தேடல்
-பத்மநாபபுரம் அரவிந்தன்
சில ஆண்டுகளுக்கு முன்பு
தொலைந்துபோன தன்
மூக்குத்தியை
இன்றைக்கும்
தேடுகிறாள் பாட்டி…
தினப்படிச் செயலென்று
தேடுவதைத் தொடர்கின்றாள்…
‘வேலயத்தக் கிழவியென்று’
அனைவரும் சொல்லும்போதும்
பாட்டிக்குக் கவலை இல்லை!
புதியதொரு மூக்குத்தி
வாங்கிவந்த பெரியம்மா
‘இது நீ போட்டுக்கோ… இனிமேலும்
தேடாதே’ என்று சொன்னபோது…
பாட்டி கேட்டாள் ஒரு கேள்வி
‘உன்னப்பன் செத்துப்போய்
பல வருஷம் ஆயாச்சு
அவரைத் தேடுறப்போ
வாங்கித்தந்த மூக்குத்திய
தேடாம விடுவேனா?
சீவம் போற மட்டும்
தேடிப் பாத்திருவேன்…
மூக்குத்தியையும் உன் அப்பனையும்
தொலைச்சவ நான்தானே…எனக்குத்
தண்டனையா இருக்கட்டும்
தேடுறது நடக்கட்டும்…
அன்றுதான் புரிந்தது
பாட்டி தேடியதும், தேடுவதும்
மூக்குத்தி வடிவில் தாத்தாவின்
காதலையென்று!