மாயமான 31 மலைகள்!

பவள சங்கரி

தலையங்கம்

ராஜஸ்தானில் 31 மலைகள் முற்றிலும் மாயமாகி உள்ளன!

ராஜஸ்தானில் உள்ள ஆரவல்லி மலைத் தொடர்ச்சியில் உள்ள 31 மலைகள் முற்றிலுமாக மாயமானது குறித்து உச்சநீதி மன்றம் அதிர்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. நீதிபதியின் பார்வைக்கு வைக்கப்பட்ட மத்திய அதிகாரமளித்தல் குழுவின் அறிக்கை ஆரவல்லி மலைத் தொடரின் 31 மலைகள் காணாமல் போய் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. ராஜஸ்தான் அரசாங்கம் இதற்கான தமது பங்காக ரூ 5000 கோடி பெற்றுள்ள செய்தியும் இந்த அறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது. பல இலட்சம் மக்கள் உயிரைக் கருத்தில் கொண்டு 115.34 ஹெக்டேர் பரப்பளவில் வெட்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முறைகேடான இந்த செயல்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்த அறிக்கை கூறுகிறது. மக்களின் உயிருக்குப் பாதுகாப்பாக இயற்கை அரணாக நிமிர்ந்து நிற்கும் 20% மலைப்பகுதியை வெட்டி எடுத்துள்ளதில் அரசுக்கும் பங்கு இருப்பது என்பது மிகுந்த வேதனையளிக்கும் விசயம். தில்லியில் மாசு அதிகமாகி அச்சுறுத்தும் நிலைமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ராஜஸ்தான் அரசு தன் 5000 கோடி வருமானத்திற்காக தில்லி வாழ் மக்களின் உயிரைப் பணயம் வைத்திருப்பது முறையற்ற செயல் என்ற உச்சநீதி மன்றத்தின் இடைநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது. ராஜஸ்தான் அரசு இதை மிகச்சாதாரணமாக கையாண்ட காரணத்தால்தான் உச்சநீதி மன்றம் தலையிட வேண்டியதாகியுள்ளது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். சுரங்கப் பணிகளுக்கு உடனடி தடை விதித்ததோடு அதைப்பற்றிய முழுமையான அறிக்கையை தாக்கல் செய்யும்படி ராஜஸ்தான் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அரசே நாட்டின் இயற்கைச் செல்வங்களை கொள்ளையடிப்பதற்கு துணை போவதும் அதற்கு தமது பங்கினைப் பெறுவதும் மிக மோசமான முன்னுதாரணமாகவே காணமுடிகின்றது. ராஜஸ்தான் மாநிலம் இயற்கை வைரங்கள் நிறைந்த பகுதி என்பது நாம் அறிந்ததே. அடுத்ததாக இந்த மலைத்தொடர் தாது வளங்கள் நிறைந்ததா என்பது பற்றி எந்த விதமான ஆய்வும் செய்யாமல் அரசு அனுமதி அளித்திருப்பது அரசின் செயல்பாட்டையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

1 thought on “மாயமான 31 மலைகள்!

  1. நதிகளை நாம் வற்ற வைத்தோம், மரங்களை வெட்டினோம். இப்போது மலைகளைக் காணவில்லை. அப்புறம் கடலும் காணாமல் போகுமோ.
    புதிதாகப் பிரளயம் வரவேண்டுமா. இந்த அசுரர்களே போதும்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க