திருக்குறளுக்குப் புது விளக்கம் – 7
– புலவர் இரா. இராமமூர்த்தி.
திருக்குறளின் கருத்துக்கள் அது தோன்றிய காலத்தில் இருந்த முடியாட்சித் தத்துவத்தை அடியொற்றியே விளங்கின! அக்காலத்தின் கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்துவதாக இருப்பதில்லை; ஆனால் திருக்குறட் கருத்துக்கள் அது தோன்றிய காலத்தைக் கடந்து இக்காலத்துக்கும், இனி வருங்காலத்துக்கும் பொருந்தித் திகழ்வதே அதன் பெருமைக்குச் சான்றாகும்.
நூல்களை மேனாட்டறிஞர்கள் மூவகைப் படுத்துவர். அவை BOOK FOR THE HOUR , BOOK FOR EVER , BOOK FOR NEVER எனப்படும். அவ்வப்போது நிகழும் அன்றாடச்சிறு நிகழ்ச்சிகளின் விளக்கமாக அமைந்து, அடுத்த நாளுக்கும், மாதத்துக்கும், ஆண்டுக்கும் பொருந்தி வராத நூல்கள் BOOK FOR THE HOUR என்ற வகையைச் சேர்ந்தவை. கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கில் வெளிவந்த சுவையற்ற, கவைக்குதவாத சிறுகதைகள், சிறு கவிதைகள், இவ்வகையில் அடங்கும்!
சில நூல்கள் காலம் கடந்து எக்காலத்துக்கும் இசைந்த, சொல், பொருள், நயமும் மிக்க வாழ்வியல் கருத்துக்களை உடைய பேரிலக்கியங்களாக விளங்கும்; அவை, எக்காலத்துக்கும் உரிய BOOK FOR EVER வகையைச் சேர்ந்தவை. அந்தச் சிறப்பைப் பெற்ற நூல்கள் திருக்குறள் போன்ற நூல்களாகும்! சற்றும் தகுதியற்ற , கற்போர்க்கு அருவெறுப்பை உருவாக்கும் ஆபாசமும், தீய கருத்துக்களும் கொண்ட நூல்கள் எக்காலத்துக்கும் பொருந்தாத BOOK FOR NEVER வகையைச் சேர்ந்தவை. இவ்வகை நூல்கள் ஆபாசஎண்ணங்களைப் பரப்பும் மஞ்சள் பத்திரிகைகளாகும்.
முடியாட்சிக் காலம் மறைந்து குடியாட்சிகள் பெருகி வரும் காலம், இக்காலம்; இந்த குடியாட்சிக் காலத்திலும், முடியாட்சிக் காலக் கருத்துக்களைப் பொருத்தமுறக் கூறியவர் திருவள்ளுவராவார். திருக்குறளின் பொருட்பால் கருத்தக்கள் பெரும்பாலும் சமுதாய வாழ்க்கையின் சிறப்புக்களைப் படம்பிடித்துக் காட்டும். இந்த நூலில் கூறப்பெற்ற முடியாட்சி அரசுகளைப் பற்றிய விளக்கங்கள் இக்காலக் குடியாட்சி அமைப்பிற்கும் பொருந்தி வரும்.
அரசாங்கம் என்று இக்காலத்தில் நாம் கூறும் அரசின் அங்கங்கள் முடியாட்சி முறையில், திருவள்ளுவர் கூறிய அங்கவியல் என்ற இயலில் கூறப் பெற்றவையே என்பது உண்மையாகும்.
அரசின் அங்கங்களாகிய …
(1) அமைச்சு அதாவது நிருவாகம்;
(2) நாடு அதாவது குடிமக்கள்;
(3) கூழ் அதாவது பொருளாதாரம்;
(4) அரண் அதாவது எல்லைகள்;
(5) படை அதாவது உள்நாட்டுப் பகையினை எதிர்த்தழிக்கும் காவல், மற்றும் வெளிநாட்டுப் பகையினை எதிர்த்தழிக்கும் ராணுவம்;
(6) நட்பு அதாவது அயல்நாட்டு உறவு
ஆகிய அறுவகை அங்கங்களையும் அதாவது துறைகளையும் வரிசையாகத் திருவள்ளுவர் வகுத்துள்ளார்!
இந்த வரிசைப்படியே அரசின் அங்கங்கள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன! இவற்றின் முறைவைப்பினைப் பரிமேலழகர் மிகவும் சரியாக விளக்கி உரை வகுத்துள்ளார்!
பாயிரம் நான்கதிகாரங்கள்;
அறத்துப்பால் முப்பத்து நான்கதிகாரங்கள்;
பொருட்பால் எழுபது அதிகாரங்கள்;
காமத்துப்பால் இருபத்தைந்து அதிகாரங்கள்
ஆக நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள். இவை அனைத்தின் கூட்டுத் தொகையும் ஏழு! அனைத்து அதிகாரங்களின் எண்ணிக்கைக் கூட்டுத்தொகையும் ஏழே! ஒரு திருக்குறளின் சீர்கள் ஏழு! இந்த அமைப்பினை உடைய திருக்குறள், படிப்பதற்கும், மனனம் செய்வதற்கும் ஏற்றதாய் அமைந்துள்ளதைப் பரிமேலழகர் உரை நிறுவுகின்றது! இவ்வாறே திருவள்ளுவர் ஏழு என்ற எண்ணைத் திருக்குறளில் பயன் படுத்தியுள்ள அழகையும், பொருட்சிறப்பையும் நுட்பமாக ப் படித்தறிந்து கொண்டு பயன் பெற வேண்டுகிறேன்!
பொருட்பாலின் முதற்குறள் காட்டும் சுவை மிக்க, புதிய பொருட்சிறப்பை இங்கே விளக்கி எழுத விரும்புகிறேன்; ஒருமுறை திருக்குறள் அறநூலா? இலக்கியமா? என்ற தலைப்பில் ஒரு பட்டிமண்டபம் நடை பெற்றது. அந்தப் பட்டிமண்டபத்தில் மிகவும் கார சாரமான விவாதம் நடை பெற்றது! அதில் அறநூலே என்ற அணியின் தலைவர் திருக்குறளில் நான் ஒரேஒரு குரலை எடுத்துக் காட்டிகிறேன் அது அறநூல் என்பதற்கு அந்தத் திருக்குறளே மிகச் சரியான எடுத்துக்காட்டாகும் ; என்று கூறிப்
”படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள்; ஏறு ! ”
என்ற திருக்குறளை இரண்டுமுறை பிரித்துக் கூறி, ”இதில் வெறும் பட்டியல்தானே இருக்கிறது? இதில் இலக்கிய நயம் எங்கே இருக்கிறது? இந்தத் திருக்குறளில் உள்ள இலக்கிய நயத்தை எதிர்க்கட்சியினர் விளக்கி விட்டால் , நானும் அதனை ஏற்றுக் கொண்டு இனிமேல் பட்டிமண்டபத்திற்கு வந்து வாதாடுவதை நிறுத்திக் கொள்கிறேன்! ” என்று சவாலும் விட்டார்! அவர் ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக் கூடாது! எதிர்க்கட்சித் தலைவரோ, மேலே நான் எழுதியதைப்போல் திருக்குறளை எண்ணிஎண்ணிப் படித்தவர் ! அவர் நிதானமாக எழுந்து, ”இந்தத் திருக்குறள் ஒரு வெறும் பட்டியல்தான் ” என்று கூறி என் சிந்தனையைத் தூண்டி விட்ட பேராசிரியருக்கு என் நன்றி!” என்று தொடங்கினார்!
”திருவள்ளுவர் அறநூலாகத் தம் நூலை எழுதினாலும், அதனைப் படிப்போர், சுவைபடப் பயின்று உணரும் வகையில் இலக்கியச் சுவை மிக்க நூலாகவும் படைப்பார்! அந்தத் திறமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் கூறிய திருக்குறளே தகுந்த எடுத்துக் காட்டாகும்! இந்தத் திருக்குறளில் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற அரசின் ஆறு வகை அங்கங்களையும் பட்டியலாக வரிசைப் படுத்தி யுள்ளார் இதனை மேம்போக்காகப் படித்தால் எந்த இலக்கிய நயமும் இல்லாதது போலவே தோன்றும்! ஆனால் திருக்குறளை முழுமையாகப் பயின்றவர்க்கே இதில் அமைந்த இலக்கிய நயம் புலப்படும்! ஆம்! இந்தத் திருக்குறள் வெறும் பட்டியல் அன்று; இலக்கிய நயம் மிக்கதாகும்!” என்று உரத்த குரலில் கூறிக் கேட்போரை நிமிர்ந்து அமர வைத்தார்!
அடுத்து அவர் கூறிய திரிகடுகப் பாடல் அரசனுக்கு உரிய அங்கங்களின் சிறப்பை எடுத்துக் காட்டியது! அந்தப் பாடல் …
“பத்திமை சான்ற படையும், பலர் தொகினும்
எத் திசையும் அஞ்சா எயில் அரணும், வைத்து அமைந்த
எண்ணின் உலவா இரு நிதியும், – இம் மூன்றும்
மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு.”
என்பதாகும்! இப்பாடல், ராஜவிசுவாசம் மிக்க படையும், பலரும் இணைந்து கூடி எதிர்த்து வந்தாலும் உடையாமல் நாட்டைக் காக்கும் அரணும், இவற்றின் இடையில் என்றுமே குறையாத எல்லாவகைச் செல்வங்களும் ஆகிய மூன்றும் மண்ணாலும் அரசனுக்கு உரிய சிறந்த அங்கங்களாகும்! என்ற பொருள் அமைந்துள்ளது! இந்ததிரிகடுகப் பாடலின் வழியில் ”படை, குடி” எனத் தொடங்கும் திருக்குறலின் பொருளை நுட்பமாகத் தெரிந்து கொண்டால் இதன் இலக்கியச் சிறப்புப் புலப்படும்!
திருக்குறளின் பொருட்பாலில், இறைமாட்சிக்கு அடுத்த அங்கவியலில், அரசனின் அங்கங்களை வள்ளுவர் வரிசைப்படுத்துகின்றார்! அதன் படி முதலில், அமைச்சு, அடுத்து இரண்டாவதாக நாடு; இதில் குடிமக்களும், மூன்றாவதாகப் பொருளாதாரமாகிய கூழும் அடங்கும்; அடுத்து நான்காவதாக அரணும்,ஐந்தாவதாகப் படையும், ஆறாவதாக நட்பும் அமைந்துள்ளன! இந்த வரிசைப்படித்தான் அரசின் அங்கங்களைத் திருவள்ளுவர் அடுக்குகிறார்! ஆனால் இந்தத் திருக்குறளில் படை முதலிலும் குடி, கூழ், அமைச்சு, நட்பு ஆகிய நான்கையும் இடையிலும் இறுதியில் எல்லையாகிய அரணையும் வரிசை மாற்றி அமைத்தமைக்குக் காரணம் என்ன தெரியுமா?” என்று கேட்டு அவையினரின் சிந்தனையைத் தூண்டுகிறார்!
கூர்ந்து கவனியுங்கள் வள்ளுவரே தாம் பாடிய அங்கவியலில் கூறிய வரிசையை மாற்றியமைத்து இந்தக் குறட்பாவை இயற்றியுள்ளார்! அதற்குக் காரணத்தை நான் முன்னர்க் கூறிய திரிகடுகப் பாடலின் மூலம், தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்! திரிகடுகத்தில் முதலில் படையும் நடுவில் மற்றவையும் இறுதியில் அரணும் அமைந்து இலக்கியச் சுவையுடன் பாடியுள்ளார். திருவள்ளுவர் அமைத்த புதிய வரிசையில் ஓர் இலக்கிய நயம் இருப்பதை உணர்ந்தே திரிகடுகத்தில் இப்பாடல் அமைந்துள்ளது. ஆம்! மற்றைய நான்கு அங்கங்களையும் முன்னும் பின்னும் இருந்து காப்பாற்றுவன, படையும் அரணுமே ஆதலால் அவற்றை வரிசை மாற்றித் திருவள்ளுவர் பாடி ஆறு அங்கங்களின் இலக்கியச் சிறப்பை இந்த ஏழுசீர்களுக்குள்ளே அமைத்துத் தந்து விட்டார் ” என்று அவர் நிறுத்திய போது அவையினரின் மகிழ்ச்சி ஆரவாரம் மேலோங்கியது!
அங்கங்களின் சிறப்பால் உயர்ந்த சிங்கம் இந்த அரசன் என்பதைக் குறிப்பதற்காகவே அரசருள் ஏறு என்று திருவள்ளுவர் சிறப்பித்தார் ஆகவே படை குடி எனத்தொடங்கும் திருக்குறள் புதிய பொருள் பெற்று விளங்குகிறது!