இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர்!

0

பவள சங்கரி

தலையங்கம்

1

இருபெரும் ஜனநாயக நாடுகளின் கைகோர்ப்பு தினம் இன்று. டில்லி ராஜ்பாத்தில் நடைபெற்ற இந்தியாவின் 66 வது குடியரசு தின விழாவிற்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அழைக்கப்பட்டுள்ளார். இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு , அணுசக்தி, இரு நாடுகள் இடையே வர்த்தகம், பருவநிலை மாற்றம், தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாநில பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள், நடனம் போன்றவற்றை ஒபாமா, மோடி இருவரும் கண்டு களித்தனர். இதில் முதன்முறையாக முப்படையான ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றில் பெண் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

25-1422174041-obama-indiad-600

இன்றைய அணிவகுப்பு மரியாதையின்போது பெண் அதிகாரி ஒருவர் தலைமையில் அமெரிக்க அதிபருக்கு மரியாதை கொடுக்கப்பட்டது அனைவரையும் கவர்ந்ததோடு, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் நம் இந்தியப் பிரதமர் மோடி என்பதையும் உறுதி செய்தது . இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் பூஜா தாக்கூர் அவர்கள் தலைமையில் நம் இந்திய வீரர்கள் அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்டதன் மூலம், அணிவகுப்பு மரியாதைக்கு பெண் அதிகாரி ஒருவர் தலைமை தாங்கியது இதுவே முதல் முறை என்ற வரலாற்றுச் சிறப்பும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

26-1422272498-a-marching-contingent-at-th

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியாவிற்குக் கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார். அணு சக்தி பயன்பாட்டிலிருந்த தடையை நீக்கியதாக அறிவித்துள்ளது, இன்றைய நம்முடைய தேவைக்கு பயனுள்ளதோர் அறிவிப்பு. அமெரிக்க மண்ணில் மின்வெட்டு, மின்தடை என்பதே இல்லை என்பதைப்போன்ற நிலை நம் இந்திய மண்ணிலும் ஏற்படுத்துவதற்குரிய இந்த அறிவிப்பை மனமார வரவேற்கும் இதே நேரத்தில் நம் அறிவியல் விஞ்ஞானிகளின் நிலைப்பாட்டை அறிய வேண்டியதும் அவசியம். கிழக்குக் கடற்கரையில் கொட்டிக்கிடக்கும் தோரியம் சொரிந்த மணல்களிலிருந்து அணு சக்தியை எடுத்தால் இதைவிட குறைவான செலவில் அணு சக்தி பெற முடியும் என்று கூறிய முன்னாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் விஞ்ஞானியுமான மேதகு அப்துல் கலாம் அவர்களுடைய கருத்திற்குரிய நிலைப்பாடு மற்றும் நம்முடைய ஆய்வரங்கங்களில் இவைகள் ஆய்வு செய்யப்படுகின்றனவா என்பதும் தெரியவில்லை. தோரியம் சொரிந்த கடற்கரை மணல்கள் அந்நிய நாட்டினரால் எதற்காக கடத்தப்பட வேண்டும் என்பதும் ஆய்விற்குட்பட்டது.

அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகள் வணிக ஒப்பந்தங்கள் நம் நாட்டின் முன்னேற்றம் கருதி, வாழ்த்தி வரவேற்கப்படவேண்டியவையே. நம் பழம்பெருமையை மட்டுமே பேசுவதை விடுத்து செயல்வடிவில் நம் வளர்ச்சியைக்கூட்டும் விதமாக அந்நிய மண்ணில் நம் முதலீடுகளை வெகு விரைவில் செய்யவேண்டியதும் அவசியம். அமெரிக்காவின் பெருமுயற்சியால் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவினால் அவர்களுடைய பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி குறைந்ததால் உலகளாவிய வகையில் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் சீர்பெற்று வருகிறது. நமது இயற்கை எரிவாயுக்கள் பல கிணறுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டும் இன்னும் செயல்பாட்டிற்குக் கொண்டுவராமல் இருப்பதும் வருத்தத்திற்குரிய விசயம். இதனை சரிசெய்யும் வகையில் நம் இந்தியப் பொருளாதாரம் மேலும் பன்மடங்கு சீர்படும் . அமெரிக்காவில் ஒரு லிட்டருக்கு முப்பது உரூபாய் அளவிற்கு பெட்ரோல் விற்பனை செய்ய முடிகிறது எனும்போது நமது நாட்டில் மட்டும் அதன் விலை இரட்டிப்பாக இருப்பதன் காரணமும் புரியவில்லை. இந்தியாவிலேயே முன்பு கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 110 டாலருக்கு  இருந்தபோது, பெட்ரோல் லிட்டருக்கு 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பாதிக்கும் கீழே, அதாவது 48 டாலருக்கு வந்திருக்கும்போதும், ஏன் இவ்வளவு விலையேற்றம்? நமது இந்தியாவிலேயே கிடைக்கக்கூடிய இயற்கை எரிவாயுவை அனைத்துப் பேருந்துகள் மற்றும் தொடர் வண்டிகளுக்கும் பயன்படுத்தினால் நம் பொருளாதாரத்தில் மிகப்பெரும் எழுச்சி ஏற்படுவதோடு , ‘தரமே, தாரக மந்திரம்’ என்ற வகையில் இந்தியப் பொருட்களின் தயாரிப்பு இருந்தால் நமது பாரதப் பிரதமரின் , ‘மேக் இந்தியா’ என்ற வாசகமும் உயிர் பெறும். . அறிவியல் வளர்ச்சியின் பயன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்று இந்த குடியரசு தின நாளில் உறுதி கொள்வோம். வெல்க பாரதம்!

படங்களுக்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *