இலக்கியம்கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(122)

செண்பக ஜெகதீசன்

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள் 
மழலைச்சொற் கேளா தவர்.  (திருக்குறள்-66: புதல்வரைப் பெறுதல்) 

புதுக் கவிதையில்…

பெற்ற பிள்ளைகளின்
பேச்சாம்
மழலைமொழி கேட்காதவர்களுக்குத்தான்,
யாழும் குழலும்

எழுப்பும் ஓசை
இன்னிசையாய்த் தெரியும்! 

குறும்பாவில்…

பிள்ளை மழலை கேட்காதவர்தான்,
இனிதென்பர்
யாழும் குழலும் எழுப்புமொலி! 

மரபுக் கவிதையில்…

இன்னிசை வழங்கிடும் யாழதுவும்
     –இசைவாய் ஊதிடும் குழலதுவும்,
ஒன்றாய்த் தருமிசை இனிதென்றே

     –ஓதுவர் சிலரே அறியாமல்,
குன்றா இல்லறம் தரும்பரிசாம்

     –குழந்தைச் செல்வம் தருமழலை,
நன்றாய் கேட்டுச் சொல்வீரிதை

     –நாளும் சிறந்த இன்னிசையே! 

லிமரைக்கூ…

பிள்ளைகள் மழலைதான் சிறந்தது,
இதையறியார் பேசுவர் இசையது இனிதென,
யாழிலும் குழலிலும் பிறந்தது! 

கிராமிய பாணியில்…

சொல்லுவாங்க சொல்லுவாங்க
சோக்கான எசண்ணு சொல்லுவாங்க,
யாழெடுத்துப் பாடுறதும்

புல்லாங்கொழலு ஊதுறதும்
பெரிய எசயாச் சொல்லுவாங்க… 

இவுங்களுக்குத் தெரியாது
இந்த உண்ம,
பெத்த புள்ளங்க பேசுற

மழலப்பேச்சிக்குப் பெருசில்ல,
அதெல்லாம்

இதுக்குமிஞ்சி இனிமயில்ல… 

சொல்லுங்க சொல்லுங்க
புள்ளக்கி மிஞ்சிய செல்வமில்ல,
அவுரு

பேச்சிக்கு மிஞ்சிய எசயுமில்ல!

 

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க