குறளின் கதிர்களாய்…(82)
-செண்பக ஜெகதீசன்
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல். (திருக்குறள்-840: பேதைமை)
புதுக் கவிதையில்…
அறிஞர்கள் நிறைந்த சபையில்
அறிவற்ற மூடன் நுழைந்தால்,
அது
அழுக்கு நிறைந்த கால்களைக்
கழுவாமல்
படுக்கையில் வைத்தல் போலாகும்!
குறும்பாவில்…
சான்றோர் சபையில் பேதை வரவும்,
அழுக்கைக் கழுவாமல்
படுக்கையில் கால்வைப்பதும் ஒன்றே!
மரபுக் கவிதையில்…
அழுக்கில் எங்கோ மிதித்திட்டே
அதனைக் கூடக் கழுவாமல்,
முழுக்க மாசுடைக் கால்களுடன்
மிதித்தால் படுக்கை பாழாகும்,
ஒழுக்க நெறிகள் ஏதுமின்றி
ஒன்றும் தெரியாப் பேதையவன்
பழுத்த அறிஞர் சபைதனிலே
புகுதல் இதனை ஒப்பதாமே!
லிமரைக்கூ…
படுக்கையில் மிதித்திடாதே காலிலிருந்தால் அழுக்கு,
படித்தறிந்தோர் சபையில் படிப்பறியா
பேதையொருவன் நுழைந்தால் வருமிதுபோல் இழுக்கு!
கிராமிய பாணியில்…
போவாத போவாத
படுக்கபக்கம் போவாத,
அழுக்குக்காலக் கழுவாம
அதமிதிச்சா அழுக்காவும்…
இதுதாங்கத இங்கேயும்,
படிச்சவங்க சபயிலத்தான்
படிக்காமூடன் போய்ப்புகுந்தா
படுக்ககத ஆயிடுமே…
போவாத போவாத
படுக்கபக்கம் போவாத,
அழுக்குக்காலக் கழுவாம
அதமிதிச்சா அழுக்காவும்!