தேர்தல் திருவிழா!
பவள சங்கரி
தலையங்கம்
இந்திய சனநாயகத்தில் தேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது! தற்போது 5 மாநிலங்களில், (மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீசுகர், தெலுங்கானா) தேர்தல் வர இருக்கிறது. அடுத்த ஆண்டு 2019இல் பாராளுமன்றத் தேர்தலும், அதோடு இணைந்து மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பாராளுமன்றத்துடன் சேர்த்து தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல்கள் எப்படி நடந்தாலும் ஊடகங்களின் துணையோடு தம்மைப் பூதாகரமாகக் காட்டிக்கொண்டுதான் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தலைச் சந்திக்கின்றனர். முன்பு தனி நபர்கள் வாக்காளர்களுக்கு வாக்களிக்க பரிசுகளாக காதணியிலிருந்து காலணி வரை, குக்கரிலிருந்து தட்டு முட்டு சாமான்கள் வரை பரிசுப்பொருட்களாகக் கொடுத்து வாக்குகளை வாங்கும் நிலை இருந்துவிட்டது. ஆனால் இன்றைய சட்டப்படி வாக்களிக்க பரிசுப்பொருட்களை பெற்றாலும், கொடுத்தாலும் இரண்டாண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. வாக்களிக்க பரிசுப் பொருட்களைக் கொடுக்கும் கட்சிகளை முழுவதுமாகவே தேர்தலிலிருந்து தடை செய்யலாம். தனி நபர்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை தரலாம். தன்னார்வம் மிக்க கட்சி சார்பற்ற தனி நபர்களும், தொண்டு நிறுவனங்களும் இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் மீது அக்கறை கொண்டு தங்களுக்குக் கிடைக்கக்கூடியத் தகவல்களை ஊடகங்கள் மூலமாக பகிரங்கப்படுத்த வேண்டியது அவசியம். வழக்கு மன்றங்கள் இது போன்ற வழக்குகளைத் தாமாகவே முன்வந்தும் அந்த வழக்கை ஏற்று நடத்தும். குற்றம் செய்பவர்களை தண்டனைக்கு உள்ளாக்கும். கையூட்டு பெறும் அல்லது கையூட்டு அளிக்கும் கயவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையும், உரிமையும் ஆகும்.
ஊழலற்ற ஆட்சியும், கரை படியாத நிர்வாகமுமே இன்றையத் தேவை. வாக்களிக்க கையூட்டு பெறுவதும், கொடுப்பதுமே இதன் முதற்படி என்பதால் அதிலிருந்தே அதனை வேரறுக்கும் பணியைத் தொடங்க வேண்டும். இந்தியாவிலேயே ஒன்றுபட்ட ஆந்திரத்தில்தான் தேர்தலில் மிக அதிக பணப்புழக்கம் இருந்ததாகவும், தற்பொழுது தேர்தல் நடக்கவிருக்கும் தெலுங்கானாவில் மிக அதிக பணப்புழக்கம் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தெலுங்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இதற்குப் பொறுப்பாகிறார்கள் என்பதை உணர்ந்து, ஊழலற்ற அரசை உருவாக்க ஆவண செய்ய வேண்டியது இன்றைய அத்தியாவசியத் தேவை! சனநாயகம் நம் கையில் என்பதை பொது மக்கள் கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலகட்டமிது என்பதை உணர வேண்டும். அல்லது சம்ப்பந்தப்பட்ட நேர்மையான சமூக ஆர்வலர்கள் மக்களுக்கு இதனை உணர்த்தி விழிப்படையச் செய்ய வேண்டும். தெற்கிலிருந்து வடக்கு வரை பரவ வேண்டிய பேரலையாக இது உருவாக வேண்டும் என்பதே மக்களின் பேராவல். சனநாயகம் வெற்றி பெற பாடுபட வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை!