இந்த வார வல்லமையாளர்!
ஜனவரி 26, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு முனைவர் மு.பழனியப்பன் அவர்கள்
வல்லமை இதழின் வாசகர்களுடன் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது இலக்கிய மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைப் பகிர்ந்து கொண்டு, சிறந்த இலக்கிய விருந்தளிக்கும் முனைவர் மு.பழனியப்பன் அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம். கடந்த திங்கட்கிழமையன்று வல்லமை இதழில் வெளிவந்த “ஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி” என்ற கட்டுரைக்காக இவர் வல்லமையாளராக அறிவிக்கப்படுகிறார்.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றிய முனைவர் மு.பழனியப்பன்அவர்கள், தற்போது திருவாடானை – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக தமிழ்த்துறையை முன்னடத்திச் செல்வதுடன் மேலும் பல தமிழ்ப்பணிகளையும் ஆற்றி வருபவர். வள்ளுவனிடமும், கம்பனிடமும் ஆழ்ந்த பற்று கொண்ட மு.பழனியப்பன் ஆண்டுதோறும் நடைபெறும் காரைக்குடி கம்பன் விழாக்கள், உலகத் திருக்குறள் பேரவையின் மாநாடுகள், அழகப்பா பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய கருத்தரங்கம், சிற்பி பவளவிழா ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளராகவும் தன்னார்வத் தொண்டாற்றி வருபவர். தமிழ் இணையப் பயிலரங்கங்களை நடத்துவதிலும், “ஆய்வுச் சுற்றம்” என்ற தமிழாய்வு இணைய சஞ்சிகையையிலும் பங்காற்றி வருகிறார்.
இவர் இலக்கியப் பங்களிப்பிற்குச் சான்றாகப் பத்து நூல்களை வழங்கியதுடன், பற்பல கட்டுரைகளையும் இணைய இதழ்களான வல்லமை, திண்ணை, ஜியோதமிழ் ஆகிய இதழ்களில் எழுதி வந்துள்ளார். இவர் எழுதியிருக்கும் “விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்” என்ற நூலிற்காகப் பெருமுயற்சி செய்து 43 நாவல்களைத் தேடிப் பிடித்து, இந்தப் புத்தகத்திற்காக ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். இந்நூலில் இவர் நாவலாசிரியர்களின் படைப்புகளைப் பட்டியலிட்டு, அவர்களது பங்களிப்பையும் பதிவு செய்து, நாவல்களின் கதைச் சுருக்கங்களையும் தொகுத்தளித்திருக்கிறார். இந்நூல் சிறந்த ஆய்வு நூலாகப் பாராட்டப் பட்டதுடன், சாமானியர்களும் படித்துத் தெரிந்துகொள்ள உதவும் சுவாரசியமான தகவல் களஞ்சியம் எனவும் பாராட்டு பெற்றுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இணைய இதழ்களிலும், இணையத்தமிழ்க் குழுமங்களிலும், பல்கலைக்கழக கருத்தரங்கங்களிலும் தனது இலக்கிய மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைப் பகிர்ந்து வந்துள்ளார். தமிழிலக்கியக் கட்டுரைகள், நூலாய்வுக் கட்டுரைகள், தமிழ்மொழி வளர்ச்சி, இணைய மற்றும் கணினித் தமிழ் வளர்ச்சி, சமூகவியல் கட்டுரைகள் போன்ற பிரிவுகளில் கட்டுரைகள் பல வழங்கியுள்ளார்.
வல்லமையில் இம்முறை இவர் வழங்கிய நூலறிமுகம்/நூலாசிரியர் அறிமுகம் கட்டுரையான “ஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி” கட்டுரையில், சொல்லில் கலை வண்ணம் கண்டுக் கவிதைச் சிற்பங்களைச் செதுக்கும் வானம்பாடிக் கவிஞர்… மரபில் தொடங்கிப் புதுக்கவிதையில் பூத்த பழமை மாறதா புதுப்பாவலர் …. பேராசிரியர், கவிஞர், காவிய ஆசிரியர், திறனாய்வாளர், ஆய்வு நெறியாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், சாகித்திய அகாடமி விருதாளர், சாகித்திய அகாடமி தமிழ்ப்பகுதிப் பொறுப்பாளர், ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனைக் கவிஞர்களை, புதுக் கவிஞர்களைப் பாரட்டும் சீரிய நெஞ்சர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களை அறிமுகப்படுத்தியிருந்தார்.
அறிவியல், ஆன்மீகம், தத்துவம், சராசரி வாழ்க்கை என்று தற்காலத்தின் கவிதைப் பதிவுகளாக விளங்குபவை சிற்பியின் ஆக்கங்கள்….சொல்லுக்குள் சுகம் வைத்து, கவிதைக்குள் உலகைத் தேக்கி, தன் காலப் பதிவைச் சிறப்பாகச் செய்து வருபவர் சிற்பி. அப்துல்கலாமின் ஏவுகணை வெற்றியையும் இவர் பாடுகிறார். இயந்திர மனிதனின் குழந்தை தானியங்கிக் கதவிடுக்கில் சிக்கிக் கொண்ட சோகத்தில் அறிவியலாளன் திணற, அடுத்த கட்டளையைக் கேட்டு நிற்கும் இயந்திர மனிதனின் தோல்வியையும் இவரின் கவிதை பாடுகின்றது என்று சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் கவிதைகளின் அழகியலையும் இலக்கிய நயம் பாராட்டியிருந்தார்.
நயமிக்க கட்டுரை ஒன்றை அளித்த மு.பழனியப்பன் அவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி அவரது தமிழ்ப்பணிகளும் இலகியப்பணிகளும் தொடர வாழ்த்துகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
தொடர்பிற்கு:
முனைவர் மு.பழனியப்பன் (Dr. M.Palaniappan)
தமிழ்த்துறைத் தலைவர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை
கைபேசி எண்: 9442913985
மின்னஞ்சல் முகவரி: muppalam2006@gmail.com
வலைப்பூ:
manidal.blogspot.com
http://kambanadippodi.blogspot.com/
http://puduvayalpalaniappan.blogspot.com/
ஃபேஸ்புக்: https://www.facebook.com/palaniappan.mutrhappan
கூகுள் ப்ளஸ்: https://plus.google.com/112411414788276451667
படங்கள் உதவி:
http://senthamilcollegemadurai.blogspot.com/2013/02/blog-post.html
முனைவர் பழநியப்பன் அவர்களுக்கு வாழ்த்துகள். அவர் எனக்கு நெருக்கமானவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
தெளிந்த நல்லறிவும் தேர்ந்த ஞானம் படைத்த நல்இளைஞரான திரு பழநியப்பன் பல மாணவர்களை ஆய்வுக்கு நெறிப்படுத்திவருகிறார். தமிழன்னைக்கு நெடுங்காலம் தொண்டாற்றி வாழ்வாங்கு வாழ இறையருலை வேண்டுகிறேன்.
அவருடைய தந்தையார் முனைவர் திரு பழ.முத்தப்பன் சிறந்த தமிழறிஞர். மேலைச்சிவபுரி செந்தழிழ் கல்லூரியில் முதல்வராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். சைவசித்தாந்தத்தில் ஈடுபாடுள்ள அறிஞர். சைவசித்தாந்த பயிற்றுனர். அவருடைய உரை குறுந்தகடாக வெளியிடப்பட்டுள்ளது. நம் திரு பழநியப்பன் வல்லமையாளராக அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் அவர் தந்தையையும் போற்றக்கூடிய நல்வாய்ப்பாக எண்ணி இதனை பதிவுசெய்துள்ளேன்.
வாழ்த்துக்கலுடன்
சொ.வினைதீர்த்தான்.
கவின்மிகு இலக்கியப் பணிகள்..
திறமிகு தமிழ்ப்பேராசிரியர் என பலவகை
பெருமைகள்சூழ.. தொய்விலா சேவைகள்குவிய..
தொடரும் மு.பழனியப்பன் அவர்களை
வல்லமையாளர் என்னும் விருதளித்து மகிழ்தல்
முற்றிலும் சரியான தேர்வாம்!
அன்னாரைப் பாராட்டி.. தங்கள் அரியபணி
தொடர்கவென்றும் வெற்றிகள் உம்பாதையில் நிறைகவென்றும் உளமாற வாழ்த்துகிறேன்!
காவிரிமைந்தன்
http://www.thamizhnadhi.com