Tag: முனைவர் மு.பழனியப்பன்

  • திருவாசக முற்றோதல்

    திருவாசக முற்றோதல்

    முனைவர் மு. பழனியப்பன்,
    தமிழ்த்துறைத் தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

    மாணிக்கவாசகர் இறை அனுபவத்தில்  எழுதிய திருப்பனுவல் திருவாசகம். உலகப் பற்றுகளின் ஈர்ப்பில் சுவைத்து மகிழ்ந்து கிடக்கும் ஆன்மாக்களை, அப்பற்றில் இருந்து விடுவித்து,  சிவனைப் போற்றிட, எண்ணிட, துதித்திட, நெஞ்சமதில் ஏத்திட, அவனையே அடைந்திடச் செய்யும் அருள்வாசகம் திருவாசகம் ஆகும். திருவாசகம் மனிதர் ஒவ்வொருவரும் பாடத்தகுந்த அருள் நூல்.  குழுவாக முற்றோதல் செய்வதற்கும் உரிய நூல். ஒரே நாளில் இறைவன் கழலை இறைஞ்சிடக் கிடைத்த நன்னூல். படிப்பவரும், கேட்பவரும் பொருளோடு உணர்பவரும் முக்தி என்னும் நிறைநிலையை அடையச் செய்யும் பெருவழியைக் காட்டுவது திருவாசகம் ஆகும்.

    திருவாசக முற்றோதலை முதலில் நிகழ்த்தியவர் மாணிக்கவாசகரே!

    மாணிக்கவாசகர் தாம் இருந்த இடங்களின் சூழுலுக்கு ஏற்ப, பற்பல பாடல்களை அவ்வப்போது பாடி உருகுகிறார்.  அவர் பாடிய பாடல்கள் அனைத்தையும் ஒருசேர சொல்ல, கேட்க ஒரு வாய்ப்பும் அமைகிறது. மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் இருந்தபோது, அந்தணர் ஒருவர் அவரிடத்தில் வந்து அவர் பாடிய அத்தனைப் பாடல்களையும் பாடச் சொல்லிக் கேட்கிறார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மாணிக்கவாசகர் தாம் பாடிய பாடல்களைப் பாடுகிறார். அவற்றைக் கேட்டு அவ்வந்தணர் ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறார்.

    திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல எழுதிக்  கொண்ட அந்த அந்தணர் ”பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று  கேட்கிறார்   மாணிக்கவாசகர் அப்போது புதிதாக திருக்கோவையார் பாடுகிறார். அதனையும் அந்தணர் எழுதிக் கொண்டார். பின்பு அவர் மறைந்து போனார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அடுத்த நாள், அந்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் தில்லைச் சிற்றம்பலத்தில்  நடராசப் பெருமான் சன்னதியின் திருப்படியில் இருப்பதை  தில்லை வாழ் அந்தணர்கள் கண்டனர்.  சிற்றம்பலமுடையான் திருவடியில் ஒரு சுவடி உள்ளது என்று அனைவருக்கும் அவ்வதிசயத்தைச் சொல்லினர். அனைவரும் பார்த்திருக்க ஓலைகள் பிரித்துப் படிக்கப்பெற்றன.  அவ்வோலையின் நிறைவில் ”திருவாதவூரார் சொற்படி திருச்சிற்றம்பலமுடையான்” என்று  ஒப்பம் இடப்பெற்று ஓலைச்சுவடிகள் நிறைவு செய்யப்பெற்றிருந்தன.

    திருவாதவூரரைக் கண்டடைந்து, இச்செய்தியைத் தில்லை வாழ் அந்தணர்கள் தெரிவித்தனர். அவரும் கோயில் வர இச்சுவடிப் பாடல்கள் உணர்த்தும் பொருள் யாது என்று கேட்டனர். அதற்கு மாணிக்கவாசக சுவாமிகள்  இப்பாடல்கள் அனைத்திற்கும் பொருள் ஆடல் கூத்த பிரானாகிய நடராசப் பெருமானே” எனக் காட்டினார்.  திருவாசகத்தின் பொருள் நடராசப் பெருமான் என்பது அறியத்தக்கது.

    மேலும் சில நாள்களில் இவ்வோலைச் சுவடிகள் யாது காரணத்தாலோ தில்லையில் உள்ள நீர்நிலை ஒன்றில் இடப்பெற்று அவை அம்பலத்தாடியார் மடத்து அன்பர்களிடத்தில் கிடைத்தது. அவர்கள் அங்கு வைத்து அச்சுவடிகளைப் பாராயணம் செய்து வந்தனர். அவர்களை அங்கிருக்க விடாது காலச் சூழல் விரட்ட  புதுச்சேரிக்கு அவ்வோலைகட்டுடன் அவர்கள் வந்து சேர்கிறார்கள். புதுச்சேரியின் செட்டித் தெருவில் அம்பத்தடையார் மடத்தில்  திருச்சிற்றம்பலமுடையான் எழுதிய திருவாசகச் சுவடிகள் உள்ளன. இது ஒரு வரலாறு.

    இவ்வரலாற்றின் வழியாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி திருவாசகம் முதன் முதலாக முற்றோதுதலாக மாணிக்கவாசகராலேயே செய்யப் பெற்றது என்பதுதான். எனவே முதல் திருவாசக முற்றோதலைத் தொடங்கியவர் மாணிக்கவாசகரே ஆகின்றார். மாணிக்க வாசகர்  சொல்லச் சொல்ல இறைவன் எழுதிய நிலையில்  அதுவே முதல் முற்றோதல் ஆகின்றது.

    திருவாசகம் ஓதும் முறை

    பன்னிரு திருமுறைகளையும் பண் அடிப்படைடியில் ஓதுவார்களே தமிழகத்தில் பாடி  வந்துள்ளனர். குறிப்பாக இராசராசன் காலத்தில்  பெருமளவில் ஓதுவார்கள் நியமிக்கப்பெற்று பன்னிரு திருமுறை ஓதும் முறைமை இருந்துள்ளது. தற்காலத்திலும் ஓதுவார்கள் உரிய பண்ணிசைப்படி திருமுறைகளை ஓதி வருகின்றனர். பஞ்ச புராணம் பாடும் நடைமுறையும் உள்ளது. பஞ்சபுராணம் என்பது  ஐந்து பாடல்களைப் பாடுதல் ஆகும். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு பாடலை பாடும் முறைமை பஞ்ச புராணம் பாடுதல் என்றழைக்கப்படுகிறது,

    திருமுறைகளை ஓதுவார்கள் ஓதுவதில் பல நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.  திருமுறைகளைப் பாடுபவர்கள் நீராடி , தூய ஆடை உடுத்தி, திருநீறு அணிந்து  பண் அடைவுடன் இறைவன் முன் ஓதுதல் வேண்டும். சிவ தீட்சை பெற்றிருக்க வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.  திருமுறை ஓதத் தொடங்கும்போதும் நிறைவு செய்யும்போதும் திருச்சிற்றம்பலம் என்று  சொல்லுதல் வேண்டும். திருமுறை நூல்களுக்கு பட்டு சாத்தி அர்ச்சனை வழிபாடு முதலியன செய்து பாடுதல் வேண்டும். திருமுறை நூல்களை ஆண்டவனாகவே எண்ணுதல் வேண்டும்.

    திருவாசகத்தைப் பாடுவதற்கு பண் உறுதி செய்யப்படவில்லை.  திருவெம்பாவைப் பாடல்களை மார்கழி மாதத்தில் நாள்தோறும் பாடும் முறைமை ஓதுவார்களிடத்திலும், மக்களிடத்திலும் ஏற்பட்டன. இதுவே திருவாசக முற்றோதல் மக்களைச் சென்றடைந்ததற்கான முதல்படியாகும் மார்கழி மாதத்தில் மட்டுமே பாவை நோன்பாக திருவெம்பாவை அதிகாலையில் பாடப்படவேண்டும். மற்ற நாள்களில் திருவெம்பாவையைப் பாடும் போது  அதில் இடம்பெறும்  எம்பாவாய்   மேலும்  சைவ அமைப்புகள் குறிப்பாக  என்ற சொல்லை வெளிப்பட பாடுதல் கூடாது என்பது மரபு.

    பன்னிரு திருமுறை மன்றங்கள் போன்ற அமைப்பின திருமுறை முற்றோதலைச் செய்விக்கத் தொடங்கின.  தேவாரப் பாடல்களை எளிமையாக மக்கள் பண்ணில் பாடி வழக்கிற்குக் கொண்டுவந்தவர்  தருமபுரம் சுவாமிநாதன். இவர் பன்னிரு திருமுறைகள் அனைத்தையும்  பாடி நிலைத்தவர் ஆவார். இவர் வழியில் பன்னிரு திருமுறைகள் எளிய மக்களைச் சென்றடைந்தன. எளிய மக்களும் திருமுறைகளைப் பாராயணம் செய்ய வந்தனர்.

    மனன முறை என்றொரு முறையும் திருமுறைகளுக்கு உண்டு. மனப்பாடம் செய்தல் போல பாடல்களைப் படிக்கும் முறை. முற்றோதலில் படிக்கவும் செய்யலாம். பண்ணுடன் பாடவும் செய்யலாம். அவரவர் ராகத்திற்கு ஏற்ப இசைவித்தும் கொள்ளலாம் என்ற நடைமுறை மக்களிடத்தில் தற்போது நிகழ்ந்து வருகின்றது.

    முற்றோதல் செய்யும் முறை

    திருவாசகத்தை முற்றோதல் செய்கின்ற போது திருவாசகத்தை மட்டும் படிக்காமல் திருவாசகத்திற்கு முன்னும் பின்னுமான திருமுறைகளை இணைத்துப் பாடுதல் வேண்டும். கடவுளைத் துதிக்கும் நடைமுறைகளைச் செவ்வனே செய்து, கணபதி வணக்கம், திருவிளக்கு வணக்கம், நால்வர் துதி, சந்தானாச்சாரியர்கள் துதி, பொது விண்ணப்பம், அடியார் விண்ணப்பம்,  ஏழு திருமுறைகளில் இருந்து  ஒவ்வொரு பதிகத்திற்கும் உரிய முதல், நிறைவுப் பாடல்கள் ஆகியன பாடப்பட வேண்டும்.  இதன்பின் திருவாசகப் பகுதிகள் முழுவதும் பாடப்பட வேண்டும். அதன்பின் திருக்கோவையார், ஒன்பதாம் திருமுறை , பத்தாம் திருமுறை, பதினோராம் திருமுறை, பன்னிரண்டாம் திருமுறை ஆகியவற்றில் இருந்து  ஒரு ஒரு பாடல்கள் பாடப்பட வேண்டும். இதன்பின் இறைவிக்கான பாடல் அபிராமி அந்தாதி போன்றவற்றில் இருந்து பாடலாம். இதன்பின் திருப்புகழ் இசைக்கப்பட வேண்டும். பின் வான்முகில் வழாது பெய்க என்ற  வாழ்த்துப் பாடல் பாடப்பெற்று   அன்னம் பாலித்து, அதற்கான தேவாரம் பாடி, தீபமேற்றித் துதித்து வழிபட்டு முற்றோதலை நிறைவு செய்யவேண்டும்.

    முற்றோதலில் பங்கு பெறும் அன்பர்கள் முற்றோதலிலேயே முழுக் கவனத்துடன் செயல்பட வேண்டும். பசி, தூக்கம், ஆசை , அலைப்புறுதல் மறந்து  ஒரே நினைவாய்ப் பாட வேண்டும். கொடுப்பனவற்றை வாங்கவதற்காகவும், உண்பதற்காகவும் நேரம் கழிகையில் திருவாசகத்தின் முழுமையைப் பாட முடியாதவர்களாக ஆகிவிடுகின்றோம். எனவே அதிகாலை தொடங்கி  விரதமாக இருந்து திருவாசகம் முற்றோதலை நடத்துவது சிறப்பு.

    திருவாசகம் முற்றோதல் செய்தவர்கள்

    வள்ளல் பெருமான் திருவாசகம் முற்றோதலை தன் மணநாளில் மனைவிக்கு முன்னர் நிகழ்த்தினார் என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டிய முக்கியமான முற்றோதல் நிகழ்ச்சியாகும்.

    வான்கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
    நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
    தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
    ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

    என்று வள்ளல்பெருமான் தான் கலந்து திருவாசகத்தைப் பாடி மகிழ்ந்துள்ளார். கரும்புச் சாறு, தேன், பால், செழுங்கனிகள்  எல்லாவற்றின் சுவையை ஒன்றாக்கினால் எவ்வகை இனிப்பு கிடைக்குமோ அத்தகயை இனிப்பினைச் சுவைக்கத் தருவது திருவாசகம் என்கிறார் வள்ளல் பெருமான்.

    ரமண மகரிஷி தன் தாயின் நிறைவுப் பகுதியில் திருவாசகத்தைப் பாடிக் கொண்டிருந்தார். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் நிறைவுக் காலத்தில் உ.வே.சாமிநாதர் திருவாசகம் பாடிக்கொண்டிருந்தார். உ.வே.சாவின் நிறைவுக் காலத்தும் திருவாசகம் பாடப்பெற்றது. ஆன்மாவைக் கடைத்தேற்றும் வண்ணமாக அதன் நிறைவுக் கட்டத்தில் திருவாசகம் பாடப்படுவது மறுமை கொள்ள வைக்காது என்பதே இதன் உட்பொருளாகும். எனினும்  வாழ்வின் நிறைவில் பாடப்படுவது திருவாசகம் என்ற எண்ணம் தமிழகத்தில் ஒருகாலத்தில் இருந்தது. தற்போது மணிவிழா,மணவிழா, திருவிழாக்களில் திருவாசகம் முற்றோதல் இசைக்கப்படுவது அது மங்கலம் நிறைந்த நன்னூல் என்பதைக் காட்டுவதாக உள்ளது.

    தூண்டல்கள்

    திருவாசகத்தை முற்றோதல் செய்யவேண்டும் என்று மாணிக்கவாசகரே கருதியுள்ளார்.

    பாடவேண்டும் நான் போற்றி! நின்னையே
    பாடி,நைந்து நைந்து, உருகி, நெக்கு நெக்கு,
    ஆட வேண்டும், நான் போற்றி! அம்பலத்து
    ஆடும் நின் கழல், போது நாயினேன்
    கூட வேண்டும் நான், போற்றி! இப்புழுக்
    கூடு நீக்க எனைப் போற்றி! பொய்யெலாம்
    வீட வேண்டும் நான் போற்றி! வீடு தந்து
    அருளு போற்றி! நின் மெய்யர் மெய்யனே! (திருச்சதகம்  பா. எ 100)

    என்று மாணிக்கவாசகர் சிவபிரான் புகழைப் பாடி ஆடிக் கூடி வீடு பெற  விரும்புகிறார். இதனைப் படிப்போரும் கேட்போரும் பாடி ஆடி சிவனை நாடி நிற்கின்றனர்.

    திருவா சகம் இங்கு ஒருகால் ஓதிற்
    கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
    தொடுமணற் கேணியிற் சுரந்துநீர்ப் பாய
    மெய்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
    அன்பர் ஆகுநர் அன்றி
    மன்பதை உலகில் மற்றையர் இலரே

    என்று நால்வர் நான்மணி மாலையில் சிவப்பிரகாச சுவாமிகள்  திருவாசகம் படிக்கும்போது ஏற்படும் மன, உடல் மாற்றங்களைக் குறிப்பிட்டுத் திருவாசகத்தை முற்றோதல் செய்யத் தூண்டுகிறார்.  கருங்கல் மனமும் திருவாசகம் படித்தால் கேட்டால் அதன் கடினத் தன்மையில் இருந்து கரைய ஆரம்பிக்கும். மேலும்  உடலில் மயிற்கூச்சரிப்பு ஏற்பட்டு விதிர் விதிர்ப்படையும்.  இவையெல்லாம் திருவாசகத்தினால் உடலும் மனமும் பெறும் மாற்றங்களாகும்.

    திருவா சகமெனும் பெருநீர் ஒழுகி
    ஓதுவார் மனமெனும் ஒண்குளம் புகுந்து
    நாவெனு மதகில் நடந்து கேட்போர்
    செவியெனு மடையின் செவ்விதின் செல்லா
    உளமெனு நிலம்புக ஊன்றிய அன்பாம்
    வித்திற் சிவமெனு மென்முளை தோன்றி 10
    வளர்ந்து கருணை மலர்ந்து
    விளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே

    என்பதும் நால்வர் நான்மணி மாலையில் இடம்பெறும் மற்றொரு பாடல் ஆகும்.  திருவாசகம் என்னும் பெரு நீர்  பாடுபவர்தம் மனம் என்னும் குளம் புகுந்து நிறைவிக்கும்.  மேலும் பாடுபவர்தம் நாக்கு என்னும் மதகில்நடந்து கேட்போர் செவிகள் எனும் மடைகளில் தேங்கி  அவர்களின் உள்ளம் என்னும் நிலத்தைச் சென்று சேரும். அதன்பின் அன்பு என்னும்  சிவ வித்தினை விதைத்து, மென் முறை வரச் செய்து கருணை என்னும் மலர் தந்து முக்தி என்னும் பயன் கனியைத் தந்து நிற்கும் என்றும் பாடுகிறார் சிவப்பிரகாசர்.

    திருவார் பெருந்துறைச் செழுமலர்க் குருந்தின்
    நிழல்வாய் உண்ட நிகரில்லா னந்தத்
    தேன்தேக் கெறியுஞ் செய்யமா ணிக்க
    வாசகன் புகன்ற மதுர வாசகம்
    யாவரும் ஓதும் இயற்கைக் காதலிற்
    பொற்கலம் நிகர்க்கும் பூசுரர் நான்மறை
    மட்கல நிகர்க்கும் மதுர வாசகம்
    ஓதின் முத்தி உறுபயன்
    வேதம் ஓதின் மெய்பயன் அறமே.

    என்ற சிவப்பிரகாசர் பாடல் யாவரும் ஓதும் இயல்பினை உடையது திருவாசகம்  என்று குறிப்பிடுகிறது. மேலும் அது மதுர வாசகம், பொன் கலம் போன்றது என்று அதன் உயர்வை அளக்கின்றது. மற்ற வாசகங்கள்  வேதம் உட்பட அனைத்தும் மண்கலம் போன்றன.  ஓதினால் முக்தி உறுதி என்றும் உரைக்கின்றது.

    இவ்வகையில் திருவாசகம் முற்றோதல் பால் பாகுபாடு இல்லாமல், தூய்மைச் சைவ நெறி உடைய அனைவரும் பாடலாம் என்று மக்கள் மையமாக திருவாசக முற்றோதல் விளங்குகிறது.  பாடுவது கடினம். படிப்பது எளிது. இனிது என்ற அடிப்படையில்  மக்கள் சங்கம் அனைத்தும் பாடும் படியான அருள் கருணை இக்காலத்தில் நமக்குத் திருவாசக முற்றோதல் மூலம் கிடைக்கின்றது. அதனை சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து, நன்முறையில் செய்து முக்தி பெறுவோம்.

    Share
  • இணையமும் நவீன இலக்கியப் போக்குகளும்

    -முனைவர் மு.பழனியப்பன்

         தமிழ் இணைய உலகு பரந்துபட்டது. அதன் விரிவு என்பது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களை உள்ளடக்கி வளர்ந்துவருகிறது.

          சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பகுதிகளின் தமிழ்வளர்ச்சியை வெளிப்படுத்தும் ஒன்றிணைக்கும் ஊடகம் இணையம் மட்டும்தான். இவ்வகையில் அயல்நாடுகளின் இணையத் தமிழ் வளர்ச்சி ஒரு புறமும், தாயகமான தமிழ்நாட்டின் இணைய வளர்ச்சி ஒருபுறமும்  வளர்ந்து வந்தாலும் இவையிரண்டும் ஒன்றுக்கொன்று சார்ந்தும், இணைந்தும் இயங்கும் நெருக்கத்தை இணையம்சார் போட்டிகள், இணைய இதழ்கள் அமைத்துத் தந்துவிடுகின்றன. இதன் காரணமாக இணையாத தமிழ்உள்ளங்கள் இணைந்து கரம் கோக்கும் புதுஉலகம் பிறந்துள்ளது.

    சவாலே சமாளி

          இருப்பினும் இணையத்தின் வளர்ச்சி ஒரு மூடுபொருளாகவே இருக்கிறது. இதற்கான காரணம் யாதென ஆராய வேண்டும். முக்கியமாக இணைய எழுத்தாளர்கள் தங்களை, தங்களின் தகவல்களை வெளியிடாமை அல்லது வெளிப்படுத்தாமை என்பது முக்கியமான காரணமாக அமைகின்றது. தம் எழுத்துகளை இணைய எழுத்தாளர்கள் கொண்டாடாமையும் ஒரு காரணம். நூல் வெளியீடு, பாராட்டுவிழா, விருதளிப்பு எதுவும் இணைய எழுத்திற்கு இல்லை என்பது மிக முக்கியமான காரணம். யாதாவது ஓர் அமைப்பு இணைய எழுத்துகளைப் பரிசளித்துப் பாராட்டி வெளிப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தினால் இக்குறை நீங்கும். இணைய எழுத்துக்கான தனித்தன்மை எதுவும் இல்லை என்பது இன்னுமொரு குறை. இணையத்தி்ல் எழுதி அச்சாக்குவது அல்லது அச்சாக்கி இணைய எழுத்தாக்குவது என்ற நிலையில் இணைய எழுத்திற்கான தனித்தன்மை இழக்கப்பெறுகிறது. இற்றைப் படுத்தப்படாமை என்பதும் மற்றொரு குறை. வலைப்பூ, முகநூல். இணைய இதழ், என்று பல பரிணாமங்களிலும் இணைய எழுத்தாளர்கள் கால்பதிக்க வேண்டி இருக்கிறது. இதன் காரணமாக ஒன்றை இற்றைப்படுத்துதல் மற்றதை விடுதல் என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.

    இணைய எழுத்து என்பது ஒற்றைத் தன்மை உடையது அன்று. உடனுக்குடன் பதில் அல்லது விமர்சனம் அல்லது தாக்குதல் பெறத்தக்கது. இதன் காரணாக நேரடித் தாக்குதல் நேர வாய்ப்புண்டு. இதனைத் தாண்டி இணைய இலக்கியம் வளர்க்கப்பட வேண்டும். உருப்பட நூல்கள், இணைய நூல்கள், அகராதிகள் போன்றவற்றை இணையம் அளிக்க வேண்டும். பழமையைச் சேகரிக்க வேண்டும். புதுமையைப் புகுத்த வேண்டும். நிகழ்காலத்திலும் நீந்த வேண்டும். இந்த வித்தைகளைக் கற்றவர்கள் இணைய எழுத்தில் நீந்த இயலும். இணையம் என்பது தொழில்நுட்பம் சார்ந்தது. எழுத்து என்பது மனம் சார்ந்தது. மனம் இருப்பவருக்குத் தொழில்நுட்பம் காலை வாருகிறது. நுட்பம் அறிந்தவருக்கு எழுத்துச் செம்மை தவிக்கிறது. ’நீச்சல்காரன்’ தன் தமிழி்ல் தவறுகளைக் குறைக்கவே சொல்திருத்தியை உருவாக்கிக்கொண்டதாக ஒரு பேட்டியில் குறிக்கிறார். நுட்பம் தெரியாதவர் எத்தனை மாதம் யாரிடம் பயிற்சி பெறுவது?

          மேலும் பெரிய பெரிய அச்சு ஊடக வெளிப்பாடுகள் இணையத்திலும் தனக்கென தனித்த நிலையில் இடம்பிடித்து வைத்திருக்கின்றன.  அச்சு ஊடக எழுத்தாளுமைகளும் இணையத்தில் நிலைக்கப் பயிற்சி பெற்றுவிட்டன. கிடைத்த பெருவெளியையும் வாடகைக்கு விட்டுவிட்டு இணைய உலகம் இழந்தது அதிகமாகத் தெரிகிறது.

          இணையத்தில் எழுத்தாளர்களே வாசகர்கள். வாசகர்களே எழுத்தாளர்கள். எழுத்தின் தகுதியும் வாசகத் தன்மையின் தகுதியும் மிஞ்சாமல் சென்று கொண்டிருப்பது மற்றொரு தடை. எழுத்தின் வாசனை கூட வேண்டும். வாசக மனப்பாங்கு ஒழிய வேண்டும்.

          இவ்வளவு இடைஞ்சல்களுக்கு இடையில் நல்லதமிழ் வளர்க்க நான்கு பேர்கள் இல்லை…இல்லை நாலாயிரம் பேர்கள் இணையப் பெருவெளியில், பொதுவெளியில் உலா வருகின்றனர். அவர்கள் அனைவரையும் மதிப்பிட அல்லது ஒருங்கிணைக்க இந்தக் கட்டுரையாளனுக்கு இன்னும் தொடர்ந்து இயங்கும் வாய்ப்பு வரவேண்டும்.

    இணைய எழுத்தின் தொகை

          வலைப்பதிவர் சந்திப்புகள் அபூர்வமாக எங்கேனும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு குறிக்கத்தக்க ஒரு முயற்சி. இதில் மொத்தம் 331 வலைப்பதிவர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றது. இணைய எழுத்தாளர்கள் முன்னூறு பேர் கொண்ட தமிழ்க்குழுமத்தை அது கொண்டு கூட்டுகிறது.

          மின்தமிழ் மடல்குழுமம் ஏறக்குறைய ஆயிரம் மின்னஞ்சல் முகவரிகளை ஒருங்கிணைக்கிறது. இயக்கங்களை ஒருங்கு கூட்டுகிறது.

          தமிழ்மணம். திரட்டி போன்ற வலைப்பூ அரங்கங்கள் தினம் தினம் பலநூறு இடுகைகளை ஒன்று சேர்க்கின்றன.

          விக்கிப்பீடியா ஏறக்குறயை 750 தமிழ் படைப்பாளிகளை அடையாளப்படுத்துகிறது.

          இவற்றின் வழியாக இணையத்தில் எழுதுபவர்கள் தொடர்ந்து இயங்குவதற்கான நிலைக்களன்கள் கிடைத்துள்ளன.

    இணையக் களங்கள்

          இணையக் களங்கள் பல திறத்தினவாகும். வலைப்பூக்கள் (பிளாகர்), இணைய இதழ்கள் (இன்டெர்நெட் மேகசீன்ஸ்), இணையக் குழுமங்கள் (குருப்ஸ்), மின்மடல் குழுக்கள் (இ மெயில் குருப்ஸ்), முகநூல் பதிவுகள். (பேஸ்புக்), கட்செவி (வாட்ஸ்அப் குழுக்கள்), டிவிட்டர் போன்ற பல இணையக் களங்கள் தற்போது விரிந்து வருகின்றன. ஒன்றுக்குள் ஒன்று இணையும் தொடுப்புகள் இவை அனைத்தையும் ஒரு வட்டத்துக்குள் கொண்டு வந்துவிடுகின்றன.

          ஓர் எடுத்துக்காட்டிற்கு வரலாறு.காம் என்ற இணைய இதழை எடுத்துக்கொள்வோம். மிக முக்கியமான அச்சு ஊடகத்தினால் கொள்ளை போகாத பழைய தமிழகத்தின் நினைவுச் சுவடுகளைப் பதிவாக்கி ஆராயும் இதழ்தளம் இதுவாகும். வரலாற்று ஆய்வறிஞர் இராசமாணிக்கனார் வழியில் அவரின் புதல்வர் திரு கலைக்கோவன் அவர்களின் சீரிய வழிகாட்டலில் கமலக்கண்ணன் போன்றோரின்  இணைய உதவியுடன் இயங்கும் இதழ்தளம் இதுவாகும். நேரில் சென்று களஆய்வு செய்து உண்மையை உறுதிப்படுத்தும் மிகச் சிறந்த ஆவணப் பெட்டகம் இதுவாகும்.

          2004ஆம் ஆண்டுவாக்கில் இணையப் பிரவேசம் கண்ட இத்தளம் தனக்கென பல தொடுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. இதழாக்கம் மிக முக்கியமான மையப்பணி என்றாலும் பழைய இதழ்களைச் சேகரித்தல், காணொளிக் காட்சிகளை இணைத்தல், நிகழ்வுகளைப் பதிதல், முகநூல் தொடுப்பு, ஆய்வாளர்சார் தனித் தொடுப்புகள் என்று பல்வேறு இணைய இணைப்புகளை இதனுள் கொண்டுவந்து பழந்தமிழர் பண்பாட்டிற்கு வலிமை சேர்க்கப்படுகிறது. இதனுள் வரலாற்று அறிஞர்கள் கலைக்கோவன், நளினி, குடவாயில் பாலசுப்பிரமணியம் போன்ற ஆய்வறிஞர்களும், இளம் ஆய்வாளர்கள் பலரும் எழுதி வருகின்றனர்.  ஆனால் இதற்கான அங்கீகாரம், மக்கள் கவனிப்பு என்பது எவ்வளவு விழுக்காடு என்று ஆய்ந்தால் அதன் அளவு பெரும்பாலும் ஐம்பது விழுக்காட்டை எட்டாது. பணி செய்பவர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள். கவனியாதவர்கள் கவனியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

        தமிழக இணைய இதழ்களான திண்ணை, முத்துக்கமலம், வல்லமை போன்றன தமக்கான பணிகளைச் செய்துகொண்டே இருக்கின்றன. அதற்கான வாசகர்கள் எவ்வளவு என்பது எண்ணிக்கை அளவில் குறைவே என்பதில் வருத்தம் எழத்தான் செய்கிறது.

     பதிவுகள், சொல்வனம், சிறகு, தங்கமீன், தடாகம், வல்லினம், வார்ப்பு போன்ற அயல்நாடுசார் இணைய இதழ்கள் அயலகத் தமிழ் எழுத்தாளர்களைத் தமிழகத்திற்கு அறிமுகம் செய்கின்றன. இருப்பினும் இந்த இதழ் தயாரிப்பு, இணையச் செலவு இவற்றிற்கு உதவும் உயர்ந்த உள்ளங்கள் எங்கும் இல்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. ’விலையில்லா’ (தமிழகத்தின் நடையில் இலவசம் என்பதை விலையில்லா என்றே குறிக்கப்பெற வேண்டும்) இதழ்களின் விலைமதிப்பில்லா சேவை இதழாசிரியர்களின் நேரத்தை, பணத்தை, மூளையை எடுத்துக்கொள்கின்றன. கிடைத்தது என்ன என்பதற்கான பதில் எதுவும் இல்லை. விலையில்லாமல் இவற்றை விலைக்குக் கொண்டுவந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஆனால் அச்சுஊடகப் பேரரசுகளான குமுதம், ஆனந்தவிகடன் ஆகியனவற்றை இணையத்தில் விலையில்லாமல் வாசிக்க இயலாது. வாழ்க தமிழ்ச்சமூகம்!

    இணையத்தில் எழுதப்படும் எழுத்துகளைப் பெரும்பாலும் இரண்டு வகையாகப் பகுத்துக்கொள்கின்றனர். ஒன்று விமர்சனப்படுத்துவது. மற்றொன்று சொந்தப்படைப்பு. விமர்சனப்படுத்துவது என்பதில் பார்த்த படம், படித்த புத்தகம், அரசியல் நிகழ்வுப் பகடி போன்றன அமைகின்றன. இவையே இற்றைக்கால இணையக் களன்களில் அதிகம். சொந்தமாக எழுதுதல் என்பது படைப்புலகும் சார்ந்தும் அமைகிறது. திறனாய்வு சார்ந்தும் அமைகிறது. இப்பகுதி சற்று பின்தங்கியே உள்ளது.

          இந்த இன்னல்களையும் கடந்து இணையத் தமிழ் உயிர்வாழ்கிறது. அதன் ஆரோக்கியம் மிக முக்கியமானது. அதிவேகம் அதைவிட முக்கியமானது.

    இணையத்தில் பொதுவான எழுத்து

          இணையத்தில் பொதுவான எழுத்தின் தன்மையை அறிந்து கொண்டபின்னே அதன் நவீனத்துவத்தை அறிந்துகொள்ள இயலும். தமிழ் இணையத்தின் முக்கியப் புள்ளிகள் பலர். இக்கட்டுரையாளர் அறிந்த சிலரை இங்கு அறிமுகம் செய்வது இணையம் தாண்டிய வெளியுலகிற்குப் புதிதாக இருக்கலாம்.

    அறிவியல் தமிழ்

          கனடாவில் வாழ்ந்து வரும் மதுரை திருமங்கலத்துக்காரரான ஜெயபாரதன் அவர்கள் அணுசக்தி விஞ்ஞானி ஆவார். எண்பதை நெருங்கும் வயதுடைய அவர் அறிவியல் பணிகளை செய்துகொண்டே தமிழில் அறிவியல் செய்திகளைத் தரும் நிலையில் தன் படைப்பாக்கப் பணிகளை இணையத்தின் வழியாகச் செய்து வருகிறார்.  நெஞ்சின் அலைகள் என்ற இவரின் வலைப்பூ குறிக்கத்தக்க அறிவியல் தமிழ்ப்பணியைச் செய்து வருகிறது. திண்ணை, பதிவுகள் ஆகியவற்றில் இவருக்கென்று தனித்த இடம் உண்டு. இவருக்கென்று தனித்த வாசகர்கள் உண்டு.

    பதிவுகள் இணைய இதழ்

          2000ஆம் ஆண்டு முதல் கனடாவில் இருந்து வெளிவரும் பதிவுகள் இதழின் ஆசிரியர் வ.ந. கிரிதரன் குறிக்கத்தக்க ஒரு படைப்பாளி. நாவல்கள், கதைகள் போன்றவற்றை எழுதுவதுடன், சிறந்த கட்டுரைகளையும் இவர் எழுதி வருகிறார். இவரின் படைப்புகள் இணைய உலகில் பதிவுகள் இதழில் கிடைக்கின்றன.

    தமிழ் மரபு அறக்கட்டளை

          டி.எச்.எப். என்று சுருக்கமாக அழைக்கப்பெறும் தமிழ்மரபு அறக்கட்டளை பல்வேறு தமிழாக்கப்பணிகளைச் செய்துவருகிறது. குறிப்பாக இதன் நிறுவனர் மலேசியா கண்ணன் அவர்கள் வைணவ இலக்கிய ஈடுபாடு மிகுந்தவர். இவரின் ஆழ்வார்க்கடியான் மிகச்சிறந்த வைணவ இலக்கிய வலைப்பூவாகும். தமிழ்மரபு அறக்கட்டளையின் வளமார் பணிகளுக்கு இவர் மூலகாரணம்.

          திருமதி சுபா (சுபாஷிணி) அவர்கள் ஜெர்மனியில் இருந்து தமிழகம் வந்து பல தமிழ் அமைப்புகளுடன் கலந்துரையாடி மின்தமி்ழ் வளர்ப்பவர். இவர் பல வலைப்பூக்களை வைத்துள்ளார். சுபாஸ்டிராவல் வலைப்பூ இவரின் பயணங்களைப் பதிவு செய்வது. இதுபோல் நூல் விமர்சனங்களுக்கு ஒரு வலைப்பூ, உலகப்பண்பாடு சார்ந்து ஒரு வலைப்பூ போன்றனவற்றை இவர் வைத்துக்கொண்டுள்ளார்.

          தமிழ் மரபு அறக்கட்டளை,  சுவடி மின்னாக்கம், நூல் மின்னாக்கம், மரபுக் காப்பகம் போன்ற பல பணிகளைச் செய்துவருகிறது. பிரித்தானிய நூலகம், தமிழ்ப்பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் ஒத்திசைவினைப் பெற்றுள்ளது.

          இதன் வழியாகத் தமிழ்மரபு அறக்கட்டளை குறிக்கத்தக்க வளமார் பணிகளைச் செய்து வருகிறது என்பது பரவலாக்கப் பெறவேண்டியது.

    தமிழக இணைய எழுத்தாளர்கள்

          தமிழகம் சார்ந்த வலைப்பதிவர்கள் பலர் எண்ணத்தக்கவர்கள். திண்டுக்கல் தனபாலன், தேவகோட்டை கில்லர்ஜி, புதுக்கோட்டை முத்துநிலவன், தஞ்சை ஜம்புலிங்கம், ஈரோடு கதிர், ஆதிமூலகிருஷ்ணன், செல்வேந்திரன், கார்க்கி, பட்டர்ஃப்ளை சூர்யா, அப்துல்லா, வடகரை வேலன், சஞ்சய் காந்தி, வெயிலான், நாடோடி இலக்கியன், மோகன் குமார், முரளிக்குமார் பத்மநாபன், ஜெட்லி, ஜெய், ஹாலிவுட் பாலா, தராசு இவர்களுடன் கைகோக்கும் பெண் பதிவர்கள் தேனம்மை லக்ஷ்மணன், சும்மாவின் அம்மா, தமிழ்நதி, ரம்யா, வித்யா, லாவண்யா, கலகலப்ரியா, ரோகிணி, ராஜி, விஜி, சந்தனமுல்லை, ப்ரியா, மேனகாசாத்தியா, அனாமிகா, ஹுஸைனம்மா, ராமலட்சுமி  போன்றோர் குறிக்கத்தக்கவர்கள். தமிழ்ப் பேராசிரியர்கள் வரிசையில் மு. இளங்கோவன் (புதுச்சேரி), ந. இளங்கோ (புதுச்சேரி), எம்.ஏ சுசீலா (மதுரை), கல்பனா சேக்கிழார் (அண்ணாமலை நகர்),  எஸ். சிதம்பரம் (காந்திகிராமம்), மணிகண்டன் (திருச்சி), குணசீலன் (காரைக்குடி) போன்றோர் குறிக்கத்தக்கவர்கள்.

          இவ்வாறு பொதுவான நிலையில் இணையத் தமிழை இயக்கும் இவர்கள் தாண்டி நவீன இலக்கியத்திற்கு வழிவகுக்கும் இணைய இணைப்புகள் உண்டு. அவற்றை ஆராய்வது இக்கட்டுரையின் மையம் ஆகின்றது.

    நவீன இலக்கியப் போக்கும் இணையமும்

          இலக்கியம் ஏதேனும் ஓர் இயக்கம் சார்ந்தே இயங்குகிறது. தற்போது பின்நவீனத்துவ காலம் என்று இலக்கியத்திறனாய்வாளர்கள் கருதுகின்றனர். பின்நவீனத்துவப் போக்கு கி.பி. 1950 முதலே தொடங்கிவிட்டது என்று கருதப்படுகிறது.

          பின் நவீனத்துவ இலக்கியம் என்பது கட்டுடைப்பு இலக்கியம். இதற்கு வாகானது இணையதள எழுத்து. ஒரே தளத்தில் கவிதை எழுதலாம். கதை எழுதலாம். பயணம் செல்லலாம். புகைப்படம் ஒட்டலாம். குறும்படம் சேர்க்கலாம். இந்நிலையில் ஒரே மையத்தை நோக்கிப் பயணிக்காத எழுத்து உலகம் இணைய உலகம். இது பின்நவீனத்துவ போக்கிற்கு மிகப் பொருந்துவது.

           பின் நவீனத்துவம் என்பதை மையத்தை சிதறடித்தல், ஒழுங்கை குலைத்தல், யதார்த்த மீறல், எதிர்நிலையாக்கல், கேள்விகளால் துளைத்தல், கேலிசெய்தல், பன்முகமாய்ப் பார்த்தல், சொற்களால் விளையாடுதல், அதிர்ச்சிகளைத் தருதல், கனவுநிலையில் மொழிதல், பேசக் கூடாதனவற்றைப் பேசுதல் என்ற நிலையில் நோக்கியாக வேண்டும். பெண்ணியம், தலித்தியம், பெரியாரியம் போன்றன பின் நவீனத்துவ சிந்தனை பெற்ற இயங்கள் ஆகும். இவை தமிழ்உலகில் தற்போது ஆட்சி புரிந்து வருகின்றன.

          இணையத்திலும் பின்நவீனத்துவப் பாதை திறக்கப்பெற்றுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்வுகள் போன்ற பல தளங்களிலும் கட்டுடைப்பு நிமிடந்தோறும் நடைபெற்றுக் கொண்டே வருகிறது.

          பின் நவீனத்துவப் போக்கின் சாயல் தெரிந்தோ தெரியாமலோ படைப்பு உலகிலும், திறனாய்வு உலகிலும், நடைமுறை வாழ்விலும் என மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்தே வருகின்றன. இவற்றை ஏற்றே ஆக வேண்டும்.

    சிறுகதை

          இணையத்தில் சிறுகதைகளுக்குத் தனித்த இடம் உண்டு. சிறுகதைகள்.காம், அழியாச்சுடர், எழுத்து போன்ற தளங்களில் பல எழுத்தாளர்களால் சிறுகதைகள் எழுதப்பெற்று வருகின்றன. ஆயிரத்து நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கதைகளைக் கொண்டுள்ளது சிறுகதை.காம் என்ற தளம். இத்தளம் தற்போது கட்டணம் செலுத்தினால் பார்க்கவேண்டிய நிலையை அடைந்துள்ளது.

          தமிழ்ச்சிறுகதையை தமிழ்நாட்டுச் சிறுகதை, இலங்கைச் சிறுகதை, மலேசியச் சிறுகதை, சிங்கப்பூர் சிறுகதை, ஆஸ்திரேலியா சிறுகதை என்று இனம்பிரித்துக் காணமுடியாமல் ஒரு குடைக்குள் அடக்கியிருக்கிறது இணையம்.  இது அமைதியாக நடந்து வரும் பெருவெற்றி.

          இக்கால இணையச் சிறுகதைகளின் தன்மையை அறிந்துகொள்ள சில சிறுகதைகளை ஆராயவேண்டியுள்ளது. கேபிள் சங்கர் எழுதிய ரமேஷும் ஸ்கூட்டிப்பெண்ணும் கதை சற்று மாறுதலானது. ரமேஜஷ் யாருக்கும் உதவாத யாருக்கும் செலவு செய்யாத கஞ்சத்தனம் கொண்டவன். அவனை அலுவலகம் முடித்தவுடன் தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கிளம்புகிறார் அவர். நடுவழியில் ஒரு ஸ்கூட்டியை கிளப்பமுடியாமல் நிற்கிறாள் ஒரு இளம்பெண். நேரம் இரவு நடுநிசியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ரமேஷ் அவரை வண்டியை நிறுத்தச் சொல்லி அப்பெண்ணின் வண்டியைக் கிளப்ப முயற்சிக்கிறான். எரிபொருள் இல்லா நிலையில் அவரின் வாகனத்தில் உள்ள எரிபொருளை ஸ்கூட்டிக்கு மாற்றி அப்பெண்ணை வீடுபோக வழி செய்கிறான். ரமேஷ் செய்த இந்தக் காரியத்தால் நான்கு கிலோமீட்டர் அவரும் அவனும் அவர்களின் வண்டியைத் தள்ளிக்கொண்டே வந்து எரிபொருள் நிரப்பினார்கள். ரமேஷுடம் அவர் கேட்டார்… இளம்பெண் என்றால் வலிய வந்து உதவுவீர்களா என்று. அதற்கு ரமேஷ் சென்னா பதில் கதையின் திருப்புமுனையாகிறது. சார்…. இதேஇடத்தில் பல கற்பழிப்புகள் நடந்திருக்க….என் காதலியை நான் இதே இடத்தில் இழந்திருக்கிறேன். இந்தப் பெண்ணை இழந்து இன்னொரு காதலன் தவிக்கக் கூடாது என்றுதான் செய்தேன் என்றான். இதுவரை இது கதை. இதன் பின்குறிப்பாக ஒன்று தரப்பெறுகிறது. நண்பர் ராஜ் சொன்ன ஒரு சம்பவத்தின் தாக்கத்தில் எழுதியது என்பதே நவீனத்துவத்திற்கு இணையச் சிறுகதை நகர்கிறது என்பதற்கு அடையாளம். (கேபிள் சங்கரின் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதை.)

          க. முருகதாசன் எழுதிய ’ஒரு திருடனும் அவனின் காதலியும்’ என்ற கதை இலங்கை புலம்பெயர் எழுத்து சார்ந்தது. ராஜேஸ்வரன் சந்திரகௌரி ஆகிய இருவரும் பால்யகால நண்பர்கள். அவர்கள் எதிர்பாராத விதமாக இலண்டனில் சந்திக்கிறார்கள். இருவரும் தங்களின் பால்யகால நினைவுகளை மீட்டெடுக்கிறார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும்போது ராஜேஸ்வரன் சந்திகௌரியின் பென்சில் ஒன்றைத் திருடிவிட இதன் காரணமாக அவனுக்குள் ஒரு திருடன் மறைந்திருந்தான். அதனை ஈடுசெய்ய சந்திரகௌரியின் பிறந்தநாள் அன்று ஒற்றை மஞ்சள்நிறப் பென்சிலை வழங்கி அதனுள் தான் செய்த திருட்டுத்தனத்தையும் எழுதி மன்னிப்பு கேட்டிருந்தான். அவள் அதனைப் பெற்றுக்கொண்டு கவனமாகக் கடிதத்தைப் படித்துவிட்டு அவனை அணைத்து அவள் ஒரு கடிதம் தந்தாள். அது 1966ஆம் ஆண்டு எழுதப்பெற்றது. ராஜேஸ்வரனுக்கு அவள் எழுதிய பழைய காதல் கடிதம் அது. ராஜேஸ்வரன் அக்கடிதத்தைப் படித்துவிட்டு அவளின் தோழியிடம் கேட்டான் இன்னும் சந்திரகௌரி திருமணம் செய்து கொள்ளவில்லையா என்று. அத்தோழி ஆம் என்றாள். இதன் பிறகு நடந்ததை நடப்பதை வாசகர் தாமே அறிந்து கொள்ளட்டும். (அக்னிக்குஞ்சு இதழில் வெளிவந்த கதை.)

          ஒருபக்கக் கதைகள், சிறு சிறுகதைகள் என்பனவாகவும் இணையத்தில் எழுதப்பெறுகின்றன. எழுத்து இதழில் பல சிறுசிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு பெண் தன் கணவனை மருத்துவமனையில் சேர்த்திருந்தார். உடல்நலம் தேறி தன் கணவரை வீட்டுக்கு அழைத்துவரும் நிலையில் மருத்துவர் சில ஆலோசனைகளை வழங்கினார். உங்கள் கணவருக்கு ஓய்வு தேவை. சில தூக்க மாத்திரைகளைத் தந்துள்ளேன் என்றார் மருத்துவர். மனைவியும் அவற்றை வாங்கிக்கொண்டுக் கிளம்ப முயன்றபோது மருத்துவர் சொன்னார் இந்தத் தூக்க மாத்திரைகள் உங்களுக்கு என்று … இதனை ஆடிட்டர் செல்வமணி பதிந்துள்ளார்.

          இவ்வாறு தமிழ்ச்சிறுகதையின் நவீனப் போக்குகளுக்கு இணையம் வழி வகுக்கிறது. பல்லாயிரம் கதைகள் எழுதப்பெற்று வருகின்றன. அவற்றைக் காணவும் ஆராயவும் படிக்கவும் நிறைய நேயர்கள் தேவை.

    இணையதளம் உலாவும் கவிதைகள்

          வார்ப்பு என்ற இணையக் கவிதை இதழ் வாரந்தோறும் புதிய புதிய கவிஞர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் இணைந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் இணையத்தில் எழுதுபவர்கள். அவர்களின் கவிதைகள் இணையதளக் கவிதைக்களத்தில் முன்னிற்பனவாகும். நளாயினி தாமரைச் செல்வன் எழுதிய சிறுகவிதைகளில் நவீனத்துவச் சிந்தனை இருக்கிறது.

    தலையில் காக்கா எச்சம்.
    தற்செயல் நிகழ்வு.
    தடை தாண்டு.

    ***

    மழையில் நனை.
    வழிநீர் கரை.
    புதிதாய்ப் பிற.

    பழைய மரபில் இருந்து விடுவித்துக் கொண்ட சிறுகவிதைகள் இவை. சிபிச் செல்வன் என்பவர் சில பின்நவீனத்துவக் கவிதைகளை மொழிபெயர்த்துத் தன் தளத்தில் தந்துள்ளார்.

    பின் நவீன கவிதைகள் – ஆங்கிலம் வழியாகத் தமிழில் : சிபிச்செல்வன்

    தருணம் :   பெண்ஆண்

    மூலம்: வங்காளம் : ரத்தின் பந்தோபாத்யாய
    ஆங்கிலம் வழி: அனுஸ்ரீபிரசாந்த்

    மனைவியின் தினசரிப் பழக்கங்கள்

    இனிமேல்
    ( ஆகையால்/எடுத்துக்காட்டாக/மேலும் )
    காலையில் கோல்கேட்
    மெல்லிய பிரிட்டானியா
    சார்மினார்
    நீலநிற ஜீன்ஸ்
    சீர்ப்படுத்த முடியாத பெருங்குடல் வீக்கம்
    சாலையில் வலது இடது புறங்களைப் பார்த்துவிட்டு கடந்துபோதல்

    ***

    வரிக்குதிரை. போக்குவரத்து நெரிசல். வரிக்குதிரை
    கடந்து கொண்டிருக்கிறது வரிக்குதிரை கடந்துகொண்டிருக்கிறது வரிக்குதிரை
    கடந்துகொண்டிருக்கிறது வரிக்குதிரை
    அந்த வரிக்குதிரை குளிர்கால சூரியத் தடுப்பிற்காகத் தொப்பி போட்டு
    உல்லாச பயணம் மேற்கொள்கிறது
    மிருகக்காட்சி சாலையில்
    ஒவ்வொரு வருடமும்……
    இத்யாதி

    தொடர்பற்றுத் தொடரும் இத்தகைய கவிதைகளின் இணைவற்ற போக்கே பின்நவீனத்துவப் போக்காகின்றது, நிசப்தம் அறக்கட்டளை அமைப்பில் செயல்படும் வ. மணிகண்டன் எழுத்தாளர், பொறியாளர், சிந்தனையாளர். அவரது தளத்தில் பின்வரும் ஒரு கவிதை இடம்பெற்றுள்ளது. இதன் நவீனத் தன்மை அசல் நகல் குழப்பத்தில் வாசகனைத் தடுமாற வைப்பதை உணர முடிகின்றது,

    ஸ்ரீமான் ஷண்முகசுந்தரம்

    11/17/2016 06:53:00 PM

    வித்வான் ஷண்முகசுந்தரம் ஒரு தவில் கலைஞர்
    அவர் எல்லோராலும் முட்டாளாக
    மதிக்கப்படுபவரென்றால் அது மிகையாகாது
    குறிப்பாக அவரது மூத்த சகோதரர் பாலண்ணன்
    எவ்வளவு நேர்த்தியாக அடித்தாலும்
    ஒரு அடி பிந்திவிடுவது ஷண்முகத்தின் வழக்கம்
    அப்போதெல்லாம் பாலண்ணன் லாவகமாக
    நாதஸ்வரத்தில் ஒரு இடியிடிப்பார்
    சிலர் இவரை ‘தனித்தவில் கலைஞர்’ என்றும்
    நகைச்சுவையாகக் கூறுவதுண்டு
    அன்று மாவட்ட எல்லையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி
    வாசித்துக் கொண்டிருந்த நூறு வித்வான்களில்
    ஸ்ரீமான் ஷண்முகசுந்தரம்
    ஒன்று, முதலாக இருந்தார்
    அல்லது
    கடைசியாக இருந்தார்
    நிகழ்ச்சி முடிந்து
    செம கடுப்பில்
    அவரை அம்போவென கைவிட்டுக் கிளம்பினர்
    தான் ஒரு முட்டாள் என்பதையறியாத
    ஷண்முகசுந்தரம்
    உண்மையாகவே தனித் தவிலடித்தபடி
    நெடுஞ்சாலையில் நடக்கிறார்
    டாரஸ் லாரியில் வந்த கடவுள்
    நிறுத்தி
    வருகிறீர்களா என்று கேட்டார்
    அப்போது
    ஸ்ரீமான் ஷண்முகசுந்தரத்திற்கு பெருமை பிடிபடவில்லை.

    இதனை எழுதியவர் கவிஞர் கண்டராதித்தன். இவரின் கவிதையை அதன் நவீனத்தன்மையை வ. மணிகண்டன் வியந்துள்ளார்.

          இணையக் கவிதைகள் பல பெரும்பாலும் பழைய பாடுபொருள்களை உடையன என்றாலும் நவீனத்தன்மையைத் தொட்டுப்பார்க்கும் கவிதைகளும் களத்தில உள்ளன.

    பின்நவீனத்துவத் திறனாய்வுகள்

          இணையத்தில் பெண்ணியம், பெரியாரியம், பொதுவுடைமை என்ற நிலைகளில் பல நவீனத்துவ இயத் திறனாய்வுகள் கோலோச்சுகின்றன. இணையத்தில் கிடைக்கும் பேரா பூரணச்சந்திரன், பேரா தமிழவன், பேரா அ. இராமசாமி, அ.மார்க்ஸ், ஜமாலன் ஞானி போன்றோர் தம் எழுத்துகளில் பின் நவீனத்துவப் போக்குகள் காணப்படுகின்றன. பெண்ணியம் சார்ந்து பல இணைய எழுத்துகளை பெண்ணியம் இதழ் வெளிப்படுத்தி வருகிறது. கட்டு்ரைகள், செவ்விகள், செய்திகள் என்று பெண்ணியச்சார்பில் இயங்கும் பெண்ணியம் தளம் குறிக்கத்தக்கது.

          பெரியாரியக் கொள்கைகளை விளக்கும் குடியரசு, தமிழ் ஓவியா போன்றன பின் நவீனத்துவ நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. மார்க்சிய கொள்கைகளை முன்னெடுப்பதில் ந. ரவீந்திரனின் எழுத்துகள் கவனிக்கத்தக்கன. உளவியல் ஆய்வுகளில் சி.மா இரவிச்சந்திரனின் தளம் முக்கியமானது. இவற்றின் வழியாக பின்நவீனத்துவம் பற்றியும் அதனை ஆராயப்புகுத்தும் பயிற்சி குறித்தும் அறிந்துகொள்ள முடிகின்றது.

          மொத்தத்தில் இணைய எழுத்து என்பது முன்னுக்கும் பின்னுக்கும் வலதிற்கும் இடதிற்கும் வாய்ப்பளிக்கும் ஒளிவுமறைவற்ற கணினித் திரையாகின்றது. இதன் பின்னுள்ளவர்கள் தங்களை வெளிப்படுத்தத் தயங்குவது ஏன் என்று புரியவில்லை. அவர்கள் வெளிப்பட வேண்டும். பழையதை பதிவு செய்யும் முன்னவர்கள் ஒருபுறம் இருக்க, நவீனத்தை நோக்கித் தமிழைநகர்த்த இணையத்தால் மட்டுமே இயலும். இந்தக் கருவியைச் சரியாக பயன்படுத்தவேண்டும். ஒரு நூலை அச்சாக்க ஒரு அச்சகம் வேண்டும். அதனை வெளியிட வெளியீட்டு நிறுவனம் வேண்டும். வண்ண அச்சு என்றால் கூடுதல் செலவு. இது எதுவுமில்லாமல் நாளும் எழுதக் கிடைத்த அற்புத வெளி இணையம். நவீனத்தை நோக்கி இன்றைய நிமிடத்தை நகர்த்துவோம். இணையத்தில் இணைவோம்.

    Share
  • கலியன் குரல் காட்டும் வைணவ முப்பொருள்களுள் ஒன்றான இதம்

    முனைவர் மு.பழனியப்பன்,

    தமிழ்த்துறைத் தலைவர்,

    அரசு கலை , அறிவியல் கல்லூரி,

    திருவாடானை.

         வைணவத் தத்துவங்களில் ஆழங்கால்பட்டு, அதனில் கரைந்து, அதனில் தோய்ந்து அத்தத்துவங்களை எளிமையான முறையில் எடுத்துரைத்த தமிழறிஞர்களுள் குறிக்கத்தக்கவர் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் ஆவார். காரைக்குடிக்குக் கம்பன் அடிப்பொடி ச. கணேசன் அவர்களால் வரவழைக்கப் பெற்றவர். காரைக்குடி கல்வியியல் கல்லூரியில் ஏற்பட்ட தமிழ்ப்பேராசிரியர் பணியிடத்திற்கு உரியவராக பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அமைந்தார். சிலகாலம் இங்குப் பணிபுரிந்த பேராசிரியர் இதன்பின்னர் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்திற்குத் தமிழ்த்துறைத்தலைவராகப் பொறுப்பேற்றார். இதுமுதல் வைணவ இலக்கியத்தின்பால் பேராசிரியரின் நோக்கு ஆழம் பெற்றது. இவர் வைணவம் தவிர பல்வேறு துறை சார்ந்த நூல்களைப் படைத்தளித்தவர். அடிப்படையில் அறிவியல் மாணாக்கர் என்ற போதும் தமிழின்மீது விருப்பம் ஏற்பட்டுக் கற்றவர். இவர் அறிவியல் தமிழின் முன்னோடியாகக் கருதப்பெறுகிறார். இவரின் நூல்களில் காணப்படும் எளிமையான தமிழ் நடை கற்போரைத் தெளிவடையச் செய்கிறது. மேலும் கற்கத் தூண்டுகிறது. இவரின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் இப்பொழுதில் இவரின் ~கலியன் குரல்| என்ற நூலில் அடங்கியுள்ள வைணவ முப்பொருளில் ஒன்றான இதம் பற்றிய கருத்துகளைத் தொகுத்தும் பகுத்தும் உரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

    கலியன் குரல்

                    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வைணவ இலக்கியம் தத்துவம் பற்றிப் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் நிகழ்த்திய அறக்கட்டளைப் பொழிவு ~கலியன் குரல|; என்னும் தலைப்பில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதாம் ஆண்டு நூல்வடிவம் பெற்றது. திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களில் காணப்படும் இலக்கிய இன்பம், தத்துவ ஆழம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் அமைப்பில் இந்தப் பொழிவுகள் அமைந்தன. திருமங்கை ஆழ்வாரை மையப்படுத்தி இப்பொழிவை அமைத்ததற்குப் பல காரணங்களை மொழிகிறார் பேராசிரியர். குறிப்பாக சிதம்பரம் அண்ணாமலைப் பலைக்கலைக்கழகம் திருமங்கை ஆழ்வார் ஆண்ட. பிறந்த பகுதிகளுக்கு அருகில் இருப்பது முக்கிய காரணம் என்பது அவர் தரும் முதற்காரணம் ஆகும்.; தேர்ந்து ஒரு செயலைச் செய்யும் வல்;லமையைத் தனக்குள் கொண்டவர் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் என்பதற்கு இச்சொற்பொழிவு சான்றாகிறது.

    வைணவ முப்பொருள்

                    திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களுள் காணலாகும் வைணவ தத்துவக் கருத்துகளை எளிமைபட தம் பொழிவில் எடுத்துரைத்துள்ளார் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார். வைணவ தத்துவங்களில் மூன்று அடிப்படைக் கருத்துகள் அமைந்துள்ளன. அவை தத்துவம், இதம், புருஷார்த்தம் என்பனவாகும். இவை துவைதம்,அத்துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவங்களுக்கு முற்பட்ட பழமை உடையவை.

                    இவற்றுள் தத்துவம் என்பது மூன்றாக அமைவது. சித்து. அசித்து, ஈசுவரன் ஆகியன கொண்டது. இதனை தத்துவத்திரயம் என்பர். இதம் என்பது வீடுபேற்றிற்காக கடைபிடிக்கப்படும் வழியாகும். இது இருவகைப்படும். பக்தி, பிரபக்தி என்பன அவையிரண்டும் ஆகும். புருஷார்த்தம் என்பது பரமபதநாதனுக்கு அடிமைத் தொழில் புரிவது, அதன் காரணமாக எம்பெருமான் மகிழ்தல் ஆகியன கொண்டதாகும்.

                    வைணவ தத்துவங்களில் மூன்றில் நடுநாயகமாக விளங்குவது ~இதம் | என்பதாகும்.  ~~இதம்|| என்பது உயிர்கள் கடைத்தேற வழிகாட்டுவது. இறைவனைப் பக்தி வழியில் அணுகுவது, அல்லது சரணாகதி அடைந்து பெறுவது என்பதாகும். இப்பொருள் பற்றி கலியன் குரலில் காட்டப்பெற்றுள்ள செய்திகளை வகுத்துரைப்பது என்பது இக்கட்டுரையின் அமைப்பாகும்.

    பக்தி நெறி

                    ~இதம்| என்பதின் இருநிலைகளில் ஒன்றாக அமைவது பக்தி நெறியாகும். இப்பக்தி நெறியின் இயல்பினைப் பின்வருமாறு பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் காட்டுகிறார். ~~பக்தி நெறி- இதில் பல படிகள் உண்டு. இதனை வீடுபேறு அடையும் வரையில் அநுட்டித்துக்கொண்டே இருத்தல் வேண்டும். பலன்பெற நெடுங்காலம் கழிய வேண்டும். இதனை அங்கங்களுடன் அநுட்டிக்கும் முறை மிகக் கடினமானது. இக்கால்தில் பக்தி நெறியை அநுட்டிப்பதற்கு அதிகாரிகள் இலர் என்று கூடக் கூறலாம். நாதமுனிகள் போன்ற யோகமுறை தெரிந்தவர்கள் தாம் இதற்கு அதிகாரிகளாவர்| (கலியன் குரல், ப.174) என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர். இக்கருத்தின் வாயிலாக பக்திநெறி வழி எம்பெருமானை அணுகுவது என்பது காலஅளவில் நீண்டது என்பதை உணரமுடிகின்றது.

    பிரபக்தி நெறி

                    பிரபக்தி நெறி என்பது உயிர்கள் தாமாக முன்வந்து தம்மைப் பரம்பொருளிடம் அடைக்கலப்படுத்திக்கொள்ளும் நிலை ஆகும். பிரபக்திநெறி பற்றி பின்வருமாறு குறிக்கிறார் பேராசிரியர். ~பிரபக்தி நெறி- இதுவே சரணாகதி நெறியாகும். எல்லோரும் எளிதாக அநுட்டிக்கக் கூடியது. சுக்கிரீவன், வீடணன், காகம் (காகாசுரன்) போன்றோர் இந்நெறியைக் கடைபிடித்தே உயந்தவர்கள். இந்த பிரபக்தி நெறியை உபதேசித்தவர் நம்மாழ்வார். இவரைப் ~பிரபந்த ஜன கூடஸ்தர்| என்று வழங்குவதும் உண்டு. பிரபக்தி நெறியைக் கடைபிடிக்கும் வைணவர்கள் யாவர்க்கும் தலைவர் என்பது இதன் பொருள். திருமங்கை ஆழ்வார் கடைப்பிடித்த நெறியும் இதுவே|| (கலியன் குரல், ப. 114) என்பது பிரபக்தி நெறி பற்றிப் பேராசிரியர் தரும் விளக்கம் ஆகும்.

                    இக்கருத்தின்வழி ;வைணவ சம்பிரதாயங்களில் சரணாகதி என்பது முக்கியமானது. அனைவராலும் எளிமைபட கைக்கொள்ளத்தக்கது என்பது தெரியவருகிறது. எனவே உயிர்கள் அனைத்தும் சரணாகதியாக ஆண்டவனைப் பெற்றால் கடைத்தேறுவது எளிது என்பது உறுதியாகின்றது.

                    திருமங்கை ஆழ்வார் பிரபக்தி நெறியில் நின்றமைக்கு பெரிய திருமொழியில் உள்ள ஒன்பதாம் திருமொழியைப் பேராசிரியர் எடுத்துக்காட்டுகிறார். திருமங்கை ஆழ்வார் ஒன்பது முறை தன்னை இத்திருமொழியில் அடைக்கலப்படுத்திக்கொண்டுள்ளார்.

                    தாயேதந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்

                    நோயே பட்டொழிந்தேன் உன்னைக் காண்பது ஓர் ஆசையினால்

                    வேயேய் பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா

                    நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே (பெரியதிருமொழி-1028)

    என்ற பாடலின் ஒருபகுதியை எடுத்துரைத்துப் பேராசிரியர் திருமங்கையாழ்வார் அடைக்கலப்படுத்திக்கொண்டமையை அடையாளப்படுத்தியுள்ளார். ~ஆனாய் வந்தமைடந்தேன், அன்றே வந்தடைந்தேன், அலந்தேன் வந்தடைந்தேன், அப்பா, வந்தடைந்தேன், அண்ணா, வந்தடைந்தேன், அரிய வந்தடைந்தேன், ஆற்றேன் வந்தடைந்தேன், அற்றேன் வந்தடைந்தான் என்று ஒன்பது பாடல்களில் தன்னை அடைக்கலப்படுத்திக்கொண்டுள்ளார் திருமங்கை ஆழ்வார். மேற்பாடலில் தாய், தந்தை, தாரம், கிளை, மக்கள் ஆகியோரின் தொடர்பினைக் கொண்டதால் நோயே பற்றியது. அவற்றை விடுத்து, எம்பெருமானே உன்னை அடைந்தேன் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். இது அடைக்கலப்படுத்துவதில் முதல்நிலையாகும். மேலும் இவரின் அடைக்கலப்படுத்தியத்தன்மைக்கு

                    துறந்தேன் ஆர்வச் செற்றச் சுற்றம், துறந்தமையால்

                    சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே

                    அறம்தான் ஆய்த்திரிவாய் உன்னைஎன மனத்தகத்தே

                    திறம்பாமல் கொண்டேன் திரு விண்ணகரானே ( பெரிய திருமொழி. 1469)

    என்ற மூன்றாம் பெரிய திருமொழிப்பாடலையும் காட்டுகிறார் பேராசிரியர். இதற்கு காஞ்சி பிரதிவாதி அண்ணங்கராசாரியார் எழுதிய உரை பின்வருமாறு. ~~ப்ராக்கருதர்களான அநுகூலரிடத்தில் அநுராகமும், ப்ரதிகூலரிடத்தில் பகையும் ஆபாஸபந்துக்களிடத்தில் உறவம் உள்ளவரையில் எம்பெருமாள் திருவடிகளில் அன்பு நிலை நிற்கமாட்டாதாதலால் அம்மூன்றும் தமக்கு ஒழிந்தமையை அருளிச் செய்து தேவரீர் திருவடிகட்கே அடியேன் தகுந்தவனாயினேன் என்கிறார். ~ப்ரித்யக்தா மாய லங்கா|| (விட்டொழித்தேன் இலங்கையை) என்ற விபீஷணாழ்வானைப்போல் அருளிச்செய்கிறார் காண்மின்|| என்ற கருத்தும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

                    அடைக்கலமாகின்றபோது, நண்பர்கள், பகைவர்கள், உறவுகள் ஆகியோர்களின் உறவுகளை விட்டொழித்து கடவுளைச் சரணடையவேண்டும் என்பது இத்திருமொழி வாயிலாகப் பெறப்படும் கருத்தாகும். அடைக்கலப்படுத்திக்கொள்வதில் இது இரண்டாம் படிநிலையாகும். அடுத்து,

                    வேறாய் யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள்எந்தாய்

                    ஆறா வெந்நகரத்து அடியேனை இடக்கருதி

                    கூறா ஐவர்வந்து குமைக்க குடிவிட்டவரைத்

                    தேறா துன் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே|| (1464)

    என்ற பாடலில் ஐம்புலன் ஆசைகள் விடுத்து வந்த உன்னை அடைந்தேன் என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார். இதன்வழியாக அடைக்கலம் புகுமுன் ஐம்புல வேட்கையினை விட்டொழிக்கவேண்டும் என்று தெரிகிறது. ~~படைப்புக்காலத்தில் என் நன்மைக்காக என்னிடத்தில் குடியேறியுள்ள ஐம்பலன்களும் என்னை மிகவும் துன்புறுத்துகின்றன. அவற்றை  நம்பாமல் உன்னிடம் சரண் புகுகின்றேன். காத்தருள்க|| என்று இப்பாசுரத்திற்கு விளக்கம் தருகிறார் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார். இது மூன்றாம் படிநிலையாகும்.

                    நைமிசாரண்யத்து எம்பெருமானைப் பாடும்போதும் ~திருவடி அடைந்தேன்| என்று குறிப்பிட்டுப் பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

                    வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர்ப்பொருள்தாரம் என்றிவற்றை

                    நம்பினார் இறந்தால் நமன் தமர்ப்பற்ற எற்றி வைத்து எரியெழுகின்ற

                    செம்பினாலியன்ற பாவையைப் பாவீ தழுவென மொழிவதர்க்கஞ்சி

                    நம்பனே வந்துத் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்

    என்ற பாடலில் இழிவான செயல்களில் இருந்து மீண்டு பரம்பொருளை வந்தடைந்தேன் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். தம் மனைவியைத் துறந்து, பிறன் மனைவி, பொருள் இவற்றை விரும்பும் ஒருவன் இறந்தால் அவனை எமதூதர்கள் வந்து இழுத்துச்சென்று,  செம்பின் குழம்பினால் செய்யப்பெற்ற தீப்பற்றி எரிகின்ற பொம்மையைக் கொடுத்துத் தழுவச் சொல்வார்கள் என்று தண்டனை அளிக்கப்பெறும் என்று ஆழ்வார் குறிக்கிறார்.. அதற்கு அஞ்சி நம்பன் திருவடி அடைந்தேன் என்று குறிக்கிறார் ஆழ்வார். இது நான்காம் படிநிலையாகும். பாவச்செயல்களைச் செய்பவன் பாவி. அவனை அழுத்திக் குறிக்க இப்பாசுரத்தில் பாவீ என்று நீட்டல் விகாரம் அளிக்கப்பெற்றுள்ளது. பாவங்களில் இருந்து நீங்கி நிற்பது என்பது அடைக்கலப்படுத்துவதில் நான்காம் நிலையாகும்.

                    ஆழ்வாரின் பாடல்களை, தாய், தந்தை, மக்கள், நண்பர், எதிரிகள்,சுற்றம், ஐம்புலன்கள் ஆகிய தொடர்பினை அறுத்துக் கொண்டால் அடைக்கலம் பற்றுவது எளிது என்ற நிலையில் பேராசிரியர் வரிசைப் படுத்தித் தந்துள்ளார். மேலும் பாவச் செயல்களைப் புரியாது அதிலிருந்து மீண்டு ஆண்டவனை அடைக்கலமாகவேண்டும் என்ற நிலையையும்  ஆழ்வார் காட்டுவதை வெளிப்படுத்தியுள்ளார் பேராசிரியர். மேற்சுட்டப்பெற்ற நான்கு படிநிலைகளைக் கடந்தால் பரம்பொருளை அடைக்கலமாகலாம்.

    நம்மாழ்வாரின் அடைக்கலநிலை

                    திருமங்கை ஆழ்வாரின் அடைக்கல நிலையை எடுத்துரைக்க வந்த பேராசிரியர், அதனுடன் நம்மாழ்வார் தம்மை அடைக்கலப்படுத்திக் கொண்ட நிலையையும் எடுத்துரைக்கிறார். பேராசிரியர் ந.சுப்புரெட்டியாரின் உள்ளம் நம்மாழ்வார் பாடல்களில் தோய்ந்தது என்பதற்கு இப்பகுதி சான்றாகிறது. ~~சரணாகதித் தத்துவத்தின் தந்தை போன்றவர் பிரபந்தர்களின் தலைவராக விளங்கும் நம்மாழ்வார். அவர் தம்முடைய திருவாய்மொழியில் ~நம்பெருமான் அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்;ச்சடகோபன்|, (5.9.11) என்றும், கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்;ச்சடகோபன் (5.8.11) என்றும், தம்மை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ~எனக்கு நின் பாதமே சரணாகத் தெந்தொழித்தேன்|| (5.8.11) என்று எம்பெருமான் தமக்குச் சரணாக அமைந்தமையையும் ~உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே| (6.10.10) என்று தாம் எம்பெருமானின் கழலிணைகளில் சரணாகப் புகுந்தமையையும் புலப்படுத்துகின்றார்|| (கலியன் குரல், ப. 177)  என்ற குறிப்பு நம்மாழ்வாரின் சரணாகதி நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது. வைணவத்தில் மிக முக்கியமான பக்தி நிலை பிரபக்தி நிலை என்பதை இக்கருத்துகள் உணர்த்துகின்றன. இவ்வாறு சரணாகதி நிலையின் பெருமை பற்றியும் அதனை அடைய உயிர்கள் தொடர்பற்று இருக்கவேண்டிய நிலையையும் திருமங்கை ஆழ்வாரின் வாக்கின் வழியாக எடுத்துரைக்கிறார் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.

    பிரபத்தி செய்வோருக்கு வேண்டப்பெறுவன

                    பிரபத்தி செய்வோருக்கு இரு நிலைகள் வேண்டப்பெறுகின்றன. அவை. 1. ஆகிஞ்சந்யம், 2. அநன்னியகதித்துவம் என்பனவாகும்.

    ஆகிஞ்சநயம்

    ஆகிஞ்சநயம்; என்பது, கன்ம ஞான பக்திகளாகின்ற மற்ற உபாயங்களின் தொடர்பற்று இருக்கை. அதாவது முன்னர் சொன்ன தாய்,தந்தை, பிள்ளைகள், உறவுகள். ஐம்புலன்கள் தொடர்பற்று இருத்தல். இவை திருமங்கை ஆழ்வார் வாக்கின் வழியாகவே இக்கட்டுரையில் விவரிக்கப்பெற்றுள்ளன.

    அநன்னியகதித்துவம்

                    அநன்னியகதித்துவம் என்பது ஆன்மா பதிகாப்பிற்கு எம்பெருமாளைத் தவிர வேறொரு காக்கும் பொருள் அற்றிருக்கை. இதற்கு திருமங்கை ஆழ்வாரின் ஒரு பாடலைச் சான்றாக்குகிறார் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார்.

                    குலந்தானெத்தனையும் பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்

                    நலந்தானொன்றுமிலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்

                    நிலம்தோய் நீள முகில்சேர் நெறியார் திருவேங்கடவா

                    அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே (1031)

    என்ற பாடலில் எம்பெருமானைத் தவிர வேறுயாரும் என்னை ஆட்கொண்டருள இயலாது என்று தெளிந்து உரைக்கிறார் திருமங்கையாழ்வார்.

                    இவ்வகையில் கலிகாலத்தில் கலியன் குரல் கொண்டு எம்பெருமானை அடைய சரணாகதியே சிறந்தவழி என்று காட்டுகிறார் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.

    Share
  • ஆண்டாளும் வடநாட்டு வைணவத்தலங்களும்

    முனைவர் மு.பழனியப்பன்

    தமிழ்த்துறைத்தலைவர்

    அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி

    திருவாடானை

    images (1)

     பக்தி இலக்கியகாலத் தமிழகத்தில் சைவசமயம், வைணவ சமயம் ஆகிய இரண்டும் இலக்கிய இயக்கமாகவும் சமுதாய நல இயக்கமாகவும் செயல்பட்டுவந்தன என்பது எல்லாரும் அறிந்தது. இதே காலத்தில் வடநாட்டில் வைணவ சைவ சமய வளர்ச்சிகள் எப்படி இருந்தன என்ற கேள்விக்குத் தமிழ் இலக்கியங்களில் பதில் இருக்கிறதா என்பதைத் தேடினால் கண்டறிந்து பெறமுடிகின்றது. தென்னகக் கோயில்கள் போலவே வடநாட்டுக் கோயில்களையும் பக்தி இலக்கிய பெருமக்கள் பாடியுள்ளனர். சைவப் பெருமக்கள் வடநாட்டின் தலைப்பகுதியான கைலாயம் என்பதை எட்டவும் தொழவும் முயற்சி செய்ததை திருநாவுக்கரசர், காரைக்காலம்மையார் வழி பெறமுடிகிறது. வைணவ சமய வளர்ச்சி வடநாட்டில் இருந்த தன்மையை ஆண்டாளின் பனுவல்கள் வழி பெறமுடிகின்றது. ஆண்டாள் தன் பாடல்களில் வடநாட்டு வைணவத் திருத்தலங்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றார். அவர் பெண் என்பதால் தானிருந்த திருவில்லிப்புத்தூர், மற்றும் திருவரங்கம் ஆகிய இடங்களுக்குப் பயணிக்க முடிந்தது. ஆனால் வட நாட்டு வைணவத் தலங்களைப் பயணித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஆண்டாளிடம் இருந்துள்ளது. மேலும் வடநாட்டில் வைணவத் தலங்கள் சிறப்புற்று விளங்கியதால் அவை பற்றிய குறிப்புகளைச் செவிவழிச்செய்திகளாகக் கேட்டு ஆண்டாள் பதிவு செய்துள்ளார் என்பதும் தெரியவருகிறது.

    andal-painting

                ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் பன்னிரண்டாம் திருமொழி கண்ணன் இருக்குமிடம் கொண்டு செல்வீர் என்ற தலைப்பில் அமைகின்றது. இத்திருமொழியில் ஆண்டாள் வட நாட்டு வைணவத் தலங்களைக் குறிப்பாக கண்ணன் சார்புடைய தலங்களைக் குறித்துப் பாடியுள்ளார். கண்ணன் வாழ்ந்த வடநாட்டு ஊர்களுக்கு என்னைக் கொண்டு சேருங்கள் என்பது அப்பாடலின் பொதுப்பொருள். ஆண்டாள் தானாகப்போக இயலாத நிலையில் கண்ணன் மீதான காதல் அதிகரிக்கும் சூழலில் தன்னைச் சார்ந்தவர்களைக் கண்ணன் இருப்பிடங்களுக்கு அழைத்துச்செல்லக் கோருவதுபோல இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன.

    வடமதுரை

                கண்ணனின் நகரமான வடமதுரையில் இத்திருமொழி தொடங்குகின்றது.

    ~~பெற்றிருந்தாளை ஒழியவே, போய்ப் பேர்த்தொருதாய் இல் வளர்ந்த நம்பி, மற்பொருந்தாமல் களமடைந்த மதுரைப் புறத்தென்னை உயத்திடுமின்|| ( 617)

    என்று மதுரா நகரத்தை எண்ணுகிறார் ஆண்டாள். மதுரா நகரில் கண்ணன் பிறந்த இடம் குறிக்கத்தக்க நினைவுச் சின்னமாக இன்னமும் பாதுகாக்கப்பெற்று வருகிறது.  கண்ணன் பிறந்த இடம் பற்றிய செய்திகள் ஆண்டாளுக்கு ஆதி முதல் உணர்த்தப்பெற்றது என்பதற்கு இப்பாடல் சான்றாகின்றது. வடமதுரை நூற்றியெட்டு திவ்யதேசங்களில் நூற்றியிரண்டாம் இடத்தில் வைத்துப் போற்றப்பெறுகிறது.

    ஆய்ப்பாடி

                கண்ணன் நண்பர்களுடன் சுற்றித் திரிந்த இடம் ஆய்ப்பாடி ஆகும்.

    ~~ஆணையால் நீர் என்னைக் காக்கவேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்||  (618)

    என்று ஆய்ப்பாடியைக் குறிக்கின்றார் ஆண்டாள். நூற்றியெட்டு திவ்யதேசங்களில் நூற்றிமூன்றாம் இடத்தில் வைத்துப் போற்றப்பெறுகிறது. வடமதுரையில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊர் ஆய்ப்பாடி ஆகும். வடமதுரையும் நில அளவிலும், கண்ணன் உலவிய அளவிலும் அருகருகு இருப்பது கண்ணன் வரலாற்றில் இருக்கும் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

    யமுனை நதிக்கரை

                யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் வடமதுரை ஆகும். இந்த நதிக்கரை கண்ணன் திருப்பாதங்கள் பட்ட நதிக்கரை என்பதால் இவ்விடத்திற்கு வருவதற்கு ஆண்டாள் பிரியப்படுகிறார்.

    ~இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கென்னை உய்த்திடுமின்|| (620) என்று யமுனை நதிக்கரையில் விளையாட எண்ணம் கொள்கிறார் ஆண்டாள்.

                யமுனை ஆற்றில் வாழ்ந்த காளிங்கள் என்ற பாம்பினை அடக்கியவன் கண்ணபிரான். ஆண்டாள் தன் நிலையைக் கண்டு கலக்கமடைவதை விட்டுவிட்டு காளிங்களை அடக்கிய யமுனைக் கரைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறார். ~~நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக் கென்னை உய்த்திடுமின்||(621) என்று பாடும் ஆண்டாளின் கண்ணன் குறித்தான வேட்கை குறிக்கத்தக்கது.

    பத்த விலோசனம்

                கண்ணனுக்கும், அவன் தோழர்களுக்கும்  முனிபத்தினிகள் பசிக்கும் போது நாள்தோறும் உணவு கொடுத்த இடம் இதுவாகும். இவ்விடத்திற்குத் தன்னை அழைத்துப்போகச் சொல்லுகிறாள் ஆண்டாள்.  ~வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டு அடிசில் உண்ணும்போது, ஈதென்று பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின்|| (622) என்ற ஆண்டாளின் வாக்கு கண்ணனின் மற்றொரு வட மாநில இருக்கையைக் காட்டுவதாக உள்ளது. மதுராவிற்கு அருகில் இவ்விடம் உள்ளது.

    பாண்டிவடம்

                மதுராவிற்கு அருகில் உள்ள மற்றொரு இடம் பாண்டிவடம் ஆகும். பரசுராமன் பிரலம்பாசுரனை அழித்த இடம் பாண்டீரமாகும். அந்த பாண்டீரத்தில் உள்ள ஆலமரத்திற்குத் தன்னை அழைத்துப்போக ஆண்டாள் வேண்டுகிறாள்.

    ~~பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டிவடத் தென்னை உய்த்திடுமின்|| (623) என்ற ஆண்டாளின் வருகை பாண்டிவடம் என்ற மற்றொரு கண்ணன் தலத்தைக்; காட்டுகிறது.

    கோவர்த்தன மலை

                ~~கொற்றக் குடையாக ஏந்தி நின்ற Nகுhவர்த்தனத் தென்னை உய்த்திடுமின் || (624) என்று கோவர்த்தனகிரியை கண்ணன் தலமாகக் காண்கிறார் ஆண்டாள்.

    துவாரகை

                கண்ணன் உருவக்கிய நகரம் துவாரகை ஆகும். குஜராத் மாநிலத்தில் உள்ள முக்கியமான தலம் இதுவாகும்.

    ~~சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்|| (625)

    என்று ஆண்டாள் இந்நகர் பற்றிக் குறிப்பிடுகிறாள். துவராகை என்பதற்கு பல வழிகள் கொண்ட ஊர் என்று பொருள். ஆண்டாள் மாடங்கள் சூழ்ந்த நகரம் என்று இதனைப் பாடுகிறார்.

                இவ்வாறு வடமதுரையில் கண்ணன் பிறந்தது முதல் கண்ணன் தனக்கான நகரம் உருவாக்கிய துவாரகை வரையான தலங்களில் தன்னை நிறுத்தச் சொல்லி வெண்டுகோளை வைக்கிறார் ஆண்டாள்.

                ~~மன்னுமதுரை தொடக்கமாக வண்துவராபதி தன்னளவும்

                 தன்னைத் தமர் உய்த்துப் பெய்யவேண்டித் தாழ்குழலாள் துணிந்த துணிவைப்

                 பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்கோன் விட்டுச் சித்தன் கோதை

                 இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே||                                                                                                                                    (626)

    என்ற பாடலில் ஆண்டாள் பாடிய வடநாட்டுத் தலங்கள் அனைத்தும் குறிப்பிடப்பெற்றுள்ளன. இத்திருமொழி வழி ஆண்டாள் காலத்தில் கண்ணன் பிறந்த இடம், வளர்ந்த இடம், உருவாக்கிய இடம் ஆகியன பற்றிய தகவல்கள் தென்னிந்தியாவில் பரவி இருந்தது என்பதற்குச் சான்றாக உள்ளது. இலக்கியங்கள் வழியாக வடநாட்டையும் தென்னாட்டையும் சமயச்சான்றோர்கள் இணைத்து தேச ஒற்றுமையைக் காத்துள்ளனர் என்பதாகவும் இதனைக் கொள்ளலாம். ஆண்டாள் குறிப்பிட்ட இத்திருத்தலங்களில் தமிழ்ச் சமுதாய வம்சாவழியினர் வாழ்ந்துவருகின்றனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. இவர்கள் தமிழகத்தில் இருந்து வடநாடு சென்று தமிழ்ப்பண்பாட்டுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் குறிக்கத்தக்க செய்தியாகும். இவ்வகையில் சமயங்கள் இடங்கள் கடந்து மக்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன என்பதை உணரமுடிகின்றது.

    Share
  • கம்பன் கழகம், காரைக்குடி மே மாதக் கூடடம் 2016

    கம்பன் கழகம், காரைக்குடி மே மாதக் கூடடம் 2016
    கம்பன் கழகம், காரைக்குடி
    67 ஆம் கூட்டம்

    அன்புடையீர்
    வணக்கம் கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் மே மாதக் கூடடம் 7.5.2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

    3b4bec05-38cc-466c-8ef9-a19fd0ad433f
    நிகழ்நிரல்
    இறைவணக்கம் – செல்வி எம். கவிதா
    வரவேற்புரை- திரு. கம்பன் அடிசூடி
    கம்பராமாயணத்தில் இயற்கை- பொழிவு. திரு. தி.கி. வேதராஜா
    அந்தமானில் நடைபெற்ற கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கு பற்றியும்
    அந்தமான் கம்பன் கழகத்தி;ற்கு காரைக்குடி தாய் கம்பன் கழகச் சீராட்டு வழங்கித்
    தொடங்கி வைத்தமை குறித்த அறிக்கை முனைவர் மு.பழனியப்பன்
    கம்பராமாயணத்தில் தத்துவங்கள் பொழிவு- சுவாமி இராமகிருஷ்ணானந்தா
    நனறியுரை- பேரா. மா.சிதம்பரம்

    சிற்றுண்டி
    கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.
    அன்பம் பணிவுமுள்ள
    கம்பன் கழகத்தார்
    நிகழ்ச்சி உதவி
    தம் தாயார் காரைக்குடி மெ.செ. அ. பழ. அ. உண்ணாமலை ஆச்சி நினைவாக அவர்தம் புதல்வர் திரு. ப.அ. பழனியப்பன் – உண்ணாமலை தம்பதியருக்குப் பல்லாண்டு பல்லாண்டு

    Share
  • கம்பன் கழகம் அந்தமானில் நடத்தும் கருத்தரங்க அழைப்பு

    அந்தமானில் நடைபெற உள்ள கம்பனில் இயற்கை கருத்தரங்க அழைப்பு

    கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்க நிகழ உள்ளது. தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். எண்பதிற்கும் மேற்பட்ட கருத்தரங்கக் கட்டுரைகள் அக்கருத்தரங்கில் வாசிக்கப்பெற உள்ளன. அவற்றின் அச்சுவடிவ ஆய்வுக்கோவையும் அன்றே வெளியிடப்பெறுகிறது.

    கம்பன் கண்ட இயற்கை நலத்தை வெளிப்படுத்துவதை மையமாகக் கொண்டு இக்கருத்தரங்கம் நிகழ்கிறது. ஒருநாள் முழுநிகழ்வாக நடக்க உள்ள இக்கருத்தரங்கின் அழைப்பினை இதனுடன் இணைத்துள்ளோம்.

    கம்பன் கழகம்

    கம்பன் கழகம்2

    இவ்வழைப்பினைத் தாங்கள் வருகை தர அன்புடன் வேண்டுகிறோம். மேலும் இவ்வழைப்பினைத் தாங்கள் பரவலாக்கம் செய்து உதவ அன்புடன் வேண்டுகிறோம்.


    M.Palaniappan
    muppalam2006@gmail.com
    manidal.blogspot.com
    9442913985

    Share
  • அடியார் பெருமை

    — முனைவர் மு.பழனியப்பன்.

     

    karaikal ammaiyar2

     

     

    அடியார் பெருமை அளவிடற்கரியது. சிவனடியார்களின் கழுத்தினில் உருத்திராட்சமும், உடலில் திருநீறும், உள்ளத்தில் சிவமந்திரமும் நீங்காது நிறைந்திருக்கும். இதன் காரணமாக உடலாலும், உள்ளத்தாலும் புண்ணியர்களாகச் சிவனடியார்கள் விளங்குகின்றனர். கூடும் அன்பினில் கும்பிடுதலே சிவனடியார்களின் இயல்பு. அவர்கள் செய்வதனைத்தும் சிவத்தொண்டுகள். அவர்கள் நடப்பதெல்லாம் சிவபூமி. அவர்கள் ஊர்தோறும் சென்றுச் சிவனை வணங்கும் கடப்பாடு உடையவர்கள். அவர்கள் தங்க சிற்சில ஊர்களில் மடங்கள் இருக்கலாம். பல ஊர்களில் இவ்வசதி இருப்பதில்லை. இச்சூழலில் ஊர்வலம் வரும் சிவனடியார்களைப் பாதுகாக்க ஊர் மக்களே முன்வரவேண்டி இருக்கிறது. அவ்வாறு சிவனடியாரைக் காப்பவரெல்லாம் சிவனடியார்கள். வருபவர்கள் சிவனடியார்கள். பாதுகாப்பவர்கள் சிவனடியார்கள். இவ்வாறே ஊரில் உள்ள எல்லாரும் நாட்டில் உள்ள எல்லாரும் உலகத்தில் உள்ள எல்லாரும் சிவனடியார்களாகின்றனர்.

    சிவபெருமான் ஆலயங்கள் இல்லாத ஊரே ஊர் இல்லை என்ற நிலையில் ஒவ்வொரு ஊரிலும் சிவனை வணங்குவோர் இருப்பர். அவர்கள் அவ்வூர்ச் சிவனடியார்கள். அவர்கள் ஊர்வலமாக வரும் சிவனடியார்களைப் போற்றிப் பாதுகாத்து உணவளித்துச் செய்யும் தொண்டு சிவத்தொண்டாகின்றது. மயிலாப்பூரில் பூம்பாவையை எழுப்பச் சம்பந்தர் முன்வரும்போது இத்தொண்டின் பெருமையை முன் வைத்துப் பாடுகிறார் சேக்கிழார்.

    மண்ணி னில்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும்
    அண்ண லார்அடி யார்தமை அமுதுசெய் வித்தல்
    கண்ணி னால்அவர் நல்விழாப் பொலிவுகண்(டு) ஆர்தல்
    உண்மை யாம்எனில் உலகர்முன் வருகஎன உரைப்பார்
    (பெரியபுராணம் 1087)

    என்பது சேக்கிழாரின் திருவாக்கு.

    பூம்பாவையை எழுப்ப முன்வந்த சம்பந்தர் எவ்விடத்திலும் செய்யாத ஒன்றை மயிலாப்பூரில் செய்கின்றார். மற்ற உயிர்ப்பிக்கும் இடங்களிலெல்லாம் நடக்காத ஒன்று இத்திருவிளையாட்டில் நடைபெறுகிறது. சம்பந்தர் சில சத்திய மொழிகளை உரைத்து அவை உண்மையானால் பூம்பாவை எழட்டும் என்று சிவபெருமானிடம் வேண்டுகோளை வைக்கின்றார்.

    “சிவத்தொண்டு என்பது சிவனடியார்க்கு உணவளிப்பது, சிவ விழாக்கள் கொண்டாடுவது என்ற இரண்டும் முன்னிற்பது உண்மையானால் இறந்த பூம்பாவை உயிருடன் எழவேண்டும்”, என்று சம்பந்தர் பாடுவதாக அமைக்கிறார் சேக்கிழார். அதன்படியே சிவ கருணை மேலெழுந்து ஒடுங்கிய இடத்தில் இருந்துப் பூம்பாவை சிவனருளால் பிறந்து, வளர்ந்து வருகிறாள். இதன் காரணமாகச் சிவனடியார்க்கு உணவளித்தல் என்ற தொண்டின் மேன்மையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

    சிவனடியார்களை இல்லத்திற்கு அழைத்து உணவு தரும் நிலைக்கென்று மரபும் முறைமையும் உண்டு. பெரியபுராணத்தில் இதற்கான முறைமை விரவிக்கிடக்கின்றது. அடியார்களை
    1. எழுந்தருளுவித்தல்,
    2. பீடம் இட்டு அமரச்செய்தல்,
    3.நறுநீர் கொண்டு திருவடிகளை விளக்குதல்,
    4. விளக்கிய நீரை வீடெங்கும் தெளித்தல்,
    5. எஞ்சிய நீரை உள்ளும் பருகுதல்,
    6. பின் அவர்களுக்குப் பூசனை செய்தல்,
    7. இதன்பிறகு அவர்களுக்குத் திருவமுது படைத்தல் அவற்றோடு நிதி, ஆடை, உணவுப் பாத்திரம் ஆகியன தருதல்,
    ஆகிய நடைமுறைகளை உடையதாகச் சிவனடியார்களை வரவேற்று உணவளிக்கும்முறை அமைகின்றது.

    இதனை முறையே…
    1. ஆவாகனம்,
    2. தாபனம்,
    3.பாத்தியம்,
    4. அருக்கியம்,
    5. ஆசமனம்,
    6. அருச்சனை,
    7. நிவேதனம் ஆகியனவாக வடமொழியிலும் குறிக்கலாம். இம்முறைமைகளைக் குறைவறச் செய்து சிவத்தொண்டு ஆற்றியவர்கள் நாயன்மார்கள். அவர்கள் வழியில் நாமும் சிவனடியார்களைத் தொழுதல் செய்யவேண்டும்.

    1. எழுந்தருளுதல் (ஆவாகனம்):
    சிவனடியார்கள் ஊருக்குள் நுழையும்போதே கோவிலைக் கண்டு இன்புற்று அங்குள்ள இறைவனைக் காண ஏங்கி வருவர். முதல் வேலையாக எம்பிரானைக் கண்டபின்னே அந்த ஊரில் உணவு, தங்கல் போன்றனவற்றைப் பற்றிச் சிந்திப்பர். இந்நேரத்தில் அவ்வூர் அன்பர்கள் சிவனடியார்களைக் கண்டு அவர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல முன்வரவேண்டும்.

    ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர் என்பதோர் தன்மையால்
    நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்திமுன்
    கூர வந்து எதிர் கொண்டு கைகள் குவித்து நின்று செவிப்புலத்து
    ஈர மென்மதுரப் பதம்பரிவு எய்த முன்னுரை செய்தபின் (442)

    என்ற பாடல் இளையான்குடி மாற நாயனார் புராணத்தில் இடம்பெறுகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள “நேர வந்தவர் யாவர் ஆயினும்” என்பது சிறப்பு மிக்கத் தொடராகும். சிவனாரின் அடியார் என்ற நிலையில் அடியவர் யார் வந்தாலும் சாதி, இனம், மொழி எப்பாகுபாடும் பாராமல் அவர்களின் முன் சென்று கைகள் குவித்து, அவர்களின் செவிகளில் மதுர மொழிகளால் இனியன கூறி இல்லத்திற்கு அழைக்கவேண்டும் என்பது முறைமையாகின்றது. அடியார்களிடம் பேசும் நன்மொழிகளைக் கூடச் சேக்கிழார் தன் காப்பியத்தில் தந்துவிடுகிறார்.
    “நன்று உமது நல்வரவு, நங்கள் தவம்” (பாடல். 180) என்று சொல்லலாம்.
    “எந்தைபிரான் புரிதவத்தோர்; இவ்விடத்தே எழுந்தருள உய்ந்தொழிந்தேன் அடியேன்” (896) என்றும் கூறலாம்.
    “முந்தை எம் பெரும் தவத்தினால் என்கோ? முனிவர் இங்கு எழுந்தருளியது” (408) என்று குறிப்பிடலாம்.
    “முடிவில் தவம் செய்தேன் கொல்! முன்பொழியும் கருணை புரி வடிவு உடையீர். என்மனையில் வந்து அருளிற்று என்?” (1797) என்றும் பாராட்டலாம்.
    இவ்வாறு பலபட பாராட்டிச் சிவனடியாரை இல்லம் அழைத்துவருவது என்பது முதல் நிலை.

    2. பீடம் இட்டு அமரவைத்தல் (தாபனம்):
    வரவேற்று இல்லம் அழைத்து வந்த அடியார் இப்போது வீட்டு வாசலில் நிற்கிறார். யார் வந்தாலும் வீட்டுக்குள் அழைத்து அவர்களுக்கு இருக்கை தந்து உபசரிப்பது தமிழர் மரபு. வந்திருப்பவர் அடியார். வரவேற்பவர் அடியார். வந்தவரை வணங்கி வீட்டிற்குள் அழைத்து உரிய இருக்கையில் அமரவைப்பது என்பது அடுத்தபடிநிலையாகும்.

    அடியவர் அமரும் பீடம் வீட்டாரின் வசதிக்கு ஏற்றது என்றாலும், வீட்டிலே இருக்கும் உயர்ந்த ஆசனம் அதுவாக இருக்கவேண்டும். சந்தமலர் மாலைகள், முத்துமாலைகள் ஆகியன சூட்டப்பெற்ற ஆசனமாக அது இருப்பது நலமாகும். பொன் ஆசனம் என்றாலும் அதுவும் தகும். நம்வீட்டில் இருக்கும் ஆசனம் அடியவர் உட்காருவதன் காரணமாக பொன் ஆசனமாக மிளிர்கின்றது. “மண்டு காதலின் ஆதனத்து இடை வைத்தார்” இளையான்குடி மாற நாயனார்.

    3. நறுநீர் கொண்டு திருவடி விளக்குதல் (பாத்தியம்):
    வீடும் வேண்டா விறலினரான அடியவர், ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் அப்பெரியார் தற்போது ஆசனத்தில் அடிமைப் பாங்குடன் ஒதுங்கி அமர்கிறார். இச்சிறியவனுக்கு இச்செய்கை பொருந்துமா என்ற வெட்கம் அவரிடத்தில் எழ அவர் ஒதுங்கி அமர்கிறார். அவ்வாறு அமர்ந்திருக்கும் அவரின் திருப்பாதங்களை நறுநீர் கொண்டு விளக்குதல் அடுத்தமுறைமை ஆகும்.
    கொண்டு வந்து மனைபுகுந்து குலாவு பாதம் விளக்கினார் இளையான்குடிமாற நாயனார்.
    கமழ்நீர்க்கரகம் எடுத்து மனைவியார் ஏந்த, தூயநீரால் சோதியார் தம் கழல் வளிக்கினார் சிறுத்தொண்டர் (3735).
    பாதங்கள் விளக்க நீர் முன் அளித்தார் காரைக்கால் அம்மையார். (1739)
    இப்பாடலில் சிறுகுறிப்பு காணத்தக்கது. அடியவர் வந்துவிட்டார். கணவர் வீட்டில் இல்லை. இந்நிலையில் பெண்கள் அடியவரை வரவேற்பது சரியா. சிறுத்தொண்டர் புராணத்தில் அடியார் இல்லை என்பதால் வெளிநடப்பு செய்கிறார் அடியவர். இங்கு உள் நுழைகிறார் அடியவர். வரும் அடியவரைப் பொறுத்தது உள் வருவதும், வராததும். சிறுத்தொண்டர் புராணத்தில் அடியவரை வரவேற்கச் சிறுத்தொண்டரின் மனைவி தயாராக இருந்தும் அடியவரே நான் பெண்கள் தனித்திருக்கும் இடத்தல் வரமாட்டேன் என மறுத்துரைக்கிறார்.
    காரைக்கால் அம்மையார் புராணத்தில் கடையில் கணவன் இருக்க, வீட்டில் அடியவர் நுழைய, மறுக்காது வரவேற்கிறார் அம்மையார். அவருக்குக் கால்களை விளக்கத் தான் முனையாது நீர் முன் அளிப்பதாகச் சேக்கிழார் பாடுகிறார்.

    இதே நிலை ஏயர்கோன் கலிக்காமர் புராணத்திலும் வருகிறது. ஏயர்கோன் இருந்தும் இல்லாமல் இருக்கிறார். சுந்தரர் அந்நேரம் வருகிறார். அப்போது ஏயர்கோன் கலிக்காமர் மனைவி
    “தூயமணிப் பொன்தவிசில் எழுந்தருளி இருக்கத் தூநீரால் சேயமலர்ச் சேவடி விளக்கி” (3193)
    என்று தானே விளக்குகிறார். இங்கு கணவன் வீட்டில் இருக்கிறார். அவர் நினைவின்றி மயங்குகிறார். அவர் நினைவில் இருக்கையில் சிவனடியாரை வரவேற்பதில் ஏதும் குற்றம் வந்துவிடக் கூடாது என்ற நிலையில் ஏயர்கோன் கலிக்காமர் மனைவி கணவன் உடன் இருந்து செய்யும் பாதம் விளக்கலை அம்முறைப்படிச் செய்கிறார். இவ்வாறு வந்த அடியார் தன் கால்களை முன்னும் பின்னும் இழுத்து இப்பெருமை எனக்கானது அல்ல, சிவனுக்கானது என்று ஏற்கிறார்.

    4. விளக்கிய நீரை தம் மீதும், வீடெங்கும் தெளித்தல் (அருக்கியம்):
    அடியார் ஏற்றுக்கொண்ட பாதம் விளக்கலைச் செய்து முடித்த நிம்மதி இப்போது வரவேற்ற அடியாருக்கு வந்துவிட்டது. இருந்தாலும் இது போதாது என்று அவர் மனம் எண்ணுகிறது. அடியார் அடிகளை விளக்கிய நீரை வீடெங்கும் தெளித்து தன் வீட்டைப் புதுப்பிக்கிறார் அடியவர். இதுவே அடுத்த முறைமையாகும்.
    “முனைவரை உள் எழுந்தருளு வித்து அவர்தாள் முன்விளக்கும், புனைமலர் நீர் தங்கள்மேல் தெளித்து”( 1807) என்று அப்பூதி அடிகள் அடியார்க்குப் பெருமை சேர்க்கிறார்.
    ஏயர்கோன் கலிக்காமர் மனைவி “தூநீரால் சேயமலர் சேவடி விளக்கித் தெளித்துக்கொண்டார். செழும்புனலால் மேயசுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களித்தார்” (3193) அவர் தெளித்த நீர் ஏயர்கோன் உயிரையும் நீட்டித்திருக்க வேண்டும்.
    சிறுத்தொண்டர் “ஆய புனிதப்புனல் தங்கள் தலைமேல் ஆரத்தெளித்து இன்பம் மேய இல்லம் எம்மருங்கும் வீசி”(3735) பெருமை கொண்டார்.
    அடியவர் அடிகள் நீரை அவரறிந்தும் அறியாமலும் வீடெல்லாம் தெளித்துப் பெருமை கொண்டனர் அடியார் இல்லத்தார்.

    5. எஞ்சிய நீரை உள்ளும் பருகுதல் (ஆசமனம்):
    இல்லமெல்லாம் தெளித்து இல்லத்தைப் புதுமை செய்தபின் இன்னும் கொஞ்சம் அப்புனிதநீர் இருப்பதனால் தன் உள்ளுக்குப் பருகுகின்றனர் இல்லத்தார். அப்பூதியார் உள்ளும் பூரித்த நிலை (1807) பாடலால் தெரியவருகிறது.

    6. பூசனை (அருச்சனை):
    அடியவர் ஆசனத்தில் இனிது அமர்ந்துள்ளார். அவருக்குப் பாதபூசை செய்யப்பெற்றது. அதன்பின் அவருக்கு அர்ச்சனைகள் செய்யவேண்டுவது முறையாகும். அருச்சனை செய்தபின் (443), ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து (1808), உளம்களிப்ப ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார் (3193), ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார் (3735) என்று அடியவரை ஆண்டவனாகவே எண்ணிப் பூசை செய்த நாயன்மார்தம் செய்கையைப் பெரியபுராணத்தில் காட்டுவார் சேக்கிழார். மலர்கள், சந்தனம், தீபம், தூபம் கொண்டு அடியவருக்குப் பூசனை நிகழ்த்தப்படுகிறது. அடியவரின் உடலுக்கும், உள்ளத்திற்கும், நினைவிற்கும், செயலிற்கும் நடத்தும் இப்பூசனை சிவபூசனையைவிடச் சிறந்தது. ஏனெனில் இப்பூசனை மெய்க்கு மெய்யாக நடத்தப்படும் பூசனையாகும். இறைவனுக்கும் மனத்தாலே, செய்கையாலே பூசனை செய்யலாம். அதனை இறைவன் ஏற்றானா என்பது சந்தேகம்தான். ஆனால் மெய்க்கு மெய்யாக இங்கு அடியவர் பூசனை நிகழ்த்தப்படுகிறது.

    7. திருவமுது படைத்தல் (நிவேதனம்):
    பூசனை முடிந்தபின் திருவமுது படைப்பது என்பது நியதி. இத்திருவமுது காலம் கடத்தாமல் நன்பகல் தாண்டாமல் படைக்கப்படவேண்டும். காய்கறி உணவு ஏதும் ஆயத்தமாகவில்லை என்றாலும் திருவமுது (சோறு) மட்டும் தயிருடன் தரப்படலாம். அப்படித் தந்தவர் காரைக்கால் அம்மையார்.
    “நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு வல்விரைந்து வந்தணைந்து படைத்து மனமகிழ்ச்சியினால் அல்லல் தீர்ப்பவர் அடியார்தமை அமுது செய்வித்தார்” (1741) என்று திருவமுது படைத்தார் காரைக்கால் அம்மையார்.
    பசி போக்கும் இனிய தொண்டு சிவத்தொண்டு ஆகும். பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் நிலையில் பசி கடக்கா வண்ணம் உணவிடுவது முக்கியம். உணவின் தரம், வகை ஆகியவற்றில் விடுதல் இருந்தாலும் உணவிடுவது காலத்திற்கு நடக்கவேண்டும் என்பது முறைமையாகும்.
    “உண்டி நாலுவித்தில் ஆறுசுவைத்திறனில் ஒப்பிலா அண்டர் நாயகன் தொண்டர் இச்சையில் அமுது செய அளித்துள்ளார்” (443) இளையான்குடி மாற நாயனார்.
    திருநாவுக்கரசு சுவாமிகள் அப்பூதி அடிகளின் வீட்டில் அமுது உண்கிறார். திருவமுதை இல்லமாதர் எடுத்து நல்க கொத்து அவிற் கொன்றை வேணிக் கூத்தனார் அடியாரோடும் அருந்தமிழ் ஆளியார் அங்கு அவர் அமுது செய்கின்றனார். அப்பூதியடிகள் வீட்டில் ஒரே ஒரு அடியவர் அதாவது திருநாவுக்கரசர் மட்டுமே உணவு உண்ண வந்திருக்க அடியாருடன் உண்டதாகச் சேக்கிழார் குறிக்கிறார். அடியார் உண்ணும் உணவு அதனை உண்ணும் அத்தனை பேரும் அடியாராக மாறும் திறம் இதுவேயாகும்.

    வந்திருக்கும் அடியவர் முன் அவர் மனம் கோணாதபடி உணவுகளைப் பரிமாறுகின்றனர் சிறுத்தொண்டரின் இல்லத்தார். “புனிதர் தம்மைப் போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின் வனிதையரும், கணவரும் முன் வணங்கிக் கேட்ப மற்று அவர்தாம் இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் ஒக்கப்படைக்க” (3736) என்கிறார். இப்பாடலடியின்படி கற்பில் சிறந்த பெருமாட்டியும், பெருமை குன்றாமல் வாழ்ந்து வரும் சிறுத்தொண்டரும் விருந்துக்கான உணவுப்பொருட்களைப் பரிமாறிய நிகழ்வை அறிந்து கொள்ளமுடிகின்றது.

    சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரருக்கு உணவு படைக்கிறார். இருவரும் தோழர் என்றாலும் அங்கும் அடியார்தமை வணங்கும் முறைமை பின்பற்றப்படுகிறது.

    “பெருமான் வேண்ட எதிர் மறுக்க
    மாட்டார் அன்பின் பெருந்தகையார்
    திருமா நெடுந்தோள் உதியர்பிரான்
    செய்த எல்லாம் கண்டிருந்தார்
    அருமானங்கொள் பூசனைகள்
    அடைவே எல்லாம் அளித்ததன்பின்
    ஒருமாமதி வெண்குடை வேந்தர்
    உடனே அமுது செய்து உவந்தார்” (3904)

    என்று அடியாரை உபசரித்தலைப் பூசனை என்ற ஒரு சொல்லால் இங்குக் குறிக்கிறார் சேக்கிழார். இச்சொல்லுக்குள் முன் சொன்ன படிநிலைகள் அனைத்தும் அடங்கிவிடுகின்றன. வரவேற்றல் முதல் பூசனை வரை அனைத்தும் நிகழ அடுத்து உணவு உண்ணும் நிலை வந்தது என்பதை இப்பாடல் தெரிவிக்கின்றது.

    இவ்வாறு அடியார்களை அழைத்துச் சிவ உணவைத் தந்து மகிழச் சேக்கிழார் ஒரு செயல்திட்டம் வரைந்து அளித்துள்ளார். இதன்பின் அடைக்காய், வெற்றிலை, பசுங்கர்ப்பூரம் போன்றன நல்கி இப்படையலைச் செழுமைப்படுத்தவேண்டும். உண்ட அடியவர் மனம் மகிழ்ந்து தன் உணவைச் சிவ உணவாகச் சிவனுக்கு ஆக்குகிறார். அடியவர் வழியாக உண்ணும் முறைமையே ஆண்டவனின் உண்ணும் முற்றாகின்றது.

    “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
    பொன்னம் பாலிக்கும் மேலும் பூமிசை
    என்னம் பாலிக்கும் மாறுகண் டின்புற
    இன்னம் பாலிக்குமோ இப்பிறவி” (அப்பர் தேவாரம்)

    என்ற பாடலின்வழி அன்னம் பாலித்த அடியார்கள் தில்லைச் சிற்றம்பலத்தின் தொடர்பு பெற்றவர்கள் ஆகின்றார்கள். இதன்பின் அடியவருக்கு ஆடை, அணி, மணி, மலர்கள், திரு ஆபரண வர்க்கங்கள் எனப்பல தந்து இந்தச் சிவபூசையை நிறைவேற்றவேண்டும் என்பது சேக்கிழார் காட்டும் அடியார் வணக்க நடைமுறையாகும்.

    இந்நடைமுறையில் நின்று நாளும் நம் இல்ல விருந்தைச் சிவ விருந்தாக மாற்றுவோம். சிவத்திற்கு எல்லாம் அளிக்கும் நன்முறையே சிவநடைமுறை.

     

     

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழ்த்துறைத் தலைவர்,
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    திருவாடானை

     

    Share
  • சைவத்தின் தொன்மை

    — முனைவர் மு.பழனியப்பன்.

    சமயம் என்பது ஓர் அமைப்பு, நிறுவனம். இது அமைப்பாகவும் நிறுவனமாகவும் வளர்வதற்கு முன்னால் தனிமனிதனின் விழைவாக இருந்திருக்க வேண்டும். தனிமனித விழைவு விருப்பம் அவன் குழுவால் ஏற்கப்படும்போது அது சற்று விரிகிறது. குழுவிலிருந்து மற்ற குழுக்களுக்கு அது விரிய இன்னும் பரவலாகிறது. நாடுகளுக்கு விரிய உலக அளவில் விரிகிறது. தனிமனித விழைவில் தொடங்கிய இந்தப் பயணம் உலகை அடைய எத்தனை நூற்றாண்டுகள் கடந்திருக்க வேண்டும். இந்நூற்றாண்டுகளில் ஏற்ற இறக்கங்கள், அழிவுகள், பேரழிவுகள் போன்ற பலவற்றைச் சந்தித்திருக்க வேண்டும்.

    இன்றைக்குப் பல நாடுகளில் சைவ சமயச் சின்னங்களும், கோயில்களும், வழிபாட்டு மரபுகளும் பெருமளவில் பரவிக் கிடப்பதைக் காணும்போது அதன் ஆதி நிலை என்பது எப்படி ஒற்றைமனிதனின் சிந்தனையில் உதித்தது என்பதை அறியவேண்டியுள்ளது. அந்த ஒற்றை மனிதன் கண்ட மெய்ஞ்ஞானம் உலக மெய்ஞ்ஞானமாக ஏற்கப் பெற்றுப் பரவி இன்றைக்கும், என்றைக்கும் மெய்ஞ்ஞானப்பெருவெளியில் தனித்த இடம் பெற்றுள்ளது என்றால் அந்தத் தனிமனிதன் கண்டுபிடித்த இறைஞானம் பெரிதா, தனி மனிதச் சிந்தனை பெரிதா என்ற எண்ணம் தோன்றுகிறது. இருப்பினும் சைவத்தின் மூல விதையை ஊன்றிய தனிமனிதன் யாரெனத் தெரியாமல் இருப்பதே சைவத்தின் சிறப்பாகின்றது. புத்தமதம் புத்தரின் விருப்பத்தை ஒட்டியது என்றால், வர்த்தமானரின் சமணம் அவரின் விருப்பத்தை ஒட்டியது என்றால் சைவம் என்பது எந்தத் தனிமனிதனின் விருப்பம் என்பதற்கு என்றைக்குமே பதிலில்லை. ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியை மனித குலத்தின் ஆதியிலேயே பெயரறியா மனிதனொருவன் கண்டறிந்து கொண்டுள்ளான். சிவனே தானே சைவத்தை உருவாக்கியிருக்கிறான். அவனே தன்னை அர்ச்சித்துக் கொண்டிருக்கிறான். ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதியாக அவன் இருக்கிறான். இந்த நிலையில் ஒவ்வொரு தனிமனிதரின் ஆன்மபலத்துக்குள்ளும் அச்சிவன் இருந்து கொண்டிருக்கிறான்.

    தமிழுக்குச் சங்கம் வைக்கிறார்கள். அச்சங்கத்தின் முதல் புலவன் இறையனார் என்றால் அந்த முதல் மனிதனும் இறையானார்தானே. தமிழகத்தில் இறையனார் என்ற ஒரு பெயரே இருந்திருக்கிறது என்றால் அந்தப் பெயரே சிவனுக்கு ஆகியது என்றால் தமிழகத்தில் சங்ககாலத்தில் வேறு தெய்வமில்லை என்பதுதானே பொருள்.

    தனித்த மூலத்தில் இருந்து கிளம்பி, என்றைக்கும் உலகை ஆக்கி, அழித்து, இயக்கி நிற்கும் பரம்பொருள் தன்மை உடைய சிவனே முதல்வன் என்றால் அவனே சைவத்தின் தோற்றுவாய் என்பதில் மறுகருத்திற்கு இடமிருக்கப் போவதில்லை.

    இன்றைக்கு உலக அளவில் பரவியுள்ள சைவ சமயத்தின் ஆதி விதையைத் தேடிப் பயணிப்பது என்பது பல்வேறு யுகங்கள், நாகரீகங்கள் கடந்த முயற்சியாகும். இம்முயற்சியில் எழுத்துச் சான்றுகள், புதைபொருள் சான்றுகள், பண்பாட்டுச் சான்றுகள் போன்றவற்றையும் உட்படுத்தியாக வேண்டியுள்ளது. குறிப்பாக எழுத்து வடிவம் என்றபோது வேதங்களையும், புதைபொருள் சான்றுகள் என்றபோது ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகியவற்றில் கிடைத்த பொருள்களையும், பண்பாட்டுச் சான்றுகள் என்றபோது தற்போது எச்சமாகக் கிடக்கும் வழிபாடு சார்ந்த பண்பாடுகளையும் உட்படுத்திச் சைவ சமயத்தின் பழமையை நிறுவவேண்டியுள்ளது.

    சிந்து சமவெளி நாகரீகமும் – சைவ சமய அடையாளங்களும்:
    ஆங்கிலேயர்களின் இருப்புப்பாதை பதித்தல் பணியின்போது தற்போதைய பாகிஸ்தான் பகுதிகளை ஒட்டி அமைந்த சிந்துசமவெளிப் பகுதிகளில் புதையுண்ட இரு நகரங்களைக் கண்டுபிடித்தார்கள். அந்த நகரங்கள் தொன்மைக் காலம் நாகரீகச் சான்றுகளாகக் கொள்ளப்பெற்றன. சிந்துசமவெளி நாகரீகம் என்று அழைக்கப்பெற்று அதன் மீதான ஆய்வுகள், அகழ்வு ஆய்வுகள் தொடங்கப்பெற்றன.

    சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் என்று ஆய்வாளர்களால் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. அதன் கலை, பண்பாடு, சமயம் போன்ற பற்றிய பல கருத்துகள் ஆய்வாளர்கள் வாயிலாக வெளியிடப்பெற்றது. அங்கு கிடைத்த ஒரு முத்திரை மிக முக்கியமான சமயச் சான்றாக விளங்குகின்றது.

    hindus valley
    பசுபதி வடிவ முத்திரை

    1930 ஆம் ஆண்டில் இப்பகுதியை ஆய்வு செய்த ஜான் மார்சல் என்ற அறிஞர் அங்கு கிடைத்த ஒரு முத்திரையை யோகி வடிவ முத்திரை என்றும். யோகிகளுள் சிறந்தவரான சிவனின் உருவம் அது என்றும் இந்த முத்திரையைக் குறித்து அறிவித்தார். இரு கொம்புகளைத் தாங்கிய நிலையில் கால்களை மடித்து அமர்ந்த கோலத்தில் விலங்கினங்கள் சூழ இம்முத்திரை அமைந்துள்ளது. இதன் காரணமாக இதனை அவர் சிவபெருமானின் உருவம் என்றார்.

    ஆனால், பின்னால் வந்த அறிஞர்கள் பலர்இது பெண் தெய்வம் என்றும், புத்த சமயத்தின் ஆதிவடிவம் என்றும், சமணத் தீர்த்தங்கரரின் முன் நிலை என்றும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டனர். ஆய்வு உலகில் இன்னமும் இது குறித்தான சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

    இவற்றை ஒருபுறம் வைத்துக்கொண்டாலும் சிந்துசமவெளிப் பகுதிகளில் பல்வேறு சிவலிங்க வடிவங்கள் கிடைத்துள்ளன.

    hindus valley2
    இந்த உருவச் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே சிவலிங்க வழிபாடு இருந்துள்ளது என்பது தெரியவருகிறது. இதன் காலம் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது இப்போது இருக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளைத் தள்ளிவிட்டுப் பார்த்தால் கி. மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சைவ சமயம் என்பது தெரியவருகிறது.

    ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துசமவெளியில் சைவ சமயப் பண்பாட்டு எச்சங்கள் இருந்துள்ளன என்றால் அதற்கு முன்போ சைவ சமயம் தோன்றியிருக்க வேண்டும் என்பது குறிக்கத்தக்கதாகும்.

    வேதங்கள் சுட்டும் பழமை:
    இந்தியாவின் மிகப் பழமை வாய்ந்த எழுத்தாவணங்கள் வேதங்கள் ஆகும். நால்வகை வேதங்களில் யஜுர் வேதத்தில் மையப்பகுதியில் அமைந்திருப்பது ருத்ரம் என்பதாகும். இது சமகம் நமகம் என்று இருபிரிவுகளை உடையது. சமகம் என்ற பகுதியில் நமக்கு வேண்டும் பொருள்களின் பட்டியலும், நமகம் என்பதில் சிவபெருமானுக்கான பெயர்கள் பலவும் தரப்பெற்றுள்ளன. இவ்வேதப் பகுதி தவிர ரிக் வேதத்திலும் சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ருத்திரன் என்ற பெயரைச் சிவனாகக் கொள்ளலாம் என்றாலும் சிவனுக்கு உரியப் பல தன்மைகளுக்கு முரணாக சில பகுதிகளும் ருத்திரத்தில் காணப்படுகிறது. பசுபதி – விலங்குகளின் தலைவன் என்று யஜுர் வேதம் ருத்திரனைக் குறிப்பிடுகிறது. அம்பிகாவின் உடன் பிறந்தவன் ருத்திரன் என்றும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவற்றால் ருத்திரன் வேறு சிவன் வேறு என்று வேற்றுமை பாராட்டினாலும் பெரும்பாலும் ருத்திரன் என்ற பெயர் சிவனுக்கு உரியது என்பதே சரியாகும்.

    யஜுர், ரிக் வேதங்களில் சிவன் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருப்பதால் சைவத்தின் அடிப்படைகளை வேதங்களே சொல்லியுள்ளன என்ற அடிப்படையில் சைவம் வேதகாலத்திற்கும் முந்தைய சமயம் என்பதும், அது ஆரியர் வருகைக்கு, ஆரிய எழுச்சிக்கு முன்பே இருந்த திராவிட கலாச்சாரம் என்பதும் இவற்றின் வழி தெளிவாகின்றது.

    பண்டைத்தமிழ்ப் பனுவல்களின் வாயிலாகப் பெறப்படும் சைவ சமயத் தொன்மை தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் தமிழின் பழமையான பனுவல்கள் ஆகும். இவற்றில் பல இடங்களில் சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் கடவுள் என்ற சொல் காணப்படுகிறது.

    காமப்பகுதி கடவுளும் வரையார் (தொல்காப்பியம். புறத்திணையியல், 81) என்று தொல்காப்பியர் கருதும் கடவுள் முழு முதற் கடவுள் என்று கொண்டால் அவர் சிவபெருமான் என்று கொள்வது பொருத்தமானதாகும்.

    ‘‘கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
    வடுநீங்கு சிறப்பின் முதலான மூன்றும்
    கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே’’
    (பொருளதிகாரம், புறத்திணையியல், 85)

    என்ற தொல்காப்பிய நூற்பாவிலும் கடவுள் என்ற சொல் பயின்று வந்துள்ளது. இவை அனைத்தும் சிவபெருமானைக் குறிப்பாகக் கொள்ளலாம்.
    மற்றொரு இடத்தில்,

    ‘‘வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப
    பழிதீர் செல்வமொடு வழி வழி சிறந்து
    பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே’’
    (தொல்காப்பியம், பொருளதிகாரம், 415)

    என்ற நூற்பா இடம்பெற்றுள்ளது. இதில் உள்ளவழிபடு தெய்வம் என்ற சொல் வழிபடக் கூடிய தெய்வம் உண்டென்று சொல்வதன் காரணமாக அது சிவபெருமானைக் குறித்தது என்று கொள்ளமுடிகின்றது.

    இவ்வாறு தொல்காப்பிய காலத்தில் தெய்வம், கடவுள் என்ற பொதுப்பெயர்கள் அக்காலத்தில் வழிபடு தெய்வமாக இருந்த சிவபெருமானைக் குறித்தது என்று முடிவு கொள்ளவேண்டியுள்ளது.

    சங்க இலக்கியங்களில் சைவ சமயத்தின் தொன்மை பற்றிய செய்திகள்:
    சங்க இலக்கியங்களில் சிவன் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன.

    “நீரும் நிலனும் தீயும் வளியும்
    மாக விசும்போடு ஐந்துடன் இயற்றிய
    மழுவாள் நெடியோன் தலைவனாக’’
    (மதுரைக் காஞ்சி453-455).

    என்ற சங்க இலக்கியப் பகுதியில், நெடியோன் என்று சிவபெருமான் குறிப்பிடப் பெறுகிறார்.

    இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
    உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
    ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
    தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை
    எடுக்கல் செல்லாது உழப்பவன் போல……..
    (கலித்தொகை, 38)

    என்று கலித்தொகையில் இராவணனை வென்ற புராணச் செய்தி குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு பல நிலைகளில் சிவன் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

    இம்முன்னோடி இலக்கியங்களை முன்வைத்து இதன் பின்பு எழுந்த சைவத் திருமுறைகள், சைவசிந்தாந்த நூல்கள், சிற்றிலக்கியங்கள் காப்பியங்கள் போன்றன சைவத்தின் பெருமையையும், வலிமையையும் உலகிற்கு எடுத்துரைத்தன.

    அவற்றைச் சைவ பெருமக்கள் தன் உள்ளத்திலும் உடலிலும் உயிரிலும், உணர்விலும் கலந்து அனுபவிப்பதால் சிவானுபவம் பெருகுகிறது. தொன்மை வளருகிறது.

    ————————————————————————–

    முனைவர் மு.பழனியப்பன்
    இணைப்பேராசிரியர்,
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

    Share
  • முன்பு பின்பு இன்றி: கம்பரின் எதிர்காலவியல் சிந்தனைகள்

    – முனைவர் மு.பழனியப்பன்.

    முன்பு பின்பு இன்றி

    (கம்பரின் எதிர்காலவியல் சிந்தனைகள்)

    Raman

    முக்காலங்களில் சிறப்படையது எதிர்காலம். இன்றைய காலத்தில் நின்றுகொண்டு, நேற்றைய காலங்களில் நடந்த தவறுகளைத் திருத்திக்கொண்டு நாளைய காலத்தை வளமாக அமைத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதால் எதிர்காலம் நம்பிக்கைக்குரிய காலமாக விளங்குகின்றது. எதிர்காலத்தில் நிகழ உள்ள, நிகழவேண்டிய நடப்புகளை இன்றைக்கு அல்லது நேற்றைக்குச் சொல்லுவது என்பது எதிர்காலவியல் ஆகின்றது. வரலாறு (https://ta.wikipedia.org/s/a8d) தற்கால மாற்றங்களின் போக்குக்கள், விஞ்ஞான (https://ta.wikipedia.org/s/1bl) தொழில்நுட்ப வளர்ச்சி நிலைகள் போன்ற பல அம்சங்களின் துணையுடன் எதிர்காலத்தை நோக்கி பகுப்பாய்வது, வருவதுரைப்பது எதிர்காலவியல் (Future Studies) ஆகும் என்று எதிர்காலவியலுக்கான வரையறையைத் தருகின்றது விக்கிப்பீடியா. அறிவியல், சமுதாயம் போன்றவற்றில் தகுதி மிக்க வளர்ச்சிகளை எடுத்துரைப்பது எதிர்காலவியல் ஆகின்றது.

    கம்பராமாயணம் தொன்மை வாய்ந்த கதையாகும். இக்கதையை மீட்டு எடுத்துத் தமிழில் தன்னிகரற்ற காப்பியமாகக் கம்பர் வரைகின்றார். கம்பர் காலத்தில் இருந்து இதனைக் கண்ணுறும்போது கம்பரின் காலம் நிகழ்காலம் ஆகும். இராமாயணக்காலம் கடந்த காலம் ஆகும். கம்பராமாயணம் தற்போது ஆராயப்படும் காலத்தில், படிக்கப்படும் காலத்தில் அது எதிர்காலத்திற்கும் பொருந்துவதாகப் படைக்கப்பெற்றிருப்பது தெரியவருகின்றது. பற்பல புதிய துறைகளில் கம்பர் தன் கருத்துகளைப் பதிவு செய்திருப்பது கருதி எதிர்கால எல்லைக்கும் ஏற்ற வகையில் கம்பர் தன் காப்பியத்தைப் படைத்துள்ளார் என்பது தெரியவருகின்றது.

    கம்பராமாயணத்தில் இராமனுக்கு முடிசூட்டுவிழா நடைபெறப் போகிற சூழலில் எதிர்காலத்தில் அமையவிருக்கும் ஆட்சியைப் பற்றியும் அது நடைபெறவேண்டிய நெறிகள் பற்றியும் வசிட்டர் எடுத்துரைக்கிறார். இதனைத் தொடர்ந்து இராமன் கிட்கிந்தை அரசைப் பெற்று அதனை சுக்கிரீவனிடத்தில் ஒப்படைக்கின்றபோதும் எதிர்காலச் சிந்தனைகள் பொருந்திய அரசினைச் சமுதாயத்தைப் படைக்க எடுத்துக்கொண்ட முயற்சி தெரியவருகின்றது. அதுபோன்று வீடணனுக்கு அரசை அளிக்கின்றபோதும் எதிர்காலத்தில் இலங்கையில் நல்லாட்சி நடைபெறவேண்டும் என்ற எண்ணத்துடன் இராமன் செயல்படுவதாகக் கம்பர் காட்டுகின்றார். இந்த மூன்று அரசியல் சூழல்கள் மிக முக்கியமானவை… இவற்றை ஒருங்கிணைத்துப் பார்த்தால் கம்பரின் எதிர்காலக் கணிப்புகள் இவை என்பதை உணர்ந்து கொள்ள இயலும்.

    இந்த மூன்று சூழல்களிலும் அரசிற்கு அனுபவம் இல்லாத புதியவர்கள் அரசுரிமை ஏற்க வருகிறார்கள் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. அதாவது இராமன், சுக்கிரீவன், வீடணன் ஆகிய மூவரும் முதன் முறையாக அரச பதவி ஏற்கப் போகிறார்கள். புதியவர்களாக உள்ள இவர்களிடம் அரசியல், ஆட்சியியல் ஆகியவற்றை ஒப்படைக்கும்போது பழைய குறைகள் களையப்படும் என்று கம்பர் எண்ணியுள்ளார். புதியதோர் உலகைப் படைக்கப் புதியவர்கள் மிகத் தகுதியானவர்கள் என்பது இங்குக் கருதத்தக்கது. மேலும் இம்மூன்று சூழல்களிலும் மூவகை வேறுபாடுகள் இருப்பதை உணரவேண்டியுள்ளது.

    இராமன் என்ற புதியவருக்கு அரசு நாளை என்று அமைந்தபோது அது அடையப்படாமல் கதை நகர்கிறது. வீடணனுக்கு உரிமை என்பது இலங்கை அரசாக இராவணன் இருக்கும்போதே ஏற்படுத்தப் பட்டுவிடுகின்றது. சுக்ரீவனின் அரசு மட்டுமே முன் உள்ள அரசியலாளரான வாலி இறந்தபின் அந்த இடத்தை நிரப்புவதற்காக ஏற்படுத்தப்படுகிறது. இம்மூன்று அரசுகளை அமைக்கின்றபோது சுக்கிரீவனின் கிட்கிந்தை அரசு மட்டுமே உறுதி என்ற நோக்கத்தில் அமைந்தது என்பதை அறியவேண்டியுள்ளது. இராமனின் ஆட்சிக் கனவு கலைகின்றது. வீடணனின் ஆட்சி என்பது இராவணன் அரசனாக இருக்கும்போது மாற்று அரசாக உருவாக்கப்பெற்றது. இந்தச் சிற்சில வேறுபாடுகள் காரணமாக சுக்கிரீவனின் அரசினைச் செம்மைப்படுத்த இராமன் பற்பல கருத்துகளை மொழிய வேண்டியவராகப் படைக்கப்பெற்றுள்ளான்.

    வசிட்டர் வழியில் எதிர்காலச் சமுதாயமும், அரசும்:
    இராமனுக்கு நாளை முடிசூட்டுவிழா என்ற நிலையில் வசிட்டர் நாளைக்கு அரசமைக்க உள்ள இராமனுக்குச் சில அறிவுரைகளைப் பகர்கின்றார். இவ்வறிவுரைகள் கம்பரின் எதிர்காலச் சிந்தனைகளை எடுத்தியம்புவனவாக இருக்கின்றன.

    ‘‘என்புதோல் உடையார்க்கும் இலார்க்கும் தாம்
    வன் பகைப்புலன்மாசு அற மாய்ப்பது என்?
    முன்பு பின்பு இன்றி மூவுலகத்தினும்
    அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ’’
    ( மந்தரை சூழ்ச்சிப்படலம்-24)

    என்ற பாடல் எதிர்காலவியல் சிந்தனை கொண்ட பாடலாகும். முக்காலம், பிற்காலமாகிய எதிர்காலம் ஆகிய எல்லா காலத்திலும் அன்பின் அடிப்படையில் சமுதாயம் அமையவேண்டும் என்ற விழைவினை இப்பாடல் தெரிவிக்கின்றது.

    எதிர்காலத்தில் ஆட்சியாளர்கள் கைக்கொள்ளவேண்டிய பண்புகளை மற்றொரு பாடல்வழி வசிட்டர் இராமனுக்கு உணர்த்துகிறார்.

    ‘‘வையம் மன்னுயிர் ஆக அம் மன்உயிர்
    உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு
    ஐயம் இன்றி, அறம் கடவாது, அருள்
    மெய்யில் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ
    ( மந்தரை சூழ்ச்சிப்படலம்-25)

    இப்பாடலில் எதிர்கால ஆட்சி ஐயத்தின்மை இல்லாமல் தெளிவு பட இருக்க வேண்டும் என்கிறது. அவ்வாறாயின் ஆட்சிக்கு வருபவர்கள் அவர்களின் வழி ஆகியன எந்தக் குடிமகனுக்கும் ஐயத்தைத் தராத வகையிலும், ஆட்சியாளரின் வாழ்முறையில் எவ்வித சந்தேகத் தன்மையும் இல்லாமல் இருத்தலாகும். அறத்தைக் கடக்காமல், உண்மையில் நின்று செய்யும் ஆட்சியே எதிர்காலத்தில் வேண்டப்படுவது என்பது இங்குக் குறிக்கத்தக்கது.

    அடுத்தடுத்த பாடல்களில் அரசனுக்கு வேண்டிய குணங்களைப் பட்டியலிடும் வசிட்டர் இன்னும் பல செய்திகளைத் தொடர்ந்து அடுக்குகிறார். பொன்னை நிறுக்கும் தாராசின் இயல்பினைப் போல நடுவுநிலைமையோடு ஆட்சியாளன் அமையவேண்டும். அமைச்சரும், சான்றோரும் சொல்லிய முறையில் அவன் ஆட்சி நடத்தவேண்டும்.

    மங்கையரால் வரும் காமத்தை அரசியலாளர்கள் துறக்கவேண்டும் என்பதும் இங்கு வசிட்டரால் வைக்கப்படும் வேண்டுகோள். இவற்றையெல்லாம் தாண்டி போர் அற்ற எதிர்கால உலகைக் கம்பர் இங்குக் கனவு காண்கிறார்.

    ‘யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,
    போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
    தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்,
    வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?
    ( மந்தரை சூழ்ச்சிப்படலம்-21)

    என்ற இப்பாடல் இன்றுவரை எதிர்காலவியல் பாதையாகவே அமைந்துள்ளது. வசிட்டர் இராமனுக்குச் சொன்ன இவ்வுரைகள் எதிர்காலத்தில் யார் ஆட்சியாளர்களாக வந்தாலும் ஏற்று நடக்கவேண்டிய நல்லுரைகள் ஆகும்.

    இராமனின் வழியில் எதிர்காலச் சமுதாயமும் ஆட்சியும்:
    இராமன் சுக்கிரீவனுக்கும், வீடணனுக்கும் அவர்களின் ஆட்சிக்காலத்தில் மக்களும், சமுதாயமும் நடக்க வேண்டிய முறைகளை அவர்களின் முடி புனையும் காலத்தில் எடுத்துரைக்கின்றான். இவற்றைத் தொகுத்துக் காணுகையில் இவை கம்பரின் எதிர்காலச் சிந்தனைகளை எடுத்துரைப்பதாக உள்ளன.

    அரசன் தன் சுற்றத்தோடு இயைந்து நடக்கவேண்டியமுறையை இராமன் ‘‘சேய்மையோடு அணிமை’’என்ற கொள்கையைப் பின்பற்றவேண்டும் என்கிறான். அதாவது அரசியல் சுற்றத்தை மிக நெருங்காமலும், மிக அணுகாமலும் இருக்க வேண்டும் என்ற அரசியல் நடைமுறை இங்குக் கற்றுத்தரப்படுகின்றது.

    மேலும் அரசியல் வல்ல அமைச்சர்கள் சொல்லும் சொற்களை ஏற்று அவர்கள் காட்டும் வினையத்தையும் ஏற்று ஆட்சி நடத்தவேண்டும் என்பது இராமனின் கூற்று. மேலும் சமுதாயம் என்பது மூவகையினரை உடையது என்கிறான் இராமன். நண்பர், அயலார், விரவார் என்போர் அம்மூவர் ஆவர். எதிர்கால சமுதாயத்தினைப் பற்றியது இக்கருத்து. இதில் எதிரிகள் இல்லாமல் இருப்பது கருதத்தக்கது.

    எதிர்கால சமுதாயம் எளியோர்களைத் துன்பப்படுத்தும் சமுதாயமாக இருந்துவிடக்கூடாது என்பது கம்பரின் எண்ணம்.

    ‘‘சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல்; மற்று, இந்
    நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
    குறியது ஆம் மேனி ஆய கூனியால், குவவுத் தோளாய்!
    வெறியன எய்தி, நொய்தின் வெந் துயர்க் கடலின் வீழ்ந்தேன்.”
    (அரசியல் படலம், 417)

    என்ற இந்தப் பாடலில் நலிந்தோர்க்கும் நல்லரசாக எதிர்கால அரசுஅமைய வேண்டும் என்ற எண்ணத்தைக் கம்பர் பதிவுசெய்கிறார்.

    குறிப்பாக இங்கும் மங்கையர் பொருட்டால் மரணம் எய்தும் என்று மகளிர்க்குத் துன்பம் தராத அரசாக எதிர்கால அரசுஅமைய வேண்டும் என்று கம்பர் விரும்புகின்றார்.

    எதிர்கால சமுதாயத்தில் பாதுகாக்கத்தக்கவர்கள் பாதுகாக்கப்படவேண்டும், தீயவரை அறத்தின் வழியில் தண்டனைக்கு உள்ளாக்கவேண்டும் என்ற நெறிகளையும் பின்பற்ற இராமன் வாயிலாக கம்பர் வேண்டுகின்றார். அறத்தின் வழி அரசு நிலவ வேண்டும் என்பதும் கம்பரின் எதிர்கால அரசியல் நெறிகளுள் ஒன்று.

    இவற்றைத் தொகுத்துக் காணுகையில் தற்காலத்தில் நடக்கும் சமுதாயக் கேடுகள் அவற்றைத் தீர்க்கும் முறைகள் ஆகியனவற்றைக் கம்பர் எதிர்கால நோக்கில் தன் இலக்கியத்தில் சிந்தித்திருப்பது தெரியவருகின்றது,

    வீடணனுக்கு முடி சூட்டப்படும்காலத்தில் அவனிடத்தில் ஓரிரு செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமே இராமனுக்கு நேரம்வாய்க்கின்றது.

    ‘‘இனிது இருத்தி, இலங்கைச்செல்வம் நின்னதே ’’ என்று சிற்சில சொற்கள் பேசி இராமன் வீடணனுக்கு எதிர்காலத்தில் அமையப்போகிற அரசை வழங்குகின்றான். இந்த நிகழ்வால் ‘‘தனித்தனி வாழ்ந்தேம் என்ன ஆர்த்தன உலகில் உள்ள சராசரம் அனைத்தும் அம்மா ’’ ( வீடணன் அடைக்கலப்படலம், 140) என்று குறிப்பிடுகின்றார் கம்பர். இதன்வழி எதிர்கால சமுதாயத்தில் தனித்தனியாக உள்ள அத்தனை உயிர்க்குடும்பங்களும் மகிழும்படியான ஆட்சி மலரவேண்டும் என்று கண்டுள்ளார் என முடிய முடிகின்றது.

    கம்பர் காலத்தில் எதிர்காலமாக விளங்கிய இந்நிகழ்காலம் சிறப்பாக அமைய, இந்நிகழ்காலக் கொடுமைகள் நீங்கக் கம்பர் பலவாறு சிந்தித்துள்ளார். இந்நிகழ்காலத்திலிருந்தும் இன்னும் பயணிக்க உள்ள எதிர்காலம் வரையிலும் கம்பரின் கருத்துகள் வேண்டற்பாலன.

    படம் உதவி: http://danvantripeedam.blogspot.com/2015/03/blog-post_23.html
    http://4.bp.blogspot.com/-qRz2sYWIA6Q/VQ98J6D3s-I/AAAAAAAARKM/85IRhFAVOYA/s1600/Raman.jpg

    ____________________________________________________________________
    முனைவர் மு.பழனியப்பன்
    இணைப்போராசிரியர்,
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

    Share
  • கவிஞர் கே. ரவியின் கவிதைக் கோட்பாடு

    — முனைவர் மு.பழனியப்பன்.

    கவிஞர் கே. ரவியின் கவிதைக் கோட்பாடு

    கவிஞன், திறனாய்வாளன் ஆகிய இருவரும் இரு துருவ எல்லைகள் என்றாலும் இந்த எல்லைகளின் இணைப்பு படைப்பாகின்றது. கவிதை மற்ற வடிவங்கைளை விட எளிமையானது. எதையும் கவிதையில் சொல்லவே எந்தப் படைப்பாளனும் முதலில் விழைகிறான். பிரபல கதை எழுத்தாளனுக்கும் கவிதை என்பதே முதலில் அறிமுகமாகிறது. ஏனென்றால் தமிழுக்கும் கவிதைக்கு நீண்ட நாள் உறவு, பழக்கம், கொடுக்கல் வாங்கல் இருந்துவருகிறது, இன்னும் அதன் தொடர்பு வளர்ந்து வருகிறது என்பதுதான் கவிதை வாழ்ந்துவருவதற்கான காரணம்.

    கவிஞன் திறனாய்வாளன் ஆகலாம். திறனாய்வாளன் படைப்பாளனாக மாறுவது மிகவும் கடினம். அவனின் கூர்மைப்பட்ட விமர்சனங்களைத் தாண்டி படைப்பு மனப்பான்மைக்குள் அவன் நுழைவது மிகவும் கடினம். ஆனால் படைப்பாளன் படைப்பில் சமுதாயத்தைத் திறனாய்கிறான். தன்னையே சுயமதிப்பீடு செய்து கொண்டு தன்னை வளப்படுத்திக்கொள்கிறான். கவிஞன் ஒரு திறனாய்வாளனாகவே படைப்பினை சமைக்கிறான். எனவே படைப்பாக்க மனப்பான்மைக்கும், திறனாய்வுப் போக்கிற்கும் பெருத்த இடைவெளி இருப்பதில்லை.

    வாழ்வில் நீராடும் நீர் நிமிடங்களிலும், தியானத்தில் அமரும் மௌன நிமிடங்களிலும், வகுப்பில் அமரும் மாணவ நிமிடங்களிலும், நண்பர்களோடு விவாதிக்கும் கூட்ட நிமிடங்களிலும் கவிதைக்கான கணங்களாக ஆக்கிக் கொள்ளும் கவியுள்ளம் படைத்தவர் கே.ரவி. அதே நேரத்தில் கவிதை பற்றிய தெளிவான திறனாய்வுச் சிந்தனையும் அவரிடம் காணப்படுகிறது. கவிதைக்கான களம், எழுச்சி, கருத்து, மணம், குணம், காரம் ஆகிய அனைத்தையும் தன்னுள் உள்வாங்கிக் கொண்டுள்ளார். புதுக்கவிதை, மரபுக்கவிதை என எதுவானாலும், அதன் கவியுளத்தை நேசிக்கிற பண்பு அவரிடம் இருக்கிறது. கவிதை பற்றி பழைய கோட்பாடுகளையும், புதிய கோட்பாடுகளையும் கோர்த்தறிகிற பரந்த உளப்பாங்கு அவருக்கு வாய்த்திருக்கிறது.

    கவிதைக்கான சொற்கள் எங்கிருந்து வருகின்றன என்பது கவிஞர் ரவியின் மிகப் பெரிய திறனாய்வுத் தேடலாகும். இத்தேடலில் கவிதைக்கான சொற்கள் பிரபஞ்ச வெளியில் உலவுவதாகவும் கவிஞன் கவிதைச் சொற்களைப் பிடித்து இருத்துபவனாகவும் அவர் கருதுகிறார். கவிதைச் சொற்களைக் கண்டறிந்து மீளவும் பிரபஞ்ச வெளியின் உயரத்திற்குத் தன்னை உயரத்தும் முயற்சியில் கவிஞன் செயல்படுகிறான் என்பதே அவரின் தேடல் முடிவாகும்.

    k ravi2அவரது சொற்களில் அப்படியே இக்கருத்தைக் காணவேண்டுமானால் ‘‘மெய்மறந்துபோய் தன்னையிழக்கின்ற தவம் புரியும் கவிஞனுக்கு வான் தரும் வரமே சொற்கள். தன் முனைப்பில் உதிக்கும் அதிர்வுகளில் சற்று விலகி விரிந்து வானத்தின் அதிர்வுகளில் பங்கேற்று மீளும்போது அவன் அள்ளிக் கொண்டுவரும் அதிர்வலைகள் தாமே சொற்களாய் அவனை மீறி வெளிப்பட்டு, அணிவகுத்து ஒரு கவிதையாக அமைகின்றன. இந்தப் பேருண்மையைத்தான் மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்”
    என்று பாரதி சுட்டிக்காட்டினான். அப்படிவரும் சொற்களே நிகழ்த்துக் காட்டும் வலிமையுள்ளவை. அப்படிப்பட்ட நிலையில் தீ என்றால் காடெரியும். தேன் என்றால் உண்மையிலே நாட்டு விடுதலை கிட்டும்.’’ (பக் 49-50) என்ற அவரின் கருத்து கவிதைக்கு வேண்டிய சொற்கள் அலைவரிசாய் அணியணியாய் வான்வெளியில் இருப்பதை உணர்த்துகிறார்.

    அவை எப்படி மீளவும் வானவெளிக்கு ஏகுகின்றன என்பதைப் பின்வருமாறு காட்டுகிறார் கவிஞர் ரவி. ‘‘இப்படியெல்லாம் நான் கவிதையோடு போராடிக் கொண்டிருக்கிறேன். கவிதை இன்பம் என்று சிலர் கூறுவர். அது முற்றிலும் சரியன்று. சில சமயங்களில் இன்பம் பயக்கும் கவிதை பெரும்பாலும் என்னை ஓர் இனம்புரியாத துன்பத்தில் சிக்கித் தவிக்கச் செய்கிறது. அது வெடித்துச் சிதறும் முன் என்னுள் பெருஞ்சுமையாகக் குவிந்து் என்னை அழுத்தி அழச் செய்து இனி முடியாது தோற்றுவிட்டேன் எனக் கதறி விழச் செய்து திணற வைக்கிறது. அது வெடித்துச் சிதறும் கணத்தில் நானே வெடித்துச் சிதறுகிறேன். அண்டப் பெருவெளி எங்கும் வளரந்து நிறைகிறேன். என்னை அழுத்திக் கொண்டு இருந்த பெருஞ்சுமையிலிருந்து ஒரே கணத்தில் சட்டென்று விடுபட்டதும் காற்றினும் மெலிதாகி விரைந்து பறக்கிறேன். என் ஆறடி நீள உடற கூட்டிருப்பை ஓரணுவுக்குள் போட்டு அடைத்ததெல்லாம் நான் மீண்டும் வானளாவி வளரத்தான் என்ற பேருண்மையைப் புரிந்து கொள்கிறேன். (ப. 118) இதுவே ஒவ்வொரு கவிஞன் அல்லது படைப்பாளன் பெறும் படைப்பு அவஸ்தை. பெற்றதை வெளியிடுவது எதற்காக? ஏன் என்ற கேள்விகளுக்கு இதுவே பதிலாகும். வானிலிருந்துப் பெற்றதை மீளவும் வானிற்கு அனுப்பும் சுழற்சி முறையே படைப்பதற்கும், படிப்பதற்குமான காரணமாகும்.

    கவிதை பற்றிய வரையறைகள்:
    கவிஞர் ரவியைப் பொறுத்தவரையில் கவிதை என்பது ஓர் அனுபவத்தின் நிலைநிறுத்தல் என்பதே ஆகும். இதனடிப்படையில் பல்வேற வரையறைகளைக் கவிஞர் ரவி கவிதைக்குத் தருகிறார். அவை மற்ற திறனாய்வாளர்கள் அணுகாதது, அணுக இயலாதது என்பது உறுதி.

    1.‘‘அனுபவக் கணங்களை நிலை பெறச் செய்வதே கவிதையின் நோக்கம். அன்றாட வாழ்வில் கணங்கள் நீர்க்குமிழிகள் போல் தோன்றி மறைந்த வண்ணம் இருக்கின்றன. நிகழ்கணம் என்ற ஒன்று திடமாகத் தென்படுவதே இல்லை. ‘இந்தக் கணம்’ எனச் சுட்டும்போதே அந்தக் கணம் கடந்த காலத்தைச் சேர்ந்ததாய், நிகழ்வென்னும் உயிரற்றதாய், நினைவு பதிவாய், இறந்துவிட்ட கணமாய் மட்டுமே உணரப்படுகிறது. ஆனால் கவிதையில் சிறைப்படும் கணங்கள் மட்டும் உயிருடைய கணங்களாய், என்று படித்தாலும் தம் அனுபவச் சூழலை அப்படியே நிகழ்த்திக் காட்டுவனவாய் நிலைபெற்று விடுகின்றன. எனவே கவிதையின் நோக்கம் அனுபவக் கணங்களை நிலைபெறச் செய்வது மட்டுமில்லை. அக்கணங்களை நிகழ் அனுபவப் பொறிகளாய் உயிர்ப்போடு நிலைபெறச் செய்வதே கவிதையின் நோக்கம். அதனால் காலம் வென்று நிற்பதே கவிதைக்கு இலக்கணமாகிறது. (ப. 63)

    2.‘‘முழுக்க முழுக்க அனுபவப் பகிர்வுக்காகவே அமைந்த சாதனம் கவிதை. ஓர் உயர்ந்த கருத்தையோ சிந்தனையையோ வெளிப்படுத்துவது அதன் நோக்கம் இல்லை. கருத்து வளமும் சிந்தனை வளமும் கவிதையில் இருக்கலாம். ஆனால் அவை கவிதைக்கு இன்றியமையாதன அல்ல. அனுபவ வெளிப்பாடகக் கவிதை இருந்தே ஆக வேண்டும். இல்லையேல் அது கவிதையாகவே கருப்படாது.’’ (ப. 82)

    3.கவிதை வெறும் ஆற்றல் இல்லை. அது ஓர் ஆற்றாமை (பக்கம்.4)

    4.காலச்செலவின் காரணமாகத் தன் அனுபவக் கணத்தில் பங்கேற்க இயலாதவர்க்கு வசதியாக, அக்கணத்தை மொழிவடிவில் நிலைபெறச் செய்து, இனிவரும் காலமெல்லாம் யாரும் அம்மொழி வடிவத்திற்குள் நுழைந்து அதில் நிலைபெற்றிருக்கும் கணத்தை அனுபவிக்க உதவுவது கவிதை. (பக்கம் 57)

    மேற்கண்ட கருத்துகள் கவிதைக்கான வரையறைகளாகக் கவிஞர் ரவியால் காட்டப்பெறுபவை. இருப்பினும் அவரின் தனித்த உறுதியான யாருக்காகவும் மாற்ற இயலாத கவிதை பற்றிய கருத்து கவிதை என்பது அனுபவ வெளிப்பாடு என்பதே ஆகும். அனுபவ வெளிப்பாடு இல்லாத கவிதை கவிதை என்றே அழைக்கப்பெறாது என்பது அவரின் தனித்த கோட்பாடு.

    “அனுபவ வெளிப்பாடாகவே கவிதை இருக்க வேண்டிய தேவை இல்லை என்ற வாதம் எழலாம். அதற்கு ஒரே பதில். அனுபவ வெளிப்பாட்டை மட்டுமே கவிதை என்றும் மற்ற வெளிப்பாடுகளை வேறு பெயர்களிட்டு அழைப்பதென்றும் இவ்வாசிரியன் எடுத்த முடிவை அனைவரும் ஆமோதிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. என்றாலும் அனுபவ வெளிப்பாடுகளாக இந்நூலில் எடுத்துக்காட்டப்பெற்றுள்ள படைப்புகளையும் அவைபோன்ற படைப்புகளையும் ஏதேனும் ஒரு பெயரிட்டு அவ்வண்ணம் இயலாத படைப்புகளில் இருந்து அவற்றைப் பிரித்துச் சுட்டிக் காட்டும் கட்டாயம் இவ்வாசிரியனுக்கு உண்டே.’’ (82) என்ற கருத்து கவிஞர் ரவியின் கவிதை பற்றிய உறுதியான வரையறையை எடுத்துரைப்பதாக உள்ளது.

    கம்பர், வள்ளுவர், பாரதியார், ஔவையார் , மேத்தா, சிற்பி, ந. பிச்சமூர்த்தி போன்ற பலரின் கவிதைகளை முன்வைத்து அவற்றில் கவிதை எனக் கொள்ளத்தக்கவை எவை என்று கண்டறி்ந்து விலக்கவேண்டியனவற்றை விலக்கி அவர் செயல்பட்டுள்ள புத்தகமே நமக்குத் தொழில் கவிதை என்ற கட்டுரைத் தொகுப்பாகும்.

    கவிதா அனுபவம் :
    கவிதையின் அனுபவ வெளிப்பாடு என்றால் கவிதைக்குள் புனையப்படும் அனுபவத்தின் திறம், அனுபவப் புனைவு எப்படிப்பட்டது என்று தெரிவிக்கப்பட வேண்டும்.அதனையும் கவிஞர் ரவி செய்கின்றார்.

    ‘‘இயற்கை அழகிலும் தன் உள்ளுணர்வைத் தாக்கி ஊடுறுவும் புற நிகழ்ச்சிகளிலும் அதிர்வுகளிலும் மெய்மறந்து போகும் ஒருவன் அந்த அனுபவத்தை வெளிப்படுத்தும் சாதனமாக முதலில் தோன்றும் கவிதை, நாளடைவில் அவன் உள்ளுணர்வின் ஊற்றுக்கண்ணாகவே மலர்ந்து, சிரித்து அவனை ஆட்கொண்டு ஏன் ஆட்டிப்படைத்து ஒவ்வொரு கணமும் அவனை மெய்மறக்கச் செய்து அவனை அவனே இழக்கச் செய்து அக்கணம் எல்லாம் தானே ஆகி நிறைய வைத்து அவனை அமரனாய் நித்ய ஜீவனாய் விளங்கச் செய்கிறது.’’ (ப. 30) என்று கவிதானுபத்திற்குள் கவிஞர் என்றும் நிலைத்து நிற்கும் அமரநிலையைப் பற்றிக் கருத்துரைக்கிறார் கவிஞர் ரவி.

    கவிதை, கவிஞன், அனுபவம் இவையெல்லாம் தனித்தனியாக நிற்கின்றன. இவை ஒன்றிணைந்து கவிதானுவமாக வெளிப்படவேண்டும். கவிஞன் அனுபவத்திலிருந்து வேறாகாமல் அதுவே அவனாக வேண்டும்.

    ‘‘தன்னிலிருந்து வேறாய்த் தோன்றும் பொருள் எதற்குள்ளும் அது உயிருள்ளதாயினும் சரி உயிரற்றதாகக் கருதப்படும் பொருளாயினும் சரி, தான் நுழைந்து கலந்து அதுவாக ஒரு கணமேனும் அதன் அனுபவத்தில் அல்லது அதிர்வுகளில் பங்கேற்க முடியும் வியப்பை ஒரு கவிஞன் உணரும்போது, அதைத் தன் கவிதைகயின் மூலம் உணர்த்தும்போதும் – தான்- மற்றவை என்ற பாகுப்பாட்டின் மெய்மைநிலை பொருளற்றதாகிவிடுகிறது.’’ (ப. 55) என்று கவிதானுபவத்தின் வேறுபாட்ற்ற நிலையை எண்ணி உரைக்கிறார் கவிஞர் ரவி.

    இவற்றின் வழியாக படைப்பு, படைப்புக்குள் காட்டப்படும் அனுபவம் ஆகிய இரண்டும் இரண்டற்ற நிலையைப் பெற்று, ஒன்றாகும் உன்னதத் தருணமே கவித்தருணமாகின்றது.

    கவிதைக்கான இரு செயல்பாடுகள்:
    கவிதை ஒளி உடையது. ஒலி உடையது என்பது கவிஞர் ரவியின் கொள்கை. ஒளி என்பது கவிதைக்குள் இருக்கும் உள்ளொளி. அனுபவக் கீற்று. ஒலி வடிவம் என்பது கவிதைக்கான ஓசை ஒழுங்கு. சொற்களுக்குள் புதைந்து கிடக்கு ஓசை நயம். உள்ளொளியும், இசையொலியும் கலந்ததே கவிதை என்பது கவிஞர் ரவியின் கண்டறிதல்.

    ‘‘புற அனுபவத்தைத் தன் அகச்சுவையில் அமிழ்த்தி எடுத்துக் கவிஞன் வழங்கும்போது, அந்த அனுபவம் நிற வடிவத் தோற்ற மாற்றங்கள் அடையத்தான் செய்கிறது.’’ (ப. 28) என்று கவிதைக்குான நிறம், அதாவது ஒளி பற்றிக் கருத்துரைக்கிறார் கவிஞர் ரவி.

    ‘‘உள்ளொளியைத் தூண்டும் உள்ஊக்கம் சரியான மொழி வடிவம் பெற்றால் அது சாகாவரம் பெற்ற கவிதையாகிறது. எந்தச் சொல் தான் பிறப்பெடுத்து வந்த உள் ஊக்கத்தைக் கேட்போர் நெஞ்சிலும் கிளரச்சியுறச் செய்கிறதோ அந்தச் சொல்லே கவிதையில் இடம்பெறும் தகுதி பெறுகின்றது’’ (ப.3)

    ‘‘ஒரு கவிதையின் சிறப்புக்குச் சொல்வளம் இன்றியமையாதது. சொல்லழகு என்றால் வெறும் அடுக்கு மொழியோ, எதுகை, மோனை இயைபு போன்ற அணிகளோ இல்லை. எந்த இடத்தில் இதுவே சரியான சொல் , இதை எடுத்துவிட்டு இதற்குப் பதிலாக வேறு சொல்லை இங்கு அமரச் செய்தால் கவிதையின் சிறப்பு குறைந்துவிடும் என்று எந்தச்சொல்லைப் பற்றிச் சொல்ல முடியுமோ அதுவே அழகிய சொல் , அதுவே வெல்லும் சொல் பிறிதொன்றிலாதது. (ப. 41)
    என்பன கவிதையின் ஒலிவடிவம் பற்றிய கவிஞர் ரவியின் சிந்தனை ஆகும்.

    ஒரு கவிதை என்பது உள்ளொளியைத் தொடுவதாகவும், ஒலிநயம் மிக்கதாகவும் அமைகின்றபோது வெற்றியடையும் என்பது இவரின் முடிவு. கவிதையின் ஒலி நயமே அதனை வெற்றி மிக்க இலக்கிய வடிவமாக ஆக்குகின்றது என்பது இவரின் நம்பிக்கை. மற்ற கலைகளான திரைப்படம், நாடகம் போன்றவற்றில் காட்சிகளும் வருகின்றன, உரையாடல் வழியாக ஒலிகளும் கலக்கின்றன. என்றாலும் ஒலி என்ற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அனுபவங்களை அவ்வொலி என்ற ஒன்றினால் மட்டும் அடையச் செய்யும் பெருமை கவிதைக்குத்தான் உண்டு என்கிறார் கவிஞர் ரவி.

    ‘‘ஒரு கண நேரக் காட்சியைக் காலம் வென்று நிற்கும் காட்சியாகத் தோற்றப்படுத்தும் ஓவியம், சிற்பம், நாடகம், திரைப்படம் போன்ற கலைகளைவிடக் கவிதை ஒரு படி மேலே சென்று அக்காட்சியை ஒரு கவிஞன் புலன் நுகர்வு செய்த அனுபவச் சூழலையே, தன்னைத் தக்க முறையில் பயிலும் அகத்திலும் ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது. நாடகத்திலும், திரைப்படத்திலும் ஏனயை ஒளி, ஒலி இணை கலைகளிலும் இச்சூழல் ஓரளவு உண்டாக்கப்படுகிறது என்றாலும், மேலே கண்டவாறு ஒலியின் இணைப்பாலேயே இது இயன்றதாகிறது. ஒலியால் மட்டுமே இதைப் பெருமளவு நிகழ்த்திக் காட்டுவது கவிதை எனத் துணிந்து முடிவு செய்யலாம். (ப. 59) இக்கருத்தே கவிதைக்கும் மற்ற வடிவங்களுக்கும் இடையே காணப்படும் முக்கியமான வேறுபாடாகும். இதனடிப்படையில் பல செய்திகளை இணைத்துக் காண்கிறார் கவிஞர் ரவி.

    ‘‘கவிதையின் நோக்கம் கணங்களை நிலைபெறச்செய்தல் என்ற தெளிவு கிடைத்துள்ளது. வெறும் காட்சிகளை மட்டும் நிலை பெறச் செய்யும் நுண்கலைகளிலிருந்து கவிதை இந்த விதத்தில் வேறுபடுகிறது. அது காட்சிகளை மட்டுமின்றி அக்காட்சிகள் புலனுகர்வு செய்யப்பட்ட கணங்களையும் நிலைபெறச் செய்கிறது. இதனால் அக்கணங்களில் பொதிந்து கிடக்கும் அனுபவச் சூழல்களையும் அது வெளிப்படுத்த முடிகிறது.’’ (ப. 60)

    ‘‘இசை, அக இயக்கங்களை அனுபவமாக்க முடியும். ஆனால் அவ்வியக்கங்களைக் காட்சிப் படுத்த முடியாது, ஓவியம் புறக் காட்சிகளைப் புலப்படுத்தி ஓரளவு அகநெகிழ்ச்சியைத் தூண்ட முடியும். ஆனால் அக நெகிழ்ச்சிகளை நிகழ்ச்சிகள் போல் காட்சிப் படுத்தமுடியாது. கவிதை மட்டுமே அக நெகிழ்ச்சிகளை அனுபவமாக்கியும் காட்சிகளாக்கியும் சுவை தருகிறது. சுவை பகிர்வுக்கு உதவும் கலைகளில் கவிதை தனியிடம் பெற்றிருக்கக் காரணம் இதுதான் (ப. 72)

    என்ற கருத்துகள் கவிதை என்ற வடிவத்தின் வலிமையும் மற்ற படைப்பு வடிவங்களில் இருந்து அது வேறுபடும் தன்மையையும் எடுத்துரைப்பனவாக விளங்குகின்றன.

    கவிதைக்கு அனுபவமும் அவ்வனுபவம் வெளிப்படுத்தப்படும் சொற்களும் இன்றியமையாதன என்று கண்டுகொள்ளப்பெற்றது. இவைதவிர கவிதைக்குக் கற்பனை, சுவை ஆகியன இன்னும் பலம் சேர்க்கின்றன என்கிறார் கவிஞர் ரவி.

    ‘‘எந்தக் கற்பனை ஒரு புறம் காட்சியாகவும், இன்னொருபுறம் உள்ளொளி மாட்சியாகவும் வளர்நிலை (பரிணாமம்) பெறுகிறதோ அந்தக் கற்பனையே காலம் வென்று நிற்கும் கற்பனையாகின்றது. (ப.2) என்ற கருத்து காலம் வென்று நிற்கும் கற்பனையைக் காட்டி அக்கற்பனை கவிதைக்கு வளம் சேர்க்கிறது என்கிறார் கவிஞர் ரவி.

    ‘‘ஐந்து புலன்களாலும் உணரப்படும் சுவையனைத்தையும் அப்புலன்களைக் கடந்து அக இயக்கங்களாகவும் நெகிழ்ச்சிகளாகவும் தோன்றும் சுவையனைத்தையும் தான் உணர்ந்தவாறே மற்றவர் உணர வெளிப்படுத்துவதும் அப்படிப்பட்ட வெளிப்பாட்டில் காட்சி முதலான புலப்பாடுகள் மட்டுமின்றி அவை ஏற்பட்ட சூழலையும் அவற்றைக் கவிஞன் அனுபவித்த விதத்தையும் இணைத்து வெளிப்படுத்தும் கவிதையால் மட்டுமே இயன்றதாகிறது. சுவைபகிர்வுச் சாதனங்களில் கவிதை முதன்பெறுகிறது என்ற சுவையியற் கூறு இதனால் விளக்கம் பெறுகிறது. (ப. 74) என்ற கருத்து கவிதைக்குச் சுவை என்பது பலமாக அமைவதைத் தெரிவிக்கும் கருத்தாகும்.

    எனவே கவிதை என்பது ஒளி, ஒலி, அனுபவம், கற்பனை, சுவை ஆகியன சரியான அளவில் கலந்து செய்யப்பெற்ற படைப்பு என்பது கவிஞர் ரவியின் கவிதைக்கொள்கையாகின்றது.

    மரபுக்கவிதையும் புதுக்கவிதையும்:
    கவிஞர் ரவி கவிதைகளின் இரு பிரிவுகளான மரபுக் கவிதை, புதுக்கவிதை ஆகியவற்றின் தன்மைகளையும் ஆராய்கிறார்.

    ‘‘மரபின் உள்ளடக்கம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கலாம். அதன் உள்ளடக்கத்தின் சிறு சிறு பகுதிகள் மாறும்போது மாற்றம் வெளிப்படையாகப் பெரிதும் உணரப்படுவதில்லை. அதன் உள்ளடக்கத்தின் பெரிய பகுதியே பெயர்த்தெடுக்கப்படும்போது, அந்த மாற்றம் ஒரு புரட்சியாகத் தென்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு புரட்சி இப்பொழுது நிகழ்ந்துவிட்ட்தாக அல்லது நிகழ்ந்து கொண்டிருப்பதாக புதுக்கவிதை இயக்கம் பற்றிச் சொல்லப்படுகிறது. (ப. 83) என்று மரபுக்கவிதையில் இருந்து புதுக்கவிதை புறப்பட்ட தோற்றத்தைக் கணிக்கிறார் கவிஞர் ரவி.

    இருந்தாலும் புதுக்கவிதைக்குள் அதன் சொற்களுக்குள் காணப்படும் இசை, ஓசை ஒழுங்கு அதனை மரபுக்கவிதையின் வடிவமாகவே கவிஞர் ரவியால் கொள்ளவைக்கின்றது. ஓசை வடிவும், உள்ளொளி வடிவும் கொண்டது கவிதை என்று முடிவு கட்டிவிட்டால் ஒவ்வொரு கவிதைக்கும் ஒசை வடிவமும், உள்ளொளி வடிவமும் சிறந்திருக்க வேண்டும். ஓசை வடிவமும், உள்ளொளி வடிவமும் சிறந்திருக்கும் நிலையில் அது புதுக்கவிதையாக இருந்தால் என்ன? மரபுக்கவிதையாக இருந்தால் என்ன – அது கவிதை என்பதே சரி என்பது கவிஞர் ரவியின் வாதமாகிறது.

    “புதுக்கவிதை தோன்ற இன்னொரு காரணமாகச் சொல்லப்படுவது யாப்பு முதலிய புறக்கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறியும் வேட்கை. இதில் ஓரளவு உண்மை தென்படுகிறது. தன் அனுபவத்தை வெளியிட விழையும் ஒருவனிடம் நால்வகைப் பாக்களுள் ஒரு வடிவிலோ, வஞ்சி,தாழிசை, விருத்தம் போன்ற ஒரு நடையிலோதான் அதை அவன் வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை யாருமே அவன் மீது என்றுமே திணித்ததில்லை. அவனாக உட்கார்ந்து சீரு் முதலிய இலக்கணம் பயின்று அதற்கேற்பச் சீர் எண்ணித் தளை பார்த்து அடியளவு நோக்கிச் செய்யுள் செதுக்கினால் அதில் அவன் அனுபவம் செத்துப் பிறந்தால் அதற்கு யார் பொறுப்பாளி. அவனே அதற்குப் பொறுப்பு

    ஒரு நிமிடம் அவனே அதற்குப் பொறுப்பு என்ற சொற்பெருக்கு ஒரு வெண்பாவின் ஈற்றடி போல் இல்லை. ஆம் அது அப்படி அமைய வேண்டும் என்று முன் முடிவோடு எழுதப்படவில்லையே. வெளிப்பட்டபின் ஒரு வெளிப்பாட்டை ஆராய்ந்து அதன் உறுப்புகளையும் அணி எழில்களையும் பகுத்துச் சொல்வதால் அந்தப் பாகுபாடுகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்பவே அந்த வெளிப்பாட்டை அதன் ஆசிரியன் உருவாக்கினான் என முடிவு செய்ய முடியாது. இலக்கணத்தைக் கருத்தில் இருந்தியபடியே இலக்கியம் படைக்க முடியாது. இலக்கியங்களைப் படித்து ஆய்ந்து, பகுத்துத் தொகுப்பதே இலக்கணம். (ப. 87) என்று மனதில் இருந்து வெளிப்படும் உள்ளொளி ஏதேனும் ஒரு ஒலி வாய்க்காலைத் தேடுகின்றது. அவ்வொலி வாய்க்கால் வெண்பா, ஆசிரியப்பா என்ற வாகனமாக இருக்கலாம். அல்லது வெட்டி ஒட்டப்பெற்ற ஓசை ஒடிக்கப்பெற்ற புதுக்கவிதை வடிவமாக இருக்கலாம்.

    கவிதை கவிதையாக இருக்கவேண்டும் என்பதே கவிஞர் ரவியின் கவலையாகின்றது.

    புதுக்கவிதையின் இயல்புகளை அதன் வன்மை மென்மைகளைப் பின்வருமாறு ஆராய்கிறார் கவிஞர் ரவி.
    1.‘‘இலக்கியத்திற்குப் பின்னால் கைகட்டிக் கொண்டு வரவேண்டிய இலக்கணம், முன்னால் நின்று கொண்டு இலக்கியத்தையே மிரட்டத் தொடங்கிய முறைமீறலுக்கு புதுக்கவிதை ஓர் எதிர்ப்பியக்கமாகப் பிறந்து வளர்ந்தது.
    2. எதிர்க்கும் உணர்வு மிகுதியால் இலக்கண எதிர்ப்பிலேயே அதிக கவனம் செலுத்தி ஆக்கநிலை உள்ளீட்டைக் கோட்டை விட்டுவிட்டு எதிர்மறை யுக்திகளாலேயே புதுக்கவிதைகள் பெரிதும் எழுதப்பெற்று வருகின்றன.
    3. அனுபவக் கணங்களை நிலைபெறச் செய்யும் நோக்கத்திற்கு எளிய சாதனமாகப் புதுக்கவிதை சில நேரம் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இப்படிப்பட்ட கவிதைகள் மிகக்குறைவே. இவற்றின் எண்ணிக்கை வளரக் கூடும். அப்பொழுது இவ்றின் உள்ளீடுகளும் வெளிப்பாட்டு வடிவங்களும் மேலும் ஆராயப்பட்டுப் புதுமரபு தோன்ற வழி பிறக்கலாம். (ப. 92)

    இக்கருத்துகள் புதுக்கவிதையின் உரத்தையும், அதன் வெற்றி பெறாத் திறத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. புதுக்கவிதைகள் வெறும் கோரிக்கைகள் என்ற நிலையில், கம்யுனிச சார்புடைய கவிஞர்களால் எழுதப்பெற்றதால் அவை தீர்வுகளை நோக்கி நகரவில்லை என்ற குற்றச்சாட்டை கவிஞர் ரவி வைக்கிறார்.

    ‘புதுக்கவிதை இயக்கத்தின் சமுதாய உணர்வுக் கவிதைகள் உயர்ந்த கோரிக்கைகளானாலும் அவை கோரிக்கை என்ற அளவிலேயே நின்றுவிடுகின்றன. தக்க உணர்ச்சிகளைத் தூண்டிச் செயலூக்கம் தரும் மூலிகைகள் அவற்றுள் இல்லை.’’ (ப.91) என்ற கருத்து புதுக்கவிதைகள் தீர்வுகளை நோக்கி நகரவேண்டும் என்ற வழிகாட்டுதலைக் காட்டுகின்றது.

    மகாகவி:
    கவிதை சிறந்தால் மகாகவியாகின்றது. அதனை எழுதியவன் மகாகவிஞன் ஆகின்றான். கவிஞனுக்கும் மகாகவிஞனுக்கும் வேறுபாடுகள் என்ன என்று கேட்டால் அதற்கும் பதில் தருகிறார் கவிஞர் ரவி.

    ’’புறக்காட்சியில் தோற்றம் கொள்ளும் சிறு பொறி ஓர் ஒளித்துகள் ஒரு கவிஞனுடைய உள்ளொளிச் சுடரைத் தாக்கித் தூங்கும் சுடரைத் தூண்டி எழுப்பும் தருணம் அவன் மஹாகவி ஆகின்றான் (ப.1)

    ‘‘புறத்து புலன்களைத் தாக்கும் அதிர்வுகளை மட்டும் மொழியாக்கம் செய்பவன் கவிஞனாக இருக்கலாம். அந்த அதிர்வுகளைத் தன் உள்ளொளியின் அதி்ர்வுகளோடு இழைத்து, ஸ்ருதி எனப்படும் பண்நிலை சேர்த்து வெளிப்படுத்துபவனே மஹாகவிஞன். ’’ (ப. 2)

    ‘‘அலட்சியப்படுத்தவோ, அப்புறப்படுத்தவோ முடியாத சொற்களைப் பயன்படுத்தும் கவிஞன் தானே மஹாகவி ’’(ப. 20)

    ‘‘ஒரு மஹாகவி மகான் இல்லை. அவனது உள்ளொளி பரவ மொழித் துணைத் தேவைப்படுகிறது. மொழியின் குறைபாடுகளால் அவனின் உள்ளொளி முழுமையாகப் பரவமுடியாத ஆற்றாமை அவன் கவிதைகளி்ல் ஆங்காங்கே புலனாகின்றது (ப. 4)

    என்பன கவிஞனுக்கும் மகாகவிஞனுக்கும் உள்ள வேற்றுமைகளாகும். கவிதைக்கும் மகாகவிதைக்கும் உள்ள வேற்றுமைகளாகும்.

    மனிதன் கவிஞனாகவேண்டும். அவன் மகாகவிஞனாகவேண்டும். அவன் கவிதைகள் சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காணவேண்டும். வானவெளியில் கவிதை ஏறவேண்டும். எனவே தமிழில் மகாகவிகள் தோன்றும் முயற்சிக்கு வழிகோலுகின்றார் கவிஞர் ரவி.

    முடிவுகள்:
    மேற்கண்ட கட்டுரையின் வாயிலாக கவிஞர் ரவியின் கவிதைக்கோட்பாடுகளாகப் பின்வருவனவற்றை வகுத்துக்கொள்ளமுடிகின்றது.

    அனுபவ விளைவே கவிதை. அதன் வளம் என்பது அக்கவிதைக்குள்காணப்படும். ஒளி, ஒலி, கற்பனை, சுவை ஆகியவற்றைச் சார்ந்தது.

    அனுபவம், சொல், உள்ளுணர்வு ஆகியவற்றை ஒன்றுக்குள் ஒன்று இரண்டறக் கலந்து, கவிஞன் வேறாகவும் கவிதை வேறாகவும் ஆகாத உன்னத ஒன்றிணைப்பு நிலையே வெற்றி மிக்க கவிதை நிலையாகும்.

    மரபுக்கவிதை, புதுக்கவிதை இவை கால வெள்ளத்தில் எழுந்த பிரிவுகள் என்றாலும், புதுக்கவிதை வெறும் கோரிக்கைகளாகவே அமைந்திருப்பது அதன் தோல்விக்குக் காரணமாகின்றது.

    மகாகவி என்பவன் உள்ளொளி பெருகிப் புறத்தில் தன் நிலைத்த அனுபத்தை நீங்காமல் விளைவிக்கும் வல்லமை பெற்றவன் ஆவான்.

    பின்குறிப்பு:
    நமக்குத் தொழில் கவிதை என்ற ஒரு நூலை மட்டும் எடுத்துக்கொண்டு கவிஞர் ரவியின் கவிதைக்கொள்கை என்ற இந்தக்கட்டுரை எழுதப்பெற்றுள்ளது. கவிஞர் ரவி பல மேற்கோள் கவிதைகளை இந்நூலில் எடுத்தாண்டிருந்தாலும் அவற்றின் வழியாக அவர் பெறும் முடிவுகள் மட்டுமே இங்குக் கொள்கைகளாக வகுத்துக் காட்டப்பெற்றுள்ளன. இந்நூலில் பல கவிதைகளைக் கையாண்டுள்ளார் கவிஞர் ரவி. அத்தனை கவிதைகளும் ரசமானவை என்றாலும் அவற்றை மீளவும் பிரதி செய்ய விரும்பாமல் அவரின் கவிதை பற்றிய புரிதல்களை அவரின் கொள்கைகளாக வகுத்துக் காட்டுகிறது இக்கட்டுரை.

    ____________________________________________________________________
    முனைவர் மு.பழனியப்பன்
    இணைப்போராசிரியர்,
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

    Share
  • நெல்லைக் கண்ணன் கவிதைகளில் சூழலியல் பதிவுகள்

    — முனைவர் மு.பழனியப்பன்.

    Nellai-Kannanதற்காலத்தில் படைக்கப்படும் இலக்கியங்களில் அறச் சிந்தனைகளுக்கு முக்கிய இடம் இருக்கிறதோ இல்லையோ சுற்றுப் புறச் சூழ் நிலைகளை, அதன் அவசியத்தை, அதன் தூய்மையை வலியுறுத்தும் செய்திகள் பல காணப்பெறுகின்றன. காரணம் படைப்பாளர்களுக்குச் சுற்றுச் சூழல் பற்றிய கவலை, விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதே ஆகும். சுற்றுச் சூழல் என்பது ஓர் உயிரியைச் சுற்றியுள்ள் ஒட்டுமொத்த அமைப்பு என்றும் அது காற்று, ஒளி, மண், வெப்பம், நீர் மற்றும் அவற்றோடு தொடர்புடைய மற்ற உயிரினங்களையும், அந்த உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டைக் கட்டுப்படுத்தும் காரணிகளை உள்ளடக்கியது என்று விளக்கம் தரப்பெறுகின்றது. இக்கருத்தின்படி படைப்பாளனும் ஓர் உயிரி என்ற அடிப்படையில் அவனைச் சுற்றி நடக்கும் இயற்கைசார் நிகழ்வுகள் சுற்றுச் சூழல் நடப்புகளாகின்றன. அவற்றை அப்படைப்பாளன் பதியவைப்பதன் வாயிலாக அவனும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு உரிய படைப்புகளைத் தருபவன் ஆகின்றான்.

    இன்றைய சூழலில் திருநெல்வேலி சார் சுற்றுச் சூழல்களைத் தன் படைப்புகளில் அளித்துவருபவர் நெல்லைக் கண்ணன் ஆவார். இவரின் படைப்புகள் திருநெல்வேலி மண்சார்ந்த வட்டாரப் படைப்புகள் ஆகும். இப்படைப்புகளில் திருநெல்வேலி மாவட்டம் சார்ந்த நிகழ்ச்சிகள், இயற்கை அமைவுகள் பதிவு செய்யப்பெற்றுள்ளன. அவரின் கவிதைப் படைப்புகளான வடிவுடை காந்திமதியே (2002), திக்கனைத்தும் சடை வீசி (2008), காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் (சித்திரை விய ஆண்டு), பழம்பாடல் புதுக்கவிதை (2011) ஆகியவற்றிலும் உரைநடைப் படைப்பான குறுக்குத்துறை ரகசியங்கள் (2000) ஆகியவற்றில் சுற்றுச் சூழல் குறித்தான பல செய்திகள் இடம்பெற்றுள்ளன.

    காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள் – என்பது காதல் கவிதைகளின் தொகுப்பாகும். அதில் இடம்பெறும் ஒரு கவிதை பின்வருமாறு

    நிறங்களை வைத்தா கண்களைப் பார்த்தேன் குணங்களை வைத்து
    கடல்
    என்று
    அதனால்தான்
    உளறவில்லை
    உலகக் கழிவுகளெல்லாம்
    அதனுள்ளே

    என்ற இந்தக் கவிதை கடல் மாசுபட்டுள்ளது என்பதால் அதனைத் தன் காதலியின் குணங்களுக்கு ஒப்பிடமுடியாது என்று குறிப்பிடுகின்றார் நெல்லைக்கண்ணன். காதல் தூய்மையானது. ஆனால் கடலின் தூய்மை தற்போது உலகின் கழிவுகளின் இருப்பிடமாக ஆகி அதன் தூய்மை கெட்டுவிட்டது. எனவே காதலியின் தூய்மைக்குக் கடலின் தூய்மையின்மை பொருத்தமாகாது என்று விலக்குகிறார் கவிஞர். இதன் வழியாக கடல் மாசுபட்டு வருகிறது என்பதையும் காதலைத் தூய்மையாகக் காக்க எண்ணும் மனித எண்ணம் கடலையும் தூய்மையாகக் காக்கவேண்டும் என்பதையும் இக்கவிதை சுட்டுகின்றது.

    நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையானை
    நீறணிவார் துயரங்கள் மாற்றுவானை
    புல்லுக்கு அருள் செய்யும் பொருப்பினானை
    பூவிதழின் உமை பங்கன் ஆயினானை
    கல்லுக்கும் தன்னருளைக் காட்டுவானை
    கங்காளனாகிப் பிச்சை யேற்பான் தன்னை
    சொல்லுக்குள் அடைபடாச் சோதியானை
    நெல்லைக்குள் கண்டதென் பேறுதானே

    என்று கடவுளையும் சுற்றுச் சூழல் நோக்கில் காணுகின்றார் நெல்லைக் கண்ணன். திருநெல்வேலி என்பது நெல்லுக்கு வேலி செய்த காரணத்தினால் எழுந்த பெயராகும். இது ஒரு தொன்மம். வேதசர்மா என்பவர் ஆண்டவனுக்காக வைத்திருந்த நெல்லை மழை அடித்துக்கொண்டு போகாமல் காத்த திறமுடையவர் நெல்லையப்பர் ஆவார். இவரின் பெருமையை நெல்லையும் காத்தவர், அதனோடு ஒப்பு வைக்க முடியாத களையான புல்லுக்கும் கருணை செய்பவர் என்று ஆண்டவனை இயற்கை பாதுகாப்பாளனாகக் காண்கிறார் நெல்லைக்கண்ணன். இதுதவிர கல்லுக்கும் அருள் தரம் இனிய பண்பாளன் நெல்லையப்பன் என்பதைக் காட்டும் இவ்விறைவன் பற்றிய கவிதை சுற்றுச் சூழல் நிலை பாடும் கவிதையாகும்.

    இறைவியைப் பற்றிப் பாடும் பாடல்களின் தொகுப்பின் பெயர் வடிவுடைக் காந்திமதியே என்பதாகும். இதில் வரும் பின்வரும் பாடலடிகள் சுற்றுச் சூழல் நிலை பாடுவதாகும்.

    மலைவளம் தந்ததொரு
    மழைவளம் தந்தனை
    மனிதரைக் காப்பதற்காய்
    மலைவளம் திருடியே
    மழைவளம் தடுத்தனர்
    மனமிலார் வாழ்வதற்காய்

    என்ற பாடலடிகளில் மலைவளம் திருடப்படுவதையும், அதன் காரணமாய் மழைவளமின்றி மக்கள் வாடுவதையும் காந்திமதியம்மையிடம் சொல்லி அதனை மாற்ற அவள் கருணைக் கண் வைக்க வேண்டுகின்றார் நெல்லைக்கண்ணன்.

    ஆண்டாளின் காலத்தில் நன்னாரிவேரினால் செய்யப்பட்ட விசிறி இருந்தது. இயற்கையோடு இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தும் நன்முறை அவள் காலத்தில் இருந்தது, தற்காலத்தில் எல்லாம் செயற்கையாகிவிட்டது என்ற வருத்தத்தில் பின்வரும் கவிதை சுற்றுச் சூழல் பேணுகின்றது.

    பெண்ணாளின் உள்ளம் காணப் பெருந்தகையாளன் தன்னால்
    கண்ணாளா என்றழைத்தால் காணாமல் மயக்கமானேன்
    நன்னாரை வேரைக் கொண்டு நல்லதோர் விசிறி செய்து
    என்னதான் வீசினாலும் எப்படி மயக்கம் தீரும்

    என்று தமிழர்கள் இயற்கை சார்ந்த பொருளை பழங்காலத்தில் பயன்படுத்தி இயற்கையோடு முரண்படாமல் வாழ்ந்தார்கள் என்பதை இக்கவிஞர் காட்டுகின்றார். தற்போது உணவிலும், உடையிலும், உறையுளிலும் அனைத்திலும் செயற்கை கலந்துவிட்டதன் ஏக்கம் இப்பாடலில் பதிவாகியுள்ளது.

    இத்தொகுப்புகள் தவிர இவரின் வா மீத முலை எறி என்ற கவிதைத் தொகுப்பு பல சுற்றுச் சூழல் தெரிப்புக்கவிதைகளைக் கொண்டுள்ளது.

    பன்னாட்டு
    பூதகியின்
    பெப்ஸி
    கோக்
    முலைகள்
    உறிஞ்ச
    கண்ணனுக்கே அச்சம்

    என்ற இந்தக்கவிதையடிகளில் குழந்தைகளுக்குத் தரப்படும் தாய்ப்பாலில் வெளிநாட்டுக்காரர்கள் உருவாக்கும் பெப்ஸி போன்ற பானங்களின் தாக்கம் அம்மாக்கள் அவற்றைக்குடிப்பதால் ஏற்படுகிறது என்பதைக் காட்டுகின்றார். தூய்மையான தாய்ப்பாலே தூய்மை இழந்து போகும் சூழ் நிலைக்கேட்டில் தற்போது உலகம் உள்ளது என்பதை இச்சிறுகவிதை எடுத்துக்காட்டிவிடுகின்றது

    தண்ணீர்
    இல்லாக்
    குளங்கள்
    பசுமையற்ற
    மரங்கள்
    கோபிகையர்
    குளிக்க
    வருவதில்லை

    என்ற கவிதையில் கண்ணன் வாழ்ந்த காலத்தில் குளம் இருந்தது. அவற்றில் தண்ணீர் நிரம்பி இருந்தன. மரங்கள் சுற்றிலும் இருந்தன அவற்றில் பசுமை இருந்தது. அப்போது கண்ணனும் கோபிகையரும் வந்து விளையாடினர் என்று அந்தக்கால நினைவுகளுக்கு மாறாக இக்காலத்தில் குளமும் இல்லை, குளத்தில் தண்ணீரும் இல்லை, மரங்கள் இல்லை, மரங்களில் பச்சை இல்லை, இதனால் கண்ணன் இல்லை, கோபிகையர் இல்லை என்று பழங்காலப் பசுமையை இக்காலத்தில் இல்லாமையைப் பாடுகின்றார் நெல்லைக் கண்ணன்.

    நாகரீகச் சென்னையின் சுற்றுச் சூழல் கேடுகளைக் காட்டுகிறது பின்வரும் கவிதை

    நிலவொளி
    தடுக்கும்
    நியான்சைன் விளக்குகள்
    மழைநீர்
    தடுக்கும்
    கான்கிரீட் பூமி
    மனங்கள்
    தடுக்கும்
    ஆசை அவதி
    விடியுமுன்
    ஓட
    வேலை
    தூரங்கள் உறவுகளுக்குள்
    ஷிப்ட் சிஸ்டம்

    என்ற கவிதையில் இயற்கையை விழுங்கும் செயற்கை ஆதிக்கத்தை, இவ்வாதிக்கம் மிக்க நகர வாழ்க்கையை விமர்சிக்கிறார் நெல்லைக் கண்ணன்.

    நிலவெளி இயற்கையானது. ஆனால் அதனை நகரத்தின் செயற்கை நியான் ஒளி மங்கச் செய்துவிடுகிறது. இதனால் மின்சாரச்செலவு, கூடுதல் வெப்ப வெளியேற்றக் கேடுகள் ஆகியன உண்டாகின்றன. மழைநீர் பூமியில் தங்கி நிலத்தடி வளம் பெருக வேண்டும். ஆனால் அதனைச் செய்யவிடாமல் கான்கிரிட் தளங்கள், சாலைகள் போடப்பட்டுவருகின்றன. விடிவதைக் காண முடியாமல் வேலைக்குச் செல்லும் அவசரம், கணவன் மனைவி பேசிக்கொள்ள முடியாமல் வேலை நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் முரணான காலச் சூழல் போன்றனவற்றைப் பட்டியலிட்டு நகர வாழ்க்கையின் செயற்கைத் தன்மையை இக்கவிதையில் எடுத்துரைக்கிறார் நெல்லைக் கண்ணன்.

    நெல் வயல்கள் வீடுகளாய்ப் போவதைப் பற்றி ஒரு கவிதை கவலை கொள்கின்றது.

    நெல்லுவயல்
    ஒழிச்சிட்டு
    கடைகள்
    அம்மா பிணத்தில்
    பிள்ளைகள் ஆட்டம்

    இங்குச் சொல்ப்பெற்றுள்ள உவமை குறிக்கத்தக்கது. அம்மா இறந்த பிணத்தின் மீது பிள்ளைகள் அழுவார்கள் என்பது வருத்தம் மிகுதியால் நிகழ்வது. ஆனால் அம்மாவின் பிணத்தின்மீது குழந்தைகள் மகிழ்வாய் விளையாடுவதுபோல நெல்வயல்களை ஒழித்துக் கடைகளைக் கட்டுகிறார்கள் என்று இக்கவிதை வருத்தப்படுகின்றது.

    அதுபோல பாதாளச் சாக்கடையால் நீர் ஆதாரங்கள் அழிந்து வருவதை மற்றொரு கவிதை காட்டுகின்றது.

    கருமாரித்தீர்த்தம்,
    பொற்றாமரைக்குளம்,
    வெளித்தெப்பம்
    தாமரைக்குளம்
    ஒண்ணுக் கொண்ணு
    தொடர்பாய் பழைய அமைப்பு
    பாதாளச் சாக்கடையால் பாழாய்ப் போச்சு

    என்று நீர் ஆதாரங்களைக் குலைந்து விட்டது பாதாளச் சாக்கடைத் திட்டம் என்று இந்தக் கவிதை நீர் ஆதாரங்களுக்கு இரங்கற்பா வாசிக்கின்றது. குறிப்பாக இக்கவிதையில் திருநெல்வேலி நகரத்தின் நீர் ஆதாரங்களைப் பட்டியல் இட்டு அவை தன் கண்முன்னே அழியும் சோகத்தையும் பாடுகின்றது.

    கோயில் வருமானம்
    கூட்ட தாமரைக்குளம்
    கட்டிடமாகுது

    என்ற மற்றொரு கவியடி தாமரைக்குளம் கட்டிடமான சோகத்தைப் பகிர்ந்து கொள்கின்றது. கோயில் வருமானம் பெருகலாம், ஆனால் ஆண்டாண்டு காலமாக நீர் ஆதாரம் பெருக்கி வந்த குளம் அழிந்துபோனால் வருகிற சந்ததியே அழிந்து போகுமே என்ற கவலைக்குறி இக்கவியடியில் காணப்படுகிறது.

    இவ்வாறு வா மீத முலை எறி என்ற கவிதை திருநெல்வேலியில் நடைபெறும் சுற்றுச் சூழல் கேடுகளை விமர்சனப் பார்வையில் அணுகுகின்றது. இவரைப் பொறுத்தவரையில் பழைய காலம் இயற்கையோடு இயைந்த வாழ்வுடைய காலம். தற்காலம் என்பது இயற்கைக்கு விரோதமான காலம் ஆகும் என்ற அடிக்கருத்தை மையமிட்டு இவர் கவிதையாக்கங்களைச் செய்துள்ளார்.

    இவரின் உரைநடைச் சித்திரமான குறுக்குத்துறை ரகசியங்கள் என்பதிலும் சுற்றுச் சூழல் சிந்தனைகள் இடம்பெற்றுள்ளன.

    திருநெல்வேலியில் பிறந்தவன் எப்படி குறுக்குத்துறையோடு தொடர்பில்லாமல் இருக்கமுடியும்? இரண்டு புறமும் ஓங்கி வளர்ந்த மருத மரங்கள், பசிய வயல்கள். இடையிடையே ஒன்றிரண்டு நாவல் மரங்கள், லெவல் கிராசிங், புத்திசாலி கேட் கீப்பர், எவரோ பதித்த சுவர் சூரிய நிழல் கடிகாரம், இசக்கியம்மன் கோவில்.
    …ஒரு வயதிற்கு மேல் குறுக்குத்துறைக்குப் போவது யாராவது மண்டையைப் போட்டால்தான்….
    என்று திருநெல்வேலியில் மிச்சமிருக்கும் இயற்கை அழகைப் பதிவு செய்கிறார் நெல்லைக்கண்ணன்.

    இவ்வகையில் திருநெல்வேலி வட்டார சுற்றுச் சூழல்களை முன்வைத்து அவற்றின் அழிவிற்கு இரங்கும் கவிதைகளைப் படைப்பவராக நெல்லைக்கண்ணன் விளங்குகின்றார்.

    முனைவர் மு.பழனியப்பன்
    இணைப் பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்,
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை.

    Share
  • கோட்பாடுகளின் அடிப்படையில் செவ்விலக்கியங்களை ஆராயத் துணை செய்யும் இணையத் தரவுகள்

    முனைவர் மு.பழனியப்பன்.

     

    செவ்வியல் இலக்கியங்களில் இலக்கிய நயம் காணுதல், உவமை, உருவக அழகு காணுதல் என்ற மரபு சார்ந்த இலக்கியத் திறனாய்வில் இருந்து வேறுபட்டு, மேலை நாட்டுச் சார்பால் கோட்பாட்டு அடிப்படையிலான திறனாய்வுகள் தற்காலத்தில் பெருகி வளரத் தொடங்கியுள்ளன. பல்வேறு வகையானத் திறனாய்வு முறைகளின் வழியாகச் சங்க இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் அரிய கருத்துகள் இத்திறனாய்வாளர்களால் வெளிவரச்செய்யப்பெற்றுள்ளன. இதன் காரணமாக தமிழ்த் திறனாய்வுலகில் புத்தொளி வீசத் தொடங்கியுள்ளது. இவ்வாய்வுகளுக்கும், ஆய்வு அணுகுமுறைகளுக்கும் உதவும் இணைய தளங்கள் பல உள்ளன. அவற்றினைப் பற்றிய அறிமுகத்தையும் அவ்விணைய தளங்களின் தரம் பற்றியும் மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

    கோட்பாடு – சொல் விளக்கம்:
    கோட்பாடு என்பதை ஒரு கருத்தாக்கம் என்று பொருள் கொள்ளலாம். கோட்பாடு என்பதனைப் புரிந்து கொள்ள பின்வரும் எடுத்துக்காட்டு உதவும்.
    கற்பு என்பது ஒரு கோட்பாடு. நடைமுறை வாழ்வில் நாம் ஏற்றுக் கொண்டுள்ள கோட்பாடு. இதன் வாழ்வியல் நெறிமுறை என்னவென்றால், ஒருவனுக்கு ஒருத்தி என்பதாகும். எனவே ஓர் ஆணும், ஒரு பெண்ணும் மட்டுமே, சமுதாய நிகழ்வாகிய திருமணச் சடங்கின் மூலம் இணைந்து வாழும் வாழ்க்கையே கற்புக் கோட்பாட்டினைக் கொண்டது என்று கூறப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு கொள்கையின் சிந்தனைத் தெளிவினாலும் – ஏற்றுக் கொள்ளல் என்பதாலும் – சமுதாய நிலைப்பாட்டினாலும் கோட்பாடுகள் உருவாகின்றன.

    இவ்விரு மேற்கோள்களும் தமிழ் இணையப் கல்விக்கழகத்தின் இணையதளத்தின் நாட்டுப்புறவியல் பாடப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். தமிழ் ஆய்வுகளின் அடிப்படைகளைத், தமிழ்க்கல்வியின் அடிப்படை நிலைகளை அறிந்து கொள்ளத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளம் பயன்படுகின்றது. இத்தளம் தனக்கென ஒரு விரிந்த நூலகத்தையும், தமிழ்ப் பட்டப்படிப்பின் தரத்திற்கான பாடங்களையும் கொண்டு விளங்குகின்றது

    கோட்பாடு வகைகள்:
    கோட்பாட்டின் வகைகளைப் பின்வருமாறுப் பட்டியலிடுகின்றது விக்கிப்பீடியா தளம்.
    அறவியல் திறனாய்வு
    பெண்ணியத் திறனாய்வு
    அமைப்பியல் திறனாய்வு
    பின் அமைப்பியத் திறனாய்வு
    பின்நவீனத்துவத் திறனாய்வு
    நவீனத்துவத் திறனாய்வு
    வடிவவியத் திறனாய்வு
    மார்க்சியத் திறனாய்வு
    கட்டுடைப்பியத் திறனாய்வு
    யதார்த்தவியத் திறனாய்வு
    வரலாற்றியல் திறனாய்வு
    புது வரலாற்றியல் திறனாய்வு
    சமூகவியல் திறனாய்வு
    மொழியியல் திறனாய்வு
    ஒப்பீட்டுத் திறனாய்வு
    உளப்பகுப்பாய்வுத் திறனாய்வு
    தொல்படிமவியல் திறனாய்வு
    எடுத்துரைப்பியல் திறனாய்வு
    அறிவுறுத்தல் திறனாய்வு
    பின்காலனித்துவத் திறனாய்வு
    புனைவியல் திறனாய்வு
    சூழலியல் திறனாய்வு
    புதுத் திறனாய்வு
    இப்பட்டியலில் உள்ள திறனாய்வுகளை, அவற்றின் செல்நெறிகளை, கோட்பாடுகளின் முந்தையதான நிலையை இத்தளம் எடுத்துரைத்து அதற்கான தொடுப்புகளைப் பெற்றிருப்பது சிறப்பிற்குரியதாகும்.

    இவை ஒவ்வொன்றுக்கும் விரிவுதேடி இணையத்தில் நுழைந்தால் அவற்றுக்கான தரவுகள் ஓரளவிற்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இக்கட்டுரையின் அளவு கருதிச் சிற்சில கோட்பாடுகளுக்குக் கிடைக்கும் இணையத் தரவுகள் இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.

    குறிப்பாக தமிழுக்கே உரித்தான தனித்துவ மிக்கக் கோட்பாடுகளாக வளர்ந்துள்ள திணைக் கோட்பாடு போன்ற கோட்பாடுகள் ஒரு வகையாகவும், மேலைநாட்டுச் சிந்தனைக்கு இடமளித்த அவை தந்த வெளிச்சம் கொண்டு சங்க இலக்கியத்தைப் பார்த்த கோட்பாடுகள் மற்றொரு வகையாகவும் ஆக்கிக் கொள்வது என்பது இக்கட்டுரையின் வகைப்பாட்டிற்கு பொருத்தமுடையதாகும் என்பதில் அப்பிரிவே கொள்ளப்படுகின்றது.

    தமிழின் தனித்த கோட்பாடுகள்:
    தமிழின் தனித்த கோட்பாடுகளாக அறியத்தக்கனவற்றுள்
    1. திணைக்கோட்பாடு
    2. ஈகைக் கோட்பாடு
    3. கூற்றுக் கோட்பாடு
    4. அறிவுத் தோற்றவியல்
    ஆகிய நான்கு அமைப்புகளை இணைய நிலையில் காணமுடிகின்றது.

    திணைக் கோட்பாடு:
    திணைக்கோட்பாடு என்ற நிலையில் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் முன்னைப் பேராசிரியர் க.பூரணச்சந்திரனின் இணையதளம் சிறப்பிடம் பெறுகின்றது. இவரின் இத்தளத்தில் இவரது பல் திறப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப் பெற்றுள்ளன. அவற்றைச் சொடுக்கி நமக்குத் தேவையான கட்டுரைகளைப் பெறலாம். திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் அவர் சங்க இலக்கியங்களைக் கண்டுச் சில முடிவுகளுக்கு வருகின்றார். அவற்றில் பின்வரும் சில குறிக்கத்தக்கன.

    முதல், கரு, உரி என்ற இம்மூன்றனுள் உரிப்பொருளே சிறப்பானது. ஏனெனில் முதற்பொருள் பயின்றுவராத, கருப் பொருள் காணப்படாத பாக்களைக் கூட காணலாம். ஆனால் உரிப் பொருளற்ற கவிதை ஒன்றையும் காண இயலாது. உரிப்பொருள் மானிட வாழ்க்கைஅனுபவமே ஆதலின் சங்க இலக்கியமே மனிதமையவாத அடிப்படையில் அமைந்தது என்பதில் ஐயமில்லை. எனவே சங்கப்பாக்களை உரிப்பொருள் மட்டும் பெற்ற பாக்கள், உரிப்பொருள், முதற்பொருள், கருப்பொருள் பெற்ற பாக்கள் என்றுதான் பகுக்க முடியும்.

    1. குறிஞ்சி-வேட்டைச் சமூகம், சுரண்டல் உருவாகா நிலை,இயற்கைக் காதல், பெருமளவு தாய்வழிச் சமூகம்.வெட்சி-வேட்டைச்சமூகம், சிறிய தலைவர்கள், ஆநிரை கவர்தல்
    2.முல்லை-ஆடுமாடுகள் சொந்தமாதல், தனியுடைமையின் தொடக்கம், மேய்த்தல் சமூகம், தந்தைவழிச் சமூகமாதல், கற்புக் கோட்பாடு, வஞ்சி-சிறிய தலைவர்கள், நேருக்கு நேர் போரிடல்
    3. மருதம்-பெருமளவில் நிலத்தைச் சொந்தமாக்குதல், இயற்கை யழிவு, சுரண்டல்- நிலவுடைமைச் சமூகம், பெண்ணுடைமைச் சமூகம், ஆண்கள் நெறிதவறுதல்-நொச்சி-அரணமைத்துக் காத்தல், பெரும் அரசர்கள் தோற்றம்
    4. நெய்தல்-இயற்கைக்குத் திரும்புதல், சுரண்டலற்றநிலை, கலப்புக்காதல், சிரமம், துன்பம்,இரங்கல்,புலம்பல், நிச்சயமற்ற பிரிவு, காஞ்சி-நிலையாமை, நிலையின்மை, புலவர்கள் பேரரசை விட்டு சிறிய புரவலர்களை அணுகுதல்பாலை-களவுசெய்யும் சமூகம்இ மனிதனை மனிதன் அழித்தல், தற்காலிகப் பிரிவு, வெம்மை, பிரிவும் பிரிவின்மையும், வாகை-பெருவேந்தர் குறுநில மன்னர்களை வெற்றிகொண்ட தன்மை இரக்கம்
    5. பாலை-களவுசெய்யும் சமூகம், மனிதனை மனிதன் அழித்தல், தற்காலிகப் பிரிவு, வெம்மை, பிரிவும் பிரிவின்மையும்,வாகை-பெருவேந்தர் குறுநில மன்னர்களை வெற்றிகொண்ட தன்மை, இரக்கம்
    என்பன அவர் காட்டும் திணைக் கோட்பாடு சார்ந்த கருத்துகள் ஆகும்.

    ஈகைக் கோட்பாடு:
    தமிழர்களின் அறம் சார்ந்த செயல்பாடுகளுள் ஒன்று ஈகை ஆகும். இதனைத் தமிழர்களின் தனித்த கோட்பாடாக முனைவர் ந. இளங்கோ காண்கிறார். அவரின் ஈகைக் கோட்பாடு பற்றிய கட்டுரையானது தமிழ்த்தொகுப்புகள் என்ற தளத்தில் காணப்படுகின்றது. இத்தளமும் சங்க இலக்கியக் கோட்பாட்டு ஆய்வுகளுக்கு இடமளித்து வரும் தளமாகும். இதன் பொறுப்பாளராக சென்னையைச் சார்ந்த சிங்கமணி விளங்கி வருகின்றார். காலத்தால் அழியாத பல செய்திகளைத் தாங்கி இத்தளம் வருவதால் இதற்குத் தமிழ்த் தொகுப்புகள் என்றே பெயரிட்டுள்ளனர். இத்தளத்தில் இடம்பெற்றுள்ள ஆக்கங்களின் ஆசிரியர்கள் பெயர்கள் தரப்பெற்றுள்ளன. அதன் வழியாக அவ்வாசிரியர்களின் ஆக்கங்களைக் காணலாம். இதுதவிர கட்டுரையின் பொருள் வகைமையும் தரப்பெற்றுள்ளது. இதன் வழியாகவும் சங்க இலக்கிய ஆய்வுகளைப் பெறலாம்.

    சங்க இலக்கியங்களில் பகிர்ந்துண்ணல், கொடை, பரிசில்,உணவிடல் என்ற பல நிலைகளில் சமூக வழக்கிலிருந்த ஈகை, திருக்குறள் முதலான நீதி நூல்களில் சமண, பௌத்தமதச் சொல்லாடல்களுக்கு ஒப்பப் பசி தீர்த்தல் என்ற பொருளில் இறுக்கம் பெற்றது. அற்றார்அழி பசி தீர்த்தல் (குறள்226) ஈகை, வறியார்க்கு ஒன்று ஈவதே-ஈகை (குறள்221) என்றெல்லாம், ஈகை அறம் பசி தீர்த்தல்; அதுவும்வறியவனின் பசியைத் தீர்த்தல் என்றபொருளில் வலியுறுத்தப்பட்டது. ளளுபுகழ் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் ஈதலால் இசைபெறலாம் என்று ஈகையைப் புகழோடு இணைக்கின்றார். விருந்தோம்பல் என்ற சங்க இலக்கியத்து ஈகையைத் திருவள்ளுவர் இல்லறத்தான் கடமைகளில் ஒன்றாகத் தனித்துவலியுறுத்துகின்றார் என்ற இந்தக் கருத்துச் செவ்வியலக்கியங்களில் காணப்படும் ஈகைக் கோட்பாட்டை விளக்குவதாக உள்ளது.

    கூற்றுக் கோட்பாடு:
    செவ்விலக்கியங்களில் கூற்று முறை அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. தலைவி, தோழி, தலைவன் போன்றோர் கூற்று நிகழ்த்தும் முறைகளுக்கு ஒரு வரையறை உண்டு. திருக்குறள் கூற்று அடிப்படையில் அமைந்திருப்பதை மையமாக வைத்துக் கூற்றுக் கோட்பாடு என்ற ஒரு கொள்கையை முன்நிறுத்துகிறார் கே. பழனிவேலு. இவரின் கட்டுரை பனுவல் என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. இத்தளம் பல ஆய்வுக்கட்டுரைகளின் அரங்கமாகத் திகழ்கின்றது (puthiyapanuval blogspot.in). இவ்விதழ் சென்னை அம்பத்தூரில் இருந்து டாக்டர் சீனிவாசன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் உலகு தழுவிய அளவில் வெளிவருகின்றது. இதன் ஆர்க்கைவ்ஸ் என்ற சேமிப்புக்களத்தில் ஒவ்வொரு இதழும் சேமிக்கப்பெற்றுள்ளன. அவற்றில் பல தரமான சங்க இலக்கியக் கோட்பாடு; ஆய்வுகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இதனுள் ஆய்வாளர்கள் அனைவரும் தங்களின் ஆய்வுரைகளை வழங்க உள்நுழைந்து பதிவு பெற வேண்டும்.

    திருக்குறளைக் கூற்றுக் கொள்கை அடிப்படையில் கண்டு அவர் பின்வரும் முடிவிற்கு வருகின்றார்.
    திருக்குறள் சுட்டும் அறங்கள், தமிழ்ச் சமூகத்தில் புழங்கிக் கொண்டிருந்த அறங்களே ஆகும். இந்த அறங்கள் எதையும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்தாகக் கருதமுடியாது. ஆசிரியர்,கூற்றுகளைத் தொடர்நிலையில் மொழிப்படுத்தும் பணியையே செய்துள்ளார். இவ்வாறான மொழிப்படுத்தலின் நுட்பமே அறத்தை உரைக்கும் பனுவலைப் புனைவுப் பனுவலாக இயங்கச் செய்கிறது. கூற்றுகளின் பொருண்மைத் தொகுதிகளைப் புரிந்துகொண்டு பிற கூற்றுகளுடன் இணைக்கின்ற திருவள்ளுவருடைய மொழித்தொழில்நுட்பம் பிற அற இலக்கியங்களில் காணக் கிடைக்காததாகும். இதனாலேயே அறம் உரைக்கின்ற நோக்கத்திற்கு இடையிலும் திருக்குறளால் ஒரு புனைவுப் பனுவலாகவும் இயங்க முடிகிறது என்ற இந்தக் கருத்து திருக்குறளில் கையாண்டுள்ள மொழித் தொழில் நுட்;பத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.

    அறிவுத் தோற்றவியல்:
    அறிவுத் தோற்றவியல் என்ற கோட்பாட்டை எம்.டி முத்துக்குமாரசாமி அறிமுகப் படுத்திச் சங்க இலக்கியங்களை அதன் வழியில் ஆராய்ந்துள்ளார். இவரின் பெயரிலேயே ஒரு தளம் அமைந்துள்ளது. இதனுள் பல்வகைக் கட்டுரைகள் கிடைக்கின்றன. சங்க இலக்கியக் கோட்பாட்டுக் கட்டுரைகளும் உள்ளன. இதன் முகவரி http://mdmuthukumaraswamy.blogspot என்பதாகும். அறிவுத்தோற்றவியில் என்பதை அவர் பின்வருமாறு விளக்குகின்றார். அறிவறிவு அல்லது அறிவுத்தோற்றவியல் என்று தமிழில் குறிக்கப்படுகின்ற Epistemology என்பதை இலக்கியத்தில் காண விழைந்த முதல் தமிழ் நூலாக க.நாராயணனின் “தமிழர் அறிவுக்கோட்பாடு” என்ற நூலினைச் சொல்லலாம். ஆனால் நாரயணனின் நூல் அறிவுத்தோற்றவியலை விளக்கிய அளவுக்கு பழந்தமிழ் இலக்கியத்தின் அறிவுத்தோற்றவியலை விளக்கவில்லை. இதற்கு அடிப்படையான காரணம் நெறிமுறையில் ஏற்பட்ட கோளாறே ஆகும்.

    நாராயணனின் நூல் “அறிவு” என்ற சொல் பதினென்கீழ்க் கணக்கு நூல்களிலும் பிற சங்க இலக்கியங்களிலும் குறிப்பாக திருக்குறளிலும் எங்கெல்லாம் வருகிறது என்று பார்த்து, அவற்றை “அறிவு” பற்றிச் சொல்லப்படுகின்ற கருத்துக்களோடு இணைத்து தமிழரின் அறிவுக்கோட்பாடு என தனக்கு வேண்டியதை மட்டும் உருவி எடுத்து தொகுப்பதாக உள்ளது. ஆகவே அடிப்படை நிலைப்பாடுகளை தொகுக்கின்ற பிரச்சினை எழவே இல்லை. இதற்கு மாறாக எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களின் அமைப்பாக்கத்தின் அடிப்படை நிலைப்பாடுகளிலிருந்து அவற்றின் அறிவுத்தோற்றவியலை விளக்குவது என் நெறிமுறையாகிறது. இதற்கு சங்க இலக்கியத்தின் மையப்புள்ளியை நான் அடையாளம் காணவேண்டும் என்ற விளக்கம் மிக்க முன்னுரையோடு இவர் இந்தக் கட்டுரையைத் தொடங்குகின்றார்.

    இக்கட்டுரையின் முக்கியமான முடிவாகக் கருதத் தக்கது பின்வரும் கருத்தாகும். உணர்ச்சியை மையமாகக் கொண்டு சகமனிதன், இயற்கை, புற உலகு, ஆகியவற்றோடு மொழி செயல்பாட்டின் மூலம் மனிதன் கொள்கிற இயங்கியல் உறவினை அடிப்படை அறிவுத்தோற்றவியல் நிலைப்பாடாக அறியவரும்போது சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் நவீன வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து தமிழனை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை சொல்லக்கூடும். அப்படிப்பார்க்கையில் அக புற ஒழுங்குகளை ஒரே சமயத்தில் எதிர்கொள்கிற நெடுநெல்வாடை போன்ற பாடல்கள் இக்காலத்திற்கு மிகவும் தேவையான, தமிழனின் உணர்வுகளை உயிர்ப்பிக்கின்ற நவீன கவிதைகளாக விளங்குகின்றன. என்னைப் பொறுத்தவரை நெடுநெல்வாடையே பத்துப்பாட்டில் மிகச் சிறந்த கவிதையாகும் இவ்வகையில் சங்க இலக்கியங்கள் முழுவதற்குமான அறிவுத் தோற்றவியல் ஆய்வுகளைத் தொடங்கலாம்.

    பல் துறை ஆய்வுகள்:
    சங்க இலக்கியப் பல்துறை ஆய்வுகளை இலங்கை நாட்டு அறிஞர்கள் பலரும் செய்துள்ளனர். இலங்கை நாட்டாரின் ஆய்வுகளை இணையப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் தளம் நூலகம் என்ற தளமாகும். இத்தளத்தில் இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள அத்தனை நூல்களும், சிற்றிதழ்களும், சிறுஅறிக்கைகளும் சேமிக்கப்பெற்றுள்ளன. இத்தளம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தால் நிறுவப்பட்டு, கொழும்புவில் இருந்து இயங்கி வருகின்றது.
    தமிழ் இலக்கிய ஆய்வுகள் என்ற பெயரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய பேராசிரியர் க.கைலாசபதி நினைவுக் கருத்தரங்கிற் படிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஒன்று இத்தளத்தில் கிடைக்கின்றது.

    இக்கருத்தரங்கு அமரர் கைலாசபதியின் பதினோராவது நினைவு ஆண்டான 1993இல் இடம்பெற்றது. இதனுள் அமைந்துள்ள கட்டுரைகள் பின்வருமாறு.
    • சங்க இலக்கியத்தில் நோக்கு என்னும் செய்யுளுறுப்பு (பண்டிதர் க.சச்சிதானந்தன்),
    • சங்க இலக்கியங்களிலே ஒழுக்கவியற் கோட்பாடுகள் (வித்துவான் க.சொக்கலிங்கம்),
    • சங்க இலக்கியங்களில் தோழி (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்),
    • பழந்தமிழர் வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும் (கி.விசாகரூபன்),
    • சங்கச் செய்யுள் வடிவங்களும் மொழியும் (பேராசிரியர் அ.சண்முகதாஸ்),
    • யப்பானிய அகப்பாடல் மொழிபெயர்ப்புக்குச் சங்கப்பாடல் மரபு பற்றிய அறிவின் இன்றியமையாமை (மனோன்மணி சண்முகதாஸ்),
    • ஈழத்திற் காணப்படும் சங்ககால முதுமக்கட் தாழிகள் (பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்),
    • வழுக்கையாற்றுப் பிராந்தியத்திற் சங்ககாலப் படிமங்கள் (செ.கிருஷ்ணராஜா)
    என்ற எட்டுக் கட்டுரைகள் இதனுள் அடங்கியுள்ளன. இக்கட்டுரைகளில் இலங்கையில் நடைபெற்று வந்த சங்க இலக்கியக் கோட்பாட்டு ஆய்வுகளை எடுத்துரைப்பதாக உள்ளது.

    இத்தளத்தை அறிமுகம் செய்வதாக அமையும் வலைப்பூ “வேர்களைத் தேடி” என்ற வலைப்பூவாகும். இவ்வலைப்பூவில் பல சங்க இலக்கியக் கட்டுரைகள் காணப்பெறுகின்றன. இதன் பொறுப்பாளர் முனைவர் இரா. குணசீலன் ஆவார். திருச்செங்கோடு கே. எஸ்.ஆர் மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் சங்க இலக்கியங்கள் குறித்த பல தகவல்களை, கட்டுரைகளை அளித்து வருகின்றார் (http://www.gunathamizh.com)

    மேலைநாட்டுக் கோட்பாடுகளும், சங்க இலக்கிய ஆய்வுகளும்:
    மேலைநாட்டுத் தாக்கத்தால் தமிழ்த் திறனாய்வு உலகிற்குப் பல கோட்பாடுகள் அறிமுகமாகின. குறிப்பாக நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று இவற்றை இருவகையாகப் பகுக்ககுலாம். அழகியல், மார்க்சியம், மொழியியல், அமைப்பியல் போன்ற கோட்பாடுகள் நவீனத்துவக் கோட்பாடுகள் ஆகும். பின்னை நவீனத்துவக் கோட்பாடுகள் என்ற அடிப்படையில், பெண்ணியம், உளவியல், பின்னை நவீனத்துவம் போன்றன அமைகின்றன. இவற்றிற்கான நோக்குகளும் கட்டுரைகளும் இணையத்தில் கிடைக்கின்றன. அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு.

    நவீனத்துவ ஆய்வுகள்:
    மொழியியல் ஆய்வுகள்
    நவீனத்துவ ஆய்வுகளில் மொழியியல் சார்ந்த ஆய்வுகள் குறிக்கத்தக்கன. மொழியியல் பின்வரும் பல்துறைகளைக் கொண்டது.
    • ஒலிப்பியல் ஒரு மொழியில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு ஒலிகள் பற்றிய துறை;
    • ஒலியியல், ஒரு மொழியின் அடிப்படை ஒலிகளின் வடிவுரு பற்றி ஆராயும் துறை;
    • உருபனியல், சொற்களின் உள் அமைப்புப் பற்றி ஆராயும் துறை;
    • சொற்றொடரியல், எவ்வாறு சொற்கள் சேர்ந்து இலக்கணத்துக்குட்பட்ட வசனங்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் துறை;
    • சொற்பொருளியல், சொற்களின் நேரடியான பொருளை ஆராய்தலுக்கும்,(சொல் குறிக்கும் பொருள்), அவை சேர்ந்து உருவாக்கும் வசனங்களின் நேரடியான பொருள்களையும் ஆராயும் துறை;
    • மொழிநடை, மொழியின் பாணிகளை ஆராயும் துறை;
    • சூழ்பொருளியல் தொடர்புச் செயற்பாடுகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய ஆய்வு;
    • தொடரியல் ஆய்வு

    இவற்றின் அடிப்படையில் சங்க இலக்கியங்களை ஆராயும் தன்மை நவீனத்துவ ஆய்வாகின்றது. மொழியியல் சார்பான கட்டுரைகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தளத்தில் பெரிதும் கிடைக்கின்றன. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இதழான ஆய்வியில் என்ற இதழில் வெளிவந்துள்ள பல்வேறு துறைசார்ந்த கட்டுரைகளின் பிடிஎப் வடிவம் கிடைக்கின்றது. இவற்றின் வழியாக மொழியியல் சார்ந்த பலகட்டுரைகளை வாசிக்கமுடிகின்றது. இதன் முகவரி: http://www.ulakaththamizh.org/ என்பதாகும். இத்தளத்தில் 1972 முதல் வெளிவந்த கட்டுரைகள் கிடைக்கின்றன. மேலும் முன்னூறுக்கும் மேற்பட்டக் கட்டுரையாளர்களின் பெயரடைவு உள்ளது. இவ்விரண்டின் வழியாகவும் தேடிக் கட்டுரைகளைப் பெற முடியும். செ.வை. சண்முகம், ஆதித்தன், ச. அகத்தியலிங்கம் போன்ற மொழியியல் அறிஞர்களின் கட்டுரைகள் இங்குச் சேமிப்பாக உள்ளன.

    அழகியல்:
    அழகியல் என்பதும் நவீனத்துவச் சிந்தனை ஆகும். வருணனை, உவமை, கற்பனை போன்றனவற்றைத் தமிழ் மரபில் அழகியல் எனக்கொள்வோம் இதனைத்தாண்டி மேலைநாட்டு அழகியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்களை அணுகும் முறைக்கான வாய்ப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன. நவீன இலக்கியத் திறனாய்வில் குறிக்கத்தக்கத் திறனாய்வாளர் தி.சு நடராசன் ஆவார். இவரின் கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அழகியல் சார்ந்த இவரின் ஒரு கட்டுரைத் தமிழ்க் கூடல் என்ற தளத்தில் கிடைக்கின்றது. மகிழம் இன்ஃபோடெக், மதுரை என்ற முகவரியில் இருந்து வெளிவரும் இணையப் பத்திரிக்கை தமிழ்க்கூடல் என்பதாகும். இதன் முகவரி http://www.koodal.com/ என்பதாகும்.

    மார்க்சியத் திறனாய்வு:
    இணையதள அளவில் அதிகமாகத் தமிழில் கிடைக்கும் அயலக் கோட்பாடுகளில் தலையாயது மார்க்சிய திறனாய்வாகும். மார்க்சிய கொள்கைகளை முன்வைத்துப் பல இணையதளங்கள் இயங்கிவருகின்றன.
    இதில் குறிக்கத்தக்க இணையதளம் மார்க்சிஸ்ட். ஆர்க் என்பதாகும். இதன் முகவரி https://www.marxists.org/ மார்க்சியக் கொள்கைகளை அறிந்து கொள்ள மிக உதவும் தமிழ்க்களஞ்சியம் இத்தளமாகும். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் போன்ற பலரின் கட்டுரைகள் இத்தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

    சிவலிங்கம் என்பவர் இத்தளத்தின் தமிழ்ப்பகுதிக்கு இணைய வடிவமைப்பாளராக விளங்குகின்றார். இவரே பல ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்து அளித்துள்ளார். பொருளியல் ஆய்வுகளுக்கு இத்தளம் மிகப் பயன்படும்.
    மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் என்ற பெயரில் இதழொன்றும் வெளிவருகின்றது. இதில் சங்க இலக்கியம் பற்றியச் சிந்தனைகள் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. இது மதுரையில் இருந்து வெளிவருகின்றது. கம்யுனிஸ்ட் பார்டி ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் இது வெளிவருகிறது. இதன் முகவரி https://www.marxists.org/. பண்டைய பண்பாடும் ஆய்வுகளும் என்ற கட்டுரையில் மார்க்சிஸ்ட் சிந்தனை வயப்பட்டு சங்க இலக்கியத்தின் மேல் எழுதப் பெற்றக் கட்டுரைகள் மதிப்பிடப்பெற்றுள்ளன. இக்கட்டுரையின் பல கருத்துகள் சங்க இலக்கியத்தைப் புரட்டிப்போடுகின்றன.

    இனியொரு என்ற தலைப்பிலான ஒரு தளமும் மார்க்சிய முறையில் இயங்கும் கோட்பாடுகளுக்கு இடமளிக்கும் ஆக்கங்களுக்கு இடம் தரும் தளமாக உள்ளது. இதன் முகவரி iniyoru.com என்பதாகும்.

    உளவியல்:
    உளவியல் அடிப்படையிலான கோட்பாடுகளுடன் சங்க இலக்கியங்களை ஒருங்கிணைத்துப் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மோகனா என்ற சென்னைப்பல்கலைக்கழக ஆய்வாளர் தனக்கென ஒரு வலைப்பூவை நிறுவி அதனுள் தன்னுடைய பல கட்டுரை ஆக்கங்களை வெளியிட்டுள்ளார். உளவியல் அடிப்படையில் ஐந்துச் சங்கப் பெண்பாற் புலவர்களின் ஆக்கங்களை அவர் ஆராய்ந்துள்ளார். இத்தளத்தின் முகவரி mohanawritings.blogspot.in என்பதாகும்.

    உளவியில் அணுகுமுறை பற்றிய தகவல்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இலக்கியத்திறனாய்வுப் பாடத்தின் வழியாக வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் ஆய்வாளர்கள் உளவயில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.

    பின்னை நவீனத்துவம்:
    பெண்ணியம்:
    பின்னை நவீனத்துவக் கோட்பாடுகளில் பெண்ணிய நோக்கில் பல ஆய்வர்ளர்கள் சங்க இலக்கியத்தை ஆராய்ந்துள்ளனர். அ.ராமசாமி, பஞ்சாங்கம், மு.பழனியப்பன் போன்றோர் இதனுள் குறிக்கத்தக்கவர்கள். அ. ராமசாமி பக்கங்கள், பெண்ணியம் (இணைய இதழ்), பதிவுகள் (இணைய இதழ்) ஆகியவற்றில் பெண்ணியக் கட்டுரைகள் பல இடம்பெற்றுள்ளன.

    பின்னை நவீனத்துவம்:
    பின்னை நவீனத்துவம் என்ற கோட்பாட்டிலும் பல இணையப் பக்கங்கள் கிடைக்கின்றன. பின்னை நவீன அலை என்ற இணையப் பக்கம் பின்னை நவீனத்துவக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி அவற்றின் வழியாக சங்க இலக்கியங்களை நோக்குகின்றது. அ.ராமசாமி, முத்துமோகன், தமிழவன் போன்ற பலரின் ஆக்கங்கள் இணையவழிப் படுத்தப்பெற்றுள்ளன. இவர்கள் பின்னை நவீனத்துவம் சார்ந்து இயங்குபவர்கள் ஆவர்.

    இவ்வாறு பல்வேறு கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி அக்கோட்பாடுகளின் வழி சங்க இலக்கியங்களைக் காண பெரும் வாய்ப்புகள் இணையத்தில் கிடைத்துவருகின்றன. இவற்றைத் துணை கொண்டு இளைய ஆய்வாளர்கள் பயன் கொள்வது என்பது அவர்களின் தரத்தை உயர்த்தி நிற்கும்.

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழ்த்துறைத் தலைவர்,
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    திருவாடானை
    9442913985
    M.Palaniappan
    muppalam2006@gmail.com
    manidal.blogspot.com
    9442913985

     

     

    Share
  • மலையமான் திருமுடிக்காரியும் முள்ளூர் நாட்டு வளமும்

    –முனைவர் மு.  பழனியப்பன்.

     

    கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகக் கொள்ளப்பெறுபவன் மலையமான் திருமுடிக்காரி ஆவான். சிறுபாணாற்றுப்படை இவனின் கொடைச்சிறப்பினை …

                                           கறங்குமணி
    வாலுளைப் புரவியொடு வையகம் மருள
    ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த
    அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
    கழல்தொடித் தடக்கை காரி
    (சிறுபாணாற்றுப்படை 91-95)

    என்று எடுத்துக்காட்டுகின்றது ஒலிக்கின்ற மணிகளை உடைய வெண்மையான பிடரி மயிரினையுமுடைய தன் குதிரையுடன் தன் நாட்டையும் இரவலர்க்கும் வழங்கும் வள்ளலாக மலையமான் திருமுடிக்காரி இருந்துள்ளான்.

    மலையமான திருமுடிக்காரியின் மலைநாடு ஆகும். இது மருவி மலாடு என்று வழங்கப்பெற்றிருந்திருக்கிறது. நடுநாடு எனச்சொல்லப்பெறும் பகுதி சங்ககாலத்தில் மலைநாடு, ஓவியர் மாநாடு என்று இருநிலைப்பட்டதாக இருந்துள்ளது. மலாடுக்கு பெண்ணையம் படப்பை நாடு என்ற பெயரும் உண்டு. இம்மலைநாடு கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர்ப்பேட்டை ஆகிய ஊர்களையம், கல்வராயன் மலைகளையும் உள்ளடக்கியப் பகுதி என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். (தமிழநம்பி வலைப்பூ) இந்நாட்டினைச் கடைச் சங்க காலத்தில் ஆண்டவன் மலையமான் திருமுடிக்காரியாவான்.

    இவனின் மலை முள்ளூர் மலையாகும். இவனின் தலைநகரம் திருக்கோவலூர் ஆகும். இவன் வீரம் செறிந்தவன். கொடைநலம் உடையவன். இவனைப் பற்றிய குறிப்புகள் அகநானூறு, நற்றிணை, கலித்தொகை, குறுந்தொகை, புறநானூறு போன்ற பல சங்கப் பனுவல்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இருந்து இவனின் வரலாற்றை ஓரளவிற்கு அறிந்து கொள்ள முடிகின்றது.

    “துஞ்சா முழவின் கோவல் கோமான்
    நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்துறை
    பெண்ணையம் பேரியாற்று நுண்அறல்கடுக்கும்
    நெறிஇருங் கதுப்பின்”
    ( அகநானூறு 35)

    என்ற அகநானூற்றுப் பாடல் குறிப்பு காரியின் அரசியல் சிறப்பை விளக்குவதாக உள்ளது. முழவுகள் ஒலித்துக்கொண்டே இருக்கும் நாட்டினை உடையவன் திருக்கோவலூரைத தலைமையிடமாகக் கொண்டு ஆளும் கோமான் காரி. இவன் நெடிய தேர்களை உடையவன். இவனின் சிறப்பு மிக்க நகரங்களுள் ஒன்று கொடுங்கால். இது பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வாற்றின் நுண்ணிய கருமணலைப் போன்ற கூந்தலை உடையவள் தலைவி என்று தலைவியின் அழகு சிறப்பிக்கப்பெறும் இடத்தில் காரியின் பெருமை பேசப்பெருகின்றது.

    இப்பாடலின்வழி தென் பெண்ணையாற்றின் கரை சார்ந்த பகுதிகளை ஆண்டவன் காரி என்பது உறுதியாகின்றது. மேலும் அவனின் தலைநகரம் கோவல் எனப்பட்ட திருக்கோவலூர் என்பதும், அவனின் சிறப்பு மிக்க நகர்களுள் ஒன்று கொடுங்கால் என்பதும், அவன் எல்லைக்குட்பட்டு ஓடிய ஆறுகளில் ஒன்று தென்பெண்ணையாறு என்பதும் தெரியவருகின்றது.

    மலையமான் திருமுடிக்காரியின் வீரச்சிறப்பு:
    மலையமான திருமுடிக்காரி வீரஞ் செறிந்தவன். இவன் பல மன்னர்களுக்குப் போர் உதவி செய்துள்ளான்.

    ஆரியரை வென்றவன்:

    “ஆரியர் துவன்றிய பேர்இசை முள்ளூர்ப்
    பலர் உடன் கழிந்த ஒள்வாள் மலையனது
    ஒருவேற்கு ஓடி யாங்குதம்
    பன்மையது எவனோஇவன் நன்மைதலைப் படினே”
    (நற்றிணை- 170)

    என்ற நற்றிணைப் பாடலில் ஆரியரை வென்றவன் மலையமான் என்ற குறிப்பு காணப்படுகிறது.

    இப்பாடலில் தலைவி தன் பக்கத்து உள்ள அனைத்துத் தலைவியரையும் அழைத்து, அழகுடன் விளங்கும் விறலியிடமிருந்துத் தலைவனைக் காக்க எழுங்கள் என்று உரைக்கிறாள். அவ்வாறு செய்யவில்லை என்றால் ஆரியர்கள் நெருங்கிப் போர் செய்ய வந்தபோது ஒப்பற்ற தன் வாளை எடுத்துப் போர்புரிந்து ஆரியப்படையை விரட்டிய மலையமானின் திறம்போல நாமும் ஒழிய வேண்டியதுதான் என்பது தலைவி கூற்றாகும்.

    இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக்குறிப்பின்படி மலையமான ஆரியரை வென்றச் சிறப்பினை உடையவன் என்பது தெரியவருகிறது.

    சேர மன்னனுக்குப் போர் உதவி புரிந்தவன்:
    முள்ளூர் மன்னனாகிய மலையமான் சிவந்த வேலினை உடையவன். இவன் வீரவளையை அணிந்தவன். இவன் கொல்லிப்பாவையைக் கைப்பற்றுவதற்காகச் சேரமன்னனுடன் முரண்பட்ட கடையெழுவள்ளல்களில் ஒருவனான ஓரியைக் கொன்று அப்பாவையைச் சேரனுக்கு உடைமையாக்கித் தந்தான் என்ற வரலாற்றுக் குறிப்பு அகநானூற்றுப் பாடல் ஒன்றில் பதிவாகியுள்ளது.

    “முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
    செல்லா நல்இசை நிறுத்த வல்வில்
    ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈந்த
    செவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி
    நிலைபெறு கடவுள் ஆக்கிய
    பலர்புகழ் பாவை அன்ன நின் நலனே”
    (அகநானூறு, 209)

    ஓரியை வென்றுச் சேரனுக்கு மலையமான அளித்த கொல்லிப்பாவை போன்ற அழகுடையவள் தலைவி என்பதைக் கல்லாடனார் இப்பாடலடிகளில் காட்டியுள்ளார்.

    சோழ மன்னனுக்கும் போர் உதவி புரிந்தவன்:
    மலையமான் திருமுடிக்காரி மற்றொரு சமயத்தில் சோழனுக்குப் போர் உதவி புரிந்திருக்கிறான். ஒருமுறை சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவனும், சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் போர் புரிந்தனர். இவர்கள் இருவரில் சோழனுக்குச் சார்பாய் காரி நின்று வெற்றியைப் பெற்றுத் தந்தான். இவ்விருவரும் காரியைப் போர் கருதி எந்நாளும் நினைவு கூர்ந்தனர்.

    “குன்றத்து அன்ன களிறு பெயரக்
    கடந்துஅட்டு வென்றோனும் நிற்கூ றும்மே
    வெலீஇயோன் இவன் எனக்
    கழல்அணிப் பொலிந்த சேவடி நிலம்கவர்பு
    விரைந்துவந்து சமம் தாங்கிய
    வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
    நல்அமர் கடத்தல் எளிதுமன் நமக்குஎனத்
    தோற்றோன் தானும் நிற்கூ றும்மே”
    (புறநானூறு, 125)

    என்ற பாடலில் திருமுடிக்காரி வெற்றிக்கும் காரணமாகின்றான். தோல்விக்கும் காரணமாகின்றான் என்று காட்டப்பெற்றுள்ளது.

    வென்றவர்கள் மலைபோன்ற யானைப்படை அழிந்துபோனாலும் அதன் அழிவைக் கருதாது வெற்றியைப் பெற்றுத்தந்தவன் காரி என்று வென்ற மன்னன் காரியைப் பாராட்டுகிறான்.

    வெற்றிவேல் உடைய காரி வாராது இருந்திருந்தால் இத்தோல்வி கிடைத்திருக்காது என்று தோல்வி பெற்றவனும் காரியை எண்ணுகிறான். இவ்வளவில் பகைவர்க்கும், நண்பர்க்கும் முருகவேள் போலக் காட்சி தருகிறான் காரி என்று இந்தப்பாடலைப் பாடியுள்ளார் வடம வண்ணக்கண் பெருஞ்சாத்தன்.

    கொடைச்சிறப்பு:
    காரி கொடைச்சிறப்பு மிக்கவன். இதன் காரணமாகவே இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாக ஆக்கப்பெற்றுள்ளான். மற்றவர்கள்போல் இவன் கொடைமடம் மிக்கவன் அல்லன். உண்மையான கொடைத்திறம் மிக்கவன். தன்னைப் பாடியவர்களுக்குப் பொன்னும் பொருளும் அளித்தவன். ‘மாரி ஈகை மறப்போர் மலையன்’ என்று கடையெழு வள்ளல்களில் இவன் குறிக்கப்பெறுகிறான். (புறநானூறு 158) மாரி போன்ற ஈகையன் காரி. மறப்போர் வல்லவன் மலையன் என்பது இப்பாடலடிகளின் பொருளாகும்.

    கபிலரால் பாடப்பெற்றவன் என்ற பெருமைக்குரியவனாக இவன் போற்றப்பெறுகிறான். இதனை மற்றொரு புலவரான மாறோகத்து நப்பசலையார் இதனைப் பின்வரும் பாடலில் பதிவு செய்கின்றார்.

    “ஒன்னார் யானை ஓடைப்பொன் கொண்டு
    பாணர் சென்னி பொலியத் தலைஇ
    வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
    ஓடாப் பூட்கை உரவொன் மருக
    வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே
    நினவயிற் கிளக்குவம் ஆயின் கங்குல்
    துயில் மடிந்தன தூங்கிருள் இறும்பின்
    பறைஇசை அருவி முள்ளூர்ப் பொருந
    தெறலரு மரபின்நின் கிளையொடும் பொலிய
    நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம்
    புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்
    இரந்து சென்மாக்கட்கு இனிஇடன் இன்றிப்
    பரந்து இசை நிற்கப் பாடினான்”
    (புறநானூறு 126)

    என்ற பாடலில் மலையமான் திருமுடிக்காரியின் புகழ் கபிலரால் பாடப்பெற்று நிலைநிறுத்தப்பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது. இதன்வழி கபிலரின் புகழும், காரியின் பெருமையும் ஒருசேர வெளிப்படுகின்றன.

    காரியின் முன்னோர் புறமுதுகு காட்டாத மன்னர் பரம்பரையினர், அவர்கள் பாணர்க்குப் பொன் பூ சூட்டியவர்கள். இப்பரம்பரையில் வந்த மலையமான் போரில் வல்லவன். அவன் புகழ் நிற்கக் கபிலர் பாடியுள்ளார் என்பது இப்பாடலின் பொருள்.

    மலையமான் திருமுடிக்காரியின் இயல்புகளைக் கபிலர் பாடிய வகை பின்வருமாறு.

    “நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
    பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
    வறிது பெயர்குவர் அல்லர் நெறிகொளப்
    பாடு ஆன்று இரங்கும் அருவிப்
    பீடுகெழு மலையற் பாடியோரே”
    (புறநானூறு 124)

    என்ற இந்தப்பாடலில் கபிலர் நாள், நேரம் பார்த்துக் கொடை பெறவேண்டிய அவசியம் காரியின் அவைக்கு இல்லை என்று குறிப்பிடுகிறார். இது கொடை பெறுவதற்கான, அல்லது தருவதற்கான நாள் இல்லை என்றாலும், பறவையின் குறிப்பும் நல்லமுறையில் இல்லை என்றாலும், சென்று காணக்கூடிய சமயம் இது இல்லை என்றாலும் காரியிடம் சென்றுத் திறனற்ற சொற்களைச் சொன்னாலும் சென்றவர்கள் பரிசின்றித் திரும்பாத கொடைத்தன்மை பெற்றவன் காரி என்று கபிலர் புகழ்கின்றார்.

    காரி தேர் தருபவன் என்பதை மற்றொரு கபிலரின் பாடல் காட்டுகின்றது.

    “நாட்கள் உண்டு நாள் மகிழ்மகிழின்
    யாரக்கும் எளிதே தேர்ஈதல்லே
    தொலையா நல்லிசை விளங்கு மலையன்
    மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
    பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
    பட்ட மாரி உறையினும் பலவே”
    (புறநானூறு, 123)

    என்ற இப்பாடலில் பெரும்பாலும் மன்னர்கள் மதுவுண்டு மயக்கத்தில் இருக்கையில் புவலர்கள் பாடச் செல்வது அல்லது அவர்களை பாட அழைப்பது என்ற வழக்கம் சங்க காலத்தில் இருந்ததைக் காட்டுகின்றது. அக்காலத்தில் தேர்கள் பல தருவது என்பது கள்ளின் மயக்கம், புகழின் போதை. ஆனால் கள்ளுண்ணாத காலத்திலும் பற்பல செல்வங்களை, தேர்களை அளிக்கும் வள்ளல் தன்மை பெற்றவன் காரியாவான் என்பது இப்பாடலின் பொருளாகின்றது.

    மற்றொரு பாடலில் மூவேந்தருக்கு உதவியவன் காரி என்ற குறிப்பினை இடம்பெறச் செய்கிறார் கபிலர்.

    “கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
    கழல்புனை திருந்து அடி்க்காரி நின்நாடே
    அழல்புறம் தரூஉம் அந்தணர் அதுவே
    வீயாத் திருவின் விறல் கெழுதானை
    மூவருள் ஒருவன் துப்பாகியர் என
    ஏத்தினர் தரூஉங் கூழே நும்குடி
    வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
    வடமீன் புரையும் கற்பின் மடமொழி
    அரிவை தோள் அளவு அல்லதை
    நினது என இலை நீ பெருமிதத்தையே”
    (புறநானூறு 122)

    என்ற இப்பாடலில் அந்தணர்க்கு வரையாது வழங்கியவன் காரி என்ற கருத்து உரைக்கப்பெற்றுள்ளது. இப்பாடலில் காரி மூவேந்தருள் ஒருவர்க்கு உதவியவன் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. காரி மூவேந்தருள் சேரருக்கு ஒருமுறையும், சோழர்க்கு ஒருமுறையும் போர்உதவி செய்துள்ளான். இதனைக் கபிலரின் நயமாக மூவேந்தரில் இருவருக்கும் பொருந்துமாறு வெளிப்படுத்தியுள்ளது. காரிக்கு அவனின் மனைவியின் தோளே சொந்தம். மற்ற எதுவும் சொந்தமில்லை என்ற நிலையில் வரையாது வழங்கும் வள்ளல் காரி எனக்குறிக்கின்றார் கபிலர்.

    இவ்வாறு காரியின் வீரமும் கொடையும் இணைத்துச் சங்கப்பாடல்களில் பாடப்பெற்றுள்ளன.

    மலையமான் பரம்பரை:

    காரி இறந்தபின் அவனின் மகன்களுள் ஒருவனான மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பவன் பட்டமேற்கிறான். அவனைப் பற்றிய குறிப்பு ஒன்றும் புறநானூற்றுத் தொகுப்பில் கிடைக்கின்றது. இப்பாடலைப் பாடியவர் மாறோகத்து நப்பசலையார். தந்தையையும் பாடியவர், மகனையும் பாடியவர் என்ற பெருமைக்கு உரியவராக இப்புலவர் விளங்குகின்றார்.

    “அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,
    சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
    இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து
    இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்
    5
    அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,
    அரசு இழந்திருந்த அல்லல் காலை,
    முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது
    இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி
    மல்லல் நல் நாட்டு அல்லல் தீர,
    பொய்யா நாவின் கபிலன் பாடிய,
    மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச்
    செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட
    எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,
    அரு வழி இருந்த பெரு விறல் வளவன்
    மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை
    புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந!
    விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண்,
    சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன்
    ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர்,
    உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,
    ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும்
    கவலை நெஞ்சத்து அவலம் தீர,
    நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!
    கல் கண் பொடிய, கானம் வெம்ப,
    மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க,
    கோடை நீடிய பைது அறு காலை,
    இரு நிலம் நெளிய ஈண்டி,
    உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே.”
    (புறநானூறு, 1740)

    என்ற இப்பாடலில் மலையமானின் மகன் பற்றி புகழ் பதிவு செய்யப்பெற்றுள்ளது. திருமால் ஒளிந்த ஞாயிற்றைக் கொண்டு வந்து உலகை மீளவும் காப்பாற்றியது போல சோழ மண்டலத்தின் அரசன் தோற்று ஓடியபோது, அவரைப் பாதுகாத்து முள்ளுர்ப் பகுதியில் தங்கவைத்துத் தேவையான நேரத்தில் வெளிப்படுத்தியவன் திருக்கண்ணன். இவனின் தந்தையான மலையமான் திருமுடிக்காரி இவ்வுலகில் அறம் செய்து அதன் பயனை அனுபவிக்க மேலுலகம் சென்றுள்ளார். அப்பெருமான் கபிலர் வாயினால் புகழப்பெற்றவன். அவன் வழியில் வந்த நீ தேவையான நேரத்தில் பெய்யும் மழையை ஒத்தவன் ஆவாய் என்று பாடல் புகழ்கின்றது.

    இப்பாடலின் வாயிலாக மலையமான் திருமுடிக்காரியின் சந்ததியை அடையாளம் காணமுடிகின்றது.

    மலையமானும் அவன் மகன் திருக்கண்ணனும் பேரரசுகளுக்குப் போர்உதவி புரியும் படைக்குழுவின் தலைவனாக இருந்துள்ளனர் என்பது இப்பாடல்கள் வழியாகத் தெரியவருகின்றது,

    இவ்வகையில் மலையமான் திருமுடிக்காரி பற்றிய செய்திகளைச் சங்கப்பாடல்கள் வழியாக அறிந்து கொள்ளமுடிகின்றது.

    இவன் மலையான முள்ளூர் சிறப்பானது ஆகும் . இதன் வளத்தையும் புலவர்கள் பாடியுள்ளனர். அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு.

    முள்ளூரின் இயற்கை வளம்:
    திருக்கோவிலூர் வட்டத்தில் முள்ளூர் மலைக்காடு என்ற பகுதி உள்ளது. இதுவே மலையமான் திருமுடிக்காரி வாழ்ந்த இடமாக இருக்கவேண்டும்.இவ்விடத்தின் இயற்கைவளம் பற்றிச் சங்க இலக்கியங்களில் எடுத்து மொழியப்பெற்றுள்ளது.

    முள்ளூர்க்காடு என்றழைக்கப்படும் தற்காலப் பெயர் அக்காலத்தில் முள்ளூர்கானம் எனப்பட்டுள்ளது. குறுந்தொகையில் ஒரு தலைவி இப்பெயரை அப்படியே பயன்படுத்துவதாகக் கபிலர் பாடுகின்றார். “முள்ளூர்க் கானம் நாற வந்து” (குறுந்தொகை 3120 என்ற கபிலரின் குறிப்பு மணம் மிக்க மலர்களைத் தரும் காடாக முள்ளூர் திகழ்ந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.

    புறுநானூற்றில் இடம்பெற்ற கபிலரின் பாடலொன்றில் முள்ளூர் மலை உயரமானது என்ற குறிப்பும், அம்மலையில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும் என்பதும் பெறப்படுகின்றது. “பயன்கெழு முள்ளூர் மீமிசைப் பட்ட மாரி உறையினும் பல” (புறநானூறு, 123) என்ற பாடலடியில் முள்ளூர் மழைப்பொழிவு மிக்கது என்பது தெரியவருகிறது.

    முள்ளூர்க் கானம் அடர்ந்து இருள் சூழ்ந்து இருந்தது என்பதை மற்றொரு புறநானூற்றுப்பாடல் விளக்குகின்றது. “துயில்மடித்தன்ன தூங்கு இருள் இறும்பின் பறை இசை அருவி முள்ளூர்பொருந ” (புறநானூறு 126) என்ற பாடலில் ஓரிடத்தில் துயில் உறங்குவதுபோல அடர்ந்த இருளை உடையது முள்ளூர் என்றும், மேலும் இம்மலையில் இருந்து அருவி ஒன்று விழுந்தது என்பதும் இப்பாடலடிகள் வழியாகத் தெரியவருகின்றது.

    இவ்வாறு முள்ளூர்கானம் சிறப்புடையதாக விளங்கியுள்ளது. இவற்றின் வழி நடுநாட்டில் இருந்த அரசுநிலைபற்றியும்,இயற்கைநிலை பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது.

     

    முனைவர் மு.பழனியப்பன்
    இணைப்பேராசிரியர்,
    தமிழ்த்துறைத் தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

    Share
  • பதினெண் கீழ்க்கணக்குநூல்களில் சமயங்களும், புத்திலக்கிய வளர்ச்சிநிலைகளும்

    — முனைவர் மு.பழனியப்பன்.

     

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

     

     

     

    படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் பின்புலம் என்பது இன்றியமையாதது. ஒரு படைப்பு எழுவதற்கும், படைப்பாளன் எழுதுவதற்கும் ஒரு மன எழுச்சி ஏற்பட வேண்டும். இந்த மன எழுச்சி படைப்பெழுச்சியாக மாறி, தக்கதொரு வடிவம் கொண்டு வாசகத் தளத்திற்கு முழுமையான படைப்பாக வந்து சேர்கின்றது. ஒரு படைப்பு முழுமையான படைப்பாக, வெற்றிகரமான படைப்பாக அமைய அதன் வடிவம், அதன் கருத்து, நடை, அதன் பொதுமைத்தன்மை, அதன் பன்முகத்தன்மை, இலக்கியத் தன்மை போன்ற பல நிலைகள் காரணங்களாக அமைகின்றன. இக்காரணங்கள் வலுப்பெற்று வெற்றிகரமான படைப்பாக மிளர்ந்த ஒன்று காலாகாலத்திற்கும் அழியாமல் சமுதாயத்தின் முன்னோடி இலக்கியமாகக் கருதப்பட்டு நிலைப்படுகின்றது. அவ்வகையில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய கால இலக்கியங்களாக இருந்தாலும் அவை தன் காலச் சூழலில் நின்றுகொண்டு, இன்றைய சமுதாயத்தின் நெறிகாட்டு இலக்கியங்களாக முன்னோடி இலக்கியங்களாக அமைந்து சிறக்கின்றன. அவற்றின் நீதி சொல்லும் பாங்கு புதிய இலக்கிய வகை உருவாகக் காரணமாகியது.

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுதப்பட்ட ஆசிரியர் அவர்சார்ந்த சமயம் ஆகியவற்றின் காரணமாக சமயப் பின்புலத்தையும் பெற்றமைகின்றன. இப்பின்புலம் அக்கால நிலையில் சமயங்கள் பெற்றிருந்த ஏற்றத்தைக் காட்டுவனவாக உள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அவற்றின் கடவுள் வாழ்த்துகளை அடிப்படையாகக் கொண்டு பகுக்கும்போது அவைதிக சமயங்கள், வைதிக சமயங்கள் என்ற இருநிலைப் பகுப்பினை உணரமுடிகின்றது. இவைதவிர சமயப்பொதுமை என்ற நிலையையும் பதினெண் கீழ்க்கணக்கு நூல் பரப்பில் காணமுடிகின்றது.

    அவைதிக சமயங்களாகக் கொள்ளத்தக்கன சமணம், பௌத்தம் ஆகியனவாகும். இவற்றில் ப சமணம் சார்ந்த கடவுள் வாழ்த்துக்களைப் பெற்ற பதினெண் கீழ்;க்கணக்கு நூல்களாக, நாலடியார், பழமொழி, ஏலாதி, சிறுபஞ்சமூலம், திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்கள் அமைகின்றன. பௌத்த சமயம் சார்ந்த கடவுள் வாழ்த்துகள் எதுவும் எந்நூலுக்கும் அமையவில்லை. இதன் காரணமாகப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் காலத்தில் பௌத்தச் செல்வாக்கு குறைந்தே இருந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.

    வைதீக சமயங்கள் என்ற நிலையில் சைவம் வைணவம் ஆகியன அமைகின்றன. சைவம் சார்ந்தனவாக ஆசாரக் கோவை, ஐந்திணை எழுபது, இன்னிலை ஆகிய நூல்கள் அமைகின்றன. திருமால் பற்றிய கடவுள் வாழ்த்துகளை உடைய நூல்களாக நான்மணிக்கடிகை, திரிகடுகம், கார் நாற்பது ஆகியன அமைகின்றன. சிவன், திருமால் இருவரையும் பாடுவனவாக இனியவை நாற்பது, இன்னா நாற்பது ஆகியன அமைகின்றன. திருக்குறள் சமணப் பொதுமை வாய்ந்ததாக அமைகின்றது. ஆசாரக் கோவை வேதநெறி சார்ந்ததாக அமைகின்றது. மீதம் ஐந்து நூல்கள் சமயச் சார்பினை அறியா நிலையில் உள்ளன.

    அவைதீக சமயங்கள்
    அவைதீகம் என்றால் வேதநெறியை ஏற்காதது என்று பொருள்படும். வேதங்கள் சொல்லிய முறைக்கு முன்னான சமயங்கள், அல்லது வேதநெறிப்பாடாத சமயங்கள் அவைதீக சமயங்கள் எனப்படுகின்றன. இவ்வகையில் சமணமும், பௌத்தமும் அவைதீக சமயங்கள் ஆகின்றன. அதாவது ஆரியர் வருகைக்குப் பின்பு ஏற்படுத்தப்பட்ட வேத நெறி சார்ந்த சமயங்களை வைதீக சமயங்கள் என்றும், அதற்கு முன்னான முரணான சமயங்களை அவைதீக சமயங்கள் என்றும் பிரிப்பது சமயப் பாகுபாடாகும்.

    சமணம்
    சமண சமயத்தாக்கம் அதிகமாக இருந்த காலமாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் காலம் அமைகின்றது. இதற்குப் பின் வந்த களப்பிரர் காலத்திலும் சமண சமயத்தின் ஆளுமை இருந்தமையை இலக்கிய வரலாறுகள் உணர்த்துகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணப்படும் சமண சமய கடவுள் வாழ்த்துகள் சமயம் பற்றி அறிய முக்கிய சான்றாதாரங்களாக உள்ளன.

    நாலடியார் சமண சமயம் சார்ந்த பலரால் எழுதப் பெற்றது. இதன் கடவுள் வாழ்த்துப்பகுதியில், இடம்பெறும் பாடல் பின்வருமாறு.
    வான்ஈடு வில்லின் வரவறியா வாய்மையால்
    கால்நிலம் தோயாக் கடவுளை- யாம் நிலம்
    சென்னி யுறவணங்கிச் சேர்தும் எம் உள்ளத்து
    முன்னி யவைமுடிக என்று”
    என்ற இப்பாடல் அருக வணக்கமாக அமைகின்றது. வானவில்லின் வரவையும் செலவையும் அறிய இயலாது. அதுபோன்று உயிர்களின் பிறப்பு இறப்பு ஆகியன பற்றியும் அறிந்துகொள்ள இயலாது. பாதம் புவியில் பாடாத அளவு பெருமை உடைய அருகக்கடவுளை வணங்கி நாம் எண்ணியதை முடிக்க வேண்டுவோம் என்பது நாலடியாரின் தெய்வ வணக்கம் ஆகும்.

    மேலும் நாலடியாரில் நிலையாமை கருத்துக்கள் முன்னணியில் அமைக்கப்பெற்றுள்ளன. செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியனவும் வலியுறுத்தப்பெற்றுள்ளன. இவற்றின் வழி சமண சமயக் கருத்துகளை அறிந்து கொள்ள முடிகின்றது.
    பழமொழி நானூறில் வரும் கடவுள் வாழ்த்து பின்வருமாறு
    ~அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம்
    விரிகடல் சூழ்ந்த வியன்கண் மாஞாலத்து
    உரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
    பெரியதன் ஆவி பெரிது
    என்ற பாடல் பழமொழி நானூற்றின் முன்பகுதியில் அமைந்துள்ள கடவுள் வாழ்த்துப் பாடலாகும். இதில் பெரியதன் ஆவி பெரிது என்று ஒரு பழமொழி எடுத்தாளப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. எனவே இக்கடவுள் வாழ்த்தும் பிறறொரு புலவரால் எழுதப்பாடாது முன்றுறையரையனாராலேயே எழுதப்பெற்றிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது.

    பெரியதன் ஆவி பெரிது என்ற இந்த உவமை சமணசமயம் சார்ந்த உவமையாகும். சமண சமயத்தில் உடல் பெரியதாக இருந்தால் அதனுள் இருக்கும் உயிரும் பெரியதாக இருக்கும் என்ற கருத்து விளங்குகின்றது. சீவன் அல்லது உயிருக்குப் பருமனும்அளவும் குறிக்கின்றது சமணரது தத்துவம். உயிர் எந்த உடலை தனக்கு உறைவிடமாகக் கொள்கின்றதோ அந்த உடலின் பருமனுக்கு ஏற்பத் தன்னைக் கூட்டவும் குறைக்கவும் விரிக்கவும் சுருக்கவும் வல்லது (கி.லெட்சுமணன், இந்தியத் தத்துவ ஞானம்,ப.96) என்ற கருத்தினை மேற்கொண்டுப் பார்க்கையில் பழமொழிநானூற்றின் கடவுள் வாழ்த்து சமண சமயக் கொள்கைக்கு இடம் தருவதாக இருப்பதை அறியமுடிகின்றது.

    பரந்த கடல் சூழ்ந்த உலகில் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று குற்றங்களையும் கெடுத்துக், குற்றமற்றவராக விளங்கும் இறைவனின் திருவடிகளை அறிந்தவர்களின் உயர்வு பெரிதாகும். அது பெரிய உடலின் ஆவி பெரியதாக அமைவதுபோல் அமையும் என்பது இப்பாடலின் கருத்தாகும்.

    இந்நூலுக்கு ஒரு தற்சிறப்புப் பாயிரம் ஒன்று உள்ளது.இதிலும் இந்நூல் சமணம் சார்ந்தது என்பது தெரிவிக்கப்பெற்றுள்ளது.
    ~பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்
    பண்டைப்பழமொழி நானூறும் கொண்டு இனிதா
    முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
    இன்றுறை வெண்பா இவை.
    என்ற இப்பாடலில் அசோக மரத்தின் நிழலில் இருக்கும் பெருமான் என்று அருகப் பெருமான் வாழ்த்தப் பெறுகிறான். இவற்றின் வாயிலாக பழமொழி நானூறு சமணசமயம் சார்ந்தது என்பது தெளிவாகின்றது.

    சிறுபஞ்சமூலமும் சமணம் சமயம் சார்ந்த நூலாகும். இந்நூலில் இடம்பெற்றுள்ள கடவுள் வாழ்த்து பின்வருமாறு.
    முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
    பழுதின்றி ஆற்றப் பணிந்து – முழுதேத்தி
    மண்பாய ஞாலத்து மாந்தர்க்கு உறுதியா
    வெண்பா உரைப்பான் சில
    என்ற கடவுள் வாழ்த்து காரியாசானின் சிறுபஞ்சமூலத்தின் முன்பகுதியில் இடம்பெறுகின்றது.

    காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்றினையும் ஒழித்து, முழுதுணர்ந்து, முதுமை பெறாத இறைவனின் பாதத்தை குற்றமின்றி வணங்கி அப்பெருமானின் குணங்களைப் போற்றி இவ்வுலகத்திற்கு நன்மை உண்டாகும் வண்ணம் சிறுபஞ்சமூலம் என்ற நூலை நான் உரைப்பேன் என்ற ஆசிரியர் கூற்றாகக் கடவுள் வாழ்த்து அமைகின்றது.
    ஏலாதி என்ற நூலும் சமண சமயச் சார்புடைய நூலாகும்.
    அறுநால்வர் ஆய்புகழ்ச் சேவடி யாற்றப்
    பெறுநாலவர் பேணி வழங்கிப் பெறுநூல்
    மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்கு
    இறைபுரிந்து வாழ்தலியல்பு.
    என்ற இப்பாடலில் சமண சமய அடிப்படைகள் பல கூறப்பெற்றுள்ளன. சமண சமயத்தில்தீர்த்தங்கரர்கள்- 24, அவதராங்கள்-24, தேவராசி -4, சக்கரவர்த்திகள் -12, பலதேவர்-9, வாசுதேவர் -9 என்ற கூறுபாடுகள் ஏற்கப்படுகின்றனர். இவர்கள் கொல்லாமை முதலான அறங்களை உலகில் பரவச் செய்தவர்கள் ஆவர். இவர்களின் மேலாக, வேதங்களால் உணர்த்தப்படுகின்ற இறைவனை எப்போதும் துதி செய்து வாழுங்கள். இறந்தபின் இதற்கு வாய்ப்பில்லை. தேவர்களுக்கு அரசனும் இதனையே செய்து பெரும்பதவி பெற்றான் என்கிறது இப்பாடல்.

    ஏலாதி நூலின் ஆசிரியராக விளங்கும் கணிமேதாவியார் பாடிய அகத்துறைப் பாடல் திணைமாலை நூற்றைம்பது ஆகும். இந்நூலும் சமண சமயத்தவரால் எழுதப்பெற்றது என்பதற்கு ஏலாதி சான்றாக அமைகின்றது.

    இவ்வாறு சமண சமய நூல்களின் கடவுள் வாழ்த்துகள் அக்கடவுளின் தன்மைகளை, இயல்புகளை, அவர்களின் சுற்றததை எடுத்துக்காட்டுகின்றது. இதன் காரணமாக பதினெண் கீழ்க்கணக்கு காலத்தில் சமணத்திற்கு உயரிய இடம் இருந்ததை உணரமுடிகின்றது. அதாவது ஏறக்குறைய ஐந்து நூல்கள் என்ற பெரிய எண்ணிக்கை சமண சமயத்தின ஆளுமை உயர்வை இக்காலத்தில் காட்டுவதாக உள்ளது.

    வைதீக சமயங்கள்
    வைதீக சமயங்கள் என்ற நிலையில் வேதநெறிக்கு உட்பட்ட சமயங்களாக சைவம், வைணவம் ஆகியன கொள்ளப்பெறுகின்றன. இவை பற்றிய குறிப்புகள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணப்பெறுகின்றன.

    சைவம்
    சிவனை முழுமுதல் தெய்வமாகக் கொண்ட சமயம் சைவ சமயம் ஆகும். இச்சமயத்தின் கடவுளான சிவனைப் பற்றிக் கடவுள் வாழ்த்தில் பாடி சைவசமயப் பின்புலம் ஏற்படுத்திக் கொண்ட நூல்கள் நான்காகும். அவை ஆசாரக் கோவை, ஐந்திணை எழுபது, இன்னிலை ஆகியன சிவபெருமானின் பாடலைத் தம் கடவுள் வாழ்த்தாகக் கொண்டுள்ளன. இவற்றின் வழியாக சிவபெருமான் பற்றி கருத்துகளை அறிந்து கொள்ளமுடிகின்றது.

    பெருவாயின் முள்ளியார் பாடிய ஆசாரக் கோவையின் சிறப்புப் பாயிரமாக சிவனைப் போற்றும் கடவுள் வாழ்த்து ஒன்று அமைந்துள்ளது.
    ஆர்எயில் மூன்றும் அழித்தான அடி ஏத்தி
    ஆரிடத்துத் தான்அறிந்த மாத்திரையான் ஆசாரம்
    யாரும் அறிய அறன் ஆய மற்றவற்றை
    ஆசாரக் கோவை எனத்தொகுத்தான் – தீராத்
    திருவாயில் ஆய திறல்வண் கயத்தூர்ப்
    பெருவாயின் முள்ளிஎன் பான்
    என்ற இப்பாடலில் ஆர் எயில் மூன்றும் என்பது திரிபுரம் பற்றியதாகும். திரிபுரத்ஐ;த எரித்தவன் அடி ஏத்துவதாக ஆசாரக்கோவையின் சிறப்புப் பாயிரம் அமைகின்றது.

    மேலும் இவ்வாசாரக் கோவையின் உட்பகுதியில் அமைந்துள்ள ஒருபாடல் வேதநெறியைப் போற்றுகின்றது.
    தக்கிணை, வேள்வி, தவம், கல்வி இந்நான்கும்
    முப்பால் ஒழுக்கினால் காத்து உய்க்க உய்யாக்கால்
    எப்பாலும் ஆகா கெடும் (பாடல். 3)
    என்ற பாடலில் வேதநெறிமுறை காட்டப்பெற்றுள்ளது. எரியால் பொருள்களை அவிக்கும் வேள்வி, அந்தணர்களுக்கு வழங்கப்பெறும் ;தட்சிணை போன்றன வேதக்குறிப்புகள் ஆகும். இவ்வகையில் வேதநெறியின் பாற்பட்டதாக ஆசாரக்கோவை அமைகின்றது.

    மூவாதியார் படைத்த ஐந்திணை எழுபது என்ற நூலில் விநாயக வணக்கம் இடம்பெற்றுள்ளது.
    எண்ணும் பொருளினிதே எல்லா முடித்தெமக்கு
    நண்ணும் கலையனைத்து நல்குமால்- கண்ணுதலின்
    முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் ஆலஞ்சேர்
    சண்டத்தான் ஈன்ற களிறு
    என்ற பாடலில் ஈசனைக் கண்ணுதல் தெய்வமாக அதாவது நெற்றியில் கண் பொருந்தியவனாக, மூலமாக விளங்குகின்றவனாக, கண்டத்தில் விடம் உடையவனாகச் சிவனைக் காட்டி அத்தெய்வத்தின் மகனான விநாயகப் பெருமான வேண்டிய கலைகள் அனைத்தும் தருவான் என்று உரைக்கப்பெற்றுள்ளது.

    வைணவம்
    வைணவத்தின் முதல் தெய்வம் திருமால் ஆவார். இவர் முல்லை நிலத் n;தய்வமாகச் சங்ககாலத்தில் வைத்து எண்ணப்பெற்றார். இதன் தொடர்ச்சிப் பதினெண் கீழக்கணக்கு நூல்களில் காணக்கிடைக்கின்றது. திரிகடுகம், கார்நாற்பது, நான்மணிக்கடிகை ஆகிய நூல்கள் திருமால் வணக்கத்தைப் பெற்றுள்ளன.
    ~மதி மன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்
    கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்
    முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
    எதிர்மலர் மற்றவன் கண் ஒக்கும் ப+வைப்
    புதுமலர் ஒக்கும் நிறம்
    என்பது விளம்பிநாகனார் பாடிய நான்மணிக்கடிகையின் கடவுள் வாழ்த்துப் பகுதியாகும். இதில் திருமாலின் முகம் முழுமதி போன்றது என்றும், திருமாலின் கையிலுள்ள சக்கரம் சூரியனைப் போன்றது என்றும் அவனின் விழிகள் தாமரைமலர் போன்றது என்றும், அவன் திருமேனியின் நிறம் காயா மலர் போன்றது என்றும் கருத்துக்கள் அமையப் பாடப்பெற்றுள்ளன. இதனைப் பாடிய விளம்பிநாகனார் கடவுள் வாழ்த்தாக மற்றொரு பாடலையும் தருகின்றார்.
    படியை மடியகத் திட்டான் அடியினால்
    முக்காற் கடந்தான் முழுநிலம் – அக்காலத்தும்
    ஆப்பனி தாங்கிய குன்றெடுத்தான் கோவின்
    அருமை அழித்த மகன்
    என்ற இப்பாடலில் திருமாலி;ன் செயல்கள் எடுத்துக்காட்டப்பெறுகின்றன. உலகைத் தன் மடியில் வைத்தவன் திருமால். அவன் மூவடியால் உலகை அளந்தவன். குன்றைக் குடையாகப் பிடித்து ஆநிரைகளைக் காத்தவனும் அவனே. அரிய நெருப்பு மதிலான ~சோ|வை அழித்தவனும் அவனே. இவ்வாறு அவனின் அருமை பெருமைகளைச் சொல்லி நான்மணிக்கடிகை திருமாலை வாழ்த்துகின்றது.
    நல்லாதனார் இயற்றிய திரிகடுகத்தில் திருமால் வாழ்த்து அமைந்துள்ளது.
    ~கண்ணகல் ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த்
    தண்ணறும் ப+ங்குருந்தம் பாய்ந்ததூஉம் நண்ணிய
    மாயச் சகடம் உதைத்தூஉம் இம்மூன்றும்
    ப+வைப்ப+ வண்ணன் அடி
    என்ற இப்பாடலில் திருமாலின் அலகிலா விளையாட்டுகள் எடுத்துக்காட்டப்பெறுகின்றன. உலகை அளந்தவன் கண்ணன். குருந்த மரம் முறித்ததும், வண்டியை உதைத்ததும் திருமாலே. அவன் காயாம் ப+வைப் போன்ற கரிய நிறமுடைய திருமால் ஆவான். இவ்வாறாக திருமாலின் பெருமையைப் பேசுவதாக அமைவது இக்கடவுள் வாழ்த்தாகின்றது.

    கார் நாற்பது என்ற பதினெண்க் கீழ்க்கணக்கு நூலின் கடவுள் வாழ்த்தும் திருமாலைப் போற்றுகின்றது.
    ~பொருகடல் வண்ணன் புனைமார்பிற்றார்போல்
    திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ
    வருதும் என மொழிந்தார் வாரார் கொல் வானம்
    கருவிருந் தாலிக்கும் போழ்து
    என்ற இந்தப் பாடலில் திருமால் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது. கார் என்பது முல்லை நிலத்தின் பெரும்பொழுதாகும். இந்நிலத்தினைப் பற்றிய பனுவல் கார் நாற்பது. முல்லை நிலத்திற்கு உரிய தெய்வம் திருமால். அத்தெய்வத்தை முதல் பாடலில் சுட்டி அதனையே கடவுள் வாழ்த்தாகவும் ஏற்கத்தக்க வகையில் இந்நூலின் முதல் பாடலை மதுரை கண்ணங்கூத்தனார் பாடியுள்ளார்.

    கடலின் நிறத்தை உடைய திருமாலின் மார்பில் உள்ள மாலை போன்று வானவில்லை குறுக்காக நிறுத்தி மழையானது பெய்யத் தொடங்கியது. இம்மழைக்காலத்தில் வருவோம் என்று சொல்லி விட்டுச்சென்ற தலைவர் வாராது இருப்பாரா என்பது இப்பாடலின் கருத்தாகும்.

    இன்னிலையில் சிவபெருமானையும், உமையம்பிகையையும், சிவபெருமான் பெற்றெடுத்த மற்றொரு மகனான முருகனையும் வணங்குவதாகக் கடவுள் வாழ்த்து அமைகின்றது,
    ~வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான்
    வாலிழை பாகத்து அமரிய கொழுவேல்
    கூற்றம் கதழ்ந்நெறி கொன்றையன்
    கூட்டா உலகம் கெழீஇய மலிந்தே
    என்ற பாடல் கடவுள் வணக்கமாக அமைகின்றது. இதனை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. ஆனால் இன்னிலையை எழுதியவர் பொய்கையார் ஆவார். இப்பாடலில் வேலனைப் பெற்றெடுத்த விரிந்த சடையை உடைய பெருமான் எமனைச் சினந்தழித்தக் கொன்றை மாலையை உடைய பெருமான் ஆகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்துள்ள உமையம்பிகையின் இணையோடு அமர்ந்திருக்க உலகம் நன்மை பெறுகின்றது என்பது இப்பாடலின் பொருளாகின்றது.

    சிவனையும் திருமாலையும் ஒருங்கிணைந்த நிலையில் பாடப்பெற்றுள்ள கடவுள் வாழ்த்துகள் வைதிக நெறியில் அமைந்த மும்மூர்த்திகளையும் கடவுள் வாழ்த்தில் பாடும் முறைமையும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் காணப்படுகின்றது. இனியவை நாற்பதின் கடவுள் வாழ்த்தும் முக்கடவுளர்களைத் தொழும் நிலையில் அமைகின்றது.
    ~கண்மூன்றுடையான் தாள் சேர்தல் கடிதினிதே
    தொல்மாண் துழாய் மாலையானைத் தொழலினிதே
    முந்துறப் பேணி முகநான் குடையானைச்
    சென்றமர்ந் தேத்தல் இனிது
    என்று சிவன், திருமால், நான்முகன் ஆகிய மூவரையும் வணங்குவதாக ப+தஞ்சேந்தனாரின் இனியவை நாற்பது விளங்குகின்றது.

    இன்னாநாற்பதின் கடவுள் வாழ்த்து, சிவன், திருமால், பலராமன் ஆகிய மூவரையும் வாழ்த்துகின்றது.
    முக்கண் பகவன் அடிதொழா தார்க்கின்னா
    பொன்பனை வெள்ளையை உள்ளா தொழுகின்னா
    சக்கரத்தானை மறப்பின்னா ஆங்கின்னா
    சத்தியான் தாள்தொழாதார்க்கு
    என்பது இன்னாநாற்பதின் கடவுள் வாழ்த்துப் பகுதியாகும். இப்பாடலில் மூன்று கண்களை உடைய சிவன், பலராமன், திருமால் ஆகிய மூவரையும் தொழாமல் இருப்பது இன்னாதது என்று குறிக்கிறார் கபிலர்.

    மேற்சொன்னவற்றைத் தொகுத்துக் காணும்போது, வேதநெறியின் பாற்படாத அவைதீக சமயங்களுக்கும், வேதநெறியின் பாற்பட்ட வைதீக சமயங்களுக்குமான போட்டி மிகுந்த காலப் பகுதியில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எழுந்துள்ளன என்பது தெளிவாகத் தெரிகின்றது.

    திருக்குறள் வேதநெறியின் படியும் அமையாமல், அவைதீகத்தையும் சார்ந்துவிடாமல் பொதுநிலையில் நிற்கின்றது. திருக்குறள்
    அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ;ஒன்றன்
    உயிர் செகுத்து உண்ணாமை நன்று (குறள் 259)

    என்று வேள்வியை மறுக்கின்றது. ஏனெனில் வேள்வியில் ;உயிர் செகுத்து சதைத் திரளைப் போடும் வழக்கம் இருந்துள்ளது. இவ்விரண்டையும் திருவள்ளுவர் மறுக்கின்றார். அதே நேரத்தில் அவைதீக நெறிப்படவும் அவர் தன் நூலை அமைத்துக்கொள்ளவில்லை.
    காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
    நாமம் கெடக் கெடும் நோய் (குறள் 360)

    என்று சமணக் கொள்கையை ஏற்கும் வள்ளுவர் இன்பத்துப்பால் என்ற ஒன்றைப் பாடுகின்றார். இவ்வின்பத்துப்பால் காமம் சார்ந்த ஒன்றாகும். தமிழ் நெறிப்பட்ட நிலையில் அமைந்த களவியல், கற்பியல் ஆகியவற்றை வள்ளுவர் ஏற்றுக்கொள்வதில் இருந்து அவைதீக நெறியிலும் அவர் தன்னைச் சார்ந்து அமைத்துக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

    நாலடியார் பாடிய காமத்துப்பாலுக்கும் திருக்குறள் காமத்துப்பாலுக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. பொதுமகளிர், கற்புடை மகளிர் ஆகிய இருவரின் இழிவையும் சிறப்பையும் எடுத்துரைக்கும் பணியை மட்டுமே நாலடியார் செய்துள்ளது. ஆனால் வள்ளுவர் காதலின் முதல்நிலை முதல், ஊடல் வரைப் பாடியுள்ளார். இதனால் வள்ளுவர் பொதுநிலை சார்ந்து தன் நூலைச் சமயச் சார்பு இன்றிப் படைத்துள்ளார் என்பது தெளிவு.

    இவ்வாறு வெளிப்படத் தன்னை சமய அடிப்படை வாய்ந்ததாகக் காட்டிக்கொள்ளும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை அடிப்படையாக வைத்து அவற்றின் சமய நிலையை அதன் பின்புலத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.

    புத்திலக்கிய வகைகள்
    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை அடிப்படையாகக் கொண்டு நீதிநூல்கள் பாடும் வகைமை தோன்றியது. முற்கால நீதி நூல்கள் என்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை வழங்கும் முறைமை ஏற்பட்டது. பிற்காலத்தில் நீதி நூல்கள் தோன்றும் வாய்ப்பும் ஏற்பட்டது.

    பிற்கால ஒளவையார் பாடிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்றன பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் அமைந்துள்ள நீதிநூல்களின் தொடர்நிலைசார்ந்தனவாகும். இவற்றைத் தொடர்ந்து எழுந்த அருங்கலச்செப்பு, முனைப்பாடியார் பாடிய அறநெறிச்சாரம், அதிவீரராம பாண்டியர் பாடிய வெற்றிவேற்கை, குமரகுருபரர் பாடிய நீதி நெறி விளக்கம், சிவப்பிரகாசர் பாடிய நன்னெறி, உலகநாதப் பண்டிதரால் பாடப்பெற்ற உலகநீதி, மாயுரம் வேதநாயகம் பிள்ளையால் பாடப்பெற்ற நீதிநூல் பெண்மதி மாலை போன்றனவும் நீதி இலக்கிய வகைமையின் தொடர்ச்சியாக அமைகின்றன.

    மேலும் புதிய வகைமைகள் தோன்றவும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் காரணமாக அமைந்தன.

    ஆத்திச்சூடிகள்
    ஒருவரியில் அறத்தைச் சொல்லும் மரபு பதினெண்கீழ்க்கணக்கு நூலான முதுமொழிக்காஞ்சியில் துவக்கி வைக்கப்பெற்றது. இம்மரபு ஒளவையாரின் ஆத்திச்சூடியானது. இதன்பின் பல ஆத்திச் சூடிகள் வர ஆரம்பித்தன.

    பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி, பாரதிதாசனின் ஆத்திச்சூடி, வ.சுப. மாணிக்கத்தால் எழுதப்பெற்ற தமிழ்ச் சூடி, ச.மெய்யப்பன் எழுதிய அறிவியல்சூடி, நா.ரா. நாச்சியப்பன் எழுதிய தமிழ்சூடி, சிற்பி எழுதிய ஆத்திச் சூடி போன்ற பல ஆத்திச்சூடிகள் புதுவகையாகப் பதினெண்க் கீழ்க்கணக்கு நூல்களின் தாக்கத்தால் படைக்கப்பெற்றன.

    திருக்குறள் தொடர்பான புதிய ஆக்கங்கள்
    திருக்குறளை மையமாக வைத்துப் பல ஆக்கங்கள், பல வகைமைகள் தோன்றின. ஒளைவயார் படைத்த ஞானக்குறள், வ.சுப. மாணிக்கானர் படைத்த மாணிக்கக்குறள் ஆகியன திருக்குறளின் தாக்கத்தால் எழுந்தவை. இதன் யாப்பு வடிவமான குறள் வெண்பா யாப்பு வடிவமும் பிறரால் பின்பற்றப்பட்டது. குறிப்பாக சைவ சித்தாந்த நூலான உமாபதி சிவம் படைத்த திருவருட்பயன் வள்ளுவ யாப்புமுறையைப் பின்பற்றியது.

    திருக்குறளை முன்னிறுத்த அதனைச் சார்ந்து பல இலக்கியங்கள் தோன்றின. திருக்குறள் குமரேச வெண்பா, ரங்கேச வெண்பா போன்றன இவ்வகையில் குறிக்கத்தக்கன. கவிராஜ பண்டிதர் எனப்படும் ஜெகவீரபாண்டியனார் இயற்றி திருக்குறள் குமரேச வெண்பா மிகச் சிறப்பானது. முதல் இரு அடிகளில் குறள், அடுத்தது ஒரு தனிச்சொல், அடுத்த இருஅடிகளில் மேற்காட்டிய குறளுக்கு எடுத்துக்காட்டு நிகழ்ச்சி என்று அத்தனை குறள்களுக்கும் நேரிசை வெண்பா யாப்பில் ஒரு நூலை கவிராஜபண்டிதர் திருக்குறள் குமரேச வெண்பா எனப் படைக்கின்றார். இதோடு நில்லாமல் குறளுக்கும், எடுத்துக்காட்டிற்கும் உரைவிளக்கம் தருகின்றார். இவ்வடிப்படையில் ரங்கேச வெண்பா போன்றனவும் எழுந்தன.

    திருக்குறள் தமிழில் அதிகம் உரையாசிரியர்களைப் பெற்ற நூலாகும். இதன் சொற்சுருக்கம்,செம்மை,தெளிவு கருதிப் பற்பலரும் உரை வரைந்தனர். உரை வரைந்து கொண்டுவருகின்றனர். இவை அனைத்தும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மீது மக்கள் கொண்டுள்ள பற்றினை விளக்குவன என்றால் மிகையாகாது.

    இன்னா, இனிய
    இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்று வாழ்வில் இன்னாதவற்றையும் இனியவற்றையும் காட்டுவன பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும். பிற்காலத்தில் பாவேந்தர் பாரதிதாசனால் இயற்றப்பெற்ற குடும்பவிளக்கு, இருண்ட வீடு ஆகிய இரு முரண்பட்ட கருத்து கொண்ட இலக்கியங்கள் படைக்கப்படவும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வழிவகுத்துள்ளன.

    இன்னும் பற்பல முயற்சிகள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பெற்று வருகின்றன. இவ்வகையில் சமயநிலையிலும், இலக்கிய வகைப் பெருக்க நிலையிலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன.

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழ்த்துறைத் தலைவர், இணைப் பேராசிரியர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

     

     

     

    Share
  • இனி யார் சிலம்பிசைப்பார்

    –முனைவர் மு.பழனியப்பன்.

     

    குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் பற்றிய ஆவணப்படம் பற்றிய கண்ணோட்டம்

    PANNAARAAICHI VITHTHAKAR  KUDANTHAI PA. SUNDARESANAR3
    ஓடும் காவிரியின் ஒய்யாரத்தை அருகிருந்துப் பார்க்க முடியுமா? காவிரியின் புதுப்புனல் ஓட்டம், அது சுழித்துச் சுழித்துப் பொங்கிச் செல்லும் புதுமை, நாற்றுகளுக்கு இடையில் புகுந்தோடும் வளமை, தமிழ்ப்பாட்டுக்களின் தாளத்தோடு இசைந்தோடும் அதன் கவி வெள்ளம், கொக்குகளின் அணிவகுப்பு, மீன்களின் துள்ளல் என்று காவிரி காட்டும் உயிர்ப்பெருக்கம் என்று பல்வகை நீர்க்கோலம் காட்டும் காவிரியின் பேரழகை தமிழின் இசைப் பின்புலத்தோடு, இசை வரலாறோடு, தமிழிசை வாணரின் வாழ்வோடு கலந்து தருகிறது குடந்தை ப. சுந்தரேசனார் பற்றிய ஆவணப்படம். தமிழிசையாறு குடந்தை ப. சுந்தரேசனார். தமிழ்ப்பண்களை வெளிப்படுத்தும் பேறு அவர் பெற்ற வாழ்க்கைப் பேறு.

    PANNAARAAICHI VITHTHAKAR  KUDANTHAI PA. SUNDARESANAR2மண்சார்ந்த பண் கலைஞர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு மண்உருவம் சமைத்துத் தொடங்கும் இவ்வாவணப்படம், அவருக்குத் திருத்தவத்துறையில் இராசகோபுரத்தில் இடம் சமைக்கப்பெற்றிருப்பதைக் காட்டி அவர் பொன்னுருவம் பெற்றதோடு நிறைகிறது இவ்வாணப்படம். சீர்காழியில் தொடங்கும் அவரின் வாழ்க்கை கும்பகோணத்தில், ஆடுதுறையில், திருவாரூரில், திருமழபாடியில், திருப்புள்ளம்பாடியில், சிதம்பரத்தில், மதுரையில் தொடர்ந்து இசை முழக்கமாக வெளிப்பட்டுள்ளதை நீரோட்டமாக அளிக்கிறது இப்படம்.

    பண்ணாராய்ச்சி வித்தகரான குடந்தை ப. சுந்தரேசனார் – மனிதநேயம் கொண்டவர், பணத்தைப் பொருளாக எண்ணாதவர், பண் ஆராய்ச்சி வித்தகர், பாடியும் விரிவுரையாற்றியும் பாடும்போதே விளக்கவுரை செய்தும், விளக்கவுரையின்போதே பாடியும் சாதனைகள் பல புரிந்தவர், தமிழிசை வளரப் போராடியவர் என்று அவரின் பண்புகளைப் பாராட்டும் அறிஞர்தம் உரைகள் அவற்றினை முன்னுரையாகக் கொண்டு பண்ணாராய்ச்சி வித்தகவரின் ஒலிவடிவத்தை இயற்கை எழிலோடு கலந்து தருகிறது இக்குறுவட்டு.

    PANNAARAAICHI VITHTHAKAR  KUDANTHAI PA. SUNDARESANAR

    நாடுகாண்குழு என்ற ஒன்றைத் தொடங்கி அதன் வழி தமிழசைப்பயணம் மேற்கொண்டு, தேவாரப் பனுவல்களைக் கல்வெட்டுக்களாக்கி அவர் செய்த அரும்பணி இன்னொரு பக்தி இயக்கம். மற்றுமொரு தமிழியக்கம்.

    குடும்பம் தழைத்தோங்கப் பரம்பரை இல்லையென்றாலும் தன் தமிழிசைக்கானப் பரம்பரையை அவர் துவக்கிச் சென்றுள்ளார். அவர் வழியில் தமிழிசை வளர்ந்து வருகிறது என்பதற்கு இவ்வாவணப்படத்தில் வெளிப்பட்டிருக்கும் இசைவாணர்கள் சான்று.

    மகாவித்வான் மீனாட்சி சுந்தரனாரின் பெருந்திருப்பிராட்டியாரின் பிள்ளைத்தமிழில் வருகைப் பருவத்தில் இருந்துப் பாடப்பெற்ற குடந்தை ப.சுந்தரேசனாரின் தமிழ்ப்பாடல் மையாமன இடத்தில், தேவையான இடத்தில் இவ்வாவணப்படத்தில் இடம்பெறச்செய்யப்பெற்றுள்ளது. அதற்கான நடனவடிவம் தந்தவரின் நடனப்பாங்கு ஒரு முழுமையான இலக்கியத்தை ரசித்த முழுமையைத் தந்துநிற்கிறது. அதுபோல சிலப்பதிகார வாழ்த்துப்பகுதிகளைக் காவிரியாற்றின் ஓட்டத்தில் மர ஓடத்தை நிற்கவைத்து அதன் மீது நடனமாடச் செய்திருப்பதும் மழையைப் போற்றும்போது நடனபெண்ணார் அமர்ந்து காவிரித்தண்ணீரை வணங்கி நிகழ்த்தும் முறையும் கண்களில் அகலாமல் காட்சியாக நிலைக்கின்றன.

    PANNAARAAICHI VITHTHAKAR  KUDANTHAI PA. SUNDARESANAR4

    பண்ணாராய்ச்சி வித்தகரின் உலகத்தமிழ் மாநாட்டு உரை இவ்வாவணப்படத்தின் புதிரொன்றுக்கு நல்ல பதில் தருகின்றது. பெரும்பாணாற்றுப்படையின் இசைவரிகளுக்கு பண்ணாராய்ச்சி வித்தகர் குரல் முழக்கம் செய்கின்றார். ஆயன் ஒருவன் குழல் செய்து இசை ஒலிக்கும் காட்சி காட்சியாக வருகின்றது. இது ஏன் வருகின்றது என்ற புதிருக்குப் பண்ணாராய்ச்சி வித்தகரின் மாநாட்டுப் பேருரையின் சிறுபகுதி பதில் தந்துவிடுகின்றது. குழலிசையை முதன் முதலாக உலகுக்கு அறிமுகம் செய்தவன் தமிழன் என்பதால் அக்காட்சி முன்னிலும் அதற்காக காரணம் பின்னிலும் அமையும்படி இவ்வாவணப்படம் ஆதி அந்தமாக விளங்குவது சிறப்பாக உள்ளது.

    முனைவர் மு. இளங்கோவன்
    முனைவர் மு. இளங்கோவன்

    தமிழிசை உலகில் குடந்தை ப. சுந்தரேசனாரின் பணியை, அவரின் குரலை, அவரின் உருவத்தை நிலைநிறுத்துவதாக இவ்வாவணப்படம் அமைகின்றது. இதனை எழுத்தும் இயக்குமுமாக்கிய முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் தமிழிற்கு காலத்தினால் செய்த உதவி இதுவாகின்றது. தமிழறிந்தோர் தமிழறிந்தோரை விளக்கம் செய்யாவிட்டால் தமிழன் இருந்தென்ன, செத்தென்ன பயன். தயாரித்தளித்த திருமதி பொன்மொழி இளங்கோவன் வெளியிட்ட வயல்வெளித் திரைக்களம், இசை மற்றும் படத்தொகுப்பு செய்த இராஜ்குமார், இராசமாணிக்கம், ஆகியோருக்கு நன்றிகள். இவ்வாவணப்படத்தைப் பெறுவதற்கு வயல்வெளி திரைக்களம் 0442029053 என்ற எண்ணைச் சுழற்றுங்கள். தமிழிசையின் ஆரத்தைச் சுழற்றிய பெருமை உங்களைச் சேரும். இனி யார் சிலம்பிசைப்பார்?

    ஆவணப்படம் முன்னோட்டக் காணொளிகள்:

    காணொளி-1: http://youtu.be/wevQG7e_8f8

    காணொளி-2: http://youtu.be/CFpvBCw1wxQ

     

     

     

    முனைவர் மு.பழனியப்பன்
    இணைப்பேராசிரியர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

     

     

    கட்டுரையின் படங்கள்:
    ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் காணப்பட்ட திரைக்காட்சிகள் மற்றும் விக்கிபீடியா

    Share