Month: May 2016

  • ’’கண்ணா கனியவை நாற்பது’’…. (4)

    கிரேசி மோகன்
    ——————————————————————–

    ’’கூறிடும் கீதை குரான்பைபிள் எல்லாமே
    போரிட ஐம்புலன் போகுமென்று -சாறான்மா
    விட்டிந்த சக்கையாம் கட்டையைப் பேணுகிற
    மட்டிங்கு ஜீவனுக்கு மண்’’….(25)

    ’’மண்ணோடு மண்ணாகும் மேனியை மெய்யென்று
    உன்னோடு சேர்த்து உழலாதே -பெண்ணோடு
    ஆணாகும் பேரின்ப ஆன்மா அசலாம்
    நானாகும் தோற்றம் நகல்’’….(26)

    ’’நகிலைப் புகழ்ந்து முகில்குழலைப் பாடி
    துகிலணி மாதர் துணையே -புகலென்று
    வீழ்ந்து வணங்காதே தாழ்ந்து துதிக்காதே
    ஆழ்ந்திரு ஆன்மாவில் வாழ்ந்து’’….(27)

    ’’வாழ்க்கையில் வென்றென்ன வாரிக் குவித்தென்ன
    சீழ்க்கை அடித்து சிலிர்த்தென்ன -ஊழ்பையன்
    எள்ளி நகையாடி ஏய்ப்பது கேட்கிலையோ
    பள்ளி எழுந்திருப் பாய்’’….(28)

    ’’பாயில் படுத்து பணியாய் புணர்ந்திட
    நோயாய் வயோதிகம் நேர்ந்ததே -காயை
    தனியாய்த் தவத்தில் பிணிமூப்(பு) இராது
    கனியாக்கும் வித்தையைக் கல்….(29)

    ’’கல்வியா செல்வமா கேட்போர்க்கு வீரமாய்
    சொல்லுவாய் ஆன்ம சுதந்திரத்தை -அல்லலாய்
    பாரமாகி மூப்பில் பிணியுற்ற வேளையில்
    வீரமா கோழைக்கு வாய்ப்பு’’!….(30)….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    1d788111-9edf-45e2-9d73-7f3960c5c438

    “கோ(பசு)வர்த் தமானமே கொள்கையாய்க் கொண்டுதனி
    ஆவர்த் தனமாய், அவைகாக்க -ஸ்ரீவத்ஸன்,
    கோவர்த் தனமேந்தல் ,காட்டுகின்ற கேசவ்வின்
    ஓவியார்த்தம் க்ருஷ்ண உணர்வு”(Krishna Consciousness)….கிரேசி மோகன்….

    Share
  • கற்றல்  ஒரு  ஆற்றல் -30

    க. பாலசுப்பிரமணியன்

    மூளையும் கற்றலும்

    education-

    ஒலி ஒளி வடிவங்களை வெளி உலகிலிருந்து பெரும் மூளை இவ்வளவு புத்திசாலித்தனமாக வேலை பார்ப்பதற்கு அதனுள் என்னதான் இருக்கிறது என்ற கேள்வி எழுகின்றது. மூளை அறிவியல் நிபுணர்களின் கணக்குப் படி மூளைக்குள் கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் ( Trillion) ( சுமார் நூறு பில்லியன்) நியூரான்கள் இருக்கின்றன. புரியும் படி சொல்லப்போனால் இந்த பூமியிலே இருக்கின்ற மனிதர்களின் எண்ணிக்கையைப் போல் கிட்டத்தட்ட 166 மடங்கு எண்ணிக்கையில் அவைகள் உள்ளன. ஒரு நொடிக்கு ஒரு நியூரான் என்று எண்ணத் தொடங்கினோமானால், எண்ணிமுடிக்க 3171 ஆண்டுகள் ஆகும் என்று கணக்கிட்டிருக்கின்றனர்.  என்னே இந்த மூளையின் சக்தி !

    ஒரு நாளைக்கு சுமார் ஐந்து  லட்சம் நியூரான்கள் அழிந்து கொண்டிருக்கையில் அதே அளவுக்கான நியூரான்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த நியூரான்கள் ஒன்றோடு ஒன்று இணைத்து ஒரு வலைத்தளத்தையே மூளைக்குள் உருவாக்குகின்றன. இந்த இணைப்புக்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டும், விலகிக்கொண்டும், மாறிக்கொண்டும் இருக்கின்றன. எரிக் காண்டல் என்ற ஒரு மூளை நரம்பியல்  நிபுணர் இதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி கற்றலுக்கும் இந்த வலைத்தள இணைப்புகளுக்கும் இருக்கின்ற தொடர்பைப் பற்றி செய்த ஆராய்ச்சிக்கு  அவருக்கு 2000-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    அவர் தன் ஆராய்ச்சியின் மூலமாக எவ்வாறு மூலையிலுள்ள வலைத்தளங்கள் சிறிய செயல்களின் போதும் கற்றலின் போதும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை விளக்கினார். இந்த ஆராய்ச்சி கற்றலைப் பற்றிய பல  பரிமாணங்களை விளக்கவும் மாற்றி அமைக்கவும் உதவியது.

    இந்த நியூரான்களில் ஊக்குவிக்கும் நியூரான்கள் (Excitory neurons ) என்றும் நிறுத்துகின்ற (சமநிலைப்படுத்தும்) நியூரான்கள் (Inhibitory neurons) என்றும் இரண்டு வகை உண்டு. முதல் வகை சிந்தனைகளை ஊக்கிவிக்கவும், கற்றலை  மேம்படுத்தவும், கற்றலை உணர்வுகளுடன் ஒன்றுபடுத்தவும் செயல்படுகின்றன. இரண்டாவது வகை உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் அமைதியை காக்கவும் நிலைப்படுத்தவும் உதவுகின்றன. ஒரு  மனிதனின் மூளையில் இப்படிப்பட்ட நியூரான்கள் வளம், செயல்பாடுகள், வேகம் போன்ற பல நிகழ்வுகளால் கற்றல் என்ற செயல் பாதிக்கப்படுகின்றது. ஆகவே கற்றலைப் பொருத்தவரை எந்த இரண்டு மனிதர்களின் நிலையையோ அல்லது முறைகளையோ, கற்றலின் வழிகளையோ அல்லது கற்றல் வளத்தையோ ஒப்பிடுதல் அறிவுபூர்வமான செயல் அல்ல.

    கற்றலின் முறைகளிலும் வெளிப்பாடுகளிலும் தாக்கம் ஏற்படுத்தும் முக்கிய இரண்டு உள்ளீடுகளாக மரபணுக்களையும் (genes) மற்றும் சூழ்நிலைகளையும்(Environment) முன்னிலை வைக்கின்றனர். ஆனால் சூழ்நிலைகளால் மரபணுக்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை பெரிதளவும் மாற்றி அமைக்க முடியும் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆகவே கற்றல் சிறப்பாக நடக்க நல்ல சூழ்நிலைகள் மிகவும் அவசியமானவை. அப்பொழுதான் மூளையில் கற்றலின் காரணமாக ஏற்படும் நியூட்ரான் வலைத்தளங்கள் மேன்மையாகவும் உறுதியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

    பல்லாண்டுகளுக்கு முன்னாள் “இளமையில் கல்” என்ற முதுமொழிக்கேற்ப கற்றலின் திறன் வயதுடன் குறைகின்ற வாய்ப்பினை விளக்கியிருந்தனர்.

    தற்போதைய ஆராய்ச்சியில் மூளையின் தொடர் உருமாற்றங்கள் (Neural Plasticity) காரணமாக “வாழ்க்கை முழுதும் கற்றல்” (Life Long Learning) என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

    எவ்வளவுக்கெவ்வளவு மூளைக்கு நாம் வேலைகொடுக்கிறோமோ அந்த அளவுக்கு அதன் ஆற்றல் தொடர்ந்து இருப்பது மட்டுமின்றி வளர்ந்தும் வருகிறது. அதனால் தான் கவிஞரின் பாட்டு “கத்தியைத் தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு” என்ற பாடலின் கருத்தின் சிறப்பு தெரிய வருகின்றது.

    மருத்துவ வல்லுனர்கள் முதுமை அடைந்தவர்களிடமும் மூளைக்கு ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். விளையாட்டாக ஒரு மனநல மருத்துவர் கூறுகின்றார் “உங்களுக்கு எழுபது வயதாகிவிட்டதா? உங்களிடம் அதிக நேரம் உள்ளதா? வேறு ஏதாவது மொழி கற்றுக்கொள்ளுங்களேன். உங்களுக்கு தொண்ணுறு வயதாகி விட்டதா? கைகால்களை நன்றாக அசைக்க முடிகின்றதா? கொஞ்சம் வயலின் கற்றுக்கொள்ளுங்களேன்”

    மூளையை தொடர்ந்து நாம் உபயோகித்து வந்தால் மூளையைச் சார்ந்த பல வியாதிகளிலிருந்து நாம் தப்ப முடியும் என்று அறிவுறுத்துகின்றனர்.

    கற்றல் – பிறக்கும் பொழுதிலிருந்து கடைசி மூச்சு உள்ளவரை நடக்கும் ஒரு ஆக்கபூர்வமான  செயல்!!

    (தொடரும்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    7b2627dc-7cfb-443b-9e6c-4aad2f453590

    அன்புள்ள கேசவ்,நேற்று நாடகத்திற்காக பங்களூர்
    சென்றதால் இன்று ‘’மாது ப்ளஸ் 2’’….

    cdc4ba6a-5aed-4804-9947-0e619639d053

    ”மடிப்பிச்சைக் காக மயங்குகிறான் மாது,
    அடிப்பிச்சை ஆவின் அடியில் , -இடுப்(பு)இச்சை
    யால்திரி பங்கியாய் யாதவன் போஸ்(POSE)நேற்று:
    வால்கரி ரங்கனின்று வாவ்(WOW)’’….கிரேசி மோகன்….

    Share
  • ‘இன்னம்பூரான் பக்கம்’.4.

    சமுதாயமும், நீயும், நானும், அவரும்.

    மண்ணின் மைந்தர்களா, இவர்கள்? 1

    இன்னம்பூரான்

    Word cloud concept illustration of diabetes condition
    Word cloud concept illustration of diabetes condition

    சில வருடங்களுக்கு முன் வல்லமையில் நீரிழிவு நோயை பற்றி எழுதியிருந்தேன். அதிகமான வாசகர்கள் என்றும் சொன்னார்கள். சென்னையின் ஒரு பிரபல டாக்டர் தன் ஆஸ்பத்திரியின் வரவேற்பு அறையில் லாமினேட் செய்து அதை வைத்ததாக கடிதம் எழுதினார். செல்வன் மாற்றுக்கருத்து கூறினார். அது டாக்டர்களை பற்றி. ஆனாலும், நம் மக்கள் நடந்து கொள்ளும் முறை அசட்டுத்தனமாக இருக்கிறது. நாட்தோறும், முறைகேடாகத் தான், அபாயமாகத்தான் எதிர்சாரியில்பயணம் செய்கிறார்கள். இது நிற்க.

    நான் எந்ததொரு வைத்திய முறைகளையும், மேனாட்டு வைத்தியம், ஆயுர்வேதம், சித்தம், இயற்கை, ஹோமியோபதி, அக்குபஞ்சர் வகையறா எதையும் சிபாரிசு செய்யவில்லை. எல்லா முறைகளையிலும் நிவாரணமும் பக்க விளைவுகளும் உண்டு. ஆனால், நிச்சியமாக கொலை செய்யக்க்கூடியவர்கள், போலி டாக்டர்கள், அரைகுறை வைத்தியர்கள், சுற்றி வளைத்து, பொய்யை மெய்யாக்கும் விளம்பரங்கள், இயலாததை செய்து காட்டுவதாக உத்தரவாதங்கள். நீங்கள் உலகமெங்கும் சென்று உண்மையை ஆராய்ச்சி செய்து பாருங்கள். நீரிழிவு தீராத வியாதி. உணவு கட்டுப்பாடு, தேக பயிற்சி உதவும், ஆரம்பகாலத்தில். பின்னர் மருந்து, மாத்திரை. சிலருக்கு இன்ஸுலின் போட்டுக்கொள்ள வேண்டி வரும். அது தாய்ப்பால் போல. நான் நாட்தோறும் நான்கு முறை இன்ஸுலீன் போட்டுக்கொள்கிறேன். அதை நிறுத்தி விட்டு, அத்தையும், இத்தையும், கையாலகாதத்தையும் செய்வேன் என்ற வீராப்பு மக்களை ஏமாற்றுவது, வஞ்சகம், கொலைக்கு அஞ்சாத நெஞ்சம்.

    இந்த கதையை கேளுங்கள்: உசாத்துணையும் கொடுத்து இருக்கிறேன்.

    “இன்சுலின் ஊசியை நிறுத்தி சொன்ன அக்குபஞ்சர் டாக்டர்…. திருப்பூர் மாணவன் பரிதாப பலி By: Mathi Published: Saturday, May 28, 2016, 15:31 [IST] திருப்பூர்: “

    “அக்குபஞ்சர் டாக்டர் ஆலோசனைப்படி இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தியதால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட திருப்பூர் மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த மெக்கானிக் ஜெகதீஷ் என்பவரது மகன் சுபாஷ். பிளஸ் 2 படித்து வந்த சுபாஷ் 5 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். அவருக்கு தினமும் 2 முறை இன்சுலின் ஊசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த அக்கு ஹீலர் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வரும் அக்குபஞ்சர் டாக்டரான பாலமுருகனிடம் சுபாஷை ஜெகதீஷ் அழைத்து சென்றிருக்கிறார். அப்போது இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்திவிடுங்கள்… அக்குபஞ்சர் சிகிச்சையில் சரி செய்கிறேன் என பாலமுருகன் கூறியிருக்கிறார். இதை கேட்டு ஜெகதீஷும் மகன் சுபாஷுக்கு இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தியிருக்கிறார். ஆனால் 2 நாட்களில் திடீரென சுபாஷின் உடல்நிலை மோசமடைந்தது. அப்போதும் ‘அக்குபஞ்சர்’ பாலமுருகனையே ஜெகதீஷ் தொடர்பு கொண்டு கேட்க நிலைமை சரியாகிவிடும் என கூறியிருக்கிறார். இருப்பினும் சுபாஷ் உடல்நிலை மோசடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அக்குபஞ்சர் மருத்துவரின் தவறான ஆலோசனையால் ஒரு இளம்தளிரின் உயிர் பறிபோயுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.”

    ஒரு ஆங்கில இதழில் வந்த செய்தியின் பகுதி:

    “…Asked about the matter, Balamurugan told Express that the boy might have been brought to him on the brink of death. “There are numerous patients whom I have cured. This case is one in a thousand. Other medical systems too do not guarantee saving life. They started taking treatment only after accepting my suggestion to stopping the insulin injections,” he said.

    Balamurugan, who owned a photo studio till 2010, completed his Diploma in Acupuncture Science through an open university course. He has been running a clinic at Ramnagar in Coimbatore from 2011.
    He accepted that there is no statutory body to register or regulate acupuncture healers, unlike systems of medicine like Siddha and Ayurveda.
    The family of Subash, who are yet to overcome the grief caused by his death, are yet to take a decision on proceeding with legal action against the therapist.

    There are numerous patients whom I have cured. This is one in a thousand. Other medical systems too do not guarantee saving life.”

    இந்தியா மண்ணின் மைந்தர்கள் ‘கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது’ என்றால் நம்பலாமா? நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.

    உசாத்துணை:
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/diabetic-teen-weaned-away-from-insulin-therapist-dies-at-tirupur-254747.html

    http://www.newindianexpress.com/states/tamil_nadu/Diabetic-teen-weaned-away-from-insulin-by-therapist-dies-at-Tirupur/2016/05/28/article3454446.ece

    சித்திரத்துக்கு நன்றி:https://smartypantsvitamins.com/wp-content/uploads/2013/04/Diabetes-wordcloud.jpg

    பழங்கதை:
    வல்லமை ஆரோக்கியத்தைப் போற்றும் இதழ். அது சம்பந்தமான ஆலோசனை கட்டுரைகள் மேலும் வர இருக்கின்றன. இத்தருணம் இங்கிலாந்தில் வசித்து வருபவரும், ‘வல்லமை’க்குப் பரிச்சியமானவரும் ஆன இன்னம்பூரானுடன் அளவளாவ நேர்ந்தது. அவர், பல வருடங்களாக தன் குடும்பத்திலும், சுற்றத்திலும், நண்பர் வட்டாரங்களிலும், பற்பல நோய்களின் தன்மையையும், நிவாரணத்தையும் பற்றி அனுபவப்பட்டவர். நீரழிவு தன்மையால் ஆரோக்கியம் குன்றிய நிலையிலும் சிறுநீரகம் ஒன்றை தானம் அளித்தவர். ஆலோசனை மையங்களில் தன்னார்வப்பணி புரிந்தவர். அத்துறையில் பட்டம் பெற்று தகுதி அடைந்தவர். இங்கிலாந்தில் மக்களுக்கு புரியும் வகையில், தரமுயர்ந்த, அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட்ட ஆலோசனைகள் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன என்று சொல்லும் அவர், அவற்றையும், தன் அனுபவத்தையும் ‘வல்லமை’ வாசகர்களுடன், வரவேற்பை பொறுத்து, நோயாளியின் அணுகுமுறையை முன்னிறுத்தி, பகிர்ந்து கொள்ள இணைந்துள்ளார். பரிக்ஷார்த்தமாக, இன்றைய தினம், நீரழிவு நோயை பற்றி,அவர் அனுப்பிய சிறிய அறிமுகக்கட்டுரை ஒன்றை, நன்றியுடன், பதிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
    -ஆசிரியர்
    Innamburan Innamburan
    Mon, Nov 14, 2011 at 12:33 PM
    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~1
    சீரகச்சம்பாவும், சிட்டுக்குருவியும், சிங்கக்குட்டியும், நம்மைப்போல் டாக்டரிடம் ஓடுவதில்லை. ஆனால், மனித நாகரீகம் அவற்றையும் டாக்டரிடம் எடுத்துச் செல்கிறது. விவேகம் இங்கு கை கொடுக்கிறது. தனக்கு என்று வரும்போது, மனமும், உடலும்,‘அவரும் இவரும் சொன்னதும்’ ஒன்றையொன்று குழப்பி, திசை மாற்றி, உரியகாலத்தில் தக்கதொரு நிவாரணம் தேடுவதில் சிக்கல்கள்
    விளைவிக்கக்கூடும். இது என் அனுபவம். எனக்கு ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ ஆசான், ரத்னவேலு சுப்ரமண்யம் என்ற அக்காலத்து பிரபல டாக்டர். என் தந்தை ஒரு தீராதப்பிணியினால் பீடிக்கப்பட்டிருந்தார். டாக்டர் ரத்னவேலு சுப்ரமண்யம் அவரிடம் நீங்கள் தான் உங்களுக்கு முதல் டாக்டர் என்றார். அதை படிப்பினையாக எடுத்துக்கொண்டேன். நாம் எல்லோரும் அறிந்த விஷயம்: டாக்டருக்கு எஃப். ஐ. ஆர். கொடுப்பது நாம் தான் என்பதும், அவரை சிறு தெய்வமாக அநேகர் கருதுவதும், அந்த நிலையில் நிறுத்தி வைக்கப்படுவதும். இந்த பின்னணியில், இன்றைய தின விழிப்புணர்ச்சியை அணுகுவோமாக.
    உலகெங்கும் நவம்பர் 14 அன்று ‘நீரழிவு’/ டயாபிட்டீஸ் பற்றிய விழிப்புணர்ச்சி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஊடகங்கள் எல்லாம் 522/346 மிலியன் டயபிட்டீஸ் நோயாளிகள் என்று புள்ளி விவரங்கள் தருகின்றன. இது என்ன 2ஜி ஆடிட் சமாச்சாரமா என்ன? இரண்டு மதிப்பீடுகள் கொடுத்து, நம்மை அதட்ட? ஆனால், இது மட்டும் தெளிவு. தனி மனிதரும், மருத்துவத்துறையும், சமுதாயமும், அரசும் கூடி ஆவன செய்யாவிடின், வெள்ளம் தலைக்கு மேல். நாமே நம்மையும், வரும் தலைமுறைகளையும் வஞ்சித்தவர்களாவோம்.
    நீரழியா வேதம்:
    பிறந்த குழவி முதல் தொண்டு கிழவி வரை எல்லோரும் மிதமான உணவு, சத்துக்கள் குறையாத பதார்த்தங்கள், வேளாவேளை உண்பது, ஃபாஸ்ட் ஃபுட் தவிர்ப்பது என்று இருக்கவேண்டும்;
    தினந்தோறும், தவறாமல் தேகப்பயிற்சி செய்யவேண்டும். உடல் நிலையை பொறுத்து, மருத்துவ ஆலோசனை உசிதம்;
    நீரழிவு போராட்டம் ஒரு கலை. எல்லாம் மிதமாகவே
    என்பது தத்துவம். உரியகாலத்தில் உணவும், நேரம் தவறாத மருந்தும் வாழ்நெறி. எச்சரிக்கையாக இருப்பது விவேகம்.
    ‘கரணம். தப்பினால் மரணம்’ என்பார்கள். உஷாராக இருந்தால் குஷி தான். இல்லையென்றால், ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, கண் பார்வை மங்கல், சிறுநீரகக்கோளாறு. எல்லாம் மிஞ்சினால், அகால மரணம்.
    என்னுடைய கணிப்பில் நீரழிவு ஒரு ஆரோக்கியம் குன்றிய நிலை,வியாதி என்பதை விட. நிச்சியமாக, அத்துடன், நீண்ட நாட்கள் வாழமுடியும். போக்கடிக்கமுடியாதது, இன்றைய மருத்துவம் அறிந்த வரை. போக்கடிப்பேன் என்று சூளுரைப்பவர்களை தவிர்ப்பது விவேகம்;
    சிறார்களை ‘கஷ்குமுக்கு’ குண்டர் ஆக்காதீர்கள். எடை குறைத்தால், உடை சோபிக்கும். உப்பு குறைத்தால், நீங்களே சோபிப்பீர்கள்;
    நீரழிவு வம்சபரம்பரை சொத்து. ஆகவே, முன்னோர்களை பொறுத்து, சந்ததியினர் இன்னல்படக்கூடும். இதையெல்லாம் பார்த்து இல்லறம் அமைப்பது எளிதல்ல. சாத்தியம். ஆனால், பிறக்கும் குழந்தைகளை விழிப்புணர்ச்சியுடன் வளர்க்கும் கடமை உளது;
    இன்றைய மருத்துவ ஆலோசனை படி, வம்ச ஆஸ்திக்காரர்கள் கூட நீரழிவு நிலை வருவதை கணிசமாகத் தள்ளிப்போடமுடியும்;
    உலக சுகாதார மையத்தின் டயபிட்டீஸ் துறைத்தலைவர், டா. ரோக்லிக், “கணிசமான அளவுக்கு நீரழிவு நோய் வருவதைத் தடுக்கமுடியும். ஆனால், நாம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லையானால், தீவிரமானதும், உடல் நலத்தைக் குலைப்பதும், உயிரை குடிப்பதுமான இந்த வியாதி நிலை, உலகை மிகவும் பாதிக்கும்.
    மேலும் சொல்ல இருக்கிறதா? என்ற எதிரொலி கேட்கிறது. ஆம். இருக்கிறது. கேட்டால் பார்க்கலாம்.
    (தொடரும்)
    இன்னம்பூரான்
    14 11 2011

    Share
  • படக்கவிதைப் போட்டி … (66)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    13318513_1022161434504722_554123272_n

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    27182698@N05_rராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.06.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • சங்க இலக்கியத்தில் களவும் – கற்பும் உறவாடியது

    –க.பிரகாஷ்

    download

    சங்க இலக்கியம் என்பது தமிழில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியம் ஆகும். 473 புலவர்களால் 2381 பாடல்கள் பாடப்பட்டுள்ளது. இப்புலவர்கள் பலதரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் ஆவர். சங்க இலக்கியங்கள் அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைகளையும் மற்றும் பண்டைத் தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளையும் அறியவைக்கின்றன.

    சங்க இலக்கிய கூறுகள் மற்றும் பண்புகள்

    அகம், புறம், ஐவகை நிலபுலன்கள், வாழ்க்கை முறைகள் போன்றவைகளை எடுத்துவிளக்கும் சங்க இலக்கியப் பாட்டுகளில் பழைய மரபுகள் பல காணப்படுகின்றன. காதல் பற்றிய கற்பனையை அகம் என்றும் வீரம், கொடை, புகழ் முதலிய வாழ்க்கைத் துறைகளைப் புறம் என்றும் பகுத்த பாகுபாடு அந்த மரபுகளுள் முதன்மையானது ஆகும்.

    அகப்பாட்டுகளில் கற்பனைத் தலைவன் தலைவியின் காதல் பாடப்படும். புறப்பாட்டுகளில் நாட்டை ஆளும் தலைவனுடைய சிறந்த வீரச்செயல்களும், கொடைப்பண்பும் குடிமக்களுள் சிறந்தவர்களின் அருஞ்செயல்களும் பிறவும் பாடப்படும். ஆகவே, பெரும்பாலும், அகப்பாட்டுக்கள் கற்பனையாகவும், புறப்பாட்டுகள் உள்ளது கூறலாகவும் அமைந்துள்ளன எனலாம்.

    சிற்றூர்கள் பலவாகவும் நகரங்கள் ஒரு சிலவாகவும் அவற்றிடையே போக்குவரத்தும் கலப்பும் குறைவாகவும் இருந்த காலம் அது. சிற்றூர் மக்கள் மலையிலும் காட்டிலும் வயற்புறத்திலும் கடற்கரையிலும் அமைந்த ஊர்களில் வாழ்ந்து அந்தந்த நிலத்தில் கிடைத்த உணவுப்பொருள்களுக்காக வேட்டை, உழவு, மீன்பிடித்தல் முதலிய தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். அன்பு, அறிவு, அழகு, வயது முதலியன பொருத்தமாக வாய்ந்த ஆணும் பெண்ணும் காதல் கொண்டு திருமணம் செய்து இல்லற வாழ்க்கை நடத்தினர். அத்தகைய காதலும் இல்லறமுமே சிற்றூர்களில் இயல்பான வாழ்க்கையாக இருந்தன. அந்த ஊர்களில் தோன்றி வழங்கிய வாய்மொழிக் கதைகளும் பாடல்களும் நாடகங்களும் அந்தக் காதல் வாழ்க்கையையே மையப் பொருளாக கொண்டிருந்தன. சிற்றூர் மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வும் தொழில்களும் நாட்டுப் பாடல்களில் பாடப்பட்டன. மலை, காடு, வயல், கடல் ஆகியவற்றின் இயற்கை அழகும் சிறப்பும் அவற்றில் பாடப்பட்டன. இயற்கைப் பொருள்களும் தொழில் முதலிய வகைகளும் வாழ்வுக்காக அமைந்தவை.

    ஆகையால், காதல்வாழ்வே அந்தப் பாடல்களின் உரிப்பொருள் என்று போற்றப்பட்டது. அந்த வாழ்வை எடுத்துக்காட்டும் பொருள்களாக உள்ள மரம், விலங்கு, பறவை, தொழில் முதலிவை கருப்பொருள்கள் எனப்பட்டன. அந்த வாழ்வுக்குப் பின்னணியாக விளங்கிய நிலமும் காலமும் முதற்பொருள்கள் எனப்பட்டன. இயற்கைப் பொருள்களும், தொழில்களும் பழக்கவழக்கங்களும் வேறுவேறாக இருந்தமையால் நாட்டுப் பாடல்களும் வெவ்வேறு வகையாக அமைந்தன. சங்க இலக்கிய காலத்தில் அந்த நாட்டுப் பாடல்களே புலவர்களின் கைப்பட்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்திணைப் பாடலாக அமைந்தன. அவற்றின் மரபுகளை ஒட்டிப் புலவர்களால் இயற்றப்பட்ட ஐந்திணைப் பாட்டுகளும் முழுவதும் கிடைக்க வழியில்லை.

    ஒரு காதல் நிகழ்ச்சியைக் கற்பனைசெய்து பாடும்போது இவ்வாறு அதற்கு உரிய நிலம், பொழுது, பறவை, விலங்கு, மரம், பூ முதலிய இயற்கைப்பொருள்களையும் அமைத்துப்பாடும் மரபு நெடுங்காலமாக இருந்துவந்தது.

    ஊர்ஊராக மக்கள் எழுதாமலே பாடிவந்த நாட்டுப் பாடல்களிலேயே அந்த மரபு இருந்து வந்தமையால் புலவர்கள் அந்த மரபுகளை அவ்வாறே கையாண்டு இலக்கியம் படைத்தனர். அதனால் .கணவனும் மனைவியும் ஊடல் கொண்டு பிணக்குவதைப் பாட விரும்பினால் புலவர் அதற்கு ஏற்ற வயல் சார்ந்த மரபு நிலத்தையும் அந்த நிலத்து இயற்கைப் பொருள்களையும் அமைத்துப் பாடவேண்டி இருந்தது. மலையையோ காட்டையோ பாடுவதற்கு அந்த மரபு இடம்தரவில்லை.

    நாட்டு மக்களின் எழுதா இலக்கியமாகிய நாட்டுப்பாடல்களிலேயே அவ்வளவு ஆழமாக அந்த மரபு வேரூன்றி இருந்தபடியால் எழுதும் இலக்கியத்தைப் படைத்த புலவர்களும் அந்த மரபை மீறாமல் போற்ற நேர்ந்தது. அதனால், அக்காலத்து அகப்பாட்டு, இயற்கை வர்ணனை மிகுந்துவிளங்கக் காண்கிறோம். இயற்கையைப் பாடுவதாகவே அமைந்த பாட்டுகள் போலச் சில தோன்றும். மனிதரின் காதலைப் பாடுதலே அந்தப் பாட்டுகளின் முதன்மையான நோக்கம்.

    ஐந்திணையில் காதல் குறிப்பு

    குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை, பாலைத்திணை ஆகியவை அன்பின் ஐந்திணை ஆகும்.

    ஒரு தலைவனும், தலைவியும் முதன்முதலாக ஒருவரை ஒருவர் கண்டு இயல்பாகவே அன்பு கொண்டு மனம்கலந்து உறவு கொள்வது குறிஞ்சித்திணையாகும்.

    அன்பால் நெருங்கிப் பிணைந்த தலைவனும், தலைவியும் பிரிந்து ஒரு குறிப்பிட்ட காலம்வரை அப்பிரிவைத் தாங்கிக்கொண்டிருந்தல் முல்லைத் திணையாகும். பிரிவு பல காரணங்களால் உண்டாகும்.

    இல்லற வாழ்வில் தலைவன் பல காரணங்களால் வெளியிடங்களில் அடிக்கடித் தங்கிவந்தால் தலைவி கோபமுற்று ஊடல் கொள்வது மருதத்திணையாகும்.

    ஏதோ ஒரு காரணத்தால் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் குறித்த காலத்திற்குள் வரமுடியாது கால தாமதம் ஆவதால் தலைவிக்கு ஏற்படும் வருத்த்தைப்பற்றிக் கூறுவது நெய்தல்திணையாகும்.

    மணந்துக்கொள்ளும் பொருட்டுத் தலைவன் முயன்று பொருள் தேடவோ, மேலும் கல்விகற்கவோ அரச கட்டளையால் தூது செல்லவோ பிரியும் பிரிவு பாலைத்திணையாகும்.

    களவு

    களவு என்பது ஒத்த பருவம், உருவம் முதலிவையுள்ள ஒருவனும், ஒருத்தியும் தாமே எதிர்ப்பட்டுக் கூடும் கூட்டம். தமக்கேற்ற வாழ்க்கைத் துணைவரைத் தாமாகவே தேர்ந்தெடுத்துக் கொள்வது இதில் பேசப்படும்.

    கற்பு

    கற்பு என்பது களவொழுக்கம் ஒழுகிக் காதலன்பு முதிர்ந்து மணந்து கொண்ட காதலர் ஒரு மனப்பட்டு இல்லறம் நடத்துதல் ஆகும். 

    இல்லறம்

    தலைவனும் தலைவியும் கொடுக்கும் முறைமையையுடைய பெற்றோர் உடன்பட்டுக் கொடுப்ப மணஞ்செய்துகொண்டு நடத்தும் இல்லற வாழ்க்கையே கற்பு வாழ்க்கை. இல்லறமே கற்பு ஆகும். இக்கற்பு வாழ்க்கை, களவொழுக்கம் முற்றி விளைந்த விளைவு. களவொழுக்கத்தின் கனி கற்பு; அஃதாவது அன்பின் வெற்றி ஆகும்.

    தலைவனும் தலைவியும் எதிர்பட்டுக் கொண்ட காதலன்பு கெடாமல் இருவரும் மணந்து கொண்டு இல்லறம் நடத்துதலும், தலைவன் பிரிந்தால் தலைவி அன்பு வழுவாமல் ஆற்றியிருந்து வெற்றி பெறுதலும் உடைமையின் இது கற்பு எனப்படும். “மறை வெளிப்படுதல் கற்பு” கணவன் மனைவி இருவரையும் ஒன்றுபடப் பிணித்து நிற்கும் மனங்கலந்த அன்பின் பயனே கற்பு வாழ்க்கை.

    இன்பம்

    இன்பம் என்பது அகப்பொருளின் கூறு. ஆண், பெண் என்னும் இருபாலின்கண் நிகழ்வது, மக்களேயன்றி மற்ற விலங்கு, பறவை முதலிய உயிர்களுக்கும் ஆண், பெண் என்னும் கூறுபாட்டால் பொருந்தி நிகழ்வது; எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் என்பது தொல்காப்பியக் குறிப்பு.

    ஆண் பெண் புணர்ச்சிக்குக் காரணமாகிய காதல் ஒருவனும் ஒருத்தியும் தாமாகவே எதிர்ப்பட்டுக் கூடுதல் இயற்கையாதலால், அதைத் தடைசெய்வதும், இழித்துக் கூறுவதும், அகப்பொருளின் உண்மையை இயற்கையாற்றலை – இன்றியமையாப் பயன்பாட்டை அறியாக் குறையேயாகும். வாழ்க்கை நலத்திற்குக் காரணமான அகவொழுக்கமென்னும் பேரின்பத்தினைத் தகாத வழியில் செலுத்தியும் தவறான பொருள்கொண்டும் சிற்றின்பம் என இழிவுபடுத்தி விட்டனர்; மக்கள் விலக்கத்தக்க பொருள்களில் ஒன்றாகச் செய்து விட்டனர். இது சமயச் சார்பில் நேர்ந்த தவறு.

    உலகுயிர்த் தோற்றமே ஆண் பெண் இருகூறாய் அமைந்திருக்க, அவற்றின் கூட்டுறவே உலகுயிர்த் தோற்றத்திற்குக் காரணமாய் அமைந்திருக்க அஃது எவ்வாறு சிற்றின்பமாகும்? உயிர்கள் அடையும் இன்பங்களில் பேரின்பம் அதுவே. “ கண்ணால் கண்டும், காதல் கேட்டும், வாயால் உண்டும், மூக்கால் மோந்தும், உடம்பால் தீண்டியும்” இன்புறும் ஐவகையான இன்பமும் பெண்ணிடத்தேயுள்ளன”; இவளோடு கூடி வாழும் இன்பத்தை விட உலகில் மிகுதியான இன்பம் வேறு எதுவுமில்லை என்பது வள்ளுவர் கருத்து.

    காதலின் பெருமை

    இருவேறு உருவினரான ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்கி “ இருதலைப் புள்ளின் ஓருயிராம்” என்னும் நிலையை உண்டாக்கி, ஒருவர்க்கு உண்டான நலக்கேடு இருவர்க்கு ஒத்த பங்காகக் கொண்டொழுகும்படிச் செய்வது காதல்.

    காதலன் ஒருவன் தன் காதலியிடம் எனது தாயும் நினது தாயும் ஒருவருக்கொருவர் எம் முறையினராவர்? என் தந்தையும் நின் தந்தையும் ஒருவருக்கொருவர் என்ன முறையையுடைய சுற்றத்தினர்? ஒரு முறையும் இல்லையே! அவ்வாறிருக்கவும், நானும் நீயும் எவ்வாறு ஒருவரையொருவர் அறிந்தோம்? முன்பின் அறியாதவர் நாம் அவ்வாறிருந்தும் நம் அன்புடைய நெஞ்சங்கள் பயிர் செய்வதற்குத் தகுதியாக உழுது பண்படுத்தப்பட்ட செம்பாட்டு நிலத்தில் பெய்த மழைநீர் போலக் கலந்துவிட்டனவே! என்னே காதலின் பெருமை! இன்னார் என்று அறியாத இருவர் நான் நீ என்னும் வேறுபாடின்றி ஒருமைப்பட்டதை என்னவென்பது? எனும் குறுந்தொகை காதலின் பெருமையை நன்கு விளக்குவதாகும்.

    “யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
     எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
     யானும் நீயும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே: – (குறுந் – 40) 

    காளைப் பருவத்தையும் கன்னிப் பருவத்தையும் அடையுமுன் ஆண் பெண் இருவரும் ஒருவரையொருவர் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. திடீரென ஒருநாள் எதிர்ப்பட்டு அன்புகொள்ளச் செய்யும் பெருமையுடையது காதல்.

    காதல் மனம்

    ஒருவனும் ஒருத்தியும் காதற் கலப்புற்று வரும்போது சிலர் தம் தோழர்களிடம் தமது கருத்தை வெளியிடுவர். சிலர் தம் காதலியிடம் நெருங்கிப் பழகும் பெண்களிடம் தெரிவிப்பர். இம்முறை இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது.

    சில பெண்கள் தம் தோழியரின் குறிப்பு வேறுப்பாட்டைக் காதற் குறிப்பைக் குறிப்பால் உணர்ந்து அவளது பெற்றோரிடம் கூறுவர். சில பெண்கள் தம் தோழியரிடம் தாங்கொண்ட காதலைக் குறிப்பால் உணர்த்துவர். சிலர் தம் பாட்டியரிடம் கூறுவர். அப்பாட்டியர் பெற்றோரிடம் கூறுவர். பெற்றோர் மனமுவந்து  அக்காதலர்க்கே மணமுடிப்பர்.

    காதலர்களின் காதற் கலப்பு பெரும்பாலும் பிறர்க்குத் தெரியாமல் நடைபெறும். அவர்களது காதலைப் பெற்றோரே அறிந்து மணம் முடிப்பதுமுண்டு. காதலர்களின் தோழரும் தோழியரும் அவர்தம் பெற்றோர்க்கு மணம் முடிப்பதும் உண்டு.

    சங்க இலக்கியத்தில் கற்பு பற்றிய சொற்கள்

    மாசில் கற்பு, முல்லை சான்ற கற்பு, கடவுட் கற்பு, நகரடங்கிய கற்பு, நிலைஇய கற்பு, அடங்கிய கற்பு, உவர் நீங்கு கற்பு, மறுவில் கற்பு, அருந்ததி அனைய கற்பு போன்ற பல தொடரமைப்புக்கள் கற்பின் மேம்பாட்டை உணர்த்துகின்றன.

    களவிலும் – கற்பிலும் – புணர்ச்சி

    “கண்தர வந்த காம ஒள்எரி
    என்புஉற நலியினும் அவரொடு பேணிச்
    சென்று, நாம்முயங்கற்கு அருங் காட்சியமே…(குறுந் -305)

    கண்தர வந்த காமம் என்றது அவனைக் கண்ட போதே அவன்பால் விருப்புடையார் ஆயினதைக் குறித்தாம்; அதனை ஒள்எரி என்றது, சுடரிட்டுப் பலரும் காண நிகழ்வது; அங்ஙனமன்றி எவரும் காணாவிடத்து நிகழும் குப்பைக் கோழிப்போர் என்றனள். களைவார் இலர் என்றது, தோழி நீதான் அதனைப் போக்காயோ, எனக் குறிப்பால் தோழியை வேண்டியதாம்.

    உள்ளப் புணர்ச்சி

    ஆண் பெண் உறவுக்குக் காதல் காரணம் என்றோம். காதலுக்குப் பால் காரணம் என்றோம். அறிதோறும் அறியாமை கண்டதல்லது என்ன விளக்கம் கண்டோம்? ஒத்த தலைவனும் தலைவியும் காதற் குறிப்பொடு காண்பர் எனின், அவ்விருவரும் ஒத்தவர்களாக இருப்பதற்குக் காரணம் பிறிதுண்டோ? ஒப்பு என்பது எது? அஃது ஒரு பிறவி யொப்பா பல்பிறவி யொப்பா?

    “இம்மை மாறி மறுமையாயினும்
    நீயா கியரென் கணவனை
    யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே – (குறுந் – 49) 

    இம்மை மாறி மறுமை யாயினும் நீயாகியர் என் கணவனை யான் ஆகியார் நின் நெஞ்சு நேர்பவளே என்பதைக் கவனிக்க வேண்டும். நின்னால் மாண்புற்ற போதும் இம்மைக்கண்ணும் அவர் நின் மனைவியர் ஆகார். நீயும் அவர்க்குரிய கணவன் ஆக மாட்டாய். மறுமையின்கண் தொடர்ந்து பெறும் நட்புக் கற்புடையாட்டியாகிய எனக்கன்றி அவர்க்கு வாயாது என்று கூறித் தலைவனிடத்தே தான் கொண்ட உழுவலன்பை உணர்த்துகின்றன.

    கற்பு – திருமணமாக முடியுங்கால் களவுநெறி, நன்னெறி எனப் போற்றப்படும். இன்றேல் கள்ளத்தனம் என இகழப்படும். கற்பென்னும் மணவாழ்க்கைக்கு முன்னரெல்லாம் களவென்னும் மறைவுநெறி ஒருதலையாக நடக்க வேண்டுமோ எனின் இல்லை. களவின் முடிபு கற்பு என அகத்திணை வலியறுத்தும்;. கற்பு வழக்காவது தலைவியைக் கொடுத்தற்குரியோர் கொடுப்பக் கரணமுறையால் தலைவன் ஏற்றுக் கொள்வதாகும்.

    “கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
     கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
     கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே”
     (தொல் – 1087 )

    தொல்காப்பியர் தமிழ்ச் சமுதாயத்தின் மணமுறையைச் சுருக்கமாக உரைப்பர். திருமணம் என்னும் கட;டுப்பாடு யாண்டும் இன்றியமையாதது; மாறாதது. மணச்சடங்குகள், தேயந்தோறும், இனந்தோறும் வேறுபடுவன; காலந்தோறும் கூடுவன, குறைவன மயங்குவன. ஆதலின் வாழ்வியலறிஞர் தொல்காப்பியர் கற்பென்னும் தலையாய அறத்தை வலியுறுத்திக் கரணமொடு புணர என்று சடங்கினைப் பொதுப்படக் கூறினார்.

    “பொன்னவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
     மென்முலை முற்றம் கடவா தோரென
     நற்றென் கங்குலும் பகலும் இயைந்தியைந்து
     உள்ளம் பொத்திய உரஞ்சுடு கூரெரி   – ( அகம் – 279) 

    நண்பினர் பிடியையும் உறவினர் துயரத்தையும் பகைவர்களின் எக்களிப்பையும் உள்ளுரில் இருந்தே பார்த்துக் கொண்டிருப்பர். அவர் யாரெனின் பொன்னிறச் சுணங்கும் திரட்சியும் வீக்கமும் மென்மையும் பொருந்திய முலைத்தடத்தை விட்டு அகலமாட்டா ஆடவர்கள்.

    “இல்லோர்க் கில்லென் றியைவது காத்தல்
    வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
    பொருளே காதலர் காதல்…” (அகம் -53)

    காதலர் காதல் மாறிவிட்டது எனவும் அதற்குக் காரணம் ஈகைப்பற்று எனவும் தலைமகளே கூறுதல் காண்க. நாடுகாவற் பிரிவு, பகைவயிற் பிரிவு, தூதிற் பிரிவு, ஓதற் பிரிவு, பரத்தையிற் பிரிவு எனப் பிரிவு வகைகள் பல. இவற்றினும் பொருள்வயிற் பிரிவே எல்லார்க்கும் உரியது. களவிற்கும் கற்பிற்கும் பொதுவானதாகும்.

    பார்வை நூல்கள்: 

    தமிழ்க் காதல்    –   வ.சுப. மாணிக்கனார்
    குறுந்தொகை    –   புலியூர்க்கேசிகன்
    அகநானுறு         –   புலியூர்க்கேசிகன்
    தமிழ் இலக்கிய அறிவுக் களஞ்சியம்   – செந்துறையான்
    தமிழ் இலக்கிய வரலாறு      – மது. ச. விமலானந்தம்
    தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்   – க. பிரகாஷ்

    ***

    க.பிரகாஷ் எம்.ஏ, எம்.பிஃல்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்பக் களஆய்வுப் பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

     

    Share
  • தித்திக்குதே திருக்குறள் – 6

    கூறாமல் சந்நியாஸம் கொள்

    திவாகர்.

    1ce9ac4f-e397-4da4-afd1-6bbb8c11ff45

    ஒருமுறை இருமுறையல்ல அண்ணே

    ஓராயிரம்முறை எடுத்துச்சொல்லியாச்சு

    மனையாள் மனதால் இணையவேணுமென

    மனசாட்சியாம்நான் மனதார சொல்லியாச்சு

     

     

    மணநாளன்று மெட்டிக்காகக் குனிந்தவன்

    மனையாள் கால்விரலைப்பிடிக்காது அவள்

    காலைப்பிடித்தாய் இன்றுவரை நிமிரவில்லை

    தலையணை மந்திரமென்று தந்தவளுக்குத்

    தலையசைத்து மந்திரத்தில் மயங்கிவிட்டாய்

    நாளெல்லாம் அவள்பேச்சு அவள்மூச்சு

    அவள்போக்கில் வாழப் பழகினாயே

    இருவரும் இணைந்து செல்லும்பாதைக்கு

    இறைவன் வாழ்க்கையென பேர்கொடுத்தான்

    இணைந்துசெல்ல இருவர் எதற்கென்றே

    பிணைக்கைதியாகி அவள்பின் சென்றாய்.

    மணப்பொருத்தம் பார்த்தவர்தாம் ஏன்மறந்தார்

    மனமொத்த தாம்பத்யத்யமே தகுதியானதென

    கணப்பொழுதேனும் உன்மனதைக் காயமாக்காமல்

    கணவனெனத்தான் உன்மனைவியவள் மதித்தாளா

     

    மனையாளுக்கு மறுபெயர் மனைச்செல்வமாம்

    உனையாளும் மனையாளோ மறந்தாளிதனை

    புதுமுகமாய் புக்ககத்தில் அடிவைத்தவள்தான்

    புதிதுபுதிதாய் குறைகளைக் கொண்டுவந்தாளே

    பழக்கமில்லா உறவுகளை அறவேவெறுக்க

    பழையமுகங்கள் ஒவ்வொன்றாய் வெளியேற

    ஊருணிநீரை வெறுமனேவீதியில் வீணாய்விட்டு

    கார்மேகநீரை காற்றில்பிடிப்பாராம் அதுபோல

    உன்வீட்டுச் செல்வங்கள் இவளெடுத்துவீணாக்கி

    பொன்வாங்கி மணிவாங்கி அதுவும்பயனற்று

    குறைசொல்லி கோள்சொல்லி தூக்கிவீசி

    கொடும்வார்த்தை வாய்பேச குணநலனும்

    கெட்டுப்போக நாள்போக நாள்போக

    ஊரிலே உலகத்திலேஉன்பெயரையும் வீணாக்கி

    உறவுகளென்று வந்தவரெல்லாம் வந்தவுடன்

    விரைந்துஓடும் வழிபார்க்க வைத்துவிட்டாள்

     

    எத்தனைகாலம்தான் பொறுப்பது என்பதல்லாமல்

    இத்தனையும் வேடிக்கையாய்ப் பார்த்தாய்தான்

    ஒருவார்த்தைசொன்னால் உன்னுள்ளே அச்சமாம்

    மறுவார்த்தை சுடும்வார்த்தையாய் கேட்பாயே

    மனையாளின் போக்குக்குத் தலையாட்டினாயே

    உன்மனப்பாங்கு அவளறிந்ததால் நிலைமாறினாள்

    உனைப்பெற்றவள் இன்றுவரை பொறுமைகாத்தாள்

    அன்னையுலகுக்கே அன்புதெய்வம் அவளாம்

    தன்மானத்தால் தலைநிமிர்ந்து வாழ்ந்தவளாம்

    உன்மனையாள் அவளையும் துரத்திவைக்க

    உனைப்பெற்ற பாவத்துக்குப் பலியானாயே

     

     

    வழக்கம்போல வாய்மூடி பயனற்றதாய்

    வாழ்ந்ததுபோதும் இதுவரை அண்ணே

    பொறுத்ததுபோதும் பொங்கட்டும்அண்ணே

    பேருபோனதெல்லாம் போகட்டும் அண்ணே

    உன்மனசாட்சிநான் சொல்வேன் கேள்அண்ணே

    உன்போன்றோருக்கென்றே வந்தசொல் அண்ணே

    தமிழில் வரமாய் தந்தசொல்அண்ணே

    தமிழ்தந்த அவ்வைவாயால் தரணிக்கேஅண்ணே

    ஓராயிரம்முறை சொன்னசொல் அண்ணே

    கூறாமல் சன்னியாஸம்கொள் இனியே.

     

     

    இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

    இல்லவள் மாணாக் கடை (திருக்குறள் -53)

     

    மனைவி நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய மனைவி அமைந்தால் வாழ்க்கை பயனற்றதாகும்.

     

    தொடருவோம்

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • நலம் …. நலமறிய ஆவல் …… (6)

    நிர்மலா ராகவன்

    வெளியில் நற்பெயர், வீட்டிலோ!

    நலம்-1-1-1-1

    `கணவன்மார்கள் மனைவிக்குப் போதிய சுதந்திரம் கொடுக்காததால்தான் பெண்கள் இல்லற வாழ்வில் சலிப்படைகிறார்கள், விவாகரத்து நடைபெறுவதும் இதனால்தான் என்கிறீர்களே! எல்லா சுதந்திரமும் கொடுத்தும், சில பெண்கள் கணவரை நல்லபடி நடத்துவதில்லையே?’ என்று கேட்டார் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார் நண்பர் சிவராமன். அவர் குரலில் ஏதோ ஏக்கம் தொனித்தது. அவர் மனைவியைப் பிரிந்து வாழ்கிறவர் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

    உடன் வந்திருந்தவர் அதீதமாகத் தலையைக் குனிந்துகொண்டதிலிருந்து, ஏதோ அந்தரங்கமான சமாசாரம் என்று நான் மேலே எதுவும் கேட்காமல் விட்டுவிட்டேன்.

    `என்னைப்பற்றி சிலரிடம் பேசிப்பார்த்தேன். `அப்படியா?’ன்னுட்டுப் போயிடுவாங்க. நீங்க அப்படியில்லே!’ என்றார் சிவராமன்.

    அவர் முன்பொருமுறை வேறு குழப்பத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டபோது, நான் அதை அலசி, ஆறுதலாக ஏதோ கூறியது `மண்டையில் பல காலமாக இருந்த பெரிய பாரத்தை கல்லால் நகர்த்தியது போலிருந்தது!’ என்று சொன்னார். என்னிடம் மீண்டும் உதவி கேட்கவே தயங்கியது புரிந்தது.

    நான் ஏதாவது பேசும்போது, சிவராமன் ஒரு மாணவனைப்போல் மரியாதையாகக் கைகளைக் கட்டிக்கொண்டு, என் கண்களையே உற்றுப் பார்ப்பார். என்னைவிட பத்துவயது இளையவர். ஆனால், பார்வை என்னவோ ஒரு குழந்தை தாயைப் பார்ப்பதுபோல் பாசமாக இருக்கும்.

    விடை பெறும்போது அவரே, `உங்களிடம் இன்னொரு ஆலோசனை கேட்க வேண்டும். நாளை அழைக்கலாமா?’ என்று கெஞ்சுவதைப்போல் கேட்டார்.

    `எப்போ?’
    `காலை ஆறு மணிக்கு?’
    `ஐயோ!’
    `ஏழு?’
    மறுநாள் வானொலி நேரம்போல சரியாக ஏழு மணிக்கு தொலைபேசி மணி அடித்தது.

    `ஹலோ!’ என்ற சிவராமன் அதற்குமேல் பேச முடியாது திணற, அவருடைய சிரமத்தை ஒருவாறாகப் புரிந்துகொண்டேன்.

    `நான் ஒரு கதை எழுதிக்கொண்டிருக்கிறேன்,’ என்று உண்மையாக ஆரம்பித்தேன்: தட்டிக்கேட்க யாருமில்லாத நிலையில், தான் கண்ட பெண்களோடு சகவாசம் வைத்திருந்ததை புது மனைவியிடம் கூறுகிறான் ஒருவன். அதுவரைதான் எழுதியிருந்தேன்.

    நான் மேலே எதுவும் சொல்வதற்குள், அவர் தொடர்ந்தார்: அதற்குப்பின் அவர்மேல் உள்ள நம்பிக்கை அவளுக்கு அறவே போய்விட்டது. தொழில் நிமித்தம் அவர் இரவில் நேரம் கழித்து வந்தாலும், `எவளோட இருந்துட்டு வந்திருக்கீங்க?’ என்று சுடுசொற்களை வீசுவாள், `நான் கல்யாணம் செய்துகொண்டேனே, அந்தப் பெண்!’ (அடுத்த ஒரு மணி நேரமும் இப்படித்தான் மனைவியைக் குறிப்பிட்டார்).

    அவளுக்குப் பிடித்த துறையில் முன்னேற இவருடைய உதவி தேவைப்பட்டது. இருவரும் திருமணத்துக்கு முன்பே காதல்வசப்பட்டு, சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார்களாம். அவள் பெரிய பணக்காரி என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

    படிப்பிலும், அந்தஸ்திலும் மிகப் பெரிய நிலையில் இருந்தவள் தன்னை விரும்புகிறாள் என்ற உணர்வு, `என்னைவிட பாக்கியசாலி இந்த உலகில் யாருமில்லை!’ என்று அவரை நினைத்துப் பூரிக்கவைத்தது. அதைத் திரும்பத் திரும்பச் சொன்னார்.

    `ஒண்ணா சேர்ந்து இருக்கிறபோது, ’நமக்குள்ளே எந்த ரகசியமும் இருக்கக்கூடாது,’ என்று சொல்லிக்கொண்டோம். அப்போ தெரியலே, அது எங்கே கொண்டு விடும்னு! வாசலிலேயே நிக்க வெச்சு கன்னா பின்னான்னு கத்துவா!’ விட்டு விட்டுப் பேசினார், அந்த நிகழ்ச்சியை நினைவுகூர்வதே சகிக்க முடியாமல் இருந்ததுபோல்.

    திருணமானபிறகு மனைவியில் குத்தல் பேச்சு ஆரம்பித்தது.

    ‘நான் கல்யாணம் செய்துகொண்டேனே, அந்தப் பெண்ணை நான் கட்டுப்படுத்தியதே இல்லை. ஆனால், அவளுக்கு என்மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது!’

    பொறுக்க முடியாமல் போக, விவாகரத்திற்கு மனு செய்தார்.

    அவளுக்கு ஒரே ஆத்திரம். பணமும், புகழுமாய் தானிருக்க, தன்னை ஒதுக்கிவைத்துவிட ஒருவர் துணிவதாவது!

    அவர்கள் மகனுக்கு அப்போது மூன்று வயது. மாதம் ஒரு முறை தந்தை மகனுடன் நேரத்தைக் கழிக்கலாம் என்று சட்டம் பெரியமனம் பண்ணிற்று.

    ஆனால், சிவராமன் எண்ணியபடி, விவாகரத்து அவருக்கு நிம்மதியான வாழ்வைக் கொடுக்கவில்லை. மனைவியை அறவே உதறமுடியாது போயிற்று. அவர் மகனை அழைத்துக்கொண்டு கிளம்பும்போது, அவளும் வலுக்கட்டாயமாக தொற்றிக்கொள்வாளாம்.

    `இப்போதும் பழையபடி குத்தல் பேச்சுதான்! எதுவும் மாறவில்லை. நான் கல்யாணம் செய்துகொண்டேனே, அந்தப் பெண் சொல்கிற இடத்துக்குத்தான் போகவேண்டும். சாப்பிட நான் ஏதாவது வாங்கிக் கொடுத்தால், அதை அனுமதிப்பதில்லை. இப்போது பத்து வயதாகிறது என் மகனுக்கு. அவனுடன் நான் அதிகம் பேசக்கூட விடுவதில்லை!’ என்று அழுகைக்குரலில் என்னிடம் கூறியவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

    `நீங்கள் என்றாவது.. அவள் சொன்னதுபோல..,’ என்று இழுத்தேன்.

    `வேறு பெண்ணைத் திரும்பிக்கூடப் பார்த்தது கிடையாது! என் உலகமே குடும்பம்தான் என்றிருந்தேன்’.

    ` ஐம்பது, அறுபதுன்னு என் வயசு கூடிட்டே போய், இப்படியே என் காலம் முடிஞ்சுடப்போகுது! இதை நினைக்கிறப்போவே பயமா இருக்கு!’

    `எப்படிச் சமாளிக்கிறீர்கள்? குடியா?’ என்று விசாரித்தேன், சர்வசாதாரணமாக.

    அதில் கேலியில்லை என்று அவரும் உணர்ந்திருக்க வேண்டும். `அதேதான்!’ என்று ஒத்துக்கொண்டார். சுயவெறுப்பு அவர் குரலில்.

    தானிருந்த இடத்தில் இன்னொரு பெண்ணைக் கொண்டுவந்துவிடப் போகிறாரே என்ற கலக்கமோ?

    `அவளுக்குக் காதலன் யாராவது இருக்கிறார்கள்?’ என்று விசாரித்தேன்.

    `அப்படி இருந்து தொலைச்சாதான் தேவலியே!’ என்று பொருமினார்.

    உலகம் அவள் பக்கம்தான் சாய்ந்திருந்தது. சிவராமனுடன் வேலைபார்த்த என் சிநேகிதி ஒருத்தி தானாகவே கூறியிருந்தாள்: `இவனோட யார் குடித்தனம் நடத்த முடியும்! எப்பவும் குடி! பாவம், அவ!’

    `நான் கல்யாணம் செய்துகொண்டேனே, அந்தப் பெண்!’ என்று அடிக்கடி அவர் குறிப்பிட்டவளுடைய விஷம் தோய்ந்த வார்த்தைகளைப் பொறுக்க முடியாததால்தால் அவர் குடிக்கிறார்; தன் வாழ்க்கையின் அவலத்தை தாற்காலிகமாவது மறக்க நினைக்கிறார் என்பது யாருக்கும் புரிவதில்லை.

    எப்போதோ படித்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது: `வாழ்க்கையில் தோல்வி அடைகிறோமே என்று ஒருவன் குடிக்கிறான். குடிப்பதால் இன்னும் அதிகமாகத் தோல்வி அடைகிறான்!’

    `இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்களேன்! எதுக்காக இப்படி உங்களையே வருத்திக்கணும்?’

    `இன்னொரு கல்யாணமா! வேண்டாம்பா!’ என்று நடுங்கினார்.

    `மகன் முகத்தைப் பார்ப்பதற்காகவே மாதம் முழுவதும் காத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறீர்கள்! அடுத்த முறை, `நீ வரவேண்டாம்!’ என்று அவளிடம் கண்டித்துச் சொல்லிவிட்டு, அவனை மட்டும் வெளியே அழைத்துக்கொண்டு போங்கள். அவனுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுங்கள்!’ என்று ஒரு உபாயத்தைக் கூறினேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை.

    `மகனைத் தனியாக அழைத்துப் போய்விட்டு, மறுநாள் என்னைக் கூப்பிட்டுச் சொல்லுங்கள். காத்துக்கொண்டிருப்பேன்,’ என்று எங்கள் உரையாடலை முடித்தேன்.
    அடுத்த வாரம் அவர் அழைக்கவில்லை.

    ஆர்வத்தைத் தாங்கமுடியாது நானே கூப்பிட்டு, `என்ன நடந்தது?’ என்று விசாரித்தேன்.
    `வழக்கம்போலத்தான்!’ மிகுந்த நிராசை அவர் குரலில்.

    `ஐயோ, ஏன்? நீ வராதேன்னு சொல்லலே?’

    `என்னால் கடுமையாகப் பேச முடிவதில்லை! இப்போ எனக்கு ஒரே ஆசைதான்– என் மகன் பெரியவன் ஆனதும், அவனிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்லணும்!’

    இதில் சம்பந்தப்பட்ட மூவருக்குமே மகிழ்ச்சியோ, நிம்மதியோ கிடையாது. அந்தப் பெண் செய்ததுபோல், வீட்டுக்கு வெளியே நற்பெயர் சம்பாதித்து, வீட்டுக்குள் சந்தேகமும் சண்டையுமாக இருந்தால் என்ன மகிழ்ச்சி கிடைக்கும்?

    `வேண்டாம்’ என்று விட்டுப்போன வாழ்க்கைத்துணையை விடாப்பிடியாகப் பிடித்து வைத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் விவேகம். Learn to let go.

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(122)

    செண்பக ஜெகதீசன்

    குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள் 
    மழலைச்சொற் கேளா தவர்.  (திருக்குறள்-66: புதல்வரைப் பெறுதல்) 

    புதுக் கவிதையில்…

    பெற்ற பிள்ளைகளின்
    பேச்சாம்
    மழலைமொழி கேட்காதவர்களுக்குத்தான்,
    யாழும் குழலும்

    எழுப்பும் ஓசை
    இன்னிசையாய்த் தெரியும்! 

    குறும்பாவில்…

    பிள்ளை மழலை கேட்காதவர்தான்,
    இனிதென்பர்
    யாழும் குழலும் எழுப்புமொலி! 

    மரபுக் கவிதையில்…

    இன்னிசை வழங்கிடும் யாழதுவும்
         –இசைவாய் ஊதிடும் குழலதுவும்,
    ஒன்றாய்த் தருமிசை இனிதென்றே

         –ஓதுவர் சிலரே அறியாமல்,
    குன்றா இல்லறம் தரும்பரிசாம்

         –குழந்தைச் செல்வம் தருமழலை,
    நன்றாய் கேட்டுச் சொல்வீரிதை

         –நாளும் சிறந்த இன்னிசையே! 

    லிமரைக்கூ…

    பிள்ளைகள் மழலைதான் சிறந்தது,
    இதையறியார் பேசுவர் இசையது இனிதென,
    யாழிலும் குழலிலும் பிறந்தது! 

    கிராமிய பாணியில்…

    சொல்லுவாங்க சொல்லுவாங்க
    சோக்கான எசண்ணு சொல்லுவாங்க,
    யாழெடுத்துப் பாடுறதும்

    புல்லாங்கொழலு ஊதுறதும்
    பெரிய எசயாச் சொல்லுவாங்க… 

    இவுங்களுக்குத் தெரியாது
    இந்த உண்ம,
    பெத்த புள்ளங்க பேசுற

    மழலப்பேச்சிக்குப் பெருசில்ல,
    அதெல்லாம்

    இதுக்குமிஞ்சி இனிமயில்ல… 

    சொல்லுங்க சொல்லுங்க
    புள்ளக்கி மிஞ்சிய செல்வமில்ல,
    அவுரு

    பேச்சிக்கு மிஞ்சிய எசயுமில்ல!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 65-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் திருமிகு. சாந்தி வீஜே. இதனைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விரு ’சாந்தி’யருக்கும் வல்லமை இதழின் நனிநன்றி!

    crow with a paper

    காகமும் அதன் அலகில் வீற்றிருக்கும் வண்ணக் காகிதமும் நம் கண்ணைக் கவர்கின்றன.

    இப்படம் நம் கவிஞர்களுக்கு எத்தகைய உணர்வலைகளை எழுப்பியிருக்கின்றன எனக் காண்போம்!

    ***

    உரக்கக் கரைந்து, உறவினர் வருகையை அறிவிக்கும் காக்கையே! சிறுவர் கைப்பண்டத்தை நீ பறித்துவந்தது முறையோ? என வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உறவாய் எண்ணிய காக்கையாரே
    உமது குணமது மாறியதே,
    சிறுவர் கையில் பண்டமதைச்
    சேர்த்தே பிடுங்கி வந்தீரே,
    உறவினர் வரவை உரைப்பதினால்
    உயர்வாய் எண்ணி யிருந்தோமே,
    பிறப்பில் எமது முன்னோராய்ப்
    போற்றிய பெருமையும் பொய்யாச்சே…!

    ***

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை அறிந்துகொள்ளும் நேரமிது!

    ”காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள” என்பது வள்ளுவம்.

    கூடிவாழ்வதிலே, தேடியதைக் கரவாது தம் உறவுகளோடு பங்கிட்டு உண்பதிலே மாந்தர்களுக்கே வழிகாட்டியாய்த் திகழ்பவை காக்கைகள்.

    பகுத்துண்பது உயர்குணந்தான் என்றாலும் மற்றவரின் பொருளைத் திருடிவந்தா அதனைச் செய்வது? என்று காக்கையைக் கண்டிக்கிறது ஒரு கவிதை! 

    காகமே உன்
    தாகம் தீர்க்க
    தண்ணீரும்
    பசிக்கு அன்னமும் இட்டேன்
    நீ சனீஸ்வரரின் வாகனமாம்
    முன்னோர்களின் சின்னமாம்
    நீ கரைந்தால்
    விருந்தினர் வருவதாகவும்
    நீ வலமாகப் போனால்
    காரிய சித்தியாகவும்
    உன்னைப்புகழ்ந்து
    பாடியிருக்காராம்
    காக்கைப்பாடினியார்
    இதெல்லாம் எனக்கு
    செவிவழி வந்த செய்திதான்
    ஒற்றுமைக்கும்
    பகிர்ந்துணவுக்கும்
    கூடி வாழ்தலுக்கும்
    உவமையாகச் சொன்ன
    உண்மைத்தகவலுக்காகவும்
    உயிர்களுக்கு உதவணும்னுதான்
    தண்ணீரும்
    அன்னமும் இட்டேன்
    அதனால்தான் உன் பகிர்ந்துணர்வைக் காட்ட
    கடையிலிருந்தோ சிறுவர்
    கையிலிருந்தோ
    இதை பறித்து வந்திருக்கிறாயோ?
    வேண்டாம் காகமே!
    பறித்து வருவதும்
    கவர்ந்து வருவதும் கூட
    ஒரு வகையில் திருட்டுத்தானே?
    எனக்கு இது வேண்டாம்!
    அம்மா திட்டுவாள்
    உன் அன்புக்கு நன்றி!

    காக்கை குறித்த பல செவிவழிச் செய்திகளைத் தன் கவிதை வாயிலாய் நமக்கு அறியத்தந்திருக்கும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

     

     

    Share
  • இந்தியா முதன்முதல் ஏவிய முன்னோடி விண்மீள் கப்பல் வெற்றிகரமாய்ப் பயணம் முடித்து புவிக்கு மீண்டது

     aj

    India’s Mini Space Shuttle

    இந்தியாவின் முன்னோடிச் சிறு விண்மீள் கப்பல்

     சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    ++++++++++++++++++++++

    ஏவு வாகனம் [RLV-TD] காலை 7 மணிக்கு  அண்ட வெளிக்கு ஏவப் பட்டது.  நாங்கள் முதன்முதல் மீள் பயன்பாடு வாகனப் பொறி நுணுக்க முன்னோடிச் சாதனையை [RLV – TD, Reusable Launch Vehicle Technology Demonstration] வெற்றிகரமாய்ச் சாதித்துக் காட்டியுள்ளோம்.

    தேவி பிரசாத் கார்னிக் [இந்திய விண்வெளி ஆய்வு அதிபர்]

    Moved to the location

    முழு வடிவ மீள் பயன்பாடு ஏவு வாகனம் [Reusable Launch Vehicle-RLV] தயாரிக்க [இந்தியாவுக்கு] இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம். அது விமானம் போல் தரையில் இறங்கும் மீட்சி வசதி உடையது.  அதை மீட்டு மறுபடியும் பன்முறைப் பயன்படுத்தலாம். முற்போக்கு விண்மீள் கப்பல் 2020 ஆண்டுக்குள் உருவாக்க இந்த முன்னோடி முதல் எட்டுநடை முயற்சி வரலாற்று முக்கிய பயிற்சியாகும். முற்போக்கு அமைப்பில் வாயு மூச்சு உந்துவிசை ஏற்பாடு [Air Breathing Propulsion System -ABPS] இருக்கும்.  தற்போதைய முன்னோடி ஏவுச் சாதனையில் வாகன மீட்சித் திட்டமில்லை.

    கே. சிவன் [ஆளுநர், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்]

    https://youtu.be/Dzn5XaKYdJ8

     

     

    First Shuttle -1

    First Shuttle -2

    https://youtu.be/4hQ-Zkl5nMw

     

     

    இந்தியா விண்கப்பல் மீள் பயன்பாடு  பொறி நுணுக்கத்தில் வெற்றி 

    2016 மே மாதம் 23 ஆம் தேதி இந்தியா முதன்முதல் அண்டவெளியில் ஏவிய முன்னோடிச் சிறிய விண்மீள் கப்பல் [Mini Space Shuttle] 42 மைல் உயரம் சென்று பாதுகாப்பாய்ப் புவிச் சூழ்வெளிக் காற்றில் இறங்கி 10 நிமிடம் கடந்து வங்காள விரிகுடாக் கடலில் திட்ட மிட்டபடி வீழ்ந்தது.  இந்தியன் அண்டவெளி ஆய்வு ஆணையகம் ‘இஸ்ரோ’ [ISRO -Indian Space Research Organization] 2013 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளுக்கு மனிதரற்ற துணைக்கோளை 73 மில்லியன் டாலர் சிக்கனச் செலவில் சுற்ற, வெற்றிகரமாய் ஏவியதற்குப் பிறகு அடைந்த ஒரு வரலாற்றுச் சாதனையாகக் கருதப் படுகிறது. அமெரிக்கா தனது மேவன் செவ்வாய்த் திட்டத்துக்கு [Maven Mars Mission] ஏறக்குறைய 10 மடங்கு [671 மில்லியன் டாலர்] மிகையாகச் செலவழித்துள்ளது.  2011 ஆம் ஆண்டில் அமெரிக்கா தனது ஐந்து மீள் கப்பல்கள் மூலம் 135 விண்வெளிப் பயணங்கள் முடித்து ஓய்வெடுத்த பிறகு, இந்தியா இந்த முன்னோடி முயற்சியில் இறங்கியுள்ளது.

    Mini Shuttle Launch

    விண்கப்பல் மீள் பயன்பாடு பொறி நுணுக்கத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகள் முதல் எட்டு, முற்போக்குச் சாதனைகள் புரிந்திருந்தாலும், இந்தியப் பொறித்துறை நுணுக்கம் 10 மடங்கு மலிவில் சிக்கனமானது என்று கருதப்படுகிறது.  22 அடி [6.5 மீடர்] நீளமோடு, 1.75 டன் எடையுள்ள, மீள் கப்பல் 14 மில்லியன் டாலர் செலவில் முடித்துக் கட்டிப் பயணம் செய்து, ஒரு கி.கிராம் பளுவுக்குக் குன்றிய செலவில் 2000 டாலர் ஆகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.  முழு வடிவில் 6 மடங்கு சிறிய இந்த மீள் கப்பலை, இந்தியா வடிவக்க 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.  முழு வடிவ மீள் கப்பல் தயாராகி, அண்டவெளித் துணைக்கோள்கள் ஏவிட இனிமேல் இந்தியா 10 மடங்கு குன்றிய செலவில் செய்து காட்ட முடியும்.

    Mini Shuttle Parts

    Mission Proflie

    இப்போது முடிந்த முன்னோடிச் சோதனையில் இந்திய மீள் கப்பல் தரையில் இறங்காது கடலில் விழும்படி ஏற்பாடு செய்யப் பட்டது. கடலில் விழுந்து முறிந்த மீள் கப்பல் அங்கங்களை மீட்க இயலாது. விண்மீள் கப்பல் தரையில் விமானம் போல் ஓடி நிற்க ஶ்ரீஹரிக் கோட்டாவில் மூன்று மைல் [5 கி.மீடர்] நீளக் காங்கிரீட் பாதை இன்னும் அமைக்கபட வில்லை.  முதன்முதல் 5 மடங்கு மீறிய ஒலிவேகத்தில் [5 times Supersonic] மீள் கப்பல் சென்று விண்வெளியில் 43 மைல் [70 கி.மீ.] உயரம் ஏறிப் பிறகு வேகம் தணிந்து, சரிந்த நிலையில் திரும்பி, புவிச் சூழ்நிலை வாயு உராய்வில் பின்னிறங்கி வெப்பம் தாங்கும் சிலிகா தட்டுகள் [Silica Tiles] ஒட்டிய கீழ்த்தளம் 5000 – 7000 டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்தில் எரிந்து விடாதபடி, கப்பல் உட்கலம் 50 டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்தை மீறாது, கரையிலிருந்து 300 மைல் [500 கி.மீ.] தூரத்தில் வங்காள விரிகுடாக் கடலில் திட்ட மிட்டபடி விழுந்தது.  மீள் கப்பல் மூக்கு முனை மிக்க வெப்பம் தாங்கும், சிறப்பான கார்பம்-கார்பன் கலவைப் பூச்சு [Carbon – Carbon Composite Special] கொண்டது.  இன்னும் 10 ஆண்டுக்குள் முழு வடிவ மீள்கப்பல் இந்தியாவில் தயாராகி விடும் என்று உறுதியாகத் தெரிகிறது.

    First Shuttle

    +++++++++++++++++++++++

    முதல் விபத்துக்குப் பிறகு நாசா செம்மைப் படுத்திய அமெரிக்க விண்மீள் கப்பல்கள் 

    Discovery Landing -2

    (Safe Landing of NASA’s Space Shuttle Discovery)

    +++++++++++++++

    https://youtu.be/yaVVns_sTGY

    https://youtu.be/NnmSdVbgQ4M

     

     

     

     

    ************

    தவறுகள் புரிவது மானிட இயல்பு,

    அவற்றைத் தவிர்ப்பது தெய்விக நிகழ்வு!

    பழுதுகள் விளைந்தன! உயிர்கள் மடிந்தன!

    அழுதோம் அன்று! ஆயினும் தவறு

    முழுதாய்த் தவிர்க்கப் பட்டதா ?

    பழுதில் விழுந்தது இருமுறை! திரும்பி

    எழுந்தது ஒருமுறை! இன்று மீள் பயணக்

    கழுகு புத்துயிர் பெறும், பழுதினில் தப்பி !

    எப்படி மீண்டும், மீண்டும் மனித​த்தப்புகள் நே​ரும்

    விண்மீள் கப்பலில் ?

    ++++++++++++++++++++

    Discovery Landing -1

    ‘இந்த விண்வெளி மீள்கப்பல் குறிப்பணிப் பயணத்தின் பாதுகாப்பில் பூரண நம்பிக்கை உடையவர் நாங்கள். இப்பணி நிறுத்தப்படாமல் தொடர வேண்டு மென்று உறுதியாய் நம்புபவர் நாங்கள். ஆகவே நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். ‘

    ஐலீன் காலின்ஸ் விண்கப்பல் ஆணைத் தளபதி [Eileen Collins, Discovery Space Shuttle Commander] (Aug 9, 2005)

    ‘விண்வெளி மீள்கப்பல் பயணத்தை மீண்டும் புரிய மைல்கல்லை வெற்றிகரமாக நாட்டி விட்டோம் என்று கருதுகிறேன். அதைத் தொடரப் போகும் அடுத்த விண்கப்பல் பயணமும் (அட்லான்டிஸ்) ஆய்வுக் கூடத்தில் இப்போது சோதிக்கப் பட்டு வருகிறது. ‘

    வில்லியம் பார்ஸன்ஸ் மீள்கப்பல் திட்ட மேற்பார்வையாளர் [Shuttle Program Manager] (Aug 9, 2005)

    ‘நாங்கள் மிகக் கடுமையாக உழைத்து, இவ்வாண்டு முடிவதற்குள் மீண்டும் அண்டவெளிப் பயணத்துக்குத் தயாராக வேண்டும். ஏனெனில் மாபெரும் கட்டமைப்புத் திட்ட மொன்று உருவாகி வருகிறது. அதற்கு மீள்கப்பலின் பயணம் எங்களுக்கு அடுத்தும் தேவைப்படுகிறது. ‘

    மைக்கேல் கிரிஃப்பின் நாசா நடத்துனர் அதிபதி [NASA Administrator]

    பழுதுகள் நேர்ந்தாலும் மீள்கப்பல் பாதுகாப்பாய் மீண்டது

    ஐந்து விண்வெளிக் கப்பல்களில் இரண்டு விபத்துகளில் சிதறிப் போன பிறகு, தற்போது மூன்று மிஞ்சியுள்ளன. ஒரு பில்லியன் டாலர் செலவில் இரண்டரை வருடங்களாக முந்தைய பழுதுகள் செம்மை யாக்கப்பட்டு, டிஸ்கவரி விண்கப்பல் 2005 ஜூலை 26 ஆம் தேதி கென்னடி ஏவு தளத்திலிருந்து அண்டவெளி நோக்கி கிளம்பியது. 2003 ஜனவரியில் கொலம்பியா விண்கப்பலின் வெளிப்புறக் கலனில் உள்ள நுரைக்கவச ஓடு [Bipod Ramp Foam] ஒன்று விழுந்து பழுது படுத்தி, விண்கப்பல் பூமியை நோக்கி இறங்கும் போது உராய்வுக் கனல்பற்றி மீள்கப்பல் எரிந்து ஏழு விமானிகளும் மாண்டனர். டிஸ்கவரியில் அனைத்து நுரைக்கவச ஓடுகளும் நீக்கப்பட்டு, புதிய கவச ஓடுகள் பதிக்கப் பட்டன. இறக்கைகளின்

    மீதுள்ள கரிக்கவச கனல் தட்டுகள் [Carbon-Carbon Heat Panels] மேற்கொண்டும் கவச இழைகளால் மூடப்பட்டு, வெப்பக்கனல் இடையூறுகள் நிகழா வண்ணம் உறுதியாக்கப் பட்டன. ஆனாலும் பழுதுகள் செம்மையாகத் திருத்தம் பெறாததால், சிதைந்து போன கொலம்பியா மீள்கப்பலில் நேர்ந்த தவறு போல் கவச நுரைத் துண்டு ஒன்று விழுந்து நாசா விஞ்ஞானிகளைக் கவலைக் குள்ளாக்கியது!

    பதினான்கு நாட்கள் விண்வெளியில் பூமியைச் சுற்றிப் பணிபுரிந்து, பாதுகாப்பாகப் புவித்தளம் வந்திறங்கிய டிஸ்கவரி பல முறைகளில் வரலாறு முக்கியத்துவம் பெறுகிறது. முதல் வெற்றி: 2003 ஆம் ஆண்டு கொலம்பியா விண்கப்பல் புவிநோக்கி இறங்கும் போது விபத்து நேர்ந்து அனைத்து விமானிகள் மாண்டபின், இரண்டரை ஆண்டு கழித்து மீள்கப்பல் பயணத்தைத் துவங்கிப் பாதுகாப்பாக முடித்தது. ராக்கெட் ஏவப்படும் போது கொலம்பியா பயணத்தில் ஏற்பட்ட அதே பழுது மீண்டும் நேர்ந்து, கனடா கரத்தைச் [Canadarm] சுற்றி இயக்கி விழுந்த நுரைத் துண்டால் மீள்கப்பல் கீழ்ப்பகுதியில் முறிவு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்று உளவு செய்யப் பட்டது. அதிர்ஷ்ட வசமாக இம்முறை மீள்கப்பலின் கவசத்தில் எங்கும் முறிவுகள் உண்டாக வில்லை. டிஸ்கவரி விண்கப்பல் முதன்முதல் ஐலீன் காலின்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு பெண் விண்வெளி விமானியால் இயக்கப்பட்டு, காலிஃபோர்னியா எட்வேர்டு விமானப்படைத் தளத்தில் [Edward Airforce Base, California] வெற்றிகரமாக இறக்கியது!

    விண்வெளிச் சுற்று வீதியிலிருந்து மீள்கப்பல் விடுவிப்பு

    டிஸ்கவரி விண்வெளி மீள்கப்பல் பூமியிலிருந்து 205 மைல் உயரச் சுற்று வீதியில் [Orbit] பதினான்கு நாட்கள் சுற்றுலா புரிந்து கொண்டிருந்தது. பிளாரிடாவில் உள்ள நாசா விண்கப்பல் கண்காணிப்பு மையத்திலிருந்து [Mission Control Center] மீள்கப்பல் கீழிறங்க உத்தரவு கிடைத்தவுடன், விண்கப்பல் ஆணைத் தளபதி ஐலீன் காலின்ஸ் டிஸ்கவரியின் இரட்டை எஞ்சின்களை 2 நிமிடம், 42 வினாடிகள் இயக்கி, மீள்கப்பல் வேகத்தைக் குறைத்தார். அவ்விதம் செய்தபின் சுற்றுவீதி அற்றுவிடப் பட்டு, மீள்கப்பல் பூமியின் கவர்ச்சி விசை இழுக்கப்பட்டுச் சுயமாக விழ ஆரம்பித்தது. அச்சுய வீழ்ச்சியின் போது மீள்கப்பலின் மூக்கு தூக்கப்பட்டு, பின்புறம் கீழ்ச்சரிந்து சுமார் 40 டிகிரி கோணத்தில் சாய்ந்து இறங்கியது. பிளாரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி இறங்கு தளத்தில் இடியும், மின்னலும், முகிலும், மழையும் பயமுறுத்தியதால், காலிஃபோர்னியாவில் பளிச்செனத் தெரியும் எட்வெர்டு விமானப்படைத் தளம் தேர்ந்தெடுக்கப் பட்டது.

    பிளாரிடா ஏவு தளத்தில் விண்கப்பல் இறங்கி இருந்தால் நாசாக்கு ஒரு மில்லியன் டாலர் மிச்சமாகும். காரணம் டிஸ்கவரி எட்வெர்டு விமானப்படைத் தளத்திலிருந்து, தனிச் சிறப்பில் மாற்றம் செய்யப் பட்ட 747 ஜெட் விமானம் தன் முதுகில் சுமந்து கொண்டு பிளாரிடா வந்தடைய வேண்டும். அவ்விதம் செய்து முடிக்க குறைந்தது ஒரு வாரம் எடுக்கிறது. மேலும் செப்டம்பர் 22 ஆம் தேதிப் பயணம் துவங்கத் தயாரிக்கப்படும் அட்லாண்டிஸ் [Spaceship Atlantis] விண்கப்பலுக்கு அபாய உதவி செய்ய டிஸ்கவரி முக்கியமாக கென்னடி ஏவுதளத்தில் தயாராக நின்று கொண்டிருக்க வேண்டும்.

    2003 பிப்ரவரி முதல் தேதி விண்கப்பல் விபத்தில் கொலம்பியாவின் சிதறிய துணுக்குகள் டெக்ஸஸ், லூஸியானா மாநிலங்களில் பொழிந்தன. இம்முறை எதிர்பாராதவாறு அவ்வித விபத்து நேர்ந்தால், துணுக்குகள் லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரில் சிதறாத வண்ணம், கவனமாக ஐலீன் காலின்ஸ் மக்கள் தொகை நிரம்பிய பகுதிகளைத் தவிர்த்து விண்கப்பலை இறக்கினார். இதில் சிரமம் என்ன வென்றால் 100 டன் எடையுள்ள டிஸ்கவரி மீள்கப்பல் இயங்க எஞ்சின் சக்தி எதுவும் இல்லாமல், ஊர்திபோல் காற்றில் நீந்தி [Like a Glider Plane] இறக்கை, எயிலிரான்ஸ் கட்டுப்பாட்டில் இறங்க வேண்டும். பல்லாண்டு பெற்ற கைப்பயிற்சி ஒன்றால்தான் அவ்விதம் இறங்கித் தளத்தைத் தொட முடியும்.

    டிஸ்கவரிப் பயணத்தில் ஏற்பட்ட பழுதுகளும் கண்காணிப்பும்

    பதினாறு நாடுகள் பங்கு கொண்டு இயக்கும் அண்டவெளி நிலையத்துடன், மீள்கப்பல் இணைந்து கொள்ளுவதற்கு முன்பு நாசா வருத்தமுடன் அறிவித்தது! ‘கென்னடி ஏவு தளத்தில் ராக்கெட் கிளம்பிச் செல்கையில் நான்கு கவச நுரைத் துண்டுகள் எரிசக்தி புறக்கலனிலிருந்து [External Fuel Tank] அற்று விழுந்ததால், மீண்டும் விண்வெளிக் மீள்கப்பல் பயணத்தை அமெரிக்க அரசு நிறுத்தம் செய்துள்ளது. ‘ அவற்றில் ஒரு துண்டு விண்கப்பலை மோதிச் சென்றது. 750 கிராம் எடையுள்ள ஒரு கவச நுரைத் துண்டு உண்டாக்கிய அவ்விதச் சிறு காயமே 2003 ஜனவரியில் கொலம்பியா மீள்கப்பல் அடிவயிற்றுக் கவசத்தை நீக்கி,

    புவிநோக்கி இறங்கும் போது தீவிர உராய்வுக் கனல் உஷ்ணம் [1650 C (3000 F)] துளையிட்டு, துர்வாயுக்களால் ஏழு விண்வெளி விமானிகள் மாண்டதுடன், ஒரு பில்லியன் டாலர் வாகனமும் எரிந்து போனது! 50 அடி நீளமுள்ள கனடா கரத்தின் [Canadarm] காமிராக்களும், அண்டவெளி நிலையக் காமிராக்களும் ஆக மொத்தம் 107 காமிராக்கள் மீள்கப்பலின் அடிவயிற்றை உளவு செய்யும் போது 25 குழிகளைக் கண்டுபிடித்தன. 1650 C உஷ்ணம் அடையும் மூக்கு முனைப் பகுதியில் 1.5 அங்குல பழுதைக் கண்டன.

    அமைப்பு விதிப்படி 13.6 கிராம் எடைக்கு மேற்பட்ட துண்டுகள் விழக் கூடாதென்று கட்டுப்பாடுகள் இருக்க, டிஸ்கவரியில் இம்முறை 408 கிராம் [30 மடங்கு வரை மீறிய] துண்டு விழுந்தது ஒப்புக் கொள்ள முடியாத பழுதாகும். ‘மீள்கப்பலின் காமிராக்கள் நன்கு பணி புரிந்தன. ஆனால் மீள்கப்பல் கவசநுரை நெறியுடன் பணி புரிய வில்லை ‘, என்று நாசாவின் அதிபதி மைக்கேல் கிரிஃப்பின் [Michael Griffin] கூறினார். ஒவ்வொரு விண்வெளி மீள்கப்பல் பயணத்துக்கும் நாசா அரை பில்லியன் டாலர் நிதியைச் செலவு செய்கிறது. அதன் முக்கிய பணி அண்டவெளி நிலையத் துக்கு வேண்டிய 13.5 டன் எடைப் பண்டங்களை ஏற்றிச் சென்று, அங்கிருந்து 12 டன் குப்பைகளை அள்ளிக் கொண்டு மீள வேண்டும். அண்டவெளி நிலையமும், மீள்கப்பல் பயணமும் நாசாவின் 40% திட்ட நிதியை விழுங்கி வருவதால், அவை இரண்டும் இயங்கி வரும் வரை, அடுத்துத் திட்ட மிட்டுள்ள நிலவுப் பயணமும், செவ்வாய்ப் பயணமும் வரைப் படத்திலிருந்து வடிவு பெற்று இயங்க மாட்டா!

    விண்வெளிப் பயணங்கள் மீண்டும் தொடருமா ?

    அண்டவெளி நிலையத்தோடு பிணைப்புத் தகுதியுடைய [Rendezvous] வாகனம் அமெரிக்காவின் விண்வெளி மீள்கப்பல் ஒன்றுதான்! ஆகவே இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு செம்மை யாக்கப்பட்ட விண்வெளி மீள்கப்பலின் பயணங்கள் கட்டாயமாகத் தேவைப் படுகின்றன. பூமியைச் சுற்றிவரும் அண்டவெளி நிலையம் பாதி அளவுதான் நிறுவகமாகி யுள்ளது! முழுதும் கட்டி முடிப்பதற்கு இன்னும் 18 விண்கப்பல் பயணங்கள் தேவைப்படும். மேலும் நிலையத்தில் வாழ்ந்து வரும் அண்டவெளி விமானி களுக்கு நீர், காற்று, உணவுப் பண்டங்கள் அளித்து வர மேற்கொண்டு 10 முறையும் ஆக மொத்தம் 28 பயணங்கள் (18+10=28) திட்டமிடப்பட வேண்டும். இதற்கு முன்பு நான்கு மீள்கப்பல்களைப் பயன்படுத்தி 111 விண்வெளிப் பயணங்களைச் சுமார் 21 ஆண்டுகள் நாசா திட்டப்படித் திறம்படச் செய்து காட்டியுள்ளது! விண்கப்பல் குறிப்பணித் திட்டங்களில் பல அரங்குகளில் பணிபுரிந்து வரும் 12,000 அமெரிக்க நபர்களின் ஊதிய வேலைகளைப் பாதுகாக்கவும், மிஞ்சிய மூன்று விண்வெளிக் கப்பல்கள் மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்து பறக்கத்தான் வேண்டும்! அத்துடன் ஹப்பிள் தொலைநோக்கி பல்லாண்டுகள் செப்பணிடப் படாமல், அதன் பணித்திறன் குறைந்து கொண்டே வருகிறது. ஹப்பிள் பராமரிப்புக்காக 291 மில்லியன் டாலர் தொகையை நாசா ஒதுக்கி வைத்துள்ளது.

    கடந்த 20 ஆண்டுகளில் [1985-2005] நேர்ந்த இருபெரும் விபத்துகளுக்கு இடையே விண்கப்பல்களின் குறிப்பணிகள் சிறப்பாகவும், பொறுப்பாகவும் பலமுறை நிறைவேறி யுள்ளதை மெச்சத்தான் வேண்டும்! புதிய ஆய்வுத் துணைக்கோள் ஏவுதல், செயலற்ற துணைக் கோள்களைக் கைப்பற்றல், விண்வெளி நிலையங்களைச் செப்பமிடல், ஹப்பிள் தொலைநோக்கியை விண்வெளியில் ஏவியது, பலமுறை அதனைப் புதுப்பித்தது, செப்பமிட்டது, வியாழன், வெள்ளி, சூரியன் போன்ற அண்டக் கோள்களுக்கு விண்ணாய்வுச் சிமிழ்களை அனுப்பியது யாவும் விண்வெளி வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய நிகழ்ச்சிகளாகும்! அண்ட வெளியில் உருவாகி, மூன்று விமானி களோடு பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்துடன் [Space Station] தொடர்பு கொள்ளவும், அடுத்து இனி முடிக்க வேண்டிய பல விண்பணிகளைத் துவங்கவும் விண்கப்பல் பயணங்களை மீண்டும் ஆரம்பிக்கத்தான் வேண்டும்! நாசாவுக்கு மீள்கப்பல் செம்மைப்பாடு தவிர வேறு வழி யில்லை!

    2010 ஆண்டுடன் ஓய்ந்து போகும் விண்வெளி மீள்கப்பல், இன்னும் நாலரை ஆண்டுகள் பாதுகாப்பாக இயங்க அமெரிக்க அரசுக்கு அண்டவெளிப் பயணப் பொறியியல் பணிக்கு நிதியும், மன உறுதியும் நிறைய உள்ளது! அமெரிக்கா அண்டவெளிப் பயணக்குழு மனிதரை 2020 ஆண்டுக்குள் செவ்வாய்க் கோளில் இறக்கி நடமிட விட்டுப் பூமிக்கு மீட்பதைத் தனது 21 ஆம் நூற்றாண்டுக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. தற்போது அதற்குத் தேவையான புதிய விண்வெளி வாகனத்தை 2008 ஆம் ஆண்டுக்குள் தேர்ந்தெடுக்க நாசா தீர்மானித்திருக்கிறது.

    *********************************

    தகவல்:

    1. Shuttle Discovery Returns Safely to Earth By: CTV News Staff, Bell Globemedia Inc. [Aug. 9, 2005]

    2. Space Shuttle Discovery Lands Safely in Edwards Airforce Base, California By Nichola Groom [Aug 9, 2005]

    3. Beyond Discovery Shuttle Faces Uncertain Future By: Irene Klotz (Reuters News Agency) [Aug 9, 2005]

    4. Shuttle Discovery Put through Second Fueling Test By: Milliam Harwood, CBS News (May 20, 2005)

    5. NASA: Shuttle ‘s Retirement May Affect International Space Station, By: Tariq Malik CNN.com (May 21, 2005)

    6. Space Shuttle Program – Wikipedia, Free Encyclopedia (www.en.wikipedia.org/wiki/Space_Shuttle)

    7. Shuttle Discovery Launch Set for Mid-July, 2005 By: Guy Gugliotta, Washington Post Staff Writer (May 21, 2005)

    8. NASA Report: Discovery Set for July Launch Despite Delays By: Todd Halvorson (May 24, 2005)

    9. September Shuttle Launch May Delay Next Space Station Crew By: John Kelly (May 24, 2005)

    10 Space Shuttle Leaves Orbit, Heading to California By: Irene Klotz Deborah Zabarenko (Aug 9, 2005)

    11 Encyclopedia Britannica Almanac (2005).

    12 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: விண்வெளி மீள்கப்பல் கொலம்பியாவின் சிதைவு. (பிப்ரவரி 9, 2003) [http://www.thinnai.com/science/sc0209035.html]

    13. திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: [ http://www.thinnai.com/sc0526051.html] புத்துயிர் பெறும் விண்வெளிக் கப்பல் எப்போது பயணம் செய்யும் ?

    14. Why NASA Can ‘t Get It Right By Jeffrey Kluger, Time Magazine (August 8, 2005)

    15. Picture Credits: Time Magazine (August 8, 2005) & NASA WebPage.

    16. http://www.nasa.gov/centers/marshall/about/star/shuttle_110803.html  [April 14, 2011]

    17. https://en.wikipedia.org/wiki/Space_Shuttle [May 24, 2016]

    18. http://www.ndtv.com/india-news/isro-embarks-on-launching-indian-space-shuttle-1406368

    19. http://www.businessinsider.in/ISRO-successfully-tests-made-in-India-mini-space-shuttle/articleshow/52396158.cms

    20. http://www.indiatimes.com/news/india/isro-s-made-in-india-space-shuttle-rlv-td-to-be-launched-this-month-255112.html  [May 23, 2016]

    *********************

    S. Jayabarathan  [jayabarathans@gmail.com]  (May 26, 2016) [R-1]

    Attachments area

    Preview YouTube video RLV TD POWER.mpg

    RLV TD POWER.mpg

    Preview YouTube video India’s very own space shuttle will launch in the next 2-3 months

    India’s very own space shuttle will launch in the next 2-3 months

    Preview YouTube video Full Cockpit Launch + Crew audio Last Space Shuttle ♦ STS-135

    Full Cockpit Launch + Crew audio Last Space Shuttle ♦ STS-135

    Preview YouTube video Inside Space Shuttle Challenger STS-51L During The Accident

    Inside Space Shuttle Challenger STS-51L During The Accident
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    9b0ec3ee-ce2a-416d-8747-3b17f9974018

     

    ”கண்ணன் நம்மோடு ஆன்மீகமாய்க் கலந்தாலும்
    நாம் கன்றைப் போல லெளகீகமாய் கால் வருடி
    வரம் கேட்போம்…..இதுதான் ‘’அடி’’மாட்டு புத்தியோ! கேசவ்….!
    ஆண்டவனே வந்து அணைத்தாலும், நாம் வேண்டுவது கார், பங்களா
    ’’பாதாங்’’கீர் போன்ற இக இச்சைகள்….

    ”ஒன்றோடு சேர்ந்து ஒன்றாய்க் கலந்தாலும்,
    கன்(று)ஆயர் ஏறைக்(கண்ணன்) கலக்காது: -கன்றுக்(கு)
    அடிமாட்டு புத்தி மடிப்பிச்சைக் காக
    குடித்திடும் கால்பாதாங் கீர்’’….கிரேசி மோகன்….

    Share
  • “கண்ணா கனியவை நாற்பது” …. (4)

    கிரேசி மோகன்

     

    சுகம்கிடைத்தும் ஓரிடத்தில் சும்மா இராமல்
    நகம்கடித்து நாற்புறமும் நோக்கி -முகம்சுளிப்பாய்
    மேலான பேரின்பம் தோலால் கிடைக்காது
    வேளாண்மை செய்யான்மா வில்….(19)

    வில்லிருந்தும் தோளிருந்தும் வீரம் பிறக்காது
    கள்ளிருந்தும் போதை கிடைக்காது -உள்ளிருக்கும்
    ஆன்மனே ஆண்மை அவனெழுச்சி சம்போகம்
    ஊன்மனங்கள் சோரும் உறுப்பு….(20)

    உறுப்பதற்கு ஞானம், உரைப்பது மோனம்
    பிறப்பிறப்(பு) இல்லா புருஷன் -கருப்பொருளாய்
    சக்தியவள் , அன்பில் சிவனவன், பாலில்
    யுக்தியிலாண் பெண்ணாம் அது….(21)

    அதுவாக ஓர்நாள் ருதுவாகும் ஆன்மா
    அதுவரை ஐம்புலனை ஆள்வாய் -கதையல்ல
    கற்பனை மாயையைக் கட்டக் களித்துடுவான்
    அற்பனும் அக்குடையை ஆண்டு….(22)

    ஆண்டோனும் ஆண்டியும் மாண்டபின் மீண்டுமிங்கு
    ஆண்டியாய் ஆண்டோனாய் ஆகிடுவர் -வேண்டாமே
    வேஷமிது அஞ்ஞானம் வேதாந்த கும்பலின்
    பாஷையில் கோவிந்தா போடு….(23)

    போடுவதை உண்ணாது போயின்ப வேட்டையில்
    ஆடியிரை ஆகி அனல்சுடு -காடுவர
    அய்யோ எனக்கூவ அய்யோ மணவாளன்
    கொய்யா(து) இருப்பானா கூறு….(24)

    Share
  • பொதுநலம்!

    ராமன் தனது ராமன் விளைவை செயல்முறை விளக்கத்துடன் விவரிக்கும் காட்சி

    பவள சங்கரி

    பௌதீக உலகின் முடிசூடா மன்னன் சர்.சி.வி.இராமன் தமது அரிய ஆய்வுகளுக்காக நோபல் பரிசு பெற்று உலக அரங்கில் நம் பாரதத்தின் பெருமையை உயரச்செய்தவர். முதலில் வங்காள மாநிலத்தின் உதவி கணக்காய்வுத் தலைவராக [Accontant General] ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மாநிலத்தின் உயர் பதவியில் இருந்தவர். பகல் நேரங்களில் அலுவலகப் பணியை கவனித்துவிட்டு ஓய்வு நேரத்தில், பௌதிகத்தின் மீது தான் கொண்ட அதிக ஈடுபாடு காரணமாக, கல்கத்தா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடத்துக்குத் தினமும் அதிகாலையிலும், மாலையிலும் சென்று தமது பௌதிக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தார். இவருடைய நேர்மையான பணித்திறத்தினால் அலுவலகத்தில் இவருக்கு மேலும் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருந்தது.

    இந்த நேரத்தில்தான் கல்கத்தா பல்கலைக்கழக துணை வேந்தர் சர்.சி.வி. இராமனிடம் தம் அலுவலக, கணக்காய்வுத் தலைவர் பதவியை விட்டுவிட்டு முழு நேர பௌதிக ஆராய்ச்சியில் ஈடுபட்டால் நாட்டிற்கும், மக்களுக்கும் பெரும் சேவையாக இருக்குமே என்ற தம் கருத்தை எடுத்துரைத்தார். அக்கருத்தை மிக மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட இராமன் மிகப்பெரும் வருமானமும், கௌரவமும் கொடுத்த அப்பெரும் பதவியைவிட்டு விலகி அதைவிட மிகவும் குறைந்த வருமானமே தரக்கூடிய பௌதிக ஆராய்ச்சிப் பணியை மிக மகிழ்வுடன் தம் முழுநேரப் பணியாக ஏற்றுக்கொண்டார். அதன்பின் மீப்பெரும் சாதனைகள் பல செய்து நோபல் பரிசும் வென்றார்.

    இன்றைய மேதைகளின் நிலையை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது..   🙁

    Share