மொழிதல் கோட்பாட்டு நோக்கில் “மயானத்தில் நிற்கும் மரங்கள்”

முனைவர் ஆ.சந்திரன்

உதவிப் பேராசிரியர்

தமிழ்த்துறை

தூயநெஞ்சக் கல்லூரி

திருப்பத்தூர், வேலூர்

 

“ஏய் ஒன்னத்தான்” என்ற சப்தம் பொதுமக்கள் புழங்கும் இடத்தில் எழுகிறது. அந்தச் சப்தம் வந்த திசையை நோக்கி சிலர் திரும்பிப் பார்க்கின்றனர். அந்தச் சப்தத்திற்கான பொருள் அது யாரையோ நோக்கி விளிப்பதாக அமைகிறது. அது அதை எழுப்பியவருக்கும் அது யாரை நோக்கி விளிக்கப்பட்டாதோ அவருக்கும் இடையிலான உறவாக அமைகின்றது. அந்த அமைப்பு எதிர் எதிர் தன்மை கொண்டதாக அமைகின்றது.  அதாவது, சப்தத்தை எழுப்பியவன் தன்னிலையில் நிற்பதால் அவன் நான் என்றும் அவனது எதிரில் இருக்கும் ஒருவனை நோக்கிதாக விளித்தல் அமைவதால் அவன் நீ என்றுமாக நான்  x நீ என்ற நிலையில் அவ்விருவரும் தொடர்பு கொள்ளுகின்றனர். இது உரையாடலுக்கான தொடக்க நிலையாகும். இதன் அடுத்த நகர்வாக “மச்சான் நீ எப்படி இருக்க? பார்த்து ரொம்ப நாளாச்சி!. நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? உங்க  வீட்டல எல்லாரும் நல்லா இருக்காங்கலா? எங்க வீட்டில எல்லாம் நன்றாக இருக்கோம்” என்பன போன்ற வாக்கியங்களாய் அவ்வுரையாடல்  நீளலாம். இந்த உரையாடல் இருவருக்கு இடையில் நான் x நீ என்ற எதிர் எதிர் தளங்களில் தொடர்ந்து நீண்டு கொண்டே இருக்கும். அவர்கள் சந்திப்பு முற்று பெறும்வரை.  இவ்வாறே இலக்கியங்களிலும் இடம் பெறும் உரையாடல் அல்லது கூற்று என்பதும் நான் x நீ என்ற எதிர்வுகளாய் அமையும். இது இலக்கியத்தில் ஒரு உத்தியாகவே அமைகிறது.

இக்கூற்று முறை அதாவது ஒருவா் மற்றொருவரோடு உரையாடுவது என்ற தன்மை சங்க அகப்பாடல்கள்  முதல் (சான்றாக தோழி கூற்று, தலைவி கூற்று, தலைவன் கூற்று, செவிலி கூற்று, கண்டோர் கூற்று முதலானவற்றைக் கூறலாம்.) தற்கால கவிதைகள்  வரை தொடர்ந்து இயங்கிவரும் உத்தியாக உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையிலான ஆய்வுகளில் தமிழவன், முத்தையன், சண்முக விமல்குமார், சந்திரன்,  போன்றோர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் முயற்சியின் தொடர்ச்சியாய் அதை மேலும் வளர்த்தெடுக்கும் வகையில் பெருமாள் முருகனின் “மயானத்தில் நிற்கும் மரங்கள்” எனும் கவிதை தொகுப்பில் உள்ள மொழிதல் கோட்பாட்டுச் சிந்தனைகளை ஆராய முற்படுகிறது இக்கட்டுரை.

நான் x நீ இருமை எதிர்வும் இன்மைப் பொருளும்

“ஆசிரியன் தன் மொழிக்குள் (authorial speech) இன்னொருவரின் மொழியைப் போலச் செய்தலின் (parody) மூலம் வைத்திருக்க முடியும். அவ்வாறு கவிஞனின் சொந்த மொழியும் போலச் செய்தல் மொழியும் ஒன்றுக்குள் ஒன்று இருக்க முடியும். அதாவது ஓா் ஆசிரியனின் மொழிக்குள் எப்போதும் இன்னோர் ஆசிரியனின் மொழி இருக்க முடியும். இந்தத் தர்க்கத்தின் மூலம் ஓா் ஆசிரியன் தன் மொழிச் செயல்பாட்டுத் தருணத்தின் (அதாவது படைக்கும்போது) இன்னோர் ஆசிரியனுடன் ஓர் உரையாடலில் (கூற்றில்) இருக்கிறான் என்று அர்த்தம்” (ப. 20, தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும், தமிழவன்) என்று படைப்பாளரின் மனோநிலையில் படைப்பு எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்று விளக்குகிறார். அதாவது ஒவ்வொரு படைப்புக்குள்ளும் ஒருவா் உரையாடுகிறார் என்பதே அதன் அர்த்தம். உரையாடுதல் என்பது இருவா் பங்கெடுக்கும் செயலாகும். அதில் நான் x நீ அல்லது A x B என்கிற இருமை எதிர்வு அமைப்பு செயல்படும். அந்த வகையில் “மயானத்தில் நிற்கும் மரங்கள்” எனும் கவிதை தொகுப்பிலும் ஏராளமான நான் x நீ என்கிற எதிர்வு நேரடியாக வெளிப்பட்டும் வெளிபடாமலும் வந்திருக்கின்றன.

நீ என் கால் நக்கி

உன் உழைப்பு என் உடல் வளர்த்தி

உன் பொருள் என் பிச்சை

உன் பெண்டு என் தினவுக்கு

வேத வாசகம்  வேத வாசகம்

கருமத்தைச் செய் பலன் பாராதே” (பக். 24)

உன் சுட்டுவிரல் தொடுதலே

மாறுதலின் தொடக்கம்

என் துயரப் படிவுகளிடையே

நகைஅதிர்வுகள் எழும்பின

……………………………….

சொல்லடங்கிய மொழி

உன் இமையேறிப் புதைந்தது

பின்னெழும் நிலவொளி துலக்கிக் காட்டும்

கோபுர அழகென உருவு தோன்றிற்று

நீ மூட்டிய கனலில்

அனைத்தையும் வளர்த்துவிட்ட

ஒளி சூழ்ந்த அக்கணமே

உண்மையிலும் உண்மை

பின்

எனதென்று எதுவுமில்லை என்னிடத்தில் (பக்.55)

“கேள்விகளின் நாற்றத்தை உணர்த்த வேண்டாம்

என் கண்ணீர் நனைத்த உன் துணிகளை

எங்கும் பத்திரப்படுத்தாதே” (பக். 63)

“எங்கும் பறந்துவிடாமல்

என்னைப் பிடித்து வைத்துக்கொள்ள

விரும்புகிறாய் நீ

என் இதயத்தின் எல்லா அறைகளிலும்

நீயே நிரம்பி இருக்க வேண்டும்

என்னும் விருப்பத்தை நானறிவேன்

என் சட்டைக் காலரில்

நீ மாட்டிவிட்ட கொக்கிகள்

எப்போதும்  இழுத்த வண்ணமிருக்கின்றன

எங்கும் நான் தங்கிவிடாமல்

உன்னை நோக்கி விரட்டியபடி

உன் கரிய விழிகள் கூடவே வருகின்றன

உன் கண்ணீர்த் துளிகளின் வாசம் நிரம்பிய

கைக்குட்டையை

என் பையில் வைத்து ஏன் அனுப்புகிறாய்

உன்னைப் போல் எனக்கு

உணர்த்த முடியாமலிருக்கலாம்

நம்பிக்கையூட்டும் வெறும் சொற்களையும்

நான் உதிர்க்கவில்லை

விட்டுவிடு அனைத்தையும்

உன்னிலன்றி நிலைபடாதது என் மனம்” (பக். 71)

எனும் கவிதைகளில் நான், நீ, என், உன், என்பன வெளிப்படையாகத் தெரிகின்றன. இந்த நான் x  நீ என்பது சில கவிதைகளில் இருக்கமாகவும் இன்னும் சிலவற்றில் சற்று இடவெளியுடனும் வரும் தன்மையில் சிறு மாறுபாட்டைக் கொண்டுள்ளது என்பது மேற்கண்ட கவிதைகள் நமக்கு உணர்த்துகின்றன. இது இவ்வாறிருக்க சில கவிதைகளில் நான், நீ வெளிப்படாமலும் வருகின்றன.

இன்னும் சிலவற்றில் நான் என்பதும் சிலவற்றில் நீ என்பதும் மட்டும் வெளிப்படையாக இல்லாமல் வரும் தன்மையிலும் கவிதைகள் உள்ளன.

என்னைப் பற்றிய

தீர்மானமே

எனக்குள் இல்லை

அவனைப் பற்றி நான்

என்ன சொல்லவது (பக். 21)

என்ற கவிதையில் நான் (என்) என்பது வெளிப்படையாக உள்ளது. ஆனால் இக்கவிதையில் நீ என்பது அவ்வாறு வெளிப்படையாக இல்லை. அவன் என்ற மூன்றாவது நபரைப் பற்றிய கருத்தை இக்கவிதைசொல்லி யாரிடம் கூறுகிறார். எதிரே இருக்கும் நபரிடமா? அல்லது தன்னுடைய நெஞ்சிடமா? என்பது வாசகனைப் பொருத்து அமையும். ஏனெனில் இந்தக் கவிதைசொல்லியின் குரலைக் கேட்பவர்  எதிரே இருப்பவரா?  அல்லது நெஞ்சமா (சங்க அகப்பாடல் தலைவன் செலவழுங்கல் போல) என்பதைப் பொருத்து நீ என்பது தீர்மானிக்கப்படும். என்றாலும் இக்கவிதையில் நீ என்ற அமைப்பு வெளிப்படாத நிலையில் கமுக்கமாக உள்ளது என்பது மட்டும் உண்மை.

இவ்வாறே சில கவிதைகளில் நான் x நீ என்ற இரு அமைப்புகளும் கமுக்கமாக வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளுறைந்து காணப்படுவதும் உண்டு.

“நிகழ் உறவு” என்ற தலைப்பிலான கவிதை இத்தகைய அமைப்பைக் கொண்ட கவிதைக்குச் சான்றாகக் கூறலாம்.

“இருந்தும்

முன்னோக்கிப் பரவும்

ஓயாத அலைகள்

முட்களை வாரி வரும்

காற்றுக் காலம்

மூச்சில் அறையும்

சூனியப் புகைகள்

மூட்டத்தினூடே

கழுத்துக்கு நீளும்

கையொடிருந்த விரல்கள்

நகர்ந்து ஓடும்

நெருங்கி நடந்த தோள்கள்

உயர்ந்தும் தாழ்ந்தும்

முறித்தும் முறிந்தும்

தெரியும்

ராஜபாட்டையில் அல்ல

இடிபாடுகளுக்கிடையே தான்

தொடரும் பயணம்”

இந்தக் கவிதையில் நான் x நீ என்பது வெளிப்படையாக இல்லை. ஆனால், கவிதையின் கடைசியில் இடம்பெற்றுள்ள “தொடரும் பயணம்” என்னும் வரிகள் தன்னுடைய பயணம் இடிபாடுகளுக்கிடையே நடப்பதாகக் கவிதைசொல்லி கூறுவதாக உணர முடிகிறது. இது கவிதைசொல்லியின் குரலில் இருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. அதாவது யாருடைய பயணம்? என்ற வினாவிற்குத் தன்னுடைய பயணம் என்பது விளக்கமாகப் பெறப்படுகின்றது. தன்னுடைய பயணத்தைப் பற்றிக் கவிதையில் வரும் நான் யாரிடம் கூறுகிறது? என்று கேட்டால் அது நிச்சயம் எதிரில் இருக்கும் நபரான நீயிடம்தான் கூறுகிறது என்பது பெறப்படும்.

இவ்வாறு கவிதையில் நான் என்பதும் நீ என்பதும் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் வருவதை இந்நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் காணமுடிகின்றது.

இதில் “நான் என்பது கவிஞன் குரலல்ல; இது கவிதையில் வருபவனின்  குரல்; கவிஞன் வேறு, கவிதையில் வருபவன் (narrator) வேறு. இந்த narrator-ஐ கவிதையின் சூத்திரதாரி என்றும் கருதலாம். நாடகத்தில் சூத்திரதாரி, நாடக ஆசிரியனிலிருந்து வேறானவனாய் மேடையில் தோன்றுவான். கவிதையின் சூத்திரதாரி தனியாய்த் தோன்றாததால் கவிஞனாகக் கருதும் பிழையைப் பலா் செய்வதுண்டு” (ப. 63, தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும், தமிழவன்) என்று தமிழவன் கூறுகிறார். இந்த ’நான்’ கவிதைசொல்லி என்றும் அழைக்கப்படுகிறது என்றும் கூறுகிறார். மேலும் ’நீ’ பற்றி ஆராயும் தமிழவன் “நான் கவிஞனாகிய நான் அல்ல எனில் ’நீ’யும் கவிஞனின் காதலி அல்ல. அல்லது கவிஞனுக்கு முன் நிற்கும் ’நீ’ அல்ல. சூத்திரதாரிக்கான ஒரு எதிர்வு அதாவது கற்பிதமான மாயா சூத்திரதாரி. இப்போது நான் x நீ என்ற மொழி எதிர்வு இன்னொரு கருத்தியல் எதிர்வு ஜோடியான சூத்திரதாரி x மாயாசூத்திரதாரி என்பதற்கு வளர்கிறது (ப. 64, தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும், தமிழவன்) என்றும் கூறுகிறார். இப்பண்பு கவிதையிலும் எதிர்வுகளைக் கொண்டுள்ளதை அறியமுடிகிறது.

“தொடரும் பயணம்” என்று முடியும் மேலே கண்ட கவிதை வளமை x வறுமை என்ற இரு எதிர்வுகளைக் கொண்டு அமைவதைப் பார்க்கலாம். தான் நடப்பது ராஜபாட்டையில் அல்ல இடிபாடுகளுக்கிடையே என்று கூறுவதும், முட்களை வாரிவரும் ஓயாத அலைகள், காற்றுக்காலம், மூச்சில் அறையும் சூனியப் புகைகள், நீளும் கையொடிருந்த விரல்கள்,  நகர்ந்து ஓடும் நெருங்கி நடந்த தோள்கள்”  போன்ற குறிப்புகள் இதனை நன்கு உணர்த்துகின்றன. அத்துடன் இந்தக் கவிதையின் நான் என்பது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒரு குரலாகவும் நீ என்பது அதற்கு நேர் எதிரான ஆதிக்கச் சமுகத்தையும் குறிக்கிறது. அதாவது இக்கவிதையில் வரும் ராஜபாட்டை X  இடிபாடு எதிர்வுகள் இதைப் புலப்படுத்துகிறது. அத்துடன், இது வளமை X வறுமை என்ற இரு அர்தத்தளங்களைக் கவிதைக்குள் புதைத்து வைத்துள்ளது.

இதன் தொடர்ச்சி பல கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இயக்கவியல் விதி பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், ஏமாற்றம் ஒன்று இங்கு இருப்புகொண்டுள்ளது. அது நேற்று போல் இன்றும் தொடர்கிறது என்கிற வறுமையின் மாறத் தத்துவத்தைப் பிரதிபலித்து நிற்கின்றன சில கவிதைகள். சான்றாகப் பின்வரும் கவிதைகளைக் கூறலாம்.

“…………………

மேடும் பள்ளமும்

இறக்கமும் ஏற்றமும்

நிமிர்வும் துவள்வும்

பாதைகளில்

……………….” (பக் 31)

இந்த வருசம்

இன்றைக்கு முதல்

நானும் தங்கச்சியும்

போன வருசம்

இதே தருணம்

அண்ணனும் நானும்” (ப. 36)

“வெட்டுப்பட்ட கால்களை

இழுத்து நகர்கிறது காலை

எப்படியோ தீய்கிறது பகல்

வெறுமை மாரடித்துக்

கதறிப் பற்றுகிறது மாலை

மணலாய்ச் சிதறிய மனசோடு

அழைப்பு மணிக்காய் எழுந்தோடிக்

கண்ணெரியக் கழிகிறது இரவு

நீயற்ற நாட்கள்

ஏதோ போகிறது பொருளற்று” (ப. 66)

என்ற கவிதை வரிகளில் மேடு X பள்ளம், இறக்கம் X  ஏற்றம், நிமிர்வு X துவள்வு, கடந்தகாலம் X நிகழ்காலம், காலை X மாலை, இரவு X பகல் போன்ற இருமை எதிர்வுகளைக் கொண்டுள்ளன. இவை வெளிப்படையாக அமைந்து கவிதையை நகர்த்துகின்றன.  இது ஒருபுறமிருக்க இந்தக் கவிதைகளில் ஒட்டுமொத்தமாக ஒரு சோகக் குரல் ஒலிப்பதைப் பார்க்க முடிகின்றது. அது தனிமனிதன் X சமூகம் என்ற எதிர்தளத்தில் நிற்கிறது. இந்த எதிர்எதிர் தளங்கள் தனக்குள் புதைத்துவைத்துள்ள இன்பம் X துன்பம் என்ற இரு இன்மை எதிர்வுகளை வெளியிடுகின்றன. துன்பம் என்ற ஒன்றைப் பற்றிக்  கொண்டு காலை X மாலை, பகல் X இரவு, கடந்தகால X நிகழ்கால என்ற கால எல்லையில் விரிகின்றது. அது தனிமனிதன் X சமூகம் என்ற எதிர்வில் வெளிப்படையாகவும், பூடகமாகவும் அமைகின்றது என்பதைக் கவிதைசொல்லியின் குரலின் வழி நாம் அறியமுடிகின்றது.

பொதுவாகக் கவிதைகளில் “இந்த இருமை எதிர்வு இரண்டு வகையில் அமையும் என்கிறார்   தமிழவன். அவை : 1. வெளிப்பட்டும் நிற்கும் இருமை எதிர்வு, 2. வெளிப்படாமல் பூடமாக நிற்கும் இருமை எதிர்வு (ப. 86, தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும், தமிழவன்) ஆகும்.  இந்த இருவகையான எதிர்வுகளை இந்தக் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் காணமுடிகின்றன.

“காற்று கொண்டு வருகிறது உன்விரல்களின் மிருதுவான தொடுதலை”(ப.68) எனத் தொடங்குகிறது “நிறைநினைவு” என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம். இக்கவிதை காதல் ரசத்தைச் சாறுபிழிந்து தருவதாய் உள்ளது.

“இரவின் மௌனத்தில் காதலியின் அருகிருப்பைக் காதலன் உணர்கிறான். அப்போது அவனுக்கு அந்த மௌனத்திலும் காதலியின் கடந்தகால நினைவு மயக்க நிலையில் வெளிப்படுகின்றது. அத்துடன்  அது தெளிவாக உள்ளது”. அதாவது, மயக்கம் x தெளிவு  என்ற எதிர்வுகளில் அமைந்துள்ள கவிதை பிரிவின் நினைவைக் காட்சிப்படுத்துவதாக உள்ளது. மௌனத்தின் அமைதியைக் குலைத்து, மனதில் ஆரவாரத்தைத் தூசு தட்டி எழுப்பிவிடுகிறது. அமைதியாக இருந்த அவனுடைய மனம் இப்பொழுது கலவரத்தில் மூழ்கிப் போகிறது. இக்கவிதையில் ஆனந்தம் x துன்பம், அமைதி x ஆரவாரம், மௌனம் x  பேச்சு என்ற இருமை எதிர்வுகள் பின்னிப் பிணைந்து கவிதையாய் வடிவம் பெற்றுள்ளது.

இரைச்சல்களின் நடுவே

தலைகுனிந்து மௌனமாய் நான்

உறவு சொற்கள் அமுக்கும் பிசாசுகளாகின்றன

கோத்து நடந்த விரல்கள் குரவலைகள தடவுகின்றன

செத்தொழிந்த எல்லா மனிதர்களுக்குமான அழுகை

என்தலையில் கொட்டுகிறது” (ப.69)

என்ற கவிதை ஆடம்பரத்தின் ஆரவாரங்கள் நடுவே அமைதியாய் இடம் தெரியாமல் வாழ்க்கையைக் கழிக்கும் நிலையை விவரிக்கிறது. பணம் இருந்தால் முகம் தெரியாதவர்களும் கை்ககுலுக்கி உறவினர் ஆவதும், பணம் வசதி உயர்பதவி என்ற ஏதும் இல்லாமல் ஒரு வேளை நல்ல பண்புகள் மட்டும் ஒருவன்  கொண்டிருந்தால், அவனை  உதவாக்கறை என்றோ பிழைக்கத் தெரியாதவன் என்றோ இந்தச் சமூகம் தூற்றும். நெருங்கிய உறவுகள் கூட விலகிச் செல்லும். கைவிரைல்கள் கூட அவனை நேசிக்க மறுக்கும் சூழுலுக்குத் தள்ளப்படுவான். தனிமை வாட்டி எடுக்கும். யாரும் இல்லை என்ற சோகம் மெனியைத் திருகும். இத்தகைய சூழுல் ஒருவனுக்கு நேரும் என்றால் அவனுக்கு எல்லாமும் துயரமாய்ப் போகும். அது “அழுகை தலையில் புரண்டோடுவது” போல் அது அமையும்.

அத்தகைய சோகமான தனிமைத் துயரைக் காட்சிபடுத்தும் கவிதையாக இக்கவிதை அமைகின்றது. இக்கவிதை இரைச்சல் x அமைதி, உறவு x பகை, இணைவு x பிரிவு என்ற அர்த்தத்தளங்களை இன்மை நிலையில் பூடகமாய் வாசகனின் மனதில் தன்னுடைய சோகத்தினை இறக்கி வைத்துவிட்டுச் செல்லுகின்றது கவிதைசொல்லி.

துணை நின்றவை

  1. பெருமாள் முருகன், மயானத்தில் நிற்கும் மரங்கள், 2016 (முதல் பதிப்பு), காலச்சுவடு பப்ளிகேசன்ஸ் (பி) லிட், 669, கே.பி.சாலை, நாகர் கோவில், 629 001.
  2. தமிழவன், அமைப்பியலும் அதன் பிறகும் (ஸ்ட்ரக்சுரலிசம் நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு), 2008, அடையாளம், 1205 / 1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி, 621 310.
  3. …………………, பழந்தமிழ் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள், 2009 (முதல் பதிப்பு), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113.
  4. ……………….., தமிழ்க் கவிதையும் மொழிதல் கோட்பாடும், 1995 (முதல் பதிப்பு), காவ்யா, 16, 17 இகிராஸ், இந்திரா நகர், பெங்களுர், 560 038.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க