சங்கப் பெண்கவிதைகள்: பெண் – மொழியும் வெளியும்

0

முனைவர் அ.மோகனா

உதவிப் பேராசிரியர்

தமிழ்த்துறை

தியாகராசர் கல்லூரி, மதுரை

 தமிழ்மொழி செம்மொழியாக உலக அரங்கில் ஏற்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தவை சங்கக் கவிதைகள். பாட்டும் தொகையுமாக அமைந்த இவை காலந்தோறும் பல்வேறு விதமான வாசிப்புகளுக்கு உட்பட்டுப் பயணித்து வந்துள்ளன. அவை தொகுக்கப்பட்ட முறைமை, பேசும் பொருள், கவிதையாக்கம், அழகியல், தொல்லியல், மானிடவியல், சமூகவியல் எனப் பன்முகப்பட்ட வாசிப்பு முறைகளில் ஊடாடியுள்ளன. இப்பின்புலத்தில் சங்கப் பெண்கவிதைகள் என்கிற சக்திஜோதியின் நூல் கவனத்திற்குரியதாகின்றது. இந்நூலுக்குள் பயணிப்பதற்கு முன்னதாகச் சக்திஜோதி இன்று தமிழ்ச்சூழலுக்குக் கையளித்துள்ள ஆய்வு முறையின் பின்புலம் குறித்த சில தகவல்களைப் பதிவு செய்வது அவசியம். அப்போதுதான் இன்றைய தமிழ் ஆய்வுப்பரப்பிற்குள் சக்திஜோதியின் இந்நூலுக்குரிய இடம் மற்றும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.

1970ல் அமெரிக்க பெண்ணிய ஆய்வாளர் ஏலெயின் ஷொவால்டர் Gynocriticism என்கிற புதிய இலக்கிய விமர்சனக் கோட்பாட்டை உருவாக்கினார். இதனை ஓர் இயக்கமாகவே அங்கு முன்னெடுத்தனர். Gynocriticism என்பது குறித்து ஷொவால் கூறுவது, a female framework for the analysis of women’s literature to develop new models based on the study of female experience rather than to adapt male models and theories – சுருக்கமாகக் கூறினால் பெண் எழுத்துக்களைப் பெண்களே வாசித்தல். அதற்கான பெண்மைய ஆய்வு முறையினை உருவாக்குதல் என்பது. ஷொவால்டர் தொடங்கிவைத்த இந்தப் புதிய ஆய்வுமுறைமையின் தொடர்ச்சியாக ஜூடித் பெட்டர்லி, பேட்ரிசியா மேயர் உள்ளிட்ட பெண் பேராசிரியர்கள் தங்கள் ஆய்வுகளைத் தகவமைத்தனர். ஷொவால்டர் இரண்டு நிலைகளில் பெண்மைய திறனாய்வாளர்களை வகைப்படுத்தியுள்ளார். ஒன்று The women a reader or feminist critique, இரண்டாவது The women as writer or Gynocritics ஒரு பெண் வாசகராக, பெண்ணிய விமர்சகராக இருத்தல், ஒரு பெண் புனைவாளராகவும் அதே நேரம் பெண்நிலைப்பட்ட விமர்சகராகவும் இருத்தல். சக்தி ஜோதியின் இவ்வாய்வு இரண்டாம் நிலையில் அமைகின்றது. கவித்துவ ஆற்றலுடைய ஒரு பெண் இதுவரை சங்கக் கவிதைகளை வாசிப்பதற்காகக் காலங்காலமாக உருவாக்கி வைத்த வாய்பாட்டு முறைமைகளைப் பின்தள்ளி அந்தப் பெண் எழுத்துக்களை வாசிப்பதற்கான ஒரு புதிய சட்டகத்தை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னரும் சங்க இலக்கியத்தின் திணை, துறை, கூற்றுகளின் நம்பகத்தன்மை மீதான ஆய்வுகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வ.சுப.மாணிக்கத்தின் ‘சங்க நெறி’, கமில்ஸ்வலபிலின் The Smile of Muruga, Tamil Literature, அம்மன்கிளி முருகதாஸின் சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும், குளோரியா சுந்தரமதியின் பகுப்பாய்வுநெறி நோக்கில் சங்க இலக்கியம், அ.மங்கை அவர்களின் நக்கண்ணையின் விழைவுரை தற்சமயம் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள சுஜா சுயம்புவின் தமிழ்த் தொகுப்பு மரபு எட்டுத் தொகை பனுவல்கள் உள்ளிட்ட ஆய்வுகள் சங்க இலக்கியத்தின் திணை, துறை மரபின் பொருத்தப்பாடுகளை ஆராய்ந்து அவற்றின் பொருத்தமற்ற தன்மைகளைக் கண்டுகாட்டியுள்ளன.

சங்கப் பெண் கவிஞர்கள் எனும்போது உ.வே.சாமிநாதையர், பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை (பாட்டும் தொகையும்), ந.சஞ்சீவி (சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணை), ந.முருகேசபாண்டியன் (அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில், சங்கப் பெண்பாற்புலவர்கள்) உள்ளிட்டோரால் முன்வைக்கப்பட்ட பெண்பாற்புலவர்களின் பட்டியல்களை விடுத்துத் தாயம்மாள் அறவாணன் அவர்களின் மகடூஉ முன்னிலை நூல் அளித்துள்ள பட்டியலைச் சக்திஜோதி இந்நூலிற்கான மூல ஆதாரமாகக் கொண்டுள்ள முறைமையினை எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது.

இம்முறையினைத்தான் Gynocriticismத்தின் அடிப்படையாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. சங்கப் பாடல்களில் உள்ள பெண்மொழியினைப்புரிந்து கைக்கொள்ள பெண்நிலைப்பட்ட தரவுகளைக் ஆதாரமாக்குதல். இந்த நூலை வாசிக்கும்போது தவிர்க்க இயலாமல் ஜூடித் பெட்டர்லியின் Provisions: A reader from 19th century American women (1781 – 1914) (1965 இல் இந்நூல் வெளியானது) பேட்ரிசியா மேயரின் The Female Imagination: A Literary and psychological investigation of women’s writing ((1975) வெளியானது.) என்ற இரண்டு நூல்களும் நினைவிற்கு வந்தன. அமைப்பிலும் பேசும்பொருளிலும் வியக்கத்தக்க ஒப்புமைகளை இவை கொண்டிருந்தன. பெண்எழுத்துகள் குறித்து பெட்ரிசியா மேயரின் இரண்டு கருத்துகள் இங்கு ஒப்புநோக்கத்தக்கன.

Women writing directly about their lives in letters, journals, autobiographies or indirectly in that concealed form of auto biography we call fiction demonstrate that the experience of women has long been the same, that female likenesses are more fundamental than female (1975:17)

Women’s writing could not be considered in isolation from the social, economic, and political facts that dictate much of women’s condition. Subsequent critics have agreed. (1975:18)

படைப்பு சார்ந்த புலமையென்பது பெண்கள் வகைப்பட்டதாக மாறுகையில் அதன் தன்மையானது சமூகத்தின் கூட்டு மனசாட்சியாக வெளிப்படும். ஆண்களின் படைப்புகளில் பெண்களை எழுதிப்பார்க்க முனைவது பல சமயங்களில் வலிந்து வெளிப்படையாகத் தெரியும். பெண்கள் தங்களைப் பற்றித் தாங்களே எழுதும்பொழுது சமூகத்தின் ஊடுபாவு தோற்றம் அசலானதாகவும் அழுத்தமானதாகவும் உருவாகும். – சக்திஜோதி (ப.19)

மேற்குறித்த இரண்டு கருத்துகளின் பிழிவாகத்தான் சக்தி ஜோதியின் இக்கருத்து உள்ளது. மேலும் அமைப்பு முறையில் நோக்கும்போது சக்தி ஜோதி சங்கப் பெண்பாற்புலவர்களின் பாடலடிகளை ஒவ்வொரு பகுதிக்கும் தலைப்பாகத் தந்திருக்கின்றார். சான்றாக இந்நூலிலுள்ள முதல் கட்டுரை ‘நிலந்தொட்டு புகாஅர்’ என்பது வெள்ளிவீதியாரின் பாடல் அடி. அவர்குறித்த கட்டுரைக்கான தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜூடித் பெட்டர்லியின் Provisions: A reader from 19th century American women (1781 – 1914) நூலிலும் அமெரிக்கப் புனைகதையாளர்களின் புகழ்பெற்ற தொடர்கள், அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளில் பேசிய தொடர்கள் ஆகியன ஒவ்வொரு கட்டுரைக்கும் தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சான்றாக Maria W. Stewart (1803 – 1879) குறித்த கட்டுரைக்கு Why sit ye here and die? என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர் பெண்ணிய சமூகத்தளத்தில் வினையாற்றிய முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வடி ப்ராங்ளின் அவையில் செப்டம்பர் 21, 1832இல் அவர் ஆற்றிய சொற்பொழிவின் தலைப்பு.

1970களில் தொடங்கிய gynocritic விமர்சனமுறை தமிழ் ஆய்வுப்பரப்பில் சக்திஜோதியின் மூலம் கால்பாவியுள்ளது என்றே கருதலாம். ஆராய்ச்சி மரபில் இவ்வகைமையில் இந்நூலினை அடையாளங்காண முடிகின்றது. சங்கப் பெண்கவிதைகள் என்ற இந்நூலைப் பொறுத்தவரைக் கீழ்க்கண்ட நிலைகளில் இதன்தன்மைகளைப் புரிந்துகொள்ள இயலுகின்றது.

  • முதலாவதாக இந்நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி. இந்நூலின் கட்டுரைகள் யாவும் குங்குமம் தோழி இதழில் ‘பெண் உடல் மனம் மொழி’ என்ற தலைப்பில் தொடர்கட்டுரையாக வெளிவந்தவை. எனவே அனைத்துத்தரப்பட்ட வாசகர்களையும் சென்று சேர்கின்ற ஒரு மொழிநடையைக் கையாண்டுள்ளார். அதே நேரம் தமிழியல் ஆய்வாளர்களுக்குத் தேவையான அளவிற்குக் கருத்துகளில் அழுத்தத்தையும் ஆழத்தையும் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • ஒவ்வொரு பெண்கவிஞர் குறித்த கட்டுரை முடிவிலும் அவர்களைப் பற்றிய  குறிப்புகளை அளித்திருப்பது. சில இடங்களில் கல்வெட்டுச் சான்றுகளை எடுத்துக் காட்டியிருப்பது.
  • சமகாலப் பெண்கவிஞர்களின் கவிதைகள், புகழ்பெற்ற பிறமொழி நாவல்கள், திரைப்படங்கள், அன்றாடம் நாம் கடந்து போகின்ற நிகழ்வுகளிலிருக்கின்ற உயிர்ப்புக் கணங்கள் ஆகியவற்றை விவரித்து அதனூடாகச் சங்கப் பெண் கவிதைகளின் மொழியையும் வெளியையும் எடுத்துரைக்கின்ற பாங்கு.
  • சங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலரால் ஆண்புலவர்களின் பட்டியலில் வரிசைப்படுத்தப் பட்டிருக்கும் புலவரைப் பெண்ணாக அடையாளங்காட்டுகின்ற ஆய்வுமுறைமை.
  • இறுதியாகக் கவிஞரின் பரந்துபட்ட வாசிப்பும் அதன் வெளிப்பாடாக அமைந்திருக்கின்ற சான்றுகளும் மேற்கோள்களும்.

இவர் கையாண்டுள்ள மொழிநடையின் இயல்புத்தன்மைக்குச் சான்றாக ஒரு பகுதி வருமாறு: அஞ்சியத்தை மகள் நாகையார் குறித்த கட்டுரையில்,

“ஆண் பெண் இருவருக்குமான வாழ்வின் முதல் சந்திப்பிலேயே கணவனாகப் போகிறவனை இனியவன் என்று பெரும்பாலும் பெண் நம்பத் தொடங்கிவிடுகிறாள். அவனிடம் தன்னை முழுவதுமாக ஒப்படைப்பதற்கு முன்பாகவே அவனே “தன்னுடைய ஆண்” என நினைக்கிறாள். மேலும் அவன்தான் இவ்வுலகின் மிகச்சிறந்த ஆண் என்றும், அவனுடைய நெஞ்சில்தன் ஒருத்திக்கு மட்டுமே இடம் இருப்பதாகவும், தன்னால் மட்டுமே அவனை அரவணைத்துப் போகமுடியுமெனவும் நம்புகிறாள். இந்நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஒரு பெண் அவளுடைய ஆணுடன் கூடி வாழத் தொடங்குகிறாள்.” (ப.58)

தமிழ் அகமரபின் கைகோளுள் ஒன்றான களவு வாழ்வில் ஈடுபடும் பெண்ணுடைய நிலையினை இதைவிட எளிமையாக அழுத்தத்துடன் கூற இயலாது என்றே நினைக்கிறேன். இக்கட்டுரையில் ஹங்கேரிய கவிஞன் மிக்லோஷ் ராட்நோட்டி எழுதிய என் மனைவியைப் பற்றிய ஒரு எளிய பாடல் என்ற கவிதை இடம்பெற்றுள்ளது. இக்கவிதை எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.  அஞ்சியத்தை மகள் நாகையாரின் அகநானூற்றுப் பாடல் ‘முடவு முதிர் பலவின் குடமருள் பெரும்பழம்’ விளக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் இறுதியில்  கவிஞர்குறித்த குறிப்புடன் இப்பாடல் மூலம் தெரியவருகின்ற சில புதுமையானசெய்திகளையும் தொகுத்தளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அள்ளூர் நன்முல்லையார் குறித்த கட்டுரையின் இறுதியில் அள்ளூர் என்கிற ஊர் குறித்த குறிப்புகள் அள்ளூர்கல்வெட்டு மற்றும் திருநெல்வேலிக் கோயில் கல்வெட்டிலும் காணப்படுவதையும் சக்தி ஜோதி சுட்டியுள்ளார்.

முதல் பதினைந்து கட்டுரைகளுள் அஞ்சில் அஞ்சியார் குறித்த கட்டுரை குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெறுகின்றது. நற்றிணையின் 90ஆவது பாடல் இக்கவிஞர் பாடியது.  இவ்வொரு பாடல் மட்டுமே இவர் பாடியுள்ளார். இப்பாடலின் பொருளைப் பூப்பெய்திய பெண்ணொருத்திக்கு ஊஞ்சல் விளையாட்டு மறுக்கப்பட்ட நிலையையும் அதனால் அவள் உற்ற துயரத்தையும் மொழிவதாக சக்திஜோதி கட்டமைத்துள்ளார். இப்பாடலுக்கு உரைகாரர்கள் அளித்துள்ள திணை, துறை குறிப்புகளிலும் விளக்கத்திலும் உள்ள சிக்கலினால் அவற்றை விடுத்துப் பாடலை மட்டும் தான் அணுகியதாகச் சக்திஜோதியே குறித்துள்ளார்.

எட்டுத்தொகையுள் ஒன்றான நற்றிணைக்குப் பிற தொகைநூல்களைப் போல பழைய உரையோ பெயரறியாத உரையோ இல்லை. அவ்வாறே பிற தொகை நூல்களைப் போன்ற திணைப்பகுப்பு குறிப்பும் இல்லை. நூலைத் தொகுப்பித்தது பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி என்கிற ஒரு குறிப்பு மட்டும் நற்றிணையின் இறுதிச் சுவடி மூலம் கிடைக்கின்றது. 1914இல் இதற்கு உரையெழுதிய பின்னத்தூர் நாராயண சாமி ஐயரே திணைப்பகுப்பையும் துறைக்குறிப்பையும் எழுதியிருக்கிறார். குறைந்த பட்ச காலப்பழமையாக கி.பி. ஒன்று என்பதைச் சங்க இலக்கியத்தின் காலமாகக் கொண்டாலும் சுமார் பதினைந்து நூற்றாண்டுகள் நற்றிணை திணைப்பகுப்பு செய்யப்படாமலேயே வழங்கப்பட்டுள்ளது கவனத்திற்குரியது. (2016:55)  இந்த நற்றிணையில் இடம்பெற்றுள்ள அஞ்சில் அஞ்சியாரின் 90ஆவது பாடலுக்குப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வழங்கிய திணை மருதம் துறை தோழி தலைமகளுக்குரைப்பாளாய்ப் பாணனை நெருங்கி வாயின்மறுத்தது, பரத்தையிற்பிரிந்த தலைமகனால் விடுக்கப்பட்டு வாயில் வேண்டிவந்த பாணன் கேட்பத் தோழி தலைமகளை நோக்கி நின் காதலன் முயங்கும் பரத்தையருள் பெண்டன்மையறியாப் பெதும்பைப் பருவத்தாளொருத்தி ஊசலாடாது அழுது நிற்பதை ஆற்றுவித்து, மீட்டும் ஆடச்செய்யாத அவனது அவை பயனுடையதன்று; அவளழுதூடினமையின் இங்கு வந்தான்போலுமென வெகுண்டு கூறாநிற்பது. ஆனால் இந்தப் பாடலுக்குள் இத்துறைக்குறிப்பிற்கான எந்த ஒரு ஏதுவும் இல்லை. அப்பாடலில் காட்டப்படுவது எல்லாம் விழாக்களால் ஓசை பெற்ற மூதூர்; வறுமையற்ற நிலையில் இடையறாது துணி துவைக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் புலைத்தி. அவள் தந்த கஞ்சியிட்டு உலர்த்திய பூத்தொழிலை உடைய ஆடையை அணிந்த இளைய பெண். மூதூர், வேந்தன் ஆகிய சொற்கள் இப்பாடலை மருதத்திணைக்கு உரியதாக அடையாளங்காட்டுகின்றன. ஆனால் அவ்விளைய பெண் பரத்தை என்பதற்கு எந்த அகச்சான்றும் இல்லை. இப்பின்புலத்தில் சக்தி ஜோதி இப்பாடலுக்கு அளித்துள்ள விளக்கம் விதந்து சுட்டத்தக்கது. அப்பகுதி வருமாறு,

இன்றைக்கும் கிராமப்புறங்களில் ஒருவழக்கம் இருக்கிறது. ஒருபெண், பூப்படைந்தவுடன் அவ்வூரின் உடைவெளுப்பவள் அளிக்கும் மாற்றுடையை அணிந்து கொண்டு வீட்டின் புறத்தில் சில காலம் ஒதுங்கியிருக்க வேண்டும். இதைப்பற்றி சசிகலாபாபு தனதுகவிதை ஒன்றில்,

வண்ணாத்தி கொடுத்த சேலையுடுத்தி

நல்லெண்ணையும் பச்சைமுட்டையும்

கலந்த சுவாசத்துடன்

அவள் முதல் மூக்குத்திப் பெற்றாள்.

இவரது இந்தக் கவிதைமூலம் வண்ணார் மாற்றுடை என்கிற இப்பழக்கம் தற்போதும் சில இடங்களில் தொடர்வதாக உணரமுடிகின்றது. அஞ்சில் அஞ்சியாரின் நற்றிணைப் பாடலில் அதுவரை சிறுமியாகக் குழந்தைமை நிறைந்தவளாக விளையாடிய இளமகள் முதல் பூப்பின் தினத்தில் அல்லது அதற்கடுத்த சில தினங்களில் தன்னுடைய விளையாட்டை விட்டு வெளியேறிதற்காக வருந்திய ஒரு பெண் எழுதிய வரிகளாக இந்தப் பாடல் அமைந்திருக்கலாம். முதல்நாள் வரைவிளையாடிய நினைவில் விளையாட ஓடிவருகிற சின்னவளை அங்கிருக்கும் பெரியவர்கள் கடிந்து சொல்லியிருக்கலாம். அல்லது அவளே கூட இனிமேல் இவ்வாறெல்லாம் விளையாடக்கூடாது எனஅந்த வீட்டின் பெரியவர்கள் சொன்னது நினைவுக்கு வந்து விசும்பியபடி நகர்ந்திருக்கலாம். இந்தக்காட்சியைப்பார்த்த ஒருவர் இந்தப்பாடலை எழுதியிருக்கலாம். (ப.78)

இப்பாடலுக்குப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் எழுதியுள்ள உரை,

கூத்தயர்கின்ற விழாவின் ஒலியையுடைய இம்மூதூரின்கண்ணே ஆடைகளை ஆராய்ந்து கழுவுந்தன்மையிற் பெரிதும் தன் கை ஒழியாத வறுமையில்லாத ஆடையொலிப்பவள் இரவிலே தோய்த்த சோற்றின் கஞ்சியிட்டுப் புலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று; கரிய பனைநாரினாலே திரித்த கயிற்றைப் பிணித்துத் தொங்கவிட்ட வூசலிலேறிப் பூப்போல் உண்கண்களையுடைய தன் ஆயத்தார் அதனை ஆட்டவுந் தான் ஆடாளாய் அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் – அழுது மீளுகின்ற அழகிய சிலவாகிய கூந்தலையுடைய பெண்தன்மையிற் குறைவுபட்ட சிலவாய வளைகளை யணிந்த பரத்தையாகிய பெதும்பைப் பருவத்தாள் ஓரிளமகளை;(1914:120)

மேலும் உரையின் இறுதிப்பகுதியில் பதவுரையாக நல்கூர்பெண்டு – பெண்தன்மையில்லாள். பெண்தன்மை, நாணமுதலியன. மாக்கள் – பாணன் முதலானோர். இப்பாடலில் இடம்பெற்றுள்ள நல்கூர் என்ற சொல்லுக்கு ‘வறுமைபட்ட’, ‘ஏழ்மையையுடைய’ என்பதே பொருளாக உள்ளது. குறுந்தொகை பாடலொன்றில் இச்சொல்லானது இப்பொருண்மையிலேயே வழங்கப்பட்டுள்ளது. தமிழ் அகராதி லெக்சிகனும் இப்பொருளையே தருகின்றது. ஆனால் நற்றிணையின் உரைகாரரே பெண்தன்மையில் குறைவுபட்ட அல்லது வறுமைபட்ட என்று பொருள்படுத்துகின்றார். பிறகு இது வாயில் வேண்டிவந்த பாணனுக்குத் தலைவி கூறிய மறுமொழி என்று துறையைக் கட்டமைக்கிறார். வறுமைபட்ட பெண் பரத்தையாக அல்லது பரத்தையின் மகளாகவே இருக்க வேண்டும் என்கிற உரைகாரரின் நோக்கு மேட்டிமைத்தனம் வாய்ந்ததாகவே உள்ளது. இந்நிலையில் நடைமுறையில் உள்ள சடங்கினைக் காட்டி சக்திஜோதி இக்கவிதையினை விளக்கியுள்ளது இப்பாடலை புதிய நோக்கில் அணுக உதவுகின்றது.

பொன்முடியாரின் ஈன்றுபுறந்தருதல் என்தலைக் கடனே என்ற பாடல், காவற்பெண்டு எழுதிய புலியிருந்து போகிய கல்லளை போல ஈன்றவயிறோ இதுவே தோன்றுவன்மாதோ போர்க்களத்தானே என்ற பாடல் இவ்விரண்டு பாடல்கள் குறித்த பதிவுகள் சிந்தனைக்குரியவை. பொன் முடியார் ஆணா பெண்ணா என்கிறவிவாதம் நடந்துள்ளதாகக் குறித்துள்ளார். அது குறித்து விளக்கியிருக்கலாம். ச.வையாபுரிப்பிள்ளை பாட்டும் தொகையும் நூலில் உள்ள பெண்பாற் புலவர்கள் பட்டியலில் இவர்பெயர் இடம்பெறவில்லை. உ.வே.சா.வின் பதிப்பிலும் பாடினோர் வரலாற்றில் பெண் என்று குறிக்கவில்லை. மகடூஉ முன்னிலை நூலில் பெண்பாற்புலவராகக் குறிக்கப்பட்டிருக்கலாம். வீரம், மறம் என்றெல்லாம் புனைந்துரைக்கப்படுகின்ற போர் குறித்த பெண்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பது குறித்த சக்திஜோதியின் கருத்துகள் கவனம் பெறத்தக்கவை. ஏனென்றால் பெண்ணை இச்சமுதாயம் தொடர்ச்சியாக ஒரு சார்புயிராகவே கட்டமைத்து வந்துள்ளது. இந்த நூலிலும் அக்கருத்து பரக்க பேசப்பட்டுள்ளது. பெண் என்பவள் எப்போதும் யாருக்காகவேனும் காத்திருப்பவளாகவே இருப்பது. இந்த நிலையில் போர் என்பது எத்தகு மனநிலையினைப் பெண்களுக்கு ஏற்படுத்தியிருக்கும். இதில் பொன்முடியாரின் பாடலைப் பொறுத்தவரை முதலடிக்கு இவர் அளித்திருக்கும் விளக்கமே அப்பாடலின் முழுக்கருத்தையும் கூறிவிடுகிறது. என் தலைக்கடன் என்பது ஒரு பெண்ணிற்கு வாரிசினை உருவாக்கித்தருவதே பெருங்கடனாக இருப்பதனை உணர்த்துகிறது. தந்தை, கொல்லன், வேந்தனுக்கெல்லாம் தலைக்கடன் என்றில்லாமல் பொதுவாகக் கடன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்கிறார். பெண்ணை மையமிட்டே சமூகம் இயங்கியிருக்கின்றது. எனவே பெருமித உணர்வில் இப்பாடல் எழுதப்பட்டிருக்கிறது. பிறிதொரு நிலையிலான பெருமிதத்தை காவற்பெண்டின் பாடல் உணர்த்துகின்றது. குறிப்பாகத் தன் உடலைக் கொண்டாடுதல் என்று சக்திஜோதி அளித்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. போர், அதனால் ஏற்படுகின்ற உயிரிழப்புகள் பெண்களுக்குத் துன்பத்தைத் தருகின்றவையாக இருப்பினும் அதனை அவள் ஏற்றுக்கொள்ளவும் கொண்டாடவும் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்கிற கருத்தினை சக்திஜோதி வலிமையாக முன்வைக்கிறார். இது குறித்துமேலும் விவாதிக்க வேண்டிய தேவையுள்ளது.

இறுதியாக வைத்துள்ள ஔவையார் குறித்த கட்டுரை இந்நூலிற்கு மகுடம். இருப்பதிலேயே பெரிய கட்டுரை. கிரேக்கப் பெண்கவிஞர் சாப்போவின் கவிதைகள், ஹீப்ரு மொழிக்கவிஞர் தெபோரா, சமஸ்கிருத மொழியில் கல்வியறிவு பெற்ற பெண்களான கேலா, முத்கலானி, சுலபா, அபாலா…,தேரிகாதை பாடிய சியாமா, உத்தரா, வட்டேசி சிம்ஹா, காதா சப்த சதியில் இருக்கன்ற ரோஹா, ரேவா, நாதா எனத் தொன்மை மொழிகள், மதங்கள் சார்ந்த பல பெண்பாற்புலவர்களின் கவிதைகளையும் கருத்துக்களையும் எடுத்துக்காட்டி ஔவையின் முட்டுவேன் கொல் தாக்குவென் கொல் கவிதையை இவர் விவரித்திருக்கும் முறை சக்திஜோதியின் பரந்துபட்ட வாசிப்பினைக் காட்டுகின்றது.

இதை தன்னுடைய முதல் உரைநூல் என்று சக்திஜோதி குறித்துள்ளார். இந்த ஆய்வுப் பரப்பில் இவர் இன்னும் பயணிக்க வேண்டும். அதற்கான தேவை உள்ளது. பேட்ரிசியா மேயர் தன்னுடைய  நூல் குறித்த கூறியுள்ள முடிவு இந்நூலுக்கும் பொருந்துகின்றது.

This book is an investigation of some possibilities – not a history of women’s writing; indeed, explicitly anti historical in orientation, but an examination of the ways the life of the imagination emerges in the work of women writing prose directly as women.                                                                                                               (1975:18)

துணை நூல்கள்

1914 நற்றிணை மூலமும் உரையும், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (உ.ஆ.), சைவ  வித்யாநுபாலனயந்திரசாலை, சென்னை.

1965   Provisions: A reader from 19th century American women (1781 – 1914), Judith fetterly,  Indiana university press, Bloomington

1975    The Female Imagination: A Literary and psychological investigation of women’s writing, Patricia Meyer Spacks, Newyork.

2016    தமிழ்த் தொகுப்பு மரபு எட்டுத் தொகை பனுவல்கள், சுஜா சுயம்பு, சந்தியா பதிப்பகம்,  சென்னை

2017    சங்கப் பெண்கவிதைகள், சக்திஜோதி, சந்தியா பதிப்பகம், சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.