Tag: முனைவர் மு.பழனியப்பன்

  • தொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்

    –முனைவர் மு.பழனியப்பன்.

    பொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இலக்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம், புறம் ஆகிய பொருள்களை வெளிப்படுத்தும் கருவியாக யாப்பு விளங்குகின்றது. யாப்பில் உணர்வைக் கூட்டுவது மெய்ப்பாடாகின்றது. யாப்பில் அணிநலம் சேர்ப்பது அணியாகின்றது. யாப்பில் மரபினை மாறாமல் காப்பது மரபாகின்றது. எனவே பொருள் இலக்கணம் செய்யுளின் வடிவம், அழகு, வெளிப்பாட்டுத்திறன் ஆகியவற்றின் இலக்கணமாக விளங்குகின்றது.

    tolkapiyamதொல்காப்பியர் இலக்கியத்தில் இடம்பெறும் உணர்ச்சிகளை மெய்ப்பாட்டியல் என்ற இயலில் தனித்து விளக்குகின்றார். இவருக்குப் பின்வந்த புத்தமித்திரனார் தன் இலக்கண நூலான வீரசோழியத்தில் மெய்ப்பாட்டு இலக்கணத்தைச் சுட்டியுள்ளார்.

    புத்தமித்திரனார் தன் வீரசோழிய நூலினை ஐந்திலக்கண நூலாகப் படைக்கின்றார். இந்நூல் எழுத்ததிகாரப் பிரிவில் சந்திப்படலம், சொல்லதிகாரப்பிரிவில் வேற்றுமைப்படலம், தொகைப்படலம், தத்திதப்படலம், தாதுப்படலம், கிரியாபதப்படலம், பொருளதிகாரப் பிரிவில் பொருள்படலம், யாப்பதிகாரப் பிரிவில் யாப்புப்படலம், அலங்காரப் பிரிவில் அலங்காரப்படலம் ஆகிய உட்பகுப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. இதனுள் உள்ள பொருளதிகாரப் பிரிவில், பொருட்படலத்தில் அகம், புறம், அகப்புறம் ஆகியன பற்றிய இலக்கணங்கள் எடுத்துரைக்கப்பெறுகின்றன.

    அகப்பாடல்களில் இருபத்தேழு உரைமுறைகள் உள்ளனவாக வீரசோழியம் குறிக்கின்றது. சட்டகம், திணை, கைகோள், நடை, சுட்டு, இடம், கிளவி, கேள்வி, மொழி, கோள், உட்பெறுபொருள் (உள்ளுறை), சொற்பொருள், எச்சம். இறைச்சி, பயன், குறிப்பு, மெய்ப்பாடு, காரணம், காலம், கருத்து, இயல்பு, விளைவு, உவமம், இலக்கணம், புடையுரை, மொழிசேர்தன்மை, பொருளடைவு என்பன அவ்விருபத்தேழும் ஆகும். இவ்விருபத்தேழில் ஒன்றாகக் குறிக்கத்தக்கது மெய்ப்பாடு ஆகும்.இவ்வகையில் இரு   நூல்களிலும் குறிக்கத்தக்க இடத்தை மெய்ப்பாடு பெற்றுள்ளது. தொல்காப்பியம் காட்டும் மெய்ப்பாட்டு இயல்புடன், வீரசோழிய மெய்ப்பாட்டு இயல்புகளை ஒப்பு நோக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

    மெய்ப்பாடு விளக்கம்:

    தொல்காப்பியம்

    ‘‘கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்

    உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்

    நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே’’[1]

    என்று மெய்ப்பாட்டிற்கு இலக்கணம் வகுக்கின்றது. இலக்கியங்களில் வெளிப்படுத்தப்படும் மெய்ப்பாடு என்பது நுண்ணிய உணர்வுடையாரால் மட்டுமே அறியத்தக்கது. கண்களாலும், செவிகளாலும் மெய்ப்பாடுகள் உணரத்தக்கனவாக இருக்க வேண்டும் என்பன தொல்காப்பியம் தரும் மெய்ப்பாட்டிற்கான வரையறைகள் ஆகும். மெய்யின்கண் படும் பாடு மெய்ப்பாடு என்று பொதுவில் மெய்ப்பாடு என்பதற்குப் பொருள் கொள்ளலாம்.

    வீரசோழியம் மெய்ப்பாடு என்பதை ‘‘மெய்க்கட் பட்டு விளங்கிய தோற்றம் செவ்விதின் தெரிந்து செப்பல்’’ [2] என்று விளக்கம் கொள்கின்றது. தொல்காப்பியம் உரைத்த அதே விளக்கத்தினை ஏற்றுத் தாமும் வழிமொழிவதாக வீரசோழியம் விளக்கம் தருகின்றது.

    மெய்பாட்டின் வகைகள்:

    மெய்ப்பாட்டினைத் தொல்காப்பியர் பொதுவான மெய்ப்பாடுகள், அகத்திற்கே உரிய மெய்ப்பாடுகள் எனப் பிரிக்கின்றார்.

    வீரசோழிய ஆசிரியர் அகத்திற்கான மெய்ப்பாடுகள், புறத்திற்கான மெய்ப்பாடுகள் எனப் பகுத்துரைக்கின்றார்.

    தொல்காப்பியர் சுட்டும் அகமெய்ப்பாடுகள் வீரசோழியம் காட்டும் அக மெய்ப்பாடுகளுடன் பொருந்தத் தக்கன. தொல்காப்பியர் காட்டும் பொதுவான மெய்ப்பாடுகள் புற மெய்ப்பாடுகளுடன் பொருந்தத்தக்கன.

    அகத்திற்கே உரிய மெய்ப்பாடுகள் ஐந்து நிலைகளாக் கொள்ளப்படுவதாகக் குறிக்கிறார் புத்தமித்திரனார். மன்மதனின் ஐந்து கணைகள் போல அது ஐந்து என்பது அவரின் கணக்கீடு. ‘‘ ஐவகை கணையுளாக்கிய காமம்’’[3] என்று இதனைப் புத்தமித்திரனார் மொழிகின்றார். இந்த ஐவகை பின்பு முப்பதியிரண்டுத் துறைகளாகப் பகுக்கப்பெறுகின்றன.

    ஐந்து கணைகள்:

    சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்னும் ஐந்தும் அக மெய்ப்பாட்டின் பிரிவுகளாகப் புத்தமித்திரனரால் கொள்ளப்பெறுகின்றன. இவற்றுக்கான விளக்கங்களையும் புத்தமித்திரன் வழங்கியுள்ளார்.

    சுப்பிரயோகம் – காதலர் குறித்த சொல்லும் நினைப்புமாக இருப்பது

    விப்பிரயோகம்- வெய்துயிர்ப்பு உறுதல்

    சோகம்– உடலில் வெம்மை ஏற்படலும், சோறுண்ணாமல் இருத்தலும்

    மோகம் – மயக்கமும் மொழி பல பிதற்றலும்

    மரணம்- அணங்கலும் வருந்தலும்[4]

    என்று ஐவகைக் கணைகளுக்கும் விளக்கம் தருகின்றார் புத்தமித்திரனார். இச்செய்தி தொல்காப்பியத்தில் காணப்படாத செய்தியாகும்.

    துறைகள் முப்பத்தியிரண்டு:

          இவ்வைங்கணைகள் முப்பத்தியிரண்டின் வழிப்படுகின்றன. அவை தொல்காப்பிய அக மெய்ப்பாடுகளுடன் ஒப்பு வைக்கத்தக்கன. தொல்காப்பியர் சுட்டும் அக மெய்ப்பாடுகள் அவத்தைகள் என அழைக்கப்படுகின்றன.[5]

    mm1

    விளர்ப்பேமேற்காண் பட்டியலில் தொல்காப்பிய அக மெய்ப்பாடுகளுடன் பொருந்தும் வீரசோழிய மெய்ப்பாடுகள் காட்டப்பெற்றுள்ளன. பொருந்தாத மெய்ப்பாடுகள் பின்வருமாறு.

    1. பசப்பே
    2. மெலிவே
    3. விதிர்ப்பே
    4. துளக்கந் துயர்தல்
    5. தும்மல்
    6. சோர்தல்
    7. வெருவுதல்
    8. விரும்புதல்
    9. ஒப்பிலாமை
    10. உருகுதல்
    11. மயங்குதல்
    12. மூரி உயிர்ப்பு
    13. மூர்ச்சனை
    14. முறுவல்
    15. காரிகை கடத்தல்
    16. இருந்துழியிராமை
    17. இராகம் இகழ்தல்
    18. சேர் துயிலின்மை
    19. காட்சி விரும்பல்
    20. உண்டி விரும்பாமை
    21. உரைத்தது மறுத்தல்
    22. கண்ணீர் வழிதல்
    23. கனவு நனி காண்டல்[6]

    ஆகியன தொல்காப்பியத்தில் இல்லாத புதிய அக மெய்ப்பாட்டுத் துறைகளாக வீரசோழிய ஆசிரியரால் கண்டுகொள்ளப்பெற்றுள்ளன.

    புறமெய்ப்பாடுகள்:

    தொல்காப்பியர் பொதுவான மெய்ப்பாடுகள் எனச் சுட்டிய நகை முதலான எட்டையும் ஏறக்குறைய புற மெய்ப்பாடுகளாகக் கருதுகின்றார் வீரசோழியம் இயற்றிய புத்தமித்தினரார். அவற்றின் பட்டியல் பின்வருமாறு.

    mm2

    இப்பட்டியல் தொல்காப்பிய மெய்ப்பாடுகளுடன் வடமொழி மெய்ப்பாடுகளையும், வீரசோழிய மெய்ப்பாடுகளையும் ஒப்பிட்டு நோக்குகின்றது. இவற்றில் வெகுளி என்ற மெய்ப்பாடு வீரசோழியத்தில் இடம்பெறவில்லை. உட்கோள் என்பது புதிதாக இடம்பெற்றுள்ளது. சிருங்காரம் என்பது வடமொழிக்கும், வீரசோழியத்திற்கும் பொருந்துகிறது. இப்பொருத்தம் வீரசோழியம் வடமொழிச் சார்பினது என்பதைத் தெரிவிப்பதாக உள்ளது. வடமொழியின் சாந்தம் தமிழ் மரபில் தனித்த நிலையில் ஏற்கப்பெறவில்லை என்பதற்குத் தொல்காப்பியமும் வீரசோழியமும் அதனை விடுத்தது கருதித் தெரியவருகின்றது.

    இவ்வெண்வகை மெய்ப்பாடுகளும் தோன்றும் களங்கள் நான்காகும். இதனைத் தொல்காப்பியமும் ஏற்கின்றது. வீரசோழியமும் ஏற்கின்றது. அவற்றையும் இங்குப் பொருத்திப் பார்ப்பது மெய்ப்பாடு குறித்த முழுமையான புரிதலை உண்டாக்கும்.

    நகை:

    நகை தோன்றும் இடங்களாகத் தொல்காப்பியம்,

    எள்ளல், இளமை, பேதமை, மடனென்று

    உள்ளப்பட்ட நகை நான் கென்க[7]

    என்ற நான்கினைக் காட்டுகின்றது. வீரசோழியம்

    மயக்கம்,பெயர்ப்பே, இகழ்வே, நோக்க

    நயப்பத் தோன்றும் நகையது நலனே[8]

    என்ற நான்கினைக் காட்டுகின்றது. இவற்றை ஒப்பிட்டுப் பின்வரும் பட்டியல விளக்குகின்றது.

    mm3


    அழுகை:
    நகைக்காக களங்கள் ஏறக்குறைய இரு நூல்களிலும் பொருந்துவதாக அமைகின்றது. இளமை என்ற ஒன்று தொல்காப்பியத்திலும், பெயர்ப்பு என்ற ஒன்று வீரசோழியத்திலும் தனித்து் விளங்குகின்றன. எனவே நகை தோன்றும் இடங்கள் நான்கில் இருந்து ஐந்தாக வளர்ச்சி பெற்றுள்ளது எனக் கொள்ள இயலும். எள்ளல், இளமை, பேதமை, மடன், பெயர்ப்பு நகை தோன்றுவதற்கான இடங்களாகின்றன.

    அழுகை என்ற மெய்ப்பாட்டினைத் தொல்காப்பியர் காட்ட அதற்கு இரக்கம் என்ற மெய்ப்பாட்டை இணையாக வைக்கின்றார் வீரசோழிய ஆசிரியர்.

    இழிவே, இழவே, அசைவே வறுமையென

    விளிவில் கொள்கை அழுகை நான்கே[9]

    என்பது தொல்காப்பியம்

    வருத்தம் இகழ்வே விலியின்மை, பெருமை

    இரக்கந் தோன்றும் இந்நாலிடத்தே[10]

    என்பது இரக்கம் மெய்ப்பாடு தோன்றும் நான்கு களங்கள் என்கிறது வீரசோழியம். இதன் பொருத்தப்பாடு பின்வருமாறு.

    mm4


    இளிவரல்:
    அழுகைக்கான களங்களில் இழவிற்குத் தொல்காப்பியத்தில் இடம் தரப்பெற்றுள்ளது. வீரசோழியத்தில் பெருமைக்கு இடம் தரப்பெற்றுள்ளது. மற்ற மூன்றும் பொருந்துகின்றன. எனவே இதுவும் ஐந்தாக வளர்ச்சி கொள்ளுகின்றது. இழிவே, இழவு, அசைவு, வறுமை, பெருமை ஆகியன அழுகைக்கான களங்கள் ஆகும்.

    தொல்காப்பியம் சுட்டும் இளிவரலை, இழிப்பு எனக் கொள்கின்றது வீரசோழியம்.

    இளிவரல் மெய்ப்பாட்டின் தோற்றக் களங்கள் பின்வருமாறு.

    ‘‘மூப்போ பிணியே வருத்த மென்மையொடு

    யாப்புற வந்த இளிவரல் நான்கே’’[11]

    இழிப்பு பற்றிய வீரசோழிய நூற்பா பின்வருமாறு

    நாற்றஞ் சுவையே தோற்றம் ஊறு என்று

    இந்நால் வழித்தாம் இழிப்பு எனப்படுமே[12]

    இவ்விரு நூற்பாக்களின் வழி பெறப்படும் பகுப்புகள் பின்வரும் நிலையில் ஒப்பு நோக்கத்தக்கனவாகும்.

    mm5


    மருட்கை:
    தொல்காப்பியம் இளிவரல் எனச் சுட்டுவது, இழிப்பு என்ற வீரசோழியம் காட்டும் மெய்ப்பாடுடன் ஒத்துப்போகின்றது. இளிவரல் தோன்றும் களங்களில் மூப்பு, பிணி ஆகிய இரண்டும் பொருந்துகின்றன. மற்ற இரண்டான வருத்தம், மென்மை ஆகியன பொருந்தவில்லை. வீரசோழியத்தால் புதிதாகக் காட்டப்பெற்றுள்ள நாற்றம்,சுவை ஆகியவற்றால் இழிப்புத் தோன்றும் என்பது உறுதி. எனவே இது இழிப்பின் மெய்ப்பாட்டின் வளர்ச்சி நிலை எனக் கருதலாம். இதனடிப்படையில் மூப்பு, பிணி, வருத்தம், மென்மை, நாற்றம்,சுவை ஆகிய ஆறாக இளிவரல் மெய்ப்பாடு தோன்றும் இடங்கள் அமைகின்றன.

    வியப்பு என வீரசோழியத்தால் குறிக்கப்படும் தொல்காப்பிய மருட்கை நான்கு தோற்றக் களன்களை உடையது.

    தொல்காப்பியம்,

    புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடு

    மதிமை சாலா மருட்கை நான்கே[13]

    என்று மருட்கை தோன்றும் இடங்களைக் காட்டுகின்றது.

    வீரசோழியம்

    தறுகண்மை, புலமை, பொருளே, பண்பே

    பெறுவழித் தோன்றும் பெருந்தகு வியப்பே[14]

    என்று வியப்பு பிறக்கும் களங்களைச் சுட்டுகின்றது. இதன் ஒப்பீடு பின்வருமாறு.

    mm6

    தொல்காப்பியம் சுட்டும் வியப்பிற்கான களங்கள் மூன்றும் பண்பு என்ற வீரசோழியப் பகுப்பில் உள்ளடங்கி விடுகின்றன. ஆக்கம் என்பதற்குப் பொருள் என்பதை ஒப்பாக வைக்கலாம். இவை தவிர தறுகண், புலமை காரணமாக வியப்பு மேலிடலாம் என்றுப் புதிதாக முடிகின்றது வீரசோழியம். ஆகவே புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம், தறுகண், புலமை ஆகியன வியப்பின் பிறப்பிடங்களாக அமைகின்றன.

    அச்சம்:

    அச்சம் என்ற மெய்ப்பாடு இரு நூல்களாலும் அதே பெயரெில் அழைக்கப்படுகின்றது. இது பிறக்குமிடம் நான்கு என்கிறது தொல்காப்பியம்.

    ‘‘அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்

    பிணங்கல் சாலா அச்சம் நான்கே’’[15]

    ‘‘மாற்றலர், விலங்கல், மற்றவர் சேருத

    லாற்றத் தோன்றும் அச்சத்து விளைவே’’[16]

    என்பது வீரசோழியம் காட்டும் அச்ச மெய்ப்பாட்டுக்கான பிறப்பிடங்கள் ஆகும்.

    அச்சம் என்ற மெய்ப்பாடு பொருந்தும் நிலையைப் பின்வரும் பட்டியல் விளக்குகின்றது.

    mm7


    பெருமிதம்:
    அச்சத்தில் இரு களங்கள் ஒத்தமைகின்றன. மற்றவர் என்ற களம் வீரசோழியத்தில் உள்ளது. தம் இறை, அணங்கு ஆகியன தொல்காப்பியத்தில் உள்ளன. இவற்றை வீரசோழியம் மற்றவர்கள் எனக் குறிப்பதாகக் கொள்ளலாம். அணங்கு, விலங்கு, கள்வர், இறை, மற்றவர் என்ற நிலையில் அச்சம் அமையலாம். வீரசோழியத்தில் அச்சம் தோன்றும் மூன்று இடங்கள் மட்டும் சுட்டப்பெற்றுள்ளன.

    தொல்காப்பியம் சுட்டும் அடுத்த சுவை பெருமிதம் என்பதாகும். இந்தப் பெருமிதத்திற்கும் பிறக்கும் களன் நான்காகும்.

    கல்வி தறுகண் இசைமை கொடை யெனச்

    சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே[17]

    வீரசோழியம் பெருமிதம் என்பதை வீரம் என்ற மெய்ப்பாடாகக் கொள்ளுகின்றது. அம்மெய்ப்பாடு பிறக்கும் நான்கு இடங்கள் பின்வருமாறு.

    ‘‘பகையே செருவே இகலே முனிவே

    மிகுவழித் தோன்றும் வீரத்து விளைவே’’[18]

    இவ்வகையில் ஓரளவிற்கு இணையும் இம்மெய்ப்பாடுகளைப் பின்வரும் நிலையில் அதன் பிறப்பிடங்களை நோக்கி ஒப்புக் காண முடிகின்றது.

    mm8


    வெகுளி:
    தொல்காப்பியம் பெருமிதம் என்பதை மெய்ப்பாடாகக் கொள்ளுகின்றது. அதன் களங்கள் கல்வி, தறுகண், இசைமை, கொடை என்பதாகச் சுட்டுகின்றது. இவற்றுள் தறுகண் என்பதை வீரமாகக் கொண்டு வீரத்தை மெய்ப்பாடாக வீரசோழியம் கருதுகின்றது. வீரம் என்ற மெய்ப்பாடு வடமொழியிலும் உள்ளது, வடமொழியின் சார்பினால் வீரசோழியம் வீரத்தை மெய்ப்பாடாகக் கருதுகின்றது எனக் கொள்ளலாம்.

    வெகுளி என்ற மெய்ப்பாடு தொல்காப்பியத்தில் மட்டும் காணப்படுகின்றது. இதனை ரௌத்திரம் என்று வடமொழி குறிக்கின்றது. வீரசோழியம் இதற்கு இணையாக மெய்ப்பாடு எதனையும் கொள்ளவில்லை.தொல்காப்பியம் உறுப்பறை, குடி, அலை, கொலை ஆகியனவற்றை வெகுளி மெய்ப்பாடு பிறக்கும் களங்களாகச் சுட்டுகின்றது.

    தொல்காப்பியம் காட்டும் வெகுளி மெய்ப்பாட்டின் பிறப்பிடங்களை உணர்த்தும் நூற்பா பின்வருமாறு.

    ‘‘உறுப்பறை குடிகோள் அலைகொலை என்றன

    வெறுப்ப வந்த வெகுளி நான்கே’’[19]

    இம்மெய்ப்பாட்டினைப் புத்தமித்திரர் தன்னுடைய நூலான வீரசோழியத்தில் விடுத்ததற்கான காரணம் உண்டு. உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்பன நான்கும் ஒருவரை வருத்தும் துயரங்கள் ஆகும். இதனை பௌத்த சமயம் ஏற்காது. பௌத்த சமயத்தின் அடிப்படைக் கொள்கையே அகிம்சையாகும். இதன் காரணமாக புத்தமித்திரனார் இந்த மெய்ப்பாட்டை விடுத்துள்ளார்.

    இதற்குப் பதிலாக உட்கோள் என்ற ஒன்றைப் புதிதாகப் புத்தமித்திரன் உருவாக்கி எண்வகை மெய்ப்பாடாக ஆக்கிக்கொள்கிறார்.

    உவகை:

    சிருங்காரம் என்பது வடமொழியில் உள்ள முதல் மெய்ப்பாடு ஆகும். இதனை அப்படியே வீரசோழியம் ஏற்கின்றது. இதனைத் தொல்காப்பியம் சுட்டும் உவகை என்ற மெய்ப்பாடுடன் ஒத்து வைத்து எண்ணமுடியும்.

    செல்வம் புலனே புணர்வு விளையாட்டென

    அல்லல் நீத்த உவகை நான்கே[20]

    என்ற தொல்காப்பிய நூற்பா உவகையின் பிறப்பிடங்கள் நான்கினைக் காட்டுவதாக உள்ளது,

    இளமையும் வனப்பும் வளமையும் கலவியும்

    களனாகத் திரிதருஞ் சிருங்காரம்மே[21]

    என்ற வீரசோழிய நூற்பா சிருங்காரரசம் பிறக்கும்.இடங்களைக் காட்டுகின்றது. இவற்றின் ஒப்புநிலை பின்வருமாறு.

    mm9


    உட்கோள்:
    சிருங்கார ரசத்திற்கான தோற்றக் களங்களில் தொல்காப்பியத்திற்கும், வீரசோழியத்திற்கும் இரண்டு என்ற அளவில் பொருந்துகின்றன. இரண்டு பொருந்தவில்லை. ஆகவே செல்வம்,புணர்வு, விளையாட்டு, புணர்வு, இளமை, வனப்பு ஆகியன நகைக்கான பிறப்பிடங்களாக அமைகின்றன.

    வெகுளி என்ற மெய்ப்பாட்டினை ஏற்காத வீரசோழியம் அதனிடத்தில் உட்கொள் என்ற ஒன்றை அமைத்துக்கொண்டுள்ளது. உட்கோள் தோன்றும் நிலைக்கலன்களாக ஐவகைக் குரவர்(தாய், தந்தை, குரு, தெய்வம், மூத்தோர்), தேவர், மன்னர் ஆகியோரின் எய்தாது எய்திய இயல்பு உட்கோள் என்கிறது வீரசோழியம்.

    ‘‘ஐவகைக் குரவர் தேவர் மன்னர்

    எய்தா தெய்திய வியல்பவை உட்கோள்’’[22]

    என்பது உட்கோளை விளக்கும் வீரசோழிய நூற்பாவாகும்.

    மேற்கண்ட ஒப்பீடுகளில் இருந்துப் பின்வரும் கருத்துகள் அறியத்தக்கனவாகின்றன..

    நகையும் அழுகையும் ஆகிய இரு மெய்ப்பாடுகள் தொல்காப்பியம், வீரசோழியம் ஆகிய இரண்டு இலக்கண நூல்களிலும் பெரிதும் பொருந்துவனவாகத் திகழ்கின்றன. இவை தோன்றும் களங்களாக காட்டப்படும் நான்கில் மூன்று பொருந்தி வருகின்றன.

    இளிவரல், வியப்பு, அச்சம், சிருங்காரம் ஆகிய நான்கும் தொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் தோற்றக் களங்கள் இரண்டினால் ஒன்று படுகின்றன. இரண்டால் வேறுபடுகின்றன.

    பெருமிதம் என்ற தொல்காப்பிய மெய்ப்பாடு வீரம் என்பதாக வீரசோழியத்தால் கொள்ளப்படுகின்றது. பெருமிதத்தின் தோற்றக்களன்களுள் ஒன்றாக வீரத்தைத் தொல்காப்பியம் காண வீரத்தையே தனியான மெய்ப்பாடாக வடமொழியினுடன் ஒத்து வீரசோழியம் கொள்ளுகின்றது.

    வெகுளி என்ற தொல்காப்பிய மெய்ப்பாடு வீரசோழியத்தில் இல்லை. உட்கோள் என்ற வீரசோழிய மெய்ப்பாடு தொல்காப்பியத்தில் இல்லாதப் புதுமையது.

    நகை, மருட்கை, அச்சம் போன்ற மெய்ப்பாடுகள் பெயர் நிலையில் அப்படியே இரு நூல்களில் ஒத்து அமைகின்றன. அழுகை என்பதற்கு இரக்கம் என்பதும், இளிவரல் என்பதற்கு இழிப்பு என்பதும் கொள்ளப்படுகின்றது. சிருங்காரம், வீரம் ஆகிய வீரசோழிய மெய்ப்பாடுகள் தொல்காப்பிய மெய்ப்பாடுகளான உவகை, பெருமிதம் ஆகியவற்றோடு பெயரளவில் ஒத்துச் செல்லவில்லை என்றாலும் பொருள் அளவில் ஓரளவிற்கு ஒத்து் அமைகின்றன.

    வெகுளி என்ற தொல்காப்பிய மெய்ப்பாட்டை வீரசோழியத்தால் ஏற்க முடியவில்லை. உட்கோள் என்ற வீரசோழியம் காட்டும் மெய்ப்பாடு தொல்காப்பியத்தில் பெயரளவிலும் பொருள் அளவிலும் காணப்படவில்லை.

    இவ்வாறு புற மெய்ப்பாடுகளில் ஒற்றுமை, வேற்றுமைகளை ஒப்பிட்டு அறியமுடிகின்றது.

    முடிவுகள்:

    தொல்காப்பியம், வீரசோழியம் ஆகிய இரண்டிலும் மெய்ப்பாடுகள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியம் அகம் சார்ந்த மெய்ப்பாடுகளாக இருபத்துநான்கினைக் காட்ட, வீரசோழியம் அகம் சார்ந்த மெய்ப்பாடுகளாக ஐந்து கணைகள், முப்பத்தியிரண்டுத் துறைகள் ஆகியனவற்றைக் காட்டுகின்றது. இவையிரண்டையும் பொருத்திப் பார்க்கையில் எட்டு இரண்டு நூல்களுக்கும் பொருந்தி அமைகின்றன. மற்றவை பொருந்தவில்லை. அவ்வகையில் தொல்காப்பிய அகமெய்ப்பாடுகளில் பதினாறும், வீரசோழியத்தில் இருபத்துநான்கும் பொருத்தமில்லாமல் தனித்து விளங்குவனவாகும்.

    புறமெய்ப்பாடுகள் என்று தொல்காப்பியம் சுட்டும் வெகுளி முதலான எண்வகை மெய்ப்பாடுகளை ஒட்டி எட்டினை வீசோழியம் குறிக்கின்றது. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம்,பெருமிதம், உவகை ஆகிய ஏழும் பகுப்பு, பொருள் அளவில் பொருந்தி அமைகின்றன.

    வெகுளி என்ற தொல்காப்பிய மெய்ப்பாடு வீரசோழியத்தால் பின்பற்றப்படவில்லை. உட்கோள் என்ற ஒன்று குறிக்கப்படுகிறது. இது ஐவகைக் குரவர் போன்றோர் மீது ஏற்படும் மதிப்பால் விளையும் உடல் மெய்ப்பாடுகள் ஆகும்.

    வடமொழியில் உள்ள சாந்தம் என்ற மெய்ப்பாடு தொல்காப்பியத்தாலும் வீரசோழியத்தாலும் தனித்த ஒன்றாக ஏற்கப்படவில்லை. வடமொழியின் சா்ர்பின் காரணமாக சிருங்கார ரசம், வீர ரசம் ஆகியன வீரசோழியத்தினால் எடுத்தாளப்பெற்று அவை மெய்ப்பாடுகளாக ஆக்கப்பெற்றுள்ளன.

    தொல்காப்பியர் காட்டிய மெய்ப்பாடுகள் வீரசோழிய காலத்தில் தேய்வும், வளர்ச்சியும் பெற்றுள்ளளன என்று முடியலாம்.

     

     


     

    பயன் கொண்ட நூல்கள்:

    1. இளம்பூரணர்(உ.ஆ) தொல்காப்பியம், சாரதா பதிப்பகம், சென்னை, 2010
    2. சுப்பிரமணியம்.ச.வே., வீரசோழியம் திறனாய்வு, மூலமும் கருத்தும், தமிழ்ப்பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 1979
    3. தாமோதரம் பிள்ளை,(சி.வை.), வீரசோழியம், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 2008

     

    [1] தொல்காப்பியம்,மெய்ப்பாட்டியல், நூற்பா,27

    [2] வீரசோழியம்.பக் 77-78

    [3] வீரசோழியம், ப.79

    [4] வீரசோழியம்,ப. 79

    [5] தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் நூற்பாக்கள் 13,14,15,16,17,18 ஆகியவற்றின் சுருக்கம்

    [6] வீரசோழியம், ப.79

    [7] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல்,நூ.4

    [8] வீரசோழியம், ப. 80

    [9] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூ.5

    [10] வீரசோழியம், ப. 80

    [11] தொல்காப்பியம்,மெய்ப்பாட்டியல், நூ.6

    [12] வீரசோழியம், ப. 80

    [13] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூ.7

    [14] வீரசோழியம், ப. 80

    [15] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல்,நூ.8

    [16] வீரசோழியம், ப. 80

    [17] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூ.9

    [18] வீரசோழியம், ப. 80

    [19] தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூ.10

    [20] தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் நூ.11

    [21] வீரசோழியம், ப. 80

    [22] வீரசோழியம், ப. 80

     

    ____________________________

    முனைவர் மு.பழனியப்பன்
    இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத்தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    திருவாடனை, 623407
    இராமநாதபுர மாவட்டம்
    muppalam2006@gmail.com

    Share
  • சங்க இலக்கியங்களில் வானியல் செய்திகள்

    முனைவர் மு.பழனியப்பன்

    சங்க இலக்கியங்கள் பல்துறை செய்திகளைக் கொண்டு விளங்குகின்றன. உலக இலக்கியங்கள் என்று போற்றத்தக்க வகையில் அவற்றில் பற்பல துறைகள் சார்ந்த செய்திகள் அமைந்து கிடக்கின்றன. குறிப்பாக வானியல் பற்றிய பல குறிப்புகளையும் வானியல் நிகழ்வுகள் பற்றிய பல செய்திகளையும் சங்க இலக்கியங்கள் கொண்டுள்ளன. சங்க காலப்புலவர்கள் இதன் காரணமாக பல்துறை அறிவு சார்ந்து இயங்கினர் என்பதும் கருதத்தக்கது.

    வானத்தில் இருந்து பெய்யும் மழையின் இயக்கத்தை முல்லைப்பாட்டு மிக அழகாக அறிவியல் அடிப்படையில் அறிவிக்கின்றது.

    நனந்தலை உகலம் வளைஇ நேமியோடு

    வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

    நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்

    பாடிமிழ் பனிகடல் பருகி வலன்ஏர்பு

    கோடு கொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி

    பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலை ( முல்லைப்பாட்டு 1-6)

    என்ற இந்தப் பாடலடிகள் உணர்த்தும் மேகத்தின் இயக்கம் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தது ஆகும்.

    பனிகடல் பருகி வலப்புறமாக எழுந்த மேகமானது வானப்பரப்பிற்குச் சென்று, குளிர்ந்த காற்று பட்டதும் வானத்திலிருந்து மழையாகப் பொழிந்தது என்று முல்லைப்பாட்டு சுட்டும் கார்கால வருகையை அறிவியலார் காட்டும் மழையின் இயக்கத்துடன் ஒப்பு வைக்க முடியும்.

    ஒரு காலத்தில் மாபலிச் சக்கரவர்த்திக்காக வாமன அவதாரம்  எடுத்த திருமாலின் உயர்ச்சிபோல இம்மேகக் கூட்டத்தின் எழுச்சி இருந்தது என்று முல்லைப்பாட்டு படைத்த நப்பூதனார் ஒரு புராணச் செய்தியுடன் இதனை ஒப்பு வைக்கின்றார்.

    மழை பொழிவதற்கும் வானத்துக் கோள்களின் அசைவிற்கும் தொடர்பு உண்டு என்று சங்கப்புலவர்கள் கருதியுள்ளனர். வானத்தில் உள்ள வெள்ளி என்ற கோள் வடக்கு திசை நோக்கிச் சென்றால் மழைவளம் அதிகமாகும் என்றும் தென்திசை நோக்கிச் சென்றால் மழைவளம் குறையும் என்றும் சங்கப் புலவர்கள் உரைத்துள்ளனர்.

    இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் ( புறம். 35.7) என்று வெள்ளக்குடி நாகனாரும், தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும் ( புறம் 117.2) என்று கபிலரும்,

    ‘‘வசையில் புகழ் வயங்கு வெண்மீன்

    திசை திரிந்து தெற்கு ஏகினும்

    தற்பாடிய தனி உணவில்

    புட்டேம்பப் புயன்மாறி

    வான்பொய்ப்பினும் தான் பொய்யா

    மலைத்தலைய கடற்காவிரி’’ (பட்டினப்பாலை 1-6)

    என்று கடடியலூர் உருத்திரங்கண்ணனாரும் பாடியிருக்கும் பகுதிகள் வெள்ளி மீனின் தெற்கு திசை நோக்கிய வளமிக்க பயணத்தை எடுத்துரைப்பன.

    இவ்வாறு மழைபொழியும் தன்மை குறித்தும், மழை பொழியும் வானியல் சூழல் குறித்தும் தமிழர்கள் கவனித்துக் கணித்துள்ளனர். மழை என்பது முக்கியமான வளம் என்பதால் இதன் தேவையை உணர்ந்த சங்கப் புலவர்கள் இவ்வகையில்  மழை பற்றிய குறிப்புகளை அளித்துள்ளனர்.

    உலகத் தோற்றம்

    உலகின் தோற்றத்தையும், உலகின் இயக்கத்தையும் காணும் இயல்புடையோராகச் சங்கப்புலவர்கள் இருந்துள்ளனர். பதிற்றுப்பத்தில் இடம் பெறும் பின்வரும் பகுதி உலக இயல்பை, அதன் இயக்கத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.

    நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின்

    அளப்பு அரியையே;

    நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்,

    ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை;

    ஐந்து பூதங்களில் கூட்டுச் சேர்க்கையால் ஆகியது உலகம். இது நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல் போன்றவற்றின் இயக்கத்தால் நடைபெறுகிறது என்பதை இப்பாடல் எடுத்துக்காட்டுகின்றது. இவற்றின் சிறப்போடு அரசனின் சிறப்பு ஒப்பு நோக்கப்படுகிறது

    கோள்கள் விண்மீன்கள் பற்றிய செய்திகள்

    வான மண்டலத்தில் பல்வேறு கோள்கள் விண்மீன்கள் விளங்கியுள்ளன என்பதைச் சங்கப் புலவர்கள் அறிந்திருந்தனர். சூரியன், பூமி, வியாழன், புதன், வெள்ளி, சனி போன்றன பற்றியும், துணைக்கோளான திங்கள்  கோள் பற்றிய செய்திகள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. பற்பல் விண்மீன்களைப் பற்றிய செய்திகளும் சங்க இலக்கியங்களில் பதிவாக்கப் பெற்றுள்ளன. அடிப்படையில் வானத்தில் இயங்குபவனவற்றைக் கோள்கள் என்றும் வின்மீன்கள் என்றும் பகுக்கலாம். இவ்விரு பிரிவுகளைப் பின்வரும் பட்டினப்பாலை அடி தெளிவுபடுத்துகின்றது.

    நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும்
            நாள்மீன் விராஅய கோள்மீன் போல (பட்டினப்பாலை  67, 68)

    என்ற பாடலடி வானத்தில் உள்ளவற்றை நாள்மீன் என விண்மீனையும், கோள்மீன் என கோள்களையும் பிரித்தறிகின்றது. கோள்மீன்கள் பற்றிய செய்திகள் இதனடிப்படையில் முதலில் இங்கு அறிவிக்கப்பெற்று, அதன்பின் நாள்மீன்கள் பற்றிய செய்திகள் அறிவிக்கப்படுகின்றன.

    கோள்கள்

    செஞ் ஞாயிற்றுச் செலவும்,

    அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,

    பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,

    வளி திரிதரு திசையும்,

    வறிது நிலைஇய காயமும், என்று இவை

    சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும்

    இனைத்து என்போரும் உளரே; அனைத்தும் (புறநானூறு 30)

    என்ற பாடல் ஞாயிற்று மண்டலம் என்ற ஞாயிற்றைச் சுற்றியிருக்கும் கோள்களின் வரிசையைக் குறிப்பதாக உள்ளது. பரிப்பு சூழ்ந்த மண்டிலம் என்பது சூரிய குடும்பத்தைக் குறிப்பதாகும். சங்கக் காலப்புலவர்கள் சூரியனை மையமிட்ட வானியல் நிலையை அறிந்துள்ளனர் என்பதற்கு இப்பாடல் சான்றாகும். சென்று அளந்து அறிந்தோர் என்ற தொடர் வானியல் அறிவு வாய்க்கப்பெற்றவர் என்று பொருள் தரக்கூடியது. எனவே சங்க காலத்தில் வானியல் நோக்கும் அறிஞர் கூட்டம் இருந்துள்ளது என்பதும் இப்பாடல் வழி தெரியவருகின்றது.

    விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து எனப் பட்டினப்பாலை உரைப்பதும் வான மண்டலம் இருப்பதை உறுதி செய்கின்றது.

    சூரியன் பற்றிய செய்திகள்

    ஞாயிற்றின் தோற்றம். மறைவு, அதன் உச்சி மீதமர்ந்த நிலை ஆகியவற்றைப் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் காணமுடிகின்றது. ஞாயிறு அல்லது சூரியன் (Sun) மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த, ஞாயிற்று மண்டலத்தின் மையத்தில் உள்ள, ஞாயிற்று மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் ஞாயிற்றைச் சுற்றி வருகின்றன.[1] ஞாயிற்றின் எடை மட்டுமே பரிதி மண்டலத்தின் நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது . பரிதிக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு தோராயமாக 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். இத்தொலைவை ஒளி சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது. புவியில் உயிர்கள் வாழ்வதற்கு வாழ்வாதாரம் பரிதி ஆற்றலேயாகும். ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களில் சேகரிக்கப்படும் பரிதி ஆற்றல், பூமியின் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல் ஆகும்.[2]. மேலும் பூமியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவையும் பரிதியைச் சார்ந்தே உள்ளன.( விக்கிப்பீடியா) என்ற அறிவியல் கருத்து சூரியனின் தன்மையை எடுத்துரைப்பதாக உள்ளது.

    சங்கப்பாடல்களில் சூரியனை முன்வைத்தே அனைத்து வானியல் இயக்கங்களும் நடைபெறுகின்றன என்ற கருத்து பொதிய வைக்கப்பெற்றுள்ளது.

    வாள் நிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த

    இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து ( சிறுபாணாற்றுப்படை)

    என்ற தொடரில் கோள்கள் அனைத்தும் ஞாயிற்றினைச் சுற்றி அமைந்துள்ளன என்ற கருத்து பெறப்படுகின்றது. இதனை அறிவியல் அடிப்படையில் சொல்வதானால் சூரியனைச் சூழ்ந்த வட்ட பாதையில் கோள்கள் அனைத்தும் இயங்குகின்றன என்பதை உணரஇயலும்.

    பல் இருள் விடிய புலம்பு சேண் அகல

    பாய் இருள் நீங்க பல்கதிர் பரப்ப

    ஞாயிறு குண முதல் தோன்றியாஅங்கு ( பதிற்றுப்பத்து 59)

    என்ற பதிற்றுப் பத்து அடிகள் ஞாயிறு கிழக்கில் தோன்றி உலக இருள் அகற்றும் தன்மையை எடுத்துக்காட்டுகின்றது,

    சூரியனின் மறைவினை

    சுடர்கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு

    குட கடல் சேரும் படர் கூர் மாலையும்  (அகம் 378)

    என்ற பகுதி சூரியன் மேற்கில் மறையும் தன்மையைக் காட்டுகின்றது.

    சூரியனின் ஒளி மற்ற நட்சத்திரங்களை விட மிகப் பிரகாசமானது. இதன் காரணமாகச் சூரியனின் ஒளியில் மற்ற நட்சத்திரங்கள் தென்படுவதில்லை. இதனைப் பதிற்றுப்பத்து

    ‘‘மாஇரு விசும்பின் பல் மீன் ஒளி கெட

    ஞாயிறு தோன்றியாங்கு’’ ( பதி. 64)

    என்ற இவ்வடிகளில் இரவில் விண்மீன்கள் ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் செய்தியும் பகல் எழும்பொழுது அவை சூரியனின் ஒளியில் அதன் அதிகமான ஒளிப்பரப்பில் காணாமல் போவதும் சுட்டப் பெற்றுள்ளது.

    சூரியனின் உள்பகுதி எரிந்து கொண்டே இருக்கக் கூடியது. அதனையும் ஒரு சங்கப்பாடல் உணர்த்துகின்றது.

    ‘‘வான மூழ்கிய வயங்கு ஒளி நெடுஞ்சுடர்

    கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிறு’’ ( நற்றிணை 163)

    என்ற பாடலடிகளில் கதிரவனின் உள்பகுதி அகம் கனலியாக அதாவது அகத்திலே கனன்று கொண்டிருக்கக் கூடிய தன்மையை உடையது என்பதை அறிவிக்கின்றது.

    சூரிய உள்ளகம் சூரியனின் மையப் பகுதியாகும். இப்பகுதியின் அடர்த்தி சுமார் 150,000 கிலோகிராம்/மீட்டர்3 ஆகும். இப்பகுதியின் வெப்பம் தோராயமாக 13,600,000 கெல்வின் ஆகும். (சூரிய மேற்பரப்பு 5,800 கெல்வின்) .[30] கதிரவனின் ஆற்றல் அணுக்கருப் புணர்ச்சி மூலம் கிடைக்கிறது. இவ்வகைப் புணர்ச்சியை புரோட்டான்-புரோட்டான் தொடர் விளைவு என்பர். இவ்விளைவில் ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப்படுகிறது. கதிரவ உள்ளகத்தில் மட்டுமே நடைபெறும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாகும் ஆற்றல் கதிரவனின் மற்ற அடுக்குகளில் படிப்படியாக பரவுகிறது.(விக்கிப்பீடியா) என்ற அறிவியல் கருத்து மேற்கருத்துடன் ஒப்புநோக்கத்தக்கது.

    சூரியனின் உள்பகுதியில் ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியமாக மாற்ப்படும் தன்மை சுட்டப்பெறுகிறது. இதன் காரணமாக அதிக அளவு வெப்பம் வெளிப்படுகிறது எனச்சுட்டப்பெறுகிறது. சங்கப் புலவர் இதனை அகம் கனலி என்று வெளிப்படுத்துகிறார்.

    பூமி

    பூமியும் வான மண்டலத்தில் ஒரு கோளாகும். இப்பூமி சூரியனை மையமாக வைத்துச் சுழல்கிறது. மேலும் தன்னைத் தானேயும் அது சுற்றி  வருகின்றது. இதனைத் திருமுருகாற்றுப்படை

    உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

    பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு

    ஓஅற இசைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி  (திருமுருகாற்றுப்படை. 1-3)

    என்று அறிவி்க்கின்றது. இதில் உள்ள வலனேர்பு திரிதரு என்பது சூரியனின் இயக்கம் பற்றியதாகும். பூமி சூரியனை வலமாகச் சுற்றிவருகிறது. இதன் காரணமாக சூரியன் இடமிருந்து வலமாகச் சுற்றிவருவதாகத் தெரிகின்றது. இதனைத் திருமுருகாற்றுப்படை வலப்பக்கமாகச் சுழல்வதாகக் காட்டுகின்றது

    புதன்

    புதன் பற்றிய குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது. புந்தி மிதுனம் பொருந்த என்ற பாடலடி புதன் கோளைப் பற்றியதாகும். சூரியனின் வட்டப்பாதையில் முதலில் அமைந்துள்ள கோள் புதன் ஆகும்.

    வெள்ளி

    வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. சூரிய உதயத்துக்கு முன்னும்,சூரிய அஸ்தமனத்துக்கு பின்னும் வெள்ளி தன உச்சப்பிரகாசத்தை அடைகிறது, ஆதலாலே அது காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என்று அழைக்க படுகிறது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது அதிகரித்த பச்சைவீட்டு விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது. (விக்கிப்பீடியா) என்ற அறிவியல் செய்தி வெள்ளி என்ற கோளின் இயல்பினைச் சுட்டுகின்றது.

    வெள்ளி என்பதை வெண்மீன், சீர்சால் வெள்ளி என்று பலவாறு சங்கப்பாடல்களில் சுட்டப்பெற்றுள்ளது.  வெள்ளி என்பதைச் சுக்கிரன் என்றும் தற்போது அழைத்துவருகின்றனர்.

    வெள்ளி  தென்புலத்து உறைய விளைவயல்

    பள்ளம் வாடிய பயன் இல் காலை ( புறநானூறு. 388)

    என்ற குறிப்பு வெள்ளி மீன் இயக்கத்தைச் சுட்டுவதாக உள்ளது.

    வெள்ளிமீன் விடிகாலையில் வானத்தில் விளங்கும் காட்சியை

    வைகுறு மீனின் தோற்றம் ( அகம் 17)

    வைகுறு மீனின் பைபயத் தோன்றும் ( பெரும்பானாற்றுப்படை 318)

    குணக்குத் தோன்றும் வெள்ளியின் ( நற்றிணை 356)

    என்று சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர்.

    வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்

    உயர்சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே ( புறம் 397)

    என்ற பாடலடி அதிகாலையில் வெள்ளி என்ற கோளின் வரவை இயற்கை நிகழ்வுகளுடன் கலந்துரைக்கின்றது.

    செவ்வாய்

    செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஒட்சைட்டு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது (விக்கிப்பீடியா) என்ற அறிவியல் கருத்து செவ்வாய் பற்றிய செய்திகளை அறிவிக்கின்றது.

    செம்மீன் என்று இதனைச் சங்கத்தார் அழைத்தனர். பரிபாடலில் படிமகன் என்று இது சுட்டப்பெறுகின்றது. பதிற்றுப்பத்திலும் இக்கோள் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.

    வியாழன்

    வியாழன் கோள் பொன்னிறமானது. பொன்னிறமுடைய கோள் என்று வரும் புறநானூற்று அடியைக் கொண்டு சங்கப்புலவர்கள் வியாழன் கோள் பற்றி அறிந்துள்ளனர் என்பது புலப்படுகின்றது. வியாழன் (Jupiter) சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோள் அகும். மேலும் இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் வியாழனும் ஒன்றாகும்

    ‘‘தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்

    கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ’’ (புறநானூறு 392)

    என்ற பாடலடிகள் வழியாக வியாழன் சுட்டப்படுகின்றது எனத் தெளியமுடிகின்றது. பொலங்கலம் உள்ள கள் என்பதற்கு உவமையாக கோள்மீன் சுட்டப்படுவதால் அது வியாழன் என முடிவது பொருத்தமானது.

    சனி

    சனிக் கோளை மைம்மீன் என்று சங்கத்தார் அழைத்துள்ளனர். மைம்மீன் என்றால் கருமையான கோள் என்று பொருள். ‘‘மைம்மீன் புகையினும் ’’ ( புறம் 117) என்று இதனைக் கபிலர் பாடியுள்ளார்.

    ஆகவே சங்கப் புலவர்கள் அக்கால அறிவு நிலையின்படி அவ்வப்போது தெரிந்த கோள்களைப் பற்றிப் பாடியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

    திங்கள்

    நிலவினைப் பற்றிய பல தகவல்கள் சங்க இலக்கியத்துள் செறிந்துள்ளன. நிலவு நிலத்தைச் சுற்றிவரும் ஒரு துணைக்கோள். வளர்பிறை நிலவு, தேய்பிறை நிலவு இவற்றையெல்லாம் சங்கப்புலவர்கள் பாடியுள்ளனர். இதனை முறையே அலர்தரு பக்கம் என்றும், வழியது பக்கம் என்றும் அழைத்துள்ளனர்.
    பல் மீன் நடுவண் திங்கள் போலவும், (மதுரைக்காஞ்சி 219) , பல் மீன் நடுவண் பால் மதி போல,( சிறுபாணாற்றுப்படை) என நிலவு விண்மீன்கள் சூழ இருக்கும் காட்சியைச் சங்கப் புலவர்கள் கவனித்துள்ளனர்.

    பிறையைத் தொழும் வழக்கம் அக்காலத்திலேயே இருந்துள்ளது. தொழுதுகாண் பிறை ( குறுந்தொகை. 178) என்று பிறைவணக்கம் செய்யப்பட்ட நிலை தெரியவருகின்றது.

    நாள்மீன் (விண்மீன்)கள் பற்றிய குறிப்புகள்

    சங்க இலக்கியத்தில் கார்த்திகை, உரோகினி, உத்திராடம், மகம், உத்தரம், திருவோனம், அனுஷம், மூலம் போன்ற பல நட்சத்திரங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

    அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் (நற்றிணை 202), அறுமீன் சேரும் அகல் இரு நடுநாள் (அகநானூறு 141) என்ற குறிப்புகள் கார்த்திகை நட்சத்திரம் பற்றிய குறிப்புகள் ஆகும்.

    முரண்மிகு சிறப்பின் செல்வனோடு நிலைஇய

    உரோகினி நினைவனள் நோக்கி (நெடுநல்வாடை 161-163)

    என்ற அடியில் உரோகினி பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.

    விண்மீன்களின் அமைப்பும், அவற்றின் பால் நிற்கும் சூரிய இயல்பும் இராசிகள் என்று  அழைக்கப்படுகின்றன. மொத்தம் பன்னிரு இராசிகள் உள்ளன. அவற்றைப் பற்றிய குறிப்பும் பரிபாடலில் காணப்படுகின்றது

    உருகெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர,

    வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள் தெரி

    புந்தி மிதுனம் பொருந்த, புலர் விடியல்

    அங்கி உயர் நிற்ப, அந்தணன் பங்குவின்

    இல்லத் துணைக்கு உப்பால் எய்த, இறை யமன்

    வில்லின் கடை மகரம் மேவ, பாம்பு ஒல்லை

    மதியம் மறைய, வரு நாளில் வாய்ந்த

    பொதியில் முனிவன் புரை வரைக் கீறி

    மிதுனம் அடைய, விரி கதிர் வேனில்

    எதிர் வரவு மாரி இயைக’ என இவ் ஆற்றால்(பரிபாடல், 11)

    என்ற இப்பாடலில் இராசி மண்டலங்கள் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன.

    வெள்ளி என்ற கோள் இடப ராசியை அடைந்தது. புதன் மிதுன லக்கனகத்தில் பொருந்தினான். சூரியன் கடக ராசியில் இருந்தான்.வியாழன் மீனத்தை அடைந்தான். சனி மகரத்தை அடைந்தான். ராகு சந்திரனை மறைத்தபடி இருந்தான் என்ற இந்நிலை அமைந்திருந்தபோது காற்று வந்தது என்ற இக்குறிப்பு நாள்மீன் கோள்மீன், இராசிகள் போன்ற அனைத்தின் கலவையாக இருப்பதை உணரமுடிகின்றது.

    வான ஊர்தி

    வான ஊர்தி வழியாக சங்ககாலத்தில் வானியல் அறிவு பெறப்பட்டது என்பதைப் பின்வரும் புறநானூற்றுப் பாடல் எடுத்துக்காட்டுகின்றது.

    சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,

    நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன,

    வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து,

    வீற்றிருந்தோரை எண்ணும்காலை,

    5              உரையும் பாட்டும் உடையோர் சிலரே;

    மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே;

    ‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

    வலவன் ஏவா வான ஊர்தி

    எய்துப என்ப, (புறநானூறு 24)

    என்ற பாடலில்  வலவன் ஏவா வான ஊர்தி என்பது ஆளில்லாமல் பறக்கும் செயற்கைக்கோள் பற்றிய குறிப்பு ஆகும்.

    இவ்வகையில் வானியல் செய்திகள் பலவற்றை உட்பொதிந்துச் சங்க இலக்கியங்கள் வைத்துள்ளன.

    முனைவர் மு.பழனியப்பன்

    இணைப்பேராசிரியர்,

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

    திருவாடானை

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜனவரி 26, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு முனைவர் மு.பழனியப்பன் அவர்கள்

    palaniappan fb

    வல்லமை இதழின் வாசகர்களுடன் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது இலக்கிய மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைப் பகிர்ந்து கொண்டு, சிறந்த இலக்கிய விருந்தளிக்கும் முனைவர் மு.பழனியப்பன்  அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம். கடந்த திங்கட்கிழமையன்று வல்லமை இதழில் வெளிவந்த “ஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி”  என்ற கட்டுரைக்காக இவர் வல்லமையாளராக அறிவிக்கப்படுகிறார்.

    புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றிய முனைவர் மு.பழனியப்பன்அவர்கள், தற்போது திருவாடானை – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக தமிழ்த்துறையை முன்னடத்திச் செல்வதுடன் மேலும் பல தமிழ்ப்பணிகளையும் ஆற்றி வருபவர். வள்ளுவனிடமும், கம்பனிடமும் ஆழ்ந்த பற்று கொண்ட மு.பழனியப்பன் ஆண்டுதோறும் நடைபெறும் காரைக்குடி கம்பன் விழாக்கள், உலகத் திருக்குறள் பேரவையின் மாநாடுகள், அழகப்பா பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய கருத்தரங்கம், சிற்பி பவளவிழா ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளராகவும் தன்னார்வத் தொண்டாற்றி வருபவர். தமிழ் இணையப் பயிலரங்கங்களை நடத்துவதிலும், “ஆய்வுச் சுற்றம்” என்ற தமிழாய்வு இணைய சஞ்சிகையையிலும் பங்காற்றி வருகிறார்.

    new

    இவர் இலக்கியப் பங்களிப்பிற்குச் சான்றாகப் பத்து நூல்களை வழங்கியதுடன், பற்பல கட்டுரைகளையும் இணைய இதழ்களான வல்லமை, திண்ணை, ஜியோதமிழ் ஆகிய இதழ்களில் எழுதி வந்துள்ளார். இவர் எழுதியிருக்கும் “விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்” என்ற நூலிற்காகப் பெருமுயற்சி செய்து 43 நாவல்களைத் தேடிப் பிடித்து, இந்தப் புத்தகத்திற்காக ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். இந்நூலில் இவர் நாவலாசிரியர்களின் படைப்புகளைப் பட்டியலிட்டு, அவர்களது பங்களிப்பையும் பதிவு செய்து, நாவல்களின் கதைச் சுருக்கங்களையும் தொகுத்தளித்திருக்கிறார். இந்நூல் சிறந்த ஆய்வு நூலாகப் பாராட்டப் பட்டதுடன், சாமானியர்களும் படித்துத் தெரிந்துகொள்ள உதவும் சுவாரசியமான தகவல் களஞ்சியம் எனவும் பாராட்டு பெற்றுள்ளது.

    கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இணைய இதழ்களிலும், இணையத்தமிழ்க் குழுமங்களிலும், பல்கலைக்கழக கருத்தரங்கங்களிலும் தனது இலக்கிய மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைப் பகிர்ந்து வந்துள்ளார். தமிழிலக்கியக் கட்டுரைகள், நூலாய்வுக் கட்டுரைகள், தமிழ்மொழி வளர்ச்சி, இணைய மற்றும் கணினித் தமிழ் வளர்ச்சி, சமூகவியல் கட்டுரைகள் போன்ற பிரிவுகளில் கட்டுரைகள் பல வழங்கியுள்ளார்.

    வல்லமையில் இம்முறை இவர் வழங்கிய நூலறிமுகம்/நூலாசிரியர் அறிமுகம் கட்டுரையான “ஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி” கட்டுரையில், சொல்லில் கலை வண்ணம் கண்டுக் கவிதைச் சிற்பங்களைச் செதுக்கும் வானம்பாடிக் கவிஞர்… மரபில் தொடங்கிப் புதுக்கவிதையில் பூத்த பழமை மாறதா புதுப்பாவலர் …. பேராசிரியர், கவிஞர், காவிய ஆசிரியர், திறனாய்வாளர், ஆய்வு நெறியாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், சாகித்திய அகாடமி விருதாளர், சாகித்திய அகாடமி தமிழ்ப்பகுதிப் பொறுப்பாளர், ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனைக் கவிஞர்களை, புதுக் கவிஞர்களைப் பாரட்டும் சீரிய நெஞ்சர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களை அறிமுகப்படுத்தியிருந்தார்.

    அறிவியல், ஆன்மீகம், தத்துவம், சராசரி வாழ்க்கை என்று தற்காலத்தின் கவிதைப் பதிவுகளாக விளங்குபவை சிற்பியின் ஆக்கங்கள்….சொல்லுக்குள் சுகம் வைத்து, கவிதைக்குள் உலகைத் தேக்கி, தன் காலப் பதிவைச் சிறப்பாகச் செய்து வருபவர் சிற்பி. அப்துல்கலாமின் ஏவுகணை வெற்றியையும் இவர் பாடுகிறார். இயந்திர மனிதனின் குழந்தை தானியங்கிக் கதவிடுக்கில் சிக்கிக் கொண்ட சோகத்தில் அறிவியலாளன் திணற, அடுத்த கட்டளையைக் கேட்டு நிற்கும் இயந்திர மனிதனின் தோல்வியையும் இவரின் கவிதை பாடுகின்றது என்று சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் கவிதைகளின் அழகியலையும் இலக்கிய நயம் பாராட்டியிருந்தார்.

    நயமிக்க கட்டுரை ஒன்றை அளித்த மு.பழனியப்பன் அவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி அவரது தமிழ்ப்பணிகளும் இலகியப்பணிகளும் தொடர வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

    தொடர்பிற்கு:
    முனைவர் மு.பழனியப்பன் (Dr. M.Palaniappan)
    தமிழ்த்துறைத் தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை

    கைபேசி எண்: 9442913985
    மின்னஞ்சல் முகவரி: muppalam2006@gmail.com
    வலைப்பூ:
    manidal.blogspot.com
    http://kambanadippodi.blogspot.com/
    http://puduvayalpalaniappan.blogspot.com/
    ஃபேஸ்புக்: https://www.facebook.com/palaniappan.mutrhappan
    கூகுள் ப்ளஸ்: https://plus.google.com/112411414788276451667

     

     

    படங்கள் உதவி:
    http://senthamilcollegemadurai.blogspot.com/2013/02/blog-post.html

    Share
  • ஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி

    முனைவர் மு.பழனியப்பன்

    கல்லில் கலைவண்ணம் கண்டுச் சிற்பங்களைச் செதுக்குபவர் சிற்பியாகிறார். சொல்லில் கலை வண்ணம் கண்டுக் கவிதைச் சிற்பங்களைச் செதுக்கும் வானம்பாடிக் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். பாலக்காட்டுக் கணவாயின் தெற்குத் தாழ்வாரத்தில், ஆழியாற்றின் கரையில் பூர்வீகங்களின் மிச்ச சொச்சத்துடன் வாழ்ந்துவரும் கிராமமான ஆத்துப்பொள்ளாச்சி சிற்பியின் சொந்தமண். அதுவே அவரின் நிரந்தரக் கவிதை மண். தோப்பும் துரவும் சொந்தமாக இருக்க, கணக்கும் வழக்கும் அவருக்குத் தொல்லை தராமல் கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றியவர் அவரின் தாயார் கண்டியம்மாள். அகலமான நெற்றியில் வட்ட வடிவமானச் சந்தனப் பொட்டோடு சிற்பியின் கவிதைகளில் காட்சி தருகிறார் அவரின் தந்தையார் பொன்னுச்சாமி. பிறந்த ஆண்டு, 1936.

    sirpiமரபில் தொடங்கிப் புதுக்கவிதையில் பூத்த பழமை மாறதா புதுப்பாவலர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம். கவிதை என்பது ‘‘மறைந்து கிடக்கும் மனிதநேய ஊற்றுக்களைக் கண்டடைகிற முயற்சி’’, ‘‘நேரே நில், நிமிர்ந்து பார், நெஞ்சில் பட்டதை வளமாய்ச் சொல்’’, ‘‘எழுத்து ஆன்மாவின் ரத்தம், கவிதைகள் காலத்தின் உதடுகள்’’, ‘‘வலிவுள்ள பழமை, அழகுள்ள புதுமை’’ இவையே சிற்பி தன் கவிதைகளுக்குக் கொண்டிருக்கும் இலக்கணங்கள். ‘‘தாகம் தொலைக்கும் சிறுநதியாய் என் கவிதை நடக்கட்டும்’’ என்பதே இவர் கவிதையின் பயன். தேங்காது இயங்கு, முதல் நிலை விரும்பு, வையகம் புகழ வாழ் என்பது சிற்பியின் ஆத்திச்சூடி. அதுவே அவர் வாழ்க்கைக்குச் சூடிக்கொண்ட கொள்கைகள்.

    பேராசிரியர், கவிஞர், காவிய ஆசிரியர், திறனாய்வாளர், ஆய்வு நெறியாளர் மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், சாகித்திய அகாடமி விருதாளர், சாகித்திய அகாடமி தமிழ்ப்பகுதிப் பொறுப்பாளர், ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனைக் கவிஞர்களை, புதுக் கவிஞர்களைப் பாரட்டும் சீரிய நெஞ்சர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட இவர் பவள விழா கண்டவர். கோயம்புத்தூர் சிற்பியின் பவள விழா கண்டுக் கோலமுத்தூர் ஆனது. இதே நேரத்தில் சிற்பியின் கவிதைகள் ஒருங்காய் முளைத்து முத்துக்கொத்துக்களாயின. அவரின் நினைவினை மலராய், ரீடராய், கட்டுரைத் தொகுப்புகளாய் ஆக்கி மகிழ்ந்தார்கள் பவள விழாக் குழுவினர்.

    ஆசிரியத் தொழிலின் அருமை, பெருமைகளை, கடுமை, சிறுமைகளை அள்ளித் தெளிக்கும் அவரின் கவிதை ஆசிரியர் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்ய வேண்டிய மரபுக்கவிதை. “வாத்தியாரு வேலை” என்பது அதன் தலைப்பு.

    ‘‘மணியடிச்சாப் பணிதுவங்கும் வாத்தி யாரு வேலை
    மலிவுப் பதிப்பா ஆகிப்போச்சு வாத்தியாரு வேலை

    எடுத்துச் சொன்னா வெட்கம் வாத்தியாரில் ஏழு பிரிவு
    இவரை விட அவர் உயர்வாம்! மேடுபள்ளமாய்ப் பார்வை!
    தடுக்கிவிழும் சிலராலே விளையும் அலங்கோலம்
    … சின்னத் தவறு பண்ணினாலும் இவரு சீட்டு கிழியும் ’’
    ( சிற்பி கவிதைகள்,ப.189)

    சிற்பிஇதுவே வாத்தியாரு வேலையின் மகத்துவம். ஆனால் கல்விச் சாலையின் ஈடு இணையற்ற பெருமையை மற்றொரு கவிதைச் சிற்பம் வடித்தெடுக்கிறது. கவிதையின் தலைப்பு “பள்ளிக் கூடம்”.

    ‘‘எழுத்துக்களிலிருந்து
    ஐீவித எதார்த்தங்களுக்கு
    ஒரு தொடர் ஓட்டப்பந்தயம்
    தொடங்குகின்றது
    … காகிதப் பட்டறைகளில்
    சூட்சும
    ஆயுதத் தயாரிப்பு,
    வாழ்க்கைப் போரைச் சந்திக்க’’ (மேலது, ப.673)

    வகுப்பறைகளின் மீது கவிஞர் கொண்டுள்ள நம்பிக்கையும், ஆசிரியத் தொழில் மீது கொண்டுள்ள மரியாதையும் இணைத்துக் காணும்போது சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பும், எதார்த்தமும் ஒன்றுக்கொன்று ஏறுக்குமாறாய் இருப்பது தெரியவருகிறது.

    படிமக் கவிதைகளின் பிதாமகர் சிற்பி. அணுக்கருச் சிதைவு படிமமாய்த் தொடர்கிறது அவரது “நாய்க்குடை” கவிதையில்

    ‘‘ ஹிரோஸஷிமாவின் சாம்பல் அணுக்கள்
    சமாதான மழையைத் தாகித்திருக்க…
    மானிட ரத்தக் கடல்களின் மேலே
    சாவின் தலைவிரி கோல மகுடமாய்
    காற்றுக் குமிழியில் விஷ நிறம் பூசி
    நீரில் நச்சு ஊசிகள் தூவி
    விரிகிறது இன்னும்
    விரிகிறது இன்னும்
    ராட்சத நாய்க்குடைக் காளான்’’ (மேலது, ப. 361)

    “சிகரெட்” அவரது கவிதையில் படிமமாய் உறைகிறது.

    ‘‘சாம்பல் அணுக்களின்
    சயன மண்டபம்
    பாம்பு நோய் உறையும்
    புற்றின் கோட்டை
    .. இருவிரல் நடுவில்
    புகையும் எரிமலை’’ ( மேலது,ப. 313)

    ஒருகணம் பழுத்து, மறுகணம் உதிரும் சிறுசிறு சிவப்புக் கனிகளின் தோட்டம் என்று சிகரெட்டின் தன்மை பேசும் சிற்பியின் கவிதைகள் சிகரெட்டிற்குப் பாராட்டுவிழா நடத்துகின்றனவா, எச்சரிக்கைக் கூட்டம் நடத்துகின்றனவா என்று குழம்ப வைக்கின்றன.

    பாரதியைப் பின்பற்றியவர் சிற்பி. காந்தியை இதயத்தில் ஏற்றியவர் சிற்பி. இவர்களுக்காகத் தனித்தனிக் காவியங்கள் படைத்தவர். இவரின் பாரதி கைதி எண் 253, மகாத்மா ஆகிய படைப்புகள் இவரின் தனித்த கவிக் காவிய முத்திரைகள். ஆதிரை, மௌன மயக்கங்கள் ஆகியன இவரின் காப்பியச் சிதறல்கள். நிலவுப் பூ (1963), சிரித்த முத்துக்கள் (1966), ஒளிப்பறவை (1971), சர்ப்ப யாகம் (1976), புன்னகை பூக்கும் பூனைகள் (1982), மௌன மயக்கங்கள் (1982)(தமிழக அரசு பரிசு பெற்றது), சூரிய நிழல் (1990), இறகு (1996), சிற்பியின் கவிதை வானம் (1996)(திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது), ஒரு கிராமத்து நதி (1998)(சாகித்ய அகாதெமி விருது பெற்றது), பூஜ்யங்களின் சங்கிலி (1999)(தமிழக அரசு பரிசு பெற்றது), பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு(2001), மூடுபனி (2003), சிற்பி: கவிதைப் பயணங்கள் (2005), தேவயானி (2006), சிற்பி கவிதைகள் தொகுதிகள் – 2 (2011), நீலக்குருவி (2012), கவிதை வானம் (சிற்பியின் கவிதைத் தொகுப்பு) ஆகியன இவரின் கவிதைத்தொகுப்புகள் ஆகும். இவை தவிர உரைநடை நூல்கள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள், உரைநூல்கள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் என்று பற்பல ஆக்கத்துறைகளில் இவர் தடம் பதித்தவர். இவர் பெற்ற பட்டங்கள், விருதுகள் ஐம்பதுக்கும் மேற்பட்டன. இவர் மலையாளக் கவி வள்ளத்தோளையும், பாரதியாரையும் ஒப்பிட்டு முனைவர் பட்டம் பெற்றவர்.

    சொல்லுக்குள் சொல் முளைத்து புதுமை செய்வது சிற்பியின் பாணி.

    கிளிஞ்சலுக்குள் சமுத்திர ஆர்ப்பரிப்பு
    சமுத்திரத்திற்குள் கிளிஞ்சல் சங்கீதம்
    கிளையசைவில் காற்று
    காற்றசைவில் கிளையாட்டம்
    பறவைக்குள் முட்டை
    முட்டைக்குள் பறவையின் பதுங்கல்
    நேற்றுக்குள் இன்றின் கல்லறை
    இன்றுக்குள் உறைந்து கொண்டிருக்கும் நேற்று’’ (மேலது,ப.850)

    சொல்லுக்குள் சுகம் வைத்து, கவிதைக்குள் உலகைத் தேக்கி தன் காலப் பதிவைச் சிறப்பாகச் செய்து வருபவர் சிற்பி. அப்துல்கலாமின் ஏவுகணை வெற்றியையும் இவர் பாடுகிறார். இயந்திர மனிதனின் குழந்தைக் தானியங்கிக் கதவிடுக்கில் சிக்கிக் கொண்ட சோகத்தில் அறிவியலாளன் திணற அடுத்த கட்டளையைக் கேட்டு நிற்கும் இயந்திர மனிதனின் தோல்வியையும் இவரின் கவிதை பாடுகின்றது.

    அறிவியல், ஆன்மீகம், தத்துவம், சராசரி வாழ்க்கை என்று தற்காலத்தின் கவிதைப் பதிவுகளாக விளங்குபவை சிற்பியின் ஆக்கங்கள். இவரின் ஆக்கங்களை வல்லிக்கண்ணன் பின்வருமாறு மதிப்பிடுகிறார்.

    ‘சிற்பியின் கவிதைகள் கற்பனை வளம், கலைநயம், கவிதா வேகம், உணர்வு ஓட்டம் கொண்டுச் சிறந்து விளங்குகின்றன. இவரது ‘சிகரங்கள் பொடியாகும்’’, ‘‘ராட்சதச் சிலந்தி’’, ‘ஞானபுரத்தின் கண்கள் திறக்குமா?’’, ‘‘சர்ப்பயாகம்’’, ‘‘நாய்க்குடை’’ ஆகியவை வேகமும் விறுவிறுப்பும் கொண்ட சிந்தனைப் படையல்கள். முள். முள்.. முள் என்ற தலைப்பில் பல பொருள்கள் பற்றிய சிறு சிறு கவிதைகளைத் தொகுத்திருக்கிறார் சிற்பி. ரசமான கவிதை இது’’ என்ற வல்லிக்கண்ணனின் மதிப்பீடு என்றைக்கும் கல்வெட்டாய் சிற்பி கவிதைகளின் வல்லமை பேசும் வரிகள் ஆகும்.

    தனக்குப் பின்னாக கவிதைகளை, கவிஞர்களை, திறனாய்வாளர்களை, மாணவர்களை, நண்பர்களை, நல்லிளைஞர்களை வரவேற்கும் பெருந்தன்மை வாய்ந்த நல்ல மனக் கவிஞர் சிற்பி. அவரின் படிப்பிற்கும், படைப்பிற்கும் அவரது அறைக் கதவுகள் அதிகாலை மூன்று மணிக்கே திறந்துவிடுகின்றன. என்பது அதிசயம் ஆனால் உண்மை.

    _______________________________________________
    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழ்த்துறைத் தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை

    படம் உதவி:
    http://ta.wikipedia.org/s/p0n
    http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    Share
  • தொல்காப்பிய புறத்திணை நோக்கில் சிலப்பதிகாரம்

    முனைவர் மு.பழனியப்பன்,
    தமிழ்த்துறைத்தலைவர்,
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை

    tholkappiyar

    தொல்காப்பியப் பொருள் இலக்கணம் இருவகைப்படுகின்றது. அக இலக்கணம், புற இலக்கணம் எனபனவாகும். இவ்விரண்டிற்கும் தனித்த இலக்கண மரபுகள் தொல்காப்பியரால் காட்டப்பெற்றுள்ளன. அக இலக்கண மரபுகளை அப்படியே தாங்கிச் சங்க இலக்கிய அகப் பாடல்கள் அமைந்துள்ளன. புற இலக்கண மரபுகளை அப்படியே ஏற்று புற இலக்கியங்கள் படைக்கப்பெற்றுள்ளன. சங்கம் மருவிய காலத்தில் சிற்சில மாறுபாடுகள் இவ்விலக்கண மரபுகளி;ல் தோன்றினாலும், அப்பகுப்பு சார்ந்த அக, புற இலக்கியங்கள் தொல்காப்பிய மரபுகளைப் பின்பற்றின என்பதில் ஐயமில்லை. இதற்குப் பின் சிலப்பதிகாரம் தோற்றம் பெறுகின்றது. ஏறக்குறைய பத்துப்பாட்டின் வளர்ச்சி நிலை சிலப்பதிகாரம் எனக் கொள்ளலாம். நெடிய பாடலாக விளங்கும் பத்துப்பாட்டு அமைப்புமுறையின் நீட்சிச் சிலப்பதிகாரக் காப்பியமாக வளர்கின்றது. இதனுள்ளும் அக, புற இலக்கணங்களின் மரபுகள் பின்பற்றப்பெற்றுள்ளன. அவற்றை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

    புற இலக்கணம் வரையறை

    புறம் என்ற இலக்கணத்தின் அடிப்படையை அறிந்து கொள்ள இளம்பூரணரின் விளக்கம் பயன்படுகின்றது. ~~புறப்பொருளாவது மறஞ் செய்தலும் அறஞ் செங்தலும் ஆகலான் அவற்றானாய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறம் என்றார் என்ற புற இலக்கணம் பற்றிய குறிப்பு, புறத்திணைப் பொருள் இலக்கணத்தின் அடிப்படையை எடுத்தியம்புகின்றது.

    தொல்காப்பியர் அகத்தை ஏழாகப் பிரித்தது போலவே புறத்தையும் ஏழாகவேப் பிரித்தார். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய எழு திணைகள் தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள் ஆகும்.

    வெட்சி என்பது ஆநிலை கவர்தல் ஆகும். வஞ்சி என்பது மண் கருதிய போராகும். உழிஞை எதிரி அரசனின் அரணை முற்றுகையிடலும், அம்முற்றுகையை அவ்வரசன் முறித்தலும் ஆகும். தும்மை என்பது இரு பெரு வேந்தர்களும் போர் எதிர்தலாகும். வாகை என்பது வெற்றியைக் குறி;ப்பதாகும். காஞ்சி என்பது யாக்கை, செல்வம், இளமை ஆகியனவற்றின் நிலையாத் திறம் காட்டிப் போரை விலக்கல் ஆகும். பாடாண் என்பது இவ்வகையில் n;வற்றி பெற்று அடங்கி வாழ்ந்தத் தலைவன் ஒருவனின் புகழ் பாடுவதாகும். இத்துறைகளுக்கு வைக்கப்பெற்ற பெயர்கள் பூக்களின் பெயர்கள் ஆகும். இப்பூக்களை மூடி இவ்வினைகளைத் தமிழர்கள் ஆற்றினர். இதன் காரணமாக சமுதாயத்தில், போர்க்களத்தில் அவர்கள் எக்குழு சார்ந்தவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளமுடிந்தது.

    சிலப்பதிகாரம் – புறத்திணைச் சார்புடையது

    சிலப்பதிகாரம் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் வகையில் அமைந்த முத்தமிழ்க் காப்பியம் ஆகும். இதனை இயற்றிய இளங்கோவடிகள் அரச மரபினர் என்பதால் அவர் புறத்திணை மரபுகளைப் பெரிதும் அறிந்தவர் ஆகின்றார். இதன் காரணமாக அவர் படைத்த சிலப்பதிகாரம் முழுவதிலும் தொல்காப்பிய புறத்திணை மரபுகள் விரவிக் கிடப்பதைக் காணமுடிகின்றது.

    சிலப்பதிகாரப் புறத்திணைக் கூறுகள் என்ற பொருளில் நூல் வரைந்துள்ள, இராம தட்சிணாமூர்த்தி சிலப்பதிகாரத்தில் அனைத்துக் காதைகளிலும் இடம்பெற்றுள்ள புறத்திணைக் கூறுகளை எடுத்தியம்பியுள்ளார். அவர் தம் நூலில், சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியப் புறத்திணையியலும், புறப்பொருள் வெண்பாமாலையின் புறத்திணையியலும் இணைந்து இடம்பெற்றுள்ள திறத்தைக் காட்டியுள்ளார். அவரின் கருத்துகள் சிலப்பதிகாரம் பின்பற்றிய புறத்திணை மரபுகளின் இயல்புகளை தெளிவுடன் காட்டுகின்றன. அவற்றில் சில பின்வருமாறு.

    ~~சங்க இலக்கிய மரபை முழுக்க மறுக்காமலும், முழுக்கப் பற்றாமலும் சிலப்பதிகாரத்தை அடிகள் ஆக்கினார். ஒரு வணிகக் குடிமகனுக்கும், அவன் மனைவிக்கும் ஏற்பட்ட வாழ்க்கைச் சுழல்களையும், அழல்களையும் விளக்கி ஒரு பெரிய தொடர்நிலைச் செய்யுளைப் படைத்தார். தம் கதையின் மூலமாக, சில உண்மைகளைக் கூற முனைந்தார். அவற்றையே முப்பேருண்மைகளாகக் குறிப்பிட்டார். அதுகாறும் இலக்கியங்களின் போக்குக்கும், நோக்குக்கும் அடிப்படையாக அமைந்த ~பொருளிலக்கண வழக்கு அவரது புதிய இலக்கியத்திற்கு இன்றியமையாத தேவையாயில்லை. ஆனாலும் சங்க இலக்கியப் பொருள் இலக்கண மரபின் தாக்கத்தை அவர் நூலில் காணமுடிகின்றது என்ற அவரின் கருத்து சிலப்பதிகாரத்தில் சங்க இலக்கியப் புறத்திணை மரபுகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும் இளங்கோவடிகள் பின்பற்ற முனைந்துள்ளமையைக் குறிப்பிடுகின்றது.

    அவரே ~~மறத்துறையைச் சார்ந்த திணை, துறைகளை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பொருத்தி, வீரப் பெண்மைக்குப் புகழ் பாடியவர் இளங்கோவடிகள். வஞ்சிக் காண்டத்தில் கண்ணகி ~வீரபத்தினி| என்றே குறிக்கப் பெறுகிறாள். பண்டைக்காலத்தில் தமிழகத்தில் வீரமிக்க ஆடவர்கட்குக் கல்லெடுப்பது மரபு. இதை நடுகல் என்பர். நடுக்கல்லில் இறந்த தலைவனுடைய பெயரையும், சிறப்புகளையும் எழுதி மயிற்பீலி சூட்டி வணங்குவர்.

    நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
    பெயரும் பீடு மெழுதி யதர்தொறும்
    பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
    சிலம்பில், கண்ணகி என்ற பெண்ணுக்கே நடுகல் விழா நடக்கின்றது.
    ~~காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
    சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்று
    இருமூன்று வகையிற் கல்லொடு புணர

    என்று தொல்காப்பியம் கூறும் புறத்திணைத் துறைகளையே வஞ்சிக்காண்டத்தின் தலைப்புக்களாகக் கொடுத்துள்ளார் இளங்கோவடிகள் என்ற மேற்குறித்த ஆய்வாளரின் கருத்து தொல்காப்பியத்தில் காட்டப்பெற்ற ஆண் புற மரபுகள் சிலப்பதிகாரத்தில் பெண்ணுக்கும் உரியதாக ஆக்கப்பட்டதைக் காட்டுகின்றது.

    சிலப்பதிகாரக் காட்சிக் காதை- தொல்காப்பிய புறத்திணையியலின் சிறிய வடிவம் எனக் கொள்ளத்தக்கது என்கிறார் மேற்சுட்டிய ஆய்வாளர். ~~செங்குட்டுவன் தன் நாட்டைந்த பத்தினிக் கடவுளுக்குச் சிலையெடுக்க நினைந்து இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீர்ப்படை செய்தல் சிறந்தது எனக் கூறுகின்றான். மலையரசன் மாபெரும் பத்தினிக் கடவுளுக்குக் கல் தாரான் எனின், அவனோடு மலைவேன் என்று வஞ்சினம் கூறுகின்றான். செங்குட்டுவன் வடதிசை நோக்கிப் போர் மேலெழுவதற்காக வஞ்சினம் உரைப்பது போலவமைந்துள்ளது இப்பகுதி. தான் வஞ்சி சூடி வாளமர் செய்யும் வஞ்சி வேந்தன் :போலவும், மலையரசன் (இமயமலை) காஞ்சி வேந்தன் போலவும் குறிக்கப்பெறுகின்றனர். சேரன் கூறும் வீரவுரை முழுவதும் ~ஒரு சிறிய புறத்திணையியல்| போலவே அமைகின்றது. என்ற கருத்து சிலப்பதிகாரம் தொல்காப்பிய புறநெறிகளின்படி போர்த்திறத்தைக் காட்டியுள்ளது என்பதைத் தெரிவிக்கின்றது.

    மேற்சுட்டிய ஆய்வாளரின் கருத்துகள் சிலப்பதிகாரம் தொல்காப்பிய புற மரபுகளின் வழிப்பட்டது என்பதை உறுதி செய்கின்றன.

    சிலப்பதிகாரப் புறத்திணைச் சார்புப் பகுதிகள்

    சிலப்பதிகாரத்தில் புறத்திணையை ஒட்டிய மரபுகள் காதைகள் தோறும் அமைந்துள்ளன என்றாலும், கட்டுரையின் அளவு கருதி இங்கு ஒரு சில பகுதிகள் மட்டும் சுட்டிக்காட்டப்பெறுகின்றன. குறிப்பாக தொல்காப்பிய புறத்திணைகள் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பாங்கு இக்கட்டுரையில் தொட்டுக் காட்டப்பெறுகின்றது.

    வெட்சி

    வெட்சி புறத்திணைகளில் முதல் திணையாகும். இதன் திணை மற்றும் துறைகளை மிக்க வெளிப்படையாகவே வேட்டுவ வரியில் இளங்கோவடிகள் பாடியுள்ளார்.

    கொற்றவை கோலம் புனைந்து வந்த பெண்மகளைக் கொற்றவையாகவே கருதி அவளுக்கு வேண்டுவன செய்யும் நடைமுறை வேட்டுவவரியில் விவரிக்கப்படுகின்றது. அப்போது கொற்றவை விரும்புவது வெட்சிப் போரும், கரந்தைப்போரும் என்றுக் குறிக்கிறார் இளங்கோவடிகள்

    ~~உட்கு உடைச் சீறூர் ஒருமகன் ஆநிரை கொள்ள உற்ற காலை
    வெட்சி மலர்புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டும்போலும்
    வெட்சி மலர்புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
    கட்சியுள் காரி கரிய குரல் இசைத்துக் காட்டும் போலும்

    என்ற அடிகளில் வெட்சிப் போர் முறை விளக்கப்பெற்றுள்ளது. வெட்சிப் பூக்களைச் சூடி ஒரு ஆடவன் போருக்குச் செல்கின்றான். அவனுக்குத் துணையாகக் கொற்றவையும் (கொற்றவையாகிய நீயும்) செல்லுவாய். இதன் காரணமாக வெட்சிக்கு எதிரான ஊரில் அழிவு நேரப்போகின்றது என்பதைக் கரிக்குருவி அறிவிக்கக் கிளம்பிவிட்டது என்ற செய்தியும் புள்வாய்ப்பச் சொன்ன நிமித்தமாக வெளிப்படுத்தப்பெற்றுள்ளது.

    அடுத்த பாடலில்

    ~~கள்விலையாட்டி மறுப்பப் பொறா மறவன் கைவில் ஏந்திப்
    புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும்போலும்
    புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகுங்காலைக்
    கொள்ளும் கொடி எடுத்துக் கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும்
    என்ற இந்தப் பாடலில் கொடி எடுத்துக்கொண்டு வெட்சிப்போருக்குப் புறப்பட்ட ஆண்மகனின் வீரத்திற்குத் துணையாகக் கொற்றவையும் போவாள் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது.

    இச்செய்திகள் அப்படியே வெட்சி பற்றி தொல்காப்பிய நூற்பாவின் மறுவடிவமாக விளங்குகின்றன.

    ~~வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக்களவின்
    ஆ தந்து ஓம்பல் வேற்று ஆகும்

    வெட்சித் துறைகள் சிலவற்றையும் இளங்கோவடிகள் இதனுள் புகுத்தி உரைக்கின்றார். பாதீடு, கொடை ஆகிய துறைகளை அவர் பெரிதும் சிலப்பதிகாரத்தில் விளக்குகின்றார். கொண்டு வந்த ஆநிரைகளைப் போருக்கு உதவியவர்களுக்கு, ஊருக்கு உதவியர்களுக்கு மறவர்கள் அளிக்கின்றார்கள். அவர் அளித்தபட்டியல் நீண்டதாகும்.

    இள மா எயிற்றி! இவை காண், நின் ஐயர்
    தலைநாளை வேட்டத்துத் தந்த நல் ஆன் நிரைகள்
    கொல்லன், துடியன், கொளை புணர் சீர் வல்ல
    நல் யாழ்ப் பாணர்-தம் முன்றில் நிறைந்தன.

    முருந்து ஏர் இள நகை! காணாய், நின் ஐயர்
    கரந்தை அலறக் கவர்ந்த இன நிரைகள் 
    கள் விலைஆட்டி, நல் வேய் தெரி கானவன்,
    புள் வாய்ப்புச் சொன்ன கணி, முன்றில் நிறைந்தன.

    கய மலர் உண் கண்ணாய்! காணாய், நின் ஐயர்,
    அயல் ஊர் அலற, எறிந்த நல் ஆன் நிரைகள்
    நயன் இல் மொழியின் நரை முது தாடி
    எயினர், எயிற்றியர், முன்றில் நிறைந்தன .

    என்பன கொடை பெற்றவர்களின் பட்டியல். இவ்வடிகளுக்குள் ஒரு நகைச்சுவையும் கலந்துள்ளது. கள் விற்பவள் போர் செல்ல இருந்த மறவனுக்குக் கள் தராமல் காலம் நீட்டித்தாள். அவன் கள்ளுண்ணாமலே போருக்குச் சென்றுவி;ட்டான். ஆனால் வெற்றி பெற்றதும் கள் தராத அம்மங்கைக்கும் ஆநிரைகளைத் தந்து அப்போர்வீரன் வெற்றிகண்டான். தராதவளுக்கும் கொடை அறித்த பெருந்தன்மையாளனாக அப்போர்வீரன் இளங்கோவடிகளால் காட்டப்பெற்றுள்ளான்.

    இதன்பிறகு அவிப்பலி என்ற துறையும் எடுத்துரைக்கப்படுகின்றது. இவ்வாறு வெட்சியின் விளக்கம் வேட்டுவவரியில் இடம்பெற்றுள்ளது.

    வஞ்சித்திணை, காஞ்சித்திணை வஞ்சித்திணையும் கர்ஞ்சித்திணையும் காட்சிக்காதையில் இளங்கோவடிகளால் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன. சேரன் வஞ்சினம் கூறிப் போருக்குச் செல்லும் செயலைக் குறிக்கும் பகுதியில் வஞ்சியை எடுத்தாள இளங்கோவடிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. அதனுடன் இணைந்துக் காஞ்சியும் இடம்பெற்று விடுகின்றது.

    பொதியில் குன்றத்துக் கல் கால்கொண்டு,
    முது நீர்க் காவிரி முன் துறைப் படுத்தல்,
    மறத் தகை நெடு வாள் எம் குடிப் பிறந்தோர்க்கு,
    சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று
    புன் மயிர்ச் சடைமுடி, புலரா உடுக்கை,
    முந்நூல் மார்பின், முத்தீச் செல்வத்து
    இருபிறப்பாளரொடு பெரு மலை அரசன்
    மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக்
    கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின்,
    வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை
    கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும்,
    முது குடிப் பிறந்த முதிராச் செல்வியை
    மதிமுடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும்,
    தென் திசை என்- தன் வஞ்சியொடு வட திசை
    நின்று எதிர் ஊன்றிய நீள் பெருங் காஞ்சியும்,
    நிலவுக் கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி
    அலர் மந்தாரமோடு ஆங்கு அயல் மலர்ந்த
    வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை
    மேம்பட மலைதலும், காண்குவல் ஈங்கு| என,
    ~குடைநிலை வஞ்சியும், கொற்ற வஞ்சியும்,
    நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும்
    வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும்,
    பின்றாச் சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும்,
    குன்றாச் சிறப்பின் கொற்றவள்ளையும்,
    வட்கர் போகிய வான் பனந் தோட்டுடன்,
    புட்கைச் சேனை பொலிய, சூட்டி
    பூவா வஞ்சிப் பொன் நகர்ப் புறத்து, என்,
    வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும்| என-

    என்ற இப்பகுதியில் சேரன் வஞ்சினம் கூறுகின்றார். வஞ்சினக்காஞ்சியாக இது அமைகின்றது. அவ்வஞ்சினத்தில் காஞ்சித் திணை செய்திகளும். வஞ்சித் திணை செய்திகளும் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளன.

    குடைநிலை வஞ்சி, கொற்ற வஞ்சி, நெடுமாறாயம், பெரு வஞ்சி,பெருஞ்சோற்று வஞ்சி, கொற்ற வள்ளை ஆகிய வஞ்சித் துறைகள் மேற்சுட்டிய பகுதியில் இடம்பெற்றனவாகும். வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என்ற பாடலடியின் வழியாக வஞ்சிப் பூவினை வாளுக்குச் சூடி சேரன் படையெடுத்த நிலை தொல்காப்பிய புறத்திணையியல் சார்ந்த்தாகும்.

    இதற்கு முன்பே மூன்று காஞ்சித் துறைகள் இடம்பெற்றுள்ளன. கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சி என்ற தொல்காப்பியத் து:றை, கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமை எனச் சிலப்பதிகாரத்தால் வழிமொழியப்பெற்றுள்ளது. முதுகுடிப்பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக்களித்த மகட்பாற் காஞ்சி என்ற சிலப்பதிகாரம் காட்டும் காஞ்சித் துறை தொல்காப்பியம் குறிக்கும் ~முதுகுடி மகட்பாடஞ்சிய மகட்பாலானும்| என்ற துறையாகக் கொள்ளத்தக்கது. தென்றிசை என்றன் வஞ்சியொடு வடதிசை நின்றெதிரூன்றிய நீள் பெருங்காஞ்சி என்ற சிலப்பதிகாரத்துக் காஞ்சித் துறை, மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை| என்றத் தொல்காப்பியத் :துறையாகக் கொள்ளத்தக்கது.

    தும்பைத்திணை

    சேரனின் போர்திறம் தும்பைத் திணையுடன் சிலப்பதிகாரத்தில் விளக்கம் பெறுகின்றது.

    நும்போல் வேந்தர் நும்மொடு இகலி
    கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயல்கொடி
    பகைப்புறத்துத் தந்தனர் ஆயினும் ஆங்கு அவை
    திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன
    கொங்கணர் கலிங்கர் கொடும் கருநாடர்
    பங்களர், கங்கர், பல்வேல் கட்டியர்
    வட ஆரியரோடு வண்தமழ் மயக்கத்து உன்
    கடமலை வேட்டம் என் கண்புலம் பிரியாது
    கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
    எம் கோமகளை ஆட்டிய அந்நாள்
    ஆரிய மன்னர் ஈர் ஐந்நூற்றுவர்க்கு
    ஒரு நீ ஆகிய செருவேம் கோலம்
    கண்விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம்

    என்ற இப்பகுதி சேரன் மற்ற மன்னர்களுடன் நேருக்கு நேர் மோதிய ஆற்றலைத் தெரிவிக்கின்றது. இது ~மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை அழிக்குஞ் சிற்ப்பிற்றென்ப என்ற தொல்காப்பியத் தும்பை வரையறையின் சார்பினது ஆகும். மேலும் போர்த்தானைகளைச் சிறப்பிப்பது தானை நிலை எனப்படும். அத்தானைநிலையை

    மேலும் கனக விசயருடன் சேரன் போர் புரிந்த ஆற்றலை,

    ~~எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்n;தாகை
    ஒரு பகல் எல்லையில் உண்ணும் என்பது
    ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய
    நூழில் ஆட்டிய சூழ்கழல்வேந்தன்
    போந்தொடு தொடுத்த பரவத்தும்பை
    ஓங்கு இரும் சென்னி மேம்பட மலைய|

    என்ற பாடலடிகளில் தும்பையைச் சேரன் அணிந்த நிலை எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. வடபுலத்து அரசர்களை வெற்றி கொள்ளும் நிலையிலும் தமிழ் போர்மரபு பின்பற்றப்பெற்றிருப்பதை இவ்வடிகள் எடுத்துரைக்கின்றன.

    வாகைத்திணை

    போரில் சேரன் வெற்றி பெறுகின்றான். அவனின் தேருக்குப் பின்னாலும், முன்னாலும் மகிழ்ந்து வீரர்கள் ஆடிவருகின்றனர். இவ்வாட்டம் வாகைத்திணையின் வயப்பட்டதாகும்.

    ~~…..பேர்இசை
    முன் தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி
    பின்தேர்க்குரவைப் போய் ஆடு பறந்தலை
    முடித்தலை அடுப்பில் பிடர்த்தலைத் தாழி
    தொழத்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு
    மறப்பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட
    சிறப்பு ஊண் கடிஇனம் செங்கோல் கொற்றத்து
    அறக்களம் செய்தான் ஊழி வாழ்க

    என்ற பாடலடிகளில் வென்ற கோமான் முன்தேர்க்குரவையும், ஒன்றிய மரபிற் பின்தேர்க்குரவையும் அரும்பகை தாங்கும் ஆற்றலும் ஆகிய தொல்காப்பியத் துறைகள் சிலப்பதிகாரத்தால் ஏற்கப்பெற்றன என்பதைக் காட்டுகின்றன.

    பாடாண் திணை

    சிலப்பதிகாரத்தில் சேரனைப் போற்றும் மாடலனின் பாடலடிகள் பாடாண் திணை வயப்பட்டனவாக உள்ளன.
    ~~…நின்
    மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
    ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
    இளவரசு பெறாஅர் ஏவல் கேளார்
    வளநாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின்
    ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து அவர்
    பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்
    பழையன காக்கும் குழைபயில் நெடும்கோட்டு
    வேம்பு முதல் தடிந்த ஏந்து வாழ் வலத்து
    போந்தைக் கண்ணிப் பொறைய

    என்ற பகுதி சேரனின் பெருமையைப் பேசும் பாடாண்திணைப்பகுதியாகும்.

    இவ்வாறு அரசர் போர்ப்பகுதியை விளக்கும் வஞ்சிக்காண்டம் தொல்காப்பியப் புறத்திணைச்சாயலுடன் ஒட்டிப்படைக்கப்பெற்றுள்ளது என்பது உறுதியாகின்றது.

    வஞ்சிக்காண்டத்தின் காதைகளின் பெயரமைவு என்பது தொல்காப்யிர் சுட்டும் கரந்தைத்திணை சார்ந்த துறைகளை ஒட்டியே இளங்கோவடிகள் அமைத்திருப்பது அவரின் தொல்காப்பிய நெறி பின்பற்றலுக்குச் சான்றாகின்றது. காட்சி, கால்கோள், நீர்ப்படை நடுகல், வாழ்த்தல் என்ற அதே அமைப்பில் கண்ணகிக்குச் சிலை காணும் போக்கை இளங்கோவடிகள் அமைத்துள்ளார்.

    ~மதுரை மூதூர் மாநகர் கோடுஉற
    கொதிஅழல் சீற்றம் கொங்கையின் விளைத்து
    நல்நாடு அணைந்து நளிர்சினை வேங்கை
    பொன்அணி புதுநிழல் பொருந்திய நங்கையை
    அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி,
    சிறப்புடைக் கம்பியர் தம்மொடும் சென்று
    மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள்
    பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து
    இமையவர் உறையும் இமையச் செல்வரைச்
    சிமைய சென்னித் தெய்வம் பரசிக்
    கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
    வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
    முற்றுஇழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
    பூப்பலி செய்து. காப்புக்கடை நிறுத்தி
    வேள்வியும் விழாவும் நாள்தோறும் வகுத்து
    கடவுள் மங்கலம் செய்க என ஏவினான்
    வடதிசை வணங்கிய மன்னவர் ஏறுஎன்

    என்ற இந்தப் பாடலடிகளில் கண்ணகிக்குக் கடவுள் மங்கலம் செய்யப்படும் திறம் நடுகல் நாட்டி வணங்கும் திறமாக உள்ளது. தொல்காப்பியத்தில் ஆணுக்குச் சொல்லப்படும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி ஒரு பெண்ணிற்கு செய்யப்பெற்றதாக இளங்கோவடிகள் படைத்துக்காட்டுவது என்பது மரபு மீறல்அல்ல… புறத்திணை பெண்களுக்கும் உரியது என்ற எண்ணம்தான்.

    Share
  • முருகத் தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம்

    முனைவர் மு.பழனியப்பன்.

    BabyMurugaOriginal

     

    திருத்தொண்டர்புராணம் என்ற சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் நாயன்மார்களின் சிவத்தொண்டினை எடுத்துரைப்பது. இதுபோன்று முருகனடியார்களின் அற்புதத் தொண்டினை விரித்து உரைப்பது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். முருகவேள் திருமுறை என்று தொகுக்கப்பட்ட இறைத்தொகுப்பில் பன்னிரண்டாம் திருமுறையாக அமைவது சேய்த்தொண்டர் புராணம் ஆகும்.

    முருகவேள் திருமுறையில் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்து பாடப்பெற்ற திருப்புகழ்ப் பாடல்கள் முதல் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. ஏழாம் திருமுறை பிற பதிகளைப் போற்றிய திருப்புகழ்ப் பாடல்களால் தொகுக்கப் பெற்றது. கந்தரலங்காரம் கந்தரந்தாதி ஆகியன எட்டாம் திருமுறைகளாயின. ஒன்பதாந்திருமுறை திருவகுப்பு ஆகியது. கந்தரனுபதி பத்தாம் திருமுறைப் பகுப்பாகியது. முற்கால அடியார்கள் பாடிய பாடல்களின் தொகுப்புகள் பதினோராம் திருமுறையாயின. பன்னிரண்டாம் திருமுறை சேய்த்தொண்டர் புராணம் ஆகும். இதனை இயற்றியவர் தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார் ஆவார்.

    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்றாம் ஆண்டில் தணிகைமணி வ.சு. செங்கலவராயப்பிள்ளை அவர்கள் பதினோரு திருமுறைகளாக முருகவேள் திருமுறையை வடிவமைத்து அவற்றுக்கு சிறப்பான உரை எழுதி வெளியிட்டார். அப்போது பதினோராம் திருமுறைவரை கந்தவேளுக்கு அமைக்கப்பெற்றுவிட்டது. சைவத் திருமுறையை ஒட்டி பன்னிரண்டாம் திருமுறையாகத் திருத்தொண்டர் புராணம் யாராலும் செய்யப்படவில்லையே என்ற ஏக்கம் தணிகைமணி மனதில் ஏற்பட்டு அக்கருத்தை அவர் அப்பதிப்பில் வெளியிட்டார். இந்த ஏக்கம் தீரப் பிறந்தது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். ஆயிரத்து ஐம்பத்திரண்டாம் ஆண்டிலேயே சேய்த்தொண்டர் புராணம் இயற்றும் பணி தொடங்கிச் சிற்சில பாடல்கள் திருக்கழுகுன்றத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. அப்பணி சிற்சில ஆண்டுகளில் முழுமை பெற்று ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்றாம் ஆண்டில் முழுப் புராணமாக ஆகி வெளிவந்தது.

    தேனூர் வரகவி சொக்கலிங்கனார் சேய்த்தொண்டர் புராணத்தை இயற்றுவதற்கு முன்பு சேய்த்தொண்டத்தொகை என்பதைப் பாடினார். இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் திருவந்தாதி என்பதையும் இயற்றி இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் புராணத்தை அவர் இயற்றத் தொடங்கினார். இம்முயற்சி பெரியபுராணத்தின் தோற்றத்திற்கு ஆக்கத்திற்குச் சுந்தரர் நம்பியாண்டார் நம்பி சேக்கிழார் ஆகியோர் வழிவகுத்த அமைப்பிலேயே நடந்துள்ளது என்பது குறிக்கத்தக்கது. ஆயினும் இச்சான்றோர்களை அடியொற்றி இம்மூவர் முயற்சிகளையும் முன்னுதாரணமாகக் கொண்டு தேனூர் வரகவி சொக்கலிங்கம் அவர்கள் தான் ஒருவராகச் செய்தவை மேற்கண்ட மூன்று படைப்புகள் என்பது குறிக்கத்தக்கது.

    சேய்த்தொண்டர் புராணத்தில் அறுபத்தாறு தனியடியார்களும் பன்னிரு தொகையடியார்களும் அவர்களின் வரலாறும் தொண்டும் எடுத்து இயம்பப் பெற்றுள்ளன. அரகரவேல் மயிலென்பார்ஆலயத்தொண்டர் இறந்துமிறவாதார் இனிவரு சேய்த்தொண்டர் கந்தனையே போற்றுவார், செந்தில் வாழ் அந்தணர், திருத்தணியிற்பிறந்தார், தொண்டரடித்தொண்டர், பாடாது விடுபட்டோர், புராணிகர்கள், முருகன் திருவருளைச் சிந்திப்போர், முருகனையே பாடுவோர் ஆகியோர் தொகையடியார்கள் ஆவர்.

    இப்புராணத்துள் ஒளவையார், மீனாட்சி அம்மையார், முருகம்மையார் ஆகிய மூன்று பெண்ணடியார்கள் பாடப்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ஏனைய அறுபத்து மூவர் ஆணடியார்கள். ராமலிங்க வள்ளலார், அருணகிரிநாதர், குமரகுருபரர், நக்கீரர், அகத்தியர், கச்சியப்ப சிவாச்சாரியார், பாம்பன் சுவாமிகள் போன்ற பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகனின் தொண்டர்கள்வரை இதனுள் பாடப்பெற்றுள்ளனர். கடைச்சங்ககாலத்தில் வாழ்ந்த முருகனடியார்கள் தொடங்கி இந்தப் புராணம் பாடியுள்ளது. இக்காலத்திற்குப் பின் வரும் அடியார்களைப் போற்றி இனிவரும் சேய்த்தொண்டர் புராணம் என்று இவர் பாடியிருப்பதும் கருதத்தக்கது.

    செந்தில்வாழ் அந்தணர் சருக்கம், கம்பை சூழ் சருக்கம், குமர குருபரச் சருக்கம், வென்றி மலைச் சருக்கம், அரஹாரச் சருக்கம், காவடிச் சருக்கம், குகனேரிச் சருக்கம், கல்லாடச் சருக்கம், தென்பழநிச் சருக்கம், நின்றசீர்ச் சருக்கம், நாரதச் சருக்கம், வானார்ந்த சருக்கம் ஆகிய பன்னிரண்டு சருக்கங்கள் சேய்த்தொண்டர் புராணத்துள் உள்ளன. இதிலும் சேக்கிழாரின் படைப்பு முறை பின்பற்றப்பெற்றுள்ளது. அதாவது சருக்கங்களின் பெயர்கள் திருத்தொண்டத்தொகைப்பாடல்களின் முதலடி கொண்டுத் தலைப்பிடப்படுவது என்பது சேக்கிழார் தந்தமுறை. இங்கும் சேய்த்தொண்டத் தொகையின் பன்னிரு பாடல்களின் முதற்சீர் சேய்த்தொண்டர் புராணச் சருக்கமாக அமைக்கப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

    இப்புராணம் 3333 என்ற தொகையில் விருத்தப் பாவகை பலவற்றால் பாடப்பெற்றுள்ளது. இது நிலம் எனத்தொடங்கி இம்மாநிலம் என முடிகின்றது. இவ்வாறு வடிவமைப்பில் பெரியபுராணத்தை ஒத்துச் செய்யப்பெற்றுள்ள சேய்த்தொண்டர் புராணம் முருக பக்தியளவில் மிக முக்கியமான பக்திக் காப்பியம் ஆகும். இப்புராணத்தின் சிற்சில பக்தி முத்துக்கள் இக்கட்டுரையில் அளவுகருதிச் சுருக்கி உரைக்கப்பெற்றுள்ளன.

    அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சியளித்த அழகைப் பின்வருமாறு சேய்த்தொண்டர் புராணம் பாடுகின்றது. சம்பந்தாண்டானுக்கும் அருணகிரிநாதருக்கும் இடையே நடந்த போட்டியில் அருணகிரிநாதர் முருகனை அழைத்துக்காட்டி வெற்றி பெறுகிறார்.

    இதனையோர்ந்து அங்கு எம்பிரான் எழுந்து செங்கைகூப்பிநின்
    றதல சேடனார் என எடுத்ததொர் பா அங்கு ஓத அம்
    மதுரகானம் கேட்கவே மய+ர வாகனத்தின்மேல்
    சதன கோல கால வேல்கருத்தன் வந்து தோன்றவே (1181)

    என்று பாடுகின்றார்.

    கந்தனை நேரில் கண்டவர்கள் நிலையை
    ஏற்றினார் யாவருங்கை முடியின் மேல்நின்று இறைஞ்சினார்
    பரவசமாய் வீழ்ந்தெழுந்து
    போற்றினார் ஐயன்இனிது உருக்கரப்பப் புலம்பினார்
    இனியென்று காண்பதென்று
    சாற்றினார் ஆன்ற பெரியார்க்குத் தீங்கு சாற்றிய தீமதி
    படைத்த சம்பந்தாண்டன்
    தோற்றுளான் அருணகிரிநாதர் வாகை சூடினார் என்று
    ஆர்த்தவையோர் தொழுதுபோற்றி (1182)

    என்ற கந்தனைக் கண்ட அனுபவத்தை மொழிகிறது சேய்த்தொண்டர் புராணம். இனியென்று காண்பது என்று எல்லா உயிர்களும் கந்தனைத் தொழுத காட்சியைக் காட்டி அக்காட்சியைத் தானும் வணங்குவதாகப் போற்றி இப்பாடலை முடித்திருப்பது இவ்வாசிரியரின் கந்தன் மீதான பற்றுதலைக் காட்டுவதாக உள்ளது.

    பாம்பன் சுவாமிகளுக்கு காலில் ஏற்பட்ட இடையூற்றை மருத்துவர்கள் தீர்க்கமுடியாதென்று கைவிரித்தபோது, முருகனடியார்கள் பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முகக்கவசத்தைப் பாட அவரின் நோய் நீங்கியது என்பது ஒரு அருள் வரலாறு. இதனை இப்புராணம்

    அவரேகலும் அச்சாலையில் (மருத்துவமனையில்) அதிபன் பரிவோடு அம்
    புவிபேண்பரிகாரம் பலபுரிந்தும் பயனிலாதலால்
    இவர் நோய்க்கு அவுடதம்எம்மிடம் இல்லையென்னலும் இம்மா
    தவசீலர் முன் அருள் சண்முகக் கவசம்தனை அடியார்

    பந்தத்தொடும் பாடிக் குகபரமன் திருவருளைச்
    சிந்தித்தனர் சிந்தித்திடும் திருநாள்களில் ஒருநாள்
    வந்தித்தவர் முழந்தாண்மிசை வைவேல்இரண்டு ஒன்றாய்
    சந்தித்தது என்பொன்றித்து புண்தழும்பறிய திதைத்தம் (2582)

    என்று பாடுகின்றது. சண்முகக் கவசம் பாடிட குகப் பரம்பொருள் பாம்பன் சுவாமிகள் கால் நோயைத் தீர்த்த அதிசயத்தை இப்புராணம் பாடிட அவ்வருள் படிப்போர் நெஞ்சிலும் பரவுகின்றது. இரு வேல்கள் முழங்காலைத் தாங்கிப்பிடித்து ஒரு வேலான காட்சியை ஒரு அன்பர் காண அதன்வழி பாம்பன் சுவாமிகள் பிணி நீங்கியது என்ற இந்தக் காட்சியின் அருள் நிலை சண்முகப்பெருமானின் கருணையை எடுத்துரைப்பதாக உள்ளது.

    குமரகுருபரக் குழந்தை பேசாதநிலை பெற்றிருந்தபோது அவர்தம் பெற்றோருடன் இக்கவிஞரும் அழுகின்றார்.

    முருகா உன் கிருபையால் அவதரித்தகான் முளையிதுமூங்கையாய் அதுகண்டுஏங்கினோம்
    இருபதிற்றிரட்டிமேல் நாலிரண்டு நாள் எய்துமுன் அதைஒழித்து இனிதுபேசுமா
    அருளுதி இல்லையேல்உயிர்க்கெல்லாம் உயிராயவர் அவர் நினைப்பதை அளித்திடும்
    கருணைவாரிதி உனக்கபயம் நீள்கடலில் வீழ்ந்தெமதுயிர் விடுவதுண்மை காண் (1324)

    என்ற இந்த வேண்டுதல் குமரகுருபரா என்று முருகனால் அக்குழந்தை அழைக்கப்பெற்று, அக்குழந்தை வாயில் வேலால் அக்காரம் எழுதி வைக்கப்பட்டது. அக்குழந்தையே குமரகுருபரக்குழந்தை. அதுவே முருகனைப் பற்றிப் பல பனுவல்களைப் பாடியது. இக்குழந்தையைக் கந்தப் பரம்பொருளிடம் பெற்றோர்கள் அபயமாக விட அப்பெருமான் இக்குழந்தையைப் பேசவைக்கவேண்டும். இல்லையென்றால் கடலுள் மாய்வோம் என்ற இப்பெற்றோர் நம்பிக்கை உறுதி பேசாக் குழந்தையைப் பேச வைத்தது. அருள்மணக்கும் பாடல்களைப் பாடவைத்தது.

    இவ்வகையில் சேய்த்தொண்டர் புராணம் முருகப்பெருமானின் அடியார்களை, அவர்களின் வாழ்வை, தொண்டை, சோதனைகளை மாற்றிய சாதனைகளை எடுத்துரைப்பதாக அமைகின்றது. முருகத்தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம். இதனைப் போற்றிப்பரவிச் செவ்வேளையும் செவ்வேள் தொண்டர்களையும் அறிந்துப் போற்றி மகிழ்வோம்.

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழாய்வுத் துறைத்தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

    படம் உதவிக்கு நன்றி: indianknowledgesystemacademy.blogspot.com

    Share
  • சிலப்பதிகாரத்தில் சமண சமயமும், சமண சமய பொது அறங்களும்

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழாய்வுத்துறைத்தலைவர்
    மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
    சிவகங்கை

    ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற பகுப்புமுறையில்  அமைந்துள்ள சமண சமயம் சார்ந்த காப்பியங்கள் சமணசமய ஆளுமையைத் தமிழிலக்கியப் பரப்பில் வெளிப்படுத்துவனவாகும். சிலப்பதிகாரம் சமண சமய காப்பியம் என்பது அதனுள் இடம்பெறும் சமண சமயச் செய்திகள், சமண சமயப் பாத்திரங்கள் ஆகியவற்றால் உணரத்தக்கதாக உள்ளது. கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு நடந்துசெல்லும் பெருவழிப் பயணத்திற்கு துணைநின்ற கவுந்தியடிகள் பாத்திரம் சமண சமயததைச் சார்ந்த துறவிப்பாத்திரம் ஆகும். இவர்களின் பயணத்தின்போது சந்திக்கின்ற அறவாணர் சமண சமயம் சார்ந்தவர். அவரின் நல்மொழிகளுடன் தங்கள் பயணத்தை அவர்கள் தொடருகின்றார்கள். இவைபோன்ற பற்பல செய்திகள் சமணசமயத்தின் ஆளுமைப்பரவல் சிலப்பதிகார காலத்தில் இருந்தமையைத் தெரிவிக்கின்றன. சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் சமண சமயத்தவர் என்பதை உணர்த்தும்  பல அகச்சான்றுகளும் இக்காப்பியத்துள் உண்டு. சமண சமயத்தின் சிறப்புக் கூறுகளும், பொதுமைக் கூறுகளும் சிலப்பதிகாரத்தில் உணர்த்தப் பெற்றுள்ளன. சிலப்பதிகாரம் உணர்த்தும் சமண சமயம் சார்ந்த செய்திகளையும் அச்சமயம் உணர்த்தும் பொது அறங்களையும் இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

    புகார் நகரமும் சமண சமயமும்

    காவிரிப்பூம்பட்டிணம் என்றழைக்கப்பெறும் பூம்புகார் நகரத்தில் பல் தெய்வக் கோயில்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றோடு சமண சமய வழிபாட்டு இடங்களும் அமைந்திருந்தன.

    அவலம் நீத்தறிந் தடங்கிய கொள்கை
    மெய்வகை உணர்நத விழுமியோர் குழீஇய
    ஐவகை நின்ற அருகத்தானத்துச்
    சந்திஐந்தும் தம்முடன் கூடி
    வந்து தலைமயங்கிய வான்பெரு மன்றத்துப்
    பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
    நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினும்  
    சாரணர் வரூஉம் தகுதியுண்டாமென
    உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
    இலகு ஒளிச் சிலாதலம் தொழுது வலம்கொண்டு (நாடுகாண் காதை 16-25)

    என்ற பாடலடிகள் புகார் நகரத்தில் இருந்த சமண இருக்கைகளைப் பற்றி விவரிக்கின்றன. புகாரில் மூவகையான சமண இருப்பிடங்கள் இருந்துள்ளன. அருகத்தானம், பெருமன்றம், சிலாவட்டம் என்பன அவையாகும்.

    அருகத்தானம்

    புகார் நகரில் அருகத்தானம் என்ற இடம் சமண சமய வழிபாட்டிடமாக இருந்துள்ளது. இங்கு புலால் உண்ணாமலும், பொய்கூறாமை என்ற விரதத்தை மேற்கொண்டும், இவற்றோடு துன்பம் நீக்குவதற்கான வழிகளைக் கண்டறிந்து அவற்றில் வெற்றி பெற்றிருந்தாலும், அடங்கிய கொள்கை உடையவர்கள் இருக்கும் இடம் அருகத்தானம் ஆகும். இது ஸ்ரீகோயில் என்று அக்காலத்தில் வழங்கப்பெற்றது.

    பெருமன்றம்

    இத்தானத்தை அடுத்துப் பெருமன்றம் என்ற பகுதி அமைந்திருந்தது. ஐவகைப் பட்ட சந்திகள் ஒன்று கூடும் மன்றமாக அது விளங்கியது. ஐந்து சந்திகள் என்பது பஞ்ர பரமேட்டிகள் என்றழைக்கப் பெறும் ஐவகைச் சான்றோர்களைக் குறிக்கும்.  அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள் என்ற அவ்வைவரும் இம்மன்றத்தில் ஒன்று  கூடியிருந்தனர். சமண சமயக் கருத்துக்களைப் பரப்பியும் விவாதித்தும் அவர்கள் அம்மன்றத்தில் உறைந்தனர்.

    சிலாவட்டம்

    இவ்வருகத்தானத்தில் பல்வகை விழாக்கள் சீரோடும் சிறப்போடும் கொண்டாடப் பெற்றுள்ளன. பொன்போன்ற பூக்களைத் தரும் அசோகமரத்தின் நிழலில் இருந்த அருகப் பெருமானின் உருவத்திற்கு அவ்வருகப்பெருமானின் அபிடேகத்திருநாளில் ஒரு பெருவிழா நடந்துள்ளது. அவருக்குத் தேர்த்திருவிழா ஒன்றும் நடைபெற்றுள்ளது. இவ்விழாக்காலங்களில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் சாரணர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு, அறக்கருத்துகளை உணர்த்துவதற்கு அமைக்கப் பெற்ற  மேடை போன்ற இடம் சிலாவட்டம் ஆகும். பத்துப்பாட்டில் சிலாவட்டம் என்றால் சந்தனம் அரைக்கும்இடம் என்று பொருள். சந்தனம் அரைக்கும் இடத்தில் இருந்த மணமும், குளிர்ச்சியும் நிரம்பிய இடமாக இவ்விடம் இருந்திருந்த காரணத்தால் இதனையும் சிலாவட்டம் என அழைத்துள்ளனர்.

    கோயில், மன்றம், மேடை போன்ற பல்வேறு அமைப்புகளைப் புகார் நகர அருகன் கோயில் கொண்டிருந்தது என்பதை இளங்கோவடிகள் காட்டுகின்றார்.

    கோவலனும் கண்ணகியும் சமண சமயத்தினர்

    கோவலனும் கண்ணகியும் சமண சமயம் சார்ந்தவர்கள் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

    கவுந்தியடிகள் கோவலனையும் கண்ணகியையும் முதன் முறையாகக் காணுகின்றார். அவர்கள் திசையறியாது மதுரையை நோக்கிப் பயணம் மேற்கொண்ட சூழலில் இச்சந்திப்பு நடைபெறுகிறது.

    ‘‘உருவும் குலனும் உயர்பேர்ஒழுக்கமும்

                                     பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்

                                    உடையீர் என்னோ உறுகணாளரின்

                                    கடைகழிந்து இங்ஙனம் கருதியவாறென’ ( நாடுகாண்காதை, 46-49)

    என்ற இப்பாடலடிகளில் பயின்று வந்துள்ள “பெருமகன் திருமொழி பிறழா நோன்பு” என்ற குறிப்பு சமண மதத்தில் இருந்துப் பிரியாத  கொள்கை உடையர்கள் கோவலனும் கண்ணகியும் என்பதை உணர்த்தி நிற்கின்து. கவுந்தியடிகள் கேட்ட இக்கேள்விக்கு ‘‘உரையாட்டில்லை உறுதவத்தீர்’என்று பதில் சொல்லாதுத் தவிர்க்கிறான் கோவலன்.

    கவுந்தியடிகள்

    கவுந்தியடிகள் மதுரை வருவதற்கான காரணத்தை அவரே குறிப்பிடுகின்றார்.

    ‘‘அறவுரை கேட்டாங் கறிவனை ஏத்தத்

                                    தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு

                                    ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்

                                    போதுவல்யானும் போதுமின் ‘ (நாடுகாண் காதை, 57-60)

    மதுரைக்குச் சென்று அங்குள்ள அருகதேவனை வணங்குவதைத் தன் விருப்பமாகக் கொண்டவர் கவுந்தியடிகள் ஆவார். இதன் காரணமாக மதுரைவரை சமண சமயத்தின் ஆளுமைப் பரவல் இருந்துள்ளது என்பதைச் சிலப்பதிகாரத்தின் வழி அறியமுடிகின்றது.

    திருவரங்கத்தில் சமணம்

    புகாரிலிருந்து நடந்து வந்த இம்மூவரும் அரங்கம் என்ற திருவரங்கத்திற்கு வந்து சேருகின்றனர். அங்கு ஒரு சாரணரைச் சந்திக்கின்றனர். திருவரங்கத்திலும் அந்தக் காலத்தில் சமண சமயம் பரவியிருந்ததை இதன்வழி அறியமுடிகின்றது. இச்சாரணர் ஆங்காங்குத் தோன்றி அறக்கருத்துகளை எடுத்துரைப்பவர் ஆவார். முன்னர் பட்டினப்பாக்கம் என்ற புகாரின் நகரப்பகுதியில் சமயவுரையாற்றிய இவர் தற்போது அரங்கத்தி;ல் இம்மூவரும் கேட்க அறவுரை பகர்கின்றார்.

    அருகப் பெருமானின் இயல்புகள்

    சமண சமயத் தீர்த்தங்கரர்களுள் ஒருவரான அருகப்பெருமானின் சிறப்பியல்புகளைச் சாரணர் இவர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.

    ‘‘அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்

                     செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்

                    தரும முதல்வன் தலைவன் தருமன்

                    பொருளன் புனிதன் புராணன் புலவன்

                    சினவரன் தேவன் சிவகதிநாயகன்

                    பரமன் குணவதன் பரத்திலொளியோன்

                    தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்

                    சித்தன் பெரியவன் செம்மல் திகழொளி

                    இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்

                    குறைவில் புகழோன் குணப் பெருங்கோமான்

                    சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்            

                    அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி

                    பண்ணவன் எண்குணன் பரத்தில் பழம்பொருள்

                    விண்ணவன் வேத முதல்வன் விளங்குஒளி

                    ஓதிய வேதத் தொளியுறின் அல்லது

                    போதார் பிறவிப் பொதியறையோரென’ (நாடுகாண்காதை 176- 191)

    இப்பெருகிய அடிகள் அருகப் பெருமானை வாழ்த்துவனவாகும். அருகப் பெருமானின் வழியல்லது மற்றைவழி செல்லுவோர் பிறவிச் சிறையிலிருந்து விடைபெறமாட்டார்கள் என்று துணிகின்றது இப்பகுதி.

    சமண சமயக் கருத்துகளை, சமண சமயச் சான்றோர்களை நினைவு கூர்ந்த இந்தப் பகுதியைக் கேட்டு ஆனந்தமும், நெகிழ்வும் அடைகிறார் கவுந்தியடிகள். இப்பகுதி சமண சமயக் கருத்துகளைத் தருவதற்கு ஏற்ற பகுதியாக இளங்கோவடிகளுக்கு அமைந்துவிட்டது.

    வினையின் காரணமாக காப்பியத்தில் இனி சோகம் ததும்பிய காட்சிகள் வரப்போகின்றன என்பதை எடுத்துக்காட்டவும்,  அத்துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியைப் பாத்திரங்களும் படிப்போரும் உணரவேண்டும் என்பதற்காக இவ்விடத்தில் சாரணர்காட்சியையும், அவரின்அறவுரையையும் அமைத்துள்ளார் இளங்கோவடிகள்.

    வினைக் கோட்பாடு

    சமண சமயத்தின் உயிர்க்கொள்கை என்பது வினைக்கோட்பாடு ஆகும். இவ்வினைக்கோட்பாடே சிலப்பதிகாரத்தின் படைப்புக் கொள்கைகளுள் ஒன்றான ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுதலாக வெளிப்பட்டுள்ளது. சிலப்பத்திகாரத்தில் சாரணர் அறிவிக்கும் முதல் சமணசமயக் கொள்கை வினைக்கோட்பாட்டின் விளக்கமாக அமைகின்றது.

    ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை

                    இட்டவித்தின் எதிர்ந்து வந்தெய்தி

                    ஒட்டுங்காலை ஒழிக்கவம் ஒண்ணா

                    கடுங்கால் நெடுவெளி இடுசுடர் என்ன

                    ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் ( நாடுகாண் காதை 171-175)

    தீவினை என்பது ஒழிக என்று வேண்டினாலும் ஒழியாது வல்வினையை வந்து ஊட்டிவிடும் தன்மையது. விதை இட்டால் அது மரமாவதுபோல முன்செய்வினையானது அதற்கான பலனைத் தந்தே நிற்கும். வெட்ட வெளியில் ஏற்றி வைத்த விளக்கு கடுங்காற்று அடிக்கும்போது அணைந்துபோவதுபோல வினை வந்துத் தாக்கும்போது உயிர் உடம்புடன் நில்லாது நீங்கிவிடும். இக்கருத்துகளைச் சாரணர் கோவலன் உள்ளிட்ட மூவரையும் கண்டவுடன் சொன்னதற்குக் காரணம் கோவலன் வினைவலிமை காரணமாக இறக்கப் போகிறான், அவனையிழந்து இவர்கள் தவிக்கப் போகிறார்கள் என்பதுதான். இந்த முன்னுணர்தல் இளங்கோவடிகளின் படைப்பாற்றலில் காணப்படும் சிறப்புக்கூறு ஆகும்.

    கோவலனின் இறப்பிற்குக் காரணம் அவன் செய்த முன்வினையேயாகும். கலிங்க நாட்டில் அரசனுக்கு உறுதுணை செய்யும் பரதன் என்பவனாகக் கோவலன் முற்பிறவியில் பிறந்திருந்தான். அவன் சங்கமன் என்னும் வணிகனை வஞ்சகத்தால் அரசனிடம் காட்டிக் கொடுத்துக் கொலைப்பட வைத்தான். அவனின் மனைவி நீலி இவ்வஞ்சனை செய்தவர்கள் ‘எம்முறு துயரம் செய்தோர் இயாவதும் தம்முறு துயரமிற்றாகுக வென்றே’  என்று உரைத்ததன் வாயிலாக இப்பிறவியில் கோவலன் வணிகனாகப் பிறந்து முன்வினைப்பயனை நுகர்ந்தான்  என்ற தொடர்வும் வினைப்பயன் என்ற சமண உயிர்க்கொள்கையின் விரிவாகும்.

    காமநீக்கம்

    சமணத்தின் மற்றொரு தலையாய கொள்கை காமநீக்கம் ஆகும். இல்லறத்தாரும் நிறைவில் துறவறம் சார்ந்து இறைநிலை பெறுவது முக்தி என்பது இச்சமயக் கருத்தாகும்.  இதனைக் கவுந்தியடிகள் கோவலனுக்கு விளக்குகின்றார்.

       ‘‘வல்வினை ஊட்டுமென்று

                    அறத்துறை மாக்கள் திறத்;திற் சாற்றி

                    நாக்கடிப்பாக வாய்ப்பறை அறையினும்

                    யாப்பறை மாக்கள் இயல்பில் கொள்ளார்

                    தீதுடை வௌ;வினை உறுத்தகாலைப்

                    பேதமை கந்தாப் பெரும்பேது உறுவர்

                    ஒய்யா வினைப்பயன் உண்ணுங்காலை

                    கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்

                    பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும்

                    உருவிலாளன் ஒறுக்கும் துன்பமும்

                    புரிகுழல் மாதர்ப்புணர்ந்தோர்க்கு அல்லது

                    ஒரு தனிவாழ்க்கை உரவோர்க்கில்லை

                    பெண்டிரும் உண்டியும் இன்பமென்று உலகில்

                    கொண்டோர் உறூஉம் கொள்ளத்துன்பம்

                    கண்டனராகிக் கடவுளர் வரைந்த

                    காமம் சார்பாகக் காதலின் உழந்தாங்கு

                    ஏமஞ்சாரா இடும்பை எய்தினர்

                    இன்றே அல்லால் இறந்தோர் பலரால் ‘ (ஊர்காண் காதை,27- 44)

    என்ற இந்தப் பகுதி காம நீக்கம் என்ற கொள்கையை வலியுறுத்துவதாக உள்ளது. தீய செயல்களைச் செய்வதில் இருந்து விலகுங்கள். அவ்வாறு தீச்செயல்களில் இருந்து விலகாமல் இருந்தால் அது அடுத்தடுத்த பிறவிகளில் துன்பத்தை அனுபவிக்கத் தரும் என்று நாவாகிய குறுந்தடியால் வாயாகிய பறையை அறைவதுபோல பலமுறை அறவோர் கூறினாலும் அறிவு அற்றவர்கள் அதனை ஏற்கமாட்டனர். தீவினை தொடரும்போது பெரிதும் வருந்துவர். அறிந்தவர்கள் இவ்வாறு வருந்தமாட்டார்கள். மகளிரைப் பிரிவதால், புணர்வதால் ஏற்படும் துன்பம் இல்லறத்தார்க்கு எப்போதும் உண்டு. தனித்த வாழ்க்கையை மேற்கொண்ட துறவிகளுக்கு அத்துன்பம் இல்லை. பெண்ணும் உணவும் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்வோர் பெருத்த துன்பமடைவர். காமம் சார்பாக காதலில் விழுந்தோர் கரைகாண இயலாது துன்பத்தை அடைகின்றனர்  என்று மேற்காட்டிய பாடலின் பொருள் அமைகின்றது. இப்பகுதி காம நீக்கம் என்ற சமணக் கொள்கையின் வெளிப்பாடாகும்.

    இவ்வாறு சமண மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஆங்காங்கே வலியுறுத்தி வந்த இளங்கோவடிகள் பொது அறங்களைக் காப்பிய நிறைவில் உணர்த்துகின்றார். சமண சமயம் சார்ந்தவர்களுக்கும், சாராதவர்களுக்கும் பொதுவான அறங்கள் இவ்வகையில் இளங்கோவடிகளால்  எடுத்துரைக்கப்பெற்றுள்ளது.

    பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்

                    தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்

                    பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்

                    ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்

                    தானம் செய்ம்மின் தவம் பல தாங்குமின்

                    செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட்பிகழ்மின்

                    பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்

                    அறவோர்அவைக்களம் அகலாது அணுகுமின்

                    பிறவோர்அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்

                    பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்

                    அறமனை காமின் அல்லவை கடிமின்

                    கள்ளும் களவும் காமமும் பொய்யும்

                    வெள்ளைக்கோட்டியும் விரகினில் ஒழிமின்

                    இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா

                    உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது

                    செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்

                    மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென் ( வரந்தரு காதை 186- 202)

    என்ற இவை சமண மதச் சார்புடைய ஆனால் பொதுவான அறங்களை எடுத்துரைக்கும் இளங்கோவடிகளின் கவிதையாகும். இதனுள் சொல்லப்பெற்றுள்ள அத்தனை அறங்களும் எளிய மக்களும் பின்பற்றவேண்டிய ஒழுக்க முறைகள் ஆகும். இவற்றைக் காப்பிய நிறைவில் அளிப்பதன் வாயிலாக சமணமதத்தைச் சார்ந்த காப்பியமாக சிலப்பதிகாரம் விளங்கினாலும் சமயப் பொதுமை, சமுதாயப் பொதுமையை வேண்டிப் படைக்கப் பெற்றுள்ளது என்பது உறுதி.

    Share
  • அருட்கவி கு.செ. இராமசாமியின் கனல் மணக்கும் பூக்கள்-கவிதைத் தொகுப்பு நூல் விமர்சனம்

     

     

    முனைவர் மு.பழனியப்பன்

     

    கனல் மணக்கும் பூக்கள்,

    அருட்கவி கு.செ. இராமசாமி,

    23ஃ15 சிவன்கோயில் தெற்குத் தெரு,

    சிவகங்கை,630561,

    விலை ரூ. 120, 2012

        கவிதை பூமி சிவகங்கை. எண்ணற்ற கவிதையாளர்களின் இருப்பிடம், பிறப்பிடம், துவங்கிடம் சிவகங்கை. இங்கு அருட்கவி கு.செ. இராமசாமி என்ற பழுத்த தமிழ்ச் சான்றோர்- இசை, சோதிடம், ஆன்மீகம் என்ற பல துறைகளைச் சார்ந்தவர், தனது எண்பதாம் வயதிலும் சிவகங்கையைக் கவிதை பூமியாக்கிக் கொண்டுவருகிறார். எண்ணற்ற கவியரங்குகள், கண்ணதாசனின் நெருக்கம், பாவேந்தரின் பழக்கம், காரைக்குடி அழகப்பா கல்லூரியின் செல்லப்பிள்ளை, வ.சுப. மாணிக்கம் என்ற அறிஞரின் வளர்ப்பு, மன்னார்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை அரசு கல்லூரிகளின் தமிழ்த்துறைத்தலைவர் என்று எண்ணற்ற புகழுக்குச் சொந்தமானவர் இவர். இவரின் இசை செறிந்த பக்திப்பாடல்கள் பழனி பாதயாத்திரை, பாகம்பிரியாள் பாதயத்திரை ஆகியனவற்றை அருள் மெருகேற்றிக் கொண்டுவருகின்றன. பக்தர்களைக் களியாட்டம் போட வைக்கின்றன.

        சிவகங்கைச் சிவன் கோயில் அருகில் பழுத்த பழமாக வீற்றிருந்த அவரை அவர் சொற்றொடரில் சொல்வதானால் “தவத்திற்கு ஒருவர், தமிழுக்கு இருவர்” என்ற நிலையில் பல நாள்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  நாங்கள் இருவராக அவரின் அரசுப்பணி நெளிவு சுளிவுகளை, ஐhதகர்களின் மனதை, தமிழ்க்கவிதையின் ஆற்றலைப் பகிர்ந்துகொள்ள சிவகங்கைச் சிவன் கோயில் அருகில் உள்ள அவரின் இல்லம் களமானது. மாடி வைத்த பழங்கால வீடு. மீராவின் வீட்டருகில் என்று சொன்னால் பலருக்குப் புரியும். மாடிக்குத் தற்போது அவசியமே இல்லை. அவருக்கு ஏறமுடியாத உயரத்தில் மாடி இருக்கிறது. நடக்கமுடியாத தூரத்தில் சிவன் கோயில் இருக்கிறது. நினைவில் நிற்கும் செய்திகளுடன் சிறிதளவு உணவுடன், பெருமளவு மருந்துடன், நிறைந்த அருள்உள்ளத்துடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளக் காத்துக்கிடக்கும் அவரின் தற்போதைய கவிதைத் தொகுப்பு கனல் மணக்கும் ப+க்கள்.

        கடந்தகால, நிகழ்கால, எதிர்காலச் சிந்தனைகளை, மரபு சார்ந்த கவிதைகளாக, புதுக்கவிதைகளாக, கதைக்கவிதைகளாக தந்துள்ள அவரின் படைப்புள்ளம் இளமையாகச் சுடர்விடுகிறது.

        பூக்களை அவர் அனுபவிக்கும் விதம் சுவையானது. நெடியது. பூவின் தொடர்பைத் தமிழின் தொடக்ககாலம் முதல் விரிவான கவிதையாக வடித்துள்ளார். கனல் மணக்கும் பூக்கள் என்ற அக்கவிதையின் தலைப்பே இத்தொகுப்பின் தலைப்பாக உள்ளது. நெடிய கவிதை. உயிர்ப்புள்ள கவிதை. சுவைக்கின்ற கவிதை என்ற அளவில் அக்கவிதையின் ஆளுமை அவரை நம்முன்னால் கவிதை நாற்கலியில் உயரவைக்கின்றது.

        நீர்ப்பூ, நிலப்பூ
        கோட்டுப்பபூ, கொடிப்பூ
        பூக்களில் நான்கு வகை
        அகத்திணை ஐந்துக்கும்
        ஐவேறு மலர்கள்
        புறத்திணை
        ஏழென்றால் ஏழுக்கும் ப+ ஏழு
        அவற்றால் புரிபடும்
        அக்காலப் போர்க்கூறு
        எட்டாவதாய் வரும் திணை வாகை
        வெற்றி
        கிட்டியவனுக்கு அது தலைப்பாகை
        முல்லைப்பூ கற்புக்கு
        வாகைப்பூ வெற்றிக்கு

    சங்கப் பூக்களின் மணம் கூறும் நல்ல கவிதை இது. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 மலர்களைக்  கூறியுள்ளார் என்று தமிழாசிரியர் சொன்னதும் கபிலர் ஏன் “செஞ்சுரி அடிக்கவில்லை” என்கிறார் மாணவர். கு.செ. இராமசாமி இதோ மாணவர்கள் மொழியில் செஞ்சுரி அடிக்கிறார்.

        குறிஞ்சிப்பாட்டு அகவல்
        அதில்
        தொண்ணூற்றொன்பது மலர்கள்
        நூறாகத் தேவை ஒருமலர்
        அந்த ஒன்று
         தலைவி என்னும் திருமலர்

    குறிஞ்சிப்பாட்டின் தலைவியே ஒரு பூ என்றால் அவள் தனக்குச் சூட்டிக்கொண்ட 99 மலர்களும்  பூவிற்குப் ப+ச்சூட்டியது போலல்லவா இருக்கும். அழகான வளமான கற்பனைக்கு இடம் வைக்கிறார் கவிஞர். இந்தக் கவிதை சீதை, கண்ணகி இருவரையும் கனல் மணம் பரப்பும் திருமலர்களாகக் கொண்டுவந்துக் காட்டுகின்றது. இன்னும் இந்தக் கவிதைக்குள் மற்றொரு நுட்பம் இருக்கின்றது.

        பதுமை என்பதால் பாவை
        தினம்
        புதுமை என்பதால் பூவை

    என்று இல்லறத் தலைவியைத் தினம் மலரும் புதுமைப் பூவாகக் காண்கிறார் கவிஞர். தினம் தினம் பற்பல பூக்களைத் தேடும் ஆண்வண்டுகளுக்கு தினம், தினம் புதுமைப் பாவை தலைவி என்னும் பூவை என்பதை இந்தக் கவி வரிகள் எடுத்துரைக்கின்றன.

        மேல்நாட்டுக் காதலுக்கும் தியாகம், ரசனை உண்டு என்பதை இத்தொகுதியின் மற்றொரு கவிதை எடுத்துக்காட்டுகின்றது. டெல்லா, ஜிம் என்ற இளந்தம்பதிகள் வறுமையின் பிடியில் சிக்குண்டு அன்பை மட்டுமே அனுபவித்து வாழ்ந்து வந்தனர். அந்நேரத்தில் வந்த கிறிஸ்துமஸ் விழாவிற்காக இருவரும் இருவருக்காக ஏதாவது பரிசுப் பொருள்களை வாங்கத் தனிதனியாக முடிவெடுக்கின்றனர். இவள் தன் நீளமான கூந்தலை விற்று அவனுக்காக கடிகாரச் சங்கிலி வாங்குகிறாள். அவனோ கடிகாரத்தை விற்று அவளுக்குச் சீப்புகள் வாங்குகிறான். இருவரும் கிறிஸ்துமஸ் நாளில் தங்களின் பரிசுகளை ஒருவருக்கு ஒருவர் அளிக்கின்றனர். அவன் தந்த சீப்புகளால் இவள் சீவிக்கொள்ள தலையில் நீண்ட முடியில்லை.  இவள் தந்த கடிகாரச் சங்கிலியைத் தன் கையில் கட்ட அவனிடம் கடிகாரமே இல்லை. இந்தச்சூழலில் கவிஞரின் கவிதையடிகள் பிறக்கின்றன.

        கடிகாரம் இல்லை, அதைக் கட்டும் சங்கிலி உண்டு
        கூந்தல் தலையில் இல்லை. அதைக் கோதும் சீப்புகள் உண்டு
        ஒன்றை இழந்தால் ஒன்று, தியாகம் உயர்த்திப் பிடிக்கும் நின்று

     இதுவே காசற்ற காதலின் மேன்மை. அன்புடைய காதலின் அருமை. காட்சிகளின் வழியாக கதையை நடத்திச் செல்லும் கிடைக்காத கவிதைப்பணி கு.செ. இராமசாமியின் கவிதைப்பணி.

        காதலிக்காகக் கண்களை இழக்கிறான் ஒரு காதலன். காதலி கண்ணொளி இல்லாதவள். அவளைக் காதலிக்கிறான் அவன். அவள் “எப்படியாவது கண்ணொளி பெற்றுத் தாருங்கள், உங்களை மணக்கிறேன்” என்கிறாள் அவள். அவனும் படாதபாடு பட்டான். ஆனால் அவளுக்குக் கண்ணொளி கிடைத்த பாடில்லை. நிறைவில் ஒருநாள் அவளுக்கு கண் மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது. அவள் கண்ணொளி பெற்றாள்.

        “அன்பே, உனக்குப் பார்வை அளிக்க
         என்னிரு கண்களை நான்தான் ஈந்தேன்.”
        “மிக்க மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி
         கண்தந்த உமக்குக் கைகுவிக்கின்றேன்.
         திருடனை மணந்து தெருவில் நின்றாலும்
         குருடனை மணக்க நான் குருடியா இன்னும்?”

    மேற்கண்ட உரையாடல்தான் முன்னாள் குருடியான காதலிக்கும், இந்நாள் குருடனான காதலனுக்கும் இடையே நடைபெற்றது. முன்னர் காட்டப் பெற்ற கவிதையில் இருந்த காதலின் தியாகம், பின்னர் உள்ள இக்கவிதையில் இருக்கும் சுயநலத்தின் முகத்திரையைக் கிழிப்பதாக உள்ளது. ஆயிரம் மனித உள்ள வேறுபாடுகள் நிறைந்தது இந்த உலகம் என்பதை இந்த முரண்பாடுகளுடைய கவிதைகள் உணர்த்திநிற்கின்றன.

        காதலும் ஆன்மீகமும் இலக்கியமும் கைகோர்த்து அணிவகுத்து நிற்கும் நல்ல கவிதைத் தொகுதி இது. ஐயப்பன், கிருஷ்ணர், இராமகிருஷ்ணர், குருநானக், ஒஷோ போன்ற பலரின் கருத்துகள் இக்கவிதைத் தொகுதியில் எடுத்தாளப் பெற்றுள்ளன. கவிஞரின் ஆன்மீக ஆற்றல் கொண்டு ஆன்மீகத்தின் தூய வாசலைப் பின்வரும் கவிதை திறக்கின்றது.

        சாமி கனம் ஆசாமிகளின் கனம்
        அழுத்தி நெரிக்க அலங்கார வண்டியை
        இழுத்து வருமே இரண்டு காளைகள்
       
        வழியெல்லாம் அடடா, வாணவேடிக்கை
        கூட்டம் கூட்டமாய்க் கும்பிடுவோர்கள்
        எல்லாம் தமக்கென எண்ணி மாடுகள்
        செம்மாந்து நடக்கும், திமிரோடு பார்க்கும்

    என்று சாமியைத் தூக்கிவரும் மாடுகளின் பார்வையை அளக்கும் இக்கவிதை விடிந்தவுடன் அம்மாடுகள் வில்வண்டியில் ப+ட்டப்பட்டு நேற்றை அலங்காரம் எதுவும் இல்லாமல் இருக்கும் சூழலையும் எடுத்துரைக்கின்றது,

        ~~வேகமாய் அதட்டி வீதியில் ஓட்டுவார்
        வீதியில் வானவேடிக்கைகளும்,
        கூடித் திரண்டு கும்பிடுவோரும்
        காணாமல் சற்றே கலங்கி அதன்பின்
        “வேதகோஷம் நாதம் சங்கீதம்
        ஏதும் நமக்காக இல்லை இல்லை
        தலைக்குமேலே நாம் தாங்கி வந்த
        சிலைக்கே அத்தனை சிறப்பும்”
        என்ற தெளிவு வந்தது.
    காளைகளின் கௌரவத்தை நேற்றும் இன்றும் கொண்டு அளக்கிறது இக்கவிதை.

        இதுபோன்று ராஜாக்களின் இயல்பினையும் இக்கவிஞர் அளந்து காண்கிறார். ஒரு ராஜா பாதையெல்லாம் முள், கல் இருப்பதைக் கண்டு வீதிகள் எல்லாவற்றையும் தோல் கொண்டு மூடிட உத்தரவு இட்டானாம். அவ்வரசனின் அவையில் இருந்த விகடகவி “ வீதிக்குத் தோல் போடுவதை விட்டுவிடு, பாதத்தைத் தோல் மீது வைக்கத் தைத்துக்கொடு” என்று அறிவுறுத்தினானாம். இதன் காரணமாய்க் கவிஞர் மனித குல வரலாற்றில் செருப்பினை உயர்ந்த கண்டுபிடிப்பாகக் கருதுகிறார்.

        “நெருப்பைக் கண்டுபிடித்தது முதல் முயற்சி
        செருப்பைக் கண்டுபிடித்த -இது
        படிவளர்ச்சி”

    என்று நெருப்பையும் செருப்பையும் பாடுகிறார் கவிஞர்.

        உடல்வலு குறைவதாலும், நாள்களின் எண்ணிக்கை தேய்வதாலும் வாழ்நாள் நிறைவைக் கவிஞரின் உள்ளம் எண்ணிப் பார்க்கின்றது.

        வீணை மீட்டுவதில் நேரம் கழிகின்றது
        வாசிக்க முடியவில்லை
        சருகு சேர்ப்பதில் பொழுது கழிகின்றது
        தீக்காய முடியவில்லை
        ஆக்குவதி;ல் நாள் கழிந்தது
        அருந்த முடியவில்லை
        சேர்ப்பதில் காலம் கழிந்தது
        செலவழிக்க முடியவில்லை
        சீவிச் சிங்காரித்துப் புறப்பட்டேன்
        தேர் நிலை குத்திவிட்டது

    என்ற இந்தக் கவிதை தாகூரின் கீதாஞ்சலியை நினைவுபடுத்துகின்றது. இவரின் நிறைவுக்கால வாழ்வின் சோகத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கின்றது.

        எதையும் சிரிப்பாய்ச் சொல்வது இவரின் இயல்பு. சாகக் கிடக்கும் ஒருவரை இவர் பார்த்துவர ஒருமுறை இவர்  சென்றார். அவரோ ‘நான் சாகப்போகிறேனே’ என்று இவரிடம் கூறியதும்  இவர் அவரைப் பார்த்துச் சொன்னாராம் ‘உனக்குச் சாவே வராது. நீ சிரஞ்சீவி’ என்றாராம். அதற்கு அவர் ‘பிறந்தவரெல்லாம் இறப்பதுதான நியதி’ என்றதும்

        ~~வாழ்ந்தவர் தானே சாவார், நீயோ
        வாழ்ந்ததே இல்லையே? வாழ்ந்தால்தானே
        சாவதற்கு”

     என்றாராம். நகைச்சுவையான வாழ்க்கை இது. பிறருக்கு நடந்தால் நகைச்சுவை. நமக்கு நடந்தால் இழிவு.

        வாழ்வதற்கான, வாழ்ந்தற்கான அறிகுறிகள் என்று பின்வருவனவற்றைக் கவிஞர் பட்டியலிடுகிறார்.

        நல்ல உணவை உண்டதில்லை.
        நல்ல ஆடை உடுத்ததில்லை
        மனையாளுக்கு மல்லிகைப்ப+வோ
        சிறுகளுக்குச் சீனிமிட்டாயோ
        வாங்கிக் கொடுக்கும் வழக்கமில்லை
        எது சொன்னாலும் அதை அவன் கேளான்
        எது நடந்தாலும் அதை அவன் பாரான்
        தெருவில் அழகுத் தேர்வந்தாலும்
        தெப்பம் பார்;க்க ஊர் சென்றாலும்
        சினிமா,சர்க்கஸ், திருமணம், கோவில்,
        ஊர்வலம், கோஷம் ஒன்றையும் மதியான்
        சாதி சனத்தார் சண்டி என்பார்
        அலுவலகத்தில் அமுக்குளி என்பார்
        நண்பர்கள் வடையைக் ரசித்துக் கடிக்க
        சூடான தேநீர் சுழற்றிக் குடிக்க
        பார்த்துப் பார்த்தே இவன் பசியாறிவிடுவான்
        வாங்கவும் மாட்டான் வழங்கவும் மாட்டான்.
        … மனிதனா நடக்கும் மரமா என்ற
        புனித வாக்கிற்குப் பொருத்தமானவன்
        மரத்திலும் கோந்து வடிவதுண்டு
        கல்லிலும் பாசி கப்புவதுண்டு
        வறண்ட பாலையாய் வாழ்ந்தவன்

    இத்தனை அடையாளங்களும் வாழாதவனின் அடையாளங்கள். இந்தப் பட்டியலில் ஏதேனும் ஒன்றில் யாரேனும் இருந்தாலும் அதிலிருந்து விடுவித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் அர்த்தம் இருக்கும். வாழ்வதில் அர்த்தம் இருக்கும். சாவதில் அர்த்தம் இருக்கும்.

        கதைகளையும் நிகழ்வுகளையும் எளிமை கலந்து சொல்லும் எண்பது வயதுக் கவிஞரின் வற்றாத கவியாற்றின் ஒரு சாரல் இது. இன்னும் பற்பல இவரால் படைக்கப் பெற்றிருக்கின்றன. அத்தனையும் படிக்க அவரையும் சந்திக்க வாருங்கள் சிவகங்கைக்கு

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழ்த்துறைத் தலைவர்
    மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி
    சிவகங்கை

    Share