கவிஞர் கே. ரவியின் கவிதைக் கோட்பாடு

0

— முனைவர் மு.பழனியப்பன்.

கவிஞர் கே. ரவியின் கவிதைக் கோட்பாடு

கவிஞன், திறனாய்வாளன் ஆகிய இருவரும் இரு துருவ எல்லைகள் என்றாலும் இந்த எல்லைகளின் இணைப்பு படைப்பாகின்றது. கவிதை மற்ற வடிவங்கைளை விட எளிமையானது. எதையும் கவிதையில் சொல்லவே எந்தப் படைப்பாளனும் முதலில் விழைகிறான். பிரபல கதை எழுத்தாளனுக்கும் கவிதை என்பதே முதலில் அறிமுகமாகிறது. ஏனென்றால் தமிழுக்கும் கவிதைக்கு நீண்ட நாள் உறவு, பழக்கம், கொடுக்கல் வாங்கல் இருந்துவருகிறது, இன்னும் அதன் தொடர்பு வளர்ந்து வருகிறது என்பதுதான் கவிதை வாழ்ந்துவருவதற்கான காரணம்.

கவிஞன் திறனாய்வாளன் ஆகலாம். திறனாய்வாளன் படைப்பாளனாக மாறுவது மிகவும் கடினம். அவனின் கூர்மைப்பட்ட விமர்சனங்களைத் தாண்டி படைப்பு மனப்பான்மைக்குள் அவன் நுழைவது மிகவும் கடினம். ஆனால் படைப்பாளன் படைப்பில் சமுதாயத்தைத் திறனாய்கிறான். தன்னையே சுயமதிப்பீடு செய்து கொண்டு தன்னை வளப்படுத்திக்கொள்கிறான். கவிஞன் ஒரு திறனாய்வாளனாகவே படைப்பினை சமைக்கிறான். எனவே படைப்பாக்க மனப்பான்மைக்கும், திறனாய்வுப் போக்கிற்கும் பெருத்த இடைவெளி இருப்பதில்லை.

வாழ்வில் நீராடும் நீர் நிமிடங்களிலும், தியானத்தில் அமரும் மௌன நிமிடங்களிலும், வகுப்பில் அமரும் மாணவ நிமிடங்களிலும், நண்பர்களோடு விவாதிக்கும் கூட்ட நிமிடங்களிலும் கவிதைக்கான கணங்களாக ஆக்கிக் கொள்ளும் கவியுள்ளம் படைத்தவர் கே.ரவி. அதே நேரத்தில் கவிதை பற்றிய தெளிவான திறனாய்வுச் சிந்தனையும் அவரிடம் காணப்படுகிறது. கவிதைக்கான களம், எழுச்சி, கருத்து, மணம், குணம், காரம் ஆகிய அனைத்தையும் தன்னுள் உள்வாங்கிக் கொண்டுள்ளார். புதுக்கவிதை, மரபுக்கவிதை என எதுவானாலும், அதன் கவியுளத்தை நேசிக்கிற பண்பு அவரிடம் இருக்கிறது. கவிதை பற்றி பழைய கோட்பாடுகளையும், புதிய கோட்பாடுகளையும் கோர்த்தறிகிற பரந்த உளப்பாங்கு அவருக்கு வாய்த்திருக்கிறது.

கவிதைக்கான சொற்கள் எங்கிருந்து வருகின்றன என்பது கவிஞர் ரவியின் மிகப் பெரிய திறனாய்வுத் தேடலாகும். இத்தேடலில் கவிதைக்கான சொற்கள் பிரபஞ்ச வெளியில் உலவுவதாகவும் கவிஞன் கவிதைச் சொற்களைப் பிடித்து இருத்துபவனாகவும் அவர் கருதுகிறார். கவிதைச் சொற்களைக் கண்டறிந்து மீளவும் பிரபஞ்ச வெளியின் உயரத்திற்குத் தன்னை உயரத்தும் முயற்சியில் கவிஞன் செயல்படுகிறான் என்பதே அவரின் தேடல் முடிவாகும்.

k ravi2அவரது சொற்களில் அப்படியே இக்கருத்தைக் காணவேண்டுமானால் ‘‘மெய்மறந்துபோய் தன்னையிழக்கின்ற தவம் புரியும் கவிஞனுக்கு வான் தரும் வரமே சொற்கள். தன் முனைப்பில் உதிக்கும் அதிர்வுகளில் சற்று விலகி விரிந்து வானத்தின் அதிர்வுகளில் பங்கேற்று மீளும்போது அவன் அள்ளிக் கொண்டுவரும் அதிர்வலைகள் தாமே சொற்களாய் அவனை மீறி வெளிப்பட்டு, அணிவகுத்து ஒரு கவிதையாக அமைகின்றன. இந்தப் பேருண்மையைத்தான் மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்”
என்று பாரதி சுட்டிக்காட்டினான். அப்படிவரும் சொற்களே நிகழ்த்துக் காட்டும் வலிமையுள்ளவை. அப்படிப்பட்ட நிலையில் தீ என்றால் காடெரியும். தேன் என்றால் உண்மையிலே நாட்டு விடுதலை கிட்டும்.’’ (பக் 49-50) என்ற அவரின் கருத்து கவிதைக்கு வேண்டிய சொற்கள் அலைவரிசாய் அணியணியாய் வான்வெளியில் இருப்பதை உணர்த்துகிறார்.

அவை எப்படி மீளவும் வானவெளிக்கு ஏகுகின்றன என்பதைப் பின்வருமாறு காட்டுகிறார் கவிஞர் ரவி. ‘‘இப்படியெல்லாம் நான் கவிதையோடு போராடிக் கொண்டிருக்கிறேன். கவிதை இன்பம் என்று சிலர் கூறுவர். அது முற்றிலும் சரியன்று. சில சமயங்களில் இன்பம் பயக்கும் கவிதை பெரும்பாலும் என்னை ஓர் இனம்புரியாத துன்பத்தில் சிக்கித் தவிக்கச் செய்கிறது. அது வெடித்துச் சிதறும் முன் என்னுள் பெருஞ்சுமையாகக் குவிந்து் என்னை அழுத்தி அழச் செய்து இனி முடியாது தோற்றுவிட்டேன் எனக் கதறி விழச் செய்து திணற வைக்கிறது. அது வெடித்துச் சிதறும் கணத்தில் நானே வெடித்துச் சிதறுகிறேன். அண்டப் பெருவெளி எங்கும் வளரந்து நிறைகிறேன். என்னை அழுத்திக் கொண்டு இருந்த பெருஞ்சுமையிலிருந்து ஒரே கணத்தில் சட்டென்று விடுபட்டதும் காற்றினும் மெலிதாகி விரைந்து பறக்கிறேன். என் ஆறடி நீள உடற கூட்டிருப்பை ஓரணுவுக்குள் போட்டு அடைத்ததெல்லாம் நான் மீண்டும் வானளாவி வளரத்தான் என்ற பேருண்மையைப் புரிந்து கொள்கிறேன். (ப. 118) இதுவே ஒவ்வொரு கவிஞன் அல்லது படைப்பாளன் பெறும் படைப்பு அவஸ்தை. பெற்றதை வெளியிடுவது எதற்காக? ஏன் என்ற கேள்விகளுக்கு இதுவே பதிலாகும். வானிலிருந்துப் பெற்றதை மீளவும் வானிற்கு அனுப்பும் சுழற்சி முறையே படைப்பதற்கும், படிப்பதற்குமான காரணமாகும்.

கவிதை பற்றிய வரையறைகள்:
கவிஞர் ரவியைப் பொறுத்தவரையில் கவிதை என்பது ஓர் அனுபவத்தின் நிலைநிறுத்தல் என்பதே ஆகும். இதனடிப்படையில் பல்வேற வரையறைகளைக் கவிஞர் ரவி கவிதைக்குத் தருகிறார். அவை மற்ற திறனாய்வாளர்கள் அணுகாதது, அணுக இயலாதது என்பது உறுதி.

1.‘‘அனுபவக் கணங்களை நிலை பெறச் செய்வதே கவிதையின் நோக்கம். அன்றாட வாழ்வில் கணங்கள் நீர்க்குமிழிகள் போல் தோன்றி மறைந்த வண்ணம் இருக்கின்றன. நிகழ்கணம் என்ற ஒன்று திடமாகத் தென்படுவதே இல்லை. ‘இந்தக் கணம்’ எனச் சுட்டும்போதே அந்தக் கணம் கடந்த காலத்தைச் சேர்ந்ததாய், நிகழ்வென்னும் உயிரற்றதாய், நினைவு பதிவாய், இறந்துவிட்ட கணமாய் மட்டுமே உணரப்படுகிறது. ஆனால் கவிதையில் சிறைப்படும் கணங்கள் மட்டும் உயிருடைய கணங்களாய், என்று படித்தாலும் தம் அனுபவச் சூழலை அப்படியே நிகழ்த்திக் காட்டுவனவாய் நிலைபெற்று விடுகின்றன. எனவே கவிதையின் நோக்கம் அனுபவக் கணங்களை நிலைபெறச் செய்வது மட்டுமில்லை. அக்கணங்களை நிகழ் அனுபவப் பொறிகளாய் உயிர்ப்போடு நிலைபெறச் செய்வதே கவிதையின் நோக்கம். அதனால் காலம் வென்று நிற்பதே கவிதைக்கு இலக்கணமாகிறது. (ப. 63)

2.‘‘முழுக்க முழுக்க அனுபவப் பகிர்வுக்காகவே அமைந்த சாதனம் கவிதை. ஓர் உயர்ந்த கருத்தையோ சிந்தனையையோ வெளிப்படுத்துவது அதன் நோக்கம் இல்லை. கருத்து வளமும் சிந்தனை வளமும் கவிதையில் இருக்கலாம். ஆனால் அவை கவிதைக்கு இன்றியமையாதன அல்ல. அனுபவ வெளிப்பாடகக் கவிதை இருந்தே ஆக வேண்டும். இல்லையேல் அது கவிதையாகவே கருப்படாது.’’ (ப. 82)

3.கவிதை வெறும் ஆற்றல் இல்லை. அது ஓர் ஆற்றாமை (பக்கம்.4)

4.காலச்செலவின் காரணமாகத் தன் அனுபவக் கணத்தில் பங்கேற்க இயலாதவர்க்கு வசதியாக, அக்கணத்தை மொழிவடிவில் நிலைபெறச் செய்து, இனிவரும் காலமெல்லாம் யாரும் அம்மொழி வடிவத்திற்குள் நுழைந்து அதில் நிலைபெற்றிருக்கும் கணத்தை அனுபவிக்க உதவுவது கவிதை. (பக்கம் 57)

மேற்கண்ட கருத்துகள் கவிதைக்கான வரையறைகளாகக் கவிஞர் ரவியால் காட்டப்பெறுபவை. இருப்பினும் அவரின் தனித்த உறுதியான யாருக்காகவும் மாற்ற இயலாத கவிதை பற்றிய கருத்து கவிதை என்பது அனுபவ வெளிப்பாடு என்பதே ஆகும். அனுபவ வெளிப்பாடு இல்லாத கவிதை கவிதை என்றே அழைக்கப்பெறாது என்பது அவரின் தனித்த கோட்பாடு.

“அனுபவ வெளிப்பாடாகவே கவிதை இருக்க வேண்டிய தேவை இல்லை என்ற வாதம் எழலாம். அதற்கு ஒரே பதில். அனுபவ வெளிப்பாட்டை மட்டுமே கவிதை என்றும் மற்ற வெளிப்பாடுகளை வேறு பெயர்களிட்டு அழைப்பதென்றும் இவ்வாசிரியன் எடுத்த முடிவை அனைவரும் ஆமோதிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. என்றாலும் அனுபவ வெளிப்பாடுகளாக இந்நூலில் எடுத்துக்காட்டப்பெற்றுள்ள படைப்புகளையும் அவைபோன்ற படைப்புகளையும் ஏதேனும் ஒரு பெயரிட்டு அவ்வண்ணம் இயலாத படைப்புகளில் இருந்து அவற்றைப் பிரித்துச் சுட்டிக் காட்டும் கட்டாயம் இவ்வாசிரியனுக்கு உண்டே.’’ (82) என்ற கருத்து கவிஞர் ரவியின் கவிதை பற்றிய உறுதியான வரையறையை எடுத்துரைப்பதாக உள்ளது.

கம்பர், வள்ளுவர், பாரதியார், ஔவையார் , மேத்தா, சிற்பி, ந. பிச்சமூர்த்தி போன்ற பலரின் கவிதைகளை முன்வைத்து அவற்றில் கவிதை எனக் கொள்ளத்தக்கவை எவை என்று கண்டறி்ந்து விலக்கவேண்டியனவற்றை விலக்கி அவர் செயல்பட்டுள்ள புத்தகமே நமக்குத் தொழில் கவிதை என்ற கட்டுரைத் தொகுப்பாகும்.

கவிதா அனுபவம் :
கவிதையின் அனுபவ வெளிப்பாடு என்றால் கவிதைக்குள் புனையப்படும் அனுபவத்தின் திறம், அனுபவப் புனைவு எப்படிப்பட்டது என்று தெரிவிக்கப்பட வேண்டும்.அதனையும் கவிஞர் ரவி செய்கின்றார்.

‘‘இயற்கை அழகிலும் தன் உள்ளுணர்வைத் தாக்கி ஊடுறுவும் புற நிகழ்ச்சிகளிலும் அதிர்வுகளிலும் மெய்மறந்து போகும் ஒருவன் அந்த அனுபவத்தை வெளிப்படுத்தும் சாதனமாக முதலில் தோன்றும் கவிதை, நாளடைவில் அவன் உள்ளுணர்வின் ஊற்றுக்கண்ணாகவே மலர்ந்து, சிரித்து அவனை ஆட்கொண்டு ஏன் ஆட்டிப்படைத்து ஒவ்வொரு கணமும் அவனை மெய்மறக்கச் செய்து அவனை அவனே இழக்கச் செய்து அக்கணம் எல்லாம் தானே ஆகி நிறைய வைத்து அவனை அமரனாய் நித்ய ஜீவனாய் விளங்கச் செய்கிறது.’’ (ப. 30) என்று கவிதானுபத்திற்குள் கவிஞர் என்றும் நிலைத்து நிற்கும் அமரநிலையைப் பற்றிக் கருத்துரைக்கிறார் கவிஞர் ரவி.

கவிதை, கவிஞன், அனுபவம் இவையெல்லாம் தனித்தனியாக நிற்கின்றன. இவை ஒன்றிணைந்து கவிதானுவமாக வெளிப்படவேண்டும். கவிஞன் அனுபவத்திலிருந்து வேறாகாமல் அதுவே அவனாக வேண்டும்.

‘‘தன்னிலிருந்து வேறாய்த் தோன்றும் பொருள் எதற்குள்ளும் அது உயிருள்ளதாயினும் சரி உயிரற்றதாகக் கருதப்படும் பொருளாயினும் சரி, தான் நுழைந்து கலந்து அதுவாக ஒரு கணமேனும் அதன் அனுபவத்தில் அல்லது அதிர்வுகளில் பங்கேற்க முடியும் வியப்பை ஒரு கவிஞன் உணரும்போது, அதைத் தன் கவிதைகயின் மூலம் உணர்த்தும்போதும் – தான்- மற்றவை என்ற பாகுப்பாட்டின் மெய்மைநிலை பொருளற்றதாகிவிடுகிறது.’’ (ப. 55) என்று கவிதானுபவத்தின் வேறுபாட்ற்ற நிலையை எண்ணி உரைக்கிறார் கவிஞர் ரவி.

இவற்றின் வழியாக படைப்பு, படைப்புக்குள் காட்டப்படும் அனுபவம் ஆகிய இரண்டும் இரண்டற்ற நிலையைப் பெற்று, ஒன்றாகும் உன்னதத் தருணமே கவித்தருணமாகின்றது.

கவிதைக்கான இரு செயல்பாடுகள்:
கவிதை ஒளி உடையது. ஒலி உடையது என்பது கவிஞர் ரவியின் கொள்கை. ஒளி என்பது கவிதைக்குள் இருக்கும் உள்ளொளி. அனுபவக் கீற்று. ஒலி வடிவம் என்பது கவிதைக்கான ஓசை ஒழுங்கு. சொற்களுக்குள் புதைந்து கிடக்கு ஓசை நயம். உள்ளொளியும், இசையொலியும் கலந்ததே கவிதை என்பது கவிஞர் ரவியின் கண்டறிதல்.

‘‘புற அனுபவத்தைத் தன் அகச்சுவையில் அமிழ்த்தி எடுத்துக் கவிஞன் வழங்கும்போது, அந்த அனுபவம் நிற வடிவத் தோற்ற மாற்றங்கள் அடையத்தான் செய்கிறது.’’ (ப. 28) என்று கவிதைக்குான நிறம், அதாவது ஒளி பற்றிக் கருத்துரைக்கிறார் கவிஞர் ரவி.

‘‘உள்ளொளியைத் தூண்டும் உள்ஊக்கம் சரியான மொழி வடிவம் பெற்றால் அது சாகாவரம் பெற்ற கவிதையாகிறது. எந்தச் சொல் தான் பிறப்பெடுத்து வந்த உள் ஊக்கத்தைக் கேட்போர் நெஞ்சிலும் கிளரச்சியுறச் செய்கிறதோ அந்தச் சொல்லே கவிதையில் இடம்பெறும் தகுதி பெறுகின்றது’’ (ப.3)

‘‘ஒரு கவிதையின் சிறப்புக்குச் சொல்வளம் இன்றியமையாதது. சொல்லழகு என்றால் வெறும் அடுக்கு மொழியோ, எதுகை, மோனை இயைபு போன்ற அணிகளோ இல்லை. எந்த இடத்தில் இதுவே சரியான சொல் , இதை எடுத்துவிட்டு இதற்குப் பதிலாக வேறு சொல்லை இங்கு அமரச் செய்தால் கவிதையின் சிறப்பு குறைந்துவிடும் என்று எந்தச்சொல்லைப் பற்றிச் சொல்ல முடியுமோ அதுவே அழகிய சொல் , அதுவே வெல்லும் சொல் பிறிதொன்றிலாதது. (ப. 41)
என்பன கவிதையின் ஒலிவடிவம் பற்றிய கவிஞர் ரவியின் சிந்தனை ஆகும்.

ஒரு கவிதை என்பது உள்ளொளியைத் தொடுவதாகவும், ஒலிநயம் மிக்கதாகவும் அமைகின்றபோது வெற்றியடையும் என்பது இவரின் முடிவு. கவிதையின் ஒலி நயமே அதனை வெற்றி மிக்க இலக்கிய வடிவமாக ஆக்குகின்றது என்பது இவரின் நம்பிக்கை. மற்ற கலைகளான திரைப்படம், நாடகம் போன்றவற்றில் காட்சிகளும் வருகின்றன, உரையாடல் வழியாக ஒலிகளும் கலக்கின்றன. என்றாலும் ஒலி என்ற ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அனுபவங்களை அவ்வொலி என்ற ஒன்றினால் மட்டும் அடையச் செய்யும் பெருமை கவிதைக்குத்தான் உண்டு என்கிறார் கவிஞர் ரவி.

‘‘ஒரு கண நேரக் காட்சியைக் காலம் வென்று நிற்கும் காட்சியாகத் தோற்றப்படுத்தும் ஓவியம், சிற்பம், நாடகம், திரைப்படம் போன்ற கலைகளைவிடக் கவிதை ஒரு படி மேலே சென்று அக்காட்சியை ஒரு கவிஞன் புலன் நுகர்வு செய்த அனுபவச் சூழலையே, தன்னைத் தக்க முறையில் பயிலும் அகத்திலும் ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது. நாடகத்திலும், திரைப்படத்திலும் ஏனயை ஒளி, ஒலி இணை கலைகளிலும் இச்சூழல் ஓரளவு உண்டாக்கப்படுகிறது என்றாலும், மேலே கண்டவாறு ஒலியின் இணைப்பாலேயே இது இயன்றதாகிறது. ஒலியால் மட்டுமே இதைப் பெருமளவு நிகழ்த்திக் காட்டுவது கவிதை எனத் துணிந்து முடிவு செய்யலாம். (ப. 59) இக்கருத்தே கவிதைக்கும் மற்ற வடிவங்களுக்கும் இடையே காணப்படும் முக்கியமான வேறுபாடாகும். இதனடிப்படையில் பல செய்திகளை இணைத்துக் காண்கிறார் கவிஞர் ரவி.

‘‘கவிதையின் நோக்கம் கணங்களை நிலைபெறச்செய்தல் என்ற தெளிவு கிடைத்துள்ளது. வெறும் காட்சிகளை மட்டும் நிலை பெறச் செய்யும் நுண்கலைகளிலிருந்து கவிதை இந்த விதத்தில் வேறுபடுகிறது. அது காட்சிகளை மட்டுமின்றி அக்காட்சிகள் புலனுகர்வு செய்யப்பட்ட கணங்களையும் நிலைபெறச் செய்கிறது. இதனால் அக்கணங்களில் பொதிந்து கிடக்கும் அனுபவச் சூழல்களையும் அது வெளிப்படுத்த முடிகிறது.’’ (ப. 60)

‘‘இசை, அக இயக்கங்களை அனுபவமாக்க முடியும். ஆனால் அவ்வியக்கங்களைக் காட்சிப் படுத்த முடியாது, ஓவியம் புறக் காட்சிகளைப் புலப்படுத்தி ஓரளவு அகநெகிழ்ச்சியைத் தூண்ட முடியும். ஆனால் அக நெகிழ்ச்சிகளை நிகழ்ச்சிகள் போல் காட்சிப் படுத்தமுடியாது. கவிதை மட்டுமே அக நெகிழ்ச்சிகளை அனுபவமாக்கியும் காட்சிகளாக்கியும் சுவை தருகிறது. சுவை பகிர்வுக்கு உதவும் கலைகளில் கவிதை தனியிடம் பெற்றிருக்கக் காரணம் இதுதான் (ப. 72)

என்ற கருத்துகள் கவிதை என்ற வடிவத்தின் வலிமையும் மற்ற படைப்பு வடிவங்களில் இருந்து அது வேறுபடும் தன்மையையும் எடுத்துரைப்பனவாக விளங்குகின்றன.

கவிதைக்கு அனுபவமும் அவ்வனுபவம் வெளிப்படுத்தப்படும் சொற்களும் இன்றியமையாதன என்று கண்டுகொள்ளப்பெற்றது. இவைதவிர கவிதைக்குக் கற்பனை, சுவை ஆகியன இன்னும் பலம் சேர்க்கின்றன என்கிறார் கவிஞர் ரவி.

‘‘எந்தக் கற்பனை ஒரு புறம் காட்சியாகவும், இன்னொருபுறம் உள்ளொளி மாட்சியாகவும் வளர்நிலை (பரிணாமம்) பெறுகிறதோ அந்தக் கற்பனையே காலம் வென்று நிற்கும் கற்பனையாகின்றது. (ப.2) என்ற கருத்து காலம் வென்று நிற்கும் கற்பனையைக் காட்டி அக்கற்பனை கவிதைக்கு வளம் சேர்க்கிறது என்கிறார் கவிஞர் ரவி.

‘‘ஐந்து புலன்களாலும் உணரப்படும் சுவையனைத்தையும் அப்புலன்களைக் கடந்து அக இயக்கங்களாகவும் நெகிழ்ச்சிகளாகவும் தோன்றும் சுவையனைத்தையும் தான் உணர்ந்தவாறே மற்றவர் உணர வெளிப்படுத்துவதும் அப்படிப்பட்ட வெளிப்பாட்டில் காட்சி முதலான புலப்பாடுகள் மட்டுமின்றி அவை ஏற்பட்ட சூழலையும் அவற்றைக் கவிஞன் அனுபவித்த விதத்தையும் இணைத்து வெளிப்படுத்தும் கவிதையால் மட்டுமே இயன்றதாகிறது. சுவைபகிர்வுச் சாதனங்களில் கவிதை முதன்பெறுகிறது என்ற சுவையியற் கூறு இதனால் விளக்கம் பெறுகிறது. (ப. 74) என்ற கருத்து கவிதைக்குச் சுவை என்பது பலமாக அமைவதைத் தெரிவிக்கும் கருத்தாகும்.

எனவே கவிதை என்பது ஒளி, ஒலி, அனுபவம், கற்பனை, சுவை ஆகியன சரியான அளவில் கலந்து செய்யப்பெற்ற படைப்பு என்பது கவிஞர் ரவியின் கவிதைக்கொள்கையாகின்றது.

மரபுக்கவிதையும் புதுக்கவிதையும்:
கவிஞர் ரவி கவிதைகளின் இரு பிரிவுகளான மரபுக் கவிதை, புதுக்கவிதை ஆகியவற்றின் தன்மைகளையும் ஆராய்கிறார்.

‘‘மரபின் உள்ளடக்கம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கலாம். அதன் உள்ளடக்கத்தின் சிறு சிறு பகுதிகள் மாறும்போது மாற்றம் வெளிப்படையாகப் பெரிதும் உணரப்படுவதில்லை. அதன் உள்ளடக்கத்தின் பெரிய பகுதியே பெயர்த்தெடுக்கப்படும்போது, அந்த மாற்றம் ஒரு புரட்சியாகத் தென்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு புரட்சி இப்பொழுது நிகழ்ந்துவிட்ட்தாக அல்லது நிகழ்ந்து கொண்டிருப்பதாக புதுக்கவிதை இயக்கம் பற்றிச் சொல்லப்படுகிறது. (ப. 83) என்று மரபுக்கவிதையில் இருந்து புதுக்கவிதை புறப்பட்ட தோற்றத்தைக் கணிக்கிறார் கவிஞர் ரவி.

இருந்தாலும் புதுக்கவிதைக்குள் அதன் சொற்களுக்குள் காணப்படும் இசை, ஓசை ஒழுங்கு அதனை மரபுக்கவிதையின் வடிவமாகவே கவிஞர் ரவியால் கொள்ளவைக்கின்றது. ஓசை வடிவும், உள்ளொளி வடிவும் கொண்டது கவிதை என்று முடிவு கட்டிவிட்டால் ஒவ்வொரு கவிதைக்கும் ஒசை வடிவமும், உள்ளொளி வடிவமும் சிறந்திருக்க வேண்டும். ஓசை வடிவமும், உள்ளொளி வடிவமும் சிறந்திருக்கும் நிலையில் அது புதுக்கவிதையாக இருந்தால் என்ன? மரபுக்கவிதையாக இருந்தால் என்ன – அது கவிதை என்பதே சரி என்பது கவிஞர் ரவியின் வாதமாகிறது.

“புதுக்கவிதை தோன்ற இன்னொரு காரணமாகச் சொல்லப்படுவது யாப்பு முதலிய புறக்கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறியும் வேட்கை. இதில் ஓரளவு உண்மை தென்படுகிறது. தன் அனுபவத்தை வெளியிட விழையும் ஒருவனிடம் நால்வகைப் பாக்களுள் ஒரு வடிவிலோ, வஞ்சி,தாழிசை, விருத்தம் போன்ற ஒரு நடையிலோதான் அதை அவன் வெளியிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை யாருமே அவன் மீது என்றுமே திணித்ததில்லை. அவனாக உட்கார்ந்து சீரு் முதலிய இலக்கணம் பயின்று அதற்கேற்பச் சீர் எண்ணித் தளை பார்த்து அடியளவு நோக்கிச் செய்யுள் செதுக்கினால் அதில் அவன் அனுபவம் செத்துப் பிறந்தால் அதற்கு யார் பொறுப்பாளி. அவனே அதற்குப் பொறுப்பு

ஒரு நிமிடம் அவனே அதற்குப் பொறுப்பு என்ற சொற்பெருக்கு ஒரு வெண்பாவின் ஈற்றடி போல் இல்லை. ஆம் அது அப்படி அமைய வேண்டும் என்று முன் முடிவோடு எழுதப்படவில்லையே. வெளிப்பட்டபின் ஒரு வெளிப்பாட்டை ஆராய்ந்து அதன் உறுப்புகளையும் அணி எழில்களையும் பகுத்துச் சொல்வதால் அந்தப் பாகுபாடுகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்பவே அந்த வெளிப்பாட்டை அதன் ஆசிரியன் உருவாக்கினான் என முடிவு செய்ய முடியாது. இலக்கணத்தைக் கருத்தில் இருந்தியபடியே இலக்கியம் படைக்க முடியாது. இலக்கியங்களைப் படித்து ஆய்ந்து, பகுத்துத் தொகுப்பதே இலக்கணம். (ப. 87) என்று மனதில் இருந்து வெளிப்படும் உள்ளொளி ஏதேனும் ஒரு ஒலி வாய்க்காலைத் தேடுகின்றது. அவ்வொலி வாய்க்கால் வெண்பா, ஆசிரியப்பா என்ற வாகனமாக இருக்கலாம். அல்லது வெட்டி ஒட்டப்பெற்ற ஓசை ஒடிக்கப்பெற்ற புதுக்கவிதை வடிவமாக இருக்கலாம்.

கவிதை கவிதையாக இருக்கவேண்டும் என்பதே கவிஞர் ரவியின் கவலையாகின்றது.

புதுக்கவிதையின் இயல்புகளை அதன் வன்மை மென்மைகளைப் பின்வருமாறு ஆராய்கிறார் கவிஞர் ரவி.
1.‘‘இலக்கியத்திற்குப் பின்னால் கைகட்டிக் கொண்டு வரவேண்டிய இலக்கணம், முன்னால் நின்று கொண்டு இலக்கியத்தையே மிரட்டத் தொடங்கிய முறைமீறலுக்கு புதுக்கவிதை ஓர் எதிர்ப்பியக்கமாகப் பிறந்து வளர்ந்தது.
2. எதிர்க்கும் உணர்வு மிகுதியால் இலக்கண எதிர்ப்பிலேயே அதிக கவனம் செலுத்தி ஆக்கநிலை உள்ளீட்டைக் கோட்டை விட்டுவிட்டு எதிர்மறை யுக்திகளாலேயே புதுக்கவிதைகள் பெரிதும் எழுதப்பெற்று வருகின்றன.
3. அனுபவக் கணங்களை நிலைபெறச் செய்யும் நோக்கத்திற்கு எளிய சாதனமாகப் புதுக்கவிதை சில நேரம் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இப்படிப்பட்ட கவிதைகள் மிகக்குறைவே. இவற்றின் எண்ணிக்கை வளரக் கூடும். அப்பொழுது இவ்றின் உள்ளீடுகளும் வெளிப்பாட்டு வடிவங்களும் மேலும் ஆராயப்பட்டுப் புதுமரபு தோன்ற வழி பிறக்கலாம். (ப. 92)

இக்கருத்துகள் புதுக்கவிதையின் உரத்தையும், அதன் வெற்றி பெறாத் திறத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. புதுக்கவிதைகள் வெறும் கோரிக்கைகள் என்ற நிலையில், கம்யுனிச சார்புடைய கவிஞர்களால் எழுதப்பெற்றதால் அவை தீர்வுகளை நோக்கி நகரவில்லை என்ற குற்றச்சாட்டை கவிஞர் ரவி வைக்கிறார்.

‘புதுக்கவிதை இயக்கத்தின் சமுதாய உணர்வுக் கவிதைகள் உயர்ந்த கோரிக்கைகளானாலும் அவை கோரிக்கை என்ற அளவிலேயே நின்றுவிடுகின்றன. தக்க உணர்ச்சிகளைத் தூண்டிச் செயலூக்கம் தரும் மூலிகைகள் அவற்றுள் இல்லை.’’ (ப.91) என்ற கருத்து புதுக்கவிதைகள் தீர்வுகளை நோக்கி நகரவேண்டும் என்ற வழிகாட்டுதலைக் காட்டுகின்றது.

மகாகவி:
கவிதை சிறந்தால் மகாகவியாகின்றது. அதனை எழுதியவன் மகாகவிஞன் ஆகின்றான். கவிஞனுக்கும் மகாகவிஞனுக்கும் வேறுபாடுகள் என்ன என்று கேட்டால் அதற்கும் பதில் தருகிறார் கவிஞர் ரவி.

’’புறக்காட்சியில் தோற்றம் கொள்ளும் சிறு பொறி ஓர் ஒளித்துகள் ஒரு கவிஞனுடைய உள்ளொளிச் சுடரைத் தாக்கித் தூங்கும் சுடரைத் தூண்டி எழுப்பும் தருணம் அவன் மஹாகவி ஆகின்றான் (ப.1)

‘‘புறத்து புலன்களைத் தாக்கும் அதிர்வுகளை மட்டும் மொழியாக்கம் செய்பவன் கவிஞனாக இருக்கலாம். அந்த அதிர்வுகளைத் தன் உள்ளொளியின் அதி்ர்வுகளோடு இழைத்து, ஸ்ருதி எனப்படும் பண்நிலை சேர்த்து வெளிப்படுத்துபவனே மஹாகவிஞன். ’’ (ப. 2)

‘‘அலட்சியப்படுத்தவோ, அப்புறப்படுத்தவோ முடியாத சொற்களைப் பயன்படுத்தும் கவிஞன் தானே மஹாகவி ’’(ப. 20)

‘‘ஒரு மஹாகவி மகான் இல்லை. அவனது உள்ளொளி பரவ மொழித் துணைத் தேவைப்படுகிறது. மொழியின் குறைபாடுகளால் அவனின் உள்ளொளி முழுமையாகப் பரவமுடியாத ஆற்றாமை அவன் கவிதைகளி்ல் ஆங்காங்கே புலனாகின்றது (ப. 4)

என்பன கவிஞனுக்கும் மகாகவிஞனுக்கும் உள்ள வேற்றுமைகளாகும். கவிதைக்கும் மகாகவிதைக்கும் உள்ள வேற்றுமைகளாகும்.

மனிதன் கவிஞனாகவேண்டும். அவன் மகாகவிஞனாகவேண்டும். அவன் கவிதைகள் சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வு காணவேண்டும். வானவெளியில் கவிதை ஏறவேண்டும். எனவே தமிழில் மகாகவிகள் தோன்றும் முயற்சிக்கு வழிகோலுகின்றார் கவிஞர் ரவி.

முடிவுகள்:
மேற்கண்ட கட்டுரையின் வாயிலாக கவிஞர் ரவியின் கவிதைக்கோட்பாடுகளாகப் பின்வருவனவற்றை வகுத்துக்கொள்ளமுடிகின்றது.

அனுபவ விளைவே கவிதை. அதன் வளம் என்பது அக்கவிதைக்குள்காணப்படும். ஒளி, ஒலி, கற்பனை, சுவை ஆகியவற்றைச் சார்ந்தது.

அனுபவம், சொல், உள்ளுணர்வு ஆகியவற்றை ஒன்றுக்குள் ஒன்று இரண்டறக் கலந்து, கவிஞன் வேறாகவும் கவிதை வேறாகவும் ஆகாத உன்னத ஒன்றிணைப்பு நிலையே வெற்றி மிக்க கவிதை நிலையாகும்.

மரபுக்கவிதை, புதுக்கவிதை இவை கால வெள்ளத்தில் எழுந்த பிரிவுகள் என்றாலும், புதுக்கவிதை வெறும் கோரிக்கைகளாகவே அமைந்திருப்பது அதன் தோல்விக்குக் காரணமாகின்றது.

மகாகவி என்பவன் உள்ளொளி பெருகிப் புறத்தில் தன் நிலைத்த அனுபத்தை நீங்காமல் விளைவிக்கும் வல்லமை பெற்றவன் ஆவான்.

பின்குறிப்பு:
நமக்குத் தொழில் கவிதை என்ற ஒரு நூலை மட்டும் எடுத்துக்கொண்டு கவிஞர் ரவியின் கவிதைக்கொள்கை என்ற இந்தக்கட்டுரை எழுதப்பெற்றுள்ளது. கவிஞர் ரவி பல மேற்கோள் கவிதைகளை இந்நூலில் எடுத்தாண்டிருந்தாலும் அவற்றின் வழியாக அவர் பெறும் முடிவுகள் மட்டுமே இங்குக் கொள்கைகளாக வகுத்துக் காட்டப்பெற்றுள்ளன. இந்நூலில் பல கவிதைகளைக் கையாண்டுள்ளார் கவிஞர் ரவி. அத்தனை கவிதைகளும் ரசமானவை என்றாலும் அவற்றை மீளவும் பிரதி செய்ய விரும்பாமல் அவரின் கவிதை பற்றிய புரிதல்களை அவரின் கொள்கைகளாக வகுத்துக் காட்டுகிறது இக்கட்டுரை.

____________________________________________________________________
முனைவர் மு.பழனியப்பன்
இணைப்போராசிரியர்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருவாடானை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *