருந்தேவி
    உள்ளம் மயங்கினாள்.
    உடல் நடுக்கமுற்றாள்.
    தாய் தந்தை இழந்தவர்க்கு
    எவரையேனும் அவரென
    முறை காட்டி ஆறுதல் கூற இயலும்..
    கணவனை இழந்தவர்க்கு
    எந்த முறையும் காட்டி
    ஆறுதல் கூற இயலாதே!
    எனவே பாண்டிமாதேவி
    கணவனின் திருவடிகள்
    தொழுது வணங்கினாள்.
    தானும் உயிர் நீத்தாள்.

    வெண்பா

    கண்ணகி கூறினாள்:

    “பாவச்செயல்கள் புரிந்தவர்க்கு
    அறமே எமனாய் நின்று
    தண்டனை வழங்கும் என்று
    அறிஞர்கள் கூறுவது
    அர்த்தமில்லாத ஒன்றல்ல;
    கொடிய வினை உடையவனாகிய
    நான் இழைக்கும் மற்ற செயல்களையும்
    இனி காண்பாயாக..”

    கண்ணகியின் மலர்விழிகள்
    பொழிகின்ற நீரையும்,
    அவள் கையில் உள்ள
    ஒற்றைச் சிலம்பையும்,
    உயிர் நீங்கியதை ஒத்த
    அவள் உடம்பையும்,
    காடு போல் பரந்து
    உடல் முழுதும் விரிந்து கிடக்கும்
    அவள் கருங்கூந்தலையும் கண்ட
    கூடல் நகரத்து அரசன் அஞ்சினான்.
    அவள் வழக்குரைத்த் சொற்கள்
    தன் செவிகளில் புகுந்ததுமே
    உயிரற்ற உடல் ஆகினான்.

    வழக்குரை காதை முற்றியது. அடுத்து வருவது வஞ்சின மாலை..

    படத்துக்கு நன்றி:
    கூகுள்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 214

    மலர்சபா

     

    மதுரைக் காண்டம் 10. வழக்குரை காதை

    மன்னவன் உரைத்த விடை

    1f9072f0-a8c3-4f73-a44d-58a45649abec

    மன்னவன் உரைத்தான்:
    “பெண் அணங்கே!
    கள்வனைக் கொல்லுதல்
    கொடுங்கோல் ஆகாது;
    அதுவே அரச நீதியாகும்.”

    கண்ணகி தன் சிலம்பின் தன்மையை அறிவித்தல்

    “அறநெறி பின்பற்றாத
    கொற்கை நகரத்து வேந்தனே!
    என் காலுக்கு அணியாய் விளங்கும்
    சிலம்பின் பரல்கள் மாணிக்கமே”
    என்றாள் கண்ணகி.

    மன்னவன் தன் தேவியின் சிலம்பில் உள்ள பரல் முத்து எனக்கூறி, காவலர் கொண்டுவந்த சிலம்பைக் கண்ணகியின் முன் வைத்தல்

    தேனைப் போன்ற மொழியுடைய
    கண்ணகி உரைத்தது
    சரியான கூற்றேயாகும்.
    எம்முடைய சிலம்பில் உள்ள பரல்கள் முத்தே
    என மனதுக்குள் நினைத்து
    அச்சிலம்பைக் கொண்டுவரும்படி
    காவலரிடம் கூறினான்.
    அவர்கள் கொண்டுவந்த சிலம்பைக்
    கண்ணகி முன் வைத்தான்.

    கண்ணகி சிலம்பை உடைக்க மாணிக்கம் மன்னவன் முகத்தில் தெறித்தல்

    கண்ணகி காலில் அணிகின்ற
    சிலம்பினை உடைக்க
    அதிலிருந்த மாணிக்கம்
    மன்னவன் முகத்தில் தெறித்தது.

    படத்துக்கு நன்றி:
    கூகுள்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 213

    மலர்சபா

    மதுரைக் காண்டம் 10. வழக்குரை காதை

    மன்னவன் கட்டளைப்படி கண்ணகி அவையை அணுகுதல்

    3d5e47f9-e7be-4bee-9bb9-47bb732ac3d3

    அரசன் வாயிலோனிடம் கூறினான்:
    “அத்தகையவள் இங்கே வருவாளாக…
    அவளை அழைத்து வருவாயாக..”

    பாண்டியன் வினா

    கண்ணகியைப் பார்த்து அரசன் கேட்டான்:
    “நீர் வார்க்கும் கண்களையுடைய பெண்ணே!
    என் முன் நிற்கும் கொடி போன்றவளே..
    நீ யார்?”

    கண்ணகியின் மறுமொழி

    “ஆராய்ந்து பார்க்கும் திறன் இல்லாத மன்னவனே!
    உன்னிடம் குறை ஒன்று சொல்லக்கூடியவளாய்
    நான் இருக்கிறேன்.
    இகழமுடியாத சிறப்பு வாய்ந்த
    தேவர்களும் போற்றும்படி
    புறா ஒன்றுக்கு நேர்ந்த துன்பம் போக்கிய
    சிபி மன்னனும்,

    தன் அரண்மனை வாயிலில் கட்டியுள்ள
    மணியின் நடுவில் உள்ள நா அசைய
    அவ்வொலி எழுப்பிய பசுவின்
    கண்களில் இருந்து வழிந்த நீர்
    தன் நெஞ்சைச் சுட்டதால்,
    பெறுவதற்கு அரிய தன் ஒரே மகனைத்
    தேர்க்காலில் இட்டுக் கொன்ற
    மனு நீதிச் சோழனும் ஆட்சி செய்த
    பெரும்புகழ் வாய்ந்த பூம்புகார் எனது ஊராகும்.

    வீரக்கழலைக் கட்டிய மன்னனே!
    அங்கே குற்றமற்ற சிறப்புடைய புகழ் வாய்ந்த
    பெருங்குடியைச் சேர்ந்த மாசாத்துவான் எனும்
    வணிகனின் ஒரே மகனாய்ப் பிறந்து
    ஊழ்வினை துரத்தியதால்
    பொருள் ஈட்டி வாழ விரும்பி….

    உன் மதுரை நகரில் புகுந்து
    இங்கே என் காற்சிலம்பை விற்க வந்தபோது
    உன்னால் கொலைக்களத்தில் வெட்டப்பட்டுக்
    கொலையுண்ட கோவலனின் மனைவி நான்..
    என் பெயர் கண்ணகி ” என்றாள்.

    படத்துக்கு நன்றி:
    கூகுள்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 212

     

    மதுரைக் காண்டம் 10. வழக்குரை காதை

    8d4d05d0-179a-4a50-868f-c42e858bb60b

    கண்ணகி வந்ததை வாயிலோன் மன்னனுக்குத் தெரிவித்தல்

     

    வாயிலோன் கூறலானான்:

    ” எம் கொற்கை அரசே! வாழி!
    தெற்கில் பொதிகை மலை கொண்ட தலைவனே வாழி!
    செழியனே வாழி! தென்னவனே வாழி!
    பழிவரும் காரியங்கள் செய்யாத பஞ்சவனே வாழி!

    பொங்கி வழிகின்ற குருதியால் புண்ணாக இருக்கின்ற
    மகிடாசுரனின் பிடரொடு கூடிய தலைப் பீடத்தில் நின்று
    தன் அகன்ற கைகளில் வெற்றிவேல் ஏந்திய
    கொற்றவை போலும் இருக்கிறாள்;
    எனினும் அவள் கொற்றவை அல்லள்;

    ஏழு கன்னியருள் இளையவள் பிடாரி போல் இருக்கிறாள்
    எனினும் அவள் பிடாரி அல்லள்;
    சிவனை நடமாடச் செய்து
    அந்த ஆடலைக் கண்ட
    பத்ரகாளி போல் இருக்கிறாள்;
    எனினும் அவள் பத்ரகாளி அல்லள்;

    பயமுறுத்தும் காட்டினை விரும்பி
    வாழும் காளி போல் இருக்கிறாள்;
    எனினும் அவள் காளியும் அல்லள்;
    தாருகாசுரனுடைய அகன்ற மார்பினைக் கிழித்த
    துர்க்கை போல் இருக்கிறாள்;
    எனினும் அவள் துர்க்கையும் அல்லள்;

    தன் உள்ளத்தில் பழியுணர்ச்சி கொண்டவள் போல
    மிகுந்த சினம் கொண்டவள் போல
    மிகவும் அழகிய வேலைப்பாடமைந்த
    பொற்சிலம்பினைக் கையில் ஏந்தியவளாய்,
    கணவனை இழந்த பெண்ணொருத்தி
    நம் வாயிலின் கண் நிற்கிறாள்.”

    இங்ஙனம் அச்சம் மேலிட
    அரசனிடம் அறிவித்தான் வாயிற்காவலன்.

    படத்துக்கு நன்றி:
    கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 208

     

    மதுரைக் காண்டம் – 09. ஊர் சூழ் வரி

    கண்ணகியின் சிந்தனை

    177258a2-3fdc-47e0-b2b4-3ef4d2678bce

    இங்ஙனம் உரையாடியது
    வஞ்சம்தானோ மாயம்தானோ
    இல்லை என்னை மயக்கிய
    ஒரு தெய்வமோ
    இல்லை வேறு எதுவோ…

    இனி எங்கே சென்று
    என் கணவனை நான் தேடுவேன்..
    இது மெய்யுரை அன்று..
    என் கணவனுடன் சேர்வது
    எனக்கு மிகவும் எளிது
    எனினும்
    என் கோபம் தீராது
    அவனுடன் கூடேன்..

    தீய வேந்தனைக் கண்டு
    இக்கொலை பாதகத்துக்குரிய
    காரணம் யாதெனக் கேட்பேன்.

    கண்ணகி சினத்துடன் பாண்டியன் கோவில் முன் செல்லுதல்

    இங்ஙனம் கூறியவள்
    அவன் அரண்மனைக்குப் போவதற்கு எழுந்தாள்.
    தன் துன்பம் தீய கனவுதானோ என்று
    எண்ணினாள் நின்றாள்..

    கயல் போன்ற கண்களில்
    நீர் சொரிய நின்றாள்.
    எண்ணினாள்.
    கண்களில் வழிந்த நீரைத்
    துடைக்காமல் எண்ணினாள்.

    பின் எழுந்து சென்று
    பாண்டியனின் வளம்மிக்க
    கோவிலின் வாசலை அடைந்தாள்.

    ஊர்சூழ் வரி முற்றியது. அடுத்து வருவது வழக்குரை காதை

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html–

    படத்துக்கு நன்றி:
    கூகுள்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 206

    மலர்சபா

    மதுரைக் காண்டம் – 09. ஊர் சூழ் வரி

    d5ae0a43-23fe-480c-a18a-b034a5afe5a4

    துணைக்கு யாரும் இல்லாமல்
    மயக்கத்தைத் தருகின்ற இம்மாலை நேரத்தில்
    துயரத்துடன் தனித்திருக்கும் என் முன்
    மாலையணிகின்ற உன் மணிமார்பு
    தரையிலே வீழ்ந்து கிடப்பது தகுமோ..

    உலகத்தார் அனைவரும் பழித்துக் கூறும் வண்ணம்
    பாண்டியன் தவறு செய்ததால்
    இந்தக் கொலை நிகழ்ந்தது.
    இது உன்னுடைய தீவினையால்தான் என்று
    எவரேனும் என்னிடம் சொல்லாரோ–

    கண்களில் பொங்கும் நீர் வழிந்துநிற்க,
    தீவினையுடையவளாகிய என் கண் முன்னால்
    புண்ணிலிருந்து வழிகின்ற இரத்தம்
    உடல் முழுதும் நனைத்திருக்க
    நீங்கள் புழுதியில் படிந்து கிடப்பது தகுமோ..

    உலகம் முழுதும் பழிதூற்றும் வண்ணம்
    மன்னவன் இங்ஙனம் தவறு செய்யக் காரணம்
    உனது ஊழ்வினைதான் என்று
    இங்கு எவரும் சொல்லாரோ..

    இவ்வூரில் கற்புடைய பெண்களும் உள்ளாரோ
    கற்புடைய பெண்களும் உள்ளாரோ
    தம்மை மணந்த கணவனுக்கு நிகழ்ந்த
    துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும்
    பெண்களும் உள்ளாரோ..

    சான்றோரும் உள்ளாரோ
    சான்றோரும் உள்ளாரோ
    பிறர் பெற்ற பிள்ளையைக் காப்பாற்றி வளர்க்கும்
    சான்றோரும் உள்ளாரோ..

    தெய்வமும் உள்ளதோ
    தெய்வமும் உள்ளதோ
    கூர்மையான வாளால் என் கணவனைக் கொன்று
    தவறு செய்த பாண்டிய மன்னனின்
    இம்மதுரை மாநகரில் தெய்வமும் உள்ளதோ..

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html–

    படத்துக்கு நன்றி:
    கூகுள்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 197

    – மலர்சபா.

    மதுரைக் காண்டம் – 07. ஆய்ச்சியர் குரவை

    உள்வரி வாழ்த்து
    பூவை நிலை

    moovendar

     

    கோர்க்கப்படாத பொதிய மலையின்
    ஆரமான சந்தனமும்,
    கோர்க்கப்பட்ட கொற்கைக் கடலின்
    ஆரமான முத்தும்,
    தேவர் தலைவனாகிய
    இந்திரனின் பூண் ஆரமும்,
    இம்மூன்றும்
    பாண்டியனின் மார்பில் திகழ்கின்றன.

    இங்ஙனம்
    இந்திரனின் ஆரம் அணிந்த பாண்டியன்
    வளம் மிக்க துவாரகையில்
    ஆநிரை மேய்த்துக் குருத்த மரத்தை முறித்த
    கண்ணனே ஆவான்!
    என்று அனைவரும் கூறுவர்.

    பொன் போன்ற இமய மலையின் உச்சியில்
    வெற்றிக்கு அறிகுறியாய்த்
    தன் புலிக்கொடியை நாட்டி
    இப்பகுதியில் உள்ள நிலங்களை எல்லாம்
    ஆட்சி புரிந்தவன்,
    மதிலையுடைய புகார் நகரத்தில் வாழும்
    சோழ மன்னன் ஆவான்.

    அம்மன்னனை,
    போர் செய்யும் அழகிய
    சக்கரப் படையை உடையத் திருமால் ஆவான்!
    என்று அனைவரும் கூறுவர்.

    கடலின் உள்ளே புகுந்து சென்று
    அங்கே,
    மூத்தல் என்றும் அடையாத் தன்மை கொண்ட
    கடம்ப மரத்தினை வெட்டிச் சாய்த்தவன்,
    வளம் மிக்க வஞ்சி மாநகரில் வாழும்
    சேர மன்னன் ஆவான்.

    அவன் மலையை ஒத்த தோளை உடைய
    திருமால் ஆவான்!
    என்று அனைவரும் கூறுவர்.

     

     

     

     

     

     

    (கண்ணனே சேரனாக, சோழனாக, பாண்டியனாகக் கோலம் வரித்து
    தமிழகத்தை ஆண்டான் எனும் உள்வரி வாழ்த்து இது.)

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி: கூகுள்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 193

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை

    பாட்டு

    மாயவனது வருகையையும் குழலோசையையும் பாடுதல்

    வஞ்சத்தால் வந்து நின்ற கன்றினைக்
    குறுந்தடியாகக் கொண்டு
    விளாமரத்தின் கனிகளை உதிர்த்த மாயவன்,
    இன்றைய பொழுதில்
    நம் ஆநிரைப்பக்கம் வருவானாயின்   krishna

    அவன் ஊதும் கொன்றைக் குழலின்
    இனிய இசையைக் கேட்டு நிற்போம் தோழி! 

    பாம்பினைக் கயிறாகக் கொண்டு
    கடல் கடைந்த மாதவன்,
    இன்றைய பொழுதில்
    நம் ஆநிரைப்பக்கம் வருவானாயின்
    அவன் ஊதும் ஆம்பற் குழலின்
    இனிய இசையைக் கேட்டு நிற்போம் தோழி! 

    நமது கொல்லையைச் சார்ந்த இடத்தில்
    வஞ்சத்தால் வந்து நின்ற
    குருந்தமரத்தினை முறித்தெறிந்த மாயவன்,
    நம் வழிபாட்டின் பயனால்
    இன்றைய பொழுது
    நம் ஆநிரைக்கு வருவானாயின்
    அவன் ஊதும் முல்லைக் குழலின்
    இனிய ஓசையைக் கேட்டு நிற்போம் தோழி! 

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

    படத்துக்கு நன்றி: கூகுள்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 172

    மலர்சபா

    மதுரைக் காண்டம் – 05. அடைக்கலக் காதை

    கவுந்தி மாதரியிடம் ‘கண்ணகியை அழைத்துச் செல்க’ எனல்

    amala

    சாரணர் உரைத்த தகுதிவாய்ந்த
    அறவுரைகளைக் கேட்டு
    அதை மறைகள் கூறிய உரை எனக்கொண்டு
    அந்நகரத்தில் வாழ்ந்த
    அருந்தவம் செய்தவர்களும்
    தனக்கென வாழாமல்
    பிறர்க்கென வாழும் உலக நோன்பிகளும்
    தானங்கள் பலவும் செய்து வாழ்ந்து வந்த
    சாயலனும் அவன் மனைவியும்
    குறைகள் இன்றி இன்பம் வழங்கும்
    வீடு பேறு எய்தினர்.

    “தானத்தின் சிறப்பினை உணர்ந்து
    அதற்கு உடன் பட்டாய் என்றால்
    அடர்ந்த கூந்தலையுடைய இவளுடன்
    மேலும் காலம் தாழ்த்தாது
    நீ சென்றிடுவாயாக” என்று
    கவுந்தியடிகள் கூறிய உரைதனில்
    அகம் மகிழ்ந்து அவரைப் போற்றினள் மாதரி.

    மாதரி கண்ணகியுடன் மாலையில் தன் மனைக்குச் செல்லுதல்

    வளர்ந்து வருகின்ற
    இளமை பொருந்திய
    அழகிய மார்பையும்
    மூங்கிலின் அழகைக் கொண்ட
    வலிமையான தோள்களையும்,
    இளைய நாணல் முளைத்தது போன்ற
    வெள்ளைப் பற்களையும்
    முதிர்ந்த அறிவையும் உடைய கண்ணகியோடு,
    மேற்குக் கடலில் கலந்து
    சூரியனின் ஒளி அடங்கும் நேரத்தில்,
    கன்றுகளை எண்ணிப் பசுக்கள்
    எழுப்பும் குரலொலிகள் ஒலித்திருக்க
    கன்றினை நினைத்து வருகின்ற
    பசுக்களின் குரல் ஒலித்திருக்க,
    ஆட்டுக்குட்டியையும் கோடரியையும்
    உணவு உறிகளையும்
    தோளில் சுமந்து செல்லும் இடையர்களுடன்
    கைவளையல்களை அணிந்து செல்லும் ஆய்ச்சியர்கள்,
    கண்ணகி புதியவளாக இருந்தபோதும்
    அவள் அழகைக் கண்டு வியந்து
    அவளைச் சூழ்ந்து வந்தனர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 192- 205

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி:
    கூகுள்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 120

    மதுரைக் காண்டம் – 11. காடு காண் காதை

    malar

    “விடை கூறாது போயினும்

    உமக்கு இடர் செய்யேன்;

    நீங்கள் செல்ல வேண்டிய வழியில்

    செல்ல அனுமதிப்பேன்” என்பாள்.

     

    உங்களில் யாரேனும் விடையளித்தால்

    முன்பு உரைத்த மூன்று பொய்கைகளைக் காட்டி நீங்குவாள்.

    அரிய வேதத்தின் கண்ணாகிய

    ஐந்தெழுத்து மந்திரம், எட்டெழுத்து மந்திரம் இவற்றை

    ஒருமுகப்பட்ட உள்ளத்துடன் நினைத்து, வாயால் துதித்து,

    அம்மூன்று பொய்கைகளுள் ஒன்றில்மூழ்கி எழுந்தால்

    பெரும் பயனை அடைவீர்.

    அத்தகைய பலன் அதிகத் தவத்தையுடைவர்க்கும்

    கிடைப்பதற்கு மிகவும் அரியது.

     

    அப்பொய்கையில் மூழ்கி அதன் பயனைப் பெற

    நீங்கள் விரும்பவில்லையென்றால்,

    அம்மலை மீது நின்றிருக்கும்

    தாமரை போன்ற திருவடிகளையுடைய

    திருமாலை நினைத்திடுங்கள்.

    அங்ஙனம் நினைத்திடும் போது

    திருமாலின் அழகிய கருடன் பொறித்த

    கொடி பறந்திடும் ஓங்கி உயர்ந்த

    கொடிமரத்தைக் காண்பீர்கள்.

     

    அத்திருவடிகளைக் கண்டவுடனேயே

    மலர் போன்ற திருவடிகள் இரண்டும்

    உம்மை ஏற்றுக் கொண்டு

    பிறவித் துயரையெல்லாம் நீக்கிவிட்டு

    பேரின்பம் வழங்கும்.

    இந்த இன்பம் அடைந்த பின்

    மதுரைக்குச் செல்லுங்கள்.

    கண்கூடாகக் காணத்தக்க அக்குகையின்

    சிறப்புகள் இவையாகும்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  126 –  140

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram6.html

     

    படத்துக்கு நன்றி:

    http://ww.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=159&Cat=3

    மலர்சபா

    Share