படக்கவிதைப் போட்டி – 184
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
பிக்சர்ஸ்க்யூஎல்எஃப்எஸ் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.10.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
பந்தென்று அடிப்பாயோ பரிதியை
மாலைச் செங்கதிரின்
மங்கும் இருள் சிவப்பில்
களமாடும் வெறிகொள் வீரர்
பறிபோகும் காலம்தன்னை
வசப்படுத்தும் இறுதிப் போரில்
காற்றை கிழித்தெறிந்து
ஆற்றல் மிகக்கொண்டு
ஏற்றம் மிகக்கொண்டு
மாற்றம் பலகண்டு- இக
தோற்றம் பல மாற
பந்தென்று அடிப்பாயோ பரிதியை
தொட்டிடலாம் சூரியனை…
வந்திடும் வெற்றி யென்றேதான்
வாய்ச்சொல் மட்டும் பேசிவிட்டு
மந்தி ரித்த கோழிபோல
முடங்கிக் கிடந்தால் மூலையிலே,
வந்தி டாதே வெற்றியதனால்
வருந்தி நீயும் முயன்றிடுவாய்,
அந்த ரத்துச் சூரியனும்
அண்மையில் வந்திடும் தொடும்படியே…!
செண்பக ஜெகதீசன்…
காற்றில் ஏறி வானில் மிதப்போம்.
சி. ஜெயபாரதன்.
நூல்கட்டிக் காற்றில்
பறக்க பட்டம் விட்டோம்
கால்கள் தவ்வி காற்றில் ஏறிட
இறக்கை தேடினோம்.
பறக்கும் பட்டத்தில் மலை மீது
நின்று குதித்து யாம்
பயணம் செய்தோம்.
விமானம் செய்து உலகம்
சுற்றி வந்தோம்.
சூரிய சக்தியில் ஊர்தி ஓட்டி
ஒருநாள் யாம்
உலகளந்தோம் !
ராக்கெட் வடித்து நிலாவுக்கு
சுற்றுலா போவோம் !
செந்நிறக் கோளைச் சுற்றி
வந்து யாம்
சந்திரனில் களைப்பாறி
புவிக்கு மீள்வோம்,
நியூட்டன் காட்டும்
ஈர்ப்பு விசைக்கு அஞ்சோம்,
அடிபணியோம்,
எதிர்த்துப் பறப்போம்,
பிரபஞ்சத் துக்கு
சுற்றுலா போவோம்,
+++++++++
எண்ணியது நடந்துவிட்ட துள்ளலில்
வசப்பட வானமும்
மகிழ்ச்சியின் பெருவெள்ளமும்
இருள் சூழ்ந்துவிட்ட பூமியில்
வெளிச்சத்தை வரவேற்க
எண்ணில்லா உயிாினங்கள்
சூரியனை எழுப்பும்
ரகசியங்கள் பேசும்
இயற்கையின் உள்ளொளியில்
உன்னை உணரும் தருணம்
இறை தரிசனம்
உள்ளமது உணர்ந்துவிட்ட
ஆனந்த கடலில்
முத்தெடுக்க முயலும் உலகில்
முயற்சியின் வெற்றியில்
பூமியை இழந்த கால்களோடு
வானத்தை நோக்கிய கைகளோடு
தலைமுறையின் தன்னம்பிக்கை
என்றும் எழும் சூாியனாய் நீ!