ராமன் தனது ராமன் விளைவை செயல்முறை விளக்கத்துடன் விவரிக்கும் காட்சி

பவள சங்கரி

பௌதீக உலகின் முடிசூடா மன்னன் சர்.சி.வி.இராமன் தமது அரிய ஆய்வுகளுக்காக நோபல் பரிசு பெற்று உலக அரங்கில் நம் பாரதத்தின் பெருமையை உயரச்செய்தவர். முதலில் வங்காள மாநிலத்தின் உதவி கணக்காய்வுத் தலைவராக [Accontant General] ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மாநிலத்தின் உயர் பதவியில் இருந்தவர். பகல் நேரங்களில் அலுவலகப் பணியை கவனித்துவிட்டு ஓய்வு நேரத்தில், பௌதிகத்தின் மீது தான் கொண்ட அதிக ஈடுபாடு காரணமாக, கல்கத்தா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடத்துக்குத் தினமும் அதிகாலையிலும், மாலையிலும் சென்று தமது பௌதிக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்தார். இவருடைய நேர்மையான பணித்திறத்தினால் அலுவலகத்தில் இவருக்கு மேலும் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருந்தது.

இந்த நேரத்தில்தான் கல்கத்தா பல்கலைக்கழக துணை வேந்தர் சர்.சி.வி. இராமனிடம் தம் அலுவலக, கணக்காய்வுத் தலைவர் பதவியை விட்டுவிட்டு முழு நேர பௌதிக ஆராய்ச்சியில் ஈடுபட்டால் நாட்டிற்கும், மக்களுக்கும் பெரும் சேவையாக இருக்குமே என்ற தம் கருத்தை எடுத்துரைத்தார். அக்கருத்தை மிக மகிழ்வுடன் ஏற்றுக்கொண்ட இராமன் மிகப்பெரும் வருமானமும், கௌரவமும் கொடுத்த அப்பெரும் பதவியைவிட்டு விலகி அதைவிட மிகவும் குறைந்த வருமானமே தரக்கூடிய பௌதிக ஆராய்ச்சிப் பணியை மிக மகிழ்வுடன் தம் முழுநேரப் பணியாக ஏற்றுக்கொண்டார். அதன்பின் மீப்பெரும் சாதனைகள் பல செய்து நோபல் பரிசும் வென்றார்.

இன்றைய மேதைகளின் நிலையை நினைத்தால் வேதனைதான் மிஞ்சுகிறது..   🙁

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பொதுநலம்!

 1. பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன்.

  http://www.vallamai.com/?p=30187

  நோபெல் பரிசு பெற்ற முதல் இந்திய விஞ்ஞானி

  ஆப்பில் பழம் மரத்திலிருந்து கீழே விழுந்த போது, ஏன் தரை நோக்கி விழுந்தது என்ற வினா, ஐஸக் நியூட்டன் [Isaac Newton] முதன் முதல் ஈர்ப்பு விசையைக் [Gravitation] கண்டு பிடிக்க ஏதுவாயிற்று! அதுபோல் ஒரு நிகழ்ச்சி, சி.வி. ராமன் வாழ்க்கையிலும் ஒரு பெரும் திருப்பத்தை உண்டாக்கியது! 1921 ஆம் ஆண்டு பிரிட்டனில் நிகழ்ந்த ஓர் விஞ்ஞானப் பேரவையில் ராமன் பங்கெடுத்துக் கப்பலில் மீளும் சமயம், ஓர் விஞ்ஞானப் புதிர் அவரது கவனத்தை ஈர்த்தது. கப்பல் மத்திய தரைக் கடல் [Mediterranean Sea] வழியாக ஊர்ந்து செல்கையில், கடல் நீரின் அடர்த்தியான நீல நிறம் அவரது கண்களைக் கவர்ந்து, சிந்தனா சக்தியைத் தூண்டியது! நீலம் நிற கடல் நீரிலிருந்து எப்படி உண்டாகிறது ? அந்த மூல வினாவே அடிப்படையாக இருந்து, ஒளியின் மூலக்கூறுச் சிதறலை [Molecular Scattering of Light] அவர் கண்டு பிடித்து, ராமன் பின்னால் பெளதிகத்திற்கு நோபெல் பரிசு பெறுவதற்கு ஏதுவாயிற்று!

  இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவில் ஜெர்மன் விஞ்ஞானி ராஞ்சன் எக்ஸ்ரேக் கதிர்களைக் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற போது, பிரான்ஸில் ஹென்ரி பெக்குவரல், மேடம் கியூரி ஆகியோர் இருவரும் கதிரியக்கத்தைப் பற்றி விளக்கி நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்ட போது, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது ஒப்பியல் நியதிக்கு நோபெல் பதக்கம் அடைந்த போது, இந்தியாவில் சி.வி. ராமன் தனது ஒளிச்சிதறல் [Scattering of Light] நியதியை வெளியாக்கி 1930 இல் நோபெல் பரிசைப் பெற்றார். தமிழ் நாட்டைச் சேர்ந்த சி.வி. ராமன்தான் பிரிட்டிஷ் இந்தியாவில் முதன் முதல் பெளதிக விஞ்ஞானத்தில் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்து, இத்தகைய பெரும் மதிப்பைப் பெற்றவர்.

  திரவம், திடவம் அல்லது வாயுவில் உள்ள மூலக்கூறுகள் [Molecules in Liquid, Solid or Gas] தம்முள் ஊடுறுவும் ஒளியை ஓரளவுச் சிதறடித்து, சிதறிய ஒளியின் அலை நீளத்தை [Wavelength] மாறும்படிச் செய்கின்றன. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering], அல்லது ராமன் விளைவு [Raman Effect] என்று பெளதிகத்தில் கூறப் படுகிறது. ராமன் ஒளிநிறப் பட்டை [Raman Spectrum] மூலக்கூறுகளின் அமைப்பைக் [Structure of Molecules] காண உதவுகிறது. இந்திய விஞ்ஞானத் துறை வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர் என அகில நாடுகளில் போற்றப் படுகிறார், சி.வி, ராமன்.

  சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *